Monday, March 22, 2010

பாடம் 038: பிரபஞ்சத்தின் மூலப்பொருள் (பிரம்ம சூத்திரம் 1.4.23-27)

சாந்தோக்கிய உபநிஷத் மந்திரம் ஒன்று 'நான் பலவாக ஆகுவேன்' என்று கூறுவதன் மூலம் எப்படி பரமன் இந்த உலகமாகவும் ஜீவராசிகளாகவும் கடவுளாகவும் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளான் என்பதை விவரிக்கிறது. உலகம், கடவுள், மனிதன், மனித குலத்தின் துயரத்தின் காரணம், துயரத்திலிருந்து விடுபட உபாயங்களும் வழிமுறைகளும், துயரங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டு முக்தியடைந்த நிலையை பற்றிய விளக்கம் ஆகிய ஆறு ஆன்மீக கருத்துக்களை எவ்வித முரண்பாடும் இல்லாமல் விவரிப்பதுதான் ஒரு மதத்தின் இலக்கணம். இது இப்படித்தான் என்று மட்டும் கூறாமல் இது ஏன் இப்படி இருக்கிறது என்பதன் முழு விளக்கமும் அளிக்க சமயம் கடமைபட்டுள்ளது. ஹிந்து மதம் என்று வழங்கப்படும் சனாதன தர்மம் இந்த ஆறு கருத்துக்களையும் வேதங்கள் மூலம் முறையாக விளக்கியுள்ளது.

இந்த ஆறின் முதல் மூன்று கருத்துக்களின் தொகுப்பு இந்த பாடத்திலும் எஞ்சிய மூன்றின் தொகுப்பு அடுத்த பாடத்திலும் கொடுக்கப்படுகிறது.

அனைத்தும் பரமன்

உலகம், கடவுள், மனிதன் மற்றும் மற்ற உயிரினங்கள் இவை மூன்றும் பரமனே. நம் ஐந்து புலன்கள் மூலம் அறியப்படும் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கிய அறிவு காரணம் பரமன். படைப்பின் மூலப்பொருளும் பரமனே. எப்படி ஒரு சிலந்தி தன் வலையை தன்னிடமிருந்தே உருவாக்கி வலையின் அறிவுக்காரணமாகவும் (Intelligence cause) பொருட்காரணமாகவும் (Material cause) விளங்குகிறதோ அது போல எவ்வித செயலும் செய்யாமல் பரமன் தன் மாயா சக்தியின் மூலம் இப்பிரபஞ்சத்தை உருவாக்கியுள்ளான்.

உலகம்

இது என்று சுட்டிகாட்டி அறியக்கூடிய அனைத்தும் படைப்பில் அடங்கும். நட்சத்திரங்கள் முதல் கண்ணுக்குத்தெரியாத அணுக்கள் வரை அனைத்தும் படைப்பில் அடங்கும். நம் உடலும் மனமும் கூட நம்மால் அறியப்படுவதால் படைக்கப்பட்டவை என்ற தொகுப்பில் அடங்கும். ஒளி, சக்தி மற்றும் ஜடம் ஆகிய மூன்று தனிமங்களை உள்ளடக்கிய ஒரு சேர்மம்தான் பரமனின் மாயா சக்தி. இதுதான் பிரபஞ்சத்தின் மூலப்பொருள். இதிலிருந்து ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் என்ற பஞ்ச பூதங்கள் உருவாகி அந்த ஐந்திலிருந்து இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆக இந்த படைப்பு முழுவதும் பரமனின் மாயா சக்தியின் வெளிப்பாடு.

கடவுள்

மாயா சக்தியுடன் கூடிய பரமனை ஈஸ்வரன் அல்லது கடவுள் என்று அறியவேண்டும். ஒரு சாதாரண மனிதன் தன் உத்தியோகத்திற்கேற்ற உடையை அணிந்தவுடன் எப்படி போலிஸ் இன்ஸ்பெக்டர் என்ற மரியாதைக்குரியவராக மாறுகிறாரோ அது போல எவ்வித செயலிலும் ஈடுபடாமல் பெயர் உருவம் போன்ற கட்டுகோப்புக்குள் அடங்காத பரமன், 'நான் பலவாக ஆகுவேன்' என்றவுடன் மாயா சக்தி வெளிப்பட்டு கடவுள் என்ற பதவியை பெறுகிறார். எனவே படைப்பவன் ஒரு செயலும் செய்யாத பரமனல்ல, கடவுள்.
கடவுள் தன் படைப்பிலிருந்து விலகி எங்கோ இருப்பவன் அல்ல. கடவுளுக்கும் உலகத்துக்கும் உள்ள தொடர்பு களிமண்ணுக்கும் பானைக்கும் உள்ள தொடர்பை போன்றது. களிமண் பானையை விட்டு எப்பொழுதும் பிரிவதில்லை. அது போல் உலகத்துக்கும் கடவுளுக்கும் எவ்வித இடைவெளியுமில்லை.

படைப்புக்கு முன் அல்லது பின் என்ற கால வேறுபாடும் கிடையாது. ஏனெனில் காலம் என்பதன் தொடக்கமே படைப்பிலிருந்துதான். வெளியும் காலமும் பிரிக்கமுடியாதவை. எனவே வெளி உருவாகும்பொழுதுதான் காலமும் உருவானது.

கடவுள் காரண காரியத்திற்கு அப்பாற்பட்டவன். சட்டை துணியிலிருந்து வந்தது. துணி நூலிலிருந்து வந்தது. நூல் பஞ்சிலிருந்தும் பஞ்சு பருத்தியிலிருந்தும் வந்தன. பருத்திச்செடி விதையிலிருந்து வந்தது. விதை? அனைத்துக்கும் காரணம் ஆண்டவன். கடவுள் அனைத்து காரணங்களையும் கடந்தவன். அவனுக்கு காரணம் கிடையாது.
படைக்கப்பட்டவை கடவுளின் அங்கங்கள்

கடவுள் படைக்கப்பட்ட அனைத்துமாகவும் திகழ்கிறான். எல்லா களிமண்ணும் பானைகள் அல்ல. ஆனால் எல்லா பானைகளும் களிமண்ணால் ஆனவையே. பானைகளைத்தவிர வேறு பல வடிவங்களில் பாத்திரங்கள் இருக்கலாம். அதுபோல கடவுள் அனைத்து வகை உயிரினங்களாகவும் உயிரற்ற ஜடப்பொருள்களாகவும் திகழ்கிறான். கடவுளைத்தவிர வேறு ஒன்றும் இல்லை.

கடவுள் எங்கே இருக்கிறார்? எல்லாப்பொருளிலும் கடவுள் இருத்தலாக இருக்கிறார். பரமனின் மூன்று தன்மைகளில் ஒன்று 'இருத்தல்'. இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் இருக்கிறது என்ற தன்மையை கடவுளிடமிருந்து கடன்வாங்கியுள்ளன. உயிரினங்கள் இருத்தல் என்ற தன்மையை மட்டுமன்றி உணர்வு என்ற இரண்டாவது தன்மையையும் பிரதிபலிக்கின்றன. மனிதன் மட்டும் ஒரு சில சமயங்களில் ஆனந்தம் என்ற மூன்றாவது தன்மையையும் பிரதிபலிக்கிறான். பரமனை அறிந்த ஒரு சில மனிதர்கள் பரமனாகவே மாறி இருத்தல், உணர்வு மற்றும் ஆனந்தம் ஆகிய மூன்று இயல்புகளையும் பிரதிபலிக்கிறார்கள்.

மனிதன்

மனிதன் கடவுள். ஆனால் மனிதன் மட்டுமே கடவுள் அல்ல. அனைத்தும் கடவுள். மனிதனின் உடல் மற்றும் மனம் மாயையின் ஒரு சிறுபகுதி. அனைத்து உயிர்களையும் மனங்களையும் உள்ளடக்கியவன் கடவுள். எனவே 'நீ கடவுளை பார்த்திருக்கிறாயா?' என்ற கேள்விக்கு 'நான் கடவுளைத்தவிர வேறு ஒன்றையும் பார்ப்பதேயில்லை' என்றுதான் பதில் சொல்ல வேண்டும்.

நம் ஐந்து புலன்கள் மூலம் அனுபவிக்கும் அனைத்தும் கடவுளே. ஆனால் நாம் ஏற்கனவே படித்தபடி அனைத்தும் இருப்பது போல் தோற்றமளிக்கும் மாயை. அப்படியானால் கடவுள் பொய்யா? நமது உடலும் மனதும் உண்மையென்றால் கடவுளும் உண்மை. என் உடலும் மனதும் மாயையென்றால் கடவுளும் மாயை. இருப்பது பரமன் மட்டுமே.

உடல் மற்றும் மனம் இவற்றின் அடிப்படையில் நான் மாயையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அற்பமானவன். கடவுள் மாயையை தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் சர்வசக்திமான். என் உடலும் மனதும் சில வருடங்களில் இல்லாமல் போய்விடும். கடவுள் காலத்தையே ஒரு முடிவுக்கு கொண்டுவரும் சக்தி கொண்டவன். பிரளயத்தின் பொழுது காலம் முடியும். உயிரினங்களின் வினைக்குத்தக்க மறுபடியும் அவை அனுபவங்களை பெற கடவுள் மீண்டும் உலகத்தை படைப்பான்.

முடிவுரை :

பாரசீக இளவரசன் (Prince of Persia) என்ற கம்புயூட்டர் விளையாட்டில் பாதாள சிறையில் அடைக்கப்பட்ட கதாநாயகன் அங்கிருந்து தப்பித்து வில்லனின் சதிதிட்டங்களை முறியடித்து அரண்மணை மாடத்தில் தனக்காக காத்திருக்கும் இளவரசியை மீட்டு அவளை மணந்து நாட்டுக்கு மன்னாக முடிசூட வேண்டும். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் அவன் வில்லனுடன் போராடும் பொழுது தோற்றால் தலை போய்விடப்போவதில்லை. நீ இறந்து விட்டாய் (You are dead) என்ற வாசகம் திரையில் தோன்றும். மீண்டும் அவதாரம் எடுத்து தனது முயற்சியை தொடரலாம். என்றாவது ஒரு நாள் முயற்சியில் வெற்றியும் பெறலாம்.வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் விளையாட்டு சுவையாகத்தான் இருக்கும்.

அது போல ஒன்றான பரமன் என்ற நான் பலவாக ஆகி விளையாடும் விளையாட்டுத்தான் இந்த வாழ்க்கை. விளையாட்டுதளம்தான் இந்த உலகம். உலகம், அதில் தோன்றும் அத்தனை வித உயிரினங்கள் மற்றும் உயிரற்ற ஜடப்பொருள்களின் மொத்த வடிவம்தான் கடவுள். அனைத்து மனிதர்களும் அவரவரின் பார்வையில் இந்த விளையாட்டின் கதாநாயகர்கள். விளையாட்டு என்றால் வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்தால்தான் சுவையாய் இருக்கும். ஆனால் இது விளையாட்டு என்று தெரியாமல் உண்மை வாழ்க்கை என்ற அறியாமையுடன் இருப்பதுதான் நம் துயரங்களுக்கு ஒரே காரணம். (அடுத்த பாடத்தில் தொடரும்...)

பயிற்சிக்காக :

1. மதத்தின் இலக்கணம் என்ன?

2. பரமனுக்கும் வலை பின்னும் உதாரணத்தில் குறிப்பிடப்பட்ட சிலந்திக்கும் என்ன வேறுபாடு?

3. மாயை என்ற சேர்மத்தில் உள்ளடங்கிய தனிமங்கள் யாவை?

4. கடவுள் யார்?

5. பிரபஞ்சத்தின் படைப்புக்கு முன் என்ன இருந்தது?

சுயசிந்தனைக்காக :

1. கடவுளை பார்க்க முடியுமா?

2. நாமும் கடவுளும் ஒன்றா வேறா?