Sunday, January 31, 2010

பாடம் 005: பேரறிவே பரமன் (பிரம்ம சூத்திரம் 1.1.5-11)

உலகின் ஆதாரம் என்று பரமனை அறிமுகபடுத்தியபின் வேதம் பரமனின் தன்மைகள் பற்றிய விளக்கங்களை கொடுக்க ஆரம்பிக்கிறது.

பரமன் வார்த்தைக்கும் மனதுக்கும் எட்டாதவன்!

எனவே நாம் எவ்வளவுதான் படித்தாலும் வேதங்களில் உள்ள வார்த்தைகளின் மூலம் வார்த்தைக்கு எட்டாத பரமனை நம்மால் அறிந்து கொள்ள முடியாது. ஆகவே பரமனை அறிவிக்க நமக்கு குருவின் துணை அவசியம். அவரால்தான் பல ஆயிரக்கணக்கான வார்த்தைகளாலான வேதம் மனதுக்கு எட்டாத பரமனை எப்படி அறிவிக்கிறது என்று நமக்கு புரியவைக்க முடியும்.

உலகத்தின் ஆதாரம் பரமன் என்று வேதம் கூறியது. ஒரு அறிவற்ற ஜடப்பொருள் இந்த உலகத்தை தோற்றுவிக்கவில்லை என்று வேதம் தெளிவாக கூறுகிறது. நம்முடைய அனுபவமும் யுக்தியும் இந்த உண்மையை நமக்கு உறுதிபடுத்துகின்றன.

எனவே வேதம் பரமனின் முதல் இயல்பாக கூறுவது உணர்வு அல்லது அறிவு.

பரமன் உணர்வு மயமானவன்

உணர்வு என்பது ஒரு உயிரற்ற பொருளில் இல்லாதது. நம் போன்று எல்லா உயிரினங்களிடமும் இருப்பது. அதே போல் பரமனிடமும் உணர்வு இருக்கிறது என்று சொல்வது தவறு. ஏனெனில் பரமனே உணர்வு.

பரமன் அறிவு உருவானவன்.

'உனக்கு அறிவு இருக்கிறதா?' என்று யாரேனும் நம்மை கேட்டால் கோபப்படுவது அனாவசியம். எதைப்பற்றிய அறிவு என்பதை பொருத்து 'உண்டு' அல்லது 'இல்லை' என சாதாரணமாக பதில் சொல்லாலாம். ஏனெனில் எல்லாம் அறிந்த ஒருவரோ ஏதும் அறியாத ஒருவரோ என்றும் இருக்க முடியாது. அறிவு என்பது ஏதோ ஒரு பொருளை பற்றியது. அறிவு இருக்கிறதா இல்லையா என்பதை அறியும் அறிவு பேரறிவு. பேரறிவே பரமன்.

கைகள், கால்கள் போன்ற உறுப்புகள் எதுவும் இல்லாமல் வெறும் அறிவு அல்லது உணர்வு மயமாக இருப்பவன் பரமன். அப்படியென்றால் வேறு எந்த வித உபகரணங்களும் இல்லாமல் பரமனால் எவ்வாறு இந்த உலகத்தை படைக்க முடியும்? நாம் எவ்வாறு கை கால்களின் துணையின்றி எந்த வித முயற்சியும் இல்லாமல் ஒரு பெரிய கனவு உலகத்தை உருவாக்குகிறோமோ அது போல பரமனுக்கும் இந்த பேரண்டத்தை படைப்பது என்பது எளிதான காரியம்.

நான் பலவாக ஆவேனாக என்ற இச்சையை செயலாக்க பரமன் எந்த பிரயத்தினத்திலும் ஈடுபட வேண்டியது இல்லை என்று வேதம் கூறுகிறது.

முடிவுரை:

நாம் எதை அறிந்தால் நமக்கு எல்லாமும் தெரிந்ததாகுமோ அதுவே பரமன் என்று வேதம் சொல்லுகிறது. அப்படிப்பட்ட பரமன் அறிவு உருவமானவன். அவனால் நினைத்த மாத்திரத்தில் எந்தவித முயற்சியுமின்றி இந்த உலகத்தை படைக்கவும், காக்கவும், அழிக்கவும் முடியும்.

பயிற்சிக்காக:

1. வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத பரமனை அறிந்து கொள்ள நாம் செய்யவேண்டியது என்ன?

2. பேரறிவு என்றால் என்ன?

சுயசிந்தனைக்காக:

1. பரமனை முழுதும் அறிந்தவர் அனைத்தையும் அறிந்தவர் அல்லவா?


2. அனைத்து உயிரினங்களிடமும் பேரறிவு உள்ளது என்று சொல்வது சரியா?

பாடம் 004: வேதங்களின் மெய்ப்பொருள் (பிரம்ம சூத்திரம் 1.1.4)

அனைத்து மக்களுக்கும் அவரவர் வாழ்க்கையை வாழ்வது எப்படி என்ற முறையான வழிமுறையைத் தருவது வேதம். ஒரு பள்ளிக் கூடத்தில் உள்ள தொடக்க நிலை மாணவர்களுக்கும் உயர் நிலை மாணவர்களுக்கும் ஒரே ஒரு பாட புத்தகம் கொடுக்கப்பட்டால் அது அதிக பக்கங்களை கொண்டதாகவும் பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கிய புத்தகமாகவும் இருக்கும். ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு கடைசி பக்கங்களில் உள்ள பாடங்கள் முற்றிலும் புரியாது. பத்தாம் வகுப்பு மாணவனுக்கு முதலில் உள்ள சில பாடங்கள் அவசியம் இல்லாதது என்று தோன்றும். வேதத்தின் நிலை இது போன்றது.

வேதம் இரண்டு பாகங்கள் கொண்டது. முதல் பாகம் 'கர்ம காண்டம்'. இரண்டாம் பாகம் 'ஞானகாண்டம்' அல்லது 'வேதாந்தம்'.

வேதாந்தம் பரமனைப் பற்றிய முழு அறிவைத் தருகிறது. ஆனால் அனைவரும் அந்த அறிவை அறிந்து கொள்ள தகுதியானவர்கள் அல்ல. எனவே அவர்களின் மனதை பண்படுத்தி பக்குவமடைய செய்யும் பொருட்டு கர்ம காண்டம் பல்வேறு வழிபாட்டு சடங்குகளை முன்மொழிகிறது.

வாழ்க்கை எனும் செயல் முறை கல்விச் சாலையில் நாம் நம் ஒவ்வொரு செயலிலிருந்தும் அறிவையும் மனபக்குவத்தையும் அடைகிறோம். எப்பொழுது அந்த அறிவு முதிர்ந்து தேவையான மனபக்குவத்தை நாம் அடைகிறோமோ அப்பொழுதுதான் பரமனை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் நமக்கு ஏற்பட்டு வேதங்களை படிக்க முற்படுவோம்.

கர்ம காண்டம் நம் செயல்களை செய்ய வேண்டிய முறையையும் வேதாந்தம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய பரமனை பற்றிய ஞானத்தையும் நமக்கு தருகின்றன.

பரமனை பற்றி தெரிந்து கொள்ள நமக்கு கர்ம காண்டத்தை பற்றிய அறிவு தேவையில்லை. முறையாக வேதத்தை பயுலுவதைத் தவிர நாம் வேறு ஒரு செயலிலும் நாம் ஈடுபட வேண்டாம். ஆனால் பரமனை தெரிந்து கொள்ள தேவையான மனோபக்குவத்தை பெற நாம் கர்ம காண்டத்தில் கூறப்பட்ட செயல்களை செய்ய வேண்டியிருக்கலாம்.

அனைத்து மனிதர்களின் ஒரே குறிக்கோள் பரமனை அறிந்து குறைவில்லா இன்பமான வாழ்க்கையை அனுபவிப்பதுதான் என்றாலும் எல்லோரும் அந்த ஞானத்தை அடைய தகுதி வாய்ந்தவர்கள் அல்ல. பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் முடிவான நோக்கம் பள்ளியின் இறுதித் தேர்வில் வெற்றி பெறுவதுதான் என்றாலும் தகுதியற்றவர்களை ஆசிரியர்கள் தேர்வுக்கு அனுப்புவதில்லை. அது போல நமது தகுதியை ஆய்ந்து நமக்கேற்ற உபதேசத்தை செய்வது நமது குருவின் கடமை. பெரும்பாலான மக்களுக்கு ஆன்மீக அறிவில் தங்களுடைய நிலையை தாங்களாக உணரும் சக்தி இருப்பதில்லை. எனவே நாம் கூடிய விரைவில் ஒரு ஆன்மீக குருவை நாடுவது அவசியம்.

வேதங்களின் ஒரே குறிக்கோள் நமக்கு பரமனை அறிவிப்பதுதான். இந்த குறிக்கோளை நிறைவேற்ற பல்வேறு படிகளில் வேதம் நம்மை அழைத்து செல்கிறது.

முதல் படி: கர்ம யோகம்

பலனில் பற்றில்லாமல் நமக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை முறையாகவும் நமது முழுமனதின் ஈடுபாடுடனும் செம்மையாக செய்து முடிப்பது கர்ம யோகம். பணம், பதவி மற்றும் புகழ் அடைவதற்காக செய்யும் செயல்கள் கர்ம யோகம் ஆகாது. நமது மனம் பக்குவப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செய்யும் செயல்களே கர்ம யோகமாகும்.

கர்ம யோகத்தின் பலன் மனப்பக்குவம்.

இரண்டாம் படி: கற்றல்

வேதாந்தத்தை முறையாக ஆசிரியரிடமிருந்து தொடர்ந்து நீண்ட நாட்கள் கற்க வேண்டும். வேதத்தில் சொல்லுவது இதுதான் என்ற திடமான எண்ணம் வரும் வரை கற்றல் தொடர வேண்டும். ஆசிரியர் போதிப்பது புரியவில்லை என்றால் தவறு ஆசிரியர் மீதோ வேதத்தின் மீதோ இல்லை என்ற உறுதியுடன் 'எனக்கு புரியவில்லை' என்ற மனோபாவத்துடன் மீண்டும் மீண்டும், புரியும் வரை கற்றல் தொடர வேண்டும்.

மூன்றாம் படி: கசடற கற்றல்

வேதம் சொல்வது என்ன என்று சரியாகத் தெரிந்தவுடன் நாம் அடுத்த படியாக வேதம் சொல்வது சரியா என்ற கேள்வியை கேட்க வேண்டும். யுக்தி மூலமாகவும், அனுபவம் மூலமாகவும் வேதம் கூறிய முடிவை ஆராய வேண்டும். வேதத்தின் கருத்து யுக்திக்கு பொருந்தாமலோ அனுபவத்திற்கு முரணாகவோ இருந்தால் ஆசிரியரை அணுகி முறையுடன் கேள்விகள் கேட்க வேண்டும். நமது எல்லா கேள்விகளுக்கும் நமது சந்தேகங்கள் தீரும்வரை பதில் சொல்வது ஆசிரியரின் கடமை.

சில சமயம் ஆசிரியர் நம்முடைய தகுதி பரமனை புரிந்து கொள்ள போதாது என்று நம்மை முதல் படிக்கு அனுப்பக் கூடும். ஆசிரியரின் அத்தகைய முடிவு நம்மால் ஏற்க முடியாமல் இருந்தால் நாம் வேறு ஒரு ஆசிரியரை அணுகுவதில் தவறு இல்லை. ஆனால் நாம் மறுபடியும் கற்றல் என்ற இரண்டாம் படியிலிருந்து நமது பயணத்தை தொடர வேண்டும்.
வேதத்தின் கருத்துக்களை எந்த வித சந்தேகங்களும் இல்லாமல் தெளிவாகத் தெரிந்து கொண்ட பிறகு நாம் அடுத்த படிக்கு செல்லத் தயாராவோம். இந்த நிலையில் எதை தெரிந்து கொண்டால் அனைத்தையும் தெரிந்து கொண்டதற்கு சமம் ஆகுமோ அதை நாம் தெரிந்து கொண்டிருப்போம்.

நான்காம் படி: நிற்க அதற்கு தக

வேதத்திலிருந்து நமக்கு கிடைத்த ஞானத்தில் நாம் நிலைத்து நிற்க ஒரு சில காலம் ஆகும். இந்த படியில் ஆசிரியர் நமக்கு அவ்வளவாக துணை செய்ய முடியாது. சுயமுயற்சியால் மட்டுமே நாம் தியானம் என்கிற பயிற்சி மூலம் ஞானத்தில் நிலை பெற வேண்டும்

உணவு உண்ண ஆரம்பித்தவுடன் பசி குறைய ஆரம்பிப்பது போல இந்த படியின் துவக்கத்திலிருந்து நாம் குறைவற்ற இன்பத்தை அடைய ஆரம்பித்து விடுவோம். கூடிய விரைவில் நாம் நம் வாழ்க்கையின் குறிக்கோளை அடைந்து விடுவோம்.

அதற்கு பிறகு நாம் செய்ய வேண்டியது என்று ஒன்றும் இருக்காது.

முடிவுரை:

பரமனை அறிந்து கொள்ள நாம் கடக்க வேண்டிய படிகள் அனைத்தையும் ஒரே ஜென்மத்தில் கடந்துவிட முடியாது. நாம் செய்யும் எந்தஒரு முயற்சியும் வீண்போகாது. நாம் ஒவ்வொரு பிறவியிலும் தொடர்ந்து செய்யும் முயற்சியால்தான் வேதத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து படிகளையும் கடந்து பரமனைத் தெரிந்து கொள்ள முடியும். ஆகையினால் நாம் குருவின் துணையுடன் நம் தற்போதைய நிலையை தெரிந்து கொண்டு மேற்கொண்டு நமது ஆன்மீக பயணத்தை தொடர வேண்டும்.

வேதாந்தத்தை தகுந்த ஆசிரியரின் துணையுடன் பயில தொடங்கும் அனைவருக்கும் இந்த பிறவியிலேயே பரமனை அறிந்து கொள்ளும் வாய்ப்பு மிக அதிகம். இவர்கள் முதல் படியில் துவங்கினாலும் வெகு விரைவில் பரமனை அறிந்து குறைவில்லா இன்பத்தை அடைவர்.

பயிற்சிக்காக:

1. பரமனை அறிய எத்தனை படிகளை வேதம் போதிக்கிறது?

2. வேதங்கள் மிக நிறைய கருத்துக்களை உள்ளடக்கியிருப்பதன் அவசியம் என்ன?

சுயசிந்தனைக்காக:

1. ஒரு அலுவலகத்தில் நீண்ட நேரம் வேலை செய்பவரால் கர்ம யோகத்தில் ஈடுபட முடியுமா?

2. கர்ம யோகத்தில் ஈடுபடுபவருக்கு பணம், புகழ் போன்றவற்றை சம்பாதிக்க ஏதேனும் தடை உள்ளதா?

Friday, January 29, 2010

பாடம் 003: பரமனை அறியும் வழி (பிரம்ம சூத்திரம் 1.1.3)

இந்த உலகத்தின் ஆதாரம் பரமன் என்றால் அந்த பரமனை அறிந்து கொள்வது எப்படி? நிச்சயமாக பரமன் நம்முடைய ஐந்து புலன்களின் மூலம் அறியப்படும் பொருள் அல்ல. அதாவது பார்த்தோ, கேட்டோ, தொட்டோ, முகர்ந்தோ அல்லது சுவைத்தோ பரமனை அறிய முடியாது. விஞ்ஞான கருவிகள் எதுவும் நேரடியாக பரமனின் இருப்பை அறிவிக்காது.

பரமனை அறிந்து கொள்ள நமக்கு இருப்பது ஒரே வழிதான். அந்த வழியை வேதங்கள் மட்டுமே நமக்கு காட்டிக்கொடுக்கின்றன. வேதம் என்ற வார்த்தைக்கு அறிவு என்று பொருள். எப்படி நாம் காதால் கேட்கும் ஒலியை மற்ற புலன்கள் மூலமாக சரிபார்க்க முடியாதோ அதே போல வேதங்கள் கூறும் உண்மையை நமது மற்ற ஐந்து புலன்கள் மூலம் சீர் தூக்கி பார்க்க முடியாது.

வேதம் என்பது நமது ஐந்து புலன்கள் போல் நேரடியாக அறிவைத்தரும் கருவி. கண் எப்படி நம் வாழ்க்கைக்கு உதவுகிறதோ அதைவிட பன்மடங்கு முக்கியமான உதவி செய்யும் திறனுள்ளது வேதம். வேதங்களை பயின்று அதன் பயனை அனுபவிக்காதவனுடய வாழ்க்கை, கண் இருந்தும் அதை பார்ப்பதற்காக பயன்படுத்தாதவனுடைய நிலையை போல பரிதாபத்திற்குரியது.

வேதங்களை பற்றிய பின்வரும் ஆறு உண்மைகளை தெரிந்து கொள்வது, பரமனை அறிந்து கொள்ளும் முயற்சியில் நமக்கு மிகவும் உதவியாக இருக்கும். 'கண்ணை நம்பாதே. உன்னை ஏமாற்றும் நீ காணும் காட்சி' என்பதனால் நாம் கண்ணை உபயோகபடுத்தாமல் விட்டுவிடபோவதில்லை. கண்ணின் தன்மைகளை அறிந்து கொண்டு அதை உபயோகபடுத்துவதை போல வேதத்தின் தன்மைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

முதல் கருத்து: வேதம் மானிடர்களின் படைப்பு அல்ல

வேதம் உலகம் தோன்றியபோது உடன் தோன்றியது. இது மனிதர்கள் யாராலும் இயற்றபட்டதல்ல. வேதம் நுண்ணிய ஒலி அலைகளாக எப்பொழுதும் உலகத்துடன் இருந்து வருகிறது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன் தவவலிமையுடைய ஒரு சில ஞானிகள் இந்த ஒலியலைகளை கிரகித்து மனிதர்கள் புரிந்து கொள்ளும் மொழி வடிவில் வேதத்தை இவ்வுலகிற்கு அருளியுள்ளனர்.

இரண்டாம் கருத்து: வேதம் ஒரு வழிகாட்டி புத்தகம் (User Manual)

தொலைகாட்சிபெட்டி போன்ற ஒரு கருவியை நாம் வாங்கும் பொழுது அதை உபயோகிக்கும் முறையை புத்தகமாக உடன் அளிப்பது போல இந்த உலகம் உருவாக்கப்பட்டபோது அதன் பயன்பாட்டுவிதங்களை உள்ளடக்கி வெளியிடபட்ட ஒரு வழிகாட்டி புத்தகம்தான் வேதம். இதில் இந்த உலகத்தின் நோக்கம் மற்றும் அதில் வாழும் வழிமுறைகள் முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளன. மேலும் நம் உடல், மனம், புத்தி இவைகளின் தன்மைகளும் இவற்றை சரியாக உபயோகித்து இவற்றின் முழுப்பயனை அனுபவிக்கும் வழிமுறைகளும் விவரமான முறையில் வேதத்தில் கூறப்பட்டுள்ளன.

மூன்றாம் கருத்து: வேதங்களின் நோக்கம்

வேதங்களின் ஒரே குறிக்கோள் மனிதனுடைய வாழ்க்கையை செம்மைபடுத்துவதுதான்.. பின் வரும் வேத மந்திரம் இந்த குறிக்கோளை சிறப்பாக விளக்குகிறது.
அறியாமையிலிருந்து ஞானத்துக்கும், மரணத்திலிருந்து அமர வாழ்வுக்கும், மாறும் பொய்யிலிருந்து மாறாத உண்மைக்கும் மனிதனை அழைத்து செல்வதுதான் வேதங்களின் முடிவான நோக்கம்.

நான்காம் கருத்து: வேதம் மாறாதது

உலகியல் மற்றும் அறிவியல் ஞானங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை. நமக்குத் தெரிந்த அனைத்து பொருள்களும் தொடர்ந்து மாறிக்கொண்டேயுள்ளன. எனவே அவற்றை சார்ந்து இயற்றப்பட்ட அறிவு நூல்களும் மாற்றப்பட வேண்டியவை. ஒரு அகழ்வாராய்ச்சிக்குப்பிறகு சரித்திரம் கூட மாற்றி எழுதப்படலாம். ஆனால் வேதம் எப்பொழுதும் மாறாதது. அதில் உள்ள ஞானம் முழுமையானது. எல்லோருக்கும் எல்லா காலங்களிலும் இந்த ஞானம் வாழ்க்கையை வாழும் சரியான முறையை காட்டிக் கொடுக்க வல்லது.

ஐந்தாம் கருத்து: வேதத்தை பயில குரு அவசியம்

யாராலும் வேதங்களை தானாக படித்து புரிந்து கொள்ள முடியாது. அவற்றை முறையாக தனது குருவிடமிருந்து பயின்ற ஒருவரிடமிருந்து மட்டுமே கற்றுக் கொள்ள முடியும். இறைவன்தான் ஆதிகுரு.

வேதங்களுக்கு பல ஆசிரியர்கள் வெவ்வேறு பொருள் கூறுவது போல தோன்றினாலும் அது வெறும் தோற்றம் மட்டுமே. உண்மையில் வேதம் கூறும் ஒரே உண்மையைத்தான் மாணவர்களின் புத்தி கூர்மைக்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு ஆசிரியரும் வெவ்வேறு முறையில் கூறி வருகிறார்கள். உலகில் உள்ள மக்களின் புத்திசாலித்தனம் ஒருவருக்கொருவர் மிகவும் மாறுபடுகிறது. எல்லோராலும் வேதத்தை முழுதுமாக கற்றுக் கொள்ள முடியாது. ஆனால் வேதம் ஒருவர் விடாமல் அனைத்து மானிடர்களுக்குமான வழிகாட்டி புத்தகம். எனவே அவரவர் நிலைக்கேற்றவாரு வெவ்வேறு ஆசிரியர்களின் போதனைகள் மூலம் அனைத்து மானிடர்களும் வேதத்தின் பயனை பெற்று வருகிறார்கள்.

ஆறாம் கருத்து: வேதத்தில் நம்பிக்கை

'மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்கவேண்டாம்' என்பதன் பொருள் மனம் செம்மையாகும்வரை நிச்சயம் மந்திரத்தை ஜெபிக்க வேண்டும் என்பதே.

ஒரு உபகரணத்தை உபயோகிக்க அதன் உடன் வரும் வழிகாட்டி புத்தகம் (User Manual) எப்பொழுதும் அவசியம் என்பது இல்லை. உபகரணத்தை சரியான முறையில் உபயோகிக்க தெரிந்தவுடன் அந்த புத்தகம் தேவையில்லை. அதே போல வாழ்க்கையை வாழ்வது எப்படி என்று சரியாகத் தெரியும் வரை நாம் வேதத்தில் நம்பிக்கை கொண்டு அதை முறையாக பயிலுவது அவசியம். வாழ்க்கையின் குறிக்கோளான குறையாத இன்பம், நிலையான அமைதி மற்றும் நிரந்தரமான பாதுகாப்பு இவற்றை அடைந்த பின் வேதம் நமக்கு அவசியம் இல்லாத ஒரு புத்தகம்.

நமது மனம் செம்மையானபின்தான் எல்லாம் இன்பமயம் என்று உலகவாழ்வை சரியான நோக்கில் நம்மால் பார்க்க முடியும். எனவே அதுவரை நமக்கு வேதம் மிக அவசியம். அதில் முழுநம்பிக்கையிருந்தால்தான் அதன் பலன்கள் நமக்கு கிடைக்கும்.

முடிவுரை:

வாழ்க்கையில் குறையாத இன்பம் அடைய வேண்டுமென்றால் பரமனை முழுதாக அறிந்து கொள்ள வேண்டும். பரமனை அறிந்து கொள்ள நமக்கு இருக்கும் ஒரே வழி வேதத்தில் மட்டுமே கொடுக்கப் பட்டுள்ளது. எனவே வேதத்தில் முழு நம்பிக்கை கொண்டு தகுந்த ஒரு ஆசிரியரின் துணையுடன் அதை முறையாகவும் தொடர்ந்தும் பயில வேண்டும். தேவையான மனப்பக்குவமும் புத்திகூர்மையும் நம்மிடம் இருந்தால் நம்மால் நிச்சயம் இந்த பாதையில் பயணித்து நம் வாழ்வின் குறிக்கோளை அடைய முடியும்.

பயிற்சிக்காக :

1. வேதத்தை பற்றி கூறப்பட்ட ஆறு கருத்துக்கள் யாவை?
2. மெய், வாய், கண், செவி, மூக்கு எனும் ஐம்புலன்களைத்தவிர நமக்கு அறிவுதரும் சாதனம் வேறு ஏதேனும் உளதா?
3. வேதத்தின் நோக்கம் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. இந்து மதத்தினரைத் தவிர மற்ற மதத்தினர் பின்பற்றும் வேதங்கள் (பைபிள், குரான் போன்றவை) சரியானவையா?
2. நாம் சரியான ஆசிரியரை எப்படி தேர்ந்தெடுப்பது?
3. இந்த உலகம் படைக்கப்பட்டதன் நோக்கம் என்ன?

Thursday, January 28, 2010

பாடம் 002: பரமன் உலகின் ஆதாரம் (பிரம்ம சூத்திரம் 1.1.2)

பரமன் என்று ஒருவன் இருக்கிறான். அவன்தான் இந்த உலகத்திற்கும் மற்றும் அனைத்து உயிர்களுக்கும் ஆதாரம்.

நாம் அறிந்த இந்த அளவிட முடியாத விண்வெளியும் அதில் உள்ள எண்ணிலடங்கா நட்சத்திரங்களும் அவற்றை முறையாக சுற்றும் பல்வேறு கோள்களும் எவ்வாறு தோன்றின? இந்த கேள்விக்கு பதில் நாம் சாதாரணமாக நினைப்பது போல் அவ்வளவு கடினமானது அல்ல. இந்தக் கேள்விக்கு நம்மால் உறுதியான பதில் தெரிந்து கொள்ள முடியாது என்ற அவநம்பிக்கையை விடுத்து ஆராய்ச்சி மனோபாவத்துடன் அணுகினால் இந்த பேரண்டத்தின் தோற்றம், இருப்பு மற்றும் மறைவிற்கு ஆதாரமாய் இருப்பது பரமன் என்பது விளங்கும்.

முதல் படி

உலகம் தானாக உருவானதா இல்லை ஏதேனும் அறிவுள்ள ஒன்றினால் உருவாக்கப்பட்டதா? பல்வேறு பௌதீக இரசாயன விதிகளுக்கு உட்பட்டு முறையாக இயங்கி வரும் காரணத்தால் இது தானாக தோன்றியது என்பதை விட நமக்குத் தெரியாத ஏதோவொரு அறிவுள்ள சக்திதான் இதை உருவாக்கியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம் என்று முடிவு செய்வது அறிவீனம். ஏதாவது ஒரு வாதத்தை முதல் படியாகக் கொண்டு நமது ஆராய்ச்சியைத் தொடங்கி உறுதியான தெளிவான முரண்பாடற்ற முடிவுக்கு வரும்வரை தளரா முயற்சியுடன் உழைப்பதுதான் அறிவாளியின் தன்மை.

முதலில் 'உலகம் தானாகத்தோன்றியது ' என்ற கொள்கையில் உண்மை இருக்கிறதா என்று ஆராய்வோம்.

இரண்டாவது படி

இந்த உலகம் தானாகத்தான் தோன்றியது என்று அறிவியல் நமக்குத் தெள்ளத்தெளிவாக கூறவில்லை. மேலை நாட்டு அறிவியல் அறிஞர்கள் பிக்பேங்க் (Big Bang) லிருந்து படிப்படியாக இவ்வுலகமும் பின் அதில் உயிரினங்களும் தோன்றியிருக்கலாம் என்கிறார்கள். அறிவியல் உலகம் தொடர்ந்து உண்மையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கண்டுபிடிப்பும் முந்தைய முடிவை முறியடித்து ஒரு புதிய கொள்கையை முன் வைக்கிறது. மாறாத உண்மை எப்பொழுதும் அறிவியலின் பிடிக்குள் வராது. எப்பொழுதும் தொடுவானத்தை தொடும் முயற்சியை கைவிடாமல், தொடர்ந்து தேடலில் ஈடுபடுவதுதான் அறிவியல். நம் வாழ்நாள் முடிவதற்குள் அனுமானங்களிலிருந்து அறிவியல் வெளிவந்து 'உண்மை இதுதான்' என்ற முழக்கமிடாது என்பது நமக்கு உறுதியாகத் தெரிய வேண்டும்.

அவ்வாறு நாம் தெரிந்து கொள்ளாவிட்டால் நாம் கடைசிவரை ஒரு முடிவை எதிர்பார்த்து ஏமாறுவதைத்தவிர வேறு வழியில்லை. நாமாகவும் அறிவியலின் துணையின்றி உலகம் தானாகத்தான் தோன்றியது என்று நிரூபிக்க முடியாது.

எனவே இந்தக் கொள்கையை முழுவதுமாக கைவிட்டு நிச்சயமாக உலகம் தானாகத் தோன்றியது அல்ல என்ற முடிவுக்கு நாம் வரவேண்டும். அடுத்த படியாக நாம் வேதம் சொல்லும் வழியில் பயணித்து உண்மையை அறிய முயல வேண்டும்.

கூடிய விரைவில் உண்மைகளை அறிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் அறிவியல் செயல்பட்டு வருகிறது. வேதங்கள் முடிவான உண்மைகளை அறிவியல் பூர்வமான விளக்கத்துடன் தருகின்றன. எனவே அறிவியலை நம்புவதற்கு பதில் வேத கருத்துக்களை ஆராய்வதே சிறந்தது.

இப்பொழுது நாம் அடுத்த படியாக உலகத்தை தோற்றுவித்தது ஒரு அறிவுள்ள சக்திதான் என்ற கொள்கையை ஆராய்வோம்.

மூன்றாவது படி

அறிவியலின் ஒவ்வொரு கண்டு பிடிப்பும், இந்த உலகத்துக்கு அடிப்படையாய் இருக்கும் அறிவுச் சக்தியை வெளிப்படுத்துகின்றன. ஒரு சில விஞ்ஞானிகள் இதை தெள்ளத் தெளிவாக விளக்கியிருப்பினும்கூட பெரும்பாலோர் இன்னும் தொடர்ந்து தேடலில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

அறிவில்லாத அணுக்களின் தற்செயலான தொகுப்பிலிருந்து அறிவுள்ள மனிதன் தோன்றினான் என்பது அறிவுக்கு சற்றும் பொருத்தமில்லாத கூற்றாகத் தெரிகிறது. அதே வேளையில் அறிவுள்ள ஒரு சக்திதான் இவற்றைத் தோற்றுவித்தது என்று உறிதியாக சொல்வதற்கும் ஆதாரம் இல்லை. அப்படியே இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டாலும் அந்த அறிவுள்ள சக்தி எப்படி தோன்றியது என்ற கேள்வி மனதில் எழுகிறது.

உலகம் தோன்றி பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு பிறகுதான் மனிதன் தோன்றினான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆகவே இது போன்ற தொடர் கேள்விகளுக்கு முடிவான பதில் மனித அறிவுக்கு உட்பட்டது அல்ல என்பது நமக்கு தெளிவாக புரிய வேண்டும். மனித சக்திக்கு அப்பாற்பட்ட வேதங்கள்தான் இதற்கு பதிலளிக்க வேண்டும்.

நான்காவது படி

நூற்றி எட்டு உபநிடதங்களை உள்ளடக்கிய நான்கு வேதங்களின் சாரமான பிரம்ம சூத்திரத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட பரமரகசியம் என்ற இந்த புத்தகத்தை உரிய ஆசிரியரின் துணையுடன் படித்தால் நம் மனதில் ஏற்படும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்.

வேதங்கள் மனித மனதின் கற்பனையல்ல என்றும் அதில் கூறப்பட்டுள்ளவைகள் உண்மை என்றும் எவ்வாறு நாம் உறுதியாக அறியமுடியும்? இந்த புத்தகத்தை படித்த பிறகு இதுவும் பிக்பேங்க் (BigBang)ஐப்போல ஒரு நிரூபிக்க முடியாத கொள்கையாக இருந்தால் என்ன பயன்? - வேதங்கள் கூறுவது என்ன என்று முழுமையாக தெரியாமல் அது உண்மையா இல்லையா என்று விவாதிப்பது விவேகமாகாது.

அறிவியல் அறிஞர்களை நம்பி காத்து கொண்டிருப்பதும் நாமாக முயல்வதும் சரியான பாதையல்ல என்று நமக்கு உறுதியாகத் தெரிந்தால், இந்த புத்தகத்தை பயிலுவதை தவிர வேறு வழியில்லை என்ற உண்மை நமக்கு புலனாகும். மேலும் இந்த புத்தகத்தில் உள்ள எண்ணிக்கைக்கு உட்பட்ட பக்கங்களை தகுந்த ஆசிரியரின் கவனிப்பில் தொடர்ந்து முறையாக படிப்பது என்பது ஒரு குறிப்பிட்ட கால கட்டத்துக்குள் முடிவடைந்துவிடும் ஒரு காரியம். எனவே வேதங்களின் சாரத்தை அறிந்து கொண்ட பிறகு அவை உண்மையா இல்லையா என்று நம்மால் நம் அறிவின் துணை கொண்டு அறிய முடியும் என்ற நம்பிக்கையுடன் நாம் இந்த பரம ரகசியத்தை அறிந்து கொள்ள முயல வேண்டும்.

முடிவுரை :

இவ்வுலகில் இன்பமாக வாழ பரமனை அறிவது அவசியம் என்று தொடங்கிய நமது அறிவுப் பயணத்தின் முதல் கட்டத்தில் இந்த உலகத்தின் தோற்றம், இருப்பு மற்றும் மறைவுக்கு ஆதாரமாயிருக்கும் அறிவுள்ள தத்துவம் பரமன் என்று வேதம் நமக்கு பரமனை அறிமுகபடுத்துகிறது.

வாழ்வில் இதுவரை அறிவியல் கொள்கைகளை நம்பி இந்த உலகம் தானாக உருவானது என்றோ மதக் கோட்பாடுகளின்படி இந்த உலகம் கடவுளால் தோற்றுவிக்கப்பட்டது என்ற மூடநம்பிக்கையுடனோ இருந்த நாம் இனி இந்த உலகத்தின் ஆதாரம் பரமன் என்ற வேதங்களின் முடிவை முழுவதுமாக ஆராய்ந்து அறிந்து கொள்ள முற்படுவோம்.

பயிற்சிக்காக :

1. உலகத்தின் தோற்றத்தின் காரணத்தை அறியும் ஆய்வில், நாம் கடந்த நான்கு படிக்கட்டுக்கள் யாவை?

2. நாம் எதற்காக உலகத்தின் தோற்றத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்?

சுயசிந்தனைக்காக :

1. உலகம் தோன்றிய விதத்தை பற்றி பல்வேறு சமய நூல்கள் பல விதமான கருத்துக்களை தருகின்றன. நாம் எந்த கருத்தை சரி என்று ஏற்றுக் கொள்வது?

2. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் (Albert Einstein - 1879-1955) கடவுளைப் பற்றிய கருத்துக்கள், வெர்னெர் ஹைசன்பர்கின் (Werner Heisenberg - 1901-1976) தற்காலிகத் தத்துவம் (Uncertainty Principle), பெல்'ஸ் கோட்பாடு (Bells Theorem - 1965) ஆகியவற்றை ஆய்வு செய்க.

Wednesday, January 27, 2010

பாடம் 001: மாணவர்களின் தகுதி (பிரம்ம சூத்திரம் 1.1.1)


'பரமன் என்று ஒருவன் இருக்கிறான்' - இதுதான் பரமரகசியம். ஒரு மர்ம நாவல் 'இவன்தான் கொலையாளி' என்ற வாக்கியத்தோடு முடிவடைவதில்லை. மர்மம் அப்பொழுதுதான் உச்சகட்டத்தை அடைகிறது. அது போல, வாழ்க்கை முழுவதும் இன்பம் எங்கே, இன்பம் எங்கே என்று தேடியோடிய பிறகு வேதம் என்ன சொல்கிறது என்று பார்க்க வரும் மனிதனுக்கு, இந்த வாக்கியம்தான் ஒரு நீண்ட பயணத்தின் முதல் படி.


வேதங்கள் பரமனை முழுவதுமாக உணர்ந்து கொள்ளும் வழி வகைகளை தெளிவாக தருகின்றன. ஆனால், அவற்றை புரிந்து கொண்டு, கடைபிடித்து பரமனை முழுவதுமாக அறிந்து கொள்வதற்கு நான்கு தகுதிகள் தேவை. இந்த நான்கு தகுதிகளின் விளக்கம் பின்வருமாறு:


முதல் தகுதி: செயல்களின் நோக்கம்


நாம் எல்லொரும் எப்பொழுதும் ஏதாவது செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது இயல்பு. தினசரி உண்டு, உழைத்து, உறங்குவதும், வாழ்க்கையில் பிறந்து, வளர்ந்து, கற்று, மணம் புரிந்து, குழந்தைகளை பெற்று, வளர்த்து, மூப்படைந்து மரிப்பது வரை எல்லோரின் பொதுவான சரித்திரம். இந்த செயல்களில் நாம் ஏன் ஈடுபடுகின்றோம் என்று சுயசிந்தனையில் ஆழ்பவர்களைவிட செக்குமாட்டைப் போல் வாழ்க்கைச் சக்கரத்தில் உழலுபவர்களே அதிகம்.


ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்பவர்களுக்கு இந்த நூல் எவ்வித பயனையும் கொடுக்காது.


உயர் கல்வி கற்கும்/கற்ற துடிப்பான இளைஞர்களில் பெரும்பாலோர் தங்கள் வாழ்க்கையை மிகவும் கவனத்துடன் திட்டமிடுகிறார்கள். இவர்கள் குறிக்கோளின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தவர்கள். தங்களின் எல்லா செயல்களின் நோக்கங்களும் வாழ்க்கையின் குறிக்கோளை அடைய உதவும் படிகட்டுக்கள் என்பது இவர்களுக்கு தெரியும்.


இப்படிபட்ட தெளிவுடன் செயலாற்றுபவர்கள், இந்த நூலை பயில தகுதி வாய்ந்தவர்கள்.


இரண்டாம் தகுதி: குறிக்கோளில் தெளிவு


வாழ்க்கையில் குறிக்கோள் என்றும் ஒரே மாதிரி மாறாமல் இருப்பது இல்லை. படிக்கும் காலங்களில் 'நல்ல வேலை' என்று இருந்த குறிக்கோள், 'நல்ல வாழ்க்கைத்துணை', 'உயர் பதவி', 'நல்ல குழந்தைகள்' என்று பரிணாம வளர்ச்சி பெற்று 'ஆரோக்கியமான முதுமை, நிம்மதியான மரணம்' வரை தொடர்ந்து மாறுகிறது. நாளைய குறிக்கோள் நேற்றைய குறிக்கோளைவிட மிக முக்கியமானதாகத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் எல்லொருக்கும் குறிக்கோளை அடைந்த பிறகு வரும் இன்பம்/ நிம்மதி நிலைப்பதில்லை. ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டேயிருக்கிறது. அடுத்த குறிக்கொளை அடைந்தால் போதும், பின் வேறு எதுவும் வேண்டாம் என்ற எண்ணம் கானல் நீரைப்போல நம்மை எப்பொழுதும் இடைவிடாமல் செயல்களில் ஈடுபடச் செய்கிறது.


நம்முடைய அனைத்து குறிக்கோள்களையும் தங்கள் குறிக்கோளாகக்கொண்டு அவற்றை அடைந்தவர்கள் இவ்வுலகில் பல பேர். அவர்களில் யாரும், 'நான் வாழ்க்கையில் செய்யவேண்டியது அனைத்தையும் செய்துவிட்டேன், அடைய வேண்டியது அனைத்தையும் அடைந்துவிட்டேன், இனி எனக்கு குறிக்கோள் என்று ஏதும் இல்லை' என்று சொல்வதாகத் தெரியவில்லை.


வாழ்க்கை என்பது ஒரு இடைவிடாத முடிவில்லாத தேடலா? இந்த கேள்விக்கு சரியான விடை என்ன என்று அறிய வேண்டும் என்ற துடிப்பு யார் மனதில் தோன்றுகிறதோ அவர்கள் இந்த நூலை பயிலத்தகுதியானவர்கள். பெரும்பாலோர் குறிக்கோள் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல. எனவே எப்பொழுதும் போல் தொடர்ந்து தேடலில் ஈடுபடுவதுதான் சரி என்ற முடிவுடன் இருப்பார்கள். இவர்கள் முதலில் தங்களுடைய உண்மையான குறிக்கோள் என்ன என்பதை ஆராய வேண்டும்.

ஒவ்வொருவருடைய தனிப்பட்ட குறிக்கோள்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டவை போன்று தோன்றினாலும், ஆழ்ந்து சிந்தித்தால், எல்லா மனிதர்களுக்கும் இருப்பது 'குறையாத மகிழ்ச்சி, நிரந்தரமான பாதுகாப்பு மற்றும் கலையாத நிம்மதி' என்ற ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே என்பது தெரிய வரும்.


வாழ்க்கையில் சுகதுக்கங்களும் ஏற்றத்தாழ்வுகளும் மாறி மாறி வந்தாலும், 'எப்பொழுதும் எந்தவித கவலையும் இல்லாமல் இன்பமாக இருக்க வேண்டும்' என்பதே அனைவரது அனைத்து குறிக்கோள்களின் சாராம்சம். எல்லா குறிக்கோள்களுடைய உண்மை நோக்கம் இது ஒன்றே என்பதை உணர்ந்து, எவர் 'என் ஒரே குறிக்கோள் இன்பம், இன்பம் மட்டுமே' என்ற முடிவிற்கு வருகிறார்களோ அவர்களே இந்த நூலை பயில தகுதி வாய்ந்தவர்கள்.


மூன்றாம் தகுதி: தவறான பாதையில் அனுபவம்


முடிவான குறிக்கோள் இன்பம் மட்டும்தான் என்பது புரிந்தாலும் அது படிப்படியாக அடைய வேண்டிய ஒன்று, வாழ்க்கையின் ஒவ்வொரு குறிக்கோளை அடையும்போதும் நாம் இந்த குறையாத இன்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறோம் என்ற தவறான முடிவுடன் பலர் இருக்கிறர்கள். நிம்மதியான வாழ்வை தேடி நிம்மதியற்று அலைவதுதான் வாழ்வு என்பது தவறு.


பட்டம், பதவி, பணம் மற்றும் புகழ் ஆகியவை நிச்சயமாக நம்மை குறையாத இன்பத்தை அனுபவிக்கும் நிலைக்கு அழைத்து செல்ல மாட்டா என்று பலருக்கு தெரிவதில்லை. தான் போகும் பாதை சரியானது என்பதில் உறுதியாக இருப்பவர்கள் யாரிடமும் வழி கேட்பதில்லை. தவறான பாதையில் சிறிது தூரம் அல்லது வெகு தூரம் பயணம் செய்த பிறகுதான், பாதை தவறாக இருக்கலாம் என்ற எண்ணம் வரும். அதற்கு பிறகே குறையாத இன்பத்தை அடையும் சரியான பாதையைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆவல் ஏற்படும்.

'பொருளாதார முன்னேற்றம்' என்ற பாதையில் சில காலம் பயணித்த அனுபவத்திற்குப் பிறகு, இன்பத்தை தரும் சரியான வழியை தெரிந்து கொள்ளும் அடங்காத ஆவல் கொண்டவர்களே இந்த நூலை பயின்று பயன் பெறத் தகுதியானவர்கள்.


நான்காம் தகுதி: சீறிய பகுத்தறிவு


கவலை இல்லாத மனிதன் வெறும் கற்பனையல்ல என்பதை வேதங்களும் அவற்றை கற்றுத் தேர்ந்த ஆசிரியர்களும் கூறும் பொழுது இக்கூற்றின் உண்மையை அறிய தகுதி பெற்றவர்கள் கூரிய அறிவுள்ளவர்கள் மட்டுமே.


எதையும் ஆராய்ந்து அறியாமல், ஆட்டு மந்தையைப் போல் எல்லோரும் செல்லும் தவறான பாதையில் கடைசி வரை பயணிப்பவர்கள் இந்த நூலின் உயர்வை உணர மாட்டார்கள். மூட நம்பிக்கையுடனும், வாழ்கை என்பது எப்பொழுதும் ஒரு இன்ப துன்பங்களின் கலவையாகத்தான் இருக்கும் என்ற தன்னம்பிக்கையில்லா நினைப்புடனும் இருப்பவர்கள் இந்நூலை படிக்க தகுதியில்லாதவர்கள்.


'இறைவன் இருக்கின்றானா?' என்ற கேள்விக்கு உண்டு என்றோ இல்லை என்றோ புத்திக் கூர்மையை பயன்படுத்தாமல் வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் உறுதியான முடிவோடு இருப்பவர்கள் இந்த நூலை ஆராய்ந்து மெய்ப்பொருளை அறியத் தகுதியற்றவர்கள். இந்த கேள்விக்கு எனக்கு பதில் தெரியாது என்று மட்டும் சொல்லாமல் யாருக்குமே பதில் தெரியாது என்ற அசைக்க முடியாத பிடிவாதம் உள்ளவர்களும் இந்த நூலை படிக்க தகுதி இல்லாதவர்கள்.


நான் ஒரு சீறிய மாணவன். இறைவனைப் பற்றி இது வரை நான் முறையாகப் படிக்காத காரணத்தால் எனக்கு இந்த கேள்விக்கு பதில் தெரியவில்லை. ஆனாலும் என்னுடைய அறிவுத்திறனாலும், தர்க்கத்தின் துணையுடனும் திறந்த மனதுடன் ஆசிரியரின் விளக்கங்களை சீர்தூக்கிப்பார்த்து என்னால் உண்மையை அறிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே இந்த நூலை பயில தகுந்தவர்கள்.

முடிவுரை :


இந்த நான்கு தகுதிகளுடைய மாணவர்களுக்கு திறமிக்க ஆசிரியரின் கருணை கிடைக்குமேயானால், இந்த பரமரகசியம் என்ற நூலை அவர் துணையுடன் கற்று தேர்ந்து இவ்வாழ்க்கையில் அவர்கள் குறைவில்லா இன்பம் அடைந்து கவலையில்லாத மனிதனாக வாழ்வது உறுதி.


பயிற்சிக்காக :
1. பரமனை அறிந்து குறையில்லா இன்பத்தை அடைய முயல்வோர்களுக்கு இருக்க வேண்டிய நான்கு தகுதிகள் யாவை?

2. இந்த நான்கு தகுதிகள் உடையவர்கள் அனைவரும் இந்த பரம ரகசியம் என்ற நூலை படித்து பரமனை அறிய முடியுமா?

சுயசிந்தனைக்காக :

1. பரமனை அறிந்த பின் நாம் செயல்களில் ஈடுபடுவது நின்றுவிடுமா?

2. வேதங்களில் உள்ள கருத்துக்கள் உண்மையிலேயே மனிதகுலத்தின் இன்பத்திற்கு வழிகோலுமென்றால் ஏன் அந்த கருத்துக்கள் பரவலாக எல்லோருக்கும் தெரியாமல் இருக்கின்றன