Thursday, December 30, 2010

பாடம் 125: பிரத்யாகாரமும் தாரணமும் (பிரம்மசூத்திரம் 3.3.39)

அஷ்டாங்க யோகத்தின் ஐந்தாவது அங்கமான பிரத்யாகாரம் என்னும் புலன் கட்டுப்பாட்டு முறைகளையும் ஆறாவது அங்கமான தாரணம் என்னும் மனகட்டுப்பாட்டு முறைகளையும்  இந்த பாடம் விவரிக்கிறது.

பிரத்யாகாரம்

ஒலியை செவி மூலம் உணர்வதால் ஒலியை எழுப்பும் ஒரு பொருள் உலகில் இருக்கிறது என்று நாம் உணருகிறோம். இதுபோல உலகின் ஒவ்வொரு அம்சத்தையும்  நமது ஐந்து புலன்கள் நமக்கு அறிவிப்பதால் மட்டுமே உலகம் என்று ஒன்று இருக்கிறது என்பதை நம்மால் உணரமுடிகிறது. ஐந்து புலன்களில் ஒன்று கூட வேலைசெய்யாவிட்டால் இந்த பிரபஞ்சம் நம்மை பொறுத்தவரை மறைந்து விடும்.

ஐந்து புலன்கள் மூலம் உலகத்தில் உள்ள பொருள்களை நாம் அனுபவிப்பதற்காக மட்டுமே உலகம் படைக்கபட்டுள்ளது. இஸ்திரி பெட்டியை எப்படி உபயோகிப்பது என்று தெரியாமல் கையை சுட்டுக்கொள்வதைப்போல நாம் நம் ஐந்து புலன்களை எப்படி உபயோகிப்பது என்று கற்றுக்கொள்ளாததால் உலகத்தில் எப்பொழுதும் இன்பமாக வாழாமல் அடிக்கடி துன்பபட்டுகொண்டு இருக்கிறோம். சூழ்நிலை எப்படி இருந்தாலும் அதை அனுபவிக்க நமது ஐந்து புலன்களை கட்டுபடுத்தி முதலில் பழகிக்கொள்ள வேண்டும். புலி பதுங்குவது பாய்வதற்காக. அதுபோல ஞானத்தை அடைந்த பின் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் உலகில் உள்ள சுகத்தையெல்லாம் அனுபவிக்க முதலில் பிரத்யாகாரம் என்ற புலனடக்கம் அவசியம். ஆமை தன் தலையையும் நான்கு கால்களையும் உள்ளிழுத்து கொள்வதுபோல் நம் ஐந்து புலன்களையும் அடக்கிக்கொள்வது பிரத்யாகாராம்.

தாரணம்

தியானம் என்பது மனதை உள்நோக்கி திருப்பும் முயற்சி. வெளியில் உள்ள பொருள்கள் தொடர்பான அனுபவங்களை தரும் நமது ஐந்து புலன்களை அடக்கி முழுமையாக கட்டுபடுத்தினாலும் ஏற்கனவே ஏற்பட்ட அனுபவங்களின் பலனாக நம் மனதில் சேர்த்துவைத்துள்ள எண்ணங்கள் நம்மை தொடர்ந்து அலைக்கழித்து தியானத்தில் நம் கவனத்தை செலுத்தமுடியாமல் தடை செய்யும். எனவே மனதை உள்நோக்கித்திருப்பி தியானத்திற்காக தேர்ந்தெடுத்த கருத்தின்மீது மனதை ஒருமுகபடுத்தும் பயிற்சிதான் தாரணம். எனவே தியானம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன் தாரணம் அவசியமாகிறது. 

யாரும் இல்லாத தனியறையில் கண்களை மூடி தியானம் செய்ய வேண்டும் என்ற குருவின் ஆலோசனையை புறக்கணித்து ஆற்றங்கரையில் அமர்ந்து ‘ஓம் நமோ நாராயணா, ஓம் நமோ நாராயணா’ என்று கண்களை திறந்து கொண்டே தியானம் செய்ய ஆரம்பித்தான் ஒரு இளைஞன். ஆற்றில் தண்ணீர் எடுக்க வந்த இளம் பெண்ணின் வருகை அவன் கவனத்தை கவர்ந்ததால் அவன் நாராயணனை மறந்துவிட்டு அந்த பாவையை பற்றிய தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டான். அடுத்தநாள் கண்களை இறுக மூடி ‘ஓம் நமோ நாராயணா, ஓம் நமோ நாராயணா’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்பொழுது ஜல்ஜலெனும் சலங்கையொலி அவன் கவனத்தை கவர்ந்து அவனையறியாமல் அவன் கண்கள் தண்ணிரெடுக்க வந்த அந்த கன்னியின்பின் சென்றுவிட்டது. மூன்றாவது நாள் முன்னேற்பாடாக காதில் பஞ்சை அடைத்துகொண்டு தியானம் செய்ய ஆரம்பித்தாலும் மன்னனை மயக்கும் மல்லிகைப்பூமணம் அவன் தியானத்தை கலைத்து அந்த மங்கையின் பின் அவன் மனதை செல்லவைத்தது. குருவின் ஆலோசனையை இன்னும் ஏற்றுக்கொள்ளாமல் அடுத்தநாளும் தியானம் செய்ய ஆற்றங்கரைக்கு சென்ற அவன் மேலதிகபாதுகாப்பாக தனக்குமுன் நிறைய மல்லிகை மலர்களை வைத்துகொண்டு தியானம் செய்ய ஆரம்பித்தான். ‘ஓம் நமோ நாராயணா, ஓம் நமோ நாராயணா……இந்நேரம் அந்தப்பெண் குடத்துடன் இங்கு வந்திருப்பாள்…’ என்ற நினைவு மனதில் ஏற்பட மறுபடியும் அவன் நாராயணனை மறந்து விட்டான்.

யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணம் ஆகிய ஆறு படிகளை முறைப்படி கடக்காமல் தியானம் செய்ய ஆரம்பிக்கும் அனைவருக்கும் இதே நிலைதான். தியானம் செய்ய ஆரம்பித்ததும் சிறிது நேரத்தில் அவர்களது நினைவு வெளியுலகில் பவனிவர ஆரம்பித்துவிடும். எவ்வளவு முறை தனக்குத்தானே ஆணையிட்டு மனதை அடக்கினாலும் அது நிற்காமல் ஓடும். 

எனவே முறைப்படி செய்யவேண்டிய கடமைகளை செய்து, செய்யத்தகாதவற்றை தவிர்த்து, உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்துடன் புலன்களை கட்டுபடுத்திய பின் தாரணம் என்ற முழுகவனத்தையும் ஒரே பொருள்மேல் செலுத்தும் பயிற்சியையும் செய்தபின்தான் தியானம் செய்ய ஆரம்பிக்கவேண்டும்.

பிரத்யாகாரம் செய்யும் முறை

தியானம் எப்படி செய்வது என்பதை ஆசிரியரிடம் பயிலும்பொழுது மட்டுமே மற்றவர்களுடன் கூட்டாக அமரலாம். பயிற்சி முடிந்த பின் தியானத்தை தனியாகத்தான் செய்யவேண்டும். மேலும் வீட்டில் உள்ள ஒரு நபரிடம் எவ்வித தடங்கலும் ஏற்படாமல் காக்கும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு தியானம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

மெய், வாய், கண், செவி, மூக்கு ஆகிய ஐந்து புலன்களை தேரை இழுக்கும் ஐந்து குதிரைகளுடன் ஒப்பிடலாம். முரட்டு குதிரைகளை பயிற்றுவிக்காமல் அவற்றை தேரில் பூட்டினால் தேர்பாகனால் அவற்றை கட்டுபடுத்தி தேரை செலுத்த முடியாது. அதுபோல் தினசரி வாழ்வில் ஐம்புலன்களை கட்டுபடுத்தி முறையாக பயிற்றுவிக்காமல் தியானம் என்ற பயிற்சியில் நம்மால் ஈடுபட முடியாது.

மெய்: உடலை ஆசனம் மற்றும் பிராணாயாமம் போன்ற பயிற்சிகளால் ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் எவ்வித தவறான செயலிலும் ஈடுபடுத்தாமல் முழுக்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.

வாய்: நாம் பேசுகிற வார்த்தைகள் யாருக்கும் துன்பத்தை தராதவண்ணமும், உண்மையாகவும், இனிமையாகவும், பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். என்னையறியாமல் தவறாக பேசிவிட்டேன் என்று நாமே வருத்தபடுவதை தவிர்க்க இந்த நான்கு சோதனைகளில் தேறும் வார்த்தைகளை மட்டுமே பேசவேண்டும்.

அதேபோல் சுவையாக இருக்கும் உணவை சாப்பிடாமல் இருக்க முடியாது என்ற நிலையை மாற்றி உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவை மட்டும் உண்ண வேண்டும். பசியெடுத்தபின்தான் சாப்பிட வேண்டும். இருகைகளை சேர்த்து பிச்சை எடுப்பதுபோல் வைத்தால் கைகளில் எவ்வளவு உணவு நிறைகிறதோ அந்த அளவு மட்டும் தான் சாப்பிடவேண்டும். உண்டு முடித்த பின் வயிற்றில் பாதி அளவு உணவும் கால்பகுதி தண்ணிரும் எஞ்சியிருக்கும் கால்பகுதி வெற்றிடமுமாக இருந்தால்தான் உண்ட உணவை சரியாக ஜீரணிக்க முடியும்.

மதுபானங்கள் போன்ற போதைதரும் பொருள்கள் அனைத்தையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஜடத்தனிம உணவை முற்றிலும் தவிர்த்து ஒளித்தனிமம் அதிகமாக உள்ள உணவு வகைகளை மட்டும் உண்ண வேண்டும்.  

உணவை இறைவனுக்கு படைத்தபின் அதை பிரசாதமாகத்தான் நாம்  உண்ணவேண்டும். பசிக்கிறது என்றோ சுவைக்க ஆசையாக இருக்கிறது என்றோ புலன்களை கட்டுபடுத்தாமல் உணவை உண்ணகூடாது. பூஜை முடிந்ததும் சிறிது உணவை காக்கைக்கு இட்டு அது உண்டபின்தான் நாம் உண்ண வேண்டும்.

கண்: ஆபாசமான படங்களையோ வன்முறையை தூண்டும் காட்சிகளையோ பார்க்காமல் கண்களை நல்லவற்றை மட்டும் பார்க்க பயன்படுத்தவேண்டும்.

செவி: தீய சொற்களை கேட்பதை தவிர்த்து கடவுளின் கல்யாண குணங்களை பாடும் இனிமையான பாடல்களையும் சான்றோர்களது உரைகளை மட்டுமே கேட்க செவிகளை பயிற்றுவிக்க வேண்டும்.

மூக்கு: வாசனை திரவியங்களை உபயோகிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

தாரணம் செய்யும் முறை

எப்பொழுதும் நண்பர்கள் வீடு, கடற்கரை, சினிமா தியேட்டர் என்று ஊர் சுற்றிவிட்டு தூங்குவதற்கு மட்டும் வீட்டுக்கு வரும் இளவட்டங்களை வீட்டில் அடைத்து வைப்பதைவிட விழித்திருக்கும் நேரமெல்லாம் வெளியுலகில் மட்டுமே உலாவிகொண்டிருக்கும் மனதை உள்நோக்கி திருப்புவது கடினம்.

உடமைகள், கடமைகள், உறவுகள் மற்றும் செயல்பாடுகள் ஆகிய நான்கையும் துறந்து மனதுக்கு வெளியுலகத்தின் மேல் இருக்கும் நாட்டத்தை முதலில் குறைக்க வேண்டும். அதற்குபின் தியானம் செய்யும் கருத்தின்மேல் மனதைகுவிக்க தேவையான பயிற்சிகளை ஆரம்பிக்கவேண்டும்.

உடமைகள்: தானம் செய்ய ஆரம்பித்து பொருள்மிகபடையாமை என்ற கட்டளையை பின்பற்றாமல் மனதை கட்டுப்படுத்துவது கடினம். பொருள் படைத்தவர்கள் தியானம் செய்யும் நேரத்திலாவது மனதளவில் அனைத்து பொருள்களையும் துறக்கவேண்டும். தியானம் செய்யும் இருபது நிமிடங்களுக்குள் நமது சொத்துக்களை அழியாமல் பாதுகாக்கும் பொறுப்பை இறைவனிடம் கொடுத்துவிட வேண்டும். கோவிலுக்கு வெளியே கழட்டிவிட்ட செருப்பு தியானம் செய்து முடிக்கும்வரை காணாமல் போகாமல் இருக்குமா என்ற எண்ணம் தோன்றினால் தியானம் செய்ய முடியாது. கடவுள்தான் நம் உடல் உட்பட்ட அனைத்து சொத்துக்களுக்கும் உரிமையாளன் என்றும் அவற்றை தற்காலிகமாக அனுபவிக்க அவன் நம்மை அனுமதித்துள்ளான் என்றும் நாம் உணர வேண்டும்.

கடமைகள்: இல்லறப்பொறுப்புகளை அடுத்த தலைமுறைக்கு கொடுத்துவிட்டு துறவு வாழ்வில் நுழைந்தவர்களுக்குத்தான் கடமைகள் எதுவும் இருக்காது. நமது உத்தரவுகளை எதிர்பார்த்து வாசலில் யாரேனும் முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தால் நம்மால் தியானம் செய்யமுடியாது.

உறவுகள்: மேலதிகாரி, பக்கத்துவீட்டுக்காரர், ஆட்டோ ஓட்டுனர் போன்றவர்களுடன் சண்டை போட்டுவிட்டு அமைதியாக தியானம் செய்ய முடியாது. அனைத்து மனிதர்களுடன் நாம் தொடர்ந்து உறவாடுவதால்  நம் மனதில் பதியவைக்கப்பட்டுள்ள நினைவுகள் நம் தியானத்துக்கு தடையாய் இல்லாமல் இருக்க அனைத்து உறவுகளையும் மனதளவில் துறந்து விடவேண்டும்.

செயல்பாடுகள்: அடுப்பில் வைத்த குக்கரை இருபது நிமிடம் கழித்து இறக்கவேண்டும், அதுவரை தியானம் செய்யலாம் என்பது முடியாது. ஏனெனில் மனம் செய்யவேண்டிய வேலையில்தான் குறியாக இருக்கும். இல்வாழ் பருவத்தில் இருக்கும்வரை ஏதாவது செய்து முடிக்கமுடியாத காரியங்கள் இருந்து கொண்டேயிருக்கும். எனவேதான் துறவுநிலையில்தான் தியானபயிற்சியை துவங்க வேண்டுமென வேதம் விதித்துள்ளது.

மனம் குவிதல்:

மனதை ஒருமுகபடுத்தி ஒரு குறிப்பிட்ட காரியத்தில் ஈடுபடுத்துவது எல்லோராலும் மிக எளிதாக செய்யகூடிய ஒரு செயல். ஆனால் இவ்வாறு ஒரு செயலில் கவனத்தை செலுத்த அந்த செயலை செய்யவேண்டிய அவசியம் என்ன என்றும் அந்த செயலை செய்வதால் ஏற்படும் பலன் என்ன என்ற தெளிவும் மிக அவசியம்.

உதாரணமாக வீட்டில் எவ்வளவு கலாட்டா நடந்துகொண்டிருந்தாலும் உலகத்தையே மறந்து ஒரு சிறுவன் கம்ப்யூட்டருடன் தான் விளையாடும் கால்பந்தாட்டத்தில் தன் முழுகவனத்தை செலுத்திக்கொண்டிருப்பான். அவன் கையில் புத்தகத்தை திணித்து பரிட்சைக்கு படிக்கசொன்னால் கவனம் சிதறாமல் மனதுக்குள் அந்த விளையாட்டை தொடர்ந்து விளையாடிக்கொண்டிருப்பான். படிப்பில் விருப்பம் இல்லாமலும் படிப்பதால் கிடைக்கும் பயன் என்ன என்பதில் தெளிவும் இல்லாதவரை அதில் மனதை ஒருமுகபடுத்தும் திறன் அவனுக்கு வராது.

அதேபோல் தியானம் செய்வதில் இருக்கும் சுகம் மற்றும் தியானம் செய்வதால் விளையகூடிய பயன் ஆகியவற்றில் தெளிவில்லாமல் தாரணம் நடக்காது.    

முடிவுரை :

முதலில் ஐந்து புலன்களும் மனதும் வெளியுலக சஞ்சாரம் செய்வதை நிறுத்தி பின் இரண்டாவதாக தியானம் செய்ய தேர்ந்தெடுத்த கருத்தில் மனதை குவியசெய்தபின்தான்  தியானம் செய்ய ஆரம்பிக்கமுடியும். ஐம்புலன்களை பிரத்யாகாரம் என்ற புலன் கட்டுப்பாட்டு பயிற்சிகளாலும் மனதை தாரணம் என்னும் மனகட்டுப்பாட்டு பயிற்சியின் மூலமும் தேவையான அளவு பயிற்றுவித்தபின் நாம் தியானம் செய்ய தொடங்கலாம்.

பயிற்சிக்காக :

1. பிரத்யாகாரம் என்றால் என்ன?

2. தாரணம் என்றால் என்ன?

3. பேசும் நாக்கை கட்டுபடுத்த நாம் எந்த நான்கு சோதனைகளை செய்தபின் பேச வேண்டும்?

4. உண்ணும் நாவை கட்டுபடுத்த நாம் செய்யவேண்டியவை யாவை?

5. தாரணம் செய்ய நாம் செய்ய வேண்டிய ஐந்து பயிற்சிகளை எந்த அடிப்படையில் இரண்டாக பிரிக்கலாம்?

சுயசிந்தனைக்காக :

1. ஐம்பது வயதுக்கு குறைவானவர்கள் தியானம் செய்யகூடாதா?

2. தியானம் செய்வதற்கு முன் கடக்க வேண்டிய ஆறு அங்கங்களை முறைப்படி கடக்காமல் பலர் தியானம் செய்கிறார்கள். இவர்களின் செயல் தவறா?

3. கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் தியானம் செய்யலாமா?