Monday, December 20, 2010

பாடம் 120: பரமனை அடைய தியானம் (பிரம்மசூத்திரம் 3.3.33)

பிரஹதாரண்யக உபநிஷத் மந்திரம் ஒன்று “ஓ கார்கி!, பரமனை உணர்ந்த பிராமணர்கள் இந்த நித்தியமானதை நீளமானதுமல்ல குட்டையானதுமல்ல என்று குறிப்பிடுகிறார்கள்” என்கிறது. பிடிபடமுடியாத, அறிந்துகொள்ள முடியாத அதற்கு ஜாதியும் கிடையாது, குடும்பமும் கிடையாது என்று முண்டக உபநிஷதம் கூறுகிறது. இந்த மந்திரங்களின் விளக்கமாக பரமனை அடைய தியானத்தின் பங்கு என்ன என்ற கருத்தை இந்த பாடம் விவரிக்கிறது.

பரமனுக்கு ஜாதிகிடையாது

சூத்திரனும் பரமனே. ஆகவே பரமனை அடைவது என்பதற்கு பரமன் அல்லாதவைகளை நீக்கி பரமனை அறிந்து கொள்வது என்று பொருள். அதனாலேயே பரமனை அறிந்தவர்கள் பரமனாகவே ஆகிவிடுவார்கள் என்று வேதம் கூறுகிறது. சூத்திரனாய் இருப்பவனுக்கு தான் பரமன் என்பது புரியாது. ஒளி, சக்தி, ஜடம் ஆகிய மூன்று தனிமங்களின் கலவை தனிமனிதனின் அறியும் திறனை தீர்மானிக்கிறது. படிப்படியாக வேதம் கூறும் பாதையில் பயணித்து பரமனை அறிந்து கொள்ள தடையாய் இருக்கும் சக்தி மற்றும் ஜட தனிமங்களின் ஆதிக்கத்தை குறைத்து பிராமணனாய் மாறி பரமனை அடைய வேண்டும்.

பரமனுக்கு குடும்பம் கிடையாது

மாணவப்பருவத்தில் பரமனை அறிந்து கொள்ளாமல் இல்வாழ்வை துவங்கியவர்களுக்கு ‘எதனுடனும் சம்பந்தபடாமல் அனைத்துக்கும் ஆதாரமாய் இருப்பவன் நீ’ என்ற கருத்தை வேதம் கூறுகிறது. இந்த உண்மையை புரிந்து கொள்ள முதலில் கர்மயோகம் செய்து மனத்தூய்மையை பெற்று பிறகு தியானம் செய்வதன் மூலம் மனஒருமைப்பாட்டை அடைய வேண்டும்.

வேதம் வகுத்த வழி

இருப்பதை சரியாக உபயோகபடுத்தினால்தான் இல்லாததை பெறமுடியும். எனவே மூன்று தனிமங்களின் இருப்பிற்கு ஏற்றாற்போல் சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அவர்களின் தன்மைகேற்றபடி செய்யவேண்டிய செயல்களையும் அவற்றை செய்யும்பொழுது இருக்கவேண்டிய மனப்பாங்கையும் (Attitude) வேதம் இங்கு தருகிறது.

சூத்திரர்கள்: இவர்கள் தாங்களாக முயன்று எந்த வேலையையும் செய்யாவிட்டாலும் மற்றவர்களின் தூண்டுதலின் பெயரில் வேலைகள் செய்வார்கள். அவ்வாறு செய்யும்பொழுது இவர்களுக்கு ‘நான் இதை செய்கிறேன்’ என்ற எண்ணமோ இதனால் எனக்கு என்ன நன்மை என்ற ஆராயும் தன்மையோ இருக்காது. இவர்களின் எதிர்பார்ப்பு குறைவாய் இருப்பதால் இறைவன் படியளந்தது இவ்வளவுதான் என்று கிடைப்பதை ஏற்றுக்கொள்வார்கள். தங்கள் வறுமையை பற்றியும் வாழ்வின் மற்ற துன்பங்கள் பற்றியும் இவர்கள் அவ்வளவாக புகார் செய்யமாட்டார்கள்.

பல்வேறு பூஜைகளையும், சடங்குகளையும் செய்யவேண்டும் என்கிற சம்பிரதாய பழக்க வழக்கங்கள்  மூலமாக வேதம் இவர்களை அதிக வேலை செய்ய தூண்டுகிறது. பணம் நிறைய பெற்று செல்வசெழிப்புடன் வாழ இவர்களுக்கு ஆசையை ஏற்படுத்தி அதை அடைய கடவுளுக்கு படைக்க வேண்டிய பொருள்கள் என ஒரு பெரிய பட்டியலை வேதம் கொடுக்கிறது.  கடவுளுக்கு படைப்பதை பிரசாதமாக பெற்று பழக பழக இன்னும் அதிகம் வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு ஏற்படுகிறது. வேதத்தின் கட்டளையை ஏற்று அதன் படி நடக்கும் சூத்திரர்கள் அதிகமாக உழைக்க ஆரம்பித்து அதன் விளைவாக அதிக அறிவையும் வேலை செய்யும் திறனையும் பெற்று கூடிய விரைவில் வைசியனாகிவிடுவார்கள்.

வைசியர்கள்: இவர்களுக்கு ‘நான்’ மற்றும் ‘எனது’ என்ற எண்ணங்களின் தாக்கம் மிக அதிகம். எனவே இவர்கள் தங்கள் சுயநலத்திற்காக உழைக்கும்பொழுது ‘நான் இந்த பயனுக்காக வேலை செய்கிறேன்’ என்று செய்த வேலைக்கு ஏற்ற பலன் கிடைக்கிறதா என்று கணக்கு பார்த்து வேலை செய்வார்கள். செய்த வேலையிலும் கிடைக்கும் பலனிலும் எப்பொழுதும் இவர்களுக்கு திருப்தி ஏற்படாத காரணத்தால் தங்களுக்கு மேல் ஒரு சக்தி இருப்பதை இவர்கள் உணர ஆரம்பிப்பார்கள். எனவே இவர்கள் இறை வழிபாட்டில் ஈடுபட்டு தர்ம சிந்தனையுடன் சமூகநல தொண்டுகளை செய்ய ஆரம்பிப்பார்கள்.

சுயநலத்தை விட பொதுநலம் கருதி இவர்கள் உழைக்க ஆரம்பிக்கும் பொழுது இவர்கள் சத்திரியர்களாகிவிடுவார்கள்.

சத்திரியர்கள்: நாட்டின் முன்னேற்றத்திற்கும் உலக ஒற்றுமைக்கும் பாடுபடும் இவர்கள் எவ்வளவுதான் தன்னலமின்றி உழைத்தாலும் தங்கள் உழைப்பு கடலில் கரைத்த பெருங்காயத்தைப்போல் பலனின்றி போவதை பார்க்கும் அதே நேரத்தில் உலகம் தன்னைதானே சரிபடுத்திக்கொண்டு ஒவ்வொரு வீழ்ச்சியிலிருந்தும் எழுந்து முன்னேறுவதை பார்த்து ‘நான் எதையும் செய்பவன் அல்ல. அவனன்றி ஒரு அணுவும் அசைவதில்லை’ என்ற உண்மையை உணரத்துவங்குவார்கள். அதன் பின் செயலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டுவிட்டு படிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வேதத்தை பயில ஆரம்பிக்கும்பொழுது இவர்கள் பிராமணர்களாக மாறுவார்கள். வேலை செய்வது மனதை தூய்மைபடுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் என்ற மனப்பாங்குடன் இவர்கள் பலனை எதிர்பார்க்காமல் தங்கள் முழுத்திறமையை கொடுத்து கர்மயோகமாக அனைத்து வேலைகளையும் செய்வார்கள்.

பிராமணர்கள்: மனத்தூய்மை அடைந்தபின் பரமனை அறிந்து கொள்ள வேண்டும் என்ற தீவிரத்துடன் தகுந்த ஆசிரியரின் துணையை நாடி தங்கள் வாழ்வின் மிகமுக்கியமான வேலையாக இவர்கள் வேதத்தை படிப்பார்கள். தன் எண்ணம், வாக்கு, செயல் ஆகிய மூன்றையும் பரமரகசியத்தை அறிந்து கொள்வதற்காகவன்றி வேறு எதற்கும் உபயோகபடுத்தமாட்டேன் என்று உறுதிபூணுவதற்காக உபநயனம் என்கிற சடங்கில் பூணூலில் மூன்று முடிச்சிட்டு உடலை கட்டிக்கொள்வார்கள. இந்த தீவிரத்துடன் வேதத்தை படிப்பவர்கள் நிச்சயம் பரமனை வெகு விரைவில் அறிந்து கொள்வார்கள்.

ஞானிகள்:  பரமனை அறிந்து கொண்டபின் வேதம் இவர்களை கட்டுப்படுத்தாது. இவர்களது உடல் தொடர்ந்து மூன்று தனிமங்களின் தாக்கத்தில் செயல்பட்டாலும் இவர்களது அறிவின் தரத்தால் தோன்றும் எண்ணங்களும் செய்யும் செயல்களும் கடவுளின் ஆணைப்படியே அமைந்திருக்கும். சிற்பியின் கையில் இருக்கும் உளியைப்போல கடவுளின் கையில் இருக்கும் கருவியாக மாறி உலகை செதுக்க இவர்கள் தொடர்ந்து உழைப்பார்கள்.

ஜெகசிற்பி

வெறும் கல்லை யாரும் மதிப்பது கிடையாது. ஆனால் கற்சிலை கடவுளாக வழிபடபடுகிறது. கல்லிலிருந்து சிலையை உருவாக்க புதிதாக எந்த பொருளையும் சேர்க்கவேண்டியதில்லை. சிலையல்லாத பகுதியாக தெரிபவைகளை கல்லிலிருந்து நீக்குவதால் கல்லில் ஒளிந்துள்ள சிலை வெளிப்படுகிறது.

சாதாரண மனிதனை பரமனாக மாற்ற புதிய பொருள் எதையும் சேர்க்க வேண்டியதில்லை.  பரமனை அடையாளம் கண்டுகொள்ள ஜெகசிற்பியான இறைவன் படிப்படியாக மனிதனை செதுக்கும் செயல் தொடர்ந்து பூமியில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

முடிவுரை :

மனிதனை பரமனாக மாற்ற மூன்று கட்டங்களை வேதம் வகுத்துள்ளது.

முதல் கட்டம்: கர்ம யோகம்

இன்பத்தையும் துன்பத்தையும் உலகம் நமக்கு தருகிறது என்ற அறியாமை இருக்கும் வரை மனிதன் உலகத்தை மாற்ற முயன்றுகொண்டிருப்பான். கர்மயோகம் செய்வதன் மூலம் இந்த அறியாமை நீங்கி மனிதன் மனப்பக்குவம் பெறுவான்.

இரண்டாம் கட்டம்: தியானம்(உபாசன யோகம், ராஜயோகம், அஷ்டாங்க யோகம்)

உடலாலும் வாக்காலும் செய்யவேண்டிய செயல்களை கர்மயோகமாக செய்தபின் மனிதன் தியானம் செய்ய தயாராகிறான். தியானம் மனதில் தோன்றும் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி பரமனை பற்றிய ஞானத்தை பெற மனிதனை தயார் செய்கிறது.

மூன்றாம் கட்டம்: ஞான யோகம்

கர்மயோகம் மற்றும் தியானம் ஆகிய இரு செயல்களையும் முறையாக செய்தபின் தகுந்த ஆசிரியரிடம் சரணடைந்து வேதம் படிப்பதன் மூலம் பரமனை அறிந்து பரமனாகவே மனிதன் கடைசியில் மாறிவிடுகிறான்.

பிரம்ம சூத்திரத்தின் மூன்றாவது அத்தியாயத்தின் மூன்றாவது பகுதியில் இதுவரை கர்மயோகம் பற்றியும் கர்மயோகத்தை சரியாக செய்யத்தேவையான அடிப்படை வசதிகளும் விளக்கபட்டன. இனி இந்த பகுதியில் எஞ்சியுள்ள பாடங்கள் தியானம் செய்வது எப்படி என்றும் தியானம் செய்வதற்கான அடிப்படை தேவைகள் பற்றிய விவரங்களையும் தருகின்றன.   

பயிற்சிக்காக :

1.  பரமனுக்கு ஜாதியில்லை என்ற கருத்தை விளக்குக.

2. பரமனுக்கு குடும்பம் இல்லை என்ற கருத்தை விளக்குக.

3. சமுதாயத்தின் நான்கு பிரிவினர் செய்ய வேண்டிய செயல்கள் என்ன?

4. செயல்களை செய்யும்பொழுது அவர்களுக்கு இருக்கவேண்டிய மனப்பாங்கு என்ன?

5. மனிதனை பரமனாக மாற்ற வேதம் வகுத்த மூன்று கட்டங்கள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. ஜெகசிற்பி, ஞானிகள், மக்கள் இந்த மூவருக்கும் உள்ள உறவு என்ன?

2. உபாசனயோகம் கர்மயோகத்தில் அடங்குமா?

3. பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடுவது போல எதற்காக இறைவன் மக்களை முதலில் அறியாமையுடன் படைத்து பின் படிப்படியாக அவர்களுக்கு அறிவை கொடுத்து பரமனாக மாற்ற முயல வேண்டும் ?

4. கர்மயோகத்தை செய்யத்தேவையான அடிப்படை வசதிகள் (infrastructure) என இந்தப்பாடத்தின் இறுதியில் குறிப்பிடப்பட்டவை யாவை?