Friday, January 7, 2011

பாடம் 129: காயத்திரி மந்திரம் (பிரம்மசூத்திரம் 3.3.44-52)

நான்கு வேதங்களின் சாரமான காயத்திரி மந்திரத்தை ஆண், பெண், இனம், மதம் என்ற பேதமின்றி அனைவரும் ஜெபிக்கலாம் என்று கூறுவதுடன் இந்த மந்திரத்தினால் ஏற்படும் நன்மைகளையும் இந்த பாடம் விவரிக்கின்றது.

மந்திரம்

மந்திரம் என்ற சொல்லுக்கு மனதை வலுப்படுத்தும் இயந்திரம் என்று பொருள். மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்து அதை பண்படுத்துவதற்கு மந்திரம் அனைவருக்கும் உதவும். அர்த்தம் புரியாமல் கூட மந்திரத்தை மனதுக்குள் ஜெபித்து மனதின் அலைபாயும் தன்மையை கட்டுப்படுத்தமுடியும். பொருள் புரிந்து மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் முக்தியை பெறலாம்.

காயத்திரி மந்திரம்

எவர் இந்த உலகை படைத்து நம்முடைய புத்தியையும் செயல்படுத்துகிறாரோ அவரிடம் எமக்கு முக்தியளிக்கும்படி பிரார்த்திக்கிறோம் என்ற பொருளுடன் கூடிய காயத்திரி மந்திரம், பக்தி யோகம் முழுவதையும் விளக்குகிறது. இந்த மந்திரத்தை ஜெபிப்பவர்கள் மனதூய்மை பெற்று மந்திரத்தின் முழுஅர்த்ததையும் புரிந்து கொண்டு வாழ்வின் இறுதி நோக்கமான முக்தியையும் பெறமுடியும் என்பதாலேயே இதை அனைத்து மந்திரங்களின் தாய் என வேதங்கள் புகழுகின்றன.

காயத்திரி மந்திரத்தின் ஆழ்ந்த பொருள் ‘எந்த பரமன் சச்சிதானந்த ரூபமாக இந்த உலகத்தின் படைப்பிற்கு காரணமாயிருக்கிறதோ அந்த பரமனே ஆத்மா ரூபமாக இருந்து நம் புத்தியை பிரகாசப்படுத்துகிறான்’ என்பதாகும். அதாவது ‘நான் பரமன்’ என்பதுதான் காயத்திரி மந்திரத்தின் உட்கருத்து.

மந்திரத்தின் மகிமை – 1: மனக்கட்டுப்பாடு

மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்துகொள்ள மந்திரம் என்கிற இயந்திரத்தின் துணை மிக அவசியம். ஒரு மந்திரத்தை தொடர்ந்து ஜெபிக்க ஆரம்பித்தால்தான் மனதின் அலைபாயும் தன்மை நமக்கு தெரியவரும். வெளி உலகில் நடக்கும் நிகழ்வுகளை ஐந்து புலன்கள் மூலம் அறிந்து கொள்வதை போல மனதின் நிகழ்வுகளை அறிந்துகொள்ள நமக்கு துணையாய் இருப்பது மந்திரம். மந்திரம் ஜெபிக்கும்பொழுது முதன்முறையாக நமது கவனத்தை உள்நோக்கி திருப்பி எண்ணங்கள் எவ்விதம் உருவாகின்றன என்பதை அறிந்து கொள்வதுடன் நான் என் எண்ணங்களிலிருந்து வேறுபட்டவன்  என்றும் உணரத்துவங்குவோம்.

கயிற்றில் கட்டி நாயை நடத்தி செல்பவர் பெரும்பாலும் நாயின் தேவைகளுக்கு ஏற்ப நிற்பதும் நடப்பதுமாக இருப்பதால் உண்மையில் நாய்தான் எஜமானன். அதுபோல நமது எண்ணங்களின் போக்கில் நாம் போய்கொண்டிருக்கும்வரை நாம் நம் எண்ணங்களின் அடிமையாக இன்பத்திற்கும் துன்பத்திற்குமிடையே அலைகளிக்கபட்டுகொண்டிருப்போம். எண்ணங்களை மந்திரத்தின் மூலம் கட்டுபடுத்தினால்தான் நான் என் மனதிலிருந்து வேறுபட்டவன் என்பதை உணர்ந்து மனதின் எஜமானனாக மாறும் வாய்ப்பு கிடைக்கும்.

மந்திரத்தின் மகிமை – 2: மனஅமைதி

மந்திரம் ஜெபிக்கும்பொழுதுதான் எண்ணங்கள் வந்து போகும் விருந்தினர்கள் என்றும் மனதின் சொந்தக்காரன் நிரந்தரமாக இருக்கும் அமைதியென்றும் நமக்கு தெரியவரும். அமைதியை பெற விருந்தினர்களை விரட்டியடிக்க தேவையில்லை என்ற உண்மையையும் நாம் புரிந்துகொள்வோம். ஏனெனில் எந்த ஒரு எண்ணத்திற்கும் தொடர்ந்து நம் மனதில் குடியிருக்கும் சக்தியில்லை. எனவே வந்து போகும் எண்ணங்களை பொருட்படுத்தாமல் என்றும் அமைதியாக இருக்கலாம்.

கடலில் அலை ஓயாது என்பது தெரிந்தால்தான் அலைகள் வருவது போவது ஆகிய இரண்டையும் சமமாக ஏற்றுக்கொண்டு வந்து போகும் அலைகளை அனுபவிக்க முடியும். மந்திரம் ஜெபிப்பதன் மூலம் எண்ணங்கள் அலைகள் போல வந்து போகும் தன்மை உடையன என்பதை தெரிந்து கொண்டால் எந்த ஒரு எண்ணத்தையும் வரவேற்கவோ வழியனுப்பவோ காத்திருக்காமல் தொடர்ந்து அமைதியுடன் வாழ முடியும்.

மந்திரத்தின் மகிமை – 3: மனவிசாலம்

எந்த ஒரு குறிப்பிட்ட பொருளையும் நினைவுபடுத்தாமல் அதே வேளையில் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் மந்திரம் நம் குறுகிய மனதை விசாலமாக்க உதவுகிறது. என்னுடையவர்கள் என்ற வட்டம் குடும்பம், நண்பர்கள் என்ற குறுகிய பட்டியலுடன் நின்றுவிடாமல் என் ஊரைச்சேர்ந்தவர், என் நாட்டுக்காரர், என் பூமியில் வசிப்பவர், என் பிரபஞ்சத்தின் ஓர் அங்கம் என படைப்பில் உள்ள அனைத்தையும் உள்ளடக்கும் வகையில் பெரிதாக்கப்பட வேண்டும். இதற்கு காயத்திரி மந்திரம் போன்று இறைவனின் விஸ்வரூப தரிசனத்தை நினைவுறுத்தும் அனைத்து மந்திர ஜெபங்களும் உதவும்.

உண்மையில் தனிமனிதன் என்பதே நமது தவறான கற்பனை. நம் கைகள் பல வேலைகளை செய்தாலும் உண்மையில் செயல்களை செய்வது நாமென்று நமக்கு தெரிந்திருப்பதுபோல ஒவ்வொரு உயிரினங்களின் செயல்கள் உண்மையில் ஒரே கடவுளின் செயல்கள் என்று நமக்கு தெரிவதில்லை. தன் கிராமத்தை விட்டு வெளியே செல்லாதவரின் குறுகிய மனப்பான்மை உலகை சுற்றிவந்தால் விரிவடையும். விண்வெளி வீரர்கள் நிலவின் வானத்தில் ஒரு சிறு பந்து போல் சுழலும் பூமியை பார்த்தபின் அதில் கண்ணுக்கு தெரியாத துகள்களாக செயல்படும் மனிதர்கள் அனைவரையும் ஒரே குடும்பமாக பார்க்க தொடங்கினர்.  

நான் வேறு உலகம் வேறு என்ற தவறான எண்ணம் இருக்கும் வரையில்தான் நமக்கு பிரச்சனைகள் இருக்கும். பிரபஞ்சத்திலிருந்து பிரிக்கமுடியாதவன் என்ற உண்மையை மந்திர ஜெபத்தின் மூலம் பழகி மனதை விசாலமாக்கிகொண்டால் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் வெறும் நிகழ்வுகளாக மாறிவிடும்.

மந்திரத்தின் மகிமை – 4: மனஒழுக்கம்

எல்லோரிடமும் அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொள்வது நமக்கு நன்மை பயக்கும் என்ற அறிவு நம்மிடமிருந்தாலும் பழக்கத்தின் காரணமாக அண்டை வீட்டுக்காரரை அவதூறு செய்யாமல் இருக்கமுடிவதில்லை. தவறு செய்துவிட்டு இப்படி செய்திருக்க கூடாது என்று நம்மை நாம் கண்டித்துக்கொள்வதற்கு பதிலாக நல்லொழுக்கம் தரும் மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் மனதை ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம். அன்பு, தயை, இன்சொல், கருணை, திருப்தி, உதவிசெய்தல், தூய்மை போன்ற நல்லொழுக்கங்களில் எது நம்மிடம் குறைவாக இருக்கிறதோ அதை அதிகப்படுத்தும் வகையில் மந்திரத்தை தேர்ந்தெடுத்து தியானம் செய்து பழகவேண்டும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும். எனவே மந்திரஜெபத்தின் மூலம் மனதை அழகுபடுத்தினால் அந்த அழகை நம்மை சுற்றியுள்ளவர்கள் உணர துவங்கி வாழ்வு இனிதாகும். நாமும் உலகை சரியான பார்வையில் பார்ப்போம்.

மந்திரத்தின் மகிமை – 5: மனபக்குவம்

நமது பிரச்சனைகளை தீர்க்க மற்றவர்களை மாற்ற முயற்சிப்பதற்கு பதில் மந்திரஜெபம் மூலம் நம் மனதை மாற்றிக்கொண்டால் பிரச்சனைகளை எளிதாக எதிர்கொள்ளலாம் என்ற மனப்பக்குவம் சிறிதுகாலம் தியானம் செய்து பழகியபின் நமக்கு தெரியவரும். இந்த மனப்பக்குவம் இருந்தால்தான் வேதத்தை முறையாக பயின்று ‘நான் பரமன்’ என்ற காயத்திரி மந்திரத்தின் உட்கருத்தை புரிந்து கொண்டு முக்தியை அடைய முடியும்.

மந்திரத்தின் மகிமை – 6: முக்தி

மந்திரம் ஜெபிப்பதால் மட்டும் முக்திகிடைத்துவிடாது. முறையாக ஆசிரியரிடம் பயின்று நான் பரமன் என்ற காயத்திரி மந்திரத்தின் உட்பொருளை அறிந்து கொண்டபின்தான் முக்தி கிடைக்கும். ஆனால் கிடைத்த முக்தியின் பலனான நிரந்தர இன்பத்துடன் வாழ நான் பரமன் என்ற ஞானத்தில் நிலைபெற வேண்டும். இதற்கு காயத்திரி மந்திர ஜெபம் மிகவும் உதவி செய்யும்.     

முடிவுரை :

மந்திரம் நம் மனதை பண்படுத்தும் இயந்திரம். மந்திரத்தை ஜெபித்து மனதை பண்படுத்தாதவர்களுடைய மனம், பாக்கு மரம் ஏறி பழம் பறிப்பவர்கள் மரத்தை வளைத்து ஒரு மரத்திலிருந்து அடுத்த மரத்திற்கு தாவுவது போல தொடர்ந்து அலைபாய்ந்து கொண்டிருக்கும். அலுவலகத்தில் ஒரு தவறு செய்துவிட்டால் வேலை பறிபோய் விடுவது போலவும், வாடகை கொடுக்காததால் வீட்டை காலிசெய்து தெருவில் நிற்பதுபோலவும், தெரிந்தவர்கள் எல்லோரும் நம்மை எள்ளி நகையாடுவது போலவும் நடக்காததையெல்லாம் கற்பனை செய்து இவையெல்லாம் உண்மையிலேயே நடந்து விட்டால் ஏற்படும் துன்பத்தை தவறு செய்த பத்து நிமிடத்திற்குள் நம்மை நம் மனம் அனுபவிக்கசெய்துவிடும்.

தென்னை மரம் ஏறுபவர்கள் அடுத்த மரத்தில் ஏறுவதற்கு முன் தரையில் இறங்க வேண்டும். அதுபோல மந்திரஜெபம் ஒரு எண்ணத்திலிருந்து அடுத்த எண்ணத்திற்கு செல்வதற்குமுன் நமது இயல்பான அமைதியில் சில நொடிகள் இருக்க பழக்கப்படுத்துகின்றன. எனவே வேண்டாத கற்பனைகளை தவிர்த்து ஆக வேண்டிய காரியத்தில் கவனத்தை செலுத்த மந்திர ஜெபம் நமக்கு உதவும். எண்ணங்களுக்கு ஆதாரமாக இருக்கும் நான் என்றும் அமைதியானவன் என்ற உண்மையை தெரிந்து கொள்ள ஜெபம் நமக்கு உதவும்.

பயிற்சிக்காக :

1. மந்திரம் என்ற சொல்லின் பொருள் என்ன?

2. காயத்திரி மந்திரத்தின் பொருள் என்ன?

3. மந்திரம் ஜெபிப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. தயானந்த சரஸ்வதி அவர்கள் ஜெபம் பற்றி எழுதிய கருத்துக்களை (BMW thinking, listless thinking, noodle thinking, peanut thinking, monkey thinking) படிக்கவும் (Two Talks on Japa Mantra Meditation)

2. மந்திரம் ஜெபிப்பதால் மட்டும் முக்தியடைந்துவிட முடியுமா?

3. முக்தியடைந்தபின் மந்திரம் ஜெபிப்பது அவசியமா?

4. மரமேராமல் மந்திரத்தினால் மாங்காயை பறிக்க முடியுமா?