Friday, January 28, 2011

பாடம் 136: கர்மகாண்டத்தின் முடிவு (பிரம்மசூத்திரம் 3.3.61-66)

கர்மகாண்டம் எவ்வகையில் மக்களுக்கு உதவுகிறது என்றும் அதை பின்பற்றுபவர்கள் எப்பொழுது அதை கடந்து ஞானகாண்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதை பற்றியும் இந்த பாடம் சில முக்கியமான விளக்கங்களை கொடுக்கிறது.

கர்மகாண்டத்தின் நோக்கம்

மக்களின் அறிவாற்றலும் மனப்பக்குவமும் ஒருவருக்கொருவர் பெரிதும் வேறுபடும். அனைவராலும் ஞானகாண்டத்தில் விளக்கப்பட்ட உண்மைகளை அறிந்து கொண்டு முக்தியடைந்துவிட முடியாது. எனவே கர்மகாண்டம் ஒரு படிக்கட்டாக செயல்பட்டு இவ்வகை மக்களை மூன்றாகப்பிரித்து ஞானகாண்டத்திற்கு தயார் செய்கிறது.

முதல் பிரிவு: புகை சூழ்ந்த நெருப்பு

இவர்கள் ஞானகாண்டத்திற்கு ஏறக்குறைய தயார் நிலையில் இருப்பவர்கள். செய்யும் வேலைகளை எப்படி கர்மயோகமாக மாற்றுவது என்ற அறிவை பெற்ற சிறிது காலத்திற்கெல்லாம் இவர்களுக்கு வேதாந்த தத்துவங்கள் புரிய ஆரம்பித்துவிடும். அதன் பிறகு கர்மகாண்டம் இவர்களுக்கு தேவையில்லை.

இரண்டாம் பிரிவு: தூசுபடிந்த கண்ணாடி

இவ்வகை மக்கள் தொடர்ந்து சிலகாலம் கர்மகாண்டத்தின் கட்டளைகளை பின்பற்றியபின்தான் ஞானகாண்டத்திற்கு செல்லும் தகுதியை பெறுவார்கள். செயல் செய்வதன் மூலம் முக்தியடைய முடியாது என்பது இவர்களுக்கு தெரியும்வரை வேதாந்தம் படிக்க இவர்கள் நேரம் ஒதுக்க மாட்டார்கள்.

மூன்றாம் பிரிவு: கர்ப்பம் மூடிய குழந்தை

இந்தபிரிவில் இருப்பவர்களுக்கு ஞானகாண்டம் செல்வதற்கு மிக அதிக காலமும் பிரயத்தனமும் தேவைபடும். இவர்களில் ஒரு சிலருக்குத்தான் கர்மகாண்டத்தை தாண்டி ஞானகாண்டம் செல்லும் தகுதி இந்தப்பிறவியில் வாய்க்கும். உலகில் உள்ள மக்களில் பெரும்பகுதியினர் இந்தப்பிரிவை சேர்ந்தவர்கள்.

கர்மகாண்டத்தின் பரிந்துரைகள்

ஞானகாண்டத்திற்கு தகுதிபெற மூன்று வித மாற்றங்களை கர்மகாண்டம் மக்களுக்கு பரிந்துரைக்கிறது.

முதல் மாற்றம்: மனப்பாங்கு

உலகம் கடவுளின் படைப்பு. உலகத்தில் உள்ள அனைத்து இயக்கமும் கடவுளின் கட்டளைபடிதான் நடக்கின்றன. எனவே நாம் நம்மைச்சுற்றியுள்ள நிகழ்வுகளையும் மனிதர்களையும் மரியாதையும் பயபக்தியும் கூடிய மனப்பாங்குடன் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். புத்தகத்தின் மேல் கால்பட்டால் அதைத்தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டு மனதார மன்னிப்பு கேட்கவேண்டும். மாதா, பிதா, குரு மற்றும் சான்றோர்களை கடவுளாக போற்றவேண்டும். மரம் செடி கொடிகளையும் விலங்குகள், பறவைகள் போன்ற மற்ற உயிரினங்களையும் உடன்பிறந்தவர்களை போல நடத்தவேண்டும். உணவு, உடை, உறையுள் போன்ற ஜடப்பொருள்களை கடவுளிடமிருந்து தற்காலிகமாக கடன்வாங்கப்பட்டவை என்ற நினைவுடன் உபயோகிக்கவேண்டும்.

தான் உலகத்திலிருந்து வேறுபட்ட சுதந்திரமான மனிதன் என்ற எண்ணத்துடன் ஆசைகளை நிறைவேற்றும் பொருட்டு சுற்றுச்சூழலை மதிக்காமல் எவ்வித காரியத்தையும் செய்ய தயாராக இருக்கும் மனோபாவம் தவிர்க்கப்படவேண்டியது.  

இரண்டாம் மாற்றம்: நற்குணங்கள்

அன்பு, அடக்கம், இன்னாகூறாமை, கருணை, கனிவு, பணிவு, பரோபகாரம் போன்ற அனைத்து நற்குணங்களை வளர்த்துக்கொள்ளவும் கோபம், பொறாமை, காழ்ப்புணர்ச்சி போன்ற தீயகுணங்களை முற்றிலும் தவிர்க்கவும் தொடர்ந்து பிரயத்தனம் மேற்கொள்ளவேண்டும்.

மூன்றாம் மாற்றம்: நற்செயல்கள்

செய்யும் அனைத்து செயல்களையும் தர்மமான முறையில் செய்யவேண்டும். அதர்மமான செயல்களை செய்ய மனதாலும் எண்ணகூடாது. முடிந்தவரை மற்றவர்களுக்கு தீங்கிழைக்காமலும், மற்ற உயிரினங்களை துன்புறுத்தாமலும் சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தாமலும் நமது செயல்களை செய்ய வேண்டும்.

கர்மகாண்டத்தின் கட்டளைகள்

மேற்கூறப்பட்ட மூன்று மாற்றங்கள் ஏற்பட்டால்தான் மக்கள் ஞானகாண்டத்திற்கு தயார் ஆவார்கள். இந்த மூன்று மாற்றங்களையும் ஏற்படுத்த கர்ம காண்டத்தின் மூன்று கட்டளைகளை பின்பற்றுவது அவசியம்.

முதல் கட்டளை: செயல்களின் மூலம் உபாசனை

தினசரி பூஜை, கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்தபின் காக்கைக்கு சிறிது உணவிட்டு பிறகு உண்ணுதல், கோவிலுக்கு சென்று கடவுளை வழிபடுதல், பிரகாரத்தை வலம் வருதல், பிராயசித்த காரியங்களாக அங்கபிரதக்ஷ்ணம் போன்ற சடங்குகளை செய்தல் ஆகியவை செயல்கள் மூலம் செய்யும் உபாசனைகளாகும். ஒவ்வொருவரும் சந்தியாவந்தனம் போன்று ஏதேனும் ஒரு சடங்கையாவது  தொடர்ந்து செய்யவேண்டும். கர்ப்பம் மூடிய குழந்தை என்ற மூன்றாம் வகை மனிதர்கள் இந்த உபாசனையை தொடர்ந்து செய்வேண்டும்.

இரண்டாம் கட்டளை: வார்த்தைகள் மூலம் உபாசனை

மந்திர ஜெபம் செய்வது, கடவுளின் புகழ் பாடும் புராணங்களையும் பாராயணம் செய்வது வாக்கால் செய்யும் உபாசனைகளாகும். தூசு படிந்த கண்ணாடி என்ற இரண்டாம் வகை மனிதர்கள் இந்த உபாசனையை செய்ய வேண்டும்.

மூன்றாம் கட்டளை: எண்ணங்கள் மூலம் உபாசனை

புகை சூழ்ந்த நெருப்பு என்ற முதல் வகை மனிதர்கள் செய்யவேண்டியது இஷ்ட தெய்வத்தை குறித்து தியானம் என்னும் மனதினால் செய்யும் உபாசனை.

கர்மகாண்டத்தின் பலன்கள்

மேற்கூறப்பட்ட மூன்று கட்டளைகளை தொடர்ந்து பின்பற்றினால் தேவையான மூன்று மாற்றங்களை பெற்று ஞானகாண்டத்தினுள் செல்ல தகுதி ஏற்படுவதுடன்  கர்மகாண்டத்தின் பின் வரும் மூன்று பலன்களையும் பெறலாம்

முதல் பலன்: பொருள்
இரண்டாம் பலன்: இன்பம்
மூன்றாம் பலன்: தர்மம்

கிழேகிடக்கும் சில்லறையை தொடர்ந்து பொறுக்கி போகவேண்டிய பாதையை தவறவிட்டவனைபோல மக்கள் வேண்டியது கிடைக்க ஆரம்பித்தவுடன் கர்மகாண்டத்தின் உபதேசங்களை பின்பற்றுவதில் முழுவதுமாக ஈடுபட்டு வாழ்வின் இறுதி குறிக்கோள் என்ன என்ற கேள்வியை கேட்க மறந்து விடுவார்கள்.

சில்லறையை பொறுக்க ஆரம்பித்தவன் களைத்து போனபின் எதற்காக இவ்வளவு காசுகளை பொறுக்கிக்கொண்டிருக்கிறோம் என்று யோசிக்க ஆரம்பித்தால் வீடு திரும்பும் ஆசை ஏற்படும். அதுபோல அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றில் உள்ள குறைகளை அறிந்தவுடன் வீடுபேற்றில் ஆசை வரும்

பலன்களில் உள்ள குறைகள்

செடியில் உள்ள ரோஜாமலர் தன் அழகால் அனைவரையும் கவர்ந்து இழுப்பது போல மேற்குறிப்பிட்ட மூன்று பலன்களும் மக்களை தொடர்ந்து கர்மகாண்டத்தை பின்பற்றவைக்கின்றன. அருகில் செல்பவர்களை குத்தும் முள் மலருக்கு பின் மறைந்திருப்பது போல பின்வரும் மூன்று குறைகள் உலக இன்பங்களின் பின் மறைந்திருக்கின்றன.

முதல் குறை: துன்பம் கலந்த இன்பம்

இன்பம் தரும் எந்த பொருளும் சும்மா கிடைப்பதில்லை. அவற்றை சம்பாதிப்பதும் காப்பதுவும் துன்பமான செயல்கள். மேலும் எவ்வளவுதான் முயன்றாலும் அது மாற்றமடைந்து மறைவதை தவிர்க்கமுடிவதில்லை. கூட்டிகழித்து பார்த்தால் கிடைக்கும் அனைத்து இன்பங்களும் அதற்கு சரிசமமான துன்பத்தை நமக்கு தருகின்றன. துன்பம் கலவாத இன்பம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

இரண்டாம் குறை: நிறைவின்மை

எவ்வளவுதான் கிடைத்தாலும் போதும் என்ற நிலை ஏற்படுவதில்லை. இன்னும் இன்னும் என்று தொடர்ந்து தேடியலைவதிலேயே வாழ்வின் பெரும்பகுதி நேரமும் உழைப்பும் செலவாகிறது. செய்த புண்ணியத்தின் பலனாக சுவர்க்கத்திற்கு சென்றாலும் கூட அங்கு நிரந்தரமாக இருக்க முடியாது என்று வேதம் கூறுகிறது. காலத்தையும் வெளியையும் பிரிக்கமுடியாது என்பதால் சுவர்க்கம் என்பது என்றும் இருக்கும் ஒரு இடம் என்பது உண்மையாக இருக்க முடியாது என்று நமது தர்க்க அறிவும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் நமக்கு தெரிவிக்கின்றன.

வாழ்வில் வெற்றிபெற்றவர்களாக கருதப்படும் எவரும் தங்கள் சாதனையில் திருப்தி அடைந்து இனி எதுவும் வேண்டாம் என்று ஓய்வெடுப்பதாக தெரியவில்லை.   

மூன்றாம் குறை: அடிமைப்படுதல்

வசதிகள் பெருக பெருக அவை அடிப்படை தேவைகளாக மாறி முன்பைவிட இன்பத்திற்காக வெளியுலகை சார்ந்து இருப்பது அவசியமாகிறது.

மக்கள் சிறிதுகாலம் அறம், பொருள் இன்பம் ஆகியவற்றை நாடி ஓடியபின்தான் அவற்றில் இந்த மூன்று குறைகள் இருக்கின்றன என்ற உண்மையை உணர்வார்கள். அதுவரை தொடர்ந்து கர்மகாண்டத்தின் கட்டளைகளை பின்பற்றி அவர்கள் செயல் செய்து கொண்டிருப்பதை நிறுத்த முடியாது. அவரவர்களின் தற்போதைய நிலை அவர்கள் எவ்வளவு காலம் தொடர்ந்து கர்மகாண்டத்தின் பிடியில் இருப்பார்கள் என்பதை தீர்மானிக்கும்.

கர்மகாண்டத்தின் முடிவு

செய்யும் செயல்களின் மூலம் அவர்களின் அறிவுத்திறன் வளருகிறது. மேலும், தொடர்ந்து தேடுவது என்றும் ஒரு முடிவுக்கு வராது என்ற மனப்பக்குவமும் அவர்களுக்கு ஏற்படும். பின்னோக்கி நகரும் பாதையில் வேகமாக ஓடுவது உடற்பயிற்சிக்காக மட்டுமே. முன்னால் இருக்கும் நிலையான சுவற்றை எவ்வளவு வேகமாக ஓடினாலும் தொட முடியாது. அதுபோல பணம் சம்பாதிப்பது மனதை செம்மையாக்கிக்கொள்ள மட்டுமே. பணத்தால் நிலையான இன்பத்தை அடையவே முடியாது.

உடல் பயிற்சி செய்தவுடன் இயந்திரத்திலிருந்து கீழே இறங்குவது பொல மனப்பக்குவம் ஏற்பட்டதும் பணம் சம்பாதிக்கும் செயல்களை நிறுத்திவிட்டு கர்மகாண்டத்தின் நிலையற்ற பலன்களைப்போலல்லாமல் என்றும் நிலையான பலன் தரும் ஞானகாண்டத்தினுள் பிரவேசம் செய்யும்பொழுது கர்மகாண்டம் ஒரு முடிவுக்கு வருகிறது.

முடிவுரை:

பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகள் கொண்டது. கர்மகாண்டத்தை பற்றிய முற்றான விளக்கங்களை கொடுத்ததுடன் இந்த மூன்றாம் அத்தியாயத்தின் மூன்றாவது பகுதி இத்துடன் முற்றுப்பெருகிறது.

பயிற்சிக்காக :

1. மூன்று வகை மக்கள் யார்? அவர்களை இதுபோல் மூன்று வகையாக பிரிப்பதன் நோக்கம் என்ன?

2.கர்மகாண்டத்தின் மூன்று பரிந்துரைகள் என்ன?

3. கர்மகாண்டத்தின் மூன்று கட்டளைகள் என்ன?

4. கர்மகாண்டத்தின் மூன்று பலன்கள் யாவை?

5. கர்மகாண்டத்தின் பலன்களில் உள்ள மூன்று குறைகள் யாவை?

6. கர்மகாண்டத்தை பின்பற்றுவது எப்பொழுது ஒரு முடிவுக்கு வரும்?

சுயசிந்தனைக்காக :

1.குதிரை தன்மேல் அமர்ந்திருக்கும் வீரனைகாப்பது போல வேதம் முழுவதையும் கற்று தேர்ந்தவர் அனைத்து சடங்குகளையும் அவற்றை செய்பவர்களையும் செய்விப்பவர்களையும் காக்கும் சக்தி படைத்தவர் என்ற சாந்தோக்கிய வாக்கியத்தின் (IV.17.10) பொருளை ஆய்க.

2. கர்மகாண்டத்திலேயே உலகின் பெரும்பான்மையான மக்கள் இருப்பதற்கு காரணம் என்ன?