இந்த உலகத்தின் ஆதாரம் பரமன் என்றால் அந்த பரமனை அறிந்து கொள்வது எப்படி? நிச்சயமாக பரமன் நம்முடைய ஐந்து புலன்களின் மூலம் அறியப்படும் பொருள் அல்ல. அதாவது பார்த்தோ, கேட்டோ, தொட்டோ, முகர்ந்தோ அல்லது சுவைத்தோ பரமனை அறிய முடியாது. விஞ்ஞான கருவிகள் எதுவும் நேரடியாக பரமனின் இருப்பை அறிவிக்காது.
பரமனை அறிந்து கொள்ள நமக்கு இருப்பது ஒரே வழிதான். அந்த வழியை வேதங்கள் மட்டுமே நமக்கு காட்டிக்கொடுக்கின்றன. வேதம் என்ற வார்த்தைக்கு அறிவு என்று பொருள். எப்படி நாம் காதால் கேட்கும் ஒலியை மற்ற புலன்கள் மூலமாக சரிபார்க்க முடியாதோ அதே போல வேதங்கள் கூறும் உண்மையை நமது மற்ற ஐந்து புலன்கள் மூலம் சீர் தூக்கி பார்க்க முடியாது.
வேதம் என்பது நமது ஐந்து புலன்கள் போல் நேரடியாக அறிவைத்தரும் கருவி. கண் எப்படி நம் வாழ்க்கைக்கு உதவுகிறதோ அதைவிட பன்மடங்கு முக்கியமான உதவி செய்யும் திறனுள்ளது வேதம். வேதங்களை பயின்று அதன் பயனை அனுபவிக்காதவனுடய வாழ்க்கை, கண் இருந்தும் அதை பார்ப்பதற்காக பயன்படுத்தாதவனுடைய நிலையை போல பரிதாபத்திற்குரியது.
வேதங்களை பற்றிய பின்வரும் ஆறு உண்மைகளை தெரிந்து கொள்வது, பரமனை அறிந்து கொள்ளும் முயற்சியில் நமக்கு மிகவும் உதவியாக இருக்கும். 'கண்ணை நம்பாதே. உன்னை ஏமாற்றும் நீ காணும் காட்சி' என்பதனால் நாம் கண்ணை உபயோகபடுத்தாமல் விட்டுவிடபோவதில்லை. கண்ணின் தன்மைகளை அறிந்து கொண்டு அதை உபயோகபடுத்துவதை போல வேதத்தின் தன்மைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
முதல் கருத்து: வேதம் மானிடர்களின் படைப்பு அல்ல
வேதம் உலகம் தோன்றியபோது உடன் தோன்றியது. இது மனிதர்கள் யாராலும் இயற்றபட்டதல்ல. வேதம் நுண்ணிய ஒலி அலைகளாக எப்பொழுதும் உலகத்துடன் இருந்து வருகிறது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன் தவவலிமையுடைய ஒரு சில ஞானிகள் இந்த ஒலியலைகளை கிரகித்து மனிதர்கள் புரிந்து கொள்ளும் மொழி வடிவில் வேதத்தை இவ்வுலகிற்கு அருளியுள்ளனர்.
இரண்டாம் கருத்து: வேதம் ஒரு வழிகாட்டி புத்தகம் (User Manual)
தொலைகாட்சிபெட்டி போன்ற ஒரு கருவியை நாம் வாங்கும் பொழுது அதை உபயோகிக்கும் முறையை புத்தகமாக உடன் அளிப்பது போல இந்த உலகம் உருவாக்கப்பட்டபோது அதன் பயன்பாட்டுவிதங்களை உள்ளடக்கி வெளியிடபட்ட ஒரு வழிகாட்டி புத்தகம்தான் வேதம். இதில் இந்த உலகத்தின் நோக்கம் மற்றும் அதில் வாழும் வழிமுறைகள் முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளன. மேலும் நம் உடல், மனம், புத்தி இவைகளின் தன்மைகளும் இவற்றை சரியாக உபயோகித்து இவற்றின் முழுப்பயனை அனுபவிக்கும் வழிமுறைகளும் விவரமான முறையில் வேதத்தில் கூறப்பட்டுள்ளன.
மூன்றாம் கருத்து: வேதங்களின் நோக்கம்
வேதங்களின் ஒரே குறிக்கோள் மனிதனுடைய வாழ்க்கையை செம்மைபடுத்துவதுதான்.. பின் வரும் வேத மந்திரம் இந்த குறிக்கோளை சிறப்பாக விளக்குகிறது.
அறியாமையிலிருந்து ஞானத்துக்கும், மரணத்திலிருந்து அமர வாழ்வுக்கும், மாறும் பொய்யிலிருந்து மாறாத உண்மைக்கும் மனிதனை அழைத்து செல்வதுதான் வேதங்களின் முடிவான நோக்கம்.
நான்காம் கருத்து: வேதம் மாறாதது
உலகியல் மற்றும் அறிவியல் ஞானங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை. நமக்குத் தெரிந்த அனைத்து பொருள்களும் தொடர்ந்து மாறிக்கொண்டேயுள்ளன. எனவே அவற்றை சார்ந்து இயற்றப்பட்ட அறிவு நூல்களும் மாற்றப்பட வேண்டியவை. ஒரு அகழ்வாராய்ச்சிக்குப்பிறகு சரித்திரம் கூட மாற்றி எழுதப்படலாம். ஆனால் வேதம் எப்பொழுதும் மாறாதது. அதில் உள்ள ஞானம் முழுமையானது. எல்லோருக்கும் எல்லா காலங்களிலும் இந்த ஞானம் வாழ்க்கையை வாழும் சரியான முறையை காட்டிக் கொடுக்க வல்லது.
ஐந்தாம் கருத்து: வேதத்தை பயில குரு அவசியம்
யாராலும் வேதங்களை தானாக படித்து புரிந்து கொள்ள முடியாது. அவற்றை முறையாக தனது குருவிடமிருந்து பயின்ற ஒருவரிடமிருந்து மட்டுமே கற்றுக் கொள்ள முடியும். இறைவன்தான் ஆதிகுரு.
வேதங்களுக்கு பல ஆசிரியர்கள் வெவ்வேறு பொருள் கூறுவது போல தோன்றினாலும் அது வெறும் தோற்றம் மட்டுமே. உண்மையில் வேதம் கூறும் ஒரே உண்மையைத்தான் மாணவர்களின் புத்தி கூர்மைக்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு ஆசிரியரும் வெவ்வேறு முறையில் கூறி வருகிறார்கள். உலகில் உள்ள மக்களின் புத்திசாலித்தனம் ஒருவருக்கொருவர் மிகவும் மாறுபடுகிறது. எல்லோராலும் வேதத்தை முழுதுமாக கற்றுக் கொள்ள முடியாது. ஆனால் வேதம் ஒருவர் விடாமல் அனைத்து மானிடர்களுக்குமான வழிகாட்டி புத்தகம். எனவே அவரவர் நிலைக்கேற்றவாரு வெவ்வேறு ஆசிரியர்களின் போதனைகள் மூலம் அனைத்து மானிடர்களும் வேதத்தின் பயனை பெற்று வருகிறார்கள்.
ஆறாம் கருத்து: வேதத்தில் நம்பிக்கை
'மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்கவேண்டாம்' என்பதன் பொருள் மனம் செம்மையாகும்வரை நிச்சயம் மந்திரத்தை ஜெபிக்க வேண்டும் என்பதே.
ஒரு உபகரணத்தை உபயோகிக்க அதன் உடன் வரும் வழிகாட்டி புத்தகம் (User Manual) எப்பொழுதும் அவசியம் என்பது இல்லை. உபகரணத்தை சரியான முறையில் உபயோகிக்க தெரிந்தவுடன் அந்த புத்தகம் தேவையில்லை. அதே போல வாழ்க்கையை வாழ்வது எப்படி என்று சரியாகத் தெரியும் வரை நாம் வேதத்தில் நம்பிக்கை கொண்டு அதை முறையாக பயிலுவது அவசியம். வாழ்க்கையின் குறிக்கோளான குறையாத இன்பம், நிலையான அமைதி மற்றும் நிரந்தரமான பாதுகாப்பு இவற்றை அடைந்த பின் வேதம் நமக்கு அவசியம் இல்லாத ஒரு புத்தகம்.
நமது மனம் செம்மையானபின்தான் எல்லாம் இன்பமயம் என்று உலகவாழ்வை சரியான நோக்கில் நம்மால் பார்க்க முடியும். எனவே அதுவரை நமக்கு வேதம் மிக அவசியம். அதில் முழுநம்பிக்கையிருந்தால்தான் அதன் பலன்கள் நமக்கு கிடைக்கும்.
முடிவுரை:
வாழ்க்கையில் குறையாத இன்பம் அடைய வேண்டுமென்றால் பரமனை முழுதாக அறிந்து கொள்ள வேண்டும். பரமனை அறிந்து கொள்ள நமக்கு இருக்கும் ஒரே வழி வேதத்தில் மட்டுமே கொடுக்கப் பட்டுள்ளது. எனவே வேதத்தில் முழு நம்பிக்கை கொண்டு தகுந்த ஒரு ஆசிரியரின் துணையுடன் அதை முறையாகவும் தொடர்ந்தும் பயில வேண்டும். தேவையான மனப்பக்குவமும் புத்திகூர்மையும் நம்மிடம் இருந்தால் நம்மால் நிச்சயம் இந்த பாதையில் பயணித்து நம் வாழ்வின் குறிக்கோளை அடைய முடியும்.
பயிற்சிக்காக :
1. வேதத்தை பற்றி கூறப்பட்ட ஆறு கருத்துக்கள் யாவை?
2. மெய், வாய், கண், செவி, மூக்கு எனும் ஐம்புலன்களைத்தவிர நமக்கு அறிவுதரும் சாதனம் வேறு ஏதேனும் உளதா?
3. வேதத்தின் நோக்கம் என்ன?
சுயசிந்தனைக்காக :
1. இந்து மதத்தினரைத் தவிர மற்ற மதத்தினர் பின்பற்றும் வேதங்கள் (பைபிள், குரான் போன்றவை) சரியானவையா?
2. நாம் சரியான ஆசிரியரை எப்படி தேர்ந்தெடுப்பது?
3. இந்த உலகம் படைக்கப்பட்டதன் நோக்கம் என்ன?