Thursday, January 28, 2010

பாடம் 002: பரமன் உலகின் ஆதாரம் (பிரம்ம சூத்திரம் 1.1.2)

பரமன் என்று ஒருவன் இருக்கிறான். அவன்தான் இந்த உலகத்திற்கும் மற்றும் அனைத்து உயிர்களுக்கும் ஆதாரம்.

நாம் அறிந்த இந்த அளவிட முடியாத விண்வெளியும் அதில் உள்ள எண்ணிலடங்கா நட்சத்திரங்களும் அவற்றை முறையாக சுற்றும் பல்வேறு கோள்களும் எவ்வாறு தோன்றின? இந்த கேள்விக்கு பதில் நாம் சாதாரணமாக நினைப்பது போல் அவ்வளவு கடினமானது அல்ல. இந்தக் கேள்விக்கு நம்மால் உறுதியான பதில் தெரிந்து கொள்ள முடியாது என்ற அவநம்பிக்கையை விடுத்து ஆராய்ச்சி மனோபாவத்துடன் அணுகினால் இந்த பேரண்டத்தின் தோற்றம், இருப்பு மற்றும் மறைவிற்கு ஆதாரமாய் இருப்பது பரமன் என்பது விளங்கும்.

முதல் படி

உலகம் தானாக உருவானதா இல்லை ஏதேனும் அறிவுள்ள ஒன்றினால் உருவாக்கப்பட்டதா? பல்வேறு பௌதீக இரசாயன விதிகளுக்கு உட்பட்டு முறையாக இயங்கி வரும் காரணத்தால் இது தானாக தோன்றியது என்பதை விட நமக்குத் தெரியாத ஏதோவொரு அறிவுள்ள சக்திதான் இதை உருவாக்கியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம் என்று முடிவு செய்வது அறிவீனம். ஏதாவது ஒரு வாதத்தை முதல் படியாகக் கொண்டு நமது ஆராய்ச்சியைத் தொடங்கி உறுதியான தெளிவான முரண்பாடற்ற முடிவுக்கு வரும்வரை தளரா முயற்சியுடன் உழைப்பதுதான் அறிவாளியின் தன்மை.

முதலில் 'உலகம் தானாகத்தோன்றியது ' என்ற கொள்கையில் உண்மை இருக்கிறதா என்று ஆராய்வோம்.

இரண்டாவது படி

இந்த உலகம் தானாகத்தான் தோன்றியது என்று அறிவியல் நமக்குத் தெள்ளத்தெளிவாக கூறவில்லை. மேலை நாட்டு அறிவியல் அறிஞர்கள் பிக்பேங்க் (Big Bang) லிருந்து படிப்படியாக இவ்வுலகமும் பின் அதில் உயிரினங்களும் தோன்றியிருக்கலாம் என்கிறார்கள். அறிவியல் உலகம் தொடர்ந்து உண்மையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கண்டுபிடிப்பும் முந்தைய முடிவை முறியடித்து ஒரு புதிய கொள்கையை முன் வைக்கிறது. மாறாத உண்மை எப்பொழுதும் அறிவியலின் பிடிக்குள் வராது. எப்பொழுதும் தொடுவானத்தை தொடும் முயற்சியை கைவிடாமல், தொடர்ந்து தேடலில் ஈடுபடுவதுதான் அறிவியல். நம் வாழ்நாள் முடிவதற்குள் அனுமானங்களிலிருந்து அறிவியல் வெளிவந்து 'உண்மை இதுதான்' என்ற முழக்கமிடாது என்பது நமக்கு உறுதியாகத் தெரிய வேண்டும்.

அவ்வாறு நாம் தெரிந்து கொள்ளாவிட்டால் நாம் கடைசிவரை ஒரு முடிவை எதிர்பார்த்து ஏமாறுவதைத்தவிர வேறு வழியில்லை. நாமாகவும் அறிவியலின் துணையின்றி உலகம் தானாகத்தான் தோன்றியது என்று நிரூபிக்க முடியாது.

எனவே இந்தக் கொள்கையை முழுவதுமாக கைவிட்டு நிச்சயமாக உலகம் தானாகத் தோன்றியது அல்ல என்ற முடிவுக்கு நாம் வரவேண்டும். அடுத்த படியாக நாம் வேதம் சொல்லும் வழியில் பயணித்து உண்மையை அறிய முயல வேண்டும்.

கூடிய விரைவில் உண்மைகளை அறிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் அறிவியல் செயல்பட்டு வருகிறது. வேதங்கள் முடிவான உண்மைகளை அறிவியல் பூர்வமான விளக்கத்துடன் தருகின்றன. எனவே அறிவியலை நம்புவதற்கு பதில் வேத கருத்துக்களை ஆராய்வதே சிறந்தது.

இப்பொழுது நாம் அடுத்த படியாக உலகத்தை தோற்றுவித்தது ஒரு அறிவுள்ள சக்திதான் என்ற கொள்கையை ஆராய்வோம்.

மூன்றாவது படி

அறிவியலின் ஒவ்வொரு கண்டு பிடிப்பும், இந்த உலகத்துக்கு அடிப்படையாய் இருக்கும் அறிவுச் சக்தியை வெளிப்படுத்துகின்றன. ஒரு சில விஞ்ஞானிகள் இதை தெள்ளத் தெளிவாக விளக்கியிருப்பினும்கூட பெரும்பாலோர் இன்னும் தொடர்ந்து தேடலில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

அறிவில்லாத அணுக்களின் தற்செயலான தொகுப்பிலிருந்து அறிவுள்ள மனிதன் தோன்றினான் என்பது அறிவுக்கு சற்றும் பொருத்தமில்லாத கூற்றாகத் தெரிகிறது. அதே வேளையில் அறிவுள்ள ஒரு சக்திதான் இவற்றைத் தோற்றுவித்தது என்று உறிதியாக சொல்வதற்கும் ஆதாரம் இல்லை. அப்படியே இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டாலும் அந்த அறிவுள்ள சக்தி எப்படி தோன்றியது என்ற கேள்வி மனதில் எழுகிறது.

உலகம் தோன்றி பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு பிறகுதான் மனிதன் தோன்றினான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆகவே இது போன்ற தொடர் கேள்விகளுக்கு முடிவான பதில் மனித அறிவுக்கு உட்பட்டது அல்ல என்பது நமக்கு தெளிவாக புரிய வேண்டும். மனித சக்திக்கு அப்பாற்பட்ட வேதங்கள்தான் இதற்கு பதிலளிக்க வேண்டும்.

நான்காவது படி

நூற்றி எட்டு உபநிடதங்களை உள்ளடக்கிய நான்கு வேதங்களின் சாரமான பிரம்ம சூத்திரத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட பரமரகசியம் என்ற இந்த புத்தகத்தை உரிய ஆசிரியரின் துணையுடன் படித்தால் நம் மனதில் ஏற்படும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்.

வேதங்கள் மனித மனதின் கற்பனையல்ல என்றும் அதில் கூறப்பட்டுள்ளவைகள் உண்மை என்றும் எவ்வாறு நாம் உறுதியாக அறியமுடியும்? இந்த புத்தகத்தை படித்த பிறகு இதுவும் பிக்பேங்க் (BigBang)ஐப்போல ஒரு நிரூபிக்க முடியாத கொள்கையாக இருந்தால் என்ன பயன்? - வேதங்கள் கூறுவது என்ன என்று முழுமையாக தெரியாமல் அது உண்மையா இல்லையா என்று விவாதிப்பது விவேகமாகாது.

அறிவியல் அறிஞர்களை நம்பி காத்து கொண்டிருப்பதும் நாமாக முயல்வதும் சரியான பாதையல்ல என்று நமக்கு உறுதியாகத் தெரிந்தால், இந்த புத்தகத்தை பயிலுவதை தவிர வேறு வழியில்லை என்ற உண்மை நமக்கு புலனாகும். மேலும் இந்த புத்தகத்தில் உள்ள எண்ணிக்கைக்கு உட்பட்ட பக்கங்களை தகுந்த ஆசிரியரின் கவனிப்பில் தொடர்ந்து முறையாக படிப்பது என்பது ஒரு குறிப்பிட்ட கால கட்டத்துக்குள் முடிவடைந்துவிடும் ஒரு காரியம். எனவே வேதங்களின் சாரத்தை அறிந்து கொண்ட பிறகு அவை உண்மையா இல்லையா என்று நம்மால் நம் அறிவின் துணை கொண்டு அறிய முடியும் என்ற நம்பிக்கையுடன் நாம் இந்த பரம ரகசியத்தை அறிந்து கொள்ள முயல வேண்டும்.

முடிவுரை :

இவ்வுலகில் இன்பமாக வாழ பரமனை அறிவது அவசியம் என்று தொடங்கிய நமது அறிவுப் பயணத்தின் முதல் கட்டத்தில் இந்த உலகத்தின் தோற்றம், இருப்பு மற்றும் மறைவுக்கு ஆதாரமாயிருக்கும் அறிவுள்ள தத்துவம் பரமன் என்று வேதம் நமக்கு பரமனை அறிமுகபடுத்துகிறது.

வாழ்வில் இதுவரை அறிவியல் கொள்கைகளை நம்பி இந்த உலகம் தானாக உருவானது என்றோ மதக் கோட்பாடுகளின்படி இந்த உலகம் கடவுளால் தோற்றுவிக்கப்பட்டது என்ற மூடநம்பிக்கையுடனோ இருந்த நாம் இனி இந்த உலகத்தின் ஆதாரம் பரமன் என்ற வேதங்களின் முடிவை முழுவதுமாக ஆராய்ந்து அறிந்து கொள்ள முற்படுவோம்.

பயிற்சிக்காக :

1. உலகத்தின் தோற்றத்தின் காரணத்தை அறியும் ஆய்வில், நாம் கடந்த நான்கு படிக்கட்டுக்கள் யாவை?

2. நாம் எதற்காக உலகத்தின் தோற்றத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்?

சுயசிந்தனைக்காக :

1. உலகம் தோன்றிய விதத்தை பற்றி பல்வேறு சமய நூல்கள் பல விதமான கருத்துக்களை தருகின்றன. நாம் எந்த கருத்தை சரி என்று ஏற்றுக் கொள்வது?

2. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் (Albert Einstein - 1879-1955) கடவுளைப் பற்றிய கருத்துக்கள், வெர்னெர் ஹைசன்பர்கின் (Werner Heisenberg - 1901-1976) தற்காலிகத் தத்துவம் (Uncertainty Principle), பெல்'ஸ் கோட்பாடு (Bells Theorem - 1965) ஆகியவற்றை ஆய்வு செய்க.