Wednesday, March 10, 2010

பாடம் 029: ஒளி பரமன் (பிரம்ம சூத்திரம் 1.3.40)

இந்த பிரபஞ்சத்தில் நடைபெறும் மாற்றங்களில் மனிதனின் பங்கு என்று எதுவுமில்லை என்று கூறிய வேதம், மனிதனால் எதையும் செய்ய முடியாது என்று இந்த பாடத்தின் மூலம் விளக்குகிறது


ஒளி என்பது பரமனின் மாயா சக்தியை குறிக்கும். இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒளி தான். இதில் மனிதனும் அடக்கம். திரைப்படத்தில் காண்பிக்கப்படும் கதாபாத்திரங்களுக்கு ஒரு தனித்தன்மை உண்மையில் கிடையாது. திரையில் வெவ்வேறு வண்ணக் கலவைகள் காட்டப்படுகின்றன. அவற்றை தனிப்படுத்தி உருவமும் பெயரும் கொடுப்பது நமது கற்பனைத்திறன். எதுவும் செய்ய இயலாத ஒளிக்கற்றைகளை கதாபாத்திரங்களாக பாவித்து அவை வெவ்வேறு செயல்கள் செய்வதாக நாம் எண்ணுவது போல் நாமும் இவ்வுலகில் செயல்கள் செய்வது போல் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் நம்மால் நம் விருப்பபடி ஒரு விரலை கூட ஆட்ட முடியாது.

எண்ணங்களும் செயல்களும்.

நம் மனதில் என்ன எண்ணங்கள் எப்பொழுது தோன்றுமென்பதும் அவற்றில் எந்த எண்ணங்கள் செயலாக மாற்றப்படும் என்பதும் நம் வசமில்லாமல் நடக்கும் நிகழ்வுகள். நேற்று என்ன செய்தீர்கள் என்ற கேள்விக்கு நாம் ஒரு ஐந்து அல்லது ஆறு செயல்களை பதிலாக கொடுப்போம். உண்மையில் இதயத்துடிப்பிலிருந்து, இரத்த ஒட்டம், மூச்சுவிடுவது, உணவை ஜீரணிப்பது என நம் உடம்பினுள் நம் கட்டுப்பாடில்லாமல் நடக்கும் எண்ணிலடங்கா செயல்களைத்தவிர இவ்வுடலினால் நாம் செய்யும் செயல்களும் எண்ணிலடங்கா. அவற்றுள் சிலவற்றை மட்டும் 'என் செயல்' என்கிறோம். உதாரணமாக நான் குளித்தேன் அல்லது நடந்தேன் என்று ஒரு செயலாக நாம் கூறுவது எத்தனையோ செல்களின் கூட்டு முயற்சியின் விளைவு, நான் செய்தேன் என்பது நமது அகங்காரம் நடந்த செயலை தன் செயலாக பாவித்துக்கொள்வதன் விளைவு.

மனிதனைத்தவிர மற்ற எந்த உயிரினமும் தான் எந்த செயலையும் செய்வதாக நினைத்து கொள்வதில்லை. ஒரு மாட்டு வண்டியில் பயணம் செய்து அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்று வந்தால் நமக்கு ஏற்பட்ட களைப்பை விட வண்டியை இழுத்த மாட்டுக்குத்தான் சிரமம் அதிகம். ஆனால் நம் மனதில் மட்டும் தான் ஏதோ ஒரு சாதனையை செய்தது போன்ற எண்ணம் இருக்கும்.

நம் வாழ்க்கையை சிறிது ஆராய்ந்தால் பல்வேறு சிறு சிறு எதிர்பாராத சம்பவங்களும், நம்மையறியாமல் நாம் செய்த செயல்களும், முன்பின் அறியாத மனிதர்களின் செயல்பாடுகளும் நாம் இப்பொழுது இருக்கும் நிலைக்கு காரணமாக இருப்பதை அறியலாம். இத்தகைய நிகழ்வுகளை நாம் அதிர்ஷ்டம் என்றோ தற்செயலாக நடந்த விபத்து என்றோ ஒதுக்கிவிட்டு நாம்தான் நம் வாழ்வை வாழ்ந்ததாக எண்ணிக்கொண்டிருக்கிறோம். உண்மையில் நமது வாழ்வு பரமன் நிகழ்த்தும் ஒரு ஒலி-ஒளி காட்சி.

உலகம் ஒரு ஒலி-ஒளி காட்சி

குழந்தைகள் கடற்கரைக்கு சென்றால் அங்கு ஒரு மணல் வீடு கட்டி விளையாடுவார்கள். மிகவும் ஆசையுடனும் பிரயத்தனத்துடனும் கட்டபடும் மணல் வீட்டினால் தங்களுக்கு ஒரு பயனும் கிடையாது என்று நன்றாக தெரிந்தாலும் அவர்கள் தங்கள் திறமை மற்றும் நேரம் முழுவதையும் அதில் செலவிடுவார்கள். வீடு திரும்ப நேரமானவுடன் தாங்கள் ஆசையாக கட்டிய மணல் வீட்டை இடித்து விட்டு கிளம்புவார்கள். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால் 'அது ஒரு விளையாட்டு' என்று பதில் கிடைக்கும். அதே போல பரமன் நான் பலவாக ஆவேனாக என்று விளையாட்டுக்காக உருவாக்கப்பட்ட ஒலி-ஒளி காட்சியே இந்த பிரபஞ்சம். பரமனின் மாயா சக்தியான ஒளி வெளிப்படுவதனால் உலகம் இருப்பது போலவும் அந்த ஒளி ஒடுக்கப்படும் பொழுது உலகம் அழிவது போலவும் தோற்றம் ஏற்படுகிறது.

இந்த விளையாட்டில் நமது மனமும் உடலும் ஒரு சிறுபகுதி. 'எத்தனை கோடி இன்பம் தந்தாய்' என்று வியந்து இவ்வுலகில் நடக்கும் அனைத்தையும் அனுபவித்து மகிழ்வது மட்டுமே நமது வாழ்வின் ஒரே குறிக்கோள். ஆனால் நாம் நம் அறியாமையால் நம் வாழ்வுக்கு அனாவசியமாக பொறுப்பேற்றுக்கொண்டு அதில் வெற்றி-தோல்விகளை கற்பித்து துன்பபட்டுக்கொண்டிருக்கிறோம். தேன் குடிக்க வந்த வண்டு அதில் சிக்கித்தவிப்பது போல நம்மை துயரப்படுத்த எவ்வித சக்தியுமில்லாத இவ்வுலகின் பிடியில் மாட்டித்தவித்துக்கொண்டிருக்கிறோம். இந்த உலகை பரமனின் ஒளி என்று தெரிந்து கொண்டால் புவிமேல் நிகழும் எல்லாம் இன்பமயமாக நமக்கு தெரியும்.

இராவணன் இல்லாத இராமாயணம் சுவைக்காது. அது போல வெற்றி-தோல்வி, லாபம்-நஷ்டம், புகழ்-இகழ் போன்ற இருமைகள் இல்லாவிட்டால் வாழ்வு சுவைக்காது. பரமனின் ஒலி-ஒளி காட்சியான இந்த வாழ்க்கையின் உண்மையற்ற தன்மையை உணராமல் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளுக்கு அளவுக்கு அதிகமான உண்மைத்துவம் கொடுத்து அதில் பந்தபட்டு துன்பத்தில் உழன்று கொண்டிருப்பவர்கள் அறியாதவர்கள். இந்த பரம ரகசியத்தை அறிந்தவர்கள் வெற்றியில் துள்ளுவதில்லை, தோல்வியில் துவளுவதில்லை.

முடிவுரை :

கண்ணுக்குத்தெரியாத அளவுக்கு சிறியதான கிருமி போன்ற உயிரினங்களும் வாழ்வில் பல்வேறு சுகதுக்கங்களை அனுபவிக்கின்றன. ஆனால் அவற்றிக்கு 'நான் செய்கிறேன்' என்ற எண்ணம் இருப்பதில்லை. நமது அனைத்து துன்பங்களுக்கும் ஒரே காரணம் நம்முடைய 'நான்' அல்லது 'என்' என்ற எண்ணங்களுக்கு தவறான பொருளை நாம் கற்பித்துக்கொண்டிருப்பதுதான்.

நான் பரமன். என் மனமும் உடலும் ஒளிவடிவமான மாயையின் வெளிப்பாடு என்ற சரியான அறிவு ஏற்பட்டபின் தொடர்ந்து மாறுகின்ற உலகம் ஒரு கேளிக்கை மைதானமாகவும் (Amusement park) அதில் இருமைகளிடையே ஊசலாடிக்கொண்டிருக்கும் நம் வாழ்வு ஒரு உல்லாச பயணமாகவும் (Picnic) நம் ஞான கண்களுக்கு தெரிய ஆரம்பிக்கும். எப்படி வெகுவாக அச்சமூட்டக்கூடிய ஒரு ரோலர் கோஸ்டரில் (Roller coaster) பயணித்த அனுபவத்தை சுற்றுலாவின் சிறந்த அம்சமாக நாம் கொண்டாடுவோமோ அதே போல் வாழ்வில் நடக்கும் சோகமான நிகழ்வுகள் கூட சுவையான அனுபவங்களைத்தரும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

வெற்றி தோல்விகள் கலந்த இந்த பரமனின் ஒளி விளையாட்டு உண்மையில் குறையாத இன்பமும் கலையாத அமைதியும் கொண்டது என்ற கருத்தை வேதம் ஓளி பரமன் என்ற இந்த பாடத்தின் மூலம் விளக்கியது.


பயிற்சிக்காக :

1. ஒளி என்பது எதை குறிக்கும்?

2. நாம் ஒரு நாளில் செய்யும் செயல்களின் எண்ணிக்கை சுமாராக எவ்வளவு இருக்கும்?

3. வாழ்வில் தற்போதைய நம் நிலைக்கு யார் காரணம்?

4. பரமன் பலவாக தோற்றமளிப்பதற்கு காரணம் என்ன?

5. நம் வாழ்வின் குறிக்கோள் என்ன?

6. ஒளி பரமன் என்ற இந்த பாடத்தின் மூலம் வேதம் நமக்கு என்ன கருத்தை கூறுகிறது?


சுயசிந்தனைக்காக :

1. எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

2. வாழ்வில் நமக்கு ஏற்படும் விபத்துக்களுக்கும் தற்செயலாக நடக்கும் நல்ல காரியங்களுக்கும் என்ன காரணம்?

3. ஏன் வெற்றியில் துள்ளாமலும் தோல்வியில் துவளாமலும் இருக்க வேண்டும்.