அஷ்டாங்க யோகத்தின் கடைசி இரு அங்கங்களான தியானம் மற்றும் சமாதி ஆகிய இரண்டை பற்றிய விளக்கத்துடன் முக்தியை அடைய அஷ்டாங்க யோகம் எவ்வாறு உதவுகிறது என்ற கருத்தையும் இந்த பாடம் விளக்குகிறது.
யோகம் காட்டும் பாதை
யமம் மற்றும் நியமம் என்ற முதல் இரு அங்கங்கள் நம் வாழ்வை எவ்வாறு சரியாக வாழ்வது என்ற கருத்தை பத்துகட்டளைகள் மூலம் தெரிவித்தன. நம் வாழ்வின் குறிக்கோளான முக்தியை அடைய மனம்போனபடி வாழாமல் செய்யவேண்டிய கடமைகளை செய்தும் செய்ய கூடாதவற்றை தவிர்த்தும் வாழவேண்டும்.
ஆசனம் மற்றும் பிராணாயாமம் ஆகிய அடுத்த இரு அங்கங்கள் தியானம் செய்வதற்கேற்ற உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை நமக்கு கொடுக்கின்றன.
மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிக்கவேண்டுமென்றால் அடிப்படைத்தகுதிகளை ஒருவன் பெற்றிருக்க வேண்டும். அதுபோல முக்தியை அடைய அஷ்டாங்க யோகத்தின் முதல் நான்கு அங்கங்களை முறையாக கடந்திருக்க வேண்டும்.
தகுதியானவர்கள் அனைவருக்கும் கல்லூரியில் இடம் கிடைத்துவிடுவதில்லை. நுழைவுத்தேர்வில் தேறுபவர்களுக்கு மட்டுமே மருத்துவ படிப்பை படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பிரத்யாகாரம் மற்றும் தாரணம் ஆகிய அடுத்த இரு அங்கங்கள் வெளியுலகில் உள்ள கவனத்தை உள்நோக்கி திருப்பி தியானத்துக்காக தேர்ந்தெடுத்த பொருளில் நம் மனதை குவிக்க உதவுகின்றன. இந்த கட்டத்தை அடைந்தவர்களுக்கு மட்டுமே தியானம் மற்றும் சமாதி ஆகிய கடைசி இரு அங்கங்களை முறையாக பயின்று முக்தியடையும் வாய்ப்பு கிடைக்கிறது.
தியானம்
ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை மனதுக்குள் தொடர்ந்து ஜெபிப்பதுதான் தியானம். தியானம் செய்வதன் குறிக்கோள் கட்டுப்பாடற்ற மனதை ஒரு கட்டுக்குள் கொண்டுவருவது. இதற்கு எந்த மந்திரத்தை உபயோகபடுத்துகிறோம் என்பது அவ்வளவு முக்கியமல்ல. ஆயினும் அவரவர்களின் இஷ்டதெய்வத்தை புகழ்வது போல் அமையும் மந்திரம் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களுக்கு தியானம் செய்வதை எளிதாக்கும். கடவுளிடம் அதிக ஈடுபாடு இல்லாதவர்களுக்கு வேதத்தின் சாரமான 'நான் பரமன்', 'நீயே அது' 'பேரறிவே பிரம்மம்' போன்ற மந்திரங்கள் உதவும்.
கண்களை மூடி வேறு எந்த புலன்களுக்கும் எவ்வித வேலையும் இல்லாத சூழ்நிலையில் சுகமாக அமர்ந்து உடல் உறுப்புகள் எதையும் பயன்படுத்தாமல் மனதுக்குள் மந்திரத்தை ஜெபிப்பது தியானம். மற்ற எண்ணங்களை அடக்கி முதல் முறையாக மந்திரத்தின் மீது மனதை குவிப்பது தாரணம். அதற்குபின் அதே மந்திரத்தை திரும்ப திரும்ப சொல்வதில் மட்டுமே மனதை பழக்கபடுத்தி பயில்வது தியானம்.
மந்திரத்தை திரும்ப திரும்ப சொல்லும்பொழுது எவ்வளவு முறை சொல்லுகிறோம் என்ற எண்ணிக்கை அனாவசியம். அதில் கவனத்தை செலுத்தகூடாது. அதேபோல் மந்திரத்தின் அர்த்தமும் முக்கியமல்ல. தியானம் செய்யும்பொழுது மந்திரத்தை மனதுக்குள் உச்சரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.
மனதில் வேறு எந்த எண்ணங்களும் ஏற்படாமல் மந்திரத்தில் மட்டும் கவனம் செலுத்துவது தாரணம். அதே கவனத்தில் தொடர்ந்து ஆழ்ந்து இருப்பது தியானம். இவ்விதம் தொடர்ந்து அதே கவனத்தில் இருப்பதற்கு எவ்வித பிரயத்தனமும் செய்ய வேண்டிய அவசியமில்லாமல் தானாக தியானம் நடப்பது சமாதி.
சமாதி
எப்பொழுது தியானம் எவ்வித முயற்சியும் இன்றி இயல்பாக நடைபெற ஆரம்பிக்கிறதோ அந்த நிலை சமாதியாகும். அஷ்டாங்க யோகத்தின் முதல் ஏழு அங்கங்களும் நம் முயற்சியால் பயின்று கடக்க வேண்டிய படிகட்டுகள். இந்த பாதையில் படிப்படியாக ஏறி கடைசியில் சேரவேண்டிய இடம்தான் சமாதி.
நான், மந்திரம், என் முயற்சி ஆகிய மூன்றும் சேர்ந்தது தியானம். நான் முயற்சி செய்து தொடர்ந்து மந்திரத்தை ஜெபித்துக்கொண்டிருக்கிறேன் என்ற நிலை மாறி எவ்வித முயற்சியுமின்றி நான் செய்கிறேன் என்ற எண்ணமும் இன்றி தியானம் நடப்பதுதான் சமாதி. நான் உள்ளிட்ட அனைத்து எண்ணங்களின் மறைவு சமாதி.
சக்தியை செலவழித்து பெடலை தொடர்ந்து சுழற்றினால்தான் சைக்கிள் ஓடும். ஆனால் வெகு வேகமாக சிறிதுநேரம் தொடர்ந்து பெடலை சுழற்றிவிட்டு பிறகு ஓய்வு எடுத்துக்கொண்டாலும் சைக்கிள் தானாக எவ்வித முயற்சியும் இல்லாமல் ஓடும். இதுபோல் தொடர்ந்து மந்திரத்தை முயற்சியுடன் ஜெபித்து பழகிவிட்டால் பின் எவ்வித முயற்சியும் இல்லாமல் நாம் சமாதியில் இருக்கத்துவங்குவோம்.
நாம் செய்கிறோம் என்ற எண்ணமின்றி செய்யும் செயலில் முழுவதும் மூழ்குவது சமாதி. கிரிக்கட் போட்டியில் கடைசி ஓவரில் பத்து ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் உலகத்தில் நம்மை சுற்றி நிகழும் வேறு எந்த நிகழ்வுகளும் நம்மை பாதிக்காமல் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்ற எண்ணமும் இல்லாமல் விளையாட்டுடன் ஒன்றி சமாதியான நிலையில் இருப்பதால்தான் வெற்றிபெற்றவுடன் என்னவோ நாமே விளையாடி வென்றது போன்ற சந்தோஷம் ஏற்படுகிறது. இது போல் ஒவ்வொருவரும் தங்கள் தொழிலில் தன்னை மறந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கும்பொழுதும் சமாதியை அடைகிறார்கள். எனவே சமாதி என்ற நிலை நம் அனைவருக்கும் பழக்கமான ஒன்று.
வாழ்வில் வெளியுலக சூழ்நிலைகள் நம்மையறியாமல் நம்மை சமாதி நிலைக்கு எடுத்துச்செல்கின்றன. அஷ்டாங்க யோகம் மூலம் நாம் உள்நோக்கிதிரும்பி மனதின் செயல்பாட்டை கவனித்து அதன் செயல்பாட்டை கட்டுப்படுத்தி தியானம் செய்வதன் மூலம் சமாதி என்ற நிலையை நம் முயற்சியால் அடைகிறோம்.
பயங்கரமான திகில் காட்சிகள் நிறைந்த திரைப்படத்தை பார்க்கும்பொழுது திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம் என்ற நினைவு இருக்கும்வரை நாம் பயப்படுவதில்லை. எப்பொழுது படத்துடன் ஒன்றி நாமும் அதில் ஒரு அங்கமாக ஆகிவிடுவோமோ அப்பொழுது நமக்கு உண்மையிலேயே பயம் ஏற்படுகிறது.
அது போல இவ்வுலகில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் உண்மை என்ற நினைவு இருப்பதால்தான் நமக்கு பொறாமை, கோபம், எரிச்சல் போன்ற துக்கம் தரும் உணர்வுகள் தோன்றுகின்றன. அஷ்டாங்க யோகத்தை முறையாக பின்பற்றி சமாதி நிலையை அடைந்த பின் இவ்வுலகம் ஒரு நாடகமேடை என்ற வேதம் கூறும் உண்மை நம் மனதில் தொடர்ந்து நிலைபெற்றிருக்கும் என்பதால் சூழ்நிலை எப்படியிருந்தாலும் குறைவில்லாத அமைதியுடன் வாழலாம். இந்த முக்தி நிலையை அடைய உதவும் படிக்கட்டு அஷ்டாங்க யோகம்.
தியானம் செய்து சமாதி என்ற நிலையை அடைந்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லை. எல்லோராலும் வெகுநேரம் சமாதியில் இருக்கவும் முடியாது, இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
உலகில் எப்படி இன்பமாக வாழ்வது என்பதை பயில்வதற்காகத்தான் அஷ்டாங்க யோகம் என்ற பாதையில் பயணிக்கிறோமே தவிர தியானத்தின் மூலம் அடையும் சமாதியில் தொடர்ந்து இருக்கவேண்டும் என்பது நம் வாழ்வின் குறிக்கோள் அல்ல. காரை விற்றுவிட்டு கார் ஓட்டகற்றுக்கொள்ள முயல்வதுபோல் மனதில் உள்ள எண்ணங்களை விரட்டிவிட்டு சமாதியில் வாழ முடியாது.
நாம் சமாதியில் இருப்பதற்காக இவ்வுலகம் படைக்கப்படவில்லை. உலகத்தில் உள்ள சுகங்களை தொடர்ந்து அனுபவிப்பதே இந்த பிறவியின் நோக்கம். இடையிடையே ஏற்படும் துயரங்களை அவ்வப்பொழுது சமாதியில் ஆழ்வதால் தவிர்க்க முடியாது. சமாதியிலேயே இருக்கவேண்டும் என்ற ஆசை மரணத்திற்குபின் நிச்சயம் நடக்கத்தான் போகிறது. எனவே உயிருடன் இருக்கும்பொழுது வாழ்வின் துயரங்களிலிருந்து தப்பிக்க தியானம் செய்ய முயல்வது அறியாமை.
அலைபாயும் மனது வாழ்வின் ஏற்ற தாழ்வுகளால் பாதிக்கபடுவதை மாற்ற தியானம் செய்து மனதை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும். வேதம் படிப்பதால் கிடைக்கும் ஞானத்தில் நிலை பெற தியானத்தின் முடிவான சமாதி உதவும்.
எண்ணையை ஊற்றும்பொழுது எப்படி அது ஒரே சீராக ஆடாமல் கம்பிபோல் ஒழுகுகிறதோ அதேபோல் நாம் மனதினுள் உச்சரிக்கும் மந்திரம் ஒரே சீராக எவ்வித தடையுமின்றி தானாக தொடர்கிறதோ அப்பொழுது நாம் சமாதி என்ற நிலையை அடைந்துவிட்டோம் என்பது பொருள்.
சமாதி என்ற நிலையில் எவ்வித புதிய அனுபவமோ அறிவோ நமக்கு கிடைக்கும் என்பது தவறான கருத்து என்பதை நாம் மறந்து விடகூடாது. சமாதி அனுபவம் தியானம் செய்யாமலேயே அனைவருக்கும் கிடைக்கும் ஒன்று. அறிவு என்பது நம் ஐந்து புலன்களின் மூலம் மட்டுமே கிடைக்கும். எனவே அதிகபட்சமாக ஓரிரு முறைக்கு மேல் தியானத்தின் மூலம் சமாதியை அடைய வேண்டிய அவசியமில்லை.
மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்கவேண்டாம். ஓரிடத்தில் அமர்ந்து தியானம் செய்தபின் அடையும் சமாதி, வாழ்வு முழுதும் 'நான் பரமன்' என்ற அறிவில் நிலைபெற உதவும். எனவே முக்தியடைந்த பின் தியானம் செய்யவேண்டிய அவசியமில்லை.
முடிவுரை :
‘புலி உன்னை துரத்தினால் நீ என்ன செய்வாய்?’ என்ற கேள்விக்கு பதில் சொல்லும்பொழுது இது ஒரு கற்பனை என்பது நமக்கு தெரிந்திருப்பதால் பயம் ஏற்படாது. ஆனால் கனவில் புலி நம்மை துரத்தினால் அது வெறும் எண்ண ஓட்டம் என்பது தெரியாமல் நிஜமாகவே புலியை பார்த்த பயம் ஏற்பட்டு உடல் வேர்த்து விடும்.
இது போல 'நான் பரமன்' என்ற மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து தியானம் செய்கிறோம் என்ற எண்ணம் மறைந்தவுடன் நான் பரமன் என்ற உண்மை மட்டும் நிலைபெற்றுவிடும்.
வேதத்தை முறையாக படிக்கவேண்டும் என்ற படியை சரியாக கடந்து தியானம் செய்து சமாதியை அடைந்திருந்தோமானால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பின் நாம் தியானம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தியானம் என்பது சமாதிக்கு வழிவகுக்கும். சமாதி முக்தியை நிலைநாட்டும்.
சிறுகுழந்தையுடன் விளையாடும்பொழுது நாம் வயதானவர்கள் என்பதை நமக்கு நாமே ஞாபகபடுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் குழந்தையுடன் விளையாடுவதற்காக நம்மையும் குழந்தையின் நிலைக்கு தாழ்த்திக்கொண்டிருக்கிறோம் என்பதை நாம் மறப்பதில்லை. அதுபோல தியானம் செய்து பழகியபின் உலக வாழ்வில் ஈடுபடும்பொழுது நான் பரமன், இப்பொழுது மனித உடலுடன் உலகில் உறவாடிக் கொண்டிருக்கிறேன் என்பதை நமக்கு நாமே ஞாபகபடுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
அஷ்டாங்க யோகத்தின் மூலம் முக்தியடைந்தபின் உலகம் ஒரு நாடகமேடை என்பதை எப்பொழுதும் உணர்ந்திருப்பதால் குறையாத இன்பமும் நிரந்தரமான அமைதியும் நம்மை விட்டு விலகுவதேயில்லை.
பயிற்சிக்காக :
1. யோகம் காட்டும் பாதையை விளக்குக.
2. தியானம் என்றால் என்ன?
3. சமாதி என்றால் என்ன?
சுயசிந்தனைக்காக :
1. சமாதி என்ற நிலையை தியானத்தின் மூலம் அடைவது அவசியமா?
2. ஒரு நாளில் எவ்வளவு நேரம் தியானம் செய்யவேண்டும்?
3. ஒரு நாளில் எவ்வளவு நேரம் சமாதியில் இருக்கவேண்டும்?
4. சமாதியை இருவழிகளில் அடையலாம். அவை யாவை?