Sunday, January 31, 2010

பாடம் 004: வேதங்களின் மெய்ப்பொருள் (பிரம்ம சூத்திரம் 1.1.4)

அனைத்து மக்களுக்கும் அவரவர் வாழ்க்கையை வாழ்வது எப்படி என்ற முறையான வழிமுறையைத் தருவது வேதம். ஒரு பள்ளிக் கூடத்தில் உள்ள தொடக்க நிலை மாணவர்களுக்கும் உயர் நிலை மாணவர்களுக்கும் ஒரே ஒரு பாட புத்தகம் கொடுக்கப்பட்டால் அது அதிக பக்கங்களை கொண்டதாகவும் பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கிய புத்தகமாகவும் இருக்கும். ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு கடைசி பக்கங்களில் உள்ள பாடங்கள் முற்றிலும் புரியாது. பத்தாம் வகுப்பு மாணவனுக்கு முதலில் உள்ள சில பாடங்கள் அவசியம் இல்லாதது என்று தோன்றும். வேதத்தின் நிலை இது போன்றது.

வேதம் இரண்டு பாகங்கள் கொண்டது. முதல் பாகம் 'கர்ம காண்டம்'. இரண்டாம் பாகம் 'ஞானகாண்டம்' அல்லது 'வேதாந்தம்'.

வேதாந்தம் பரமனைப் பற்றிய முழு அறிவைத் தருகிறது. ஆனால் அனைவரும் அந்த அறிவை அறிந்து கொள்ள தகுதியானவர்கள் அல்ல. எனவே அவர்களின் மனதை பண்படுத்தி பக்குவமடைய செய்யும் பொருட்டு கர்ம காண்டம் பல்வேறு வழிபாட்டு சடங்குகளை முன்மொழிகிறது.

வாழ்க்கை எனும் செயல் முறை கல்விச் சாலையில் நாம் நம் ஒவ்வொரு செயலிலிருந்தும் அறிவையும் மனபக்குவத்தையும் அடைகிறோம். எப்பொழுது அந்த அறிவு முதிர்ந்து தேவையான மனபக்குவத்தை நாம் அடைகிறோமோ அப்பொழுதுதான் பரமனை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் நமக்கு ஏற்பட்டு வேதங்களை படிக்க முற்படுவோம்.

கர்ம காண்டம் நம் செயல்களை செய்ய வேண்டிய முறையையும் வேதாந்தம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய பரமனை பற்றிய ஞானத்தையும் நமக்கு தருகின்றன.

பரமனை பற்றி தெரிந்து கொள்ள நமக்கு கர்ம காண்டத்தை பற்றிய அறிவு தேவையில்லை. முறையாக வேதத்தை பயுலுவதைத் தவிர நாம் வேறு ஒரு செயலிலும் நாம் ஈடுபட வேண்டாம். ஆனால் பரமனை தெரிந்து கொள்ள தேவையான மனோபக்குவத்தை பெற நாம் கர்ம காண்டத்தில் கூறப்பட்ட செயல்களை செய்ய வேண்டியிருக்கலாம்.

அனைத்து மனிதர்களின் ஒரே குறிக்கோள் பரமனை அறிந்து குறைவில்லா இன்பமான வாழ்க்கையை அனுபவிப்பதுதான் என்றாலும் எல்லோரும் அந்த ஞானத்தை அடைய தகுதி வாய்ந்தவர்கள் அல்ல. பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் முடிவான நோக்கம் பள்ளியின் இறுதித் தேர்வில் வெற்றி பெறுவதுதான் என்றாலும் தகுதியற்றவர்களை ஆசிரியர்கள் தேர்வுக்கு அனுப்புவதில்லை. அது போல நமது தகுதியை ஆய்ந்து நமக்கேற்ற உபதேசத்தை செய்வது நமது குருவின் கடமை. பெரும்பாலான மக்களுக்கு ஆன்மீக அறிவில் தங்களுடைய நிலையை தாங்களாக உணரும் சக்தி இருப்பதில்லை. எனவே நாம் கூடிய விரைவில் ஒரு ஆன்மீக குருவை நாடுவது அவசியம்.

வேதங்களின் ஒரே குறிக்கோள் நமக்கு பரமனை அறிவிப்பதுதான். இந்த குறிக்கோளை நிறைவேற்ற பல்வேறு படிகளில் வேதம் நம்மை அழைத்து செல்கிறது.

முதல் படி: கர்ம யோகம்

பலனில் பற்றில்லாமல் நமக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை முறையாகவும் நமது முழுமனதின் ஈடுபாடுடனும் செம்மையாக செய்து முடிப்பது கர்ம யோகம். பணம், பதவி மற்றும் புகழ் அடைவதற்காக செய்யும் செயல்கள் கர்ம யோகம் ஆகாது. நமது மனம் பக்குவப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செய்யும் செயல்களே கர்ம யோகமாகும்.

கர்ம யோகத்தின் பலன் மனப்பக்குவம்.

இரண்டாம் படி: கற்றல்

வேதாந்தத்தை முறையாக ஆசிரியரிடமிருந்து தொடர்ந்து நீண்ட நாட்கள் கற்க வேண்டும். வேதத்தில் சொல்லுவது இதுதான் என்ற திடமான எண்ணம் வரும் வரை கற்றல் தொடர வேண்டும். ஆசிரியர் போதிப்பது புரியவில்லை என்றால் தவறு ஆசிரியர் மீதோ வேதத்தின் மீதோ இல்லை என்ற உறுதியுடன் 'எனக்கு புரியவில்லை' என்ற மனோபாவத்துடன் மீண்டும் மீண்டும், புரியும் வரை கற்றல் தொடர வேண்டும்.

மூன்றாம் படி: கசடற கற்றல்

வேதம் சொல்வது என்ன என்று சரியாகத் தெரிந்தவுடன் நாம் அடுத்த படியாக வேதம் சொல்வது சரியா என்ற கேள்வியை கேட்க வேண்டும். யுக்தி மூலமாகவும், அனுபவம் மூலமாகவும் வேதம் கூறிய முடிவை ஆராய வேண்டும். வேதத்தின் கருத்து யுக்திக்கு பொருந்தாமலோ அனுபவத்திற்கு முரணாகவோ இருந்தால் ஆசிரியரை அணுகி முறையுடன் கேள்விகள் கேட்க வேண்டும். நமது எல்லா கேள்விகளுக்கும் நமது சந்தேகங்கள் தீரும்வரை பதில் சொல்வது ஆசிரியரின் கடமை.

சில சமயம் ஆசிரியர் நம்முடைய தகுதி பரமனை புரிந்து கொள்ள போதாது என்று நம்மை முதல் படிக்கு அனுப்பக் கூடும். ஆசிரியரின் அத்தகைய முடிவு நம்மால் ஏற்க முடியாமல் இருந்தால் நாம் வேறு ஒரு ஆசிரியரை அணுகுவதில் தவறு இல்லை. ஆனால் நாம் மறுபடியும் கற்றல் என்ற இரண்டாம் படியிலிருந்து நமது பயணத்தை தொடர வேண்டும்.
வேதத்தின் கருத்துக்களை எந்த வித சந்தேகங்களும் இல்லாமல் தெளிவாகத் தெரிந்து கொண்ட பிறகு நாம் அடுத்த படிக்கு செல்லத் தயாராவோம். இந்த நிலையில் எதை தெரிந்து கொண்டால் அனைத்தையும் தெரிந்து கொண்டதற்கு சமம் ஆகுமோ அதை நாம் தெரிந்து கொண்டிருப்போம்.

நான்காம் படி: நிற்க அதற்கு தக

வேதத்திலிருந்து நமக்கு கிடைத்த ஞானத்தில் நாம் நிலைத்து நிற்க ஒரு சில காலம் ஆகும். இந்த படியில் ஆசிரியர் நமக்கு அவ்வளவாக துணை செய்ய முடியாது. சுயமுயற்சியால் மட்டுமே நாம் தியானம் என்கிற பயிற்சி மூலம் ஞானத்தில் நிலை பெற வேண்டும்

உணவு உண்ண ஆரம்பித்தவுடன் பசி குறைய ஆரம்பிப்பது போல இந்த படியின் துவக்கத்திலிருந்து நாம் குறைவற்ற இன்பத்தை அடைய ஆரம்பித்து விடுவோம். கூடிய விரைவில் நாம் நம் வாழ்க்கையின் குறிக்கோளை அடைந்து விடுவோம்.

அதற்கு பிறகு நாம் செய்ய வேண்டியது என்று ஒன்றும் இருக்காது.

முடிவுரை:

பரமனை அறிந்து கொள்ள நாம் கடக்க வேண்டிய படிகள் அனைத்தையும் ஒரே ஜென்மத்தில் கடந்துவிட முடியாது. நாம் செய்யும் எந்தஒரு முயற்சியும் வீண்போகாது. நாம் ஒவ்வொரு பிறவியிலும் தொடர்ந்து செய்யும் முயற்சியால்தான் வேதத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து படிகளையும் கடந்து பரமனைத் தெரிந்து கொள்ள முடியும். ஆகையினால் நாம் குருவின் துணையுடன் நம் தற்போதைய நிலையை தெரிந்து கொண்டு மேற்கொண்டு நமது ஆன்மீக பயணத்தை தொடர வேண்டும்.

வேதாந்தத்தை தகுந்த ஆசிரியரின் துணையுடன் பயில தொடங்கும் அனைவருக்கும் இந்த பிறவியிலேயே பரமனை அறிந்து கொள்ளும் வாய்ப்பு மிக அதிகம். இவர்கள் முதல் படியில் துவங்கினாலும் வெகு விரைவில் பரமனை அறிந்து குறைவில்லா இன்பத்தை அடைவர்.

பயிற்சிக்காக:

1. பரமனை அறிய எத்தனை படிகளை வேதம் போதிக்கிறது?

2. வேதங்கள் மிக நிறைய கருத்துக்களை உள்ளடக்கியிருப்பதன் அவசியம் என்ன?

சுயசிந்தனைக்காக:

1. ஒரு அலுவலகத்தில் நீண்ட நேரம் வேலை செய்பவரால் கர்ம யோகத்தில் ஈடுபட முடியுமா?

2. கர்ம யோகத்தில் ஈடுபடுபவருக்கு பணம், புகழ் போன்றவற்றை சம்பாதிக்க ஏதேனும் தடை உள்ளதா?