Tuesday, December 7, 2010

பாடம் 114: கிட்டாதாயின் வெட்டென மற (பிரம்மசூத்திரம் 3.3.25)

வாழ்வு அட்டவணையின் மூன்றாவது கட்டமான ஓய்வு நிலை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய கருத்துக்களை கொடுத்து நம் விருப்பமின்றி இயலாமைக்கு தள்ளப்படுவதற்கு முன் நாமே விரும்பி ஓய்வெடுத்துக்கொள்வது நமக்கும் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் மிகுந்த நன்மையை ஏற்படுத்தும் என்ற கருத்தை இந்த பாடம் நம் முன் வைக்கிறது.

பால்யம், குமாரம், வாலிபம், வயோதிகம் என்ற நான்கு பிரிவில் முப்பத்தைந்து வயதிற்கு பின் வயோதிகம் ஆரம்பிக்கிறது என்று சொன்னால் நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் அறிவியல் இந்த உண்மையை உறுதிசெய்கிறது. வளர்வது வாலிபபருவத்துடன் முடிவடைந்து தேய்வதன் துவக்கம் சற்றேறகுறைய முப்பத்தைந்து வயதிற்கு பின் ஆரம்பிக்கிறது என்பதை அனுபவத்தின் மூலமும் நாம் அறிகிறோம். வருடம் ஆக ஆக நம் அழகு, ஆரோக்கியம், வலிமை, திறமை ஆகியவை தொடர்ந்து குறையத்துவங்கும் பருவம் வயோதிகம்.

ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடாஎன்ற வரிகள் தமக்காக பாடப்பட்டது என்று யாரும் நினைப்பதில்லை. இவ்வுலகின் மிகப்பெரிய அதிசயம் என்ன என்று யக்ஷ்ன் கேட்ட கேள்விக்கு தர்மபுத்திரன்தினம் தினம் மற்றவர்கள் இறப்பதை பார்த்தாலும் தான் மட்டும் மரணத்தை வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் மனிதன் இருப்பதுஎன்று பதில் கூறினான்.

இன்னும் பதினைந்து வருடங்களுக்கு பின்தான்வயதானவர்என்ற பட்டத்துக்கு தான் தகுதியுடையவர் என்று இருபது வயது வாலிபன் தொடங்கி எழுபது வயது இளைஞர் வரை எல்லோரும் நினைப்பதால் யாரும் தான் வயதானவர் என்பதை ஒத்துக்கொள்வதில்லை. வயோதிகம் என்பது வாழ்வில் ஒரு பிரச்சனை அல்ல. வாலிபம் திரும்பவும் வராது என்ற உண்மையை ஏற்றுக்கொண்டு வயோதிகத்தை மறைக்கவோ மறுக்கவோ முயலாமல் இருந்தால் இன்பமாக வாழலாம் என்ற வழியை வேதம் நமக்கு காண்பிக்கிறது.

ஓய்வு நிலை என்றால் என்ன?

பொருளாதார அடிப்படையில் இன்னும் முன்னேற வேண்டும் என்பதற்காக செய்யும் செயல்களை நிறுத்திக்கொண்டு உலகத்தை சாராமல் இன்பமாக இருப்பது எப்படி என்பதை கற்றுக்கொள்ளும் பொருட்டு ஆன்மிக வாழ்வை ஏற்று நடத்துவது ஓய்வு நிலை. உலகத்தோடு ஒன்றி வாழ்ந்தாலும் இல்வாழ் பருவத்தில் தொடர்ந்து செயல்பட்டதுபோல் அல்லாமல் பொறுப்புகளை ஒவ்வொன்றாக குறைத்துக்கொண்டு உள்நோக்கி பயணம் செய்ய துவங்குவது ஓய்வு நிலை.

ஓய்வு நிலையின் ஆரம்பமும் முடிவும்

அரசாங்க அலுவல்களிலும் தனியார் துறைகளிலும் 58 அல்லது 60 என்பது போன்ற ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். சொந்தமாக தொழில் செய்பவர்களும் வீட்டுப்பொறுப்பை ஏற்று நடத்துபவர்களும் தங்கள் பிள்ளைகள் இல்வாழ் பருவத்தை ஆரம்பித்ததும் பொறுப்புகளை அவர்களுக்கு விட்டுகொடுக்க ஆரம்பித்து படிப்படியாக ஓய்வு நிலைக்குள் தாமாக நுழைய வேண்டும்.

ஓய்வு நிலையில் செய்யவேண்டியவற்றை முறைப்படி செய்ய முயற்சித்தால் கூடியவிரைவில் உலகத்தின் மீதுள்ள பற்று முழுவதும் குறைந்து துறவு நிலை ஆரம்பமாகும். இல்லையெனில் மரணம்தான் ஓய்வு நிலையின் முடிவாக இருக்கும்.

ஓய்வு நிலையில் செய்யவேண்டிய கடமைகள்

உலகத்தில் ஓயாமல் வெவ்வேறு குறிக்கோள்களை அடைய ஓடிக்கொண்டிருந்த ஓட்டப்பந்தயத்திலிருந்து ஓய்வெடுத்துக் கொள்வதை குறிக்கும் வகையில் காசிக்கு போய் விரும்பியதை விட்டுவிட்டு வரவேண்டும் என்ற வழக்கம் நம்மிடையே இருந்து வருகிறது. இதில் ஆரம்பித்து ஒவ்வொன்றாக அனைத்தையும் விட்டுவிட வேண்டும். நாம் விடாவிட்டால் அது நம்மிடமிருந்து பிடுங்கபட்டுவிடும். அந்த துயரத்திலிருந்து நம்மை காப்பாற்றி இந்த உலகத்தின் மீது நமக்குள்ள பற்றுதலை அகற்றும் வகையில் பின் வரும் கடமைகள் வடிவமைக்க பட்டுள்ளன. இக்கடமைகளை முறைப்படி செய்தால் முக்தியை நோக்கி நாம் முன்னேறுவோம்.


முதல் கடமை: ஓய்வு பெறுதல்

இருபது வருடங்களுக்கு மேல் உழைத்தபின்னும் பணம், புகழ் போன்றவை இன்பத்தை தராது என்பதை புரிந்து கொள்ளாமல் இருப்பவர்களுக்கு உடலின் இயலாமையை காரணமாக காண்பித்து ஓய்வெடுத்துக்கொள்ள வேதம் வற்புறுத்துகிறது. ஓய்வெடுத்துக் கொள்வது என்பதற்கு எந்த வேலையையும் செய்யாமல் இருக்கவேண்டும் என்ற அர்த்தமில்லை. வெளியுலகில் குறையாத இன்பத்தை தேடுவதை நிறுத்திக்கொண்டு அகவுலகில் அதை தேட நம் நேரத்தையும் முயற்சியையும் செலவிட வேண்டும் என்பதே ஓய்வு நிலையின் முக்கிய குறிக்கோள். காட்டில் திசை தெரியாமல் நாம் செல்லவேண்டிய பாதையை தவறவிட்டுவிட்டால் அங்கும் இங்கும் ஓடியலைவது நம் குழப்பத்தை அதிகபடுத்துமே தவிர குறைக்காது. முதலில் நிற்கவேண்டும். அது போல் ஓய்வுநிலையின் முதல் கடமை பொருள் சம்பாதிக்கும் ஓட்டத்தை நிறுத்துவது.

இரண்டாம் கடமை: தானம் செயதல்

யாருக்கு கொடுக்கிறோமோ அவரிடமிருந்து எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் கொடுப்பதுதான் தானம். முதலில் நமக்கு வேண்டாத பொருள்களை மற்றவர்களுக்கு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். ஒரு வருடத்திற்கு மேல் உபயோகபடுத்தாத எந்த பொருளையும் எதிர்காலத்தில் வேண்டியிருக்கலாம் என்ற எண்ணத்தில் சேர்த்து வைத்திருக்க கூடாது.

பிறகு தேவைகளை குறைத்துக்கொண்டு தானத்தை அதிகரிக்கவேண்டும். நம் புலன்களின் சக்தி தொடர்ந்து குறைவதால் முன் போல் நம் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போகுமுன் நாமாக நம் தேவைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். கார் ஓட்டும் திறமை குறைவதற்கு முன் காரின் உபயோகம் எதுவும் இல்லை என்ற நிலை ஏற்பட்டு அதை தானம் செய்துவிட வேண்டும். காணாமல் போன நகை திரும்ப கிடைத்தவுடன் கோவில் உண்டியலில் அதை போட்டுவிட்டு நகை இல்லாத வருத்தத்தை மனநிம்மதியாக மாற்ற முடியும் என்று அனுபவத்தால் உணர்ந்தவர்கள் பலர்.

இல்வாழ்பருவத்தில் செய்ய ஆரம்பித்த தானம் ஓய்வு நிலையில் முழுமை பெற வேண்டும். பல்வேறு காரணங்களால் தொடர்ந்து வேலை செய்து பணம் சம்பாதிக்கும் சூழ்நிலை இருந்தால் சம்பாதிக்கும் அனைத்தையும் தானம் செய்து விட வேண்டும். வயதான தம்பதிகள் தனியே இருக்க கூடாது. மகன் அல்லது மகளின் குடும்பத்தில் ஒரு அங்கத்தினர்களாகத்தான் வாழவேண்டும். சம்பாதிக்கும் அனைத்து பொருள்களையும் குடும்பத்தலைவரிடம் கொடுத்துவிடவேண்டும்.

அதைத்தவிர சேர்த்து வைத்துள்ள வீடு, நிலம், நகை போன்ற அனைத்து சொத்துக்களையும் தனக்கென்று எதுவும் எஞ்சியில்லாதவரை தொடர்ந்து தானம் செய்ய வேண்டும். சொந்த பிள்ளைகளுக்கோ மற்ற உறவினர்களுக்கோ சொத்தை பங்கிட்டு கொடுத்தாலும் அது தானம்தான்.

மூன்றாம் கடமை: தவம் செய்தல்

வருத்திக்கொண்டால்தான் தவம். அதே சமயம் நாம் நம்மையே துன்புறுத்திக் கொள்ளகூடாது. மனோவலிமையை அதிகமாக்கிக்கொள்ள நாமாக நம்மை வருத்திக்கொள்வது நம் உடலுக்கும் மனதுக்கும் எவ்வித துன்பத்தையும் தராத வண்ணம் இருக்கவேண்டும். சபரிமலைக்கு வெறும் காலில் நடந்து செல்வது தவம். ஆனால் நம்மால் நடக்க முடியவில்லை என்றால் இதுபோன்ற முயற்சிகளை கைவிட வேண்டும். நம்மை துன்புறுத்திக்கொள்ளாமல் செய்ய முடியக்கூடிய செயல்களை மட்டுமே தவமாக செய்யவேண்டும்.

வயதாகும் காரணத்தால் நமக்கு உடல் நலம் குன்றி அதனால் பல கஷ்டங்கள் வர வாய்ப்பு அதிகம். முட்டி வலி, கை வலி என்பது போன்ற உடலுக்கு ஏற்படும் வருத்தங்களினால் நிலைகுலைந்து போகாமல் இருக்க தவம் நமக்கு பெரிதும் உதவும். அதுபோல வயதானவுடன் பேச்சுதுணைக்கு கூட ஆள் இல்லாமல் தனிமையில் இருக்க நேரிடலாம். மவுனவிரதம் இருந்து பழகியிருந்தோமானால் தனிமையை சகித்துக்கொள்வது சுலபமாக இருக்கும்.

ஐந்து புலன்களையும் மனதையும் நமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளும் சுயகட்டுப்பாடுதான் தவம். வயதாகும் பொழுது நம் மனதும் புலன்களும் தங்கள் சக்தியை மெதுவாக இழப்பதை தவம் செய்தவர்களால் எளிதாக ஏற்றுக்கொள்ள முடியும்.

உடல், வாக்கு, மனம் ஆகிய மூன்று அடிப்படைகளில் தவம் செய்ய வேண்டும்

கோவிலுக்கு பாதயாத்திரை செல்வது, வீட்டில் உள்ள அனைத்து பொருள்களையும் முறைபடுத்தி சுத்தமாக வைப்பது, தோட்ட வேலை செய்வது போன்றவை உடலால் செய்யும் தவம்.

ஜபம் செய்வது, வேதம் ஓதுவது, யார் மனதையும் நோக அடிக்காமல் இனிமையான வார்த்தைகளை மட்டும் பேசுவது, பேசாமல் மவுன விரதம் இருப்பது, யாரேனும் நம்மிடம் அறிவுரை கூறுங்கள் என்று கேட்டால் மட்டும் அறிவுரை கூறுவது ஆகியவை வாக்கினால் செய்யும் தவம்.

மற்றவர்களின் தவறுகளை மன்னிப்பதும் மறப்பதும் முக்கியமான மனத்தவம். தியானம் செய்வதும் கடவுள் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருப்பதும் மனதால் செய்யும் தவம் ஆகும்

தவம் செய்வதன் மூலம் கிடைக்கும் மனவலிமை வாழ்நாழ் முழுவதும் நாம் இன்பமாக வாழ உதவும். உடல் நலம் பாதிக்கப்பட்டு அதனால் வைத்தியர் நமக்கு பிடித்த உணவை சாப்பிடகூடாது என்று தடைவிதிக்கும் முன் நாமாகவே அவற்றை விட்டுவிடுவது நல்லது. இல்லையெனில் மற்றவர்கள் அந்த உணவை சாப்பிடும்பொழுது அதை பார்த்து ஏக்கப்பெருமூச்சு விடவேண்டியிருக்கும்.

நான்காம் கடமை: பொறுப்புகளை முடித்துக்கொள்ளுதல்

ஒவ்வொன்றாக நம் அனைத்து பொறுப்புகளையும் அடுத்த தலைமுறைக்கு கொடுத்துவிடவேண்டும். மற்றவர்கள் தங்கள் காரியங்களை செய்யும்பொழுது அதில் மூக்கை நுழைத்து எவ்வாறு வேலைகளை செய்யவேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை கூறக்கூடாது. நம் வாழ்வில் நாம் கற்றுக்கொண்ட பாடங்களை அவர்கள் தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்ள முடியுமே தவிர நம் அறிவுரை அவர்களுக்கு உதவாது. நாம் செய்த தவறுகளை மற்றவர்கள் செய்யாமல் அவர்களை காப்பது நமது பொறுப்பல்ல.

ஐந்தாம் கடமை: இளமையாக இருக்க முயலாமை

நம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி யோகாசனம் ஆகியவற்றை செய்யவேண்டும். ஆனால் இவற்றின் நோக்கம் பார்ப்பதற்கு நாம் இளமையானவராக தோன்றவேண்டும் என்பதாக இருக்க கூடாது. நரை முடிக்கு கறுப்பு சாயம் பூசுவது, இளைஞர்களைப்போல் உடை அலங்காரம் செய்துகொள்வது, கண்ணாடிக்கு முன்னால் நின்று முகத்தின் வயதை குறைக்க முயல்வது ஆகிய செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ஆறாம் கடமை: கடவுளை தேடுதல்

ஆன்மிக பயணத்தை முதல் குறிக்கோளாக ஏற்றுக்கொண்டு தியானம், ஜபம், பூஜை, பிரார்த்தனை, பாராயணம், ஸ்தோத்திரம் போன்ற செயல்களில் ஈடுபடுவதுடன் வேதத்தை ஆசிரியரிடமிருந்து முறையாக பயில வேண்டும். முக்தியடைவதுதான் வாழ்வின் ஒரே குறிக்கோள் என்பதை உணர்ந்து கொண்டு அதற்காக மட்டுமே அனைத்து காலத்தையும் முயற்சியையும் செலவிட வேண்டும்.

முடிவுரை :

ஓய்வுநிலை என்பது வாலிபத்தை வழியனுப்பிவிட்டு வயோதிகத்தை வரவேற்கும் படலம். ஓய்வு நிலையில் நாம் செய்யவேண்டிய கடமைகளை பின்பற்றினால் நாம் வெகு விரைவில் முக்தியடைந்துவிடுவோம்.

ஆனால் ஆவியைவிட்டாலும் சாவியைவிடேன் என்பதுதான் பெரும்பாலோரின் மனப்பாங்காய் இருக்கிறது. நம்மிடமிருக்கும் அனைத்து பொருள்களையும் எப்பொழுது நாம் தானமாக மற்றவர்களுக்கு கொடுத்துவிடுகிறோமோ அப்பொழுதுதான் நம்மால் வாழ்வின் கடைசி அங்கமான துறவுநிலைக்குள் நுழைய முடியும். தவம், கடவுளைத்தேடுதல் ஆகிய இருகடமைகளைத்தவிர மற்ற நான்கு கடமைகளையும் முற்றிலும் செய்து முடிக்கும் வரை நாம் ஓய்வு நிலையிலேயே இருப்போம்.

ஓய்வு நிலையில் செய்ய வேண்டிய கடமைகளை முழுதாக செய்வது பலருக்கு கடினமாகவே இருக்கும். ஆயினும் கூட முயற்சியை கைவிடக்கூடாது. இலக்கை அடையாவிட்டாலும் சரியான வழியில் பயணிப்பது தவறான வழியில் செல்வதைவிடச்சாலச்சிறந்தது.

தொடர்ந்து வேலை செய்து பணம், புகழ் ஆகியவற்றை சம்பாதிக்க முயற்சிப்பது, எல்லாவற்றையும் தனக்கென சேர்த்து வைத்துகொள்வது, புலன் இன்பங்களை தொடர்ந்து அனுபவிக்க ஆசை கொள்வது, எல்லா பொறுப்புகளையும் இழுத்து போட்டுக்கொண்டு என்றும் இளமையானவனாக காட்டிக்கொள்வது போன்ற தவறான செயல்கள் நமக்கும் மற்றவர்களுக்கும் துன்பத்தை தரும்.

பயிற்சிக்காக :

1.உடலின் வயது எந்த நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது ?

2.வயோதிகத்தின் அறிகுறியை அனுபவத்தில் எப்படி அறியலாம்?

3.ஓய்வு நிலை என்றால் என்ன?

4.ஓய்வு நிலையின் துவக்கத்தையும் முடிவையும் விளக்குக.

5.ஓய்வு நிலையில் செய்யவேண்டிய ஆறு கடமைகள் யாவை?

6.ஓய்வு நிலையில் செய்யவேண்டிய கடமைகளின் நோக்கம் என்ன?

7. எந்த மூன்றின் அடிப்படையில் தவம் செய்யவேண்டும்?

சுயசிந்தனைக்காக :

1. இந்த பாடத்தின் தலைப்பிற்கான காரணத்தை ஆராய்க.

2.தானமும் தவமும் இல்வாழ் பருவம் மற்றும் ஓய்வு நிலை ஆகிய இரண்டு கட்டங்களிலும் செய்ய வேண்டிய கடமைகளாக குறிப்பிடப்பட்டிருப்பதன் காரணத்தை ஆய்க.

3.எல்லா சொத்துக்களையும் பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்த பிறகு கடைசிவரை அவர்கள் நம்மை காப்பாற்றுவார்கள் என்று எப்படி நம்புவது?

4.ஓய்வு நிலையில் நாம் நம் கடமைகளை சரியாக செய்வதன் மூலம் நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு ஏற்படும் நன்மைகளை ஆராய்க.