Wednesday, October 20, 2010

பாடம் 100: ஒன்றான கடவுள் (பிரம்மசூத்திரம் 3.2.38-41)

இரண்டற்ற ஒன்றாக இருக்கும் பரமனை நேரடியாக அறிந்து கொள்ள இயலாதவர்களுக்கு உதவி செய்யும் வகையில் பரமன் மற்றும் உலகம் ஆகிய இரண்டையும் ஒன்றாக சேர்த்து கடவுளாக வேதம் காட்டிக்கொடுக்கிறது. கடவுள் நம்பிக்கையின் நன்மைகளை விவரித்து உண்மையான பக்தர்கள் பரம பதத்தை அடைவார்கள் என்று இந்த பாடம் விளக்குகிறது.

கடவுள் இருக்கின்றானா?

ஆம். நிச்சயம் கடவுள் இருக்கிறான். இந்த உண்மையை யார் வேண்டுமானாலும் தங்கள் அனுபவத்தின் அடிப்படையிலும் உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை உற்று கவனிப்பதன் மூலமும் அறிந்து கொள்ளலாம்.

சின்ன அம்மை அல்லது பெரிய அம்மை போன்ற நோய்கள் ஏற்படுவதன் காரணத்தை அறிந்திராத மக்கள் இவை கடவுளின் தண்டனை என்று நினைத்துக்கொண்டிருந்தனர். அறிவியல் உலகம் இதுபோன்ற தொற்று நோய்களுக்கு கண்ணுக்கு தெரியாத கிருமிகள்(வைரஸ்) தான் காரணம் என்று கண்டுபிடித்ததனால் நோய்களுடன் சேர்ந்து கடவுளும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அதே போல் வெள்ளம், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்கள் கடவுளின் செயலாக கருதப்பட்ட காலம் மாறி இவையனைத்திற்கும் அறிவியல் உலகம் சரியான காரணங்களை கண்டுபிடித்துவிட்டதாக பரவலாக நம்பப்படுவதால் கடவுள் நம்பிக்கை தற்காலத்தில் வெகுவாக குறைந்து விட்டது.

ஆயினும் ஏன் என்ற கேள்விக்கு ஓரிரு படிகள் வரைதான் அறிவியல் விடை கண்டுபிடித்திருக்கிறது என்பதை பலர் அறிவதில்லை. எந்த ஒரு துறையிலும் அறிய வேண்டியதனைத்தையும் அறிந்து கொண்டுவிட்டோம் என்று யாரும் இதுவரை கூறவில்லை. கூறவும் முடியாது.

ஒரு சில தொற்று நோய்களை ஒழித்து விட்டதால் நோய்கள் எதுவும் உலகில் இல்லை என்ற நிலை இன்னும் வரவில்லை. வரவும் வராது. ஒரு நோயை ஒழிப்பதற்குள் ஒன்பது புதுவகையான நோய்கள் தோன்றுகின்றன. இந்த நோய்க்கு இது காரணம் என்று மட்டும் பதில் கண்டுபிடித்து பயனில்லை. அந்த காரணத்திற்கு காரணம் என்ன என்று தொடர்ந்து கேள்விகள் கேட்டால் முடிவில் கடவுள் என்ற பதில்தான் கிடைக்கும்.

இதை நம் அனுபவத்திலிருந்தும் அறிந்து கொள்ளலாம். நமது எந்த ஒரு சாதனைக்கோ சோதனைக்கோ அடிப்படை காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் கடவுள் இருக்கிறான் என்பது தெளிவாக தெரியும்.

தற்செயல் என்று நாம் நினைப்பது உண்மையில் கடவுளின் செயலே.

கடவுளின் செயல்

கடவுள்தான் அனைத்து நிகழ்வுகளுக்கும் அடிப்படை காரணம் என்றாலும் கடவுள் தான்தோன்றித்தனமாக செயல்படுவதில்லை. ஒவ்வொரு மனிதனின் செயல்களை சரியாக சீர்தூக்கி பார்த்து அதற்கேற்ற பலனை கடவுள் முறையாக அவனிடம் சேர்ப்பிக்கிறான்.

ருவன் மற்றவனை அடித்து காயபடுத்தினால் அடிபட்டவனின் வருத்தத்திற்கு அடித்தவன் காரணமல்ல. அவரவர்களின் கர்மபலத்தின் காரணமாக அவரவர்களுக்கு இன்பமோ துன்பமோ வந்து சேர்கிறது. அடித்தவனை ஒரு ஆயுதமாக கொண்டு அடிபட்டவனுக்கு சேரவேண்டிய துன்பத்தை கொடுத்தது ஆண்டவன்தான். அடித்தவன் தன் செயலுக்கு ஏற்ற தண்டனையை நிச்சயம் பெறுவான். ஆண்டவன்தானே அவனை தவறான செயலை செய்ய தூண்டியது, பின் அவனுக்கேன் தண்டனை என்பது தவறான கேள்வி. ஏனெனில் கடவுள் யார் கனவிலும் வந்து நீ போய் அவனை அடிஎன்று உபதேசம் செய்வதில்லை. ஒவ்வொருவரும் தங்களது விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் சுயசிந்தனையோடு மட்டுமே செயலாற்றுகிறார்கள். இந்த செயல்பாடுகள் மூலம் எல்லோருக்கும் வந்து சேரவேண்டிய இன்ப துன்பங்களை சரியாக கொண்டு சேர்க்கும் அளவில்லா சக்தி வாய்ந்தவன் இறைவன்.

ஒரு கொசுவை நாம் அடித்தால் அடுத்த பிறவியில் நாம் கொசுவாக பிறந்து மனிதனாக இருக்கும் அதே கொசுவால் கொல்லப்படுவோம் என்பது முற்றிலும் தவறு. கடவுள் இதுபோல் செயல்படுவதில்லை. நாம் கொசுவை கொன்ற குற்றத்திற்கு உண்டான தண்டனையை கடவுள் வேறு யார் மூலமாகவோ அல்லது தற்செயலாகவோ நம்மிடம் சேர்ப்பிப்பார்.

அனைத்தும் தொடர்புடையவை

இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் போன்ற அனைத்து உயிரினங்களும் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதுடன் உயிரற்ற ஜடப்பொருள்களும் கூட பிரபஞ்சத்தின் இயக்கத்தின் ஒருபகுதியாக தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன.

வேகமாக ஓடுபவனின் உடலில் உள்ள ஒவ்வொரு அங்கமும் ஓட்டத்தில் பங்கேற்பது போல பிரபஞ்சத்தின் ஓயாத இயக்கத்தில் அனைத்து உயிரினங்களும் ஜடப்பொருள்களும் பங்கேற்கின்றன. ஓடுபவனை ஒரு தனி மனிதன் என்று குறிப்பிடுவது போல் தொடர்ந்து இயங்கும் இந்த பிரபஞ்சத்தை இறைவன் என்று இனங்காண வேண்டும். ஓடும் மனிதனின் உடலோ மனமோ மட்டும் ஓட்டத்திற்கு காரணமல்ல. அவனுக்கு உயிர் இருந்தால்தான் அவனால் இயங்கமுடியும். உயிர் மட்டும் இருந்தால் ஓட முடியாது. வலுவான உடலும் மனமும் ஓட்டத்திற்கு அவசியம். அது போல இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு அதில் உள்ள அனைத்து ஜடப்பொருள்களும் அவற்றின் ஆதாரமான பரமன் ஆகிய இரண்டும் தேவை. இந்த இரண்டையும் சேர்த்து பார்த்தால் இறைவன் நம் கண்ணுக்கு தென்படுவான்.

பில்லியர்ட்ஸ் டேபிள் மேல் பந்துகள் ஒன்றோடு ஒன்று மோதுவதற்கு ஆடுபவனே காரணம். அது போல் உலகம் எனும் களத்தில் உயிரினங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளும் தொடர்ந்த இயக்கத்திற்கு கடவுள் மட்டுமே காரணம். ஒரு பந்து குழிக்குள் விழுவதற்கு காரணம் அதை மற்றோன்று தள்ளி விட்டது என்பது போன்ற ஆராய்ச்சி வீண். அனைத்து இயக்கத்திற்கும் ஒரே காரணம் கடவுள். 

இறை நம்பிக்கை

இவ்வாறு கண்ணால் காணக்கூடிய விளைவுகளிலிருந்து இறைவனின் இருப்பை அறிபவர்கள் அதிகம் இருப்பதால்தான் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே கடவுள் இல்லை என்று சொல்பவர்களை விட இவ்வுலகில் அதிகம். இறை நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்பவர்களுக்கு பின்வரும் பலன்கள் ஏற்படுகின்றன.

1. சுமைதாங்கி: தலையில் பாரத்தை தூக்கிகொண்டு நடப்பவர்களின் சுமையை சிறிது நேரத்திற்கு சுமக்கும் பாதையோரங்களில் அமைக்கபட்ட சுமைதாங்கி போல் வாழ்க்கையின் கஷ்டங்களை கோவிலுக்குபோய் இறைவன் மேல் இறக்கி வைக்கும் வசதி கடவுள் நம்பிக்கையுள்ளவர்களுக்கே சாத்தியம். 

2. நடப்பது நன்மைக்கே: இறைவன் நம் வாழ்வுக்கு பொறுப்பு என்று அறிந்தவர்கள் இது ஏன் இப்படி நடந்தது என்று நொந்து கொள்ளாமல் எல்லாம் அவன் செயல் என்று நிம்மதியுடன் வாழ்வார்கள்.

3. நன்னடத்தை: தர்மமாக வாழ்வது இன்பமாக வாழ்வதற்கு அடிப்படை தேவை. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே அதர்மத்தை தவிர்த்து தர்மமாக வாழ முயல்வார்கள்.

4. மனத்திண்மை: வாழ்வில் நிகழும் இன்பதுன்பங்களுக்கு இறைவனே காரணம் என்றிருப்போர்கள் முதலில் எனக்கு ஏற்படும் துன்பங்களிலிருந்து என்னை காப்பாற்று என்று பிரார்த்திக்க ஆரம்பித்தாலும் விரைவிலேயே எந்த துன்பம் வந்தாலும் அதை எதிர்கொண்டு நீக்கும் மனத்திண்மையை கடவுளிடம் கேட்டுப்பெறுவார்கள்.

5. மனப்பக்குவம்: நான், எனது, என் உறவினர்கள் என்ற குறுகிய வட்டத்திலிருந்து   படிப்படியாக உலகம் என் குடும்பம்என பரந்த மனப்பான்மையுடையவர்களாவர்.

ஆசை பட்டவரை அறிதல்

இறைவனை முழுதும் அறிந்து கொள்ள தேவையான மனப்பக்குவத்தை நமக்கு தருவது இறைநம்பிக்கை. கணித பாடங்களில் வரும் x ஒரு எண் அல்ல, அது ஒரு எழுத்து என்று விதண்டாவாதம் செய்யாமல் அதை எண்ணாக ஏற்றுக்கொண்டவர்களாலேயே கேள்வியின் சரியான பதிலை கண்டுபிடிக்க முடியும். அது போலவே இருக்கும் உலகத்தை பார்த்து இல்லாத பரமனை அறிவது கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும்.

பரமன் யார், நான் யார் போன்ற கடினமான கேள்விகளை கேட்பதை விடுத்து கடவுள் நம்பிக்கையுடன் வாழ்க்கையை நடத்துபவர்கள் விரைவில் மனப்பக்குவம் பெற்று கடவுள் யார் என்பதை அறிவதன் மூலம் அனைத்து கேள்விகளுக்கும் விடையை அறிந்து குறையாத இன்பத்தை அடைவார்கள்.

இதுபோன்ற எந்த கேள்விகளும் அனாவசியம், இருப்பது இந்த உலகம் ஒன்றுதான் என்று உலகில் உள்ள பொருள்களின் மீது மட்டும் ஆசைவைத்து உலகை அறிந்து கொள்ள மட்டும் முயன்று கொண்டிருந்தால் கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு என்ற நிலை மாறவே மாறாது. ஆகவே உலகை தன் விருப்பபடி மாற்றி என்றும் இன்பமாக இருக்கலாம் என்பது இறைநம்பிக்கையில்லாதவர்களுடைய நிறைவேறா பகல் கனவாகும்.

உலக ஆசைகளில் மூழ்கி இருப்பவர்களுக்கு உதவி செய்யவே வேதம் கடவுளை அறிமுகபடுத்தி பல்வேறு வழிபாட்டு முறைகளை விவரித்துள்ளது. மேலும் பல பண்டிகைகளை கொண்டாட தூண்டி வாழ்வின் ஏற்ற இறக்கங்களை சுட்டிகாட்டுகிறது. இதுபோல் கடவுள் இருக்கிறார் என்று அடிக்கடி மக்களுக்கு நினைவு படுத்தி அவர்களுக்கு உலக வாழ்வில் இன்பமாக வாழ கடவுள் நம்பிக்கை அவசியம் என்ற உண்மையை படிப்படியாக போதிக்கிறது. தொடக்கத்தில் அவ்வப்பொழுது கடவுளிடம் உதவி பெற்று பின்  கடவுளை முழுதாக அறியும் ஆசை கொள்பவர்களுக்கு எப்பொழுதும் ஆனந்தமாக வாழும் வழி கைகூடும்.

முடிவுரை :

பக்தியோகம், கர்மயோகம், ஞானயோகம் ஆகிய மூன்று யோகங்களை முண்டக உபநிஷத் விவரிக்கிறது. முக்தியை அடைய இந்த மூன்றுயோகங்களும் வெவ்வேறு பாதைகளை காண்பிக்கின்றன என்பது தவறான கருத்து. முக்தியை அடைய ஒரே பாதைதான். அது பக்தியோகம் மட்டும்தான். கடவுளை சரணடைந்து அனைத்து செயல்களையும் அவனுக்காகவே செய்து அவனை அறிந்து கொள்பவர்கள் முக்தியடைவார்கள் என்பதுதான் பக்தியோகம் காட்டும் பாதை.

கர்மயோகம் என்பது பக்தியோகத்தின் முதல் படி. நாம் செய்யவேண்டிய செயல்களை கடவுளுக்கு அர்ப்பணமாக செய்து நமது செயல்களின் பலனை கடவுள் கொடுக்கும் பிரசாதமாக ஏற்றுக்கொள்வதே கர்மயோகம். பிரம்மசூத்திரத்தின் மூன்றாவது அத்தியாயத்தின் மூன்றாவது பகுதியில் கர்மயோகத்தை பற்றிய முழுவிளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஞானயோகம் என்பது பக்தியோகத்தின் இறுதி படி. கர்மயோகம் செய்து மனப்பக்குவம் பெற்ற பின் குருவின் துணையுடன் வேதத்தை முறையாக படித்து கடவுள் யார் என்பதை முழுவதும் அறிந்து கொள்வது ஞானயோகம். பிரம்மசூத்திரத்தின் மூன்றாவது அத்தியாயத்தின் நான்காவது பகுதியில் ஞானயோகத்தை பற்றிய முழுவிளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

வேதத்தின் முதல் பகுதி கர்மயோகம். வேதத்தின் இறுதிப்பகுதி (வேதாந்தம்) ஞானயோகம். ஆக முக்தி அடைய வேதம் காட்டும் பாதையின் பெயர்தான் பக்தியோகம்.
பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது. வ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகள் கொண்டது. உலகத்தில் உள்ள பொருள்களின் மேல் உள்ள ஆசையை துறந்து கடவுள் மேல் ஆசை வைக்க வேண்டும் என்ற கருத்துடன் மூன்றாவது அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி இத்துடன் முற்று பெறுகிறது.

பயிற்சிக்காக :

1. வேதம் கடவுளை மனிதனுக்கு அறிமுக படுத்தும் காரணம் என்ன?

2.கடவுள் இருக்கிறான் என்பதை நிரூபிக்கவும்.

3.வாழ்வில் நமக்கு ஏற்படும் துன்பங்களுக்கு யார் காரணம்?

4.இறைநம்பிக்கையால் ஏற்படும் பலன்கள் யாவை?

5.வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று யோகங்கள் யாவை?

6. அந்த மூன்று யோகங்களுக்கிடையே உள்ள தொடர்பை விளக்குக.

சுயசிந்தனைக்காக :

1. வழக்கில் இருந்து வரும் அஷ்டாங்க யோகம், ராஜயோகம், உபாசன யோகம் போன்றவை பற்றி வேதத்தில் எவ்வித குறிப்பும் இல்லையா?

2.ஆண்டாள், மீரா, துளசிதாஸ் போன்றவர்கள் முறையாக வேதம் பயிலாமலேயே முக்தியடையவில்லையா?

3.எல்லாம் கடவுள் செயல் என்றால் நாம் கர்மயோகம் செய்யவேண்டிய அவசியமென்ன?

Monday, October 18, 2010

பாடம் 099: இரண்டற்ற ஒன்று (பிரம்மசூத்திரம் 3.2.31-37)

நாம் அனுபவிக்கும் உலகத்தை இல்லையென்றும் நம் கண்ணுக்கு தெரியாத பரமன் மட்டும்தான் இரண்டற்ற ஒன்றாக இருக்கிறான் என்ற உண்மையையும் அறிந்து கொண்டால்தான் மனிதர்களின் இயற்கை சுபாவமான அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆவல் அடங்கும் என்ற கருத்தை இந்த பாடம் தருகிறது.

அறியும் ஆவல்

குழந்தைப்பருவத்திலிருந்து சுற்றியுள்ள உலகத்தை முழுதும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அனைத்து மனிதர்களிடமும் இருக்கிறது. இந்த பிரபஞ்சம் எப்பொழுது தோன்றியது, அதன் எல்லைக்கு பின் என்ன இருக்கிறது, இது தோன்ற காரணம் என்ன என்பது போன்ற கேள்விகள் எல்லோருடைய மனதிலும் ஒரு மூலையில் இருந்து கொண்டே இருக்கின்றன.

இந்த அறியும் ஆவலுக்கு அடிப்படைகாரணம் நாம் அறிவுருவமாக இருப்பதுதான். எப்படி எப்பொழுதும் ஆனந்தமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறோமோ அது போலவே நிரந்தரமான அமைதியுடன் இருக்க அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஏக்கமும் நம் அனைவரிடமும் இயற்கையாகவே இருக்கிறது.

அறிவின்மையும் ஆனந்தமும்

அனைத்தையும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் நம் ஆனந்தத்திற்கு ஒருவகையில் தடையாய் இருப்பதுபோல் தெரிகிறது. ஒன்றும் அறியாதவர்களிடம் ஆசை அதிகமிருக்காது. அறிவு அதிகரிக்க அதிகரிக்க நமது ஆசைகளும் அதிகரிக்கின்றன. இருப்பது போதாது, இன்னும் வேண்டும் என்ற எண்ணங்கள் நம்மை வெகு வேகமாக செயல்படவைக்கின்றன. அப்பாவிகளாக திரியும் ஒன்றும் அறியா நாடோடிகளிடம் இருக்கும் நிம்மதியும் ஆனந்தமும் அதிகம் படித்தவர்களிடம் இருப்பதாக தெரிவதில்லை.  

அறிவின் அவசியம்

அறியாமை மேலானது என்று ஒரு வாதத்துக்காக ஏற்றுக்கொண்டால் கூட நம்மால் அறியாமையில் தொடர்ந்து இருக்க முடியாது. அறிவு என்பது நமது இயற்கையான தன்மை என்பதால் நம்மையறியாமல் தொடர்ந்து நமது அறிவு வளர்ந்து கொண்டேயிருக்கும். இதனால் நமது ஆசைகள் அதிகரித்து ஆனந்தத்தை அடைவதற்கு அதிக முயற்சிகள் செய்ய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தினாலும் படிப்படியாக வளரும் அறிவு விரைவில் குறையாத ஆனந்தத்தையும் நிலையான அமைதியையும் நமக்கு பெற்றுதரும்.  அறிவில் குறைவானவர்களின் தேவைகளும் குறைவாக இருப்பதால் அவர்கள் நிம்மதியாக இருப்பதாக தோன்றினாலும் அவர்கள் வாழ்வு இன்பமும் துன்பமும் கொண்ட கலவையாக இருக்குமே தவிர என்றும் குறையாத ஆனந்தத்தை அவர்கள் அடையவே மாட்டார்கள். எனவே ஆரம்பத்தில் அவர்களைவிட அதிக கஷ்டப்படுவது போல் தோன்றினாலும் முடிவில் வெற்றி பெற அறிவு மிக அவசியம்.

அறிவு என்றால் என்ன?

அறியும் அறிவு அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது என்றாலும் அறிகிறோம் என்று அறியும் அறிவு மனித குலத்திற்கு மட்டுமே சொந்தமானது. எனவேதான் அறிவை அடைவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அறிவு என்றால் என்ன என்ற ஆராய்ச்சியையும் நம்மால் செய்ய முடிகிறது.

சுற்றியுள்ள உலகத்தின் நிகழ்வுகள் ஐந்து புலன்கள் மூலம் எண்ணங்களாக மனதில் நுழைகின்றன. இந்த எண்ணங்களை நமக்கு உபயோகமாக இருக்கும் வகையில் முறைபடுத்தி நினைவு வைத்துக்கொள்ளும் திறன்தான் அறிவு. அதிகமாக செயல்பட்டு பல்வேறு உலக அனுபவங்களை பெறுவதன் மூலமும் மற்றவர்களின் அனுபவங்களை படிப்பதன் மூலமும் யார் அதிகமான எண்ணங்களை  மனதில் சேர்த்து வாழ்வை இன்பமாக மாற்ற முயல்கிறார்களோ அவர்கள் அறிவாளிகள். அறிவு எப்பொழுதும் அறிபவனைச்சார்ந்து மட்டுமே இருக்கும். எண்ணங்கள்தான் அறிவு என்பதால் அறியாத அறிவு என்று ஒன்றும் கிடையாது.

எண்ணங்கள் என்றால் என்ன?

எண்ணங்கள் என்பவை நாம் வசிக்கும் உலகின் புகைப்படம். ஒவ்வொரு மனிதனும் தனது அனுபவங்களின் அடிப்படையில் எண்ணங்களை வெவ்வேறு முறையில் சேகரித்து முறைபடுத்தி அறிவாக மாற்றிவைத்துள்ளான். எனவே அறிவு என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடும். பெரும்பான்மை மக்களுடைய அறிவு சரியான அறிவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எது சரியான அறிவு என்பது அதன் பயன்பாட்டை பொறுத்து மட்டுமே தீர்மானிக்கபட வேண்டும். வாழ்வை ஆனந்தமயமாகவும் சுகமானதாகவும் மாற்றிக்கொள்வது மட்டுமே அறிவின் பயன்.
    
இன்டர்நெட் போன்ற ஊடங்கங்கள் அனைத்து மனிதர்களின் எண்ணங்களை பதிவு செய்து எப்பொழுது வேண்டுமானாலும் யார்வேண்டுமானாலும் அவற்றை அறிந்து கொள்ள வசதி செய்து கொடுத்திருப்பதால் தனிமனிதன் தனக்கு வேண்டிய அறிவை பெறுவது எப்படி என்ற அளவுக்கு அறிவை அடைந்தால் மட்டும் போதுமானது. எல்லாவற்றையும் எண்ணங்களாக மாற்றி மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இப்பொழுது இல்லை.

அறிவும் ஆனந்தமும்

அறிவு அதிகமாக அதிகமாக ஆனந்தத்தின் அளவு அதிகமாகிறது. ஆனால் அது போதவில்லை மேலும் வேண்டும் என்ற வேட்கையும் அதிகமாகிறது. இந்த வேட்கை சாதாரண மக்களிடம் குறைவாக இருப்பதனால் அவர்கள் அதிக நிம்மதியுடன் இருப்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுகிறது.

அறிவை உபயோகபடுத்தி பணம் சம்பாதித்து சுற்றியிருக்கும் உலகை தன் ஆசைக்கேற்றவாறு அறிவாளி மாற்றிக்கொள்கிறான். போதும் என்ற மனம் இல்லாத ஒரே காரணத்தால்தான் மென்மேலும் அறிவை பெருக்கி பணம் சம்பாதிக்கிறான். எனவே போதும் என்ற மனம்தான் நிம்மதியை தரும் என்று கூறுவது வறட்டு உபதேசம். எது போதுமான அளவு? ஒருவேளை சாப்பிடுவதே ஆரோக்கியமாக வாழ போதுமெனினும் நாம் அதனுடன் நிறுத்திக்கொள்வதில்லை.

சிறிதளவுகூட துன்பபடாமல் எப்பொழுதும் இன்பமாக இருப்பதுதான் போதிய அளவு. இந்த போதிய அளவை அடையும் வரை அனைவரும் தொடர்ந்து முயன்று அறிவைபெற்று அதனால் பொருளை ஈட்டி உலகத்தில் இன்பத்தை தொடர்ந்து தேடிக்கொண்டுதான் இருப்பார்கள். இதை மாற்றவே முடியாது. போதும் என்ற மனது முக்தியடைந்த பின்தான் ஏற்படும்.

அறிவும் ஆசையும்

ஒரு பொருளை பற்றிய அறிவு வரும் வரை அதன் மேல் ஆசை ஏற்பட வாய்ப்பில்லை. ஆசை ஏற்பட்டபின் அதை நிறைவேற்ற பல நாட்கள் முயற்சி செய்து அது நிறைவேறியதும் சில மணி நேரம் இன்பமடைகிறோம். பட்டம் பெறவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற நான்கு வருடம் கஷ்டபட்டால் அதனால் கிடைக்கும் இன்பம் ஓரிரு மாதம் கூட நீடிப்பதில்லை.  எனவே வாழ்வில் இன்பத்தை விட துன்பம்தான் அதிகம் என்று தோன்றுகிறது.

பசியோடு இருக்கும் நேரம் பசியில்லாமல் இருக்கும் நேரத்தைவிட மிகவும் குறைவு என்றாலும் அந்த நேரம்தான் மனதில் மேலோங்கி இருக்கிறது.  இதற்கு காரணம் நமது எண்ணங்கள்.

நம்மிடம் இல்லாத பொருள்களை பற்றிய எண்ணம்தான் நம் மனதில் மேலோங்கி இருக்கும். இருக்கும் பொருள்களை பற்றி எண்ணுவதில்லை. உடன் இருக்கும் மனைவியை பற்றிய எண்ணத்தைவிட அடுத்தவீட்டுப்பெண் எப்பொழுது கண்ணில் தென்படுவாள் என்ற எண்ணம்தான் அடிக்கடி மனதை ஆக்ரமிக்கும். இல்லாத பொருள் மேல் ஆசைபட்டு அதை இருக்கும் பொருளாக மாற்றியவுடன் அதை பற்றிய எண்ணங்கள் மறைந்து விடும். காதலிக்கும்பொழுது எப்பொழுதும் இருக்கும் காதலரை பற்றிய எண்ணம் கல்யாணம் ஆனவுடன் எப்பொழுதாவது கூட வருவதில்லை. கணவர்அலுவலக வேலையாக வெளியூர் சென்றால் மட்டும் அவரை பற்றிய எண்ணங்கள் மனதில் அவ்வப்பொழுது தோன்றும். இது இயற்கை. எனவே எண்ணங்கள் நமது நிம்மதியை குலைக்கின்றன என்பது தவறான அறிவு.

இல்லாத பொருள்களை பற்றிய எண்ணங்கள்தான் மனதில் பிரபலமாக இருக்கும். இந்த எண்ணங்கள் அந்த பொருளை அடைய நம்மை செயல் செய்ய தூண்டும். செயல்களில் ஈடுபடும்பொழுது அந்த பொருள்களை பற்றிய எண்ணங்கள் அதிகமாகி அடங்காத ஆவலாக மாறும். நாம் ஆசை பட்ட பொருள்களை அடைய ஏதேனும் தடை ஏற்பட்டால் இந்த எண்ணங்கள் கோபமாகவோ வருத்தமாகவோ மாறும். நமது இயல்பான ஆனந்தத்திலிருந்து நாம் வெகு தூரம் சென்றுவிடுவோம்.

வெளியூர் சென்ற கணவர் திரும்பி வருவேன் என்று சொன்ன  நாளில் அவரை வரவேற்க கொஞ்சம் ஆவல் இருக்கும். அன்று வராமல் ஏமாற்றம் ஏற்பட்டால் அந்த ஏக்கம் ஆவலை அதிகபடுத்தும். அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏன் வரவில்லை என்று கேட்கும்பொழுது அவர் சுவாரஸ்யமில்லாமல் பதில் சொன்னால் கோபம் ஏற்படும். அவருக்கு ஏதாவது விபத்து என்று கேள்விபட்டால் அவர் உயிருடன் திரும்பினால் போதும் என கடவுளை பிரார்த்திப்போம். அவர் திரும்பி வந்தவுடன் ஏற்படும் இன்பம் ஒரு சில மணிநேரங்களில் மறைந்து விட்டு பழயபடி நம்மிடம் இல்லாத நகையை பற்றிய ஏக்கம் மீண்டும் நமது மனதில் குடியேறிவிடும். இதுபோல் தொடர்ந்து அறிவு ஆசையாகி பெரும்பான்மையான நேரம் மனதை பசியுடன் வைத்திருப்பதனால் நம் இயற்கை சொரூபமான ஆனந்தத்தை அனுபவிக்கும் நேரம் மிக குறைவாக தோன்றுகிறது. எண்ணங்களின் இந்த தன்மையை மாற்ற முடியாது.

அறிவும் ஆனந்தமும் முரண்பாடற்றவை

அறிவுஆசைதுன்பத்துடன் வெகு காலம் செயல்ஆசை நிறைவேறியதால் சிறிது நேரம் ஆனந்தம்செயல் செய்ததால் அதிக அறிவுஅதிக ஆசை.  இப்படி அறிவு, ஆசை, செயல்கள்,ஆனந்தம் இவை நான்கும் தொடர் வண்டி போல் ஒன்றை ஒன்று இழுத்துக்கொண்டிருப்பதே தனி மனிதனின் வளர்ச்சிக்கும் மனித குலத்தின் முன்னேற்றத்திற்கும் அடிப்படை காரணம். எனவே அறிவும் ஆனந்தமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல. அதிக ஆனந்தத்தை தேடும் இந்த முயற்சி நாம் முக்தியடைந்த பின்னரே நிற்கும்.

முக்தி என்றால் என்ன?

என்றும் குறையாத ஆனந்தத்துடன் இருப்பதே முக்தி. ஆனால் இந்த நிலையை அடைய இனி அறிந்து கொள்வதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையை அடைய வேண்டும். எல்லாவற்றையும் அறிந்து கொள்வது என்றால் இந்த பிரபஞ்சத்தை பற்றிய முழு அறிவு ஆகும். வேதம் இந்த அறிவை நமக்கு வழங்குகிறது. 

மூன்று கேள்விகள்

பிரபஞ்சம் எப்பொழுது தோன்றியது? காலம் என்பது தோற்றத்தின் ஒரு பகுதி. எனவே இது தவறான கேள்வி. மலடியின் மகனுடைய பெயர் என்ன என்று கேட்டால் கேள்வியில் தவறு இருக்கிறது என்பதுதான் பதில்.

பிரபஞ்சத்தின் எல்லை எவ்வளவு தூரம்? அதன் அளவு என்ன? தூரம், அளவு ஆகியவை வெளி(space)ஐ குறிக்கின்றன. காலமும் வெளியும் (time and space) ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்கமுடியாத ஒரே தத்துவம். இதுவும் தோற்றத்தின் ஒரு பகுதி என்பதால் இது தவறான கேள்வி.  வானத்தில் பூத்த மலரின் வண்ணம் என்ன என்று கேட்டால் கேள்வியில் தவறு இருக்கிறது என்பதுதான் பதில்.

பிரபஞ்சம் எப்படி தோன்றியது? தோற்றம் மற்றும் மறைவு ஆகிய இரண்டும் மாற்றத்தின் ஒரு பகுதி. வட்டமான பாதை எங்கு தொடங்கி எங்கு முடிகிறது என்று கேட்டால் கேள்வியில் தவறு இருக்கிறது என்பதுதான் பதில்.   

தீர்க்கமான அறிவு இருந்தால் இந்த கேள்விகளுக்கு பதிலை அறிய முடியாது என்ற அறிவு நமக்கு கிடைக்கும். ஜென் மதகுரு ஒருவர் ஒரு கையை தட்டினால் ஏற்படும் ஓசை எப்படி இருக்கும் என்று கண்டுபிடுத்து வருமாறு சீடர்களிடம் கூறினார். பதில் கூற முயன்ற அத்தனை சீடர்களையும் அவர்கள் பதில் சொல்ல ஆரம்பிப்பதற்கு முன்பே பளார் என்று கன்னத்தில் அடித்தார். பதில் சொல்ல முடியாது என்பதை அறிந்தவன் மட்டும் எந்த பதிலும் சொல்ல முயலவில்லை.

முடிவுரை :

மாறும் உலகத்தில் உள்ள பொருள்கள் மீதும் மனிதர்கள் மீதும் ஆசைகொள்வது முதல் படி. இது போன்ற உலக ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள செயல்களில் ஈடுபடுவது இரண்டாவது படி. செயல்கள் மூலம் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டு பரமனை அறிந்து கொள்ள ஆசை படுவது மூன்றாவது படி.

பரமன் நீதான் எனும் வேதத்தின் கருத்தை முறையாக ஆசிரியரிடம் பயின்றால் இவ்வுலகம் மாயை என்று புரியும். ஆகவே இருப்பதுபோல் தோற்றமளிக்கும் உலகம் எப்பொழுது தோன்றியது அல்லது ஏன் தோன்றியது போன்ற கேள்விகள் அனாவசியம் என்று புரியும். மாயையை புரிந்து கொள்ள முடியாது என்பதை முறையாக பயின்று புரிந்து கொண்டால் பின் நம் அறியும் ஆவல் முற்றிலும் அகன்று விடும்.

கனவில் நிகழும் ஒரு நிகழ்ச்சியை ஒரு காகிதத்தில் எழுதிவைத்துக்கொண்டு இது ஏன் இப்படி நடந்தது என்று யாரும் ஆராய்ச்சி நடத்துவதில்லை. ஏதோ கனவில் அது மாதிரி நடந்தது, அவ்வளவுதான். ஏன், எதற்கு, எப்படி போன்ற கேள்விகளால் ஒரு பயனும் இல்லை. அது போலவே நாம் வாழும் உலகும் மாயை என்று அறிந்து கொண்ட பின் வேறு எதையும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

எனவே இருப்பது இரண்டற்ற ஒன்றான நான் மட்டுமே. என் உடல் மனம் உள்ளிட்ட உலகம் மாறிக்கொண்டிருக்கும் மாயை. நான் மாறா பரமன். இந்த உண்மையை புரிந்து கொள்வதே நமது முடிவான ஆசையாக இருக்கவேண்டும்.

பயிற்சிக்காக :

1. அறியும் ஆவல் மனிதர்களிடம் இருப்பதற்கு காரணம் என்ன?

2. அறிவின்மையும் ஆனந்தமும் என்ற தலைப்பில் சொல்லப்பட்ட கருத்து என்ன?

3. அறிவு என்றால் என்ன?

4. எண்ணங்கள் என்றால் என்ன?

5. அறிவின் அவசியம் யாது?

6. முக்தி என்றால் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. பிரபஞ்சத்தை பற்றிய கேள்விகளுக்கு பதிலை அறிந்து கொள்ள முடியாது என்றால் வேதத்தை படித்து என்ன பயன்?

2.நான் மட்டும்தான் இருக்கிறேன் என்றால் உலகம் என் கற்பனையா?

3. முக்தியடைய அறிவு மட்டும் இருந்தால் போதுமா, கடவுள் அவசியமில்லையா?


Thursday, October 14, 2010

பாடம் 098: நான் அவனில்லை (பிரம்மசூத்திரம் 3.2.22-30)

பிரஹதாரண்யக உபநிஷத் மந்திரம் ஒன்று பரமன் ஒன்றாகவும் பலவாகவும், அருவமாகவும் உருவமாகவும், உண்மையாகவும் பொய்யாகவும், வரையரைக்கு உட்பட்டவனாகவும் அப்பாற்பட்டவனாகவும் ஒரே சமயத்தில் இருப்பதாக கூறுவதன் காரணத்தை விளக்கி நான் யார்என்ற கேள்விக்கு நாம் சாதாரணமாக கொடுக்கும் தவறான பதிலகளை இந்த பாடம் சுட்டிக்காட்டுகிறது.

அசலும் நகலும்

திரைப்படத்தில் ஒரு நடிகன் பல வேடங்களில் நடிப்பது போல் வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு பாத்திரங்களை ஏற்று நடித்துக்கொண்டிருக்கிறோம். தான் ஏற்கும் வேடங்கள் வெறும் கற்பனை உருவங்கள் என்றும் பணம், புகழ் ஆகியவற்றை சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக வெவ்வேறு வேடங்களில் நடிக்கும் நான், வேடங்களிலிருந்து வேறு பட்டவன் என்றும் அந்த நடிகனுக்கு தெளிவாக தெரியும். ஆனால் வாழ்வில் நாம் ஏற்கும் மகன், கணவன், தந்தை, குடிமகன், மாணவன், பட்டதாரி, தொழிலாளி, மேலாளர் போன்ற பல்வேறு பாத்திரங்களிலிருந்து நாம் வேறுபட்டவர்கள் என்று நமக்கு தெரிவதேயில்லை. ஆகவேதான்நான் யார்?’ என்ற கேள்விக்கு நடிகன் பாத்திரத்தின் பெயரைச்சொல்வதுபோல் தவறான பதிலை கொடுத்து வருகிறோம்.

ஒரு நகரத்தில் உள்ள உயிர்காட்சியகம், அருங்காட்சியகம் பொன்ற இடங்களை பார்க்க விரும்பும் வெளிநாட்டு பயணி ஒருவர் சுற்றுலா அலுவலகத்தின் உதவியை நாடினால் அவருக்கு ஒரு வரைபடம் கொடுக்கப்படும். அதில் பார்க்க வேண்டிய அனைத்து இடங்களும் அவற்றை சென்றடைய சரியான பாதையும் காண்பிக்கபட்டிருக்கும். அந்த வரைபடத்தில் இருக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம்: ‘நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்என்று சுட்டிக்காட்டும் ஒரு அம்புக்குறி.

நாம் தற்பொழுது எங்கு இருக்கிறோம் என்று தெரிந்தால்தான் அந்த வரைபடத்தை உபயோகித்து எல்லா இடங்களுக்கும் பயணிக்க முடியும். அது போல நான் யார் என்பதை அறிந்தால் மட்டுமே நாம் ஏற்கும் அனைத்து பாத்திரங்களிலும் திறம்பட செயலாற்ற முடியும்.

தாய் பிறந்தாள்

ஒரு குழந்தை பிறக்கும்பொழுதுதான் தாயும் பிறக்கிறாள். குழந்தைக்கு மட்டும்தான் அவள் தாய். அதே பெண் அவளுடைய தாய்க்கு மகள். தாய், மகள் ஆகியவை ஒரு குறிப்பிட கால கட்டதிற்கு ஒரு குறிப்பிட்ட நபரை பொறுத்து மாறும் பொது உண்மை (Relative reality). மாணவர்களே இல்லாத குரு யாரும் இருக்க முடியாது. ஒரே ஒரு மாணவன் இருந்தாலும் அவனை பொறுத்தவரை அவர் குருதான். இந்த உண்மைகளை புரிந்து கொள்ளாமல் மனித சமுதாயம் பல குழப்பங்களில் ஆழ்ந்து உள்ளது.

ஒரு நடிகன் வெவ்வேறு பாத்திரங்களில் நடிக்க வெவ்வேறு ஒப்பனைகள் செய்துகொள்வான். ஒரு வேடத்தை கலைத்துவிட்டுத்தான் மற்றொரு வேடத்தை போட்டுக்கொள்ள முடியும். ஆனால் வாழ்வில் நாம் பிறந்தது முதல் ஒன்றன் பின் ஒன்றாக பல வேடங்களை ஒன்றன் மேல் ஒன்றாக போட்டுக்கொண்டு நமது சொந்த முகத்தையே அறியாதவர்களாக குழம்பியிருக்கிறோம்.

இதனாலேயேசாமியார் நடிகையுடன் உல்லாசம்’, ‘போலீஸ்காரர் திருடினார்என்பது போன்ற நடக்கமுடியாத நிகழ்வுகளை நிஜம் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். ஒரு திருடனால் மட்டுமே திருட முடியும். வேறு யாராலும் திருட முடியாது. போலீஸ்காரன் என்பது அவனது உத்தியோகம். அதே போல்சாமியார்’, ‘நடிகைஎன்பவைகள் வகிக்கும் பாத்திரங்கள். ஒரு ஆணும் பெண்ணும் உல்லாசமாக இருக்கலாம். வேறு யாராலும் அது முடியாது. பல பாத்திரங்களை ஏற்று நடிப்பவர் பாத்திரங்களிலிருந்து வேறுபட்டவர் என்பது தெரிந்தால் ஒரு பாத்திரத்தின் செயலை மற்றதன் மேல் ஏற்றி தவறாக புரிந்து கொள்ள மாட்டோம்.

ஒரே நடிகர் நல்லவனாகவும் கெட்டவனாகவும் இரட்டை வேடத்தில் நடிப்பதால் கெட்டவன் செய்த கொலைக்கு நல்லவனை பொறுப்பாளியாக்க முடியாது. நிஜ வாழ்வுக்கும் இது பொருந்தும். போலீஸ், தந்தை, மகன், கணவன் ஆகிய பாத்திரங்களை ஏற்று வாழும் ஒருவன் ஒரு பொருளை திருடினால் அவன் திருடன். திருடனுக்கு ஏற்ற தண்டனையை தரலாமே தவிர திருடியது போலீஸா கணவனா என்ற ஆராய்ச்சி நேரத்தை வீணாக்கும் செயல்.

உபயோகிக்கும் கருவி

கத்தியை உபயோகபடுத்துவன் கொலைகாரனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவன் ஒரு மருத்துவனாகவோ, சமையற்காரனாகவோ அல்லது முடிதிருத்துபவனாகவோ இருக்கலாம். அது போல் ஒருவன் தன் உடலை காவல் காக்கவோ அல்லது திருடவோ பயன்படுத்தலாம்.

உடலும் மனமும் நாம் உபயோகிக்கும் கருவிகள். அவற்றை உபயோகித்து நாம் பல பாத்திரங்களின் கடமைகளை செய்கிறோம். நாம் வகிக்கும் பாத்திரங்கள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதவை. காவல் காப்பவன் போலீஸ். திருடுபவன் திருடன். ‘போலீஸ்காரன் திருடினான்’, ‘நல்லவன் கொலை செய்தான்என்பது போன்ற தவறான எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.    

கடமையில் முரண்பாடு (Role conflict)

நான் யார், எதற்காக இந்த பாத்திரத்தை ஏற்றுள்ளேன் என்ற கேள்விகளுக்கு சரியான பதில் தெரியாத காரணத்தால் நாம் நம் வேலைகளை சரிவர செய்ய முடிவதில்லை. உதாரணமாக வங்கியில் மேலாளர் ஒருவர் தன் மகனின்  படிப்புக்காக வங்கியின் பணத்தை கையாடலாமா என்ற கேள்வியே தவறு என்று பெரும்பாலோருக்கு தெரிவதில்லை. ஏனெனில் வங்கி மேலாளர், நடிகர், போலீஸ்காரர், சாமியார், ஜனாதிபதி, ஆசிரியர் ஆகியோருக்கு மகன் இருக்கவே முடியாது.

பெற்றோருக்கு மட்டும் தான் மகன் இருக்க முடியும். மேலாளர் என்பது வங்கியுடன் உள்ள உறவுமுறை. மேலாளர் பதவியை வகித்து தனது கடமையாக பணத்தை எண்ணும் பொழுது அந்த வேடத்தை கலைக்காமலேயே தந்தை என்ற மற்றொரு வேடத்தை போட்டுக்கொள்வதால் இந்த பணத்தை மகனின் கல்விக்காக எடுத்துக் கொள்ளலாமா என்ற எண்ணம் ஏற்படுகிறது.

தந்தை என்பதும் மேலாளர் என்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத இருவேறு பாத்திரங்கள் என்றும், நாம் நமது உடல் மற்றும் மனம் ஆகிய கருவிகளை பயன்படுத்தி இவ்விரு பாத்திரங்களின் கடமைகளையும் செய்கிறோம் என்ற தெளிவும் இருந்தால் எவ்வித குழப்பமும் வராது. இரட்டை வேடத்தில் நடிக்கும் நடிகர் நல்லவனாக நடிக்கும்பொழுது கெட்டவனுடைய வசனங்களை குழப்பிக்கொள்வதில்லை. தெளிவாக அந்தந்த பாத்திரத்தினுடைய வசனங்களை பேசி செயல்பாடுகளை சரியாக செய்வதற்கு ஒரே காரணம், மனதில் உள்ள தெளிவுதான். ஆனால் நமக்கு அந்த தெளிவு இருப்பதில்லை. வங்கி மேலாளருக்கு மகன் இருக்கிறானா அல்லது தந்தை மேலாளராக பணிபுரிகிறாரா என்ற இரு தவறான பதில்களிக்கிடையே அலை பாய்ந்து கொண்டிருக்கிறோம். பணத்தை எடுத்தால் வங்கி மேலாளர் என்ற பொறுப்பிலிருந்து தவறியவராகவும் பணத்தை எடுக்காவிட்டால் தந்தையின் கடமையிலிருந்து தவறியவராகவும் நினைக்கிறோம்.

எப்பொழுது ஏற்றுக்கொண்டிருக்கும் பாத்திரங்களிலிருந்து நான் வேறானவன் என்ற தெளிவு நமக்கு ஏற்படுகிறதோ அப்பொழுதுதான் நமக்கு நிம்மதி கிடைக்கும். மேலும் நம் எல்லா பொறுப்புகளையும் எவ்வித முரண்பாடோ மனகஷ்டமோ இல்லாமல் செவ்வனே செய்யமுடியும்.   

நல்லவனா கெட்டவனா?

இரட்டை வேடத்தில் நடிக்கும் நடிகர் எந்த வேடத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பாக செய்யவேண்டும்? இயக்குனர் என்ன சொல்கிறாறோ அதன் படி நடக்கவேண்டுமா அல்லது சத்தியமே வெல்லும் என்பதால் நல்லவன் வேடத்தை சிறப்பாக செய்யவேண்டுமா?

மனதில் குழப்பமில்லாத நடிகர் தம் முழுதிறமையையும் உழைப்பையும் கொடுத்து எது மிகவும் நன்றாக இருக்கிறது என்று யாராலும் குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவு  இரு வேடங்களையும் சிறப்பாக செய்வார்.

நான் வங்கியில் வேலை செய்யும் காரணமே என் குடும்பத்தலைவர் என்ற பொறுப்பை ஒழுங்காக செய்வதற்காகத்தான். எனவே மேலாளர் என்ற பாத்திரத்தை விட குடும்பத்தலைவர் என்ற பாத்திரம்தான் முக்கியமானது என்று ஒரு சிலர் எண்ணுவார்கள்.
மேலாளர் என்ற பதவியில் இருப்பதால்தான் பணம் கிடைக்கிறது. எனவே அதுதான் மற்ற அனைத்து பாத்திரங்களைவிட முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வேலையை சரியாக செய்யவதற்காக வீட்டுக்கே வராமல் அலுவலகத்தில் குடியிருந்தாலும் தவறில்லை என்று மற்றும் பலர் எண்ணுவார்கள்.

இரண்டும் தவறான எண்ணம். நடிகனை நடித்துத்தான் ஆகவேண்டும் என்று யாரும் கட்டாயபடுத்துவதில்லை. ஆனால் நடிகன் என்ற வேலையை ஏற்றுக்கொண்ட பின் முழுஉழைப்பை கொடுத்து நடித்துத்தான் ஆகவேண்டும். அதுபோல நம்மையும் யாரும் உத்தியோகம் செய்துதான் ஆகவேண்டும் என்றோ குடும்பத்தலைவராக பொறுபேற்றுகொள்ள வேண்டும் என்றோ கட்டாயப் படுத்துவதில்லை. வேண்டாமென்றால் எந்த பாத்திரத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் ஏற்று கொண்ட பாத்திரங்கள் அனைத்தையும் எவ்வித பாகுபாடுமில்லாமல் மிகச்சிறப்பாக செய்யவேண்டியது நமது கடமை.

அலுவலகத்தில் வேலை அதிகமாக இருந்ததால் வீட்டில் இருப்பவர்கள் மீது எரிந்து விழக்கூடாது. இப்படி நடப்பதற்கு காரணம் வீடு திரும்பியவுடன் மேலாளர் என்ற வேடத்தை கலைக்காமல் அதன் மேலேயே கணவன், தந்தை போன்ற வேடங்களை போட்டுக்கொள்வதுதான். நமது அனைத்து எண்ணங்களும் ஏதாவது ஒரு பாத்திரத்தை சார்ந்தே இருக்கும். எந்த வேடம் அணிந்திருக்கிறோம் என்ற தெளிவு இருந்தால் எண்ணங்களும் தெளிவாகவே இருக்கும்.

நாம் ஏற்கும் பாத்திரங்கள் அனைத்தும் நமது நன்மைக்காக மட்டும்தான் என்ற தெளிவு நமக்கு ஏற்பட வேண்டும். ந்த தெளிவு ஏற்படும் வரை ஒன்றன்மேல் ஒன்றாக போட்டுக்கொண்டிருக்கும் அனைத்து வேடங்களையும் கழட்டிவிட்டு நம்முடைய சொந்த முகத்துடன் ஒருசிலநேரமாவது இருக்க வேண்டும். ஒரு நாளில் காலை எழுந்தவுடன், உறங்குவதற்கு முன், அலுவலகத்துக்கு செல்லும் முன், திரும்பிய பின் மற்றும் மதிய உணவு இடைவெளிக்கு பின் ஆகிய ஐந்து தடவைகள் நாம் நம் சொந்த முகத்துடன் ஒரு சில நிமிடங்களாவது இருந்து பழகவேண்டும்.

நமது சொந்த முகம்: என்றும் ஆனந்தமாக இருக்கும் அறிவுருவம்.

முடிவுரை :

நான் பல்வேறு பாத்திரங்களை ஏற்றுக்கொண்டிருப்பதால் ஒன்றாகவும் பலவாகவும் ஒரே சமயத்தில் இருக்கிறேன். கண்ணுக்கு தெரியும் உடலைக்கொண்டு ஏற்கும் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் உயிர் கொடுத்துக் கொண்டிருக்கும்  நான் எந்த உருவமில்லாத அருவமானவன். நான் மட்டும்தான் உண்மை. நான் ஏற்றுக்கொண்டிருக்கும் அனைத்து பாத்திரங்களும் இன்றிருந்து நாளை இல்லை என்று மாறிக்கொண்டிருக்கும் நிலையற்ற பொய்கள்.

இந்த உண்மைகளை நமக்கு உணர்த்ததான் வாழ்வில் முதுமை வருகிறது. பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் மேலாளர் என்ற பாத்திரம் மறைந்து விடுகிறது. பெற்றோர்களின் மறைவுக்கு பிறகு மகன் என்ற பாத்திரம் முடிந்து விடுகிறது. இதுபோல் ஒவ்வொரு பாத்திரமும் முடிவடையும் பொழுது நான் உண்மையில் யார் என்ற கேள்வி நம் மனதில் எழலாம். இதை தவிர்க்கவே நாம் தொடர்ந்து ஏதாவது வேடம் போட்டுக்கொண்டு இடைவிடாமல் ஏதாவது வேலை செய்து நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம். இந்த நிலை தொடரும்வரை நமக்கு நிம்மதி இருக்காது.

நான் பரமன். நான் ஏற்று நடித்து உயிர்கொடுக்கும் பல்வேறு பாத்திரங்கள் என்னுடைய மாயா சக்தியின் வெளிப்பாடு. ஒவ்வொரு பாத்திரத்தின் கடமைகளை திறம்பட செய்வதன் மூலம் என்னுடைய மனம் என்னும் கருவியை கூர்மையுள்ளதாக ஆக்கி அதன் பின் வேதம் படித்து நான் யார் என்பதை தெரிந்து கொண்டு வாழ்வு முழுவதும் குறையில்லா ஆனந்தத்துடன் இருப்பேன் என்று நாம் அனைவரும் பரமனை அறிய ஆசைகொள்ள வேண்டும்.

பயிற்சிக்காக :

1 ஒரு நடிகன் பல வேடங்களில் நடிப்பதற்கும் நாம் பல பாத்திரங்களை ஏற்றுகொள்வதற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்க.

2.’போலீஸ்காரர் திருடினார்என்று சொல்வதில் என்ன தவறு?

3.நாம் பயன்படுத்தும் இரு கருவிகள் யாவை?

4.நாம் ஏற்கும் எல்லா பாத்திரங்களையும் திறம்பட செய்யவேண்டியதன் அவசியமென்ன?

5.நமது சொந்த முகம் என்பது யாது?

சுயசிந்தனைக்காக :

1.நடிப்பது உண்மையாக நடப்பதை விட மேலானது  என்று எப்படி கூறமுடியும்?

2.போலீஸ்காரன் திருடினால் தண்டனை அதிகமா?

3.நாம் வகிக்கும் வெவ்வேறு பாத்திரங்களின் தன்மைகளை ஆய்க.