Friday, January 28, 2011

பாடம் 136: கர்மகாண்டத்தின் முடிவு (பிரம்மசூத்திரம் 3.3.61-66)

கர்மகாண்டம் எவ்வகையில் மக்களுக்கு உதவுகிறது என்றும் அதை பின்பற்றுபவர்கள் எப்பொழுது அதை கடந்து ஞானகாண்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதை பற்றியும் இந்த பாடம் சில முக்கியமான விளக்கங்களை கொடுக்கிறது.

கர்மகாண்டத்தின் நோக்கம்

மக்களின் அறிவாற்றலும் மனப்பக்குவமும் ஒருவருக்கொருவர் பெரிதும் வேறுபடும். அனைவராலும் ஞானகாண்டத்தில் விளக்கப்பட்ட உண்மைகளை அறிந்து கொண்டு முக்தியடைந்துவிட முடியாது. எனவே கர்மகாண்டம் ஒரு படிக்கட்டாக செயல்பட்டு இவ்வகை மக்களை மூன்றாகப்பிரித்து ஞானகாண்டத்திற்கு தயார் செய்கிறது.

முதல் பிரிவு: புகை சூழ்ந்த நெருப்பு

இவர்கள் ஞானகாண்டத்திற்கு ஏறக்குறைய தயார் நிலையில் இருப்பவர்கள். செய்யும் வேலைகளை எப்படி கர்மயோகமாக மாற்றுவது என்ற அறிவை பெற்ற சிறிது காலத்திற்கெல்லாம் இவர்களுக்கு வேதாந்த தத்துவங்கள் புரிய ஆரம்பித்துவிடும். அதன் பிறகு கர்மகாண்டம் இவர்களுக்கு தேவையில்லை.

இரண்டாம் பிரிவு: தூசுபடிந்த கண்ணாடி

இவ்வகை மக்கள் தொடர்ந்து சிலகாலம் கர்மகாண்டத்தின் கட்டளைகளை பின்பற்றியபின்தான் ஞானகாண்டத்திற்கு செல்லும் தகுதியை பெறுவார்கள். செயல் செய்வதன் மூலம் முக்தியடைய முடியாது என்பது இவர்களுக்கு தெரியும்வரை வேதாந்தம் படிக்க இவர்கள் நேரம் ஒதுக்க மாட்டார்கள்.

மூன்றாம் பிரிவு: கர்ப்பம் மூடிய குழந்தை

இந்தபிரிவில் இருப்பவர்களுக்கு ஞானகாண்டம் செல்வதற்கு மிக அதிக காலமும் பிரயத்தனமும் தேவைபடும். இவர்களில் ஒரு சிலருக்குத்தான் கர்மகாண்டத்தை தாண்டி ஞானகாண்டம் செல்லும் தகுதி இந்தப்பிறவியில் வாய்க்கும். உலகில் உள்ள மக்களில் பெரும்பகுதியினர் இந்தப்பிரிவை சேர்ந்தவர்கள்.

கர்மகாண்டத்தின் பரிந்துரைகள்

ஞானகாண்டத்திற்கு தகுதிபெற மூன்று வித மாற்றங்களை கர்மகாண்டம் மக்களுக்கு பரிந்துரைக்கிறது.

முதல் மாற்றம்: மனப்பாங்கு

உலகம் கடவுளின் படைப்பு. உலகத்தில் உள்ள அனைத்து இயக்கமும் கடவுளின் கட்டளைபடிதான் நடக்கின்றன. எனவே நாம் நம்மைச்சுற்றியுள்ள நிகழ்வுகளையும் மனிதர்களையும் மரியாதையும் பயபக்தியும் கூடிய மனப்பாங்குடன் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். புத்தகத்தின் மேல் கால்பட்டால் அதைத்தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டு மனதார மன்னிப்பு கேட்கவேண்டும். மாதா, பிதா, குரு மற்றும் சான்றோர்களை கடவுளாக போற்றவேண்டும். மரம் செடி கொடிகளையும் விலங்குகள், பறவைகள் போன்ற மற்ற உயிரினங்களையும் உடன்பிறந்தவர்களை போல நடத்தவேண்டும். உணவு, உடை, உறையுள் போன்ற ஜடப்பொருள்களை கடவுளிடமிருந்து தற்காலிகமாக கடன்வாங்கப்பட்டவை என்ற நினைவுடன் உபயோகிக்கவேண்டும்.

தான் உலகத்திலிருந்து வேறுபட்ட சுதந்திரமான மனிதன் என்ற எண்ணத்துடன் ஆசைகளை நிறைவேற்றும் பொருட்டு சுற்றுச்சூழலை மதிக்காமல் எவ்வித காரியத்தையும் செய்ய தயாராக இருக்கும் மனோபாவம் தவிர்க்கப்படவேண்டியது.  

இரண்டாம் மாற்றம்: நற்குணங்கள்

அன்பு, அடக்கம், இன்னாகூறாமை, கருணை, கனிவு, பணிவு, பரோபகாரம் போன்ற அனைத்து நற்குணங்களை வளர்த்துக்கொள்ளவும் கோபம், பொறாமை, காழ்ப்புணர்ச்சி போன்ற தீயகுணங்களை முற்றிலும் தவிர்க்கவும் தொடர்ந்து பிரயத்தனம் மேற்கொள்ளவேண்டும்.

மூன்றாம் மாற்றம்: நற்செயல்கள்

செய்யும் அனைத்து செயல்களையும் தர்மமான முறையில் செய்யவேண்டும். அதர்மமான செயல்களை செய்ய மனதாலும் எண்ணகூடாது. முடிந்தவரை மற்றவர்களுக்கு தீங்கிழைக்காமலும், மற்ற உயிரினங்களை துன்புறுத்தாமலும் சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தாமலும் நமது செயல்களை செய்ய வேண்டும்.

கர்மகாண்டத்தின் கட்டளைகள்

மேற்கூறப்பட்ட மூன்று மாற்றங்கள் ஏற்பட்டால்தான் மக்கள் ஞானகாண்டத்திற்கு தயார் ஆவார்கள். இந்த மூன்று மாற்றங்களையும் ஏற்படுத்த கர்ம காண்டத்தின் மூன்று கட்டளைகளை பின்பற்றுவது அவசியம்.

முதல் கட்டளை: செயல்களின் மூலம் உபாசனை

தினசரி பூஜை, கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்தபின் காக்கைக்கு சிறிது உணவிட்டு பிறகு உண்ணுதல், கோவிலுக்கு சென்று கடவுளை வழிபடுதல், பிரகாரத்தை வலம் வருதல், பிராயசித்த காரியங்களாக அங்கபிரதக்ஷ்ணம் போன்ற சடங்குகளை செய்தல் ஆகியவை செயல்கள் மூலம் செய்யும் உபாசனைகளாகும். ஒவ்வொருவரும் சந்தியாவந்தனம் போன்று ஏதேனும் ஒரு சடங்கையாவது  தொடர்ந்து செய்யவேண்டும். கர்ப்பம் மூடிய குழந்தை என்ற மூன்றாம் வகை மனிதர்கள் இந்த உபாசனையை தொடர்ந்து செய்வேண்டும்.

இரண்டாம் கட்டளை: வார்த்தைகள் மூலம் உபாசனை

மந்திர ஜெபம் செய்வது, கடவுளின் புகழ் பாடும் புராணங்களையும் பாராயணம் செய்வது வாக்கால் செய்யும் உபாசனைகளாகும். தூசு படிந்த கண்ணாடி என்ற இரண்டாம் வகை மனிதர்கள் இந்த உபாசனையை செய்ய வேண்டும்.

மூன்றாம் கட்டளை: எண்ணங்கள் மூலம் உபாசனை

புகை சூழ்ந்த நெருப்பு என்ற முதல் வகை மனிதர்கள் செய்யவேண்டியது இஷ்ட தெய்வத்தை குறித்து தியானம் என்னும் மனதினால் செய்யும் உபாசனை.

கர்மகாண்டத்தின் பலன்கள்

மேற்கூறப்பட்ட மூன்று கட்டளைகளை தொடர்ந்து பின்பற்றினால் தேவையான மூன்று மாற்றங்களை பெற்று ஞானகாண்டத்தினுள் செல்ல தகுதி ஏற்படுவதுடன்  கர்மகாண்டத்தின் பின் வரும் மூன்று பலன்களையும் பெறலாம்

முதல் பலன்: பொருள்
இரண்டாம் பலன்: இன்பம்
மூன்றாம் பலன்: தர்மம்

கிழேகிடக்கும் சில்லறையை தொடர்ந்து பொறுக்கி போகவேண்டிய பாதையை தவறவிட்டவனைபோல மக்கள் வேண்டியது கிடைக்க ஆரம்பித்தவுடன் கர்மகாண்டத்தின் உபதேசங்களை பின்பற்றுவதில் முழுவதுமாக ஈடுபட்டு வாழ்வின் இறுதி குறிக்கோள் என்ன என்ற கேள்வியை கேட்க மறந்து விடுவார்கள்.

சில்லறையை பொறுக்க ஆரம்பித்தவன் களைத்து போனபின் எதற்காக இவ்வளவு காசுகளை பொறுக்கிக்கொண்டிருக்கிறோம் என்று யோசிக்க ஆரம்பித்தால் வீடு திரும்பும் ஆசை ஏற்படும். அதுபோல அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றில் உள்ள குறைகளை அறிந்தவுடன் வீடுபேற்றில் ஆசை வரும்

பலன்களில் உள்ள குறைகள்

செடியில் உள்ள ரோஜாமலர் தன் அழகால் அனைவரையும் கவர்ந்து இழுப்பது போல மேற்குறிப்பிட்ட மூன்று பலன்களும் மக்களை தொடர்ந்து கர்மகாண்டத்தை பின்பற்றவைக்கின்றன. அருகில் செல்பவர்களை குத்தும் முள் மலருக்கு பின் மறைந்திருப்பது போல பின்வரும் மூன்று குறைகள் உலக இன்பங்களின் பின் மறைந்திருக்கின்றன.

முதல் குறை: துன்பம் கலந்த இன்பம்

இன்பம் தரும் எந்த பொருளும் சும்மா கிடைப்பதில்லை. அவற்றை சம்பாதிப்பதும் காப்பதுவும் துன்பமான செயல்கள். மேலும் எவ்வளவுதான் முயன்றாலும் அது மாற்றமடைந்து மறைவதை தவிர்க்கமுடிவதில்லை. கூட்டிகழித்து பார்த்தால் கிடைக்கும் அனைத்து இன்பங்களும் அதற்கு சரிசமமான துன்பத்தை நமக்கு தருகின்றன. துன்பம் கலவாத இன்பம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

இரண்டாம் குறை: நிறைவின்மை

எவ்வளவுதான் கிடைத்தாலும் போதும் என்ற நிலை ஏற்படுவதில்லை. இன்னும் இன்னும் என்று தொடர்ந்து தேடியலைவதிலேயே வாழ்வின் பெரும்பகுதி நேரமும் உழைப்பும் செலவாகிறது. செய்த புண்ணியத்தின் பலனாக சுவர்க்கத்திற்கு சென்றாலும் கூட அங்கு நிரந்தரமாக இருக்க முடியாது என்று வேதம் கூறுகிறது. காலத்தையும் வெளியையும் பிரிக்கமுடியாது என்பதால் சுவர்க்கம் என்பது என்றும் இருக்கும் ஒரு இடம் என்பது உண்மையாக இருக்க முடியாது என்று நமது தர்க்க அறிவும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் நமக்கு தெரிவிக்கின்றன.

வாழ்வில் வெற்றிபெற்றவர்களாக கருதப்படும் எவரும் தங்கள் சாதனையில் திருப்தி அடைந்து இனி எதுவும் வேண்டாம் என்று ஓய்வெடுப்பதாக தெரியவில்லை.   

மூன்றாம் குறை: அடிமைப்படுதல்

வசதிகள் பெருக பெருக அவை அடிப்படை தேவைகளாக மாறி முன்பைவிட இன்பத்திற்காக வெளியுலகை சார்ந்து இருப்பது அவசியமாகிறது.

மக்கள் சிறிதுகாலம் அறம், பொருள் இன்பம் ஆகியவற்றை நாடி ஓடியபின்தான் அவற்றில் இந்த மூன்று குறைகள் இருக்கின்றன என்ற உண்மையை உணர்வார்கள். அதுவரை தொடர்ந்து கர்மகாண்டத்தின் கட்டளைகளை பின்பற்றி அவர்கள் செயல் செய்து கொண்டிருப்பதை நிறுத்த முடியாது. அவரவர்களின் தற்போதைய நிலை அவர்கள் எவ்வளவு காலம் தொடர்ந்து கர்மகாண்டத்தின் பிடியில் இருப்பார்கள் என்பதை தீர்மானிக்கும்.

கர்மகாண்டத்தின் முடிவு

செய்யும் செயல்களின் மூலம் அவர்களின் அறிவுத்திறன் வளருகிறது. மேலும், தொடர்ந்து தேடுவது என்றும் ஒரு முடிவுக்கு வராது என்ற மனப்பக்குவமும் அவர்களுக்கு ஏற்படும். பின்னோக்கி நகரும் பாதையில் வேகமாக ஓடுவது உடற்பயிற்சிக்காக மட்டுமே. முன்னால் இருக்கும் நிலையான சுவற்றை எவ்வளவு வேகமாக ஓடினாலும் தொட முடியாது. அதுபோல பணம் சம்பாதிப்பது மனதை செம்மையாக்கிக்கொள்ள மட்டுமே. பணத்தால் நிலையான இன்பத்தை அடையவே முடியாது.

உடல் பயிற்சி செய்தவுடன் இயந்திரத்திலிருந்து கீழே இறங்குவது பொல மனப்பக்குவம் ஏற்பட்டதும் பணம் சம்பாதிக்கும் செயல்களை நிறுத்திவிட்டு கர்மகாண்டத்தின் நிலையற்ற பலன்களைப்போலல்லாமல் என்றும் நிலையான பலன் தரும் ஞானகாண்டத்தினுள் பிரவேசம் செய்யும்பொழுது கர்மகாண்டம் ஒரு முடிவுக்கு வருகிறது.

முடிவுரை:

பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகள் கொண்டது. கர்மகாண்டத்தை பற்றிய முற்றான விளக்கங்களை கொடுத்ததுடன் இந்த மூன்றாம் அத்தியாயத்தின் மூன்றாவது பகுதி இத்துடன் முற்றுப்பெருகிறது.

பயிற்சிக்காக :

1. மூன்று வகை மக்கள் யார்? அவர்களை இதுபோல் மூன்று வகையாக பிரிப்பதன் நோக்கம் என்ன?

2.கர்மகாண்டத்தின் மூன்று பரிந்துரைகள் என்ன?

3. கர்மகாண்டத்தின் மூன்று கட்டளைகள் என்ன?

4. கர்மகாண்டத்தின் மூன்று பலன்கள் யாவை?

5. கர்மகாண்டத்தின் பலன்களில் உள்ள மூன்று குறைகள் யாவை?

6. கர்மகாண்டத்தை பின்பற்றுவது எப்பொழுது ஒரு முடிவுக்கு வரும்?

சுயசிந்தனைக்காக :

1.குதிரை தன்மேல் அமர்ந்திருக்கும் வீரனைகாப்பது போல வேதம் முழுவதையும் கற்று தேர்ந்தவர் அனைத்து சடங்குகளையும் அவற்றை செய்பவர்களையும் செய்விப்பவர்களையும் காக்கும் சக்தி படைத்தவர் என்ற சாந்தோக்கிய வாக்கியத்தின் (IV.17.10) பொருளை ஆய்க.

2. கர்மகாண்டத்திலேயே உலகின் பெரும்பான்மையான மக்கள் இருப்பதற்கு காரணம் என்ன?

Wednesday, January 26, 2011

பாடம் 135: கர்மகாண்டமும் ஞானகாண்டமும் ( பிரம்மசூத்திரம் 3.3.60 )

வேதத்தை கர்மகாண்டம் என்றும் ஞானகாண்டம் என்றும் இரு பகுதிகளாக பிரிப்பதன் அடிப்படையை விளக்கி இவ்விரண்டில் எந்த ஒன்றை பின்பற்றுவது என்பது அவரவரின் தகுதியையும் விருப்பத்தையும் பொறுத்தது என்று இந்த பாடம் எடுத்துரைக்கிறது.

இருபிரிவுகள்

என்ன செயல்களை செய்யவேண்டும், எப்படி வாழவேண்டும் என்று செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேதத்தின் முதல்பகுதி கர்மகாண்டம் என்றும் எதை அறிந்து கொள்ளவேண்டும் என்று கற்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பின் பகுதி வேதாந்தம் என்னும் ஞானகாண்டம் என்றும் வழக்கில் இருந்து வருகிறது. இவ்வாறு வேதத்தை இரண்டாக பிரிப்பதற்கு நான்கு அடிப்படை காரணங்கள் உள்ளன.

முதல் அடிப்படை: என்ன உள்ளது?

பழங்கால மன்னர்களின் ஆட்சியை விவரிக்கும் புத்தகத்தை சரித்திரம் என்றும் பொருள்களின் தன்மையை விளக்கும் புத்தகத்தை பௌதீகம் என்றும் பிரிப்பதுபோல இதைச்செய், அதைச்செய்யாதே என்று அறிவுறுத்தும் வேதத்தின் முதல் பகுதியை கர்மகாண்டம் என்றும் உலகம், கடவுள், வாழ்க்கை ஆகியவற்றை ஆராயும் இரண்டாம் பகுதியை ஞானகாண்டம் என்றும் பொருளடக்கத்தின் அடிப்படையில் வேதத்தை இரண்டாக பிரிக்கலாம்.

இரண்டாம் அடிப்படை: யாருக்காக?

மாணவர்கள் படிக்கவேண்டியதை பாடபுத்தகங்கள் என்றும் பாமரமக்கள் தினமும் படிப்பதை செய்திதாள்கள் என்றும் பிரிப்பதுபோல யார் படிக்கவேண்டும் என்ற அடிப்படையில் வேதம் இரண்டாக பிரிக்கபடுகிறது. ஏன், எதற்காக என்று கேள்விகள் கேட்டு கிடைக்கும் பதில் சரிதானா என்று ஆய்ந்தறியும் திறன் இல்லாதவர்களுக்கு முதல் பகுதியும் தர்க்கம், அறிவியல் மற்றும் பகுத்தறிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேதத்தின் இரண்டாம் பகுதியும் ஏற்புடையதாகும்.

மூன்றாம் அடிப்படை: எதற்காக தெரிந்து கொள்ள வேண்டும்?

சமைத்துப்பார் என்ற புத்தகத்தை படிப்பவரின் நோக்கம் அகராதியை படிப்பவரின் நோக்கத்திலிருந்து வேறுபட்டது. அதுபோல் வாழ்வின் அடுத்த குறிக்கோளை அடைய ஆசைப்படுபவர்கள் படிக்கவேண்டியது கர்மகாண்டம். வாழ்வின் இறுதியான குறிக்கோள் என்னவென்றும் அதை அடைவது எப்படி என்றும் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் கற்கவேண்டியது வேதாந்தம்.

நான்காம் அடிப்படை: எப்படி பலன் கிடைக்கும்?

கர்மகாண்டத்தில் கூறப்பட்டுள்ள அறிவுரைகளை அறிந்து கொள்வதால் மட்டும் எவ்விதபயனும் கிடைக்காது. அவற்றை வாழ்வில் கடைபிடித்தால் மட்டுமே வேண்டிய பலன்கள் கிடைக்கும். ஆனால் ஞானகாண்டத்தை படித்து அதில் உள்ள அறிவை அடைந்தால் மட்டும் போதும். எவ்வித செயல்களையும் அதற்குபின் செய்யவேண்டிய அவசியம் இல்லை. எனவே வேதாந்தம் நேரடியாக பலனை கொடுக்ககூடியது.

கர்மகாண்டம் சொல்லும் செயல்களை யாரையேனும் செய்விப்பதன் மூலம் நாம் பலனை அடையலாம். சமைத்துப்பார் என்கிற புத்தகத்தை படித்து வேறு ஒருவரை அதன்படி செயல் செய்யவைத்தால்கூட நமக்கு சாப்பாடு கிடைக்கும். ஆனால் ஞானகாண்டத்தில் உள்ள பாடங்களை நாம்தான் கற்கவேண்டும். ஆள்மாறாட்டம் செய்து கல்லூரித்தேர்வுகளில் வெற்றிபெறுவது போல் ஆசிரியருக்கு பணம் கொடுத்து அறிவை வாங்கிவிடமுடியாது.

நான்கு குறிக்கோள்கள்

உலக வாழ்வில் மனிதர்கள் அடைய ஆசைப்படும் அனைத்து தேவைகளையும் நான்கு வகைகளாக பிரித்து அவற்றை நிறைவேற்ற உதவுவது வேதம்.

முதல் குறிக்கோள்: பொருள்

உயிர்வாழ்வதற்கு அவசியமான உணவு, உடை, உறையுள் ஆகியவற்றை அடைய தேவையான பொருளை ஈட்டுவது எப்படி என்று வேதம் சொல்லித்தருகிறது. மனிதர்களை அவர்களின் குணங்களின் அடிப்படையில் பிராமணன், சத்திரியன், வைசியன் மற்றும் சூத்திரன் என்று பிரித்து ஒவ்வொருவர் செய்யவேண்டிய தொழில்களை வேதம் பரிந்துரை செய்கிறது.

இரண்டாம் குறிக்கோள்: இன்பம்

அடிப்படைத்தேவைகள் நிறைவேறியபின் ஐம்புலன்களின் ஆசைகளை அனுபவித்து உலகவாழ்வில் வசதியுடன் வாழ வேதம் மனித வாழ்வை பால்யம், குமாரம், வாலிபம், வயோதிகம் என்று நான்காக பிரித்து ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்ற வாழ்க்கை முறைகளை போதித்துள்ளது.

மூன்றாம் குறிக்கோள்: தர்மம்

இவ்வுலக இன்பம் மட்டுமின்றி இறந்ததற்குபின் சொர்க்க சுகத்தை அனுபவிப்பதற்கும் பூமியில் மறுபடி மனிதனாக பிறந்து முக்தியடைவதற்கும் புண்ணியம் அவசியம். மேலும் வாழ்வின் முதல் இரண்டு குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்ள அதர்மத்தை தவிர்ப்பது மிகவும் முக்கியம். புண்ணியத்தை பெற செய்யவேண்டிய செயல்களையும் பாவத்தை தவிர்க்க செய்யக்கூடாத செயல்களையும் வேதம் பட்டியலிட்டு தந்துள்ளது.
நான்காம் குறிக்கோள்: முக்தி (வீடுபேறு)

மீண்டும் மீண்டும் பிறந்து இன்பமும் துன்பமும் கலந்த இவ்வாழ்வில் இருந்து விடுபட்டு இறைவனடி சேரவேண்டும் என்பது மரணகாலத்தில் மக்களுக்கு ஏற்படும் ஆசை. எவ்வளவுதான் முயன்று பாடுபட்டாலும் துன்பத்தை முற்றாக தவிர்க்கமுடியாது என்பதை உணர்ந்தபின் என்றும் குறையாத இன்பமும், தடையில்லாத அமைதியும், நிரந்தரமான பாதுகாப்பும் உள்ள வாழ்வு வேண்டும் என்ற ஆசை மனிதனுக்கு ஏற்படும். இந்த இறுதி ஆசையையும் நிறைவேற்ற வேதம் மனிதனுக்கு உறுதுணையாய் இருக்கிறது.

அறம், பொருள், இன்பம் என்ற முதல் மூன்று குறிக்கோள்களை அடைய கர்மகாண்டமும் முக்தி என்ற வீடுபேற்றை அடைய ஞானகாண்டமும் மக்களுக்கு வழிகாட்டுகின்றன.

யாருக்கு எது?

பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே. அவரவரின் தகுதிக்கு ஏற்பதான் ஆசைகள் உருவாகும். உருவான ஆசைகளை பூர்த்தி செய்து கொள்ள வேதம் துணைசெய்யும்.

முடிவுரை :

வாழ்வை செம்மையாக வாழ மனிதனுக்கு முழுமையாக வழிகாட்டுவது வேதம் மட்டுமே. முதலில் புலன்களின் ஆசைகளை நிறைவேற்றுவதன் மூலம் இன்பத்தை உலகத்திலிருந்து பெறலாம் என்று நினைக்கும் மனிதனுக்கு கர்மகாண்டம் வழிகாட்டுகிறது. உலகத்தை மாற்றியமைக்க முடியாது, அப்படியே மாற்றினாலும் அது நிலையான இன்பத்தை தர சக்தியற்றது என்று உணர்ந்து மாறாத பரமனை நாடி முக்தியடைய ஆசைப்படும் மனிதனுக்கு வேதாந்தம் உதவி செய்கிறது.

கர்மகாண்டத்தில் சொல்லும் செயல்களை பின்பற்றாமல் ஞானகாண்டத்திற்கு தேவையான அறிவாற்றலையும் மனப்பக்குவத்தையும் பெறமுடியாது. வேதாந்தத்தில் சொல்லும் கருத்துக்களை புரிந்து கொள்ளாமல் முக்தியடைய முடியாது. எனவே ஞானகாண்டத்திற்கு கர்மகாண்டம் அவசியம். ஞானகாண்டத்திற்கு தொடராவிட்டால் வெறும் கர்மகாண்டம் அனாவசியம்.

கர்மகாண்டத்தை முடித்துவிட்டுத்தான் ஞானகாண்டத்திற்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் தவறு. ஏனெனில் கர்மகாண்டத்தில் சொல்லப்பட்ட செயல்களுக்கு ஒரு முடிவேயில்லை. யாராலும் முழுமையாக இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம் என்ற குறையில்லாமல் எதையும் செய்து முடிக்கமுடியாது. மேலும் விமானநிலைத்தை அடையும் வரைதான் நிலத்தில் ஊறும் வாகனங்கள் தேவை. அதன் பின் அவற்றை விட்டுவிட்டு வானத்தில் பறப்பதுதான் புத்திசாலித்தனம்.

எனவே ஞானகாண்டத்தின் துணையுடன் குறைவில்லா இன்பவாழ்க்கையை விரைவில் அடைய வேண்டும். அதன்பின் தொடர்ந்து கர்மகாண்டத்தை பின்பற்றுவது அவசியமா இல்லையா என்ற கேள்விக்கு பொருள் இல்லையென்பது நான் பரமன் என்ற வேதத்தின் முடிவை அடைந்தபின் புரியும்.


பயிற்சிக்காக :

1. வேதத்தின் இரு பிரிவுகளின் பெயர்கள் என்னென்ன?

2.வேதம் எந்த நான்கு அடிப்படையில் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது?

3. மனிதர்களுக்கு வாழ்வில் இருக்கும் நான்கு குறிக்கோள்கள் யாவை?

4. வேதத்தின் எந்த பிரிவு யாருக்கு பயன்படும்?

சுயசிந்தனைக்காக :

1.வாழ்வின் இரண்டாம் குறிக்கோளான இன்பத்திற்கும் நான்காவது குறிக்கோளான முக்தியில் பெறும் இன்பத்திற்கும் என்ன வித்தியாசம்?

2. கர்மகாண்டத்தை பின்பற்றாமலேயே முக்தியடைய முடியாதா?

3. சமவெளியில் காற்று வீசும் எனத்தெரிந்துகொண்டவன் பிள்ளைகளை குறித்து வருந்துவதில்லை என்ற சாந்தோக்கிய வாக்கியத்தின் (III.15.2) பொருள் என்ன?

பாடம் 134: சந்தியா வந்தனம் (பிரம்மசூத்திரம் 3.3.59 )

பாரம்பரிய சடங்குகளை பின்பற்றும் விஸ்வரூபஉபாசனையை தவிர ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒரு சடங்கை தேர்ந்தேடுத்து அதற்கு மேலதிக முக்கியத்துவம் கொடுத்து முக்தியடையும் வரை தொடர்ந்து கடைபிடிக்கவேண்டும். இவ்வகையில் சந்தியாவந்தனம் என்பது ஒரு முக்கியமான சடங்கு. சந்தியாவந்தனம் செய்யும் முறை எந்த வேதத்தை பின்பற்றுபவர்கள் என்பதை பொறுத்தும் எந்த ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதை பொறுத்தும் மாறுபடும். எனவே எப்படி செய்ய வேண்டும் என்பதை தவிர்த்து எதற்காக சந்தியா வந்தனம் செய்ய வேண்டும் என்பது இந்த பாடத்தில் விவரிக்கப்படுகிறது.

சந்தியாவந்தனத்தின் முக்கியத்துவம்

மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் மயங்கிய ஒளியினைப்போல மன மயக்கத்தை தரும் இந்த உலக அனுபவங்களிலிருந்து ஒரு நாளைக்கு மூன்று முறையாவது விடுபட்டு ‘பரமனை அறிந்து கொள்ள முயலவேண்டும்’ என்று நமக்கு நாமே நினைவு படுத்திக்கொள்ளவே சந்தியாவந்தனம் என்ற சடங்கை அனைவரும் செய்யவேண்டும் என்று வேதம் வற்புறுத்துகிறது. காலை விழித்ததுமுதல் இரவு வரை தொடர்ந்து இவ்வுலகவிவகாரங்களில் ஈடுபட்டுகொண்டிருப்பதால்தான் இவ்வுலகத்திற்கு மேற்பட்ட சத்தியமான பரமன் என்று ஒருவன் இருக்கிறான் என்ற உண்மையை தெரிந்துகொள்ளும் சந்தர்ப்பம் பெரும்பாலோருக்கு வாய்ப்பதில்லை.

முக்தியடையவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை தினமும் மூன்று முறை மூன்று நிமிடம் கண்களை மூடி கடவுளிடம் பிரார்த்தித்தால் கூட சம்பிரதாயப்படி முறையாக சந்தியாவந்தனம் செய்வதன் பலன் கிடைக்கும். கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவை உறுதிபடுத்த உதவுவதே இந்த சடங்கின் நோக்கம்.

இவ்வுலகம் யாரால் படைக்கப்பட்டது, மனித வாழ்வின் நோக்கம் என்ன என்பது போன்ற கேள்விகளை யாரேனும் கேட்டால் ஏதோ தமக்கு சம்பந்தமில்லாத விஷயம் என்பதுபோல் பலர் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொள்வார்கள். இந்த கேள்விகளுக்கு பதிலை தெரிந்து கொள்ளும்வரை இவர்கள் வாழ்வில் துயரத்தை தவிர்க்க முடியாது. தாங்கமுடியாத துக்கம் ஏற்படும்பொழுது இவர்கள் கோவிலுக்கு வந்து ‘என் அழுகுரல் உன் காதில் விழவில்லையா’ என்று பிரார்த்திக்கும்பொழுது ‘சந்தியாவந்தனம் செய்யவேண்டும் என்று நான் சொல்வதை நீ ஏன் கேட்கவில்லை’ என்று இறைவனிடமிருந்து மௌனமான பதில் கிடைக்கும்.

ஆரோக்கியமாக இருக்க என்ன வகை உணவு உண்ணவேண்டும் எவ்வளவு உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று  ஆரோக்கிய நிபுணர்கள் கொடுத்த பரிந்துரைகளை பொருட்படுத்தாது மனம் போன போக்கில் வாழ்ந்துவிட்டு உடல்நிலை சீரழிந்த பின் மருத்துவரிடம் மன்றாடி பயனில்லை.  

சந்தியா வந்தனம் என்பது விடிகாலை, உச்சிப்பொழுது, அந்திமாலை என்ற மூன்று வேளைகளில் காயத்திரி மந்திரத்தை ஜெபித்து இறைவனை பிரார்த்திப்பது ஆகும். இதை அனைவரும் தினமும் செய்ய வேண்டும் என்ற வேதத்தின் பரிந்துரையை பொருட்படுத்தாதவர்கள் அடிக்கடி துன்பத்திற்கு ஆளாகி கோவிலுக்கு சென்று இறைவனிடம் வேண்டுகோள் விடுப்பதை தவிர்க்க முடியாது.  

எல்லாம் நலமே அமையும் பொழுது கடவுளை மறந்து விடக்கூடாது. அன்றாட அலுவல்கள் எவ்வளவு அதிகமிருந்தாலும் குறிப்பிட்ட நேரங்களை கடவுளுக்கு என்று தனியாக ஒதுக்கி எனக்கு இது வேண்டும் அல்லது அது வேண்டும் என்று அடிக்கடி உன்னிடம் கேட்காமல் இருக்கும் வரம் வேண்டும் என்று மட்டும் கேட்கும் சந்தியாவந்தனம் செய்து கடவுளை பிரார்த்திப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

சந்தியா வந்தன மகிமை – 1: சோம்பல் நீக்கம்

கடவுள் நமக்கு உதவவேண்டுமென்றால் அந்த உதவியை பெற நம்மை நாம் தயார் செய்து கொள்ளவேண்டும். சந்தியாவந்தனத்தை அதிகாலையில்  செய்யவேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் விடிவதற்கு முன் எழுவது பழக்கமாகி சோம்பல் நீங்குவதுடன் நாளடைவில் நம் செயல் திறன் அதிகரித்து வாழ்வில் ஏற்படும் இடர்களை சந்திக்கும் திறமை நமக்கு ஏற்படும்.

சந்தியா வந்தன மகிமை – 2: ஆரோக்கியம்

பிராணாயாமம் செய்வது உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்தை வளர்க்க பெரிதும் உதவும். தொடர்ந்து உழைக்கும் உடலுக்கும் மனதுக்கும் சந்தியாவந்தனம் செய்வதன் மூலம் சிறிது நேரம் ஓய்வு கிடைப்பதால் மனஅழுத்தம் குறைந்து ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். 

சந்தியா வந்தன மகிமை – 3: தவறான செயல்களுக்கு தடை

அவ்வப்பொழுது சந்தியாவந்தனம் செய்வதன் மூலம் கடவுள் ஞாபகம் ஏற்படுவதால் தவறான செயல்கள் செய்யும் வாய்ப்பு வெகுவாக குறையும். மனம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்காமல் ஒரு சிலநிமிடம் ஓய்வெடுப்பதால் புத்தியின் வார்த்தைகளை செவிகொடுத்து கேட்க அவகாசம் கிடைக்கும். ஆசைகள் அளவுக்கு மீறாமல் ஒரு நிதானம் ஏற்படும்.

பிடித்தது பிடிக்காதது என்ற அடிப்படையில் செயல்படும் மனம் நிலையாத இன்பங்களை தேடுவதிலேயே அனைத்து நேரத்தையும் செலவிடும் தன்மை உடையது. சந்தியாவந்தனம் செய்வதனால் நிலையான இன்பத்தை தேடுவதுதான் வாழ்வின் குறிக்கோள் என்ற புத்தியின் அறிவுரையை திரும்ப திரும்ப கேட்பதன் மூலம் விரைவில் மனம் திருந்தி அதனுடன் ஒத்துழைக்க ஒத்துக்கொள்ளும்.

சந்தியா வந்தன மகிமை – 4: சரியான செயல்களுக்கு ஊக்கம்

நல்லது கெட்டது என்ற அடிப்படையில் செயல்படும் புத்திக்கு சந்தியாவந்தனம் ஊக்கம் அளிக்கிறது. நிலையான இன்பத்தை பெற தர்மமான காரியங்களை மட்டும் செய்து வாழ்வில் அதர்மத்தை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என்ற ஆண்டவனின் கட்டளையை சந்தியாவந்தனம் நினைவுபடுத்தும்.

சந்தியா வந்தன மகிமை – 5: பாதையில் கவனம்

வேலை செய்து பணம் சம்பாதித்து உலக இன்பங்களை அனுபவிப்பது முக்தியடைய வெகு அவசியமான ஒரு செயல். ஆனால் அதிலேயே முழுகவனத்தையும் செலுத்திவிட்டால் முக்தியடைய முடியாது. சந்தியாவந்தனம் என்பது நாம் வேலை செய்வதன் காரணம் பணம் சம்பாதிப்பதற்காக அல்ல என்றும் வேதாந்தத்தை படிக்க தேவையான மனப்பக்குவத்தை பெறுவதற்காகவே என்றும் நாளில் மூன்று முறை நமக்கு எடுத்துரைக்கிறது. எனவே செய்யும் வேலைகளை கர்ம யோகமாக செய்யவும், புலன்களை அடக்கி மனதை புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் சந்தியாவந்தனம் உதவுகிறது.

முடிவுரை :

புலன்களின் ஆசைகளையும்  மனதின் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ளவே மக்கள் பணம், பதவி போன்றவற்றை நாடி தொடர்ந்து உழைக்கிறார்கள். அனுபவிப்பதால் புலன்களின் ஆசைகள் அடங்காது, அதிகம் வளரும். அதே போல் மனதின் தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலம் இனி எதுவும் வேண்டாம் என்ற பூரணமான நிலையை அடையவே முடியாது. இந்த உண்மையை புத்தகங்கள் படிப்பதன் மூலமோ மற்றவர்களின் அறிவுரைகள் மூலமோ புரிந்து கொள்ள முடியாது.  கடவுள் யார், அவருக்கும் நமக்கும் என்ன உறவு என்பதை தெளிவாக அறிந்து கொண்டால் மட்டுமே பூரணத்துவத்தை அடையமுடியும்.

உலகைப்படைத்த இறைவனை நமக்கு ஞாபகப்படுத்தி உலகில் எப்படி துன்பத்தை தவிர்த்து இன்பமாக வாழ்வது என்ற பரம ரகசியத்தை அறிந்து கொள்ள சந்தியாவந்தனம் போன்ற சடங்குகள் உதவுகின்றன.  ஆகவேதான் தினமும் அன்றாட அலுவல்களை சிறிது நேரம் நிறுத்தி வைத்து சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என்று வேதம் விதித்திருக்கிறது.

பயிற்சிக்காக :

1. சந்தியாவந்தனம் செய்வதன் அவசியமென்ன?

2. சந்தியாவந்தனம் என்பது போன்ற தினம் செய்யும் சடங்குகளின் ஐந்து மகிமைகள் என்னென்ன?

சுயசிந்தனைக்காக :

1. பணம் நிலையான இன்பத்தை கொடுக்காது என்ற உண்மையை ஏன் மக்கள் புரிந்து கொள்வதில்லை?

2. மனதின் தேவைகளை ஏன் தொடர்ந்து அதிகமாகின்றன?

Thursday, January 13, 2011

பாடம் 133: விஸ்வரூப உபாசனையின் பலன் ( பிரம்மசூத்திரம் 3.3.58 )

மதங்களின் பெயரால் நாம் பின்பற்றும் அனைத்து சடங்குகளையும் உள்ளிட்ட விஸ்வரூப உபாசனை எவ்வாறு படிப்படியாக நம்மை முக்தி அடைய வழிவகுக்கிறது என்பதை  இந்த பாடம் விளக்குகிறது.  

உலக அனுபவங்கள்

பார்த்தல், கேட்டல், சுவைத்தல், தொடுதல், முகர்தல் ஆகிய ஐந்து செயல்கள் மூலமாக இவ்வுலகை மனம் அனுபவிக்கிறது. கிடைக்கும் அனுபவங்களை அப்படியே ஏற்றுக்கொண்டால் வாழ்வு என்றும் இனிமையாக இருக்கும். அவ்வாறில்லாமல் அனுபவங்களை பிடித்தவை அல்லது பிடிக்காதவை என்று பிரித்து பிடித்த அனுபவங்களை தேடுவதாலும் பிடிக்காதவற்றை தவிர்க்க முயலுவதாலும்தான் வாழ்க்கை ஒரு போராட்டமாக மாறுகிறது.

பிடித்தவை என்றும் பிடிக்காதவை என்றும் பாகுபாடு செய்வது மனது. மனதை இவ்விதம் செய்யத்தூண்டுவது நமது ஐந்து புலன்கள். உலகில் உள்ள எந்த ஒரு பொருளுக்கோ அல்லது மனிதருக்கோ நம்மை ஈர்க்கும் சக்தி சிறிதும் கிடையாது. இருப்பதாக தோன்றும் அந்த சக்தியை அளிப்பது நமது புலன்கள்தான். உதாரணமாக தினமும் காலையில் செய்தித்தாளை வாசித்து பழகியகாரணத்தால் நாளின் ஒரு முக்கியமான அங்கம் என்ற முக்கியத்துவத்தை செய்தித்தாள்களுக்கு கொடுப்பது நம் மனம்தான்.

வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு அனுபவமும் நமது அறிவை அதிகபடுத்தி எது நல்லது எது கெட்டது என்ற பாகுபாடு செய்யும் திறனை வளர்க்கிறது. இந்த பகுத்தறிவு நமது புத்தியை சேர்ந்தது.

மனம்    

நமது ஐந்து புலன்களும் கைகள், கால்கள் மற்றும் பேசும் நாக்கு இந்த மூன்று கரணங்களும் மனதின் நேரடிக்கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியவை. ஆனால் பழகிய அனுபவங்கள்தான் வேண்டும் என்ற புலன்களின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்து கண்போன போக்கிலே கால் போக மனம் அனுமதி தந்துவிடுகிறது. எனவே புலன்களின் தேவைகளை நிறைவேற்றும் செயல்களிலேயே நமது கரணங்கள் ஈடுபட ஆரம்பித்துவிடுகின்றன. புலன்களின் ஆசை நாளுக்கு நாள் வளருமே தவிர குறையாது. மேலும் அவற்றின் தேவைகளை தொடர்ந்து பூர்த்தி செய்யும் வகையில் உலக அனுபவங்கள் அமையாது.

இவ்விரு காரணங்களால் வாழ்வை நிம்மதியுடனும் பூர்ணத்துவத்துடனும் ஆனந்தமாக அனுபவிக்காமல் ஒரு குறிப்பிட்ட அனுபவத்திற்காக அனைவரும் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறோம்.

புத்தி

மனம் புத்தியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. ஆனால் புலன்களின் ஆசைகளை நிறைவேற்ற தொடர்ந்து உலகில் உள்ள பொருட்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் மனது புத்தியின் அறிவுரையை கேட்க அவகாசத்தை ஒதுக்குவதில்லை. ஓடும் மனதை பிடித்து நிறுத்த புத்திக்கு சக்திவேண்டும். இந்த சக்தி நல்ல புத்தகங்கள் படிப்பது, சான்றோர்களின் தொடர்பு, கர்மயோகமாக வேலைகளை செய்வது ஆகியவை மூலம் பெறலாம். ஆனால் இந்த செயல்களை செய்வதற்கும் புத்திக்கு மனதின் துணை அவசியம். கவர்ச்சி நடிகைகளின் படம் இருக்கும் புத்தகங்களை படிக்கவே நேரம் இல்லாதபொழுது அறிவை வளர்க்கும் புத்தகங்களை படிக்க மனதிற்கு பொறுமை இருப்பதில்லை.

இந்த போராட்டத்தில் புத்தி வெற்றி அடைய உதவுவது விஸ்வரூப உபாசனை.

மனமும் புத்தியும்

பிடித்தது பிடிக்காதது என்று அனுபவங்களை பாகுபாடு செய்யாமல் நல்லது கெட்டது என்ற அடிப்படையில் நாம் செயல்படவேண்டும். புலன்களின் தாளத்திற்கு ஆட்டம்போட்டுகொண்டிருக்கும் மனதை அவற்றின் பிடியிலிருந்து விடுவித்து புத்தியின் கட்டுப்பாடிற்குள் கொண்டுவந்தால் மட்டுமே இது சாத்தியம். இல்லையெனில் உலகம் இன்பத்தை கொடுப்பதுபோல் ஆசைகாட்டி நம்மை மீளா துன்பத்தில் தள்ளிவிடும்.

வாழ்வின் ஒவ்வொரு குறிக்கோள் நிறைவேறியவுடன் அடுத்தது என்ன என்ற கேள்வி எழக்காரணம் நம்மிடம் ஒரு நிறைவு ஏற்படாததுதான். திரும்ப திரும்ப குறிக்கோள்களை அடைந்தபின்னும் தேடியலையும் நிம்மதியும் நிலையான திருப்தியும் எற்படாததற்கு என்ன காரணம் என்று யோசிக்க புத்திக்கு நேரம் கிடைப்பதற்குள் வயதாகி மேலும் ஓடமுடியாமல் வாழ்வில் சலிப்பு ஏற்பட்டுவிடும்.

உடலும் மனமும்

வயிற்றுப்பசி தீர்ந்தாலும் நாக்கு போதும் என்று திருப்தியடைவதில்லை. தீபாவளியை சிறப்பாக கொண்டாடினாலும் இது போதும் என்ற நிறைவு மனதிற்கு ஏற்படுவதில்லை. அடுத்த தீபாவளிக்கு என்ன செய்யவேண்டும் என்பதை இந்த தீபாவளி முடியும் முன்பே மனம் கனவு காண ஆரம்பித்துவிடும். கனவுகளை நனவாக்க மேலும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.

உடலுக்கு வயதாவது போல் மனதிற்கு வயதாவதில்லை. இன்னும் வேண்டும் என்ற மனதின் ஆசையை தொடர்ந்து வளர்கிறது. ஆனால் ஆசையை நிறைவேற்றும் சக்தி தொடர்ந்து குறைகிறது. புத்திகூர்மையும் உடலின் சக்தியும் முதுமையில் குறைந்து விடும். எனவேதான் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இளமை ஏமாற்றமான முதுமையில் முடிகிறது.

எனக்கு இது பிடித்திருக்கிறது என்று உலகத்தின் பின்னே ஓடும் மனதை நிறுத்தி இவ்வாறு ஓடிக்கொண்டே இருப்பது நமக்கு நல்லதா என்ற கேள்வியை புத்தி கேட்கவேண்டும். இவ்வாறு கேட்பதற்கு சடங்குகள் பெரிதும் உதவுகின்றன.

விஸ்வரூப உபாசனையின் பயன்

கடவுளின் பெயரால் செய்யப்படும் சடங்குகள் மனதை புத்தியின் கட்டுக்குள் கொண்டுவரும் வேலையை திறம்பட செய்கின்றன. உதாரணமாக புதிய ஆடைகளை உடுத்தி விதவிதமான அலங்காரங்கள் செய்து வாணவேடிக்கை மற்றும் பட்டாசுகளை கொளுத்தி அறுசுவை உணவை உண்டு சுற்றத்தார்கள் மற்றும் நண்பர்கள் புடை சூழ கொண்டாடும் வாய்ப்பை தரும் தீபாவளி பண்டிகை மனதிற்கு பிடித்தமான ஒரு சடங்கு. பகவத்கீதை படிக்கலாமா தீபாவளியை கொண்டாடலாமா என்ற கேள்விக்கு மனம் சந்தேகமில்லாமல் தீபாவளிக்கு ஓட்டுப்போடும். இதற்கு காரணம் கண், காது, சுவைக்கும் நாக்கு போன்ற ஐந்து புலன்களும் தங்களது பசியை தீர்த்துக்கொள்ள தீபாவளியை ஆவலோடு எதிர்பார்த்துகொண்டிருப்பதுதான்.

ஆனால் இவற்றின் விருப்பத்தை நிறைவேற்ற விடியற்காலையில் எழுந்திருக்க வேண்டும், தலைக்கு எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும், பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெறவேண்டும் என்பது போன்ற பல பிடிக்காத செயல்களை செய்ய மனம் உடன்பட்டே ஆகவேண்டும். எடுத்த நோன்பிற்கு எவ்வித பங்கமும் ஏற்பட்டுவிடகூடாது என்ற பயபக்தியுடன் சடங்குகள் பின்பற்றபடுகின்றன.

எவ்வளவுதான் நாக்கு தா தா என்று மனதை வற்புறுத்தினாலும் இறைவனுக்கு படைத்து பூஜை செய்யும் வரை ஜீரா சொட்டும் ஜிலேபியை தொட கைகளுக்கு மனம் அனுமதி கொடுப்பதில்லை.  

இவ்வாறு புலன்களை மனதின் கட்டுப்பாட்டிற்கும் மனதை புத்தியின் கட்டுப்பாட்டிற்கும் கொண்டுவர சடங்குகள் உபயோகப்படுகின்றன. எவ்வளவு அதிகமான சடங்குகள் ஒரு குடும்பத்தில் பின்பற்றபடுகின்றனவோ அவ்வளவு விரைவில் மனம் புத்தியின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.

நாள்தோரும் பூஜை, வாரம்தோரும் உபவாசம், மாதமிருமுறை நோன்பு, வருடத்தில் பத்து பன்னிரண்டு பண்டிகைகள் என்று பல்வேறு சடங்குகளை விஸ்வரூப உபாசனையாக செய்தோமானால் புத்தியின் சக்தி அதிகரித்து ஏன் இந்த சடங்குகளை செய்யவேண்டும் என்று ஆராய தொடங்கி முக்தியை நோக்கிய பயணம் தொடங்கிவிடும்.   

திருமண சடங்குகள்

பெண்வீட்டுகாரர்களுக்கும் பிள்ளைவீட்டுக்காரர்களுக்கும் எவ்வித மனஸ்தாபமும் வராமல் இருக்க எவ்வளவுதான் முயன்றாலும் முடிவதில்லை. இதை இப்படிச்செய்ய வேண்டும், அதை அப்படிச்செய்ய வேண்டும் என்ற சடங்குகள்தான் இதற்கு காரணம். மேலும் திருமணம் முடிந்ததும் இதை இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம் என்ற ஏக்கம் எல்லோருக்கும் வரும்.

மனிதன் யாருமில்லாத காட்டில் எவ்வளவுதான் வசதிகள் இருந்தாலும் வாழசம்மதிக்கமாட்டான். சுற்றிலும் மனிதர்கள் இருப்பது மிக அவசியம். கிட்ட உறவு முட்ட பகை என்பதும் உண்மை. எவ்வாறு இவ்வுலகில் இன்பமாக வாழ்வது என்பதை வேதத்தை முறையாக படித்தால் மட்டுமே தெரியவரும். இல்லையெனில் தனித்து இருக்க பிடிக்காமல் திருமணம் செய்துகொண்டு சேர்ந்து இருக்க பிடிக்காமல் விவாகரத்து செய்துவிட்டு மறுபடியும் வேறு யாரிடம் ஏமாறலாம் என்று தொடர்ந்து இன்பத்தை தேடி  அலைவதை தவிர்க்க முடியாது.

வேதத்தின் அடிப்படையில் அமைந்த சமுதாயங்களில் திருமணம் என்பது ஆண் பெண் என்ற இருவர் சம்பந்தபட்டது மட்டும் அல்ல. இரு குடும்பங்கள் ஒன்றுடன் ஒன்று உறவு கொள்வதை உறுதிப்படுத்துவதுதான் திருமணம்.

சடங்குகள் திருமணத்துடன் நிற்பதில்லை. தலை தீபாவளி, குழந்தைக்கு ஆண்டு நிறைவு, மொட்டையடித்து காது குத்துவது என்று தொடர்ந்து வெவ்வேறு சடங்குகளை செய்யவேண்டியிருக்கும். சமுதாயத்துடன் சேர்ந்து வாழும் கட்டாயம் மனிதனுக்கு இருப்பதால் விவாகரத்து என்பதோ இந்த சடங்கை செய்ய மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பதோ பெரும்பாலும் முடிவதில்லை.

எனவே பிடிக்காவிட்டாலும் செய்ய மனம் உடன்பட்டுவிடும். புத்தி வெற்றிபெற்று விடும். எவ்வளவுதான் முயன்றாலும் எல்லாம் நம் விருப்படி எப்பொழுதும் நடக்காது என்ற உண்மை புரிந்தவுடன் நிலையற்ற உலகை மாற்றும் முயற்சியை விட்டுவிட்டு புலன்களின் பின் ஓடும் மனதை மாற்றும் முயற்சி தொடங்கும். இந்த முக்கியமான மாற்றத்திற்கு சடங்குகள் அடிகோலுகின்றன.

முடிவுரை :

உலகம் நிலையற்றது. வெற்றி தோல்வி, வளமை வறுமை, லாபம் நஷ்டம், வாழ்வு தாழ்வு, புகழ்ச்சி இகழ்ச்சி, நட்பு பகை, சண்டை சமாதானம், ஊடல் கூடல் என்ற இருமைகளுக்கிடையே தொடர்ந்து ஊசலாடுவதுதான் வாழ்க்கை.

இன்பம் கிடைக்கும் என்று மனதுக்கு பிடித்ததை நாடி ஓடினால் நிச்சயம் துன்பத்திற்கு ஆளாவோம். இது போன்ற அனுபவங்கள் செய்யும் செயல்களை ஏன் செய்கிறோம் என்று நம் புத்தியை யோசிக்கவைத்து அறிவை அதிகரிக்க வாய்ப்புகளை கொடுக்கின்றன.

விஸ்வரூப உபாசனையாக வழிவழியாக சமுதாயத்தில் பின்பற்றப்படும் சடங்குகள் இப்படித்தான் வாழவேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தி அதன்மூலம் புலன்களின் பின் ஓடிக்கொண்டிருக்கும் மனதை கட்டுக்குள் கொண்டு வர உதவுகின்றன.

இந்த உலகம் நாம் துன்பபடுவதற்காக ஏற்படுத்தப்பட்டது அல்ல. என்றும் இன்பமாக வாழ்வதற்காகவே இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டுள்ளது. என்றும் இன்பமாயிருப்பது எப்படி என்பதை புத்தி கற்றுக்கொள்ள அதுவரை தடையாயிருந்த மனதை சடங்குகள் மூலம் திருத்தி வேதம் காட்டும் பாதையில் முன்னேற விஸ்வரூப உபாசனை உறுதுணையாய் இருக்கிறது.

பயிற்சிக்காக :

1. உலக அனுபவங்களில் இருந்து நமக்கு என்ன கிடைக்கிறது?

2. மனதின் நேரடிகட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்பட்ட எட்டு அங்கங்கள் எவை?

3. நிம்மதியாக வாழமுடியாததற்கு இரு காரணங்கள் என்னென்ன?

4. புத்தியின் சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

5. உடல், மனம், புத்தி இவைகளிடையே உள்ள சம்பந்தத்தை விளக்குக.

6. விஸ்வரூப உபாசனை எவ்விதத்தில் முக்தியை நோக்கி பயணிக்க உதவுகிறது?

சுயசிந்தனைக்காக :

1. மனதிற்கு பிடிக்காத செயல்களை செய்துகொண்டு இருந்தால் எப்படி இன்பமாக இருக்க முடியும்?

2. ஆசைகளே தவறு என்றால் இன்பத்தை அடைவது எப்படி?

Tuesday, January 11, 2011

பாடம் 132: விஸ்வரூப உபாசனை ( பிரம்மசூத்திரம் 3.3.57 )

சடங்குகள் செய்வது அவசியம் என்று கூறியபின் மதங்களின் பெயரால் மனிதன் செய்யும் அனைத்து சடங்குகளையும் உள்ளடக்கிய விஸ்வரூப உபாசனை பற்றிய விளக்கத்தை இந்த பாடம் தருகிறது.

கடவுள் ஆயிரம் தலைகளை உடையவன் என்று கூறியபின் இரண்டாயிரம் கண்களை உடையவன் என்று கூறாமல் ஆயிரம் கண்களை உடையவன் என்று குறிப்பிடுவதால் அனைத்து ஜீவராசிகளை உள்ளிட்ட இந்த பிரபஞ்சத்தைத்தான் கடவுளின் வடிவமாக வேதம் சித்தரிக்கிறது என்பது தெளிவாகிறது. எனவே ‘என் தலை, கைகள், கால்கள் உள்ளிட்ட நான், கடவுளின் ஒரு பகுதியாகத்தான் இருக்க வேண்டும்’ என்ற உண்மையை நம் மனது முற்றிலும் உணர விஸ்வரூப உபாசனை ஒரு படிக்கட்டாக பயன்படும்.

நம்முடைய அனைத்து செயல்களும் கடவுளின் செயல்கள் என்றும் கடவுளின் அனுமதியில்லாமல் சுண்டுவிரலை அசைக்ககூட நம்மால் முடியாது என்பதையும் உண்மையில் புரிந்து கொண்டுவிட்டால் நாம் முக்தியடைந்து விட்டோம் என்று பொருள். இவ்வளவு எளிதாக முக்தியடைவது எல்லோருக்கும் சாத்தியமல்ல என்ற காரணத்தால் வேதம் பல்வேறு சடங்குகளை செய்யவேண்டும் என்று மக்களுக்கு விதித்திருக்கிறது. மனம்போன போக்கில் செயல்படாமல் வேதம் விதித்துள்ளது என்ற கட்டாயத்தினால் செய்யப்படும் சடங்குகள் விஸ்வரூப உபாசனை ஆகும்.

தியானம் செய்து மனதை செம்மை படுத்தி ஆசிரியரின் துணையுடன் வேதத்தை முறையாக பயின்று ‘நான் பரமன்’ என்பதை புரிந்துகொண்டால் மட்டுமே முக்தியடையலாம். இந்த பயணத்தை அனைத்து விதமான மக்களும் மேற்கொள்ள உதவும் முதல் படிக்கட்டுதான் விஸ்வரூபஉபாசனை.

செயலும் சிந்தனையும்

பசிக்கும்பொழுது பாலுக்காக அழுவதில் ஆரம்பித்து அனைத்து மனிதர்களும் சிந்திக்க கற்றுக்கொள்வதற்கு முன் செயல் செய்ய தொடங்கிவிடுகிறார்கள். எதற்கு செய்கிறோம், ஏன் செய்கிறோம், எப்படி செய்யவேண்டும் என்று கேள்வி கேட்டு முறையான பதில்களை தெரிந்து கொள்வதற்கு முன், செய்யும் செயல்கள் நமக்கு பழகிப்போய்விடுகின்றன. பழகிய செயலை தவறு என்று புரிந்துகொண்டாலும் பழக்கங்களை மாற்றிக்கொள்ள முடிவதில்லை. அதேபோல் நன்மை கொடுக்க கூடிய செயல்களை செய்யப்பழகிக்கொள்வதும் மிகவும் கடினம்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழி நம் உடலை குறித்து மட்டும் கூறப்பட்டதல்ல. நல்ல பழக்கவழக்கங்களை ஏன் என்று கேட்காமல் சிறுவயதிலிருந்து பின்பற்ற வேண்டும்.

கடைபிடிக்கவேண்டிய நல்ல செயல்களையும் தவிர்க்க வேண்டிய தீய செயல்களையும் வேதம் தெளிவாக பட்டியலிட்டு கூறியுள்ளது. வேதத்தின் அடிப்படையில் அமைந்த சமுதாய கட்டுப்பாடுகளும் பாரம்பரிய சம்பிரதாயங்களும் இந்த பாரத நாட்டு மக்களின் வாழ்வை தொன்று தொட்டு இன்றுவரை வழிநடத்திக்கொண்டு இருக்கின்றன.  எனவே கேள்வி கேட்காமல் இவற்றை பின்பற்றுவதே முக்திக்கு வழிகோலும் முதல் படி.

கேள்வி கேட்டு பதிலை புரிந்து கொள்ளும் பக்குவம் வந்தபின் வேதம் விதித்துள்ள செயல்களின் காரணம் தெரியவரும். ஏற்கனவே அவை பழக்கத்தில் இருக்கும் காரணத்தால் காரணம் தெரிந்தபின் அவற்றை தொடர்ந்து பின்பற்றுவதில் எவ்வித கஷ்டமும் இருக்காது.

எனவே வேதம் கூறும் நல்ல செயல்களை செய்வதன் மூலம் சரியான சிந்தனையை நாம் அடைவோம். நல்ல செயலும் சிந்தனையும் நம்மை முக்தியடைய வழிகோலும்.

உதாரணமாக சூரியன் உதிக்குமுன் எழுந்து வேதம் விதித்த சடங்குகளை செய்து பழகிவிட்டால் அவற்றை செய்யவேண்டிய காரணம் தெரிவதற்குமுன் காலையில் எழுவது பழக்கமாகியிருக்கும். இல்லாவிட்டால் காலையில் எழுவது நல்லது என்ற அறிவு மட்டும் இருக்கும். அதை பின்பற்றுவது மிக சிரமமான காரியமாக இருக்கும்.

எனவே முதலில் சரியான செயல் பின் சரியான சிந்தனை என்பதே சரியான பாதை. சரியான செயல்கள் யாவை என்றும் அவற்றை எப்படி செய்யவேண்டும் என்றும் நாம் யாரிடமும் கற்றுக்கொள்ள தேவையில்லை. தொன்றுதொட்டு வழிவழியாக இருந்துவரும் பழக்கவழக்கங்களை பின்பற்றினால் மட்டும் போதும். அதாவது குடும்பத்தில் உள்ள பெரியோர் பரம்பரை பரம்பரையாக செய்துவரும் அனைத்து சடங்குகளையும் இது பிடிக்கும், வசதியானது என்றோ அது பிடிக்காது, சிரமமானது என்றோ பாகுபாடு இல்லாமல் கடைபிடிக்க வேண்டும்.

ஒரு பெண் மணமானதும் பெற்றோர் வீட்டு பழக்கங்களை விட்டுவிட்டு கணவன் வீட்டில் நடைமுறையில் இருக்கும் சடங்குகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். எது உயர்ந்தது என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. ஆண்வழியாக வரும் சடங்குகளை பின்பற்ற வேண்டும் என்பதும் கேள்விகேட்காமல் ஏற்றுக்கொள்ளபட வேண்டிய ஒரு விதி. ஏன் சடங்குகள் செய்யவேண்டும் என்ற கேள்வியே தவறு என்னும்பொழுது  எந்த சடங்குகள் என்ற கேள்வி அனாவசியம்.

விஸ்வரூப உபாசனையின் உதாரணங்கள்

காணும் உலகம் முழுவதும் இறைவனின் உருவம் என்பதால் செய்யப்படும் அனைத்து சடங்குகளும் விஸ்வரூப உபாசனையாகும். அனைத்து சடங்குகளும் வேதத்தின் ஆதாரத்தில்தான் ஏற்பட்டுள்ளன என்றாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் வெவ்வேறு சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். எனவே பரவலான ஒரு சில சடங்குகள் இங்கு உதாரணத்திற்காக விளக்கப்பட்டிருக்கின்றன.

நல்ல காலம்

இராகு காலம், எமகண்டம், குளிகை என்று ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களுக்கு பெயரிட்டு நல்ல நேரத்தில்தான் எந்த ஒரு முக்கியமான காரியத்தையும் தொடங்க வேண்டும் என்ற வழக்கம் பெரும்பாலான வீட்டில் இருந்து வருகிறது.

பௌர்ணமியன்றும் அமாவாசையன்றும் சிறப்பு பூஜைகள் செய்து இஷ்டதெய்வத்தை பிரார்த்திப்பதும் ஏழைகளுக்கு உணவழிப்பதும் பலரால் பின்பற்றப்படும் ஒரு பழக்கம்.

மார்கழிமாதம்தோறும் விடியற்காலையில் எழுந்து வாசலில் பெரிய கோலம்போட்டு பூக்கள் வைத்து அலங்காரம் செய்வதும் ஆடி மாதங்களில் திருமணம் போன்ற சுபகாரியங்களை செய்யாமல் இருப்பதும் ஒரு வழக்கம்.

நோன்பு

ஏகாதசி, பிரதோஷம், சஷ்டி, கார்த்திகை போன்ற குறிப்பிட்ட நாட்களில் விரதம் இருப்பதும் வரலக்ஷ்மி நோன்பு, காரடையான் நோன்பு என குறிப்பிட்ட தெய்வத்தை ஆராதித்து நோன்புகள் மேற்கொள்வதும் பரவலாக மக்களால் பின்பற்றபடும் நோன்புகளாகும்.

பண்டிகைகள்

தீபாவளி, பொங்கல், கார்த்திகை போன்ற பண்டிகைகளும் இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயக சதுர்த்தி, நவராத்திரி, சிவராத்திரி, மாரியம்மன் திருவிழா  என்று தெய்வங்களுக்காக கொண்டாடப்படும் சிறப்பு நாட்களும் பல குடும்பங்களில் வழக்கில் இருக்கிறது.

இவையனைத்தும் விஸ்வரூப உபாசனையின் அங்கங்கள்.

விஸ்வரூப உபாசனை மேற்கொள்ளும் விதம்

தொன்று தொட்டு எந்த விதத்தில் சடங்குகள் ஒருகுடும்பத்தில் பின்பற்றபடுகிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும். உதாரணமாக தீபாவளியன்று காலை நாலரை மணிக்கு எழுந்து பெரியவர்கள் கையால் தலைக்கு எண்ணை வைத்து நீராடி புது துணிகளை அணிந்து கொண்டு பூஜை செய்வது ஒரு குடும்ப பழக்கம் என்றால் ஏன் காலை ஏழுமணிக்கு எழுந்து பூஜை செய்யக்கூடாது என்ற கேள்விகள் எதுவும் கேட்காமல் பெரியவர்களின் வழக்கத்தை பின்பற்றவேண்டும்.

விரும்பி ஏற்கும் விஸ்வரூப உபாசனை

குடும்ப வழக்கில் இருக்கும் சடங்குகளை கட்டாயமாக ஏற்று கடைபிடிக்க வேண்டும். அதைத்தவிர பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம் போன்ற இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில் தொன்றுதொட்டு இருந்துவரும் செவ்வியல் கலைகளை விரும்பி ஏற்று கற்றுக்கொள்வதும் விஸ்வரூப உபாசனையாகும். மனம்போனபடி கைகால்களை ஆடுவதுதான் நடனம் என்றில்லாமல் நாட்டிய சாஸ்திரத்தில் உள்ள முறைப்படி கற்று பயிற்சி செய்வது மிகுந்த நன்மை கொடுக்கும்.

விஸ்வரூப உபாசனையில் அடங்காதவை

வேதங்களையும் புராணங்களையும் ஆதாரமாக கொண்டு மதகோட்பாடுகளின்படி இப்படித்தான் செய்யவேண்டும் என்ற சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செய்யப்படும் சடங்குகள் மட்டுமே விஸ்வரூப உபாசனையாக கருதப்படும். புராணம் என்பதற்கு மிகவும் பழையதானாலும் இன்றும் புதுமையானதாக இருப்பது என்று பொருள். எனவே குறைந்தபட்சம் ஒரு ஆயிரம் வருடங்களாக வழக்கில் தொடர்ந்து இல்லாதவை விஸ்வரூப உபாசனையாகாது. மேலும் பயம், பக்தி, சுயகட்டுப்பாடு ஆகியவை உபாசனையின் முக்கியமான அங்கங்கள்.

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம், பிறந்த நாள் விழா கொண்டாடுவது ஆகியவை விஸ்வரூப உபாசனை ஆகாது. தமிழ் புத்தாண்டு, சதாபிஷேகம் போன்றவை புராணங்களை அடிப்படையாக கொண்டும் இப்படித்தான் கொண்டாடவேண்டும் என்ற முறை விதிமுறைகளை பின்பற்றி அமைந்திருப்பதாலும் விஸ்வரூப உபாசனைகளாக கருதப்படும்.      

முடிவுரை :

அகில உலகையும் கடவுளின் உருவமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஏற்பட புராணங்களின் அடிப்படையில் பல்வேறு சடங்குகளை பின்பற்றும் வழக்கம் இந்த பரத கண்டத்தில் பரவலாக இருப்பது இந்திய பாரம்பரிய கலாச்சாரத்தின் தனிச்சிறப்பு ஆகும். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை கூட சமூகத்துடன் ஒன்றி வாழவேண்டிய கட்டாயத்தின்பேரில் பண்டிகைகளை கொண்டாடவைத்து அதன்மூலம் மதங்கள் கூறும் தத்துவங்கள் இன்றும் வாழையடி வாழையாக வளர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.

‘என்ன தவம் செய்தனை யசோதா, எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா என்றழைக்க’ என்ற பாடலின் உண்மையான பொருள் முற்றிலும் புரியாவிட்டாலும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் சடங்கை தொடர்ந்து செய்தால், என்றேனும் ஒருநாள் ‘நான் பரமன்’ என்பதை உணர்ந்து கொள்ள அது வழிவகுக்கும்.   

பயிற்சிக்காக :

1. விஸ்வரூப உபாசனை என்றால் என்ன?

2. எவை விஸ்வரூப உபாசனைகள் அல்ல?

3. விரும்பி ஏற்கும் விஸ்வரூப உபாசனைகள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. சிந்தித்து செயல் புரிவது நல்லதா அல்லது செயல் செய்துவிட்டு சிந்திப்பது சிறந்ததா?

2. கேள்விகள் கேட்காமல் செயல்கள் செய்தால் அவை மூடநம்பிக்கைகள் ஆகாதா?

3. விஸ்வரூப உபாசனை எவ்விதத்தில் முக்தியடைய உதவும்?

4. பழகிய செயல்களை விட்டு விட்டு மணமானதும் கணவன் வீட்டு சம்பிரதாயங்களை ஏற்றுக்கொள்வது மனைவிக்கு சிரமமாக இருக்காதா?

5. பாடத்தில் குறிப்பிடப்பட்ட பாடல் யாசோதை என்ற பெண்ணுக்கு மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் பொருந்துமா என்று ஆராய்க.