Sunday, December 12, 2010

பாடம் 117: சமூகத்தின் நான்கு பிரிவுகள் (பிரம்மசூத்திரம் 3.3.29-30)

தனிமனிதனின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் வாழ்வை நான்கு பகுதிகளாக பிரித்து வழிகாட்டிய வேதம் சமூக முன்னேற்றத்திற்காக சமுதாயத்தில் உள்ள மக்களை நான்கு பிரிவுகளாக பிரித்துள்ளது என்னும் கருத்தை இந்த பாடம் தருகிறது.

நான்கு பிரிவுகள்

ஒரு தனிமனிதனால் தான் சுகமாக வாழ தேவையான அனைத்து பொருள்களையும் சூழலையும் தானாக அமைத்துக்கொள்ள முடியாது. மற்றவர்களுடன் சேர்ந்து வேலையை பகிர்ந்து கொண்டால்தான் எல்லோரும் எல்லாமும் பெற முடியும். எனவே பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் என நான்கு பிரிவாக மக்களை பிரித்து அவரவர் செய்யவேண்டிய கடமைகளை வேதம் விவரித்துள்ளது.

பிரிவின் அடிப்படை

மக்கள் எந்த பிரிவை சேர்ந்தவர்கள் என்பதை தீர்மானிக்க மூன்று அடிப்படைகள் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை குணம், தொழில் மற்றும் பிறப்பு ஆகியவை.

பிராமணர் குலத்தில் பிறந்தவர் பிறப்பின் அடிப்படையில் பிராமணர். அவர் அரசியலில் சேர்ந்து அரசாங்கத்தில் மந்திரியாக பணியாற்றினால் தொழில் அடிப்படையில் அவரே சத்திரியர். மந்திரியாக வேலை செய்யும்பொழுது பொதுமக்களுக்காக உழைக்காமல் தனக்கு எவ்வளவு சொத்து சேர்த்துக்கொள்ள முடியும் என்பதிலேயே கவனம் கொண்டிருந்தாரானால் குணத்தின் அடிப்படையில் அவரே வைசியர். மூளையை பயன்படுத்தாமல் மேலிடத்தின் ஆணைபடி சட்டசபையில் கைதூக்கும் வேலையை மட்டும் செய்தாரானால் அவரே சூத்திரர். எனவே ஒருவர் பிராமணரா, சக்திரியரா, வைசியரா அல்லது சூத்திரரா என்ற கேள்விக்கு பதில் அடிப்படையை பொறுத்து மாறும்.

சமுதாயம் வேகமாக வளர அவசியமான அனைத்து வேலைகளையும் நான்காக பிரித்து அவ்வேலைகளை செய்ய தகுதியானவரா என்பதை அறிய மக்களை அவர்களின் குணத்தில் அடிப்படையில் நான்காக பிரித்து அவரவர் தங்களுக்கு ஏற்ற வேலையை செய்யவேண்டும் என்று வேதம் விதித்துள்ளது.

பிராமணர்கள்: சொல்லித்தருதல், எழுதுதல், அலோசனை வழங்குதல், திட்டமிடுதல் போன்ற புத்தியை பிரதானமாக உபயோகித்து செய்ய வேண்டிய வேலைகளை பொறுமையும், நிதானமும், தன்னலம் கருதாமல் பிறருக்காக அயராது உழைக்கும் மனோபாவமும் கொண்டவர்கள் செய்ய வேண்டும்.

சத்திரியர்கள்:ஆட்சிபுரிதல், கட்டுப்படுத்துதல், அனைவரையும் தூண்டிவிட்டு உற்சாகபடுத்தி இலக்கை எட்டுதல் போன்ற புத்தியுடன் உடல் உழைப்பையும் உபயோகித்து செய்ய வேண்டிய வேலைகளை ஆற்றலும், விடாமுயற்சியும், சுறுசுறுப்பும், தன்னலம் கருதாமல் பிறருக்காக அயராது உழைக்கும் மனோபாவமும் கொண்டவர்கள் செய்ய வேண்டும்.

வைசியிர்கள்:வணிகம் மற்றும் தொழில் செய்தல், விவசாயம் மற்றும் பண்ணைகளை நடத்துதல், சமூகத்தின் வளர்ச்சி மற்றும் கேளிக்கை தேவைகளை நிறைவேற்றும் துறைகளில் உழைத்தல் போன்ற உடல் உழைப்பை பிரதானமாகவும் புத்திகூர்மையை ஆதாரமாகவும் கொண்டு செய்ய வேண்டிய வேலைகளை அதிக வருமானம் கிடைக்கும் என்று சுயநலத்துக்காக அயராது உழைக்கும் தன்மை கொண்டவர்கள் செய்ய வேண்டும்.

சூத்திரர்கள்:கூலிவேலை செய்தல், துப்புரவு வேலை போன்ற உடல் உழைப்பை மட்டுமே பிரதானமாக கொண்டு செய்யப்படும் வேலைகளை சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் தகுதி இல்லாதவர்களும், புத்திகூர்மையற்றவர்களும் செய்ய வேண்டும்.

வேலைகளை மாற்றிக்கொள்வதன் மூலமும் குணத்தை மாற்றிக்கொள்வதன் மூலமும் யார்வேண்டுமானாலும் ஒரு பிரிவிலிருந்து மற்றதற்கு மாறிக்கொள்ளலாம்.

குணமும் தொழிலும்

சமுதாய முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து வேலைகளையும் நான்காக பிரித்து அவற்றை செய்யவேண்டிய மனிதர்களின் குணத்தையும் நான்காக பிரித்து வேதம் வகுத்தவிதத்தில் அவரவர்கள் தங்கள் குணத்திற்கேற்ற வேலையை தேர்ந்தெடுத்து செய்யவேண்டும். இது எல்லா காலங்களுக்கும் பொருந்தும்.     

உதாரணமாக அமைதி மற்றும் பாதுகாப்பு இல்லாத இடத்தில் யாராலும் நிம்மதியாக வாழ முடியாது. எனவே கள்ளர்களிடமிருந்தும் அயல்நாட்டு படையெடுப்பிலிருந்தும் மக்களை காப்பாற்ற மக்களில் ஒருசிலர் நிலையான அரசாங்கம் அமைப்பது அவசியம். இது சத்திரியர்களுடைய வேலை. தன்னலமற்ற சத்திரிய குணமுள்ளவர்களுக்கு பதில் சுயநலத்துடன் வேலைசெய்யும் வைசிய குணமுள்ளவர்கள் அரசியலில் ஈடுபட்டால் நாட்டின் முன்னேற்றம் தடைபடும்.

பிறப்பின் அடிப்படையில் ஒருவர் எந்த பிரிவை சேர்ந்தவர் என்பது பெரும்பாலும் தேவையற்ற ஒரு ஆராய்ச்சி. பெற்றோர்களின் குணம்தான் பிள்ளைக்கு இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மேலும் கலப்புத்திருமணங்கள் காரணமாக யாரையும் பிறப்பின் அடிப்படையில் பிரிப்பது எளிதான காரியமல்ல.

உயர்வு தாழ்வு

மனிதனாக பிறந்தவர்கள் அனைவரும் பிறப்பின் அடிப்படையில் சமமானவர்கள். வேதம் சமூகத்தை நான்கு பிரிவாக பிரித்தன் நோக்கம் பிறப்பின் அடிப்படையில் யாரையும் உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர் என்று பாகுபடுத்துவது அல்ல.

செய்யும் வேலைகளின் அடிப்படையில் அனைத்து பிரிவினரும் சமமான அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். எந்த ஒரு வேலை சரியாக செய்யப்படாவிட்டாலும் சமுதாயத்தின் முன்னேற்றம் தடைபடும். எனவே நான்கு பிரிவினரும் செய்யும் வேலையின் அடிப்படையில் சமமானவர்களே. ஆனால் பெரும்பாலோர் காசேதான் கடவுளடா என்ற கொள்கையுடன் இருப்பதால் எந்த வேலை அதிகபணம் சம்பாதிக்கும் வாய்ப்பை கொடுக்கிறதோ அது உயர்ந்ததாக கருதப்படுகிறது.

குணத்தின் அடிப்படையில் பிராமணன் மற்ற மூன்று பிரிவினரைவிட மேலானவன். ஏனெனில் உலக பொருள்களில் பற்றுதல் இல்லாமல் முக்திக்காக உழைப்பவன் பிராமணன் ஒருவனே. பொதுநலத்திற்காக உழைப்பவன் என்ற காரணத்தால் சத்திரியன் இரண்டாவது இடம். சோம்பேறியாக இல்லாமல் கடினமாக உழைப்பவன் என்ற காரணத்தால் வைசியன் மூன்றாவது இடம். புத்திகூர்மையும் உழைக்கும் ஆவலும் இல்லாத சூத்திரர்கள் நான்காவது இடம்.

வகுப்பில் உள்ள மாணவர்களிடையே நன்றாக படிப்பவன் சுமாராக படிப்பவன் என்ற பேதம் இருந்தாலும் யார் தன் நிலையிலிருந்து மிகுந்த முன்னேற்றம் அடைகிறார்களோ அவர்களே ஆசிரியரின் கவனத்தை மிகவும் கவருவார்கள். அது போல வைசியன் தன்னலத்தை துறந்து சத்திரியனாக உயரந்தால் அவன் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் வாழும் பிராமணனை விட சிறந்தவனாக வேதத்தின் பார்வையில் கருதப்படுவான்.      

முடிவுரை :

வேதம் அனைத்து மக்களுக்கும் பொதுவானது. மேலும் ஒவ்வொரு மனிதனுக்கும் எது நல்லது என்றும் எது கெட்டது என்றும் தெரியும். எனவே எல்லோரும் தங்கள் சுபாவத்திற்கு ஏற்ற வேலையை தேர்ந்தெடுத்து அதை திறமையாக செய்வதன் மூலமும் வேதம் படித்த பண்டிதரின் உபதேசத்தை கேட்டு அதன்படி நடப்பதனாலும் தங்கள் தற்போதைய நிலமையிலிருந்து முன்னேறலாம். சூத்திரன், வைசியனாகி, வைசியன் சத்திரியனாகி, சத்திரியன் பிராமணனாகி, பிராமணன் முக்தியடைந்தவனாக மாறவேண்டும். மேலும் அனைத்து வேலைகளையும் அவற்றிற்கு ஏற்ற திறமை படைத்தவர் செய்தால்தான் சமூகம் வளர்ச்சி பெறும்.

தனிமனித முன்னேற்றம் மற்றும் சமூகத்தின் முன்னேற்றம் ஆகிய இரு நோக்கங்களையும் நிறைவேற்ற சமூகத்தை நான்காக பிரித்து அவரவரின் குணத்துக்கு ஏற்ற வேலையை செய்யவேண்டும் என்று வேதம் உபதேசிக்கிறது.

பயிற்சிக்காக :

1. சமூகத்தை எந்த நான்கு பிரிவாக வேதம் பிரித்துள்ளது ?

2. இந்த நான்கு பிரிவுகள் எந்த மூன்று அடிப்படையில் பிரிக்கபட்டுள்ளன?

3. நான்கு பிரிவுகளை தாழ்ந்த பிரிவிலிருந்து உயர்ந்த பிரிவு வரை வரிசைபடுத்துக.

4.வேதம் இந்த பிரிவுகளை ஏற்படுத்த காரணம் என்ன?

சுயசிந்தனைக்காக :

1. எந்த வேலையில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற அடிப்படையில் வேலையை தேர்ந்தெடுத்தால் என்ன தவறு?

2. குணத்தின் அடிப்படையில் நாம் எந்த பிரிவை சேர்ந்தவர் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

3. பிறப்பினால் ஒத்த பிரிவை உடையவர்கள்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டுமா?

4.வீட்டு வேலை செய்யும் பெண்கள் எந்த பிரிவை சேர்ந்தவர்கள்?