Monday, December 27, 2010

பாடம் 124: ஆசனமும் பிராணாயாமும் (பிரம்மசூத்திரம் 3.3.38)

அஷ்டாங்க யோகத்தின் மூன்று மற்றும் நான்காவது அங்கங்களாக ஆசனமும் பிராணாயாமமும் யோகத்தை அடைய படிக்கட்டுக்களாக கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பற்றி பரவலாக நிலவிவரும் தவறான கருத்துக்களை விலக்கி வேதத்தின் பார்வையில் இவை எவ்வளவு தூரம் உபயோகமானவை என்ற விளக்கத்தை இந்த பாடம் தருகிறது.

யோகாசனம்

யோகா என்ற சொல் ஆங்கில அகராதியில் இடம்பிடித்திருந்தாலும் அதன் பொருள் உலகில் உள்ள பெரும்பான்மை மக்களால் தவறாக புரிந்து கொள்ளபட்டுள்ளது. யோகா என்ற சொல்லால் பலர் குறிப்பிடுவது அஷ்டாங்க யோகத்தின் மூன்றாவது அங்கமான ஆசனபயிற்சியை மட்டும்தான். முட்டிவலியிலிருந்து விடுதலை பெற யோகா உதவுமா என்ற கேள்வியை கேட்பதற்கு முன் யோகா என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

யோகா என்பது வாழ்வின் துயரங்களிலிருந்து நமக்கு முற்றிலும் விடுதலை வழங்க வல்லது. யோகா என்பதன் சரியான பொருள் ‘ஒன்றுதல்’. பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்று என்று புரிந்துகொள்ள நமக்கு உதவுவதுதான் யோகாவின் குறிக்கோள். நான் பரமன் என்பதை அறிந்து கொண்டு என்றும் குறையாத ஆனந்தத்துடன் வாழ உதவும் யோகாவை முட்டிவலிக்கு பயன்படுத்துவதா வேண்டாமா என்று ஆராய்வதை சுகமாக தூங்க பென்ஸ் கார் உதவுமா என்று கேட்பதற்கு ஒப்பிடலாம். உடலை ஆராக்கியமாக வைத்திருப்பதற்கும் நோய்களை தீர்ப்பதற்கும் நவீன உலகில் இருக்கும் பல வழிகளுடன் முக்தியடைய சாதனமாக வேதத்தால் கொடுக்கப்பட்ட யோகாசனத்தை ஒப்பிட கூடாது.

யோகத்தை அடைய எப்படி அமரவேண்டும் எது போன்ற உடற்பயிற்சிகள் செய்யவேண்டும் என்று விளக்கும் யோகாசனத்தை வெறும் உடற்பயிற்சி கலையாக பலர் நினைக்கிறார்கள். படுக்கை அறையில் இருக்கும் மெத்தையை பென்ஸ் காருடன் ஒப்பிட்டு காரை இழிவு படுத்துவதுபோல மருத்துவ உலகின் முன்னேற்றங்களுடன் யோகாசனத்தை ஒப்பிட்டு அதன் மதிப்பை இவர்கள் குறைக்கிறார்கள்.

பிராணாயாமம்

அன்னமயகோசம் மற்றும் மனோமயகோசம் ஆகிய இரண்டிற்கும் பாலமாக இருப்பது பிராணமயகோசம். பிராணனை கட்டுபடுத்துவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் வளர்த்துக்கொள்ளலாம்.  மூச்சுக்காற்றை உள்ளிழுத்து, தக்கவைத்து பின் வெளிவிடும் நேரத்தை முறைப்படி கட்டுபடுத்தும் பயிற்சி பிராணாயாமம்.

யோகாசனம், பிராணாயாமம், தியானம் ஆகிய மூன்று பயிற்சிகள் மட்டுமே நம்மை பரமனுடன் ஐக்கியமாக்கும் சமாதி என்ற நிலைக்கு கொண்டு செல்லும் என்பது போன்ற தவறான பிரச்சாரங்களை நம்பி ஏராளமான மக்கள் தங்கள் நேரத்தையும் பொருளையும் வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

பிரஹதாரண்யக உபநிஷத் மந்திரம் ஒன்று, ‘எவனொருவன் இந்த மெய்ப்பொருளை உணர்ந்து கொள்கிறானோ அவன் இந்த உலகை வென்றவனாவான்’ என்று கூறுகிறது. இதை தவறாக புரிந்து கொண்டு யோகாசனம், பிராணாயாமம் போன்றவற்றை செய்வதன் மூலம் அமானுஷ்ய சக்திகளை பெறலாம் என்று பலர் முயன்று கொண்டிருக்கிறார்கள்.

எனவே யோகாசனம் பிராணாயாமம் ஆகியவற்றை செய்வதன் நோக்கத்தை புரிந்து கொண்டு இவற்றை அளவாக செய்ய வேண்டும்.

அளவு

எல்லோருக்கும் இருப்பது ஒரே மாதிரி உடல் என்றாலும் உண்ணும் உணவு, செய்யும் உடற்பயிற்சி போன்றவற்றை பொருத்து உடல் திறன் மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது. அன்றாட வாழ்வில் செய்யவேண்டிய அனைத்து வேலைகளை செய்ய முடியும் அளவுக்கு உடலில் சக்தி, திறன் மற்றும் ஆரோக்கியம் இருந்தால் போறும். அவ்வாறின்றி உடலை வில்லாக வளைத்து சர்க்கஸில் வித்தைகாட்டும் பெண் செய்யும் சாகசங்களை முறியடிக்கவேண்டும் என்று எல்லோரும் முயற்சி செய்யகூடாது. அவரவர் தேவைக்கு அதிகமாக யாரும் யோகாசனம் செய்ய முயற்சிக்க கூடாது.    

பிராணாயாமமும் ஆசனபயிற்சியைப்போல நம் தேவைக்கு ஏற்ற அளவு மட்டுமே செய்யவேண்டும். நம் உடலையும் மனதையும் முறையாக பயிற்றுவிப்பதன் மூலம் நம்மால் அடையகூடிய சக்திக்கு ஒரு எல்லையே இல்லை. இந்த அளவில்லா சக்தியை அடைய முயற்சிப்பது மிகவும் தவறு. ஏனெனில் இது போன்ற முயற்சிகள் நம்மை வாழ்வின் குறிக்கோளான முக்தியிலிருந்து நம்மை தடம் மாற்றிவிடும்.

எனவே யோகாசனம், பிராணாயாமம் மற்றும் தியானம் ஆகிய மூன்றையும் செய்து பயிலுவதற்கு ஒரு வாரத்தில் அதிகபட்சமாக ஆறு மணிநேரத்திற்கு மேல் செலவிட கூடாது.

முடிவுரை :

மெய்யை உணர நமக்கு கிடைத்துள்ள கருவி என்பதால் மரணத்தில் மறைந்துவிடும் இந்த மனித உடலுக்கு ‘மெய்’ என்று ஆன்றோர் பெயரிட்டுள்ளனர். மெய்யை உணர இந்த உடலை நாம் பயன்படுத்தும்பொருட்டு இதை ஆரோக்கியமாகவும் வலிமைபொருந்தியதாகவும் வைத்துக்கொள்வது அவசியம். இதற்காகத்தான் ஆசனம் மற்றும் பிராணாயாமம் ஆகிய இரு படிகளை அஷ்டாங்கயோகம் வழங்கியுள்ளது. எனவே இவற்றை முக்தியடையும் சாதனங்களாக மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும்.

பயிற்சிக்காக :

1. யோகாசனம் என்றால் என்ன?

2. பிராணாயாமம் என்றால் என்ன?

3. யோகா என்ற சொல்லின் சரியான பொருள் என்ன?

4. யோகாசனம் மற்றும் பிராணாயாமம் ஆகியவற்றை எந்த அளவு செய்யவேண்டும்?

சுயசிந்தனைக்காக :

1. பதஞ்சலியின் யோக சூத்திரத்தில் விளக்கப்பட்ட கிரியா யோகம் என்பதற்கும் பரவலாக மக்களிடையே பிரபலபடுத்தபட்டிருக்கும் கிரியா யோகம் என்பதற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆய்க.

2. குண்டலினி சக்தியை பெற்று மனித குலத்தின் உயர்வுக்கு அந்த சக்தியை பயன்படுத்துவதில் என்ன தவறு?

3. யோகாசனம் மற்றும் பிராணாயாமம் ஆகியவற்றை செய்யாமலேயே முக்தியடைய முடியாதா?

4. யோகத்தை அடைய செயல் செய்ய வேண்டுமா அல்லது பரமன் யார் என்பதை புரிந்து கொள்ளவேண்டுமா?

5. சக்கரங்கள், நாடி, குண்டலினி, கிரியா யோகம், சமாதி போன்ற உத்திகளை கையாண்டு அதன்மூலம் வாழ்வில் வெற்றிபெற்றவர்கள் யார் யார்?