காலை எழுந்தவுடன் வாசல் தெளித்து கோலம் போடவேண்டும் என்று ஆரம்பித்து வாரம் ஒரு பொழுது உண்ணாவிரதம் இருக்கவேண்டும் என்பது வரை வழக்கில் இருந்து வரும் பல்வேறு சடங்குகளின் அவசியத்தை இந்த பாடம் விளக்குக்கிறது.
சடங்குகள் (rituals) என்றால் என்ன?
ஏன் எதற்கு என்ற கேள்விகளுக்கு அர்த்தம் தெரியாமல் பெரியவர்கள் நம் நல்லதிற்காக ஏற்படுத்தியுள்ள வழக்கம் என்ற ஒரே காரணத்திற்காக செய்யப்படும் அனைத்துச்செயல்களும் சடங்குகள் ஆகும். சடங்குகள் நமது நல்லதிற்காக என்பது உண்மையென்றாலும் அவை எவ்வாறு நமக்கு நன்மை பயக்கும் என்பதை பெரும்பாலோர் தெரிந்து கொள்வதில்லை. செய்யாவிட்டால் கடவுள் தண்டனை கொடுப்பார் என்ற தவறான பயத்தினால் இனம், மதம், நாடு என்ற பேதங்களை கடந்து உலகில் உள்ள அனைத்து மக்களும் ஆதிகாலம் முதல் இன்று வரை பல்வேறு சடங்குகளை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள்.
சடங்குகளின் அவசியம்
இது இதனால் நடக்கும் என்ற காரண காரிய அறிவை ஆதாரமாக கொண்டு மனிதன் பல்வேறு செயல்களில் ஈடுபடுகிறான். பல சமயங்களில் செயல்களின் பலன்கள் அவன் எதிர்பார்த்தது போல் அமைவதில்லை. மேலும் பொருளாதார அடிப்படையில் எவ்வளவு சாதித்தாலும் நிரந்தரமான அமைதி மனதுக்கு கிடைப்பதில்லை. எனவே சடங்குகள் செய்வதன் மூலம் கடவுளர்களை திருப்தி செய்து தம் சொந்த முயற்சியால் அடையமுடியாத நிம்மதியான வாழ்வை அடையலாம் என்ற எண்ணம்தான் சடங்குகள் தொடர்வதற்கு காரணம்.
சடங்குகளிடையே வேறுபாடு
உலகம் முழுவதும் பரவலாக பல்வேறு சடங்குகள் இருந்து வருகின்றன. கடவுளை காரணம் காட்டித்தான் சடங்குகள் தொடங்கப்பட்டிருந்தாலும் யாரும் நேரடியாக கடவுளின் செய்தியை படித்து சடங்குகள் செய்யும் விதத்தை தெரிந்து கொள்வதில்லை. வழிவழியாக குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் தங்களது அறிவுக்கு எட்டியபடி சடங்குகளை தங்கள் சந்ததியருக்கு கற்றுகொடுப்பதனால் காலம் மாறும்பொழுது தொடர்ந்து சடங்குகளும் மாறிக்கொண்டேவருகின்றன.
காரணம் தெரியாமல் செய்வதுதான் சடங்கு என்பதால் எல்லோரும் ஒரேமாதிரி அவற்றை செய்யவேண்டிய அவசியமில்லை. அவரவர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள வழக்கங்களை (tradition) பின்பற்றுவதுதான் சரி. தாங்கள் செய்வதைபோல் அல்லாமல் வேறுமாதிரி செய்கிறார்கள் என்ற காரணத்திற்காக எந்த ஒரு சடங்கையும் தவறு என்று முடிவுசெய்ய முடியாது. தனக்கு சரியாக வழிகாட்ட குடும்பத்தில் பெரியவர்கள் யாரும் இல்லை என்றால் வேதத்தை படித்து புரிந்து கொண்டவர்களை அணுகி சடங்குகளை செய்யும் விதத்தை கற்று அறியலாம்.
எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம், என்ன உணவு உண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம், உறவுகளை எவ்விதம் வளர்த்துக்கொள்ளலாம் என்பதுபோன்ற உலக விஷயங்களில் கூட எவ்வித ஒற்றுமையுமில்லாதபோது காரணம் தெரியாமல் செய்யும் சடங்குகள் வேறுபடுவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.
சடங்குகள் செய்யும்பொழுது இருக்கவேண்டிய மனப்பான்மை
இயந்திரங்கள் போல ஏதோ எல்லோரும் செய்கிறார்கள் என்ற காரணத்திற்காக சடங்குகளை பின்பற்றுபவர்களுக்கு எவ்வித நன்மையும் கிடைப்பதில்லை. முன்னோர்களால் விதிக்கப்பட்டது என்ற பயபக்தியுடன் செய்பவர்கள் மட்டுமே காலப்போக்கில் சடங்குகள் செய்வதன் பலனை அடைவார்கள்.
சடங்குகளின் பலன்
அறிவியலின் அடிப்படையில் சடங்குகள் செய்வதன் பலனை ஆராய்வது மிகவும் தவறு. கோலம் போடுவதனால் கால்முட்டி மடங்கி நல்ல உடற்பயிற்சி கிடைக்கிறது என்பதும் சூரிய நமஸ்காரம் செய்வதால் உடலுக்கும் மனதிற்கும் பல நன்மைகள் ஏற்படுகின்றன என்பதும் அறிவியல் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டிருந்தாலும் இந்த காரணங்களுக்காக சடங்குகளை செய்யகூடாது. காரணம் தெரிந்துவிட்டால் சடங்குகள் சடங்குகளாக இருக்காது. ஆரோக்கியமாக இருக்கவும் வாழ்வில் வளம்பெறவும் சடங்குகளைச்சார்ந்திருக்காமல் அறிவியலின் அடிப்படையில் முயற்சிசெய்வதுதான் புத்திசாலித்தனம்.
காரணம் தெரியாமல் கடவுளுக்காக செய்யப்படும் சடங்குகள் மட்டுமே முக்தி என்னும் சரியான பலனை மக்களுக்கு கொடுக்கும்.
இருவகை மனிதர்கள்
சடங்குகள் செய்வதன் இறுதியான காரணத்தை அறிந்து கொள்ளத்தேவையான புத்திகூர்மை உள்ளவர்கள் வேதத்தை முறைப்படி ஆசிரியரிடம் பயின்றால் ஏன் சடங்குகளை செய்யவேண்டும் என்பதற்கு பதில் தெரிந்துவிடும். கேள்விகேட்டு பதிலை புரிந்துகொள்ளும் சாமர்த்தியம் இல்லாதவர்கள் தொடர்ந்து பயபக்தியுடன் சடங்குகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு செய்வதால் அவர்கள் மனம் பண்பட்டு செய்த நல்ல காரியங்களின் பலனாக நல்லாசிரியரைப்பெற்று வேதத்தை படித்து புரிந்துகொள்ளும் தகுதியை அவர்களும் பெற்றுவிடுவார்கள்.
ஆக கேள்வி கேட்கும் திறன் உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்கள் ஆகிய இருவகை மனிதர்களும் சடங்குகள் செய்வதன் இறுதிப்பலனான முக்தியை பெற்றுவிடுவார்கள். அனைத்து மக்களும் வாழ்வில் சரியான பாதையில் பயணிக்க வழிவகுக்கும்வகையில்தான் வேதம் சடங்குகளை ஏற்படுத்தியுள்ளது.
சடங்குகள் சமயத்தின் அடிப்படையில் உண்டாக்கப்பட்டவை. எனவே அதற்கு உண்டான விளக்கங்களை அறிவியலின் அடிப்படையில் தேடக்கூடாது. ஒன்றா சடங்குகளை கேள்விகள் கேட்காமல் பின்பற்றவேண்டும். இல்லையெனில் வேதத்தை படித்து சடங்குகள் செய்வதன் நோக்கத்தை அறிந்து கொள்ள வேண்டும். வேதம் இரு பகுதிகள் கொண்டது. வேத பூர்வம் என்கிற முதல் பாகம் கேள்வி கேட்காமல் பின்பற்ற வேண்டிய சடங்குகளை விவரிக்கும் பகுதி. வேதத்தின் இரண்டாம் பகுதி உபநிஷதங்களை உள்ளடக்கிய வேதாந்தம். இது ‘முடிவான அறிவு’ அல்லது ‘அறிவின் முடிவு’ ஆகிய இருவேறு பொருள்களை கொண்டது. கேள்வி கேட்டு பதிலை புரிந்துகொள்ளும் அறிவுத்திறனுடைய மக்கள் படிக்கவேண்டிய பகுதி இந்த வேதாந்தம் மட்டும்தான்.
வேதாந்தத்தை படிக்காமல் இருப்பவர்கள் சடங்குகளை பின்பற்றுவது மிக அவசியம். முறைப்படி வேதாந்தத்தை ஆசிரியரிடம் பயிலுபவர்கள் எவ்வித சடங்குகளையும் செய்யாமல் இருப்பதில் தவறு ஏதும் இல்லை. ஏனெனில் படித்து முடித்தவுடன் சடங்குகளின் அவசியத்தை தெரிந்து கொண்டு அவர்கள் அனைத்தையும் முறையாக பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள்.
அர்த்தமுள்ள சடங்குகள்
தர்மம் தலைகாக்கும் என்ற தொடருக்கு முடிந்தவரை யாரையும் துன்புறுத்தாமல் மற்றவர்களுக்கு நன்மை தரும் செயல்களை செய்பவர்கள், தங்கள் புண்ணியத்தின் பலனாக சரியான ஆசிரியரை பெற்று மரணமில்லா பெருவாழ்வை அடைவார்கள் என்பது பொருள். மக்களை தர்மமான முறையில் வாழத்தூண்டுவதால் சடங்குகள் அர்த்தமுள்ளவை. குடும்ப வழக்கில் உள்ள அனைத்து சடங்குகளையும் முறையாக செய்பவர்கள் கடவுள் பக்தி உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு கடவுள் யார் என்று காட்டிகொடுத்து முக்தியடையச்செய்ய சடங்குகள் உதவுகின்றன.
சடங்குகள் என்பது உடலினால் செய்யப்படும் உபாசனயோகம். மனதில் கடவுளின் நாமத்தையோ புகழையோ ஜெபிப்பது உபாசனயோகம். அவ்வாறு மனதில் தொடர்ந்து கடவுளை உபாசனை செய்யும் திறன் இல்லாதவர்களுக்கு சடங்குகள் கடவுளிடம் பக்திசெலுத்த துணை செய்கின்றன.
இராணுவத்தில் உள்ள வீரர்களுக்கு நாட்டுப்பற்று அவசியம். நாட்டிடம் பற்றை வளர்த்துக்கொள்ள அவர்களும் தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்துதல் என்பது போன்ற பல சடங்குகளை தொடர்ந்து செய்கிறார்கள். இப்படித்தான் நிற்க வேண்டும் அல்லது நடக்க வேண்டும் என்பது போன்ற இராணுவத்தின் சடங்குகளை அவர்கள் கடைபிடிப்பதற்கு அறிவியலின் அடிப்படையில் எவ்வித காரணமும் கிடையாது. உடல் மண்ணுக்கு உயிர் நாட்டுக்கு என்று வாயளவில் அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை இது போன்ற சடங்குகளை பின்பற்றி மனதில் ஆழமாக பதியவைத்துக்கொள்கிறார்கள்.
இதேபோல்தான் மனதில் கடவுள் பக்தியை வளர்த்துக்கொள்ள உடலளவில் சடங்குகள் செய்வது பலருக்கு மிக அவசியமாக இருக்கிறது. எனவே சடங்குகளை மூடநம்பிக்கைகள் என்று நினைப்பதோ அவற்றை பின்பற்றுபவர்களை ஏளனமாக பார்ப்பதோ முட்டாள்தனம். குடியரசுதினத்தை கொண்டாடுவதை விட கடவுளின் பெயரால் வழக்கத்தில் இருந்து வரும் ஆடி அமாவாசை, தைப்பூசம், இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி போன்ற நாட்களை கொண்டாடுவது மிக அவசியமானது.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவப்பது, திருமண ஆண்டுநிறைவை நினைவுபடுத்த ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்துக்கொள்வது என்பது போன்ற சடங்குகள் மனிதர்களுக்கிடையே உள்ள உறவை பலபடுத்த உதவுவது போல பொங்கல், தீபாவளி, கார்த்திகை போன்ற பண்டிகை நாட்களில் பின்பற்றும் சடங்குகள் கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவை பலபடுத்த உதவுகின்றன.
முடிவுரை :
எப்பொழுதும் பணம், புகழ், பதவி என்று வெளியுலகில் உழைத்துகொண்டிருக்கும் மனிதனுக்கு கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை நினைவுபடுத்துவது சடங்குகள் ஆகும். சடங்குகளை செய்வதனால் வெளியுலகில் சஞ்சரிக்கும் மனது உள்நோக்கி திரும்பும். முதலில் உடலளவில் கடவுளுக்காக சடங்குகள் செய்ய ஆரம்பித்து நாளடைவில் மனதளவில் உபாசன யோகம் செய்யும் தகுதியை அடைந்து கடைசியாக வேதத்தை படித்து கடவுளை முழுமையாக அறிந்து கொள்ளும் வாய்ப்பை சடங்குகளை பின்பற்றுவதன் மூலம் மனிதன் பெறுகிறான்.
எனவே முக்தியடைய முதல் படியாக சடங்குகளை பின்பற்றுவது, கேள்விகள் கேட்டு பதிலை புரிந்து கொள்ளும் சக்தியற்றவர்களுக்கு அவசியமாகிறது. முதல்படியை கடந்து முடிவான முக்தியை அடைந்தவர்களும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து வழிகாட்டும்பொருட்டு சடங்குகளை பின்பற்றுவார்கள். எனவேதான் எவ்வளவுதான் அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்ட பின்னும்கூட சடங்குகள் தொடர்ந்து உலகில் பரவலாக வழக்கில் இருந்து வருகின்றன.
பயிற்சிக்காக :
1. சடங்குகள் என்றால் என்ன?
2. சடங்குகளின் அவசியம் என்ன?
3. சரியான முறையில் சடங்குகளை பின்பற்றுவது எப்படி?
4. சடங்குகள் செய்யும்பொழுது இருக்கவேண்டிய மனோபாவம் என்ன?
5. சடங்குகளின் இறுதிப்பயன் என்ன?
6. இருவகை மனிதர்கள் யார் யார்?
சுயசிந்தனைக்காக :
1. வேதத்தில் கூறியபடியல்லாமல் வேறுமாதிரி சடங்குகளை செய்வதால் பாவம் ஏற்படுமா?
2. சடங்குகளை பின்பற்றாதவர்களின் நிலை என்ன?
3. தர்மம் எவ்வாறு தலையைக்காக்கும்?
4. வேதாந்தம் என்ற சொல்லின் இருபொருள்களுக்கிடையே உள்ள வித்தியாசம் என்ன?