ஐந்து கோசங்களை விளக்கியபின் பிராணமயகோசத்தில் உள்ள புலன்களின் எண்ணிகையையும் அவை பரமனிடமிருந்து உருவான விதத்தையும் இந்த பாடம் நமக்கு தருகிறது.
ஊழிக்காலத்தின்பின் மறுபடியும் தோற்றம்
ஜடப்பொருளிலிருந்து எப்படி உயிரினங்கள் தோன்றின, அவை எப்படி படிபடியாக வளர்ச்சியுற்றன, அறிவாற்றல் கொண்ட மனிதன் எப்படி தோன்றினான் போன்ற கேள்விகளுக்கு சரியான பதில் தெரியாமல் இவை எல்லாம் தற்செயலாக நடந்தன என்ற அறிவியல் கருத்தை ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு பிரளயம் என்பது மிகுந்த அச்சத்தை கொடுக்க கூடிய நிகழ்வு.
பிரளயத்துக்கு பின் உலகம் எப்படி படிபடியாக உருவாகிறது என்பதை வேதம் தெளிவாக விளக்குகிறது. இந்த விளக்கத்தை அறிந்தவர்கள் பிரளயம் என்பது முற்றான முடிவல்ல என்பதை அறிவார்கள். மனிதகுலம் முழுதும் அழிந்துவிட்டால் மீண்டும் அறிவாற்றலுடன் கூடிய உயிரினம் தோன்றுமா என்பது பற்றி இவர்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே அழிவு என்பது ஆக்கத்தின் முதல் படி என்ற அறிவு இருப்பவர்களுக்கு பிரளயம் அச்சத்தை ஏற்படுத்துவதில்லை.
பிரபஞ்சத்தின் தோற்றம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை வேதம் பின்வரும் எட்டுபடிகளில் விளக்குகிறது.
முதல் படி- மாயையிலிருந்து நுண்ணிய பஞ்ச பூதங்கள்
பரமன் என்றும் இருப்பவன். பிரளயத்திற்கு பின் அவனது மாயா சக்தி ஒடுக்க நிலையில் இருக்கும். ஒளி, சக்தி மற்றும் ஜடம் என்ற மூன்று தனிமங்களின் (elements) கூட்டுப்பொருள்தான் மாயை என்ற காரண பிரபஞ்சம். தோற்றத்தின் முதல் படியாக இந்த காரணபிரபஞ்சத்திலிருந்து நுண்ணிய பிரபஞ்சம் தோன்றும். ஒலி, தொட்டுணர்வு, உருவம், சுவை மற்றும் மணம் ஆகிய ஐந்து குணங்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வெளி, காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகிய நுண்ணிய பஞ்சபூதங்கள் உருவாக்கப்படும்.
இரண்டாம் படி - நுண்ணிய பஞ்சபூதங்களிலிருந்து ஐந்து புலன்கள்
நுண்ணிய பஞ்சபூதங்களின் ஒளிதனிமத்திலிருந்து முறையே செவி, மெய், கண், சுவைக்கும் நாக்கு மற்றும் மூக்கு ஆகிய ஐந்து நுண்ணிய புலன்கள் உருவாக்கப்படும்.
மூன்றாம் படி - நுண்ணிய பஞ்சபூதங்களிலிருந்து ஐந்து கரணங்கள்
நுண்ணிய பஞ்சபூதங்களின் சக்திதனிமத்திலிருந்து முறையே பேசும் நாக்கு, கை, கால், கருவாய் மற்றும் எருவாய் ஆகிய ஐந்து நுண்ணிய கரணங்கள் உருவாக்கப்படும்.
நான்காம் படி - நுண்ணிய பஞ்சபூதங்களிலிருந்து மனம்
அனைத்து நுண்ணிய பஞ்சபூதங்களின் ஒளிதனிமத்தின் சேர்க்கையிலிருந்து மனம் உருவாக்கப்படும். மனம் என்பதை ஒரு உறுப்பாகவோ அல்லது அதை மனம், சித்தம், அகங்காரம், புத்தி என்று பிரித்து நான்கு உறுப்புகளாகவோ கொள்ளலாம்.
ஐந்தாம் படி - நுண்ணிய பஞ்சபூதங்களிலிருந்து ஐந்து பிராணன்கள்
அனைத்து நுண்ணிய பஞ்சபூதங்களின் சக்திதனிமத்தின் சேர்க்கையிலிருந்து பிராணன், அபானன், வ்யானன், உதானன், சமானன் ஆகிய ஐந்து பிராணன்கள் உருவாக்கப்படும்.
ஆறாம் படி - பஞ்சீகரணம்
கடந்த ஐந்து படிகளில் பிரபஞ்சம் காரண நிலையிலிருந்து நுண்ணிய நிலையை அடையும். அதன் பின் பஞ்சீகரணம் என்ற முறையில் நுண்ணிய பஞ்சபூதங்கள் பௌதீக பிரபஞ்சமாக படிப்படியாக உருவாகும். இந்த ஆறாம் படியைதான் பிக் பேங்க் (Big Bang) என்ற பெயரில் அறிவியல் அறிஞர்கள் பிரபஞ்சத்தின் உற்பத்தியின் முதல் படியாக குறிப்பிடுகிறார்கள்.
பஞ்சீகரணம் என்பது ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் நுண்ணிய பஞ்சபூதங்களை கலப்பதாகும். அதாவது ஒவ்வொரு நுண்ணிய பூதத்திலிருந்து பாதியளவும் எஞ்சிய நான்கு பூதங்களின் எட்டில் ஒரு பங்கும் சேர்ந்து அதன் பௌதீக பூதம் உருவாகிறது. உதாரணமாக நெருப்பு என்பது ஐம்பது சதவிகிதம் நுண்ணிய நெருப்புடன் வெளி, காற்று, நீர், நிலம் என்ற மற்ற நான்கு பூதங்கள் ஒவ்வொன்றிலிருந்து பதினெண்டரை சதவிகிதம் சேர்த்து செய்த கலவை.
பஞ்சீகரணம் மூலம் உருவாகும் பௌதீக பிரபஞ்சமும் வெளி, காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் என்ற வரிசைக்கிரமத்தில்தான் படிப்படியாக உருவாகிறது.
ஏழாம் படி - பஞ்சபூதங்களிலிருந்து ஜடமான பிரபஞ்சம்
நாம் அறியகூடிய இந்த பௌதீக பிரபஞ்சம் முழுவதும் பஞ்சபூதங்களின் வெவ்வேறு விகித கலவையால் உருவானது. உதாரணமாக கல் அல்லது மண் போன்ற ஜடப்பொருள்கள் பஞ்சபூதங்களின் கலவை. சூரியன் உட்பட்ட நட்சத்திரங்கள் மற்றும் பூமி போன்ற கிரகங்களும் இந்த பஞ்சபூதங்களின் கலவையாக அறிவியல் அறிஞர்களின் விளக்கத்தின்படி உருவாயின.
எட்டாம் படி – ஜடமான பிரபஞ்சத்திலிருந்து உயிரினங்கள்
ஜடப்பொருளாலான இந்த பிரபஞ்சத்தில் உயிரினங்கள் வாழத்தேவையான மாற்றங்கள் ஏற்பட்டதும் (தோற்றத்தின் இரண்டாம் படியில் துவங்கி ஐந்தாம் படிவரை விவரிக்கபட்ட வகையில் தோன்றிய) நுண்ணிய உடல்கள் உட்புகுந்து உயிரினங்கள் தோன்றின.
அறிவியல் அறிவுக்கு அப்பாற்பட்ட நுண்ணிய உடல்களின் தோற்றம் பற்றியும் அவை எவ்வாறு பூமியில் உயிரினங்களாக அவதரிக்கின்றன என்ற கருத்தையும் முறையாகவும் எவ்வித முரண்பாடும் இல்லாமல் வேதம் விவரித்துள்ளது.
ஆக இந்த எட்டு படிகள் மூலமாக பரமனின் மாயா சக்தி நாம் இப்பொழுது அனுபவிக்கும் பிரபஞ்சமாக உருமாறியுள்ளது என்று படைப்பை பற்றிய அனைத்து உண்மைகளையும் முழுமையாக வேதம் விளக்கியுள்ளது.
முடிவுரை :
ஊழிக்காலத்தில் படிபடியாக பிரபஞ்சம் எப்படி அழிகிறது என்ற கருத்தை சென்ற பகுதியில் கொடுத்தபின் அது எப்படி படிபடியாக மறுபடியும் உருவாகிறது என்ற விவரத்தை இந்த பாடம் தருகிறது. மொத்தம் எட்டுபடிகளில் ஒடுக்க நிலையில் இருக்கும் காரண பிரபஞ்சம் நுண்ணிய பிரபஞ்சமாக மாறி பின் நாம் அனுபவிக்கும் பௌதீக பிரபஞ்சமாக உருவாகிறது.
உயிரினங்களின் நுண்ணிய உடல் ஐந்து புலன்கள், ஐந்து கரணங்கள், ஐந்து பிராணன்கள் மற்றும் நான்கு உறுப்புகளை உள்ளடக்கிய ஒரு மனம் என்று மொத்தம் 19 உறுப்புகள் கொண்டது என்பதும் அது பரமனிடமிருந்து உருவாகிறது என்ற கருத்தும் இந்த பாடத்தில் தரபட்டது.
பயிற்சிக்காக :
1.பஞ்சீகரணம் என்றால் என்ன?
2. பிரபஞ்சம் எந்த எட்டு படிகளில் படைக்கப்பட்டது?
சுயசிந்தனைக்காக :
1. ஒளி, சக்தி, ஜடம் ஆகிய மூன்று தனிமங்களை பரமனின் மூன்று தன்மைகளுடன் ஒப்பிடுக.