Thursday, December 23, 2010

பாடம் 123: செய்யவேண்டியவை (பிரம்மசூத்திரம் 3.3.37)

அஷ்டாங்க யோகத்தின் முதல் அங்கத்தில் கொடுக்கப்பட்ட செய்யத்தகாத ஐந்து கட்டளைகளின் தொடர்ச்சியாக இரண்டாவது அங்கத்தில் உள்ள ஐந்து கட்டளைகளை செய்யவேண்டியவைகளாக விவரிப்பதுடன் இந்த பத்து கட்டளைகளை கடைபிடிக்கும் விதத்தையும் இந்த பாடம் விளக்குகிறது.

ஆறாம் கட்டளை – தூய்மையாக இருத்தல்

அகத்தூய்மை புறத்தூய்மை என்று தூய்மை இரு வகைப்படும். அகத்தூய்மை என்பது பொறாமை, கோபம் போன்ற தீயகுணங்களை தவிர்த்து மனதை அன்பு, தயை, கருணை ஆகிய நற்குணங்களுடன் வைத்திருத்தல். புறத்தூய்மை என்பது உடலை மட்டுமில்லாமல் நாம் இருக்கும் இடத்தையும் தூய்மையாய் வைத்திருப்பது. மேலும் வீட்டிலும் அலுவலகத்திலும் உள்ள அனைத்து பொருள்களையும் ஒரு ஒழுங்குடனும் முறையுடனும் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு பொருள்களுக்கும் ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கி ஒவ்வொருமுறை உபயோகபடுத்தியபின் அந்த இடத்திலேயே அதை திருப்பி வைக்கவேண்டும்.

புறத்தூய்மை நம் உடல் ஆரோக்கியத்திற்கும் அகத்தூய்மை நம் மனதின் ஆரோக்கியத்திற்கும் அவசியம்.

ஏழாம் கட்டளை – திருப்தியுடன் இருத்தல்
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற பழமொழி சோம்பேறிகளை உருவாக்கும் என்று நினைப்பது தவறு. ஆன்மீகப்பாதையில் முன்னேற திறமையும் அறிவுகூர்மையும் மிக அவசியம். இவற்றை வளர்த்துக்கொள்ள அதிக உழைப்பு தேவை. போதும் என்பது நாம் செய்யும் வேலையின் அளவை குறிப்பது அல்ல.
பொருளாதார வாழ்வில் வெற்றி பெறும் சக்தியுள்ளவர்களால் மட்டும்தான் ஆன்மீக பயணத்தில் வெற்றியடைய முடியும். எனவே இன்னும் அதிகபணம் சம்பாதிக்க வேண்டும், புகழ் பெறவேண்டும் என்று கடுமையாக உழைப்பது மிக அவசியம். போதும் என்ற திருப்தி உழைப்பில் ஏற்பட கூடாது.

திருப்தியுடன் இருத்தல் என்ற இந்த கட்டளை நம் தேவைகளை குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. உணவு, உடை மற்றும் உறையுள் ஆகிய அடிப்படைத்தேவைகளை கூட ஆடம்பரப்பொருளாக நினைக்கும் மனோபாவம் நமக்கு வேண்டும். வடையிருந்தால் மட்டும்தான் இட்லி சாப்பிடுவேன் என்று பிடிவாதம் பிடிக்காமல் கிடைத்ததில் திருப்தியடைய வேண்டும். சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடிக்கவாய்த்தால் மட்டும் போதும், காபி வேண்டும் என்ற கட்டாயமில்லை என்கிற மனப்பாங்கு வேண்டும்.

சம்பளம் அதிகமாக அதிகமாக தேவைகளையும் அதிகமாக்கிகொண்டு எப்பொழுதும் பற்றாகுறையுடன் இருப்பதை தவிர்க்க வேண்டும். அதிகமாக சம்பாதிக்க முயலும் அதே வேளையில் தேவைகளை குறைக்கவும் முயலவேண்டும்.

உலகில் பிறந்து வளர்ந்து நாம் இப்பொழுது இருக்கும் நிலையை அடைவதற்கு நம் பெற்றோர்கள் முதற்கொண்டு சமூகத்தில் உள்ள பலரும் நமக்கு உதவியாய் இருந்திருக்கிறார்கள். எனவே நம் உழைப்பால் உற்பத்தி திறனை அதிகரித்து மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் நாம் பட்ட கடனை அடைக்க வேண்டும்.

எட்டாம் கட்டளை – தவம் செய்தல்

தூய்மையாய் இருப்பது ஆரோக்கியத்திற்காக. தவம் செய்வது நமது உடல் மற்றும் மனதின் உறுதியை வளர்த்துக்கொள்வதற்காக. தவம் நமது சகிப்புத்தன்மையை அதிகரித்து ஆன்மீக பயணத்தின் எல்லையான பரமனை பற்றிய ஞானத்தை அடைய தேவையான உடல்வலிமையையும் மனவலிமையையும் கொடுக்கும்.

ஒன்பதாம் கட்டளை – ஆன்மீக நூல்களை படித்தல்

வாழ்வை எப்படி வாழவேண்டும் என்று வழிகாட்டி புத்தகமான வேதத்தை முறையாக படிக்க வேண்டும். தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்ட சமஸ்கிருத வரிகளை அர்த்தம் புரியாமல் படிக்கவேண்டும் என்று இந்த கட்டளைக்கு அர்த்தம் அல்ல. அறிவியல், கணிதம் போன்றவற்றை படித்து புரிந்துகொள்வதுபோல் வேதத்தையும் ஒரு ஆசிரியரின் துணையுடன் கற்றுக்கொள்ள வேண்டும்.

பத்தாம் கட்டளை – இறைவனிடம் சரணடைதல்

நான் என்ற சொல்லின் பொருளாக நாம் நினைத்துக்கொண்டிருக்கும் நம்முடைய அகங்காரம் எந்த ஒரு செயலையும் செய்ய சக்தியற்றது. இந்த உண்மையை புரிந்து கொள்வது மிகவும் கடினம். இதை புரிந்து கொள்ளாவிட்டால் பரமன் யார் என்று தெரிந்து கொள்ள முடியாது. எனவே கடவுளிடம் சரணடைதல் அவசியம். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்ற உண்மையை ஏற்றுகொண்டு கடவுளை தினம் பிரார்த்தித்து வந்தால் நாம் ஆன்மீகப்பாதையில் வேகமாக பயணிக்கலாம்.

அளவுகோல்

வேதம் இந்த பத்துகட்டளைகளை அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக விதித்திருந்தாலும் இவற்றை நாம் எந்த அளவு பின்பற்றுகிறோம் என்பதை அளக்க உதவும் அளவுகோல் ஆளுக்கு ஆள் வேறுபடும். உதாரணமாக பிறன்மனை விழையாமை என்ற கட்டளையை சரியாக பின்பற்றவேண்டுமென்றால் தெருவில் நடக்கும்பொழுது அழகான ஒருவர் எதிரில் வந்தால் அவர் முகத்தை பார்க்காமல் தலையை குனிந்து கொள்ளவேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும். பிச்சையிடும் பெண்மணியின் கை அழகாயிருக்கிறது என்ற எண்ணம் ஒரு துறவி மனதில் எழுந்தால் அவர் இந்த கட்டளையை மீறியவராவார். இதுபோல அளக்க ஆரம்பித்தால் எந்த ஒரு கட்டளையையும் யாராலும் பின்பற்ற முடியாது.

எல்லோரையும் கண்டனம் செய்து யாரையுமே முக்தியடைய விடாமல் தடுப்பது இந்த பத்து கட்டளைகளை கொடுத்த வேதத்தின் நோக்கமல்ல. எவ்வளவு தூரம் இந்த பத்து கட்டளைகளை பின்பற்றுகிறோம் என்பது அவரவர் மனபக்குவத்தை பொறுத்து மாறுபடும்.

உண்மையை நிலை நாட்ட மனைவியை கொல்லத்துணியும் அளவுக்கு அரிச்சந்திரனிடம் இருந்த மனோதிடத்தை அனைவரிடமும் எதிர்பார்க்க கூடாது. உதாரணமாக ஒரு சட்டவிரோதமான காரியத்தை செய்ய பத்தாயிரம் ரூபாய் தருகிறேன் என்று ஒருவர் சொன்னால் அதை மறுக்கும் அளவுக்கு நம்மிடம் தைரியம் இருக்கலாம். ஆனால் அந்த தவறான காரியத்தை செய்யாவிட்டால் நம் குடும்பத்தில் உள்ள ஒருவரை கொன்றுவிடுவேன் என்று பயமுறுத்தினால் நமது நிலை என்ன? ஒவ்வொருவருக்கும் ஒரு விலை உண்டு. இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல. எனவே இந்த பத்து கட்டளைகளையும் முழுதாக பின்பற்ற யாராலும் முடியாது. அவரவர் தன் திறனுக்கு ஏற்ப இவற்றை பின்பற்றவேண்டும்.

பளுதூக்கும் பயில்வான் என்று பெயர் வாங்க இவ்வளவு கிலோ எடையை தூக்கவேண்டும் என்று எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. மூன்றுகிலோ அரிசியை சிரமப்பட்டு தூக்கும் தந்தையை அவரது நான்கு வயது பாலகன் 'மிகுந்த சக்தி வாய்ந்தவர்' என்று எண்ணுவதில் தவறில்லை. எவ்வளவு எடையை தூக்க முடியும் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். ஒவ்வொருவரும் தங்கள் சக்தியை அதிகபடுத்த தற்பொழுது தூக்கும் எடையை விட சிறிது அதிகம் தூக்க முயல வேண்டும். நூறு கிலோ எடையை தூக்கும் சக்தி உள்ளவர் நூற்றிபத்து கிலோ தூக்க பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உடலை கட்டுக்குள் வைத்திருக்க உடற்பயிற்சி கூடத்தில் நாம் அனைவரும் அன்றாடம் செய்யவேண்டிய பயிற்சிகளை எப்படி நாளுக்கு நாள் அதிகபடுத்த முயல்கிறோமோ அதுபோல மனதை கட்டுக்குள் வைத்திருக்க வேதம் விதித்துள்ள இந்த பத்து கட்டளைகளையும் முடிந்த அளவு பின்பற்ற வேண்டும்.

என்னால் முடிந்தது பத்துகிலோதான் என்று நூறுகிலோ தூக்கும் சக்தியுள்ளவர் தினமும் பத்து கிலோ எடையை மட்டும் தூக்கி பயிற்சிசெய்வாரெனில் அதனால் நஷ்டமடையபோவது அவரைத்தவிர வேறு யாருமல்ல. அதுபோல் பொய்யாமை, பொருள் மிகப்படையாமை போன்ற இந்த பத்து கட்டளைகளை என்னால் இவ்வளவுதான் முடியும் என்று உண்மையாக முயற்சிசெய்யாமல் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்பவர்கள் ஆன்மீக பயணத்தில் முன்னேற மாட்டார்கள்.

தேவையான காலம்

காசிக்கு சென்று கங்கையில் நீராடவேண்டும், இமையமலையை தாண்டி கயிலாயித்தின் மானசரோவரில் நீராட வேண்டும் என்பது போன்ற கட்டளைகளை வேதம் நமக்கு விதிக்கவில்ல. இது போன்ற செயல்களை செய்ய நமக்கு வெகுகாலம் ஆகலாம். ஆனால் வேதம் விதித்துள்ள இந்த பத்து கட்டளைகளை செய்துமுடிப்பதற்கு நமக்கு ஒரு நாள் போதும். என்ன செய்யவேண்டும் என்பதை தெளிவாக புரிந்துகொண்டபின் மனதில் உறுதியுடன் அவற்றை கடைபிடிக்க முயற்சி செய்ய ஆரம்பித்தால் மட்டும் போதும்.

இந்த பத்துகட்டளைகளை பின்பற்றுவது நம் வாழ்வின் குறிக்கோள் அல்ல. யாரையும் துன்புறுத்தாமல் வாழ்ந்தால் நம் வாழ்வில் கஷ்டங்கள் வராது என்று வேதம் எந்த உறுதிமொழியையும் கொடுக்கவில்லை. என்றும் இன்பமாக வாழ இன்னும் நாம் கடக்க வேண்டிய படிகள் நிறைய இருக்கின்றன. எனவே நம் வாழ்வு முழுவதையும் இந்த பத்து கட்டளைகளை பின்பற்றுவதிலேயே செலவழித்துவிடக்கூடாது.

எப்பொழுது நாம் பரமனை முழுதுமாக அறிந்து கொள்கிறோமோ அப்பொழுது வேதம் நமக்கு இந்த பத்து கட்டளைகளை பின்பற்றவேண்டிய கட்டாயத்திலிருந்து விடுதலை கொடுத்துவிடும்.

எனவே இந்த பத்துகட்டளைகள் என்னென்ன என்பதையும் அவற்றை நமக்கு வேதம் விதித்திருப்பதன் காரணத்தையும் ஆசிரியரிடம் முறையாக கேட்டு தெரிந்து கொண்டு அதன்படி நடக்க உறுதி பூண்ட அடுத்த நொடியிலிருந்து நாம் அஷ்டாங்க யோகத்தின் அடுத்த படிக்கு செல்ல தயாராகிவிடுவோம்.

பாவமன்னிப்பு

மன்னிக்க முடியாத தவறுகள் எதுவும் கிடையாது. ஏனெனில் நமது குற்றங்களை மன்னிக்க வேண்டியது நாம்தான். பாதையில் செல்பவன் வழுக்கி விழுந்துவிட்டால் மறுபடி பயணத்தை தொடரக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை. விழுந்தபின் எழுவதுதான் முக்கியம். அதுபோல இந்த பத்து கட்டளைகளை நாம் பின்பற்றும்பொழுது ஏதேனும் தவறு ஏற்பட்டால் அந்த தவறை திருத்திக்கொண்டு நமது ஆன்மீக பயணத்தை தொடரவேண்டும். அதை விடுத்து நான் பொய் சொல்லிவிட்டேன், அதனால் நான் பாவி, எனக்கு மன்னிப்பே கிடையாது என்று நாமே தீர்மானித்து விட்டால் நம்மை காப்பாற்றும் சக்தி கடவுளுக்கும் கிடையாது.

என்னால்தான் அனைத்து செயல்களும் நடக்கின்றன என்ற அகந்தை எவ்வளவு தவறோ அதே அளவு தாழ்வுமனப்பான்மையும் தவறு. என்னால் இந்த பிறவியில் முக்தியடைய முடியும் என்ற நம்பிக்கை இல்லாதவர்கள் தங்கள் குருவின் பாதங்களை சரணடைந்து அவர் சொல்படி செயல் படவேண்டும். உன்னால் முடியும் தம்பி என்று அவர் கூறினால் அதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு ஆன்மீக பயணத்தில் தொடர்ந்து முன்னேறுவது நமது கடமை.

எவ்வித கவலையும் இல்லாமல் நிம்மதியுடனும் இன்பத்துடனும் வாழ்வதற்காகவே இந்த உலகம் கடவுளால் உருவாக்கப்பட்டுள்ளது. துன்பம் என்பது நம் அறியாமையால் நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்வது. எனவே வேதம் காட்டும் ஆன்மீகப்பாதையில் பயணித்து விரைவில் நாம் முக்தியடைய வேண்டும்.

முடிவுரை :

தியானம் என்பது மனதால் மனதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பயிற்சி. எனவே தியானம் செய்ய பயன்படுத்தும் மனதை திடபடுத்திக்கொள்ள வேதம் நமக்கு பத்து கட்டளைகளை இட்டுள்ளது. செய்ய கூடாத ஐந்து கட்டளைகளை முடிந்தவரை தவிர்த்தும் செய்யவேண்டிய ஐந்து கட்டளைகளை முடிந்தவரை செய்தும் நாம் நம் மனதை தயார் செய்துகொண்டு அஷ்டாங்க அங்கத்தின் அடுத்த கட்டத்துக்கு பயணிக்க வேண்டும்.

'முடிந்தவரை' என்ற சொல் மிகமுக்கியமானது. எவ்வளவு முடியும் என்பது மனதின் பக்குவத்தை பொறுத்து மனிதருக்கு மனிதர் மாறுபடும். நம்மை நாம் ஏமாற்றிக்கொள்ளாமல் முடிந்தவரை இந்த பத்துகட்டளைகளை பின்பற்றி ஆன்மீக பயணத்தில் முன்னேற ஆரம்பித்தால் விரைவில் நாம் முக்தியடைந்து விடலாம்.

பயிற்சிக்காக :

1. செய்யவேண்டிய ஐந்து கட்டளைகள் நம் ஆன்மீக பயணத்தில் எவ்வாறு நமக்கு உதவுகின்றன?

2. அளவுகோல் பற்றி கூறப்பட்ட கருத்து என்ன?

3. பத்து கட்டளைகளை செய்ய எவ்வளவு காலம் ஆகும்?

4. பத்து கட்டளைகளை பின்பற்ற தவறுபவர்களின் நிலை என்ன?

சுயசிந்தனைக்காக :

1. தொடர்ந்து பொய் சொல்லும் ஒருவர் முக்தியடைய வாய்ப்பு உள்ளதா?

2. இல்வாழ்பருவத்திற்குண்டான கடமைகளையும் இந்த பத்து கட்டளைகளையும் ஒப்பிட்டு ஆராயவும்.