Tuesday, January 11, 2011

பாடம் 132: விஸ்வரூப உபாசனை ( பிரம்மசூத்திரம் 3.3.57 )

சடங்குகள் செய்வது அவசியம் என்று கூறியபின் மதங்களின் பெயரால் மனிதன் செய்யும் அனைத்து சடங்குகளையும் உள்ளடக்கிய விஸ்வரூப உபாசனை பற்றிய விளக்கத்தை இந்த பாடம் தருகிறது.

கடவுள் ஆயிரம் தலைகளை உடையவன் என்று கூறியபின் இரண்டாயிரம் கண்களை உடையவன் என்று கூறாமல் ஆயிரம் கண்களை உடையவன் என்று குறிப்பிடுவதால் அனைத்து ஜீவராசிகளை உள்ளிட்ட இந்த பிரபஞ்சத்தைத்தான் கடவுளின் வடிவமாக வேதம் சித்தரிக்கிறது என்பது தெளிவாகிறது. எனவே ‘என் தலை, கைகள், கால்கள் உள்ளிட்ட நான், கடவுளின் ஒரு பகுதியாகத்தான் இருக்க வேண்டும்’ என்ற உண்மையை நம் மனது முற்றிலும் உணர விஸ்வரூப உபாசனை ஒரு படிக்கட்டாக பயன்படும்.

நம்முடைய அனைத்து செயல்களும் கடவுளின் செயல்கள் என்றும் கடவுளின் அனுமதியில்லாமல் சுண்டுவிரலை அசைக்ககூட நம்மால் முடியாது என்பதையும் உண்மையில் புரிந்து கொண்டுவிட்டால் நாம் முக்தியடைந்து விட்டோம் என்று பொருள். இவ்வளவு எளிதாக முக்தியடைவது எல்லோருக்கும் சாத்தியமல்ல என்ற காரணத்தால் வேதம் பல்வேறு சடங்குகளை செய்யவேண்டும் என்று மக்களுக்கு விதித்திருக்கிறது. மனம்போன போக்கில் செயல்படாமல் வேதம் விதித்துள்ளது என்ற கட்டாயத்தினால் செய்யப்படும் சடங்குகள் விஸ்வரூப உபாசனை ஆகும்.

தியானம் செய்து மனதை செம்மை படுத்தி ஆசிரியரின் துணையுடன் வேதத்தை முறையாக பயின்று ‘நான் பரமன்’ என்பதை புரிந்துகொண்டால் மட்டுமே முக்தியடையலாம். இந்த பயணத்தை அனைத்து விதமான மக்களும் மேற்கொள்ள உதவும் முதல் படிக்கட்டுதான் விஸ்வரூபஉபாசனை.

செயலும் சிந்தனையும்

பசிக்கும்பொழுது பாலுக்காக அழுவதில் ஆரம்பித்து அனைத்து மனிதர்களும் சிந்திக்க கற்றுக்கொள்வதற்கு முன் செயல் செய்ய தொடங்கிவிடுகிறார்கள். எதற்கு செய்கிறோம், ஏன் செய்கிறோம், எப்படி செய்யவேண்டும் என்று கேள்வி கேட்டு முறையான பதில்களை தெரிந்து கொள்வதற்கு முன், செய்யும் செயல்கள் நமக்கு பழகிப்போய்விடுகின்றன. பழகிய செயலை தவறு என்று புரிந்துகொண்டாலும் பழக்கங்களை மாற்றிக்கொள்ள முடிவதில்லை. அதேபோல் நன்மை கொடுக்க கூடிய செயல்களை செய்யப்பழகிக்கொள்வதும் மிகவும் கடினம்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழி நம் உடலை குறித்து மட்டும் கூறப்பட்டதல்ல. நல்ல பழக்கவழக்கங்களை ஏன் என்று கேட்காமல் சிறுவயதிலிருந்து பின்பற்ற வேண்டும்.

கடைபிடிக்கவேண்டிய நல்ல செயல்களையும் தவிர்க்க வேண்டிய தீய செயல்களையும் வேதம் தெளிவாக பட்டியலிட்டு கூறியுள்ளது. வேதத்தின் அடிப்படையில் அமைந்த சமுதாய கட்டுப்பாடுகளும் பாரம்பரிய சம்பிரதாயங்களும் இந்த பாரத நாட்டு மக்களின் வாழ்வை தொன்று தொட்டு இன்றுவரை வழிநடத்திக்கொண்டு இருக்கின்றன.  எனவே கேள்வி கேட்காமல் இவற்றை பின்பற்றுவதே முக்திக்கு வழிகோலும் முதல் படி.

கேள்வி கேட்டு பதிலை புரிந்து கொள்ளும் பக்குவம் வந்தபின் வேதம் விதித்துள்ள செயல்களின் காரணம் தெரியவரும். ஏற்கனவே அவை பழக்கத்தில் இருக்கும் காரணத்தால் காரணம் தெரிந்தபின் அவற்றை தொடர்ந்து பின்பற்றுவதில் எவ்வித கஷ்டமும் இருக்காது.

எனவே வேதம் கூறும் நல்ல செயல்களை செய்வதன் மூலம் சரியான சிந்தனையை நாம் அடைவோம். நல்ல செயலும் சிந்தனையும் நம்மை முக்தியடைய வழிகோலும்.

உதாரணமாக சூரியன் உதிக்குமுன் எழுந்து வேதம் விதித்த சடங்குகளை செய்து பழகிவிட்டால் அவற்றை செய்யவேண்டிய காரணம் தெரிவதற்குமுன் காலையில் எழுவது பழக்கமாகியிருக்கும். இல்லாவிட்டால் காலையில் எழுவது நல்லது என்ற அறிவு மட்டும் இருக்கும். அதை பின்பற்றுவது மிக சிரமமான காரியமாக இருக்கும்.

எனவே முதலில் சரியான செயல் பின் சரியான சிந்தனை என்பதே சரியான பாதை. சரியான செயல்கள் யாவை என்றும் அவற்றை எப்படி செய்யவேண்டும் என்றும் நாம் யாரிடமும் கற்றுக்கொள்ள தேவையில்லை. தொன்றுதொட்டு வழிவழியாக இருந்துவரும் பழக்கவழக்கங்களை பின்பற்றினால் மட்டும் போதும். அதாவது குடும்பத்தில் உள்ள பெரியோர் பரம்பரை பரம்பரையாக செய்துவரும் அனைத்து சடங்குகளையும் இது பிடிக்கும், வசதியானது என்றோ அது பிடிக்காது, சிரமமானது என்றோ பாகுபாடு இல்லாமல் கடைபிடிக்க வேண்டும்.

ஒரு பெண் மணமானதும் பெற்றோர் வீட்டு பழக்கங்களை விட்டுவிட்டு கணவன் வீட்டில் நடைமுறையில் இருக்கும் சடங்குகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். எது உயர்ந்தது என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. ஆண்வழியாக வரும் சடங்குகளை பின்பற்ற வேண்டும் என்பதும் கேள்விகேட்காமல் ஏற்றுக்கொள்ளபட வேண்டிய ஒரு விதி. ஏன் சடங்குகள் செய்யவேண்டும் என்ற கேள்வியே தவறு என்னும்பொழுது  எந்த சடங்குகள் என்ற கேள்வி அனாவசியம்.

விஸ்வரூப உபாசனையின் உதாரணங்கள்

காணும் உலகம் முழுவதும் இறைவனின் உருவம் என்பதால் செய்யப்படும் அனைத்து சடங்குகளும் விஸ்வரூப உபாசனையாகும். அனைத்து சடங்குகளும் வேதத்தின் ஆதாரத்தில்தான் ஏற்பட்டுள்ளன என்றாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் வெவ்வேறு சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். எனவே பரவலான ஒரு சில சடங்குகள் இங்கு உதாரணத்திற்காக விளக்கப்பட்டிருக்கின்றன.

நல்ல காலம்

இராகு காலம், எமகண்டம், குளிகை என்று ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களுக்கு பெயரிட்டு நல்ல நேரத்தில்தான் எந்த ஒரு முக்கியமான காரியத்தையும் தொடங்க வேண்டும் என்ற வழக்கம் பெரும்பாலான வீட்டில் இருந்து வருகிறது.

பௌர்ணமியன்றும் அமாவாசையன்றும் சிறப்பு பூஜைகள் செய்து இஷ்டதெய்வத்தை பிரார்த்திப்பதும் ஏழைகளுக்கு உணவழிப்பதும் பலரால் பின்பற்றப்படும் ஒரு பழக்கம்.

மார்கழிமாதம்தோறும் விடியற்காலையில் எழுந்து வாசலில் பெரிய கோலம்போட்டு பூக்கள் வைத்து அலங்காரம் செய்வதும் ஆடி மாதங்களில் திருமணம் போன்ற சுபகாரியங்களை செய்யாமல் இருப்பதும் ஒரு வழக்கம்.

நோன்பு

ஏகாதசி, பிரதோஷம், சஷ்டி, கார்த்திகை போன்ற குறிப்பிட்ட நாட்களில் விரதம் இருப்பதும் வரலக்ஷ்மி நோன்பு, காரடையான் நோன்பு என குறிப்பிட்ட தெய்வத்தை ஆராதித்து நோன்புகள் மேற்கொள்வதும் பரவலாக மக்களால் பின்பற்றபடும் நோன்புகளாகும்.

பண்டிகைகள்

தீபாவளி, பொங்கல், கார்த்திகை போன்ற பண்டிகைகளும் இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சிவராத்திரி, மாரியம்மன் திருவிழா  என்று தெய்வங்களுக்காக கொண்டாடப்படும் சிறப்பு நாட்களும் பல குடும்பங்களில் வழக்கில் இருக்கிறது.

இவையனைத்தும் விஸ்வரூப உபாசனையின் அங்கங்கள்.

விஸ்வரூப உபாசனை மேற்கொள்ளும் விதம்

தொன்று தொட்டு எந்த விதத்தில் சடங்குகள் ஒருகுடும்பத்தில் பின்பற்றபடுகிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும். உதாரணமாக தீபாவளியன்று காலை நாலரை மணிக்கு எழுந்து பெரியவர்கள் கையால் தலைக்கு எண்ணை வைத்து நீராடி புது துணிகளை அணிந்து கொண்டு பூஜை செய்வது ஒரு குடும்ப பழக்கம் என்றால் ஏன் காலை ஏழுமணிக்கு எழுந்து பூஜை செய்யக்கூடாது என்ற கேள்விகள் எதுவும் கேட்காமல் பெரியவர்களின் வழக்கத்தை பின்பற்றவேண்டும்.

விரும்பி ஏற்கும் விஸ்வரூப உபாசனை

குடும்ப வழக்கில் இருக்கும் சடங்குகளை கட்டாயமாக ஏற்று கடைபிடிக்க வேண்டும். அதைத்தவிர பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் போன்ற இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில் தொன்றுதொட்டு இருந்துவரும் செவ்வியல் கலைகளை விரும்பி ஏற்று கற்றுக்கொள்வதும் விஸ்வரூப உபாசனையாகும். மனம்போனபடி கைகால்களை ஆடுவதுதான் நடனம் என்றில்லாமல் நாட்டிய சாஸ்திரத்தில் உள்ள முறைப்படி கற்று பயிற்சி செய்வது மிகுந்த நன்மை கொடுக்கும்.

விஸ்வரூப உபாசனையில் அடங்காதவை

வேதங்களையும் புராணங்களையும் ஆதாரமாக கொண்டு மதகோட்பாடுகளின்படி இப்படித்தான் செய்யவேண்டும் என்ற சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செய்யப்படும் சடங்குகள் மட்டுமே விஸ்வரூப உபாசனையாக கருதப்படும். புராணம் என்பதற்கு மிகவும் பழையதானாலும் இன்றும் புதுமையானதாக இருப்பது என்று பொருள். எனவே குறைந்தபட்சம் ஒரு ஆயிரம் வருடங்களாக வழக்கில் தொடர்ந்து இல்லாதவை விஸ்வரூப உபாசனையாகாது. மேலும் பயம், பக்தி, சுயகட்டுப்பாடு ஆகியவை உபாசனையின் முக்கியமான அங்கங்கள்.

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம், பிறந்த நாள் விழா கொண்டாடுவது ஆகியவை விஸ்வரூப உபாசனை ஆகாது. தமிழ் புத்தாண்டு, சதாபிஷேகம் போன்றவை புராணங்களை அடிப்படையாக கொண்டும் இப்படித்தான் கொண்டாடவேண்டும் என்ற முறை விதிமுறைகளை பின்பற்றி அமைந்திருப்பதாலும் விஸ்வரூப உபாசனைகளாக கருதப்படும்.      

முடிவுரை :

அகில உலகையும் கடவுளின் உருவமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஏற்பட புராணங்களின் அடிப்படையில் பல்வேறு சடங்குகளை பின்பற்றும் வழக்கம் இந்த பரத கண்டத்தில் பரவலாக இருப்பது இந்திய பாரம்பரிய கலாச்சாரத்தின் தனிச்சிறப்பு ஆகும். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை கூட சமூகத்துடன் ஒன்றி வாழவேண்டிய கட்டாயத்தின்பேரில் பண்டிகைகளை கொண்டாடவைத்து அதன்மூலம் மதங்கள் கூறும் தத்துவங்கள் இன்றும் வாழையடி வாழையாக வளர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.

‘என்ன தவம் செய்தனை யசோதா, எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா என்றழைக்க’ என்ற பாடலின் உண்மையான பொருள் முற்றிலும் புரியாவிட்டாலும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் சடங்கை தொடர்ந்து செய்தால், என்றேனும் ஒருநாள் ‘நான் பரமன்’ என்பதை உணர்ந்து கொள்ள அது வழிவகுக்கும்.   

பயிற்சிக்காக :

1. விஸ்வரூப உபாசனை என்றால் என்ன?

2. எவை விஸ்வரூப உபாசனைகள் அல்ல?

3. விரும்பி ஏற்கும் விஸ்வரூப உபாசனைகள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. சிந்தித்து செயல் புரிவது நல்லதா அல்லது செயல் செய்துவிட்டு சிந்திப்பது சிறந்ததா?

2. கேள்விகள் கேட்காமல் செயல்கள் செய்தால் அவை மூடநம்பிக்கைகள் ஆகாதா?

3. விஸ்வரூப உபாசனை எவ்விதத்தில் முக்தியடைய உதவும்?

4. பழகிய செயல்களை விட்டு விட்டு மணமானதும் கணவன் வீட்டு சம்பிரதாயங்களை ஏற்றுக்கொள்வது மனைவிக்கு சிரமமாக இருக்காதா?

5. பாடத்தில் குறிப்பிடப்பட்ட பாடல் யாசோதை என்ற பெண்ணுக்கு மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் பொருந்துமா என்று ஆராய்க.