Showing posts with label Qualifications. Show all posts
Showing posts with label Qualifications. Show all posts

Monday, January 10, 2011

பாடம் 131: சடங்குகளின் அவசியம் (பிரம்மசூத்திரம் 3.3.55-56)

காலை எழுந்தவுடன் வாசல் தெளித்து கோலம் போடவேண்டும் என்று ஆரம்பித்து வாரம் ஒரு பொழுது உண்ணாவிரதம் இருக்கவேண்டும் என்பது வரை வழக்கில் இருந்து வரும் பல்வேறு சடங்குகளின் அவசியத்தை இந்த பாடம் விளக்குக்கிறது.

சடங்குகள் (rituals) என்றால் என்ன?

ஏன் எதற்கு என்ற கேள்விகளுக்கு அர்த்தம் தெரியாமல் பெரியவர்கள் நம் நல்லதிற்காக ஏற்படுத்தியுள்ள வழக்கம் என்ற ஒரே காரணத்திற்காக செய்யப்படும் அனைத்துச்செயல்களும் சடங்குகள் ஆகும். சடங்குகள் நமது நல்லதிற்காக என்பது உண்மையென்றாலும் அவை எவ்வாறு நமக்கு நன்மை பயக்கும் என்பதை பெரும்பாலோர் தெரிந்து கொள்வதில்லை. செய்யாவிட்டால் கடவுள் தண்டனை கொடுப்பார் என்ற தவறான பயத்தினால் இனம், மதம், நாடு என்ற பேதங்களை கடந்து உலகில் உள்ள அனைத்து மக்களும் ஆதிகாலம் முதல் இன்று வரை பல்வேறு  சடங்குகளை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள்.

சடங்குகளின் அவசியம்

இது இதனால் நடக்கும் என்ற காரண காரிய அறிவை ஆதாரமாக கொண்டு மனிதன் பல்வேறு செயல்களில் ஈடுபடுகிறான். பல சமயங்களில் செயல்களின் பலன்கள் அவன் எதிர்பார்த்தது போல் அமைவதில்லை. மேலும் பொருளாதார அடிப்படையில் எவ்வளவு சாதித்தாலும் நிரந்தரமான அமைதி மனதுக்கு கிடைப்பதில்லை. எனவே சடங்குகள் செய்வதன் மூலம் கடவுளர்களை திருப்தி செய்து தம் சொந்த முயற்சியால் அடையமுடியாத நிம்மதியான வாழ்வை அடையலாம் என்ற எண்ணம்தான் சடங்குகள் தொடர்வதற்கு காரணம்.  

சடங்குகளிடையே வேறுபாடு

உலகம் முழுவதும் பரவலாக பல்வேறு சடங்குகள் இருந்து வருகின்றன. கடவுளை காரணம் காட்டித்தான் சடங்குகள் தொடங்கப்பட்டிருந்தாலும் யாரும் நேரடியாக கடவுளின் செய்தியை படித்து சடங்குகள் செய்யும் விதத்தை தெரிந்து கொள்வதில்லை. வழிவழியாக குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் தங்களது அறிவுக்கு எட்டியபடி சடங்குகளை தங்கள் சந்ததியருக்கு கற்றுகொடுப்பதனால் காலம் மாறும்பொழுது தொடர்ந்து சடங்குகளும் மாறிக்கொண்டேவருகின்றன.

காரணம் தெரியாமல் செய்வதுதான் சடங்கு என்பதால் எல்லோரும் ஒரேமாதிரி அவற்றை செய்யவேண்டிய அவசியமில்லை. அவரவர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள வழக்கங்களை (tradition) பின்பற்றுவதுதான் சரி. தாங்கள் செய்வதைபோல் அல்லாமல் வேறுமாதிரி செய்கிறார்கள் என்ற காரணத்திற்காக எந்த ஒரு சடங்கையும் தவறு என்று முடிவுசெய்ய முடியாது. தனக்கு சரியாக வழிகாட்ட குடும்பத்தில் பெரியவர்கள் யாரும் இல்லை என்றால் வேதத்தை படித்து புரிந்து கொண்டவர்களை அணுகி சடங்குகளை செய்யும் விதத்தை கற்று அறியலாம்.

எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம், என்ன உணவு உண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம், உறவுகளை எவ்விதம் வளர்த்துக்கொள்ளலாம் என்பதுபோன்ற உலக விஷயங்களில் கூட எவ்வித ஒற்றுமையுமில்லாதபோது காரணம் தெரியாமல் செய்யும் சடங்குகள் வேறுபடுவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

சடங்குகள் செய்யும்பொழுது இருக்கவேண்டிய மனப்பான்மை

இயந்திரங்கள் போல ஏதோ எல்லோரும் செய்கிறார்கள் என்ற காரணத்திற்காக சடங்குகளை பின்பற்றுபவர்களுக்கு எவ்வித நன்மையும் கிடைப்பதில்லை. முன்னோர்களால் விதிக்கப்பட்டது என்ற பயபக்தியுடன் செய்பவர்கள் மட்டுமே காலப்போக்கில் சடங்குகள் செய்வதன் பலனை அடைவார்கள்.

சடங்குகளின் பலன்

அறிவியலின் அடிப்படையில் சடங்குகள் செய்வதன் பலனை ஆராய்வது மிகவும் தவறு. கோலம் போடுவதனால் கால்முட்டி மடங்கி நல்ல உடற்பயிற்சி கிடைக்கிறது என்பதும் சூரிய நமஸ்காரம் செய்வதால் உடலுக்கும் மனதிற்கும் பல நன்மைகள் ஏற்படுகின்றன என்பதும் அறிவியல் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டிருந்தாலும் இந்த காரணங்களுக்காக சடங்குகளை செய்யகூடாது. காரணம் தெரிந்துவிட்டால் சடங்குகள் சடங்குகளாக இருக்காது. ஆரோக்கியமாக இருக்கவும் வாழ்வில் வளம்பெறவும் சடங்குகளைச்சார்ந்திருக்காமல் அறிவியலின் அடிப்படையில் முயற்சிசெய்வதுதான் புத்திசாலித்தனம்.

காரணம் தெரியாமல் கடவுளுக்காக செய்யப்படும் சடங்குகள் மட்டுமே முக்தி என்னும் சரியான பலனை மக்களுக்கு கொடுக்கும்.

இருவகை மனிதர்கள்

சடங்குகள் செய்வதன் இறுதியான காரணத்தை அறிந்து கொள்ளத்தேவையான புத்திகூர்மை உள்ளவர்கள் வேதத்தை முறைப்படி ஆசிரியரிடம் பயின்றால் ஏன் சடங்குகளை செய்யவேண்டும் என்பதற்கு பதில் தெரிந்துவிடும். கேள்விகேட்டு பதிலை புரிந்துகொள்ளும் சாமர்த்தியம் இல்லாதவர்கள் தொடர்ந்து பயபக்தியுடன் சடங்குகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு செய்வதால் அவர்கள் மனம் பண்பட்டு செய்த நல்ல காரியங்களின் பலனாக நல்லாசிரியரைப்பெற்று வேதத்தை படித்து புரிந்துகொள்ளும் தகுதியை அவர்களும் பெற்றுவிடுவார்கள்.

ஆக கேள்வி கேட்கும் திறன் உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்கள் ஆகிய இருவகை மனிதர்களும் சடங்குகள் செய்வதன் இறுதிப்பலனான முக்தியை பெற்றுவிடுவார்கள். அனைத்து மக்களும் வாழ்வில் சரியான பாதையில் பயணிக்க வழிவகுக்கும்வகையில்தான் வேதம் சடங்குகளை ஏற்படுத்தியுள்ளது.

சடங்குகள் சமயத்தின் அடிப்படையில் உண்டாக்கப்பட்டவை. எனவே அதற்கு உண்டான விளக்கங்களை அறிவியலின் அடிப்படையில் தேடக்கூடாது. ஒன்றா சடங்குகளை கேள்விகள் கேட்காமல் பின்பற்றவேண்டும். இல்லையெனில் வேதத்தை படித்து சடங்குகள் செய்வதன் நோக்கத்தை அறிந்து கொள்ள வேண்டும். வேதம் இரு பகுதிகள் கொண்டது. வேத பூர்வம் என்கிற முதல் பாகம் கேள்வி கேட்காமல் பின்பற்ற வேண்டிய சடங்குகளை விவரிக்கும் பகுதி. வேதத்தின் இரண்டாம் பகுதி உபநிஷதங்களை உள்ளடக்கிய வேதாந்தம். இது ‘முடிவான அறிவு’ அல்லது ‘அறிவின் முடிவு’ ஆகிய இருவேறு பொருள்களை கொண்டது. கேள்வி கேட்டு பதிலை புரிந்துகொள்ளும் அறிவுத்திறனுடைய மக்கள் படிக்கவேண்டிய பகுதி இந்த வேதாந்தம் மட்டும்தான்.

வேதாந்தத்தை படிக்காமல் இருப்பவர்கள் சடங்குகளை பின்பற்றுவது மிக அவசியம். முறைப்படி வேதாந்தத்தை ஆசிரியரிடம் பயிலுபவர்கள் எவ்வித சடங்குகளையும் செய்யாமல் இருப்பதில் தவறு ஏதும் இல்லை. ஏனெனில் படித்து முடித்தவுடன் சடங்குகளின் அவசியத்தை தெரிந்து கொண்டு அவர்கள் அனைத்தையும் முறையாக பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள்.

அர்த்தமுள்ள சடங்குகள்

தர்மம் தலைகாக்கும் என்ற தொடருக்கு முடிந்தவரை யாரையும் துன்புறுத்தாமல் மற்றவர்களுக்கு நன்மை தரும் செயல்களை செய்பவர்கள், தங்கள் புண்ணியத்தின் பலனாக சரியான ஆசிரியரை பெற்று மரணமில்லா பெருவாழ்வை அடைவார்கள் என்பது பொருள். மக்களை தர்மமான முறையில் வாழத்தூண்டுவதால் சடங்குகள் அர்த்தமுள்ளவை. குடும்ப வழக்கில் உள்ள அனைத்து சடங்குகளையும் முறையாக செய்பவர்கள் கடவுள் பக்தி உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு கடவுள் யார் என்று காட்டிகொடுத்து முக்தியடையச்செய்ய சடங்குகள் உதவுகின்றன.

சடங்குகள் என்பது உடலினால் செய்யப்படும் உபாசனயோகம். மனதில் கடவுளின் நாமத்தையோ புகழையோ ஜெபிப்பது உபாசனயோகம். அவ்வாறு மனதில் தொடர்ந்து கடவுளை உபாசனை செய்யும் திறன் இல்லாதவர்களுக்கு சடங்குகள்  கடவுளிடம் பக்திசெலுத்த துணை செய்கின்றன.

இராணுவத்தில் உள்ள வீரர்களுக்கு நாட்டுப்பற்று அவசியம். நாட்டிடம் பற்றை வளர்த்துக்கொள்ள அவர்களும் தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்துதல் என்பது போன்ற பல சடங்குகளை தொடர்ந்து செய்கிறார்கள். இப்படித்தான் நிற்க வேண்டும் அல்லது நடக்க வேண்டும் என்பது போன்ற இராணுவத்தின் சடங்குகளை அவர்கள் கடைபிடிப்பதற்கு அறிவியலின் அடிப்படையில் எவ்வித காரணமும் கிடையாது. உடல் மண்ணுக்கு உயிர் நாட்டுக்கு என்று வாயளவில் அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை இது போன்ற சடங்குகளை பின்பற்றி மனதில் ஆழமாக பதியவைத்துக்கொள்கிறார்கள்.

இதேபோல்தான் மனதில் கடவுள் பக்தியை வளர்த்துக்கொள்ள உடலளவில் சடங்குகள் செய்வது பலருக்கு மிக அவசியமாக இருக்கிறது. எனவே சடங்குகளை மூடநம்பிக்கைகள் என்று நினைப்பதோ அவற்றை பின்பற்றுபவர்களை ஏளனமாக பார்ப்பதோ முட்டாள்தனம். குடியரசுதினத்தை கொண்டாடுவதை விட கடவுளின் பெயரால் வழக்கத்தில் இருந்து வரும் ஆடி அமாவாசை, தைப்பூசம், இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி போன்ற நாட்களை கொண்டாடுவது மிக அவசியமானது.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவப்பது, திருமண ஆண்டுநிறைவை நினைவுபடுத்த ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்துக்கொள்வது என்பது போன்ற சடங்குகள் மனிதர்களுக்கிடையே உள்ள உறவை பலபடுத்த உதவுவது போல பொங்கல், தீபாவளி, கார்த்திகை போன்ற பண்டிகை நாட்களில் பின்பற்றும் சடங்குகள் கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவை பலபடுத்த உதவுகின்றன.

முடிவுரை :

எப்பொழுதும் பணம், புகழ், பதவி என்று வெளியுலகில் உழைத்துகொண்டிருக்கும் மனிதனுக்கு கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை நினைவுபடுத்துவது சடங்குகள் ஆகும். சடங்குகளை செய்வதனால் வெளியுலகில் சஞ்சரிக்கும் மனது உள்நோக்கி திரும்பும். முதலில் உடலளவில் கடவுளுக்காக சடங்குகள் செய்ய ஆரம்பித்து நாளடைவில் மனதளவில் உபாசன யோகம் செய்யும் தகுதியை அடைந்து கடைசியாக வேதத்தை படித்து கடவுளை முழுமையாக அறிந்து கொள்ளும் வாய்ப்பை சடங்குகளை பின்பற்றுவதன் மூலம் மனிதன் பெறுகிறான்.

எனவே முக்தியடைய முதல் படியாக சடங்குகளை பின்பற்றுவது, கேள்விகள் கேட்டு பதிலை புரிந்து கொள்ளும் சக்தியற்றவர்களுக்கு அவசியமாகிறது. முதல்படியை கடந்து முடிவான முக்தியை அடைந்தவர்களும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து வழிகாட்டும்பொருட்டு சடங்குகளை பின்பற்றுவார்கள். எனவேதான் எவ்வளவுதான் அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்ட பின்னும்கூட சடங்குகள் தொடர்ந்து உலகில்  பரவலாக வழக்கில் இருந்து வருகின்றன.

பயிற்சிக்காக :

1. சடங்குகள் என்றால் என்ன?

2. சடங்குகளின் அவசியம் என்ன?

3. சரியான முறையில் சடங்குகளை பின்பற்றுவது எப்படி?

4. சடங்குகள் செய்யும்பொழுது இருக்கவேண்டிய மனோபாவம் என்ன?

5. சடங்குகளின் இறுதிப்பயன் என்ன?

6. இருவகை மனிதர்கள் யார் யார்?

சுயசிந்தனைக்காக :

1. வேதத்தில் கூறியபடியல்லாமல் வேறுமாதிரி சடங்குகளை செய்வதால் பாவம் ஏற்படுமா?

2. சடங்குகளை பின்பற்றாதவர்களின் நிலை என்ன?

3. தர்மம் எவ்வாறு தலையைக்காக்கும்?

4. வேதாந்தம் என்ற சொல்லின் இருபொருள்களுக்கிடையே உள்ள வித்தியாசம் என்ன?

Wednesday, December 8, 2010

பாடம் 115: துறவு இன்பத்துக்காக (பிரம்மசூத்திரம் 3.3.26)

வாழ்வு அட்டவணையின் கடைசி கட்டமான துறவு நிலை பற்றிய விளக்கங்களை கொடுத்து நம் அனைவரது வாழ்வின் இறுதியான நோக்கமான முக்தியை அடைய நாம் செய்யவேண்டிய செயல்களை இந்த பாடம் நினைவு படுத்துகிறது.

வேதம் காட்டும் பாதை

எந்நாளும் இன்பமாக அனுபவிப்பதற்காகவே உலகத்தில் உள்ள அனைத்து பொருள்களும் படைக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான மக்கள் இன்பமும் துன்பமும் கலந்த வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கு காரணம் பரமனை பற்றிய தெளிவான அறிவு ஏற்படாததுதான். எனவே வேதம் மாணவப்பருவம், இல்வாழ் பருவம், ஓய்வு நிலை, துறவு நிலை என வாழ்வை நான்காக பிரித்து பரமனை அறிய தேவையான மனபக்குவத்தை அடைய பாதை வகுத்துள்ளது. இந்த பாதையில் முறையாக பயணம் செய்தால் முடிவில் பரமனை அறிந்து துன்பம் கலவா இன்ப வாழ்க்கையை அடையலாம்.

வாழ்வில் துன்பத்திற்கு காரணம்

பொருள்களின் மீது நமக்கு இருக்கும் பற்றுதான் நம் துன்பத்திற்கு காரணம். ‘உன்னோடு சேர்ந்து வாழ்ந்தால் என் வாழ்வு இன்பமாக இருக்கும்’ என்ற எண்ணத்தில் தவறு இல்லை. ஆனால் ‘நீ இல்லாமல் என்னால் இன்பமாக வாழ முடியாது’ என்ற தவறான அறிவு நம்மை பொருள்களின் மீதும் மனிதர்கள் மீதும் பற்றுதல் வைக்க காரணமாயிருக்கிறது.

இந்த பற்றுதலைத்தான் அன்பு என்றும் காதல் என்றும் நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். எதனுடன் அடிக்கடி தொடர்பு கொள்கிறோமோ அதில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு ‘அது இருந்தால் இன்பம் இல்லையென்றால் துன்பம்’ என்ற நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம். இந்த பற்று நம்மை நிச்சயம் துன்பத்தில் ஆழ்த்தும்.


பற்றுதல் ஏன் துன்பத்தை தருகிறது?

உலகத்தில் உள்ள பொருள்களிலிருந்து நமக்கு கிடைக்கும் இன்பமும் துன்பமும் சம அளவாக இருப்பதற்கு பற்றுதான் காரணம். வேண்டியது கிடைத்ததும் மகிழ்ச்சி ஏற்பட்டால் அது தொலைந்தவுடன் அதே அளவு துயரம் ஏற்படும். பணம், பதவி, பொன், பொருள், புகழ், பெயர், பெருமை, செல்வாக்கு, குடும்பம், நட்பு, சுற்றம், வேலை என நாம் எவற்றின் மீது பற்றுதல் கொண்டிருக்கிறோமோ அவை அனைத்தும் தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பவை. இன்றிருப்பது நாளை இருக்காது. அப்படியே இருந்தாலும் அதை அனுபவிக்க கூடிய மனநிலையோ உடல்வலுவோ நம்மிடம் இருக்காது. எனவே பற்று இருக்கும்வரை இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதை தவிர்க்க முடியாது.

துறவு என்றால் என்ன?

பற்றை துறப்பது துறவு. மாணவப்பருவத்தில் முறையாக வேதத்தை படித்து நான் பரமன், என் பொழுதுபோக்கிற்காக என்னை ஆதாரமாக கொண்டு காட்சியளிக்கும் இந்த உலகம் உண்மையானது அல்ல என்ற அறிவை அடைந்திருந்தால் உலகத்தில் இருக்கும் பொருள்களிடமும் மனிதர்களிடமும் எவ்வித பற்றும் ஏற்படாது. ஆனால் பெரும்பாலோர் இந்த அறிவைப்பெறாமலேயே உலகம்தான் இன்பமான வாழ்வின் ஆதாரம் என்ற தவறான அறிவுடன் இல்வாழ்வை தொடங்கி விடுகிறார்கள். எனவே இந்த தவறான அறிவு வலுபெற்று பற்றுதல் அதிகமாகிறது.

உலகத்தில் பற்று இருக்கும்வரை வேதத்தை படிக்க ஆசை வராது. எனவே தானம், தவம் போன்ற கடமைகளை விதித்து இந்த பற்றினை மெது மெதுவாக தியாகம் செய்ய வேதம் வழிவகுக்கிறது. உலகத்தின் மீதுள்ள பற்றை குறைத்து கடவுளின் மீதுள்ள பற்றை அதிகபடுத்தி வேதத்தை முறையாக படிக்க அனைத்து நேரத்தையும் முயற்சியையும் செலவிடும் நிலை துறவு நிலை ஆகும். இன்பத்தை துறப்பது துறவு நிலை அல்ல. துன்பம் கலவா இன்பத்தை அடைய வேதம் படிக்க வேண்டும். துறவு நிலை இதற்கு உதவும் ஒரு சூழ்நிலையை நமக்கு தருகிறது.

துறவு நிலையின் ஆரம்பமும் முடிவும்

வாழ்வு அட்டவணையின் மூன்றாவது கட்டமான ஓய்வு நிலையில் உள்ளவர்கள் தங்கள் உடமைகள் அனைத்தையும் படிப்படியாக தானம் செய்துவிட்டு என்னுடையது என்று எதுவுமேயில்லை என்ற நிலைக்கு வந்தவுடன் துறவு நிலையில் நுழைகிறார்கள். மரணம்தான் துறவு நிலையின் முடிவு.


துறவியாக பயிற்சி

புத்தக அறிவை மட்டும் பெற்று ஒருவன் மருத்துவனாக முடியாது. படித்து முடித்த பின் குறைந்தது ஒரு வருடம் மருத்துவனாக வேலை செய்தபின்தான் மருத்துவன் என்ற பட்டம் கிடைக்கும். இந்த ஒருவருட பயிற்சி காலத்தில் கிடைக்கும் அனுபவம் ஒருவனை முழுதகுதிவாய்ந்த மருத்துவனாக மாற்றுகிறது.

அதுபோல துறவியாக ஆவதற்கு பொருள், சுற்றம் ஆகிய அனைத்தையும் சில காலம் துறக்க வேண்டும். மனதில் உள்ள பற்றுதலை குறைக்க பொருள்களை தானம் செய்து ஐம்புலன்களை அடக்கி தவம் செய்து துறவியாக செயல்படவேண்டும். அப்பொழுதுதான் மாறும் உலகின் மேல் உள்ள கவனத்தை மாறா பரமனை அறிந்து கொள்ள உபயோகபடுத்த முடியும்.

துறவியாக பயிற்சி செய்து பரமனை அறிந்தபின் உண்மையான துறவியாக மனதளவில் எவ்வித பற்றும் இல்லாமல் வாழலாம்.

துறவு நிலையில் செய்யவேண்டிய கடமைகள்

உண்மையான துறவிக்கு ஒரு கடமையும் இல்லை. பயிற்சிகாலத்தில் இருக்கும் துறவிகள் பொருளீட்ட எவ்வித வேலையும் செய்யாமல் கடவுளை ஆராதிப்பது, தியானம் செய்வது, வேதம் ஓதுதல் என்று தங்கள் மனப்பக்குவத்திற்கேற்ற ஆன்மிக செயல்களை மட்டும் செய்யலாம். மக்கள் சேவையிலும் ஈடுபடலாம். கிடைத்ததை உண்டு, எவ்வித போகப்பொருளுக்கும் ஆசை படாமல், எளிய வாழ்வை வாழ்வது பயிற்சிகாலத்தில் இருக்கும் துறவிகளின் கடமை.


இளமையில் துறவு

மாணவப்பருவம் முடியுமுன் வேதத்தை பயின்று முடிக்காதவர்கள் பொதுவாக உலக இன்பங்களால் கவரப்பட்டு இல்வாழ் பருவத்தை தொடங்கிவிடுவார்கள். ஒரு சிலர் தங்களின் அறிவுத்திறன் மூலமும் மற்றவர்களின் வாழ்க்கையை ஊன்றி கவனித்ததன் விளைவாகவும் திருமணம் செய்து கொள்ளாமல் துறவு மேற்கொண்டு பரமனை அறிந்து கொள்ள வேதத்தை முறையாக படிக்கும் முயற்சியை தொடர்வார்கள். இதுபோல இல்வாழ்வில் நுழைவதற்கு முன் துறவியாக மாற பெற்றோரின் சம்மதம் அவசியம்.

இளவயதில் துறவியானவர்களின் ஒரே கடமை வேதத்தை பயில்வதும் சொல்லித் தருதலும்தான். இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு பணியாற்ற இளஞர்களின் சேவையை நாடுவது போல இளமையில் துறவி மேற்கொள்பவர்களை ஆதரித்து காப்பதும் சமூகத்தின் கடமை. ஏனெனில் பகைவர்கள் உள்ளே புகுந்துவிடாமல் படைவீரர்கள் நாட்டை காப்பது போல் வாழ்வில் துன்பம் ஏற்படாமல் காக்கும் வழியை படிப்பதற்கும் பரப்புவதற்கும் வயதில் இளய துறவிகளால் மட்டும்தான் முடியும். உலகத்தில் இன்பம் இல்லை என்பதை அனுபவத்தால்தான் அறிந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லாதவர்கள் தங்களின் தவவலிமையால் இளமையில் துறவு ஏற்று வெகு விரைவில் பரமனை பற்றிய ஞானத்தை அடைந்து மற்றவர்களுக்கு வழிகாட்டும் பணியை செய்வது மனித சமுதாயத்தின் நல்வாழ்வுக்கு மிக அவசியம்.

முடிவுரை :

வாழ்வு அட்டவணையில் படிப்படியாக முன்னேறி அனைவரும் ஒரு நாள் துறவியாகிவிடுவார்கள். துறவு நிலையில் வாழாவிட்டாலும் மரணப்படுக்கையில் இருக்கும் தருணங்களில் விருப்பம் இல்லாவிட்டாலும் அனைத்தையும் துறந்துதான் ஆக வேண்டும். இந்த துன்பத்தை தவிர்க்க நாமாகவே வயதானபின் அனைத்தையும் துறந்து துறவு நிலையில் வாழ்ந்தால் மரணத்தை நோக்கி அஞ்சவேண்டிய அவசியமில்லை.

துறவு நிலை என்பது பரமனை அறிந்து இன்பமாக வாழ பயிற்சி மேற்கொள்ளும் காலம். உலகத்தின் மீதுள்ள பற்றை மனதளவில் துறந்து இல்வாழ் பருவத்தில் இருந்து கொண்டே வேதத்தை படிக்க நேரத்தை செலவிடலாம். ஜனகன் அரசனாக செயல் புரிந்து கொண்டிருக்கும் பொழுதே ஞானத்தை அடைந்ததால் ஓய்வு நிலையையோ துறவு நிலையையோ எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை. பொருள்களையும் உறவுகளையும் மனதளவில் துறக்கும் சக்தியில்லாதவர்களுக்காக வேதம் துறவு நிலையை உபதேசம் செய்துள்ளது.

பயிற்சிக்காக :

1. எதை துறப்பது துறவு?

2.துறவு மேற்கொள்ளுவது எதற்காக?

3.வாழ்வில் துன்பம் ஏற்படுவதற்கு காரணம் என்ன?

4.துறவிகளின் கடமைகள் யாவை?

5.இளமையில் துறவியாவதன் அவசியமென்ன?

6.துறவு நிலையின் ஆரம்பமும் முடிவும் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. துறவிகள் காவியுடை அணிவதன் அவசியமென்ன?

2.உண்மையான துறவியை அடையாளம் காண்பது எப்படி?

3.துறவிகள் அனைத்து வசதிகள் கொண்ட ஆசிரமத்தை அமைத்துகொண்டு வாழ்வின் சுகபோகங்களை அனுபவிக்கலாமா?

Wednesday, December 1, 2010

பாடம் 112: இளமையில் கல் (பிரம்மசூத்திரம்3.3.23)

மனித வாழ்வை நான்காக பிரித்து வாழ்வின் அட்டவணையை கொடுத்த வேதம், முதல் கட்டமான மாணவ பருவத்தில் கற்க வேண்டிய கல்வி, செய்ய வேண்டிய கடமைகள் போன்றவற்றை பற்றி சொல்லும் கருத்துக்களை இந்த பாடம் தருகிறது.

கடவுள் பாதி மிருகம் பாதி என்ற கலவையால் செய்யப்பட்டவன் மனிதன். பிறக்கும்பொழுது மிருகமாக இருக்கும் மனிதன் சிறிது சிறிதாக மிருக குணங்களை களைந்து கடவுளின் குணங்களை ஏற்று கடவுளாகவே மாறும் வாய்ப்பு உள்ளது. பட்டாம்பூச்சி முட்டையிலிருந்து வெளிவரும்பொழுது கம்பளிபூச்சியாக இருக்கிறது. பின் தன்னைத்தானே சுத்தீகரித்துக்கொண்டு வண்ணத்துபூச்சியாக வானை வலம் வருகிறது.

இதே போல் மனிதன் தாயிடமிருந்து குழந்தையாக பிறக்கும்பொழுது மிருகமாக இருக்கிறான். பின் குருவின் உதவியுடன் கல்வி கற்று தன்னைத்தான் எவ்வளவு தூரம் மாற்றிக்கொள்கிறான் என்பதை பொறுத்து கடவுளின் குணங்களின் விகிதம் அதிகரிக்கிறது. பிறவிகள் தோறும் இந்த முன்னேற்றம் தொடர்வதால் ஒரு சிலர் கடவுளாக மாறி என்றும் குறைவில்லா இன்பத்துடன் வாழ்கிறார்கள். மற்றவர்கள் கடவுளும் மிருகமும் கலந்த மனிதனாக இருந்து முக்தியை நோக்கி பிறவிகள்தோறும் முன்னேறுகிறார்கள்.

பிறந்த குழந்தை ஒரு ஐந்து வயதுவரை தாயின் அரவணைப்பில் அவளை முன்மாதிரியாக கொண்டு வளரும். அதுவரை அதன் உலகமே தாய்தான். ‘நான் சொல்வதை கேட்காவிட்டால் அப்பாவிடம் சொல்லுவேன்’ என்று தாய் தன் இயலாமையை தெரிவிக்கும் வயது வந்ததும் குழந்தை தந்தையின் பொறுப்புக்கு மாற்றப்படுகிறது. தந்தையின் கட்டுப்பாடும் பல வருடங்கள் நீடிப்பதில்லை. அவர் தன்னால் முடியாதபொழுது பிள்ளைகளை பற்றிய பொறுப்பை குருவிடம் ஒப்படைக்கிறார். தான் தன் காலில் நிற்பதற்கு வேண்டிய பயிற்சியை பெறுவதற்கு குருவை சார்ந்திருக்கும் காலம் மாணவப்பருவம் எனப்படும்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தொடர் ஓட்டப்பந்தையத்தில் கைமாற்றப்படும் பொருள் போல மனிதன் சிறு வயதில் ஒருவர் பொறுப்பிலிருந்து மற்றவர் பொறுப்புக்கு மாற்றப்படுகிறான். குருவிடம் பயிலும் மாணவப்பருவம் முடிந்ததும் தெய்வத்தின் நேரடிப்பார்வையில் அவன் எதிர்காலம் அமைகிறது.

மாணவப்பருவத்தின் ஆரம்பமும் முடிவும்

தந்தையின் பொறுப்பில் உள்ள பிள்ளை குருவின் பொறுப்புக்கு மாறுவது மாணவப்பருவத்தின் ஆரம்பம். எப்பொழுது கல்வி கற்பதைவிட பணம் சம்பாதிப்பதும், குடும்பவாழ்வில் ஈடுபடுவதும், ஆசைகளை யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் நிறைவேற்றிக்கொள்ளும் துடிப்பும் முக்கியமாக தோன்றுகிறதோ அப்பொழுது மாணவப்பருவம் முடிவடைகிறது. கல்வி கற்பது மட்டும்தான் என் வாழ்வின் ஒரே நோக்கம் என்றிருக்கும் காலம்தான் மாணவப்பருவம்.

இல்வாழ்வை ஏற்றுக்கொண்டு பின் பொழுதுபோவதற்காக படிப்பதும், வேலையில் பதவி உயர்வு பெறுவதற்காக மேற்படிப்பை தொடர்வதும் மாணவப்பருவம் என்ற கட்டத்துக்குள் வராது. அதேபோல் இல்வாழ்வை முடித்து ஓய்வு பெற்றவுடன் படிப்பதை முழுநேர வேலையாக ஏற்றுக்கொண்டாலும் அதை மாணவப்பருவம் என்று குறிப்பிட முடியாது.

மாணவ பருவத்தில் செய்ய வேண்டிய கடமைகள்

கற்பது மாணவனின் முதல் கடமை. பெற்றோருக்கும் குருவிற்கும் சேவை செய்வது அடுத்த கடமை. பெரியவர்களை மதித்து அவர்களிடமிருந்து ஏதாவது கற்க வேண்டும் என்ற மனோபாவத்துடன் பணிவாக நடந்துகொள்வதும், உடற்பயிற்சிக்கேற்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்வதும், புத்தியை தீட்டும் வகையில் வடிவமைக்கபட்ட பொழுதுபோக்கு சாதனங்களை உபயோகபடுத்தி மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதும் மாணவப்பருவத்தில் செய்ய வேண்டிய மற்ற கடமைகளாகும்.

மாணவபருவத்தில் செய்யகூடாதவை

பணம் சம்பாதிப்பதை மாணவப்பருவத்தில் முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொருளாதார சூழ்நிலை காரணமாக பகுதிநேர வேலை செய்ய நேரிட்டாலும் பெறும் சம்பளத்தை முழுதும் பெற்றோரிடம் கொடுத்துவிட வேண்டும். பணம் சம்பாதிப்பது எப்பொழுது படிப்பைவிட முக்கியமானதாக தோன்றுகிறதோ அப்பொழுதிலிருந்து மாணவப்பருவத்தின் முக்கிய தேவையான கற்கும் திறன் குறையத்துவங்கிவிடும்.

படித்து முடிக்கும் வரை பாலுணர்வை தூண்டும் வகையிலான நட்பையோ பொழுதுபோக்கு சாதனங்களையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும். உடலுறவில் ஆர்வம் ஏற்பட்டால் கல்வி கற்பதற்கு தேவையான கவனம் சிதறடிக்க பட்டுவிடும்.

எந்த செயல்களைச்செய்தால் பெற்றோர்களும் ஆசிரியரும் விரும்பமாட்டார்களோ அந்தச்செயலகளை மாணவப்பருவத்தில் செய்யகூடாது.

மாணவப்பருவத்தில் கற்க வேண்டியவை

வாழ்க்கையை வாழத்தேவையான அனைத்து அறிவையும் திறனையும் வளர்த்துக்கொள்ளும் பருவம் மாணவப்பருவம். விலங்குகளைப்போல உண்டு உறங்கி இனப்பெருக்கம் செய்து உயிர்வாழ மனிதன் பெரிதாக ஒன்றையும் கற்க வேண்டிய அவசியம் இல்லை. விலங்குகளை போலன்றி கடவுளாய் மண்ணில் வாழ வாழ்வில் ஏறக்குறைய கால்பகுதிக்கு மேல் மாணவப்பருவத்திற்காக செலவழித்து தன் முழுத்திறனையும் உபயோகித்து கல்வி கற்க வேண்டும்.

பிறக்கும்பொழுது அனைத்து குழந்தைகளும் சென்ற பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள அறிவுடனும் தொழில் செய்யும் திறனுடம்தான் பிறக்கின்றன. இவ்வனைத்தையும் நினைவு கூர்ந்து பின் மேலும் வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு மாணவப்பருவத்தில் கிடைக்கிறது. எவ்வளவு தூரம் அறிவை வளர்த்துக்கொள்ள முடியும் என்பது மாணவருக்கு மாணவர் வேறுபடும். விளையும் பயிர் முளையிலே தெரியும். ஒவ்வொருவரும் தங்கள் முழுத்திறமையையும் வெளிக்கொணர்ந்து மேலும் முன்னேறும் வகையில் தரமான கல்வி கற்க வேண்டும்.

1. பொது அறிவு: உலகுடன் உறவாட தேவையான மொழி, கணிதம், அறிவியல் போன்றவை அனைவரும் கற்க வேண்டிய பொது அறிவு, கல்வியின் முதல் படி. தேவையான அளவு பொது அறிவு பள்ளிப்படிப்பை முடிக்கும்பொழுது மாணவர்களுக்கு கிடைத்துவிடும்.

2. தனி அறிவு: ஒவ்வொரு மாணவரும் தங்களது விருப்பத்திற்கேற்ற ஓரிரு துறைகளை தேர்ந்தெடுத்து மற்றவர்களை விட அதிகத்திறன் பெறும் வகையில் கல்வி கற்க வேண்டும். தனி அறிவை வளர்த்துக்கொள்ள கல்லூரி படிப்பு அவசியமாகும்.

தனி அறிவு பணம் சம்பாதிக்க தேவையான தகுதியை பெரும்பாலும் ஏற்படுத்திக் கொடுத்துவிடும். அவ்வாறில்லாமல் ஓவியம், பாட்டு, விளையாட்டு என்பது போன்ற போதிய அளவு பணம் சம்பாதிக்க இயலாத துறைகளில் தனி அறிவு இருக்குமேயானால் வேலை வாய்ப்பு அதிகமுள்ள ஏதாவது ஒரு துறையிலும் மேலும் ஒரு தனி அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவப்பருவம் முடிந்ததும் திறமைக்கேற்ற வேலையை செய்யத்துவங்குவதுதான் கல்வி கற்பதன் முக்கிய நோக்கம். எனவே வேலை வாய்ப்பு அதிகமுள்ள ஏதாவது ஒரு துறையில் வல்லுனர் என்ற நிலை வரும் வரை தனி அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.


3. வாழ்க்கைக்கல்வி: ஒரு தென்னங்கன்றை நட்டு உரமிட்டு நீரூற்றி பாதுகாத்து வளர்த்தால் அது மரமாகி மற்றவர்களுக்கு உதவும். அதுபொல ஒரு மாணவனுக்கு பொது அறிவையும் தனி அறிவையும் கொடுத்தால் அவன் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் உபயோகமாக உழைக்க கூடிய உற்பத்தி திறனுள்ள மனிதனாக மாறுவான். ஆனால் வாழ்க்கையின் நோக்கம் என்ன, எதற்காக கல்வி கற்று, பணம் சம்பாதித்து குடும்ப பொறுப்புகளை ஏற்றுகொள்ள வேண்டும் என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள வாழ்க்கை கல்வி அவசியம். தனி அறிவு வாழ்வில் பணம் சம்பாதித்து வசதிகளை அதிகபடுத்திக்கொள்ள மட்டுமே உதவும். நிரந்தர பாதுகாப்பையும் குறையாத இன்பத்தையும் தரும் சக்தியுள்ளது வாழ்க்கை கல்வி மட்டுமே.

பந்தை எப்படி எதிராளியிடம் சிக்காமல் தக்கவைத்துக்கொண்டு இங்கும் அங்கும் ஓடுவது என்பதை கற்றுக்கொண்டால் மாத்திரம் கால்பந்தாட்ட நிபுணனாகி விட முடியாது. ஆட்டத்தின் நோக்கம் என்ன என்பதை அறியாமல் பந்துடன் இங்கும் அங்கும் வீணே ஓடிக்கொண்டிருப்பது போல வாழ்க்கையின் நோக்கம் என்ன என்று தெரிந்து கொள்ளாமல் பெரும்பாலோர் வேகமாக வேலை செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.

பொருளாதரம், அறிவியல் போன்ற உலகியல் துறைகளில் எல்லை என்று ஒன்றும் கிடையாது. எவ்வளவு வேகமாக ஓடினாலும் வெற்றிக்கம்பத்தை தாண்ட முடியாது. ஓட முடியாமல் கீழே விழுவதாலோ அல்லது ஓடியது போதும் என்று நாமே ஓய்வெடுக்க தீர்மானிப்பதாலோ மட்டும்தான் ஓட்டப்பந்தையம் முடிவுக்கு வரும் என்பது தெரியாமல் எல்லோரும் மாணவப்பருவத்தை முடித்துவிட்டு ஓட ஆரம்பிக்கும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். ஓட ஆரம்பித்துவிட்டால் அதற்கு பிறகு ஏன் ஓடுகிறோம் என்பதை ஆராய அவகாசம் இருக்காது.

எனவே மாணவ பருவத்தில் வாழ்க்கை கல்வி அவசியம். வாழ்க்கை கல்வியை உடலாலும் வாக்காலும் செய்ய வேண்டிய சடங்குகள், மனதில் கொள்ளவேண்டிய பண்புகள் மற்றும் புத்தியால் தெரிந்து கொள்ளவேண்டிய அறிவு ஆகிய மூன்று நிலைகளில் மாணவர்களுக்கு கற்பிக்க பட வேண்டும்.

எவ்வளவு தூரம் தனி அறிவை பெறுவது என்பது அவரவர்களின் அறிவுத்திறனை பொறுத்து மாறுபடும். ஒரு சிலர் மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் தனி அறிவை பெற்று நிறைய சம்பாதிக்க கூடிய வேலைகளை பெறுகிறார்கள். ஆனால் பலர் விவசாயம், வணிகம் போன்று உடல் உழைப்பை பிரதானமாக கொண்ட வேலைகளை செய்கிறார்கள். பிறவிகள்தோறும் சேர்த்து வைத்த அறிவின் திறன் மக்களுக்குள் பெரிதும் வேறுபடுவதுதான் இதற்கு காரணம். அவரவர் அறிவுக்கேற்ற தொழிலை செய்து தாங்கள் தற்பொழுது இருக்கும் நிலையிலிருந்து எல்லோரும் இந்த பிறவியில் சிறிது முன்னேற்றம் அடைவார்கள்.

வாழ்க்கை கல்வியை பெறும் தகுதியும் இதுபோல் வேறுபடும். ஒரு சிலரால் வெறும் சடங்குகளை மட்டும்தான் பின் பற்ற முடியும். பெரும்பாலோர் நற்பண்புகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து தர்மமாக வாழகற்றுக்கொள்வர். வெகு சிலர் வேதம் கூறும் பரம ரகசியத்தை அறிந்து கொண்டு முக்தியை அடைவர்.

வாழ்க்கை கல்வி – பண்புகள்: புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் உள்ள நீதிகதைகள் மூலமாக உண்மை பேசுதல், நேர்மையாய் நடத்தல், பணிவின் உயர்வு, ஒழுக்கம், துன்புறுத்தாமை, கொல்லாமை, தூய்மை, ஒழுங்கு போன்ற நற்குணங்களின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு போதிக்க வேண்டும்.

வாழ்க்கை கல்வி – சடங்குகள்: கடவுளை பற்றியும் கடவுளை ஆராதிக்கும் பூஜை மற்றும் பிரார்த்தனை முறைகளையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். ராணுவத்தில் சேர்பவர்களுக்கு நிற்பது, நடப்பது, தேசியகொடிக்கு மரியாதை செலுத்துவது போன்ற சடங்குகளை சொல்லிகொடுத்து அதன் மூலம் தேசபக்தியை உண்டுபண்ணுவது போல வாயால் ஸ்தோத்திரம் சொல்வது, உடலால் பூஜை செய்வது போன்ற சடங்குகளை சொல்லிக்கொடுத்து கடவுள் பக்தியை உண்டு பண்ணவேண்டும்.

மாதா, பிதா, குரு என்று கை மாறிவந்த மாணவன், இந்த பருவம் முடிவதற்குள் இறைவனின் பொறுப்புக்கு மாற்றப்படவேண்டும் என்பதால் இறைவனைப்பற்றியும் வேதத்தை பற்றியும் சரியான அறிவை அவன் அடைவது அவசியம்.

வாழ்க்கை கல்வி – ஆன்மிக அறிவு: வேதத்தை முறைப்படி கற்றுக்கொடுப்பதன் மூலம் மாணவர்களுக்கு மனிதன், கடவுள், உலகம், வாழ்வின் துன்பத்திற்கு காரணம், துன்பத்திலிருந்து விடுதலைப்பெற செய்யவேண்டிய செயல்கள் மற்றும் விடுதலை பெற்றபின் அனுபவிக்கும் குறைவற்ற இன்பத்தை பற்றிய வர்ணணை ஆகிய ஆறு ஆன்மிக அறிவையும் புகட்ட வேண்டும். வெகு சிலரால் மட்டுமே இந்த அறிவை முற்றிலும் புரிந்து கொள்ள முடியும் என்றாலும் மற்றவர்களுக்கு இந்த அறிவு அவர்கள் மனதினுள் தங்கி தகுந்த காலம் வரும்பொழுது அறிவாக மலரும்.

முடிவுரை :

தங்கசுரங்கத்தில் கிடைக்கும் மண்ணை சுத்தம் செய்து அதிலிருந்து தங்கத்தை பிரித்தெடுப்பதைப்போல விலங்குகளின் குணங்களை களைந்து மனிதனை கடவுளாக்கும் பணியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஆசிரியர்களின் துணையுடன் மாணவப்பருவத்தில் எவ்வளவுதூரம் நம்மை நாம் பண்படுத்திக்கொள்கிறோமோ அந்த அளவு நமது வாழ்வு வசதியுடனும் இன்பமாகவும் அமைகிறது. எனவே வாழ்வின் அட்டவணையில் கொடுக்கப்பட்ட நான்கு கட்டங்களில் முதல் கட்டமான மாணவப்பருவத்தில்தான் நம் வாழ்வின் மற்ற மூன்று கட்டங்களை எப்படி வாழப்போகிறோம் என்பதன் அடித்தளம் நிர்ணயிக்கப்படுகிறது.


பயிற்சிக்காக :

1.மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசை எதை குறிக்கிறது?

2. மாணவப்பருவத்தின் ஆரம்பம் மற்றும் முடிவு எது?

3.மாணவனின் கடமைகள் யாவை?

4.மாணவபருவத்தில் செய்யக்கூடாத செயல்கள் யாவை?

5. கற்கவேண்டிய மூன்று கல்விகள் யாவை?

6. வாழ்க்கை கல்வி எந்த மூன்று விதமாக பிரிக்கப்பட்டிருக்கிறது?

7. சடங்குகளின் முக்கியத்துவம் என்ன?


சுயசிந்தனைக்காக :

1. தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு என்ற திருக்குறளின் பொருளை ஆராய்க.

2. கற்கவேண்டிய அனைத்தையும் கற்றால் மாணவப்பருவத்திலேயே முக்தியை அடைந்து விடலாமா?

3.இறைவனாகவே மாறிவிடுவது என்றால் என்ன?

4.இறைவனாகவே மாறிவிட்டால் இல்வாழ்வில் நுழைய முடியுமா?

5.தற்போதைய கல்விதிட்டத்தில் உள்ள குறை என்ன?