Wednesday, December 1, 2010

பாடம் 112: இளமையில் கல் (பிரம்மசூத்திரம்3.3.23)

மனித வாழ்வை நான்காக பிரித்து வாழ்வின் அட்டவணையை கொடுத்த வேதம், முதல் கட்டமான மாணவ பருவத்தில் கற்க வேண்டிய கல்வி, செய்ய வேண்டிய கடமைகள் போன்றவற்றை பற்றி சொல்லும் கருத்துக்களை இந்த பாடம் தருகிறது.

கடவுள் பாதி மிருகம் பாதி என்ற கலவையால் செய்யப்பட்டவன் மனிதன். பிறக்கும்பொழுது மிருகமாக இருக்கும் மனிதன் சிறிது சிறிதாக மிருக குணங்களை களைந்து கடவுளின் குணங்களை ஏற்று கடவுளாகவே மாறும் வாய்ப்பு உள்ளது. பட்டாம்பூச்சி முட்டையிலிருந்து வெளிவரும்பொழுது கம்பளிபூச்சியாக இருக்கிறது. பின் தன்னைத்தானே சுத்தீகரித்துக்கொண்டு வண்ணத்துபூச்சியாக வானை வலம் வருகிறது.

இதே போல் மனிதன் தாயிடமிருந்து குழந்தையாக பிறக்கும்பொழுது மிருகமாக இருக்கிறான். பின் குருவின் உதவியுடன் கல்வி கற்று தன்னைத்தான் எவ்வளவு தூரம் மாற்றிக்கொள்கிறான் என்பதை பொறுத்து கடவுளின் குணங்களின் விகிதம் அதிகரிக்கிறது. பிறவிகள் தோறும் இந்த முன்னேற்றம் தொடர்வதால் ஒரு சிலர் கடவுளாக மாறி என்றும் குறைவில்லா இன்பத்துடன் வாழ்கிறார்கள். மற்றவர்கள் கடவுளும் மிருகமும் கலந்த மனிதனாக இருந்து முக்தியை நோக்கி பிறவிகள்தோறும் முன்னேறுகிறார்கள்.

பிறந்த குழந்தை ஒரு ஐந்து வயதுவரை தாயின் அரவணைப்பில் அவளை முன்மாதிரியாக கொண்டு வளரும். அதுவரை அதன் உலகமே தாய்தான். ‘நான் சொல்வதை கேட்காவிட்டால் அப்பாவிடம் சொல்லுவேன்என்று தாய் தன் இயலாமையை தெரிவிக்கும் வயது வந்ததும் குழந்தை தந்தையின் பொறுப்புக்கு மாற்றப்படுகிறது. தந்தையின் கட்டுப்பாடும் பல வருடங்கள் நீடிப்பதில்லை. அவர் தன்னால் முடியாதபொழுது பிள்ளைகளை பற்றிய பொறுப்பை குருவிடம் ஒப்படைக்கிறார். தான் தன் காலில் நிற்பதற்கு வேண்டிய பயிற்சியை பெறுவதற்கு குருவை சார்ந்திருக்கும் காலம் மாணவப்பருவம் எனப்படும்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தொடர் ஓட்டப்பந்தையத்தில் கைமாற்றப்படும் பொருள் போல மனிதன் சிறு வயதில் ஒருவர் பொறுப்பிலிருந்து மற்றவர் பொறுப்புக்கு மாற்றப்படுகிறான். குருவிடம் பயிலும் மாணவப்பருவம் முடிந்ததும் தெய்வத்தின் நேரடிப்பார்வையில் அவன் எதிர்காலம் அமைகிறது.

மாணவப்பருவத்தின் ஆரம்பமும் முடிவும்

தந்தையின் பொறுப்பில் உள்ள பிள்ளை குருவின் பொறுப்புக்கு மாறுவது மாணவப்பருவத்தின் ஆரம்பம். எப்பொழுது கல்வி கற்பதைவிட பணம் சம்பாதிப்பதும், குடும்பவாழ்வில் ஈடுபடுவதும், ஆசைகளை யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் நிறைவேற்றிக்கொள்ளும் துடிப்பும் முக்கியமாக தோன்றுகிறதோ அப்பொழுது மாணவப்பருவம் முடிவடைகிறது. கல்வி கற்பது மட்டும்தான் என் வாழ்வின் ஒரே நோக்கம் என்றிருக்கும் காலம்தான் மாணவப்பருவம்.

இல்வாழ்வை ஏற்றுக்கொண்டு பின் பொழுதுபோவதற்காக படிப்பதும், வேலையில் பதவி உயர்வு பெறுவதற்காக மேற்படிப்பை தொடர்வதும் மாணவப்பருவம் என்ற கட்டத்துக்குள் வராது. அதேபோல் இல்வாழ்வை முடித்து ஓய்வு பெற்றவுடன் படிப்பதை முழுநேர வேலையாக ஏற்றுக்கொண்டாலும் அதை மாணவப்பருவம் என்று குறிப்பிட முடியாது.

மாணவ பருவத்தில் செய்ய வேண்டிய கடமைகள்

கற்பது மாணவனின் முதல் கடமை. பெற்றோருக்கும் குருவிற்கும் சேவை செய்வது அடுத்த கடமை. பெரியவர்களை மதித்து அவர்களிடமிருந்து ஏதாவது கற்க வேண்டும் என்ற மனோபாவத்துடன் பணிவாக நடந்துகொள்வதும், உடற்பயிற்சிக்கேற்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்வதும், புத்தியை தீட்டும் வகையில் வடிவமைக்கபட்ட பொழுதுபோக்கு சாதனங்களை உபயோகபடுத்தி மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதும் மாணவப்பருவத்தில் செய்ய வேண்டிய மற்ற கடமைகளாகும்.

மாணவபருவத்தில் செய்யகூடாதவை

பணம் சம்பாதிப்பதை மாணவப்பருவத்தில் முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொருளாதார சூழ்நிலை காரணமாக பகுதிநேர வேலை செய்ய நேரிட்டாலும் பெறும் சம்பளத்தை முழுதும் பெற்றோரிடம் கொடுத்துவிட வேண்டும். பணம் சம்பாதிப்பது எப்பொழுது படிப்பைவிட முக்கியமானதாக தோன்றுகிறதோ அப்பொழுதிலிருந்து மாணவப்பருவத்தின் முக்கிய தேவையான கற்கும் திறன் குறையத்துவங்கிவிடும்.

படித்து முடிக்கும் வரை பாலுணர்வை தூண்டும் வகையிலான நட்பையோ பொழுதுபோக்கு சாதனங்களையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும். உடலுறவில் ஆர்வம் ஏற்பட்டால் கல்வி கற்பதற்கு தேவையான கவனம் சிதறடிக்க பட்டுவிடும்.

எந்த செயல்களைச்செய்தால் பெற்றோர்களும் ஆசிரியரும் விரும்பமாட்டார்களோ அந்தச்செயலகளை மாணவப்பருவத்தில் செய்யகூடாது.

மாணவப்பருவத்தில் கற்க வேண்டியவை

வாழ்க்கையை வாழத்தேவையான அனைத்து அறிவையும் திறனையும் வளர்த்துக்கொள்ளும் பருவம் மாணவப்பருவம். விலங்குகளைப்போல உண்டு உறங்கி இனப்பெருக்கம் செய்து உயிர்வாழ மனிதன் பெரிதாக ஒன்றையும் கற்க வேண்டிய அவசியம் இல்லை. விலங்குகளை போலன்றி கடவுளாய் மண்ணில் வாழ வாழ்வில் ஏறக்குறைய கால்பகுதிக்கு மேல் மாணவப்பருவத்திற்காக செலவழித்து தன் முழுத்திறனையும் உபயோகித்து கல்வி கற்க வேண்டும்.

பிறக்கும்பொழுது அனைத்து குழந்தைகளும் சென்ற பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள அறிவுடனும் தொழில் செய்யும் திறனுடம்தான் பிறக்கின்றன. இவ்வனைத்தையும் நினைவு கூர்ந்து பின் மேலும் வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு மாணவப்பருவத்தில் கிடைக்கிறது. எவ்வளவு தூரம் அறிவை வளர்த்துக்கொள்ள முடியும் என்பது மாணவருக்கு மாணவர் வேறுபடும். விளையும் பயிர் முளையிலே தெரியும். ஒவ்வொருவரும் தங்கள் முழுத்திறமையையும் வெளிக்கொணர்ந்து மேலும் முன்னேறும் வகையில் தரமான கல்வி கற்க வேண்டும்.

1. பொது அறிவு: உலகுடன் உறவாட தேவையான மொழி, கணிதம், அறிவியல் போன்றவை அனைவரும் கற்க வேண்டிய பொது அறிவு, கல்வியின் முதல் படி. தேவையான அளவு பொது அறிவு பள்ளிப்படிப்பை முடிக்கும்பொழுது மாணவர்களுக்கு கிடைத்துவிடும்.

2. தனி அறிவு: ஒவ்வொரு மாணவரும் தங்களது விருப்பத்திற்கேற்ற ஓரிரு துறைகளை தேர்ந்தெடுத்து மற்றவர்களை விட அதிகத்திறன் பெறும் வகையில் கல்வி கற்க வேண்டும். தனி அறிவை வளர்த்துக்கொள்ள கல்லூரி படிப்பு அவசியமாகும்.

தனி அறிவு பணம் சம்பாதிக்க தேவையான தகுதியை பெரும்பாலும் ஏற்படுத்திக் கொடுத்துவிடும். அவ்வாறில்லாமல் ஓவியம், பாட்டு, விளையாட்டு என்பது போன்ற போதிய அளவு பணம் சம்பாதிக்க இயலாத துறைகளில் தனி அறிவு இருக்குமேயானால் வேலை வாய்ப்பு அதிகமுள்ள ஏதாவது ஒரு துறையிலும் மேலும் ஒரு தனி அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவப்பருவம் முடிந்ததும் திறமைக்கேற்ற வேலையை செய்யத்துவங்குவதுதான் கல்வி கற்பதன் முக்கிய நோக்கம். எனவே வேலை வாய்ப்பு அதிகமுள்ள ஏதாவது ஒரு துறையில் வல்லுனர் என்ற நிலை வரும் வரை தனி அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.


3. வாழ்க்கைக்கல்வி: ஒரு தென்னங்கன்றை நட்டு உரமிட்டு நீரூற்றி பாதுகாத்து வளர்த்தால் அது மரமாகி மற்றவர்களுக்கு உதவும். அதுபொல ஒரு மாணவனுக்கு பொது அறிவையும் தனி அறிவையும் கொடுத்தால் அவன் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் உபயோகமாக உழைக்க கூடிய உற்பத்தி திறனுள்ள மனிதனாக மாறுவான். ஆனால் வாழ்க்கையின் நோக்கம் என்ன, எதற்காக கல்வி கற்று, பணம் சம்பாதித்து குடும்ப பொறுப்புகளை ஏற்றுகொள்ள வேண்டும் என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள வாழ்க்கை கல்வி அவசியம். தனி அறிவு வாழ்வில் பணம் சம்பாதித்து வசதிகளை அதிகபடுத்திக்கொள்ள மட்டுமே உதவும். நிரந்தர பாதுகாப்பையும் குறையாத இன்பத்தையும் தரும் சக்தியுள்ளது வாழ்க்கை கல்வி மட்டுமே.

பந்தை எப்படி எதிராளியிடம் சிக்காமல் தக்கவைத்துக்கொண்டு இங்கும் அங்கும் ஓடுவது என்பதை கற்றுக்கொண்டால் மாத்திரம் கால்பந்தாட்ட நிபுணனாகி விட முடியாது. ஆட்டத்தின் நோக்கம் என்ன என்பதை அறியாமல் பந்துடன் இங்கும் அங்கும் வீணே ஓடிக்கொண்டிருப்பது போல வாழ்க்கையின் நோக்கம் என்ன என்று தெரிந்து கொள்ளாமல் பெரும்பாலோர் வேகமாக வேலை செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.

பொருளாதரம், அறிவியல் போன்ற உலகியல் துறைகளில் எல்லை என்று ஒன்றும் கிடையாது. எவ்வளவு வேகமாக ஓடினாலும் வெற்றிக்கம்பத்தை தாண்ட முடியாது. ஓட முடியாமல் கீழே விழுவதாலோ அல்லது ஓடியது போதும் என்று நாமே ஓய்வெடுக்க தீர்மானிப்பதாலோ மட்டும்தான் ஓட்டப்பந்தையம் முடிவுக்கு வரும் என்பது தெரியாமல் எல்லோரும் மாணவப்பருவத்தை முடித்துவிட்டு ஓட ஆரம்பிக்கும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். ஓட ஆரம்பித்துவிட்டால் அதற்கு பிறகு ஏன் ஓடுகிறோம் என்பதை ஆராய அவகாசம் இருக்காது.

எனவே மாணவ பருவத்தில் வாழ்க்கை கல்வி அவசியம். வாழ்க்கை கல்வியை உடலாலும் வாக்காலும் செய்ய வேண்டிய சடங்குகள், மனதில் கொள்ளவேண்டிய பண்புகள் மற்றும் புத்தியால் தெரிந்து கொள்ளவேண்டிய அறிவு ஆகிய மூன்று நிலைகளில் மாணவர்களுக்கு கற்பிக்க பட வேண்டும்.

எவ்வளவு தூரம் தனி அறிவை பெறுவது என்பது அவரவர்களின் அறிவுத்திறனை பொறுத்து மாறுபடும். ஒரு சிலர் மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் தனி அறிவை பெற்று நிறைய சம்பாதிக்க கூடிய வேலைகளை பெறுகிறார்கள். ஆனால் பலர் விவசாயம், வணிகம் போன்று உடல் உழைப்பை பிரதானமாக கொண்ட வேலைகளை செய்கிறார்கள். பிறவிகள்தோறும் சேர்த்து வைத்த அறிவின் திறன் மக்களுக்குள் பெரிதும் வேறுபடுவதுதான் இதற்கு காரணம். அவரவர் அறிவுக்கேற்ற தொழிலை செய்து தாங்கள் தற்பொழுது இருக்கும் நிலையிலிருந்து எல்லோரும் இந்த பிறவியில் சிறிது முன்னேற்றம் அடைவார்கள்.

வாழ்க்கை கல்வியை பெறும் தகுதியும் இதுபோல் வேறுபடும். ஒரு சிலரால் வெறும் சடங்குகளை மட்டும்தான் பின் பற்ற முடியும். பெரும்பாலோர் நற்பண்புகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து தர்மமாக வாழகற்றுக்கொள்வர். வெகு சிலர் வேதம் கூறும் பரம ரகசியத்தை அறிந்து கொண்டு முக்தியை அடைவர்.

வாழ்க்கை கல்விபண்புகள்: புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் உள்ள நீதிகதைகள் மூலமாக உண்மை பேசுதல், நேர்மையாய் நடத்தல், பணிவின் உயர்வு, ஒழுக்கம், துன்புறுத்தாமை, கொல்லாமை, தூய்மை, ஒழுங்கு போன்ற நற்குணங்களின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு போதிக்க வேண்டும்.

வாழ்க்கை கல்விசடங்குகள்: கடவுளை பற்றியும் கடவுளை ஆராதிக்கும் பூஜை மற்றும் பிரார்த்தனை முறைகளையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். ராணுவத்தில் சேர்பவர்களுக்கு நிற்பது, நடப்பது, தேசியகொடிக்கு மரியாதை செலுத்துவது போன்ற சடங்குகளை சொல்லிகொடுத்து அதன் மூலம் தேசபக்தியை உண்டுபண்ணுவது போல வாயால் ஸ்தோத்திரம் சொல்வது, உடலால் பூஜை செய்வது போன்ற சடங்குகளை சொல்லிக்கொடுத்து கடவுள் பக்தியை உண்டு பண்ணவேண்டும்.

மாதா, பிதா, குரு என்று கை மாறிவந்த மாணவன், இந்த பருவம் முடிவதற்குள் இறைவனின் பொறுப்புக்கு மாற்றப்படவேண்டும் என்பதால் இறைவனைப்பற்றியும் வேதத்தை பற்றியும் சரியான அறிவை அவன் அடைவது அவசியம்.

வாழ்க்கை கல்விஆன்மிக அறிவு: வேதத்தை முறைப்படி கற்றுக்கொடுப்பதன் மூலம் மாணவர்களுக்கு மனிதன், கடவுள், உலகம், வாழ்வின் துன்பத்திற்கு காரணம், துன்பத்திலிருந்து விடுதலைப்பெற செய்யவேண்டிய செயல்கள் மற்றும் விடுதலை பெற்றபின் அனுபவிக்கும் குறைவற்ற இன்பத்தை பற்றிய வர்ணணை ஆகிய ஆறு ஆன்மிக அறிவையும் புகட்ட வேண்டும். வெகு சிலரால் மட்டுமே இந்த அறிவை முற்றிலும் புரிந்து கொள்ள முடியும் என்றாலும் மற்றவர்களுக்கு இந்த அறிவு அவர்கள் மனதினுள் தங்கி தகுந்த காலம் வரும்பொழுது அறிவாக மலரும்.

முடிவுரை :

தங்கசுரங்கத்தில் கிடைக்கும் மண்ணை சுத்தம் செய்து அதிலிருந்து தங்கத்தை பிரித்தெடுப்பதைப்போல விலங்குகளின் குணங்களை களைந்து மனிதனை கடவுளாக்கும் பணியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஆசிரியர்களின் துணையுடன் மாணவப்பருவத்தில் எவ்வளவுதூரம் நம்மை நாம் பண்படுத்திக்கொள்கிறோமோ அந்த அளவு நமது வாழ்வு வசதியுடனும் இன்பமாகவும் அமைகிறது. எனவே வாழ்வின் அட்டவணையில் கொடுக்கப்பட்ட நான்கு கட்டங்களில் முதல் கட்டமான மாணவப்பருவத்தில்தான் நம் வாழ்வின் மற்ற மூன்று கட்டங்களை எப்படி வாழப்போகிறோம் என்பதன் அடித்தளம் நிர்ணயிக்கப்படுகிறது.


பயிற்சிக்காக :

1.மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசை எதை குறிக்கிறது?

2. மாணவப்பருவத்தின் ஆரம்பம் மற்றும் முடிவு எது?

3.மாணவனின் கடமைகள் யாவை?

4.மாணவபருவத்தில் செய்யக்கூடாத செயல்கள் யாவை?

5. கற்கவேண்டிய மூன்று கல்விகள் யாவை?

6. வாழ்க்கை கல்வி எந்த மூன்று விதமாக பிரிக்கப்பட்டிருக்கிறது?

7. சடங்குகளின் முக்கியத்துவம் என்ன?


சுயசிந்தனைக்காக :

1. தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு என்ற திருக்குறளின் பொருளை ஆராய்க.

2. கற்கவேண்டிய அனைத்தையும் கற்றால் மாணவப்பருவத்திலேயே முக்தியை அடைந்து விடலாமா?

3.இறைவனாகவே மாறிவிடுவது என்றால் என்ன?

4.இறைவனாகவே மாறிவிட்டால் இல்வாழ்வில் நுழைய முடியுமா?

5.தற்போதைய கல்விதிட்டத்தில் உள்ள குறை என்ன?