Wednesday, March 31, 2010

பாடம் 043: தர்க்கம் முக்தியை தராது (பிரம்ம சூத்திரம் 2.1.12)


காரண-காரிய ஆராய்ச்சியினால் பெற முடியாத ஞானத்தை தர்க்கத்தின் துணையினால் பெற முடியும் என்பது போன்ற தவறான எண்ணத்தை சென்ற பாடம் நம்மிடம் ஏற்படுத்தியிருக்க கூடும் என்பதற்காக வெறும் தர்க்கத்தால் மட்டும் நம்மால் முக்தியை அடைய முடியாது என்பதை இந்த பாடம் வலியுருத்துகிறது. தர்க்கம் என்பது உண்மையை புரிந்து கொள்ள பெரிதும் உதவும் சாதனமென்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் வேதத்தை சார்ந்து இல்லாமல் தனித்து இயங்கும் வறட்டு தர்க்கம் நமக்கு பயன் தராது என்பதை தர்க்கத்தின் மூலமாகவே இந்த பாடம் நிரூபிக்கிறது.

ஊட்டியில் ஏன் குளிரெடுக்கிறது?

அதென்னமோ ஆரம்பகாலத்திலிருந்தே அப்படித்தான் இருக்கிறது என்ற பதிலில் திருப்தியடைந்துவிடுபவர்களுக்கு உலகம் எப்படி உண்டானது என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுமளவுக்கு அறிவுக்கூர்மை இருக்காது. அது அவர்களுக்கு தேவையுமில்லை. ஏனெனில் வாழ்க்கையில் எதேனும் துன்பம் ஏற்படும் பொழுது அவர்கள் நொடிந்து போய்விடுவது கிடையாது. கடவுள் நமக்கு படியளந்தது அவ்வளவுதான் என்றோ அல்லது நாம் கொடுத்துவைத்தது அவ்வளவுதான் என்றோ மனதை தேற்றிக்கொண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள். அவர்களுக்கு நான்தான் என் வாழ்வின் நிலமைக்கு காரணம் என்ற அகங்காரம் இருப்பதில்லை. இது ஏன் இப்படி நடக்கிறது என்ற கேள்வியை அவர்கள் கேட்பதில்லை.

அறிவுடன் செயல் படுபவர்களால் இம்மாதிரி சர்வசாதாரணமாக வாழ்க்கையை வாழ முடிவதில்லை. அவர்கள் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர துடிப்பவர்கள். ஊட்டி கடல் மட்டத்திலிருந்து வெகு உயரத்தில் இருப்பதால் அங்கு குளிர்கிறது என்று பதில் சொன்னால் அதற்கும் ஏன் என்று கேள்வி கேட்பார்கள். ஊட்டி அதிக உயரத்தில் இருப்பதால் சமவெளியை விட சூரியனுக்கு அருகில் இருக்கிறது, எனவே அங்கு வெப்பமாகத்தானே இருக்க வேண்டும் என்று குறுக்கு கேள்விகள் கேட்டு அறிவியலின் முழு விளக்கம் கிடைக்கும் வரை அவர்கள் திருப்தி அடைய மாட்டார்கள்.

காலிகுடம் அசையாது

முழு அறியாமை நமக்கு நிம்மதியை கொடுக்கும். உதாரணமாக கலஹாரி பாலைவனத்தில் வாழும் ஆப்ரிக்க பழங்குடியினர் இயற்கையோடு ஒன்றி ஒரு பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். வேட்டையாடி கிடைக்கும் உணவை தொன்று தொட்டுவரும் சமூக பிரிவினைகளின்படி அவர்களுக்குள் பிரித்துகொண்டு நாடோடி வாழ்க்கை வாழ்கிறார்கள். உடலளவில் நிர்வாணத்திற்கு மிக அருகில் இருக்கும் அவர்கள் மனதளவில் முழு நிர்வாணத்தை அடைந்தவர்களாக இருக்கிறார்கள். போட்டி, பொறாமை, ஒருவருக்கொருவர் சண்டை, சச்சரவு போன்ற காழ்ப்புணர்ச்சியேதுமில்லாமல் திருமணம் போன்ற சமுதாய மாற்றங்களுக்குட்படாமல் ஏறக்குறைய விலங்குகள் போல நிம்மதியாகவும் இன்பமாகவும் வாழ்கிறார்கள்.

குறைகுடம் கூத்தாடும்

அறைகுறை ஞானம் துன்பத்தை கொடுக்கும். ஊட்டியில் ஏன் குளிருகிறது என்ற கேள்வியை கூட கேட்காமல் அறியாமையில் மூழ்கி இருக்கும் மேலே விளக்கப்பட்ட பழங்குடியினரைப்போல் அல்லாமல் குறுக்கு கேள்வி கேட்பவர்கள்தான் இந்த உலகில் அதிகம். இவர்களால் எல்லா கேள்விகளுக்கும் முழுமையான பதில் தெரிந்து கொள்ளாமல் அமைதியடைய முடியாது.

ஒன்றும் தெரியாத நிலைமையிலிருந்து கல்வியறிவின் மூலமாக படிப்படியாக எல்லோரும் அறிவுடையவர்களாகிறார்கள். காலிகுடம் என்ற நிலையிலிருந்து குறைகுடம் என்ற நிலையை ஏறக்குறைய உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் அடைகிறார்கள். ஆனால் குறைகுடம் என்ற நிலையிலிருந்து நிறைகுடம் என்ற நிலையை சமயங்களில் கூறப்பட்டுள்ள தத்துவங்களை தெரிந்து கொள்ளாமல் யாருமே அடைவதில்லை. இதற்கு பின்வரும் காரணங்கள் உள்ளன.

1. கற்றது கை மண்ணளவு. கல்லாதது உலகளவு: எவ்வளவுதான் ஒருவர் அறிவு பெற்றாலும் அது முழுமையான இறுதியான அறிவாக ஆவதில்லை. இசைஞானி இளையராஜா செய்த சாதனைகளை ஏ.ஆர்.ரகுமான் முறியடித்துக்கொண்டிருக்கிறார். நாளை இவரின் இசைஞானத்தை ஒன்றுமில்லை என்று கூறும் அளவுக்கு ஒருவர் தோன்றுவார். இந்த உண்மை எல்லாத்துறைகளுக்கும் பொருந்தும். அதுவுமில்லாமல் ஒரிரு துறைகளில் 'எல்லாம் தெரிந்தவர்' என்ற நிலையை அடைவதற்கே வாழ்நாள் போதாது. அப்படியிருக்க எல்லா துறைகளிலும் சான்றோன் என்ற நிலையை அடைவது சாத்தியமில்லை.

2. உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது: உலகில் உள்ள அனைத்தும் தொடர்ந்து மாற்றத்திற்கு உட்பட்டு கொண்டிருக்கிறது. எந்த துறையிலும் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது, இனிமேல் இந்த துறையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்பட வழியில்லை என்ற நிலை ஏற்படவில்லை. மாட்டுவண்டியை ஒப்பிட்டால் ஆகாயவிமானம் மிகப்பெரிய முன்னேற்றம்தான். ஆனால் தனிமனிதனால் ஒளியின் வேகத்தில் பயணம் செய்ய முடியும் நாள் வரும்பொழுது இன்றய நவீன விமானங்கள் அருங்காட்சியகத்தில் மட்டுமே காணப்படும்.

ஆகவே முழுமையான இறுதியான உலக அறிவு என்பது இவ்வுலகில் என்றும் யாருக்கும் எட்டாக்கனியாகவே இருக்கும்.

நிறைகுடம் தளும்பாது

முழு ஞானம்தான் முழு அறியாமையைப்போல் நிம்மதியை கொடுக்கும். அரை குறை ஞானம் படைத்த யாரும் அதை தொலைத்துவிட்டு பழையபடி ஒன்றுமறியா குழந்தைகளாக மாறி இன்பத்தை அடைய முடியாது. இன்பத்தை அடைய அவர்களுக்கு இருக்கும் ஒரே பாதை முழு ஞானத்தை பெறுவதுதான். குறைகுடம் கூத்தாடும். நிறைகுடம் தழும்பாது. காலிகுடமும் நிலையாக இருக்கும்.

காலிகுடமாயிருப்பவர்களும் நிறைகுடமாயிருப்பவர்களும் நிம்மதியாய் இருப்பதற்கு என்று எதையும் செய்ய வேண்டிய அவசியமில்லை. குறைகுடமாயிருப்பவர்கள் அறிவை பெறுவதை தவிர வேறு என்ன செய்தாலும் பயனில்லை.

முழு அறிவைப்பெறாமல் முக்தியடைய முடியாது

முக்தியடையவில்லை என்பதை நாம் இடைவிடாத தேடலில் ஈடுபட்டு கொண்டிருப்பதிலிருந்தே அறிந்து கொள்ளலாம். கண்டுபிடித்துவிட்டேன் கண்டுபிடித்துவிட்டேன் என்று தெருவில் ஓடிய ஆர்கிமிடீஸிலிருந்து அணுவை பிளந்த ஐன்ஸிடின் வரை யாருமே தங்கள் கண்டுபிடிப்பில் முழுமையடைந்ததாக தெரியவில்லை. தேடல் அவர்களின் வாழ்வின் இறுதி நாள்வரை தொடர்ந்தது. அதேபோல் பெறவேண்டியதையெல்லாம் பெற்றுவிட்டேன் என்று மாவீரன் அலெக்ஸாண்டரோ மைக்ரோசாஃப்ட்டின் பில் கேட்ஸோ திருப்தியடைந்ததாக தெரியவில்லை.

புத்தர், ஏசு, ஆதி சங்கரர் போன்ற மதசான்றோர்களின் வழிநடந்தவர்கள் மட்டுமே முழுஅறிவை பெற்று நான் கண்டுகொண்டேன், இனி எனக்கு எதுவும் தேவையில்லை என்ற முக்திநிலையை அடைந்துள்ளார்கள்.

முழு அறிவைபெறுவதற்கு தர்க்கம் மட்டும் உதாவது.

ஜடப்பொருள்களுக்கு உணர்வில்லை என்று கூறினால் அது உனக்கு எப்படித் தெரியும் என்ற கேள்வியை கேட்டால் பதில் ஒன்றும் சொல்ல முடியாது. அவ்வாறு கேள்வி கேட்பவர்கள் வெறும் வறட்டு தர்க்கவாதிகள். அவர்களது தர்க்கம் அவர்களுக்கு முக்தியை கொடுக்காது. ஏனெனில் வெறும் தர்க்கத்தால் நிரூபிக்கப்பட்ட எந்த கருத்தையும் அதைவிட உயர்ந்த தர்க்கவாதத்தால் முறியடித்து விடலாம். கடவுள் இருக்கிறாரென்பதையோ இல்லையென்பதையோ தர்க்கத்தால் நிரூபிக்க முடியாது. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை தெரிந்து கொண்ட பின் அந்த உண்மையை மனதில் நிலை நிறுத்த மட்டும்தான் தர்க்கம் உதவிசெய்யும், இந்த கருத்து எல்லாதுறைகளுக்கும் பொருந்தும்.

அறிவின் ஆதாரம்

தர்க்கம் என்பது அறிவைகொடுக்கும் ஐந்து புலன்களின் வழியாக நாம் பெறும் அறிவை ஆதாரமாக கொண்டுதான் இயங்கமுடியும். உதாரணமாக என் பிறந்த நாளன்றுன்று கட்சி தொண்டர்கள் ஆளுக்கு பத்து ரூபாய் நன்கொடை கொடுத்தார்கள் என்று ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கு கட்சிதலைவர் கணக்கு காட்டினால் அது தர்க்கத்துக்கு பொருந்துமே தவிர அதை உண்மையென நிரூபிக்க உதவாது.

மாறும் உலகை பற்றிய அறிவை பெறுவதற்கு நாம் நமது ஐந்து புலன்களை ஆதாரமாக கொண்டுள்ளது போல இந்த உலகம் எவ்வாறு தோன்றியது போன்ற மதச்சார்புடைய தத்துவங்களை தெரிந்து கொள்வதற்கு அறிவை கொடுக்கும் ஆறாவது புலனான வேதத்தின் துணையை நாட வேண்டும். வேதத்தில் கூறப்பட்ட கருத்துக்களை தர்க்கம் மூலம் சோதித்து புரிந்து கொள்ளலாம். வேதத்தில் கூறப்பட்டு தர்க்கத்துக்கு பொருந்தாத எந்த கருத்துக்களையும் நாம் மூடநம்பிக்கையாக ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அறிவுகூர்மை அதிகம் உள்ளவர்கள் தங்கள் தர்க்க ஞானத்தை முழுதாக பயன்படுத்தி வேதத்தில் கூறப்படும் ஞானத்தை அறிந்து குறைகுடம் என்ற நிலையிலிருந்து நிறைகுடம் என்ற நிலையை விரைவில் அடையலாம்.

முழு அறிவு

வேதத்தை அடிப்படையாக கொள்ளாமல் வெறும் வறட்டு தர்க்கத்தின் துணையை மட்டும் கொண்டு தேடலில் ஈடுபட்டால், தேடல் முடிவடையாது. மாறும் உலகத்தை முழுதும் புரிந்து கொள்ள முடியாது என்பதை புரிந்து கொள்ள வேதத்தின் துணை அவசியம். புரிந்து கொள்ள முடியாத மாயையை ஏன் புரிந்து கொள்ள முடியாது என்று புரிந்து கொண்டவர்கள் மட்டும்தான் நிறைகுடமாக முக்தியடைந்து நம்மிடையே வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

தர்க்கத்தின் இயலாமை

வெறும் தர்க்கத்தின் மூலம் உலகம் தோன்றிய நாளிலிருந்து இன்றுவரை ஒருவர்கூட முக்தியடைந்ததாக தகவல் இல்லை. வேதத்தை சார்ந்த தர்க்க சாத்திரத்தின் உதவியால் முக்தியடைந்தவர்கள் பலர் நம்மிடையே வாழ்ந்துவருகிறார்கள். ஆகவே வெறும் தர்க்கம் முக்தியை கொடுக்காது என்று நிரூபணமாகிறது.

முடிவுரை :

ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது. பசியெடுக்கும்பொழுது சமையல் செய்வது எப்படி என்ற விவாதம் நமது பசியை அதிகபடுத்துமேயன்றி குறைக்காது. அதுபோல நமது நிறைவின்மையை போக்கஉதவாத ஞானம் அறைகுறை ஞானம்தான். உதாரணங்கள் மூலம் வேதம் என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொண்டு தர்க்க சாத்திரத்தின் உதவியால் வேதம் சொல்வது உண்மையா என்று பரிசோதித்து புரிந்துகொண்டு பின் யோகத்தின் மூலம் அந்த ஞானத்தில் நிலைத்து நிற்பதுவே முக்தி. நாம் முக்தியடைந்தபின்தான் வேதத்தின் மகத்துவம் முழுமையாக நமக்கு புரியும். சமையல் குறிப்பு சரிதானா அல்லது நாம் சரியாக சமைக்கிறோமா என்பது போன்று நம்மிடம் இருக்கும் சந்தேகங்கள் சாப்பிடும்பொழுது மறைந்து விடும்.

அது போல முக்தியை கொடுப்பது யோகம்தான் என்றோ, இல்லை காரண-காரிய அறிவுதான் என்றோ, இல்லவேயில்லை தர்க்கம்தான் என்றோ விவாதம் செய்து கொண்டிருப்பதால் முக்தி கிடைக்காது. விஞ்ஞானம், தர்க்கம் ஆகியவை வெறும் ஏட்டுச்சுரைக்காய்கள். நம் குறையை தீர்க்கும் திறனில்லாதவை என்பதை எவ்வளவு சீக்கிரம் புரிந்து கொண்டு வேதத்தின் உதவியை நாம் நாடுகிறோமோ அவ்வளவு விரைவில் நம் அறிவுப்பசி தீர்ந்து நிறைகுடமாவோம்.

பயிற்சிக்காக :

1. நிறைகுடம், குறைகுடம் மற்றும் காலிகுடம் இவற்றை ஒப்பிட்டு சொல்லப்படும் கருத்து என்ன?

2. அரைகுறை அறிவு முழுமை பெறாமலிருக்கும் காரணங்கள் என்னென்ன?

3. முழு அறிவு பெறுவதற்கும் முக்தியடைவதற்கும் என்ன தொடர்பு?

4. தர்க்கம் முக்தியளிக்காது என்பதை நிரூபணம் செய்க.

5. மாறும் உலகை பற்றிய முழுமையான இறுதியான அறிவை பெறுவது எப்படி?

சுயசிந்தனைக்காக :

1. நிறைகுடமாய் ஆகாமல் காலிகுடமாகவே இருப்பதில் என்ன தவறு?

2. ஏன் புரிந்து கொள்ள முடியாது என்பதை புரிந்துகொள்வதால் முக்தி எப்படி கிடைக்கும்?