Showing posts with label Karma Yoga. Show all posts
Showing posts with label Karma Yoga. Show all posts

Tuesday, January 4, 2011

பாடம் 127: உபாசன யோகம் (பிரம்மசூத்திரம் 3.3.42)

பரமனுடன் ஒன்றி முக்தி பெற விழையும் மக்களுக்கு வழிகாட்ட வழக்கில் இருந்துவரும் பல்வேறு யோகங்களை ஒப்பிட்டு விளக்குவதுடன் உபாசனயோகத்தின் அறிமுகத்தையும் இந்த பாடம் செய்கிறது.

கிரியாயோகம்: புலன்களை கட்டுப்படுத்துதல், வேதத்தை படித்தல், கடவுளிடம் சரணடைதல் ஆகிய மூன்று செயல்களை உள்ளடக்கிய கிரியாயோகம் ஆன்மீக பாதையில் பயணத்தை ஆரம்பிக்க உதவும் முதல் படிகட்டு என்று பதஞ்சலியின் யோகசூத்திர விளக்கத்தில் சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகிறார்.

கர்மயோகம்: மனம், மொழி, மெய்யால் செயல்களை செய்து பரமனை பற்றிய ஞானத்தை பெற மனதை பக்குவபடுத்திக்கொள்ள உதவுவது கர்மயோகம்.

ஞானயோகம்: முறைப்படி வேதாந்தத்தை பயின்று, கற்றதில் எவ்வித சந்தேகமும் இல்லாமல் தெளிவுற்று, பெற்ற ஞானத்தில் நிலைபெறுவது ஞானயோகம்.

பக்தியோகம்: கர்மயோகம் செய்த பின் ஞானயோகம் செய்து முக்தியடையும் முழுப்பாதையையும் குறிப்பது பக்தியோகம். பக்தியோகம் இறைவனை துதிக்கும் சடங்குகளில் தொடங்கி பரமனை முழுதாக அறிந்து கொள்வதில் முடிவடையும்.

அஷ்டாங்கயோகம் அல்லது ராஜயோகம்: வேதத்தின் சாரமான பக்தியோகத்தை கோர்வையாகவும் எட்டுஅங்கங்களாக முறைப்படுத்தியும் யோகசூத்திரம் என்ற நூலில் பதஞ்சலி விளக்கியுள்ளார்.   ஹதயோகம், மந்திரயோகம், தந்திரயோகம், பூர்ணயோகம், காயகல்பயோகம், குண்டலினியோகம் ஆகிய அனைத்தும் இந்த அஷ்டாங்க யோகத்தின் வெவ்வேறு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிற்கால ஆசிரியர்களால் தோற்றுவிக்கப்பட்டவை.

உபாசனயோகம்: கர்மயோகத்தின் ஒருபகுதியான உபாசனயோகம், மனதால் மனதை பண்படுத்த செய்யும் செயல்களை மட்டும் உள்ளடக்கியது. போல் வால்ட் என்ற உயரம் தாண்டும் போட்டியில் இலக்கை நோக்கி ஓடுவது கர்மயோகம். இலக்கை நெருங்கும்பொழுது கோலை ஊன்ற வேண்டிய இடத்தில் மனதை குவிப்பது உபாசனயோகம். கோலை உபயோகித்து தரையிலிருந்து உயரே எழும்புவது ஞானயோகம். கோலையும் விட்டுவிட்டு இலக்கை கடப்பதுபோல் அனைத்து யோகங்களையும் கடந்து பரமனுடன் ஒன்றாவது முக்தி.   

கடவுள்பக்தி உபாசன யோகத்தின் அடிப்படை. பிறவிச்சுழலில் அகப்பட்டு உலகத்தின் இன்பதுன்பங்களில் அலைக்களிக்கப்படும் மானிடர்களுக்கு கடவுள் ஒரு பாய்மரக்கப்பல். அதில் ஏறி அமர்ந்துகொண்டாலும் கடலின் சீற்றத்திலிருந்து முழுதும் தப்ப கப்பலை சரியாக செலுத்தி வீடுபேறை அடையவேண்டும். கடவுளிடம் நம்பிக்கைகொள்வது கப்பலில் ஏறி அமர்வது போல. கடவுளை தெரிந்து கொள்வது கப்பலை செலுத்தி வீடு திரும்புவதற்கு ஒப்பாகும்.

பெரும்பாலான மக்கள் கடவுளை நம்புவதோடு தங்கள் முயற்சியை நிறுத்திக்கொள்கிறார்கள். கடவுள் நம்பிக்கையுடன் உபாசன யோகம் செய்தால் மட்டும் முக்தியடைந்துவிடமுடியாது.

முக்தியடையும் வழி

செயல்கள் செய்து மனதை பக்குவபடுத்திக்கொண்டபின் பரமனை அறிந்து ‘நான் பரமன்’ என்ற ஞானத்தில் நிலைபெறுவது முக்தி. எவ்வித செயல்களும் செய்யாமல் ஞானம் பெறுவது அசாத்யம்.  எனவே முதலில் செயல்கள் செய்து பின் ஞானம் பெற்று அதில் நிலைபெறுவதுதான் முக்தியடைய மக்களுக்கு இருக்கும் ஒரேவழி. எந்த யோகத்தை பின்பற்றினாலும் மனபக்குவம் பெறுவது ஞானம் பெறுவது ஆகிய இரு படிகளை கடந்தால் மட்டுமே முக்தியடைய முடியும்.

உபாசன யோகத்தின் பங்கு

நமது ஆளுமை (personality), நடத்தை மற்றும் செயல்கள் ஆகியவை நம் மனதில் இருக்கும் எண்ணங்களை சார்ந்து இருக்கின்றன. ஒருவன் கோழையா அல்லது வீரனா என்பதை உடல் வலிமையை பொறுத்து முடிவுசெய்வதில்லை. அதே போல் நடப்பவை நல்லவையா தீயவையா என்பதை வெளியுலகம் தீர்மானிப்பதில்லை. அனைத்தும் அவரவர் மனதில் உள்ள எண்ணங்களால் தீர்மானிக்கப்படுகின்றன.

எனவே எண்ணங்களை தூய்மையாகவும் ஆரோக்கியத்துடனும் வைத்திருப்பது அவசியம். சரியான உணவும் திட்டமான உடற்பயிற்சியும் எப்படி உடலை பாதுகாக்க அவசியமோ அதுபோல நம் மன வலிமையை பாதுகாக்க கடவுளை பற்றிய எண்ணம் அவசியம். எப்பொழுதும் புலன்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதிலேயே கவனம் சென்றுகொண்டிருந்தால் மனம் ஆசை, பொறாமை, கோபம் போன்ற தீயகுணங்களின் இருப்பிடமாகத்தான் இருக்கும்.

வெளியுலக தேடல்களை சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்து கடவுள் பற்றிய சிந்தனைகளை வளர்த்து மனதை சுத்தீகரிக்கும் முயற்சிதான் உபாசனயோகம். நாம் என்ன செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறோம் என்பதை பொறுத்துதான் நம் மனதில் எண்ணங்கள் தோன்றுகின்றன. சதா சர்வகாலமும் காதலருடன் நேரிலோ தொலைபேசியிலோ பேசிக்கொண்டிருந்தால் மனதில் தோன்றும் அனைத்து எண்ணங்களும் அவரைபற்றியதாகவே இருக்கும். உலகில் தம்மை சுற்றி நிகழும் நிகழ்வுகள் கூட மனதில் பதியாது. யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லகூட தெரியாது. இதற்கு பதில் இரண்டு வாரங்கள் அலுவலகத்திலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு உண்பது உறங்குவது தவிர மற்ற நேரங்கள் முழுவதையும் பாகவதம், விஷ்ணு புராணம் ஆகியவற்றை கேட்பதில் மட்டும் செலவிட்டால் மனதில்  கடவுள் பற்றிய எண்ணங்களை நிறைந்திருக்க செய்யலாம்.

உலக வாழ்க்கையில் பற்று இருக்கும்வரை நம்மால் உபாசனயோகத்தில் ஈடுபடமுடியாது. வாழ்வில் அடிபட்டு எப்பொழுது நமக்கு புத்திவருகிறதோ அப்பொழுதுதான் கடவுளை தொழவேண்டும் என்ற எண்ணம் வரும். கடவுள்தான் நம் வாழ்வை இன்பகரமாக மாற்ற வல்லவர் என்ற அறிவு மட்டும் நம் எண்ணங்களை மாற்றிவிடாது. உபாசன யோகம் என்ற பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டால்தான் மனதை பக்குவபடுத்தமுடியும்.

உபாசனயோகத்தின் அடிப்படை தேவைகள்

தேவை 1: உலகத்தின் இயலாமை:- உலகத்தில் உள்ள எந்த ஒரு மனிதராலோ அல்லது பொருளாலோ நமக்கு நீடித்த இன்பத்தை தர இயலாது என்பதை புரிந்திருக்க வேண்டும்.

தேவை 2: இறைவனின் மகிமை:- எல்லாம் வல்ல இறைவனை வழிபடுவதன் மூலம் எதையும் தாங்கும் இதயத்தை பெறமுடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.

தேவை 3: உபாசன யோகத்தில் நாட்டம்:- எதற்காக உபாசன யோகம் செய்ய வேண்டும் என்றும் உபாசன யோகம் செய்வதில் ஈடுபாடும் இருக்க வேண்டும்.

தேவை 4: வாழ்க்கை முறையில் சீர்திருத்தம்:- இல்வாழ் பருவத்திலிருந்து விடுபட்டு ஓய்வு நிலைக்கு செல்லும் நிலையில்தான் உபாசனையில் மனம் ஈடுபடும்.

உபாசன யோகத்தின் வகைகள்

வகை 1: இறைவனின் நாமத்தை ஜபிப்பது

வகை 2: செய்யும் செயல்கள் அனைத்தையும் கடவுளுக்கு அர்ப்பணமாக செய்வது

வகை 3: இறைவனின் புகழை உபன்யாசர்கள் சொல்ல கேட்பது

வகை 4: வேத பாராயணம் செய்தல் மற்றும் புராணங்களை படித்தல்

முடிவுரை :

எண்ணங்களின் தரம்தான் வாழ்க்கையின் தரத்தை நிச்சயிக்கின்றன. மனதில் என்ன எண்ணங்கள் தோன்றுகின்றன என்பதை நம்மால் நேரடியாக கட்டுப்படுத்த முடியாது. இந்த மருந்தை சாப்பிடும்பொழுது அண்டங்காக்கையை பற்றி நினைக்காதே என்று மருத்துவர் சொன்னால் அதை நிச்சயமாக யாராலும் பின்பற்ற முடியாது. ஆனால் மனதில் ஏற்படும் எண்ணங்களை செயல்வடிவமாக மாற்றுவதில் நமக்கு முழுசுதந்திரம் உள்ளது. சரியான செயல்களை மட்டும் செய்வதன் மூலம் நம் மனதில் தோன்றும் எண்ணங்களை நம்மால் கட்டுபடுத்த முடியும்.

உபாசன யோகம் செய்வதன் மூலம் கடவுளைபற்றிய தியானத்தில் நம்மை தொடர்ந்து ஈடுபடுத்தி அதனால் நம் மனதில் தோன்றும் எண்ணங்களை சுத்திகரித்துக்கொள்ளலாம். உலகவாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளினால் தொடர்ந்து அலைபாயும் மனதை உபாசனயோகத்தால் சீர் செய்து பரமனைபற்றிய ஞானத்தை பெற தயார் செய்துகொள்ளவேண்டும்.

யோகம் என்ற சொல்லுக்கு ஒன்றாவது என்பது பொருள். உண்மையில் பரமனுடன் ஒன்றாவது என்பது ஒரு செயல் அல்ல. நாம் ஒத்துக்கொண்டாலும் மறுத்தாலும் ‘நான் பரமன்’ என்ற உண்மை மாறாது. இந்த உண்மையை புரிந்து கொள்ள மனபக்குவமும் வேதத்தை முறையாக ஆசிரியரின் துணையுடன் படித்து தெளிதலும் அவசியம். இந்த இரு செயல்கள்தான் வெவ்வேறு யோகங்களாக வழக்கில் போதிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மனிதரும் தங்களுடைய தேவைக்கேற்றபடி ஒரு குறிப்பிட்ட யோகத்தை தேர்ந்தெடுத்து அதில் தேர்ச்சி பெற்றபின் கடைசியாக ஞான யோகத்திற்கு முன்னேறி பின் முக்தியடைய வேண்டும்.

அனைத்து மக்களுக்கும் ஏதாவது ஒரு கட்டத்தில் மனதை ஒருமுகபடுத்தவேண்டிய அவசியம் ஏற்படுவதால் முக்தியடைய முயலும் அனைவருக்கும் உபாசனயோகம் மிக உதவியாக இருக்கும்.

பயிற்சிக்காக :

1. இந்த பாடத்தில் குறிப்பிடபட்ட யோகங்களின் பெயர்களை பட்டியலிடுக.

2. முக்தியடைய நாம் செய்யவேண்டிய யோகங்களை வரிசைபடுத்துக.

3. உபாசன யோகம் என்றால் என்ன?

4. உபாசன யோகம் செய்ய அடிப்படைத்தேவைகள் என்னென்ன?

5. உபாசன யோகத்தின் வகைகள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. ஏதாவது ஒரு யோகத்தை மட்டும் பின்பற்றி முக்தியடைய முடியுமா?

2.உபாசன யோகம் செய்யாமல் முக்தியடைய முடியாதா?

3. உபாசன யோகம் செய்வது எப்படி?

Thursday, November 25, 2010

பாடம் 109: வேலையின் நோக்கம் மனத்தூய்மை (பிரம்மசூத்திரம்3.3.18)

வேலை செய்வதன் உள்நோக்கம் நமது மனதை தூய்மை படுத்துவது என்ற கருத்தை விளக்கி வேலை செய்யும் பொழுது அவசரம் இருக்க கூடாது என்று இந்த பாடம் உபதேசிக்கிறது.

மனதில் உள்ள அழுக்கு

அழுக்காறு, அகந்தை,அதிருப்தி, அருவருப்பு, அசூயை, ஆணவம், ஆத்திரம், இறுமாப்பு, எரிச்சல், ஏக்கம், ஏமாற்றம், கவலை,  கலக்கம், கர்வம்,கோபம், குரோதம், குற்ற உணர்வு, சந்தேகம், சஞ்சலம், தவிப்பு, தற்பெருமை, துன்பம், துக்கம், துயரம்,  பயம், பகைமை, பழிவாங்கும் உணர்வு, பொறாமை, பேராசை, வருத்தம், விரக்தி, விரோதம், வெட்கம் போன்றவை மனதில் உள்ள அழுக்குகள். இந்த அழுக்குகளுக்கு அடிப்படை காரணம் நமது ஆசைகள். நமக்கு எவ்வித ஆசையும் இல்லாமல் இருந்தால் மேற்குறிப்பிட்ட எந்த அழுக்குகளும் மனதில் தோன்றாது.

ஆனால் மனதில் தோன்றும் ஆசைகளை அகற்றுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆசைகள் தோன்ற காரணமான விருப்பு வெறுப்புகளின் பிடியிலிருந்து முதலில் நமது மனதை விடுவிக்க வேண்டும்.

சாதரணமாக நம் செயல்கள் அனைத்தும் நமது விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் தான் அமைகிறது. எனக்கு இது பிடித்திருக்கிறது, எனவே செய்கிறேன். எனக்கு அது பிடிக்கவில்லை அதனால் செய்யவில்லை. இதுபோல் விருப்பு வெறுப்புகளின் பிடியில் தொடர்ந்து செயல் பட்டால் அவை மேலும் பலம் பெற்று நம்மை அடிமைபடுத்திவிடும். முதல் சிகரெட்டை பிடிக்கலாம் அல்லது பிடிக்காமலும் இருக்கலாம் என்று இளைஞனுக்கு இருந்த சுதந்திரம் சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டதும் பறிபோய்விடும்.

மனதில் உள்ள அழுக்குகளை தூய்மை படுத்த வேலை செய்வது அவசியம்.  

வேலைக்கும் மனத்தூய்மைக்கும் உள்ள உறவு

ஒரு வேலையை இப்படித்தான் செய்யவேண்டும் என்று ஒரு முறை இருக்கும். நம் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் அந்த முறையை பின்பற்றினால் நாளடைவில் மனம் விருப்பு-வெறுப்புகளின் பிடியிலிருந்து விடுபடும். இதனால் நமக்கு எது பிடிக்குமோ அதில் ஆசை கொள்ளாமல் எது நல்லதோ அதில் ஆசைகொள்ள நமக்கு வாய்ப்பு கிடைக்கும்.

‘தெருவில் குப்பை போடக்கூடாது’ என்று சொன்னால் யாரும் அதற்கு மறுப்பு சொல்ல மாட்டார்கள். ஆனால் ஏன் தெருவில் குப்பை போடகூடாது என்ற கேள்விக்கு சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்திருக்கவேண்டும், ஒரு பொறுப்புள்ள குடிமகனாக நடந்து கொள்ள வேண்டும் என்று வாயளவில் பதில் சொன்னாலும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் எல்லா இடமும் தூய்மையாய் இருப்பதால் அங்கு குப்பை போடகூடாது என்று சொன்னால் நியாயமிருக்கிறது, இங்கு ஏற்கனவே குப்பைத்தொட்டி போல் இருக்கும் தெருவில் நான் ஒரு காகிதத்தை தூக்கி போட்டால் என்ன என்று மனதளவில் நினைத்துக்கொண்டு யாரும் பார்க்காதபோது தொடர்ந்து குப்பைகளை பொது இடங்களில் தூக்கி எறிந்து கொண்டுதான் இருப்பார்கள்.

ஏன் தெருவில் குப்பை போடக்கூடாது என்பதற்கு ‘மனதை தூய்மைபடுத்த’ என்பதுதான் சரியான பதில். தெருவில் நாம் குப்பை போட்டாலும் போடாவிட்டாலும் பெரிய வித்தியாசம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் தெருவில் குப்பை போடக்கூடாது என்ற சுயகட்டுபாடு நமது மனதை தூய்மை படுத்த பெரிதும் உதவும்.

இதுபோல எல்லா செயல்களையும்  செய்ய வேண்டிய முறைப்படி செய்வது நம் மனதை விருப்பு-வெறுப்புகளின் பிடியிலிருந்து விடுவிக்கும். அவ்வாறில்லாமல் மனம் போனபடி நடப்பது நமக்கு மட்டும்தான் நஷ்டம். அதனால் மற்றவர்களுக்கோ சூழ்நிலைக்கோ எவ்வித பாதிப்பும் இல்லை.

வேலையில் வேகம்

சுறுசுறுப்பாக வேலை செய்வது மிக முக்கியம். ஆனால் அவசரமாக வேலை செய்வது தவறு. ஒரு வேலையை முறைப்படி திருத்தமாக செய்ய ஆகும் நேரத்தை செலவிட்டு கவனமாக வேலையில் ஈடுபாட்டுடன் செயல்களை செய்யவேண்டும். வேலையை அனுபவித்து செய்வது வேலை செய்து முடிப்பதை விட முக்கியமானது.

ஆனால் எல்லோரும் வேலையை முடித்து விட்டு வீடு திரும்ப வேண்டும் என்பதில் தான் குறியாய் இருப்பார்கள். இதற்கு இரண்டு காரணங்கள்.

முதல் காரணம்: படித்து முடித்தால் விளையாடப்போகலாம் என்று மனதில் விளையாட்டை பற்றி நினைத்துக்கொண்டு கையில் உள்ள புத்தகத்தின் பக்கங்களை வேகமாக புரட்டிகொண்டிருக்கும் சிறுவனைப்போல பணம் சம்பாதிப்பதற்காக பலரும் வேலை செய்து கொண்டிருத்தல்.

இரண்டாம் காரணம்: பணத்தை கொடுத்து நிம்மதியை வாங்க முடியாது என்ற உண்மையை உணராமல் பணம் சம்பாதிப்பதற்காக வேலை செய்தல்.

வேலை செய்வதன் முக்கிய நோக்கம் மனத்தூய்மை என்பதையும் பணம், புகழ் போன்றவை வேலை செய்வதால் கிடைக்கும் துணை பொருள்கள் (by-products) என்பதையும் புரிந்து கொண்டவர்கள் அவசரம் ஏதுமில்லாமல் அதே சமயத்தில் துடிப்புடனும் சுறுசுறுப்பாகவும் திறம்பட வேலை செய்வார்கள்.

வேலை செய்வதன் முதல் காரணம்: அக சீர்திருத்தம்

சுறுசுறுப்பாகவும், முழு திறமையை உபயோகித்தும், ஈடுபாட்டுடனும் வேலையை செய்யவேண்டிய முறைப்படி சரியாக செய்வதன் மூலம் நமது மனதில் உள்ள அழுக்குகளை படிப்படியாக நீக்கி மனத்தூய்மை பெறலாம். இதுதான் வேலை செய்வதன் முக்கியமான நோக்கம் என்பது புரிந்தால் வேலை செய்யும்பொழுது பொதுவாக காணப்படும் அவசரம் மறையும்.

வேலை செய்வதன் உப காரணம் – புற உலக சீர்திருத்தம்

வேலை செய்வதால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுகிறது. இதனால் வாழ்வில் வசதிகள் கூடுகின்றன. வேகமாக வேலை செய்தால் முன்னேற்றங்கள் விரைவில் ஏற்படும் என்பது உண்மை. ஆனால் உண்மையிலேயே இது முன்னேற்றமா என்பது சிந்திக்கப்படவேண்டிய விஷயம்.

காந்தி காலத்தில் இங்கிலாந்திற்கு செல்ல பதினைந்து நாட்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இப்பொழுது பதினைந்து மணிநேரத்தில் லண்டன் சென்று விடலாம். இந்த முன்னேற்றத்தினால் யாருக்கும் எவ்வித பயனும் இருப்பதாக தெரியவில்லை. பொழுதுபோக்கிற்காக சுற்றுலா செல்பவர்கள் கூட நேரம் போதவில்லை என்று அவசர அவசரமாக அருங்காட்சியகத்துக்குள் நடக்கிறார்கள்.

ஆறு மாதங்களில் கட்ட வேண்டிய மேம்பாலத்தை ஒரே வாரத்தில் கட்டுவது மற்றும் பத்து பேர் செய்யும் வேலையை கணிப்பொறி உதவியுடன் ஒரே ஆள் செய்வது  போன்ற மாற்றங்கள் புறவுலகை வேகமாக மாற்றி வருகின்றன. ஆனால் அதனால் மக்களுக்கு ஏற்படும் பயன் அதே விகிதத்தில் அதிகரிப்பதில்லை (Law of diminishing returns).  சொல்லப்போனால் ஒவ்வொரு முன்னற்றமும் வாழ்வில் நெருக்கடியையும் மனஉளைச்சலையும் அதிக படுத்துகின்றன. பேருந்தில் ஒரு மணி நேரம் பயணம் செய்வதற்கு பதில் இருசக்கர வாகனம் வாங்கி இருபது நிமிடங்களில் அலுவலகத்தை அடைந்தாலும் முன்னை விட தற்பொழுது நேரம் போதவில்லை என்றுதான் தோன்றுகிறது. மாட்டு வண்டி வேகத்தில் வாழ்க்கை நகர்ந்தபோது ஓய்வெடுக்க கிடைத்த நேரம் மோட்டர் கார் யுகத்தில் கிடைப்பதில்லை.

காலம் பொன் போன்றது என்றால் நமக்கு கிடைத்த வாழ்நாட்களை இன்பமாகவும் நிம்மதியாகவும் வாழவேண்டும் என்று பொருள். ஆனால் காலத்தை விரயம் செய்யாமல் நிறைய உழைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று இதை தவறாக புரிந்து கொண்டு மக்கள் ஓயாமல் பணத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

மரத்தினடியே நிம்மதியாக உட்கார்ந்திருந்த விவசாயியிடம் நீ ஏன் இன்னொரு போகம் விளைவிக்க கூடாது என்று கேட்டதற்கு அவன் இருக்கும் உணவு எனக்கு போதும் இன்னும் விளைத்து என்ன செய்ய என்று பதிலளித்தான். இன்னும் விளைத்து அதிகப்படியாக கிடைத்த நெல்லை விற்று பணமாக்கி சேர்த்து வைத்து இன்னும் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி பெரிய பணக்காரனாகி பிறகு நிம்மதியாக இருக்கலாம் என்று அவனுக்கு உபதேசம் செய்தால் அவன் நான் இப்பொழுதே நிம்மதியாகத்தான் இருக்கிறேன், எதற்கு இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று பதில் கேள்வி கேட்டால் நம்மால் எவ்வித மறுமொழியும் சொல்ல முடியாது.

விரைவில் வேலைகளை செய்து முடிப்பதால் எவ்வித பயனும் இல்லை.

புற உலக முன்னேற்றமும்  அக உலக சீர்திருத்தமும்

வேலை செய்வதால் நமது மனம் செம்மையாகிறது. இரண்டு அடி குழி வெட்டிய பின் அதை பழையபடி மூடு என்று சொன்னால் உழைப்பை வீணடிப்பதுபோல் தோன்றும். உண்மையில் மனதை தூய்மை படுத்தவே வேலை செய்கிறோம். வேலை செய்வதால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுகிறதா என்று கவனிப்பது அனாவசியம். ஏனெனில் அந்த முன்னேற்றம் நம் நிம்மதிக்கும் இன்பத்திற்கும் எவ்வகையிலும் துணை செய்வதில்லை.

கிடைத்த ஒரே ஊசிப்பட்டாசை ஒரேயடியாக கொளுத்தாமல் அதை பிரித்து ஒவ்வொரு வெடியையும் தனித்தனியாக கையில் பிடித்து கொளுத்தி தீபாவளியை கொண்டாடும் ஏழை சிறுவனையும் பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கின பட்டாசுகளை பத்து நிமிடத்தில் கொளுத்தி முடித்துவிட்டு நாள் முழுவதும் ‘போர் அடிக்கிறது’ என்று புகார் செய்யும் பணக்கார சிறுவனையும் ஒப்பிட்டால் அவசரபடும் தவறை நாம் செய்யமாட்டோம்.

பூமியை நாம் காப்பாற்ற வேண்டிய தாயாக கருதாமல் கொள்ளையடிக்கபட வேண்டிய பகைவனின் சொத்தாக கருதி இயற்கை வளங்களை தொடர்ந்து சூறையாடி வருவதன் காரணம் நாம் எதற்கு வேலை செய்கிறோம் என்பதில் ஒரு தெளிவு இல்லாமல் இருப்பதுதான்.   

பத்து பேர் செய்யும் வேலையை ஒருவன் செய்வதால் உற்பத்தி திறன் மிக அதிகமாகிவிட்டது என்று மகிழும் அதே நேரத்தில் பத்து பேருக்கு பதில் ஒரே ஒருவனின் மனம் மட்டும்தான் தூய்மையடைய வாய்ப்பு கிடைத்தது என்ற உண்மையையும் உணர வேண்டும்.

வேலை செய்து அதன் பலனை அனுபவிப்பதற்கு பதில் வேலை செய்வதையே இனிமையான அனுபவமாக செய்தால் மனம் தூய்மைப்படும் அதே நேரத்தில் வாழ்க்கைத்தரமும் தேவையான அளவு உயரும். இதனால்தான் நெசவாலைகளுக்கு பதில் கைத்தறி ஆடைகளை பிரபலபடுத்தவேண்டும் என்று காந்தி மகான் முயன்றார். தொழில் துறையில் உண்மையான முன்னேற்றம் அவரவர்களால் தங்கள் தேவைகளை தானே பூர்த்தி செய்து கொண்டு வாழ்வதற்கு துணை செய்வதாய் இருக்க வேண்டும். உதாரணமாக கைத்தறியில் உருவாகும் துணியின் தரம் ஆலைகளில் செய்யப்படும் துணியின் தரத்தைவிட நன்றாக இருக்கும் வகையில் கைத்தறியை வடிவமைப்பதுதான் உண்மையான விஞ்ஞான முன்னேற்றம்.

முடிவுரை :

அவசரமில்லாமல் சுறுசுறுப்பாக ஒரு வேலையை செய்வது அவசியம். போக வேண்டிய இடத்தை சீக்கிரம் சென்றடைய வேண்டும் என்று காரை வேகமாக ஒட்டுவது அவசரம். ‘நான் ஒரு ரவுண்டு போய்வருகிறேன்’ என்று தந்தையின் காரை மகன் எடுத்துக்கொண்டு அவரைவிட வேகமாக கார் ஓட்டினாலும் அதில் அவசரம் எதுவும் இல்லை. கார் செல்லும் வேகத்தை அனுபவிப்பவனுக்கு சீக்கிரம் போய் சேர்ந்து விடுவோமே என்ற வருத்தம் கூட இருக்கும். அதுபோல வேலையை எப்பொழுது முடிப்போம் என்று நினைத்து செய்தால் அது அவசரம். வெகுவேகமாக வேலையை அனுபவித்து செய்தால் அது சுறுசுறுப்பு.

கஷ்டபட்டு வேலை செய்வது பிறகு சந்தோஷமாய் இருப்பதற்காக என்ற எண்ணம் தவறானது. நம் வாழ்வில் பெரும்பகுதியை வேலை செய்வதற்காகத்தான் செலவிடுகிறோம். எனவே சந்தோஷமாக வேலை செய்தாலே போதும்.

பயிற்சிக்காக :

1. மனதில் உள்ள அழுக்குகளாக குறிப்பிடப்பட்டவை யாவை?

2.விருப்பு-வெறுப்புகளின் பிடியிலிருந்து விடுபட நாம் என்ன செய்யவேண்டும்?

3.ஏன் தெருவில் குப்பை போடக்கூடாது?

4.சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கும் அவசரமாக செய்வதற்கும் என்ன வித்தியாசம்?

5.வேலையில் வேகமிருந்தால் அதன் விளைவுகள் யாவை?

6.உண்மையான விஞ்ஞான முன்னேற்றம் யாது?

7.இந்த பாடத்திலிருந்து கிடைத்த முக்கியமான கருத்து என்ன?

சுயசிந்தனைக்காக :

1. விருப்பமானதை செய்தால்தானே சந்தோஷம்? வெறுக்கும் வேலைகளை செய்வதால் என்ன பலன்?

2. ஹோமம் வளர்க்கும்பொழுது நெய் ஊற்றுவதற்கு பதில் டால்டா ஊற்றலாமா?

3.ஒரு பூஜை செய்யும்பொழுது இப்படித்தான் செய்யவேண்டும் என்று வெவ்வேறு சம்பிரதாயங்கள் இருந்தால் எதை பின்பற்றுவது?

4. சிங்கபூர் போன்ற நகரங்களில் எல்லோரும் நகரை சுத்தமாக வைத்திருப்பதால் அவர்கள் மனமும் தூய்மையாகிவிட்டதா?

5. பொருளாதார முன்னேற்றம் அவசியம் இல்லையா?

Monday, November 22, 2010

பாடம் 106: செய்யும் தொழிலே தெய்வம் (பிரம்மசூத்திரம் 3.3.11-13)

மனிதர்கள் பலவிதம். அவர்களின் அறியும் திறன் வேறுபட்டது. அனைவரும் புரிந்து கொண்டு நடைமுறையில் பின்பற்றும் விதத்தில் ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற கருத்தை ஐந்து நிலைகளில் இந்த பாடம் விளக்குகிறது.

நிலை 1 : உண்டு உறங்கி இனப்பெருக்கம் செய்து உயிர்வாழ்வது

உயிர் வாழ்வதற்கு அவசியமான உணவு எப்படியாவது கிடைத்துவிடும். அதற்காக அதிகம் உழைக்க வேண்டிய அவசியமில்லை. தாங்க முடியாத குளிர் மற்றும் பனி பொழியும் இடங்களில் வாழும் மக்கள் கூட விலங்குகளின் தோலை ஆடையாகவும் இக்ளு பனிவீடுகளை கட்டிக்கொண்டும் மிகக்குறைந்த வேலைகள் செய்து வாழ்நாளை கழித்து விடலாம். ஆனால் இம்மாதிரி விலங்குகளை போல வாழ்வது மனிதனுக்கு தகாது. எனவே ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்று வேதம் உபதேசித்து மக்களை அதிக வேலையில் ஈடு பட தூண்டுகிறது.

இந்த நிலையில் இருக்கும் மக்கள் முதலில் கல்வி பெற வேண்டும். பொதுஜனம் என்ற போர்வையில் எவ்வித தனித்தன்மையும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு ஒரு தனிப்பட்ட அடையாளத்தை ஏற்படுத்தி கொடுப்பது கல்வி. கல்வி பெற்ற பின் எதாவது ஒரு தொழிலில் ஈடுபட்டு தனக்கென்று வாழ்வில் ஒரு குறிக்கோளை வகுத்துக்கொண்டு அதற்காக உழைக்க வேண்டும். பெரும்பான்மையான மக்கள் குழந்தைகள் நன்றாக படித்து நிறைய பொருள் சம்பாதிக்க கூடிய நிலைக்கு வரவேண்டும் என்பதை தங்கள் குறிக்கோளாக கொண்டிருக்கின்றனர். இதை தவிர தங்கள் வாழ்வில் தனக்காகவென்று ஒரு குறிக்கோளை முன்வைத்து அதற்காக உழைப்பது அவசியம்.

கல்வி மற்றும் வாழ்வில் ஒரு குறிக்கோளுடன் உழைப்பது ஆகிய இரண்டு அம்சங்கள் ஒரு மனிதனை இந்த நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு உயர்த்திவிடும்.

நிலை 2 : இன்பத்திற்கு உலகத்தை சார்ந்து இருத்தல்

அடிப்படைத்தேவைகளை தாண்டி ஒரு குறிக்கோளை அடைய உழைக்கும் பொழுது பணவரவு அதிகமாகும். சில மனிதர்கள் பணம் வர ஆரம்பித்தவுடன் குறிக்கோளை மறந்து விட்டு மனம் போன போக்கில் பணத்தை செலவு செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இந்த போக்கை தடுக்க கூட்டுக்குடும்பம், பெரியவர்களின் கண்காணிப்பு அல்லது சான்றோர்களின் அறிவுரை அவசியம். பணத்தை சம்பாதிப்பது எப்படி என்பதை விட எப்படி செலவு செய்யகூடாது என்பதை முக்கியமாக கற்றுக்கொள்ள வேண்டும்.

வேண்டிய அளவு பணம் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் வசதிகளை அதிகபடுத்திக்கொண்டு  இன்னும் பணம் வேண்டும் என்ற ஏக்கம் பொதுவாக தொடரும். கார் ஆடம்பரம் என்ற காலம் போய் இரண்டு கார்கள் அத்தியாவசியம் என்று எல்லா ஆடம்பரங்களையும் அத்தியாவசிய பொருள்களாக தொடர்ந்து மாற்றி காசேதான் கடவுளடா என்ற மனநிலை அனைவருக்கும் வந்துவிடும்.

போதிய அளவு பணம் சம்பாதிக்க முடியவில்லை என்பது இந்த நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு உயர ஒரு தடையாய் இருக்காது. தொடர்ந்து உழைத்து அறிவு மற்றும் எதையும் தாங்கும் இதயம் ஆகியவற்றை பெறுவது மட்டுமே இந்த நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு உயர தேவையான அம்சங்கள்.

நிலை 3 : நிம்மதிக்கும் இன்பத்திற்கும் கடவுளை சார்ந்து இருத்தல்

எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் ‘போதும்’ என்ற நிலையை அடையவே முடியாது என்பது புரிந்தவுடன் முந்தைய நிலையிலிருந்து மக்கள் இந்த நிலைக்கு உயர்வார்கள். இதுவரை கடவுளிடம் எனக்கு இந்த பிரச்சனை தீரவேண்டும் என்று மட்டுமே பிரார்த்தித்துக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுது கடவுளிடம் எந்த பிரச்சனை வந்தாலும் அதை எதிர்கொண்டு ஏற்றுக்கொள்ளும் உறுதியான மனம் வேண்டும் என கேட்பார்கள். இன்னும் பணம் வேண்டும் என்று கேட்பதற்கு பதில் நல்ல புத்தியை கொடுக்கும் ஆசிரியரை தர வேண்டும் என பிரார்த்திப்பார்கள்.

செய்யும் தொழிலே தெய்வம் என்பதன் பொருள் இந்த நிலையில் உள்ளவர்களுக்கு பின்வருமாறு புரிய ஆரம்பிக்கும். செய்யும் அனைத்து செயல்களையும் ஆண்டவனுக்கு அர்ப்பணமாக செய்யவேண்டும் என்றும் செய்த வேலைக்கு வரும் பலன் எப்படியிருந்தாலும் அதை இறைவனின் பிரசாதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இவர்கள் புரிந்து கொண்டு அதன்படி தொடர்ந்து உழைப்பார்கள்.

வெற்றி தோல்வி ஆகிய இரண்டையும் கடவுளின் கிருபையாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்ததும் இவர்கள் அடுத்த நிலைக்கு தயாராவார்கள்.

நிலை 4 : இன்பமாக இருப்பதற்கு தன்னை மட்டும் சார்ந்து இருத்தல்

என்றும் குறையாத இன்பத்துடனும் தடையில்லாத நிம்மதியுடனும் என் வாழ்வை வாழ்வது என் கையில்தான் இருக்கிறது என்ற உறுதி ஏற்பட்டவுடன் மக்கள் இந்த நிலைக்கு முன்னேறுவார்கள். செய்த புண்ணியத்தாலும் கடவுளின் அருளாலும் தகுந்த ஆசிரியரை பெற்று இவர்கள் வேதத்தை முறையாக பயின்று கடவுளை அறிந்து கொள்ள முயல்வார்கள்.

செய்யும் தொழிலே தெய்வம் என்பது இவர்களுக்கு ஒரு புதிய பொருளைத்தரும். அதுவரை இன்னும் பணம் சம்பாதித்து வீடு வாகனம் என்று வாங்கி சமூகத்தில் ஒரு மதிப்பை பெறவேண்டும் என்பதற்காக உழைத்தவர்கள் இந்த நிலைக்கு வந்த பின் செய்யும் தொழிலை கடவுளின் செயலாக கருதி சுயநலம் ஏதுமின்றி சேவை மனப்பான்மையுடன் உழைப்பார்கள்.

தொடர்ந்து கர்மயோகம் செய்து மனதை செம்மை படுத்திக்கொள்ளும் அதே வேளையில் முறையாக வேதத்தை தகுந்த ஆசிரியரிடம் பயிலுவது இந்த நிலையில் இருப்பவர்களை அடுத்த நிலைக்கு உயர்த்தும். உலகம் நிலையான இன்பத்தை தர சக்தியற்றது என்பதை இவர்கள் புரிந்து கொண்டதால் செய்யும் தொழிலை தெய்வத்தின் செயலாக செய்வதுடன் தங்களின் முக்கிய குறிக்கோளான வேதம் பயிலுவதற்கு இவர்கள் வேண்டிய நேரத்தை செலவிடுவார்கள்.

நிலை 5 : யாரையும் சார்ந்திராமல் எப்பொழுதும் இன்பமாக இருப்பவர்கள்

வேதத்தை முறையாக கற்றுத்தேர்ந்தவுடன் ஆனந்தத்தை எங்கும் தேடவேண்டிய அவசியமில்லை என்று இவர்கள் உணர்ந்து கொண்டு என்றும் நிம்மதியாக இருப்பார்கள். மற்றவர்கள் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக உழைப்பார்கள். ஆனால் இவர்களோ ஆனந்தமாக இருப்பதால் உழைப்பார்கள்.

செய்யும் தொழிலே தெய்வம் என்ற தொடரின் இறுதியான பொருள் இவர்களுக்கு மட்டும்தான் புரியும். இருப்பது பரமன் மட்டும்தான். பரமனின் மாயா சக்தி என்றும் மாற்றமடையும் இவ்வுலகமாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து நிகழும் மாற்றத்தின் ஒரு சில பகுதிகளை தொழில் என்ற பெயரில் மக்கள் வழங்கி வருகிறார்கள். உண்மையில் தொழில்தான் தெய்வம். பரமன் மற்றும் பரமனின் சக்தியான மாயை இவ்விரண்டின் சேர்க்கைதான் கடவுள். எனவே நாம் அனைவர் செய்யும் தொழிலும் அதன் ஆதாரமான பரமனையும் சேர்த்து செய்யும் தொழிலே தெய்வம் என்று கடவுளின் உண்மை சொரூபத்தை வேதம் நமக்கு காட்டி கொடுக்கிறது.

முடிவுரை :

செய்யும் தொழிலே தெய்வம். எனவே நான் வேலை செய்தால் மட்டும் போதும், கடவுளை தொழ வேண்டிய அவசியமில்லை என்று ஒரு தவறான எண்ணம் பரவலாக இருந்து வருகிறது. கடவுள் யார் என்பதை அறிந்து கொள்ளாமல் யாராலும் தங்கள் இறுதிக்குறிக்கோளான நிலையான இன்பத்தை அடையவே முடியாது. எனவே கடவுளை அறிந்து கொள்ள தொழில் செய்வது ஒரு ஏணிப்படி என்ற உண்மையை உணர்வது அவசியம்.

செய்யும் தொழிலை தெய்வமாக கருதி வேலை செய்ய ஆரம்பித்து, பின் செய்யும் தொழிலை தெய்வத்துக்காக செய்து அதற்கு பின் செய்யும் தொழிலை தெய்வத்தின் தொழிலாக செய்து கடைசியாக செய்யும் தொழிலே தெய்வம் என்பதை புரிந்து கொண்டு அனைவரும் என்றும் இன்பமாக இருக்க வேண்டும் என்பதுதான் வேதத்தின் குறிக்கோள்.

பரமனை ஆதாரமாக கொண்டு இவ்வுலகம் இயங்கி வருவதால் இதில் நடக்கும் அனைத்து தொழில்களிலும்  இருத்தல், அறிதல் மற்றும் ஆனந்தம் ஆகிய பரமனின் மூன்று தன்மைகளும் பிரதிபலிக்கும். தொழில் செய்பவரை செய்விப்பவர் ‘நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே’ என்று பாடும் கடவுள். ஒவ்வொரு தொழிலும் தொழில் செய்பவரின் அறிவை தொடர்ந்து அதிகபடுத்தி ‘நான்தான் அறிவுருவான பரமன்’ என்ற அறிவு ஏற்படும்வரை அவருக்கு உதவுகிறது. இந்த அறிவை அடைந்தவர்கள் செய்யும் தொழிலை ஆனந்தமாக செய்வர்.

மற்றவர்கள் இந்த அறிவை அடையும் வரை செய்யும் தொழில் தெய்வம் என்பதால் அதை ஆனந்தமாக செய்யவேண்டும்.

பயிற்சிக்காக :

1.மக்களை ஐந்து நிலைகளில் இருப்பவர்களாக பிரிப்பதன் அடிப்படை என்ன?

2. இந்த ஐந்து நிலைகள் என்னென்ன? ஒவ்வொரு நிலையிலிருந்தும் அடுத்த நிலைக்கு செல்ல செய்ய வேண்டியவை என்ன என்பதை பட்டியலிடவும்.

3. செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கு எவ்வாறு பொருள் கொள்ள கூடாது?

4. செய்யும் தொழிலே தெய்வம் என்பதன் பொருளை ஐந்து நிலைகளில் உள்ள மனிதர்களின் நோக்கில் விளக்குக.

5. பரமனின் மூன்று தன்மைகள் எவ்வாறு தொழிலில் பிரதிபலிக்கின்றன.

சுயசிந்தனைக்காக :

1. ‘நான் என்ன நிலையில் இருக்கிறேன்?’ என்பதை சுய ஆய்வு செய்க.

2. முதல் நிலையிலிருந்து தொடங்கி இடைப்பட்ட அனைத்து நிலைகளையும் கடந்து கடைசி நிலைக்கு செல்ல எவ்வளவு காலம் பிடிக்கும்?

Friday, November 19, 2010

பாடம் 104: செய்வன திருந்தச்செய் (பிரம்மசூத்திரம் 3.3.9)

என்ன வேலை செய்தாலும் அதை சரியாக செய்ய வேண்டிய அவசியத்தை விளக்குவதுடன் ஒரு வேலையை எப்படி சரியாக செய்வது என்ற செய்முறை விளக்கத்தையும் இந்த பாடம் அளிக்கிறது.

சரியாக செய்வது என்றால் என்ன?

பலனை வைத்து செயல்முறையின் தரத்தை முடிவு செய்ய கூடாது. எல்லா வேலைகளும் ஒரு குறிப்பிட்ட பலனை எதிர்பார்த்துத்தான் செய்யப்படுகின்றன என்றாலும் அந்த வேலை எப்படி செய்யப்பட்டது என்பதை பொறுத்துத்தான் அது சரியாக செய்யப்பட்டதா இல்லையா என்று தீர்மானிக்கவேண்டும். அறுவை சிகிச்சைக்கு பின் நோயாளி உடல்நலம் பெற்று தேர்ந்தால் மருத்துவர் சிறப்பாக வேலை செய்தார் என்றும் அவ்வாறில்லாமல் நோயாளி இறந்துவிட்டால் மருத்துவர் சரியாக வேலை செய்யவில்லை என்றும் கூற முடியாது.

செய்ய வேண்டிய வேலையை சரியாக செய்யவேண்டும் என சொல்வது எளிது ஆனால் செய்வது கடினம் என்பது தவறான கருத்து. செய்வனவற்றை சிறப்பாக செய்வது எப்படி என்பதை புரிந்து கொள்வது வேண்டுமானால் கடினமாக இருக்கலாமே தவிர புரிந்துகொண்ட பின் நடைமுறையில் அதை கடைபிடிப்பது மிகவும் எளிது.

சரியாக செய்வது என்றால் என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன் உலகின் தன்மை பற்றிய ஐந்து உண்மைகளை உணர்ந்து கொள்ளுதல் அவசியம்.

முதல் உண்மை: குற்றமில்லாத பூர்ணத்துவம் (flawless perfection) அடையவே முடியாத ஒன்று.   எந்த வேலையையும் இன்னும் நன்றாக செய்வதற்கு வாய்ப்பு இருந்து கொண்டே இருக்கும். இந்த வாய்ப்பை வழங்குவதற்காகவே யாராலும் எப்பொழுதும் எல்லா வேலைகளையும் மிகச்சரியாக செய்யமுடியாதபடி கடவுள் இவ்வுலகை படைத்திருக்கிறார்.

இரண்டாம் உண்மை: உலகில் சாதிக்கவேண்டியது என்று ஒன்றுமேயில்லை. நாம் எந்த ஒரு வேலையை செய்தாலும் அதனால் உலகத்திற்கு எவ்வித நன்மையோ தீமையோ ஏற்படுவதில்லை. சாப்பாட்டு இலைமீது ஒரு எறும்பு வந்து வயிறு நிரம்ப சாப்பிட்டாலும் அல்லது கொஞ்சம்கூட சாப்பிடாமல் சென்றுவிட்டாலோ நமக்கு எவ்வித வித்தியாசமும் தெரியாது. அது போல இந்த உலகத்தின் தொடர்ந்த இயக்கத்தில் தனிமனிதனின் செயல்கள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது.

மூன்றாம் உண்மை: வேலை செய்வது மற்றவர்களின் அங்கீகாரத்தையோ பாராட்டையோ பெறுவதற்காக அன்று. சமூகத்தில் ஒரு மதிப்பு ஏற்பட்டுவிட்டால் நாம் செய்வதையெல்லாம் எல்லோரும் கொண்டாடுவார்கள். எழுத்தாளர் சுஜாதா தான் வண்ணான் கணக்கை எழுதினால் அதை பிரசூரிக்ககூட பத்திரிக்கைகள் தயாராக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அதுபோல் நாம் எவ்வளவுதான் நன்றாக வேலை செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிக்கவும் நிறைய பேர் இருப்பார்கள்.

நான்காம் உண்மை: வேலையை செய்யத்துவங்குவதற்கு முன் குற்றமில்லா பூர்ணத்துவத்தை அடைய வேண்டுமென்றும், தனது உழைப்பால் வேலை வழங்குனர், வாடிக்கையாளர்கள், சக ஊழியர்கள் போன்ற அனைவருக்கும் நன்மை ஏற்படவேண்டும் என்றும் எல்லோரும் மிக நன்றாக செய்தாய் என்று பாராட்டும்படி வேலை செய்யவேண்டும் என்றும் நாம் எதிர்பார்ப்பது அவசியம்.  எப்படியும் நல்ல பெயர் வாங்கமுடியாது, எனவே எப்படி செய்தால் என்ன என்பது போன்ற அலட்சியத்தோடு செய்யப்படும் எந்த வேலையும் சிறப்பாக செய்த வேலையாகாது. முடியாது என்பதால் முயற்சி செய்யகூடாது என்று அர்த்தமில்லை. தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்ற காரணத்தாலேயே எவ்வளவு முயன்றாலும் புதியதோர் உலகத்தை செய்யவே முடியாதபடி கடவுள் அனைத்தையும் படைத்திருக்கிறார்.

ஐந்தாம் உண்மை: வேலை சிறப்பாக செய்யப்பட்டதா இல்லையா என்பதை அவரவர்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும்.

செய்வதை சிறப்பாக செய்யும் விதம்

முதல் படி : வேலையின் நோக்கம்

நாம் செய்யும் வேலையின் மூலம் நாம் சாதிக்க நினைப்பது என்ன என்பதை தீர்க்கமாக ஆராய்ந்து ஒரு தெளிவுக்கு வர வேண்டும். மேலே சொல்லப்பட்ட நான்காம் உண்மையில் பொதுவாக விவரிக்கபட்ட எதிர்பார்ப்பை ஒவ்வொருவரும் தங்களது வேலைக்கேற்ற குறிப்பிட்ட நோக்கங்களாக ஒரு காகிதத்தில் எழுதிக்கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளிகளை மிகவும் குறைந்த செலவில் விரைவில் முழுவதும் குணப்படுத்துவது அல்லது நல்ல இனிமையான மருத்துவர் என்று எல்லோரும் புகழும்படி சிகிச்சையளிப்பது என்பது போன்று தான் வேலை செய்வதன் நோக்கம் என்ன என்பதை தீர்மானிக்க வேண்டும்.

இரண்டாம் படி: செயல் பட்டியல் (To Do List)

நமது வேலையின் நோக்கத்தை நிறைவேற்ற இன்று செய்ய வேண்டிய செயல்கள் என்னென்ன என்பதை ஒரு பட்டியலிட்டுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் காலை எழுந்தவுடன் இந்த பட்டியலை சரிபார்த்து இன்று இந்த அத்தனை செயல்களையும் செய்து முடிப்பேன் என்று மனதுக்குள் உறுதியெடுத்துக்கொள்ள வேண்டும். இரவு படுக்க போகுமுன் எவ்வளவு செயல்களை செய்து முடித்தோம் என்பதை சரிபார்த்து மறுநாளுக்கு உண்டான பட்டியலை தயார் செய்ய வேண்டும்.


செயல் பட்டியல் எழுதும் விதம்

1. செயலினால் எதிர்பார்க்கும் பலனை எழுதக்கூடாது. செய்ய வேண்டிய செயலை மட்டுமே எழுதவேண்டும். உதாரணமாக வீடுவீடாக போய் ஒரு பொருளை விற்பவர் எவ்வளவு பொருள்களை விற்பேன் என்று எழுதக்கூடாது. எவ்வளவு வீடுகளுக்கு போய் பொருள்களை பற்றி பேசுவேன் என்பதை மட்டுமே எழுத வேண்டும். எவ்வளவு வீடுகளுக்கு செல்ல வேண்டுமென்பது முதல் படியில் கூறப்பட்ட வேலையின் நோக்கத்தை பொறுத்தது.

ஒரு வேலை செய்வதன் மூலம் என்ன பலனை எதிர்பார்க்கிறோமோ அந்த பலனை அடைய நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை மட்டும்தான் இங்கு பட்டியலிடவேண்டும்.

2. அளவிடகூடிய செயல்களை மட்டுமே பட்டியலில் எழுதவேண்டும். உதாரணமாக விற்க வேண்டிய பொருள்களை பற்றி திறமையாகவும் நன்றாகவும் பேசுவேன் என்று எழுதாமல் பத்து வீடுகளுக்கு சென்று பொருள் பற்றி பேசுவேன் என்று மட்டும் எழுதவேண்டும். ஏனெனில் நாள் முடிந்ததும் பத்து வீடுகளுக்கு சென்றோமா இல்லையா என்பதை அளவிடுவது போல் நன்றாக பேசினேனா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியாது.

3. செயல்களின் எண்ணிக்கை நமது தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற அளவில் இருக்க வேண்டும். செய்ய முடியாத அளவு அதிகமாகவோ எளிதாக செய்து முடித்துவிடக்கூடியதாகவோ இருக்க கூடாது.

4. சுதந்திரமாக செய்யக்கூடிய செயல்களை மட்டுமே எழுத வேண்டும். எழுதப்பட்ட வேலைகளை செய்ய நமக்கு எவ்வித கட்டுப்பாடும் இருக்க கூடாது.  நமக்கு கீழே வேலை செய்பவர்களைத்தவிர வேறு யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லாத செயல்களை மட்டுமே செயல் பட்டியலில் எழுத வேண்டும்.  

5. தினசரி கடமைகளை பட்டியலில் எழுதக்கூடாது. அன்றாடம் செய்ய வேண்டிய செயல்களை நாம் சரியாக செய்யாமல் இருந்தால் மட்டும் அவற்றை பட்டியலில் எழுதவேண்டும். முடிந்தவரை பட்டியலில் உள்ள செயல்கள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்க வேண்டும்.

6. யாருக்கு கீழ் வேலை பார்க்கிறோமோ அவரின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். முடிந்தவரை பட்டியலில் இடம்பெறாத செயல்களை செய்யக்கூடாது. ஒரு நாளில் எவ்வளவு செயல்களை செய்தோம் என்பதை விட எவ்வளவு செயல்களை செய்வேன் என்று காலையில் உறுதியெடுத்தோமோ அவற்றை செய்து முடித்தோமா என்பதுதான் முக்கியம். இரண்டு செயல்களை செய்வதாக தீர்மானித்து அதை செய்வது பட்டியலில் இல்லாத நான்கு செயல்களை செய்வதை விட சிறந்தது.

மூன்றாம் படி: சுய ஆய்வு

தினமும் வேலையை முடித்து வீட்டுக்கு திரும்புமுன் பட்டியலில் உள்ள செயல்களை செய்து விட்டோமா என்றும் செய்யா விட்டால் அதற்கான காரணங்களையும் ஆராய வேண்டும். நம்மிடம் தவறு ஏதேனும் இருந்தால் அதை திருத்திக்கொள்ள தேவையான செயல்களை அடுத்த நாள் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

உதாரணமாக ஒரு மாணவன் தேர்வில் எவ்வளவு சதவிகிதம் மதிப்பெண் பெறவேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். பின் அந்த குறிக்கோளை அடைய எவ்வளவு நேரம் படிக்க வேண்டும் என்பதை ஆசிரியரின் துணையுடன் முடிவு செய்யவேண்டும். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் படிக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தால் அந்த ஒரு மணிநேரத்தை படிப்பதில் செலவிட்டோமா இல்லையா என்பது மட்டும்தான் முக்கியமே தவிர தேர்வில் எத்தனை மதிப்பெண்கள் வந்தது என்பதை பற்றி கவலைபடக்கூடாது. ஒருவேளை எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காவிட்டால் படிக்கும் விதத்தை எப்படி மாற்றி அமைப்பது என்பதை ஆராய்ந்து அதற்கேற்ற சீர்திருத்தங்களை செய்வது மட்டும்தான் அவன் பொறுப்பு.

நான்காம் படி: சுய திருப்தி

நாம் நினைத்தபடி வேலை செய்தால் மட்டும் போதும். ‘நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான், நான்’ என்று தினமும் மனதுக்குள் நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்வது அவசியம். நாம் வேலை செய்வது நமது மனம் செம்மையாக வேண்டும் என்ற ஒரேகாரணத்துக்காக மட்டும்தான் என்பதை மறந்து விடக்கூடாது.

முடிவுரை :

செய்வனவற்றை சிறப்பாக செய்வதன் மூலமாக மட்டும்தான் வேலை பார்ப்பதன் பயனை அடைய முடியும். வேலையில் முழு ஈடுபாட்டுடன் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் வேலை செய்வது நமக்கு சேரவேண்டிய அனைத்து நன்மைகளையும் நம்மிடம் கொண்டு சேர்க்கும்.

நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பதும், அவற்றை செய்வதும், சரியாக செய்தோமா என்று சோதித்து சான்றிதழ் வழங்குவது ஆகிய அனைத்து பொறுப்புகளும் நம்மையே சார்ந்தது. நமக்கு கொடுக்கபட்ட எந்த வேலையையும் இது என் வேலை என்று மனதார ஏற்றுக்கொள்ளாமல் செய்ய ஆரம்பிக்க கூடாது.

சில சமயங்களில் நமது முழுதிருப்தியுடன் வேலை செய்திருந்தாலும் அதன் பலன் எதிர்பார்த்த விதமாக அமையாது. நமது மேலாளர் மற்றவர்கள் செய்த தவறுக்கு நம்மை காரணமாக கருதி கண்டிக்கலாம். எது எப்படியானாலும் கடைசி தீர்ப்பு சொல்ல வேண்டியது நமது மனசாட்சிமட்டுமே. நம் மனசாட்சிப்படி நாம் சரியாக செய்தால் மட்டும் போதும். உலகமே அதை தவறு என்று சொன்னாலும் அதை பற்றி கவலைப்பட தேவையில்லை.

ஆனால் யார் நம் வேலையில் தவறு கண்டுபிடித்தாலும் அல்லது இன்னும் சரியாக செய்ய ஆலோசனை சொன்னாலும் அதை ஆர்வத்துடன் கேட்க வேண்டும். சென்றதை பற்றிய குற்ற உணர்வு மட்டும்தான் தவிர்க்கபட வேண்டியதே தவிர வருவதை சரியாக செய்ய நமது தகுதியை உயர்த்திகொள்வது மிக அவசியம். எனவே எப்பொழுதும் இப்பொழுது செய்வதை விட இன்னும் சிறப்பாக செய்வது எப்படி என்பதை கற்றுக்கொள்ள ஆவலுடன் இருக்க வேண்டும்.

நமது வாழ்வின் தரத்துக்கு நாம் மட்டுமே பொறுப்பு என்ற பொறுப்புணர்வுடன், செய்யும் செயல்களை செவ்வனே செய்வது முக்தியை நோக்கி நாம் எடுக்கும் முதல் படி.


பயிற்சிக்காக :

1.வேலையை சரியாக செய்வது என்றால் என்ன?

2.உலகின் தன்மை பற்றி கூறப்பட்ட ஐந்து உண்மைகள் யாவை?

3.செய்வதை சிறப்பாக செய்யும் விதம் பற்றி கூறப்பட்ட நான்கு படிகள் யாவை?

4.செயல் பட்டியல் எழுதும் விதம் குறித்து கூறபட்ட ஆறு கருத்துகள் யாவை?

5.வேலையை தவறாக செய்தால் குற்ற உணர்வு அவசியமா?

சுயசிந்தனைக்காக :

1. யார் எப்படிபோனால் நமக்கென்ன என்று செயல் பட்டியலில் உள்ள வேலைகளை மட்டும் செய்வதுதான் வேலையை சிறப்பாக செய்வதா?


2.நோயாளி மரணமடைந்து விட்டால் அறுவை சிகிச்சை தோல்வி அடைந்தது என்று தானே
அர்த்தம்?