Tuesday, January 4, 2011

பாடம் 127: உபாசன யோகம் (பிரம்மசூத்திரம் 3.3.42)

பரமனுடன் ஒன்றி முக்தி பெற விழையும் மக்களுக்கு வழிகாட்ட வழக்கில் இருந்துவரும் பல்வேறு யோகங்களை ஒப்பிட்டு விளக்குவதுடன் உபாசனயோகத்தின் அறிமுகத்தையும் இந்த பாடம் செய்கிறது.

கிரியாயோகம்: புலன்களை கட்டுப்படுத்துதல், வேதத்தை படித்தல், கடவுளிடம் சரணடைதல் ஆகிய மூன்று செயல்களை உள்ளடக்கிய கிரியாயோகம் ஆன்மீக பாதையில் பயணத்தை ஆரம்பிக்க உதவும் முதல் படிகட்டு என்று பதஞ்சலியின் யோகசூத்திர விளக்கத்தில் சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகிறார்.

கர்மயோகம்: மனம், மொழி, மெய்யால் செயல்களை செய்து பரமனை பற்றிய ஞானத்தை பெற மனதை பக்குவபடுத்திக்கொள்ள உதவுவது கர்மயோகம்.

ஞானயோகம்: முறைப்படி வேதாந்தத்தை பயின்று, கற்றதில் எவ்வித சந்தேகமும் இல்லாமல் தெளிவுற்று, பெற்ற ஞானத்தில் நிலைபெறுவது ஞானயோகம்.

பக்தியோகம்: கர்மயோகம் செய்த பின் ஞானயோகம் செய்து முக்தியடையும் முழுப்பாதையையும் குறிப்பது பக்தியோகம். பக்தியோகம் இறைவனை துதிக்கும் சடங்குகளில் தொடங்கி பரமனை முழுதாக அறிந்து கொள்வதில் முடிவடையும்.

அஷ்டாங்கயோகம் அல்லது ராஜயோகம்: வேதத்தின் சாரமான பக்தியோகத்தை கோர்வையாகவும் எட்டுஅங்கங்களாக முறைப்படுத்தியும் யோகசூத்திரம் என்ற நூலில் பதஞ்சலி விளக்கியுள்ளார்.   ஹதயோகம், மந்திரயோகம், தந்திரயோகம், பூர்ணயோகம், காயகல்பயோகம், குண்டலினியோகம் ஆகிய அனைத்தும் இந்த அஷ்டாங்க யோகத்தின் வெவ்வேறு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிற்கால ஆசிரியர்களால் தோற்றுவிக்கப்பட்டவை.

உபாசனயோகம்: கர்மயோகத்தின் ஒருபகுதியான உபாசனயோகம், மனதால் மனதை பண்படுத்த செய்யும் செயல்களை மட்டும் உள்ளடக்கியது. போல் வால்ட் என்ற உயரம் தாண்டும் போட்டியில் இலக்கை நோக்கி ஓடுவது கர்மயோகம். இலக்கை நெருங்கும்பொழுது கோலை ஊன்ற வேண்டிய இடத்தில் மனதை குவிப்பது உபாசனயோகம். கோலை உபயோகித்து தரையிலிருந்து உயரே எழும்புவது ஞானயோகம். கோலையும் விட்டுவிட்டு இலக்கை கடப்பதுபோல் அனைத்து யோகங்களையும் கடந்து பரமனுடன் ஒன்றாவது முக்தி.   

கடவுள்பக்தி உபாசன யோகத்தின் அடிப்படை. பிறவிச்சுழலில் அகப்பட்டு உலகத்தின் இன்பதுன்பங்களில் அலைக்களிக்கப்படும் மானிடர்களுக்கு கடவுள் ஒரு பாய்மரக்கப்பல். அதில் ஏறி அமர்ந்துகொண்டாலும் கடலின் சீற்றத்திலிருந்து முழுதும் தப்ப கப்பலை சரியாக செலுத்தி வீடுபேறை அடையவேண்டும். கடவுளிடம் நம்பிக்கைகொள்வது கப்பலில் ஏறி அமர்வது போல. கடவுளை தெரிந்து கொள்வது கப்பலை செலுத்தி வீடு திரும்புவதற்கு ஒப்பாகும்.

பெரும்பாலான மக்கள் கடவுளை நம்புவதோடு தங்கள் முயற்சியை நிறுத்திக்கொள்கிறார்கள். கடவுள் நம்பிக்கையுடன் உபாசன யோகம் செய்தால் மட்டும் முக்தியடைந்துவிடமுடியாது.

முக்தியடையும் வழி

செயல்கள் செய்து மனதை பக்குவபடுத்திக்கொண்டபின் பரமனை அறிந்து ‘நான் பரமன்’ என்ற ஞானத்தில் நிலைபெறுவது முக்தி. எவ்வித செயல்களும் செய்யாமல் ஞானம் பெறுவது அசாத்யம்.  எனவே முதலில் செயல்கள் செய்து பின் ஞானம் பெற்று அதில் நிலைபெறுவதுதான் முக்தியடைய மக்களுக்கு இருக்கும் ஒரேவழி. எந்த யோகத்தை பின்பற்றினாலும் மனபக்குவம் பெறுவது ஞானம் பெறுவது ஆகிய இரு படிகளை கடந்தால் மட்டுமே முக்தியடைய முடியும்.

உபாசன யோகத்தின் பங்கு

நமது ஆளுமை (personality), நடத்தை மற்றும் செயல்கள் ஆகியவை நம் மனதில் இருக்கும் எண்ணங்களை சார்ந்து இருக்கின்றன. ஒருவன் கோழையா அல்லது வீரனா என்பதை உடல் வலிமையை பொறுத்து முடிவுசெய்வதில்லை. அதே போல் நடப்பவை நல்லவையா தீயவையா என்பதை வெளியுலகம் தீர்மானிப்பதில்லை. அனைத்தும் அவரவர் மனதில் உள்ள எண்ணங்களால் தீர்மானிக்கப்படுகின்றன.

எனவே எண்ணங்களை தூய்மையாகவும் ஆரோக்கியத்துடனும் வைத்திருப்பது அவசியம். சரியான உணவும் திட்டமான உடற்பயிற்சியும் எப்படி உடலை பாதுகாக்க அவசியமோ அதுபோல நம் மன வலிமையை பாதுகாக்க கடவுளை பற்றிய எண்ணம் அவசியம். எப்பொழுதும் புலன்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதிலேயே கவனம் சென்றுகொண்டிருந்தால் மனம் ஆசை, பொறாமை, கோபம் போன்ற தீயகுணங்களின் இருப்பிடமாகத்தான் இருக்கும்.

வெளியுலக தேடல்களை சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்து கடவுள் பற்றிய சிந்தனைகளை வளர்த்து மனதை சுத்தீகரிக்கும் முயற்சிதான் உபாசனயோகம். நாம் என்ன செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறோம் என்பதை பொறுத்துதான் நம் மனதில் எண்ணங்கள் தோன்றுகின்றன. சதா சர்வகாலமும் காதலருடன் நேரிலோ தொலைபேசியிலோ பேசிக்கொண்டிருந்தால் மனதில் தோன்றும் அனைத்து எண்ணங்களும் அவரைபற்றியதாகவே இருக்கும். உலகில் தம்மை சுற்றி நிகழும் நிகழ்வுகள் கூட மனதில் பதியாது. யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லகூட தெரியாது. இதற்கு பதில் இரண்டு வாரங்கள் அலுவலகத்திலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு உண்பது உறங்குவது தவிர மற்ற நேரங்கள் முழுவதையும் பாகவதம், விஷ்ணு புராணம் ஆகியவற்றை கேட்பதில் மட்டும் செலவிட்டால் மனதில்  கடவுள் பற்றிய எண்ணங்களை நிறைந்திருக்க செய்யலாம்.

உலக வாழ்க்கையில் பற்று இருக்கும்வரை நம்மால் உபாசனயோகத்தில் ஈடுபடமுடியாது. வாழ்வில் அடிபட்டு எப்பொழுது நமக்கு புத்திவருகிறதோ அப்பொழுதுதான் கடவுளை தொழவேண்டும் என்ற எண்ணம் வரும். கடவுள்தான் நம் வாழ்வை இன்பகரமாக மாற்ற வல்லவர் என்ற அறிவு மட்டும் நம் எண்ணங்களை மாற்றிவிடாது. உபாசன யோகம் என்ற பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டால்தான் மனதை பக்குவபடுத்தமுடியும்.

உபாசனயோகத்தின் அடிப்படை தேவைகள்

தேவை 1: உலகத்தின் இயலாமை:- உலகத்தில் உள்ள எந்த ஒரு மனிதராலோ அல்லது பொருளாலோ நமக்கு நீடித்த இன்பத்தை தர இயலாது என்பதை புரிந்திருக்க வேண்டும்.

தேவை 2: இறைவனின் மகிமை:- எல்லாம் வல்ல இறைவனை வழிபடுவதன் மூலம் எதையும் தாங்கும் இதயத்தை பெறமுடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.

தேவை 3: உபாசன யோகத்தில் நாட்டம்:- எதற்காக உபாசன யோகம் செய்ய வேண்டும் என்றும் உபாசன யோகம் செய்வதில் ஈடுபாடும் இருக்க வேண்டும்.

தேவை 4: வாழ்க்கை முறையில் சீர்திருத்தம்:- இல்வாழ் பருவத்திலிருந்து விடுபட்டு ஓய்வு நிலைக்கு செல்லும் நிலையில்தான் உபாசனையில் மனம் ஈடுபடும்.

உபாசன யோகத்தின் வகைகள்

வகை 1: இறைவனின் நாமத்தை ஜபிப்பது

வகை 2: செய்யும் செயல்கள் அனைத்தையும் கடவுளுக்கு அர்ப்பணமாக செய்வது

வகை 3: இறைவனின் புகழை உபன்யாசர்கள் சொல்ல கேட்பது

வகை 4: வேத பாராயணம் செய்தல் மற்றும் புராணங்களை படித்தல்

முடிவுரை :

எண்ணங்களின் தரம்தான் வாழ்க்கையின் தரத்தை நிச்சயிக்கின்றன. மனதில் என்ன எண்ணங்கள் தோன்றுகின்றன என்பதை நம்மால் நேரடியாக கட்டுப்படுத்த முடியாது. இந்த மருந்தை சாப்பிடும்பொழுது அண்டங்காக்கையை பற்றி நினைக்காதே என்று மருத்துவர் சொன்னால் அதை நிச்சயமாக யாராலும் பின்பற்ற முடியாது. ஆனால் மனதில் ஏற்படும் எண்ணங்களை செயல்வடிவமாக மாற்றுவதில் நமக்கு முழுசுதந்திரம் உள்ளது. சரியான செயல்களை மட்டும் செய்வதன் மூலம் நம் மனதில் தோன்றும் எண்ணங்களை நம்மால் கட்டுபடுத்த முடியும்.

உபாசன யோகம் செய்வதன் மூலம் கடவுளைபற்றிய தியானத்தில் நம்மை தொடர்ந்து ஈடுபடுத்தி அதனால் நம் மனதில் தோன்றும் எண்ணங்களை சுத்திகரித்துக்கொள்ளலாம். உலகவாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளினால் தொடர்ந்து அலைபாயும் மனதை உபாசனயோகத்தால் சீர் செய்து பரமனைபற்றிய ஞானத்தை பெற தயார் செய்துகொள்ளவேண்டும்.

யோகம் என்ற சொல்லுக்கு ஒன்றாவது என்பது பொருள். உண்மையில் பரமனுடன் ஒன்றாவது என்பது ஒரு செயல் அல்ல. நாம் ஒத்துக்கொண்டாலும் மறுத்தாலும் ‘நான் பரமன்’ என்ற உண்மை மாறாது. இந்த உண்மையை புரிந்து கொள்ள மனபக்குவமும் வேதத்தை முறையாக ஆசிரியரின் துணையுடன் படித்து தெளிதலும் அவசியம். இந்த இரு செயல்கள்தான் வெவ்வேறு யோகங்களாக வழக்கில் போதிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மனிதரும் தங்களுடைய தேவைக்கேற்றபடி ஒரு குறிப்பிட்ட யோகத்தை தேர்ந்தெடுத்து அதில் தேர்ச்சி பெற்றபின் கடைசியாக ஞான யோகத்திற்கு முன்னேறி பின் முக்தியடைய வேண்டும்.

அனைத்து மக்களுக்கும் ஏதாவது ஒரு கட்டத்தில் மனதை ஒருமுகபடுத்தவேண்டிய அவசியம் ஏற்படுவதால் முக்தியடைய முயலும் அனைவருக்கும் உபாசனயோகம் மிக உதவியாக இருக்கும்.

பயிற்சிக்காக :

1. இந்த பாடத்தில் குறிப்பிடபட்ட யோகங்களின் பெயர்களை பட்டியலிடுக.

2. முக்தியடைய நாம் செய்யவேண்டிய யோகங்களை வரிசைபடுத்துக.

3. உபாசன யோகம் என்றால் என்ன?

4. உபாசன யோகம் செய்ய அடிப்படைத்தேவைகள் என்னென்ன?

5. உபாசன யோகத்தின் வகைகள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. ஏதாவது ஒரு யோகத்தை மட்டும் பின்பற்றி முக்தியடைய முடியுமா?

2.உபாசன யோகம் செய்யாமல் முக்தியடைய முடியாதா?

3. உபாசன யோகம் செய்வது எப்படி?