Thursday, August 19, 2010

பாடம் 080: புலன்கள் நுண்ணியவை (பிரம்ம சூத்திரம் 2.4.7)

பிரபஞ்சம் உருவாக்கப்படும்பொழுது முதலில் நுண்ணிய பஞ்சபூதங்கள் உருவாக்கப்பட்டன என்ற கருத்தை கூறியபின் 'நுண்ணிய' என்ற சொல்லின் பொருள் ‘அளவுக்கு அப்பாற்பட்டவை’ என்று இந்த பாடம் விளக்குகிறது.

அளவுக்கு அப்பாற்பட்டவை

பரமன் எங்கும் வியாபித்து எப்பொழுதும் இருப்பவன். இடம் மற்றும் காலம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவன். எனவே பரமன் அளவுக்கு அப்பாற்பட்டவன்.

பௌதீக பிரபஞ்சம் உருவானதற்கு ஆதாரம் பரமனின் மாயா சக்தியான காரண பிரபஞ்சம். பரமனைப்போல் காரணபிரபஞ்சமும் அளவுக்கு அப்பாற்பட்டது. காரண பிரபஞ்சத்தில் இருந்து தோன்றியது நுண்ணிய பஞ்சபூதங்கள். இவை அளவில் அணுவை விட மிக நுண்ணியவை. இவற்றில் இருந்து தோன்றியதுதான் பௌதீக பிரபஞ்சம்.

நுண்ணிய பஞ்சபூதங்களின் இருப்பை யூகித்து அறிய முடியுமே தவிர நேரடியாக உணரமுடியாது. அளவில் மிகச்சிறியதாயினும் இவையும் ஜடப்பொருள்களே. இவற்றிலிருந்து உருவாக்கப்பட்ட பிராணமயகோசம், மனோமயகோசம் மற்றும் விஞ்ஞானமயகோசம் ஆகியவையும் நுண்ணிய அளவை உடையவை. இவையும் அளவுக்கு அப்பாற்பட்டவை.

தினசரி வாழ்வில் நாம் உபயோகிக்கும் அளவுகோல்கள் நட்சத்திரங்களுக்கிடையே உள்ள தூரங்களையோ அணுக்களிடையே உள்ள தூரங்களையோ அளக்க உதவாது. அதேபோல் பரமனும் நுண்ணிய உடல்களும் அறிவியல் அளவைகளுக்கு அப்பாற்பட்டவை.

நுண்ணிய உயிரும் நுண்ணிய ஜடமும்

அனைத்து உயிரினங்களின் பருவுடலை உள்ளிருந்து செயல்படுத்துவது உயிருடன் கூடிய நுண்ணிய உடல். உயிரினங்களின் பருவுடல் உள்ளிட்ட அனைத்து ஜடப்பொருள்களின் ஆதாரமாய் அவற்றினுள் இருப்பது நுண்ணிய பஞ்சபூதங்கள்.

பிரளயத்திற்கு பிறகு காரண உடலில் உள்ள பாவ புண்ணியங்களின் தகுதிக்கு ஏற்ப அனைத்து உயிரினங்களின் நுண்ணிய உடல்கள் உருவாக்கப்படுகின்றன. அதற்கு பிறகு பஞ்சீகரணம் மூலம் பஞ்சபூதங்களும் அவற்றின் கலவையாக பிரபஞ்சமும் உருவாக்கப்படுகின்றன.

பிரபஞ்சம் அறிவியல் கருத்துக்களின் படி தொடர்ந்து மாறி உயிரினங்கள் வாழத்தகுந்த பூமி உருவானது. பூமியில் அடிப்படை இரசாயனப்பொருள்கள் உருவானபின் நுண்ணிய உடல்கள் அவற்றினுள் புகுந்து முதல் உயிரினங்கள் உருவாயின. இவை ஓரறிவுள்ள நீருனுள் வாழ்பவை. மேலும் நுணுக்கமான உயிரினங்களுக்கு தேவையான பருவுடலை வளர்க்க தேவையான தட்பவெப்ப நிலை பூமியில் ஏற்பட்டதும் உயிரினங்கள் பரிணாம வளர்ச்சி பெறத்தொடங்கின. அதன் விளைவாக தாவரம், ஊர்வன, பறப்பன மற்றும் விலங்குகள் என பல்வேறு உயிரினங்களாக உருபெற்றன.

உயிரினங்கள் மற்ற உயிரினங்களை உண்டுதான் வாழ வேண்டும். ஜடப்பொருள்கள் நேரடியாக உணவாக மாறாது. உண்ணப்படும் உணவில் உள்ள ஜடப்பொருள்கள் உண்பவற்றின் பருவுடல்களை வளர்ப்பதற்கும் உணவின் நுண்ணிய பகுதி உண்பவற்றின் நுண்ணிய உடல்களை வளர்ப்பதற்கும் உதவுகின்றன.

நுண்ணிய உடல்

நுண்ணிய உடலால் உலகுடன் தொடர்புகொண்டு அனுபவங்களை பெறுவது என்பது முடியாத காரியம். ஆகவே அவை செய்த கர்மபலன்களை அனுபவிக்கும் பொருட்டு பருவுடல்களை பெறுகின்றன. பருவுடலில் உள்ள கோளகங்களில் நுண்ணிய உடலின் புலன்கள் அமர்ந்து வெளியுலகில் உள்ள பொருள்களை அனுபவிக்கின்றன. உதாரணமாக நம் முகத்தில் இருக்கும் கண் ஒரு கோளகம். இதனுள் நமது புலன்களில் ஒன்றான நுண்ணிய கண் அமர்ந்து உலகில் உள்ள பொருள்களை பார்க்கிறது. கர்மா கோட்பாடின் படி இது போன்ற அனுபவங்களை பெறுவது அவசியமென்பதால் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் நுண்ணிய உடல் உள்ளது. தான் செய்த நன்மை தீமைகளின் பலன்களை அனுபவிக்க நுண்ணிய உடல்கள் உட்புகுவதால் உயிரினங்கள் உண்டாகின்றன.

சரியாக கூறினால் எந்த ஜடப்பொருள்களுக்குள் நுண்ணிய உடல் இருக்கிறதோ அவற்றை நாம் உயிர் வாழ்வன என்று அறிகிறோம். நுண்ணிய உடலுக்கு பரமனின் உணர்வை பிரதிபலிக்கும் ஆற்றல் இருப்பதால் பருவுடல் ஜடப்பொருளிலிலிருந்து வேறுபட்டு தெரிகிறது. நம்மை யாராவது தொட்டால் அதை நாம் உணர்கிறோம். அந்த உணர்வு நம் உடலுக்கோ மனதுக்கோ சொந்தமானது அல்ல. பரமனின் உணர்வை மனம் பிரதிபலித்து தன் கட்டுப்பாட்டில் உள்ள உடல் முழுதும் அந்த உணர்வை பரப்பியுள்ளது. எனவே உண்மையில் உணர்வு என்பது பரமனை மட்டுமே சேர்ந்தது.

நுண்ணிய உடலில் 19 உறுப்புகள் உள்ளன. அவை நுண்ணியவை. ஆகையால் அவற்றின் இருப்பை நேரடியாக காட்டி நம்மால் நிரூபிக்க முடியாது. உதாரணமாக நமக்கு பிராணன் இருக்கிறது என்பதை எவ்வித அறிவியல் கருவிகளாலும் நேரடியாக சுட்டிக்காட்ட  முடியாவிட்டாலும் அதன் இருப்பை நாம் அறிகிறோம். இது போல காரியத்திலிருந்து காரணமான நுண்ணிய உடல் இருப்பதை யூகித்து மட்டுமே அறிய முடியுமே தவிர நேரடியாக அறியமுடியாது.

உதாரணமாக இருதயத்துடிப்பு இருக்கும் வரை உயிர் இருக்கிறது என்கிறோம். ஏன் இருதயம் துடிக்கிறது என்ற கேள்விக்கு பிராணன் உள்ளிருந்து இதயத்தை துடிக்கச்செய்கிறது என்ற பதில் வேதத்திலிருந்து மட்டும்தான் நமக்கு கிடைக்கும். இது அறிவியல் அறிவுக்கு அப்பாற்பட்டது.

பரமனின் மாயாசக்தி இந்த பிரபஞ்சத்தின் தோற்றம், வளர்ச்சி, மறைவு என்ற அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணமாக அமைவது போல பருவுடலின் செயல்பாட்டுக்கு நுண்ணிய உடல் காரணமாக அமைகிறது. பிரபஞ்சம் ஏன் தோன்றியது என்ற கேள்விக்கு அறிவியலால் எப்படி பதில் சொல்ல முடியதோ அதே போல் ஒருவர் உயிரோடு இருப்பது எப்படி என்ற கேள்விக்கும் பதில் தெரியாது. ஒருவர் இறந்து விட்டால் அவர் இறந்ததற்கு காரணம் கண்டுபிடிக்க ஒரு அளவுக்கு ஆராய்ச்சி செய்ய முடியுமே தவிர ஒருவர் உயிரோடு இருப்பதற்கு காரணமோ அவர் எப்பொழுது இறப்பார் என்ற தகவலையோ அறிவியல் உலகம் அறியாது. நுண்ணிய உடல்கள் பருவுடலைப்போல் அல்லாமல் அளவுக்கு அப்பாற்பட்டவையாக இருப்பதே இதற்கு காரணம்.

முடிவுரை :

நுண்ணிய உடல் மிக நுண்ணியதாக இருப்பதால் அவை அறிவியல் அளவைகளுக்கு உட்படா. அவற்றின் செயல்பாட்டை வைத்துதான் அவற்றின் இருப்பை நாம் அறிந்து கொள்ள முடியும்.

ஆங்கில மருத்துவர்கள் நுண்ணிய உடலின் இருப்பை ஏற்றுக்கொள்ளாமல் அதன் செயல்பாடுகளை பருவுடலின் செயல்பாடுகளாக தவறாக கருதுகின்றனர். பருவுடல் தொடர்ந்து செயல்படுவதால் பழுதடைந்து வேலை செய்வதை நிறுத்திகொள்வதால் மரணம் நிகழ்கிறது என்பது அவர்கள் கருத்து. உடலின் பாகங்கள் அனைத்தும் சரியாக வேலை செய்யும்பொழுது கூட சில சமயம் மரணம் ஏற்படுவதை அவர்களால் விளக்கமுடியாமல் ஆயிசு முடிந்துவிட்டது என்கிறார்கள்.

பிரளயத்திற்கு பின் பரமனிடமிருந்து தோற்றுவிக்கப்படும் நுண்ணிய உடல் தொடர்ந்து பிறப்பு-இறப்பு என்ற சுழற்சியில் செய்த பாவ-புண்ணியங்களுக்கு தகுந்த பலனை பெறுவதற்காக அதற்கேற்ற பருவுடலை பெறுகிறது என்றும் கர்ம வினைகள் முற்றுபெறும்பொழுது உயிரினம் மரணமடைகிறது என்றும் வேதம் கூறுவது நமது அனுபவத்திற்கும் தர்க்க அறிவிற்கும் ஏற்புடையதாக இருக்கிறது.

பயிற்சிக்காக :

1. அளவுக்கு அப்பாற்பட்ட இரண்டு பொருள்கள்யாவை?

2. ஜடப்பொருள்களுக்குள் நுண்ணிய பொருள்கள் உண்டா?

சுயசிந்தனைக்காக :

1. மனிதனைத்தவிர மற்ற உயிரினங்களுக்கும் ஐந்து கோசங்கள் உள்ளனவா

Wednesday, August 18, 2010

பாடம் 079: புலன்களின் எண்ணிக்கை (பிரம்ம சூத்திரம் 2.4.5-6)

ஐந்து கோசங்களை விளக்கியபின் பிராணமயகோசத்தில் உள்ள புலன்களின் எண்ணிகையையும் அவை பரமனிடமிருந்து உருவான விதத்தையும் இந்த பாடம் நமக்கு தருகிறது.

ஊழிக்காலத்தின்பின் மறுபடியும் தோற்றம்

ஜடப்பொருளிலிருந்து எப்படி உயிரினங்கள் தோன்றின, அவை எப்படி படிபடியாக வளர்ச்சியுற்றன, அறிவாற்றல் கொண்ட மனிதன் எப்படி தோன்றினான் போன்ற கேள்விகளுக்கு சரியான பதில் தெரியாமல் இவை எல்லாம் தற்செயலாக நடந்தன என்ற அறிவியல் கருத்தை ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு பிரளயம் என்பது மிகுந்த அச்சத்தை கொடுக்க கூடிய நிகழ்வு.

பிரளயத்துக்கு பின் உலகம் எப்படி படிபடியாக உருவாகிறது என்பதை வேதம் தெளிவாக விளக்குகிறது. இந்த விளக்கத்தை அறிந்தவர்கள் பிரளயம் என்பது முற்றான முடிவல்ல என்பதை அறிவார்கள். மனிதகுலம் முழுதும் அழிந்துவிட்டால் மீண்டும் அறிவாற்றலுடன் கூடிய உயிரினம் தோன்றுமா என்பது பற்றி இவர்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே அழிவு என்பது ஆக்கத்தின் முதல் படி என்ற அறிவு இருப்பவர்களுக்கு பிரளயம் அச்சத்தை ஏற்படுத்துவதில்லை.

பிரபஞ்சத்தின் தோற்றம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை வேதம் பின்வரும் எட்டுபடிகளில் விளக்குகிறது.

முதல் படி- மாயையிலிருந்து நுண்ணிய பஞ்ச பூதங்கள்

பரமன் என்றும் இருப்பவன். பிரளயத்திற்கு பின் அவனது மாயா சக்தி ஒடுக்க நிலையில் இருக்கும். ஒளி, சக்தி மற்றும் ஜடம் என்ற மூன்று தனிமங்களின் (elements) கூட்டுப்பொருள்தான் மாயை என்ற காரண பிரபஞ்சம். தோற்றத்தின் முதல் படியாக இந்த காரணபிரபஞ்சத்திலிருந்து நுண்ணிய பிரபஞ்சம் தோன்றும். ஒலி, தொட்டுணர்வு, உருவம், சுவை மற்றும் மணம் ஆகிய ஐந்து குணங்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வெளி, காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகிய நுண்ணிய பஞ்சபூதங்கள் உருவாக்கப்படும்.

இரண்டாம் படி - நுண்ணிய பஞ்சபூதங்களிலிருந்து ஐந்து புலன்கள்

நுண்ணிய பஞ்சபூதங்களின் ஒளிதனிமத்திலிருந்து முறையே செவி, மெய், கண், சுவைக்கும் நாக்கு மற்றும் மூக்கு ஆகிய ஐந்து நுண்ணிய புலன்கள் உருவாக்கப்படும்.

மூன்றாம் படி - நுண்ணிய பஞ்சபூதங்களிலிருந்து ஐந்து கரணங்கள்

நுண்ணிய பஞ்சபூதங்களின் சக்திதனிமத்திலிருந்து முறையே பேசும் நாக்கு, கை, கால், கருவாய் மற்றும் எருவாய் ஆகிய ஐந்து நுண்ணிய கரணங்கள் உருவாக்கப்படும்.

நான்காம் படி - நுண்ணிய பஞ்சபூதங்களிலிருந்து மனம்

அனைத்து நுண்ணிய பஞ்சபூதங்களின் ஒளிதனிமத்தின் சேர்க்கையிலிருந்து மனம் உருவாக்கப்படும். மனம் என்பதை ஒரு உறுப்பாகவோ அல்லது அதை மனம், சித்தம், அகங்காரம், புத்தி என்று பிரித்து நான்கு உறுப்புகளாகவோ கொள்ளலாம்.

ஐந்தாம் படி - நுண்ணிய பஞ்சபூதங்களிலிருந்து ஐந்து பிராணன்கள்

அனைத்து நுண்ணிய பஞ்சபூதங்களின் சக்திதனிமத்தின் சேர்க்கையிலிருந்து பிராணன், அபானன், வ்யானன், உதானன், சமானன் ஆகிய ஐந்து பிராணன்கள் உருவாக்கப்படும்.

ஆறாம் படி - பஞ்சீகரணம்

கடந்த ஐந்து படிகளில் பிரபஞ்சம் காரண நிலையிலிருந்து நுண்ணிய நிலையை அடையும். அதன் பின் பஞ்சீகரணம் என்ற முறையில் நுண்ணிய பஞ்சபூதங்கள் பௌதீக பிரபஞ்சமாக படிப்படியாக உருவாகும். இந்த ஆறாம் படியைதான் பிக் பேங்க் (Big Bang) என்ற பெயரில் அறிவியல் அறிஞர்கள் பிரபஞ்சத்தின் உற்பத்தியின் முதல் படியாக குறிப்பிடுகிறார்கள்.

பஞ்சீகரணம் என்பது ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் நுண்ணிய பஞ்சபூதங்களை கலப்பதாகும். அதாவது ஒவ்வொரு நுண்ணிய பூதத்திலிருந்து பாதியளவும் எஞ்சிய நான்கு பூதங்களின் எட்டில் ஒரு பங்கும் சேர்ந்து அதன் பௌதீக பூதம் உருவாகிறது. உதாரணமாக நெருப்பு என்பது ஐம்பது சதவிகிதம் நுண்ணிய நெருப்புடன் வெளி, காற்று, நீர், நிலம் என்ற மற்ற நான்கு பூதங்கள் ஒவ்வொன்றிலிருந்து பதினெண்டரை சதவிகிதம் சேர்த்து செய்த கலவை.

பஞ்சீகரணம் மூலம் உருவாகும் பௌதீக பிரபஞ்சமும் வெளி, காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் என்ற வரிசைக்கிரமத்தில்தான் படிப்படியாக உருவாகிறது.

ஏழாம் படி - பஞ்சபூதங்களிலிருந்து ஜடமான பிரபஞ்சம்

நாம் அறியகூடிய இந்த பௌதீக பிரபஞ்சம் முழுவதும் பஞ்சபூதங்களின் வெவ்வேறு விகித கலவையால் உருவானது. உதாரணமாக கல் அல்லது மண் போன்ற ஜடப்பொருள்கள் பஞ்சபூதங்களின் கலவை. சூரியன் உட்பட்ட நட்சத்திரங்கள் மற்றும் பூமி போன்ற கிரகங்களும் இந்த பஞ்சபூதங்களின் கலவையாக அறிவியல் அறிஞர்களின் விளக்கத்தின்படி உருவாயின.

எட்டாம் படி – ஜடமான பிரபஞ்சத்திலிருந்து உயிரினங்கள்

ஜடப்பொருளாலான இந்த பிரபஞ்சத்தில் உயிரினங்கள் வாழத்தேவையான மாற்றங்கள் ஏற்பட்டதும் (தோற்றத்தின் இரண்டாம் படியில் துவங்கி ஐந்தாம் படிவரை விவரிக்கபட்ட வகையில் தோன்றிய) நுண்ணிய உடல்கள் உட்புகுந்து உயிரினங்கள் தோன்றின.

அறிவியல் அறிவுக்கு அப்பாற்பட்ட நுண்ணிய உடல்களின் தோற்றம் பற்றியும் அவை எவ்வாறு பூமியில் உயிரினங்களாக அவதரிக்கின்றன என்ற கருத்தையும் முறையாகவும் எவ்வித முரண்பாடும் இல்லாமல் வேதம் விவரித்துள்ளது. 

ஆக இந்த எட்டு படிகள் மூலமாக பரமனின் மாயா சக்தி நாம் இப்பொழுது அனுபவிக்கும் பிரபஞ்சமாக உருமாறியுள்ளது என்று படைப்பை பற்றிய அனைத்து உண்மைகளையும் முழுமையாக  வேதம் விளக்கியுள்ளது.

முடிவுரை :

ஊழிக்காலத்தில் படிபடியாக பிரபஞ்சம் எப்படி அழிகிறது என்ற கருத்தை சென்ற பகுதியில் கொடுத்தபின் அது எப்படி படிபடியாக மறுபடியும் உருவாகிறது என்ற விவரத்தை இந்த பாடம் தருகிறது. மொத்தம் எட்டுபடிகளில் ஒடுக்க நிலையில் இருக்கும் காரண பிரபஞ்சம் நுண்ணிய பிரபஞ்சமாக மாறி பின் நாம் அனுபவிக்கும் பௌதீக பிரபஞ்சமாக உருவாகிறது.

உயிரினங்களின் நுண்ணிய உடல் ஐந்து புலன்கள், ஐந்து கரணங்கள், ஐந்து பிராணன்கள் மற்றும் நான்கு உறுப்புகளை உள்ளடக்கிய ஒரு மனம் என்று மொத்தம் 19 உறுப்புகள் கொண்டது என்பதும் அது பரமனிடமிருந்து உருவாகிறது என்ற கருத்தும் இந்த பாடத்தில் தரபட்டது.

பயிற்சிக்காக :

1.பஞ்சீகரணம் என்றால் என்ன?

2. பிரபஞ்சம் எந்த எட்டு படிகளில் படைக்கப்பட்டது?

சுயசிந்தனைக்காக :

1. ஒளி, சக்தி, ஜடம் ஆகிய மூன்று தனிமங்களை பரமனின் மூன்று தன்மைகளுடன் ஒப்பிடுக