முக்தியடைந்த மனிதர்களின் நிலையை சித்தரித்து அவர்களின் செயல்களால் ஏற்படும் பாபபுண்ணியங்கள் அவர்களை பந்தபடுத்தாமல் மற்றவர்களிடம் போய் சேரும் என்ற கருத்தை இந்த பாடம் விளக்குகிறது.
பாதையும் சேருமிடமும்
மாணவப்பருவம், இல்வாழ் பருவம், ஓய்வு நிலை, துறவு நிலை என்ற பாதையில் பயணித்து வாழ்க்கையின் குறிக்கோளான முக்தி நிலை என்ற சேருமிடத்தை அடையும் விதத்தை வேதம் விளக்கியது. அனைத்து மக்களும் இந்த பாதையில் பிறவிகள்தோறும் பயணம் செய்து இறுதியில் முக்தியடைகிறார்கள். சென்ற பிறவிகளில் செய்த முயற்சியின் விளைவாக ஒரு சிலர் மாணவப்பருவத்திலேயே முக்தியடைந்து விடலாம். அல்லது நேரடியாக துறவு நிலைக்கு சென்று அங்கிருந்து முக்தியடையலாம். இன்னும் சிலர் இல்வாழ் பருவத்தில் இருக்கும்பொழுது மனதளவில் உலகத்தை துறந்து வேதம் பயில நேரத்தை ஒதுக்கி முக்தியடையலாம். எஞ்சிய பலர் தங்கள் விருப்பமின்றியே ஓய்வு நிலைக்கு தள்ளப்பட்டு பின் துறவு நிலைக்கு பயணிக்கிறார்கள். இவர்களில் சிலர் துறவியாக வாழ்ந்து முக்தியடைகிறார்கள். மற்றவர்கள் மறுபிறப்பில் பயணத்தை தொடர்கிறார்கள்.
ஞானமும் முக்தியும்
பரமரகசியத்தை தெரிந்து கொண்ட மனிதர்கள் முக்தியடைகிறார்கள். துன்பங்களுக்கு காரணம் உலகப்பொருள்கள் மீது இருக்கும் பற்று. இந்த பற்று ஏற்பட காரணம் நான் யார் என்பதை அறியாமை. ஆக துன்பங்களை நீக்க, அடிப்படை காரணமான அறியாமையை நீக்கவேண்டும். ஞானத்தால் மட்டுமே அறியாமையை நீக்க முடியும். எனவே முக்தியடைய சரியான ஆசிரியரிடம் சரணடைந்து முறையாகவும் தொடர்ந்தும் வேதத்தை படிப்பது அவசியம்.
துறவு நிலையும் முக்தியும்
வாழ்வு அட்டவணையின் கடைசி கட்டமான துறவு நிலை முக்தி பெற உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டது. துறவு நிலையில் வாழ்பவர்கள் பரமனை போல வாழ்ந்தால் பரமனை பற்றி வேதம் சொல்லும் கருத்துக்களை எளிதில் புரிந்து கொண்டு பரமனாகவே ஆகிவிடும் வாய்ப்பு மிக அதிகம்.
துறவியும் பரமனும் – ஒற்றுமை 1 : கடமைகளற்றவன்
பரமனுக்கும் துறவிக்கும் எவ்வித கடமைகளும் கிடையாது. துறவி ‘நான் செய்கிறேன்’ என்ற நினைவுடன் எவ்வித செயல்களையும் செய்வது கிடையாது.
துறவியும் பரமனும் – ஒற்றுமை 2 : தொடர்பற்றவன்
பரமனும் துறவியும் உலகத்துடன் எவ்வித சம்பந்தமோ தொடர்போ இல்லாதவர்கள்.
துறவியும் பரமனும் – ஒற்றுமை 3 : ஆதாரமானவன்
இவ்வுலகத்தின் இருப்புக்கு பரமன் ஆதாரம். அதுபோல் சமூக அமைப்புக்கு ஆதாரமாக இருப்பவன் துறவி.
ஒற்றுமை 4 : எல்லோருக்கும் சொந்தமானவன்
தனிபட்ட எந்த மனிதரும் பரமனையும் துறவியையும் சொந்தம்கொண்டாட முடியாதென்றாலும் இருவரும் அனைவருக்கும் சொந்தமானவர்கள்.
ஒற்றுமை 5 : எதுவும் இல்லாமல் அனைத்தையும் உடையவர்.
தனக்கென்று எந்த பொருளையும் வைத்துக்கொள்ளாவிட்டாலும் பிரபஞ்சம் முழுவதும் தன்னுடையது என்ற உண்மை, துறவி பரமன் ஆகிய இருவருக்கும் பொருந்தும்.
துறவியும் பரமனும் – ஒற்றுமை 6 : சுதந்திரமானவன்.
குறையாத இன்பம், நிலையான பாதுகாப்பு, தடைபடாத அமைதி இவை மூன்றையும் பெற உலகம் முழுவதும் ஞானியின் மேல் சார்ந்திருந்தாலும் ஞானி பரமனைப்போல் உலகத்தை சார்ந்து இருப்பதில்லை.
உலகத்தை துறந்து வாழ்வது துறவு நிலை. இது ஞானத்தை பெற்று பரமனை பற்றிக்கொள்ள உதவும். நிலையாதவற்றின் மீது இருந்த பற்றை அகற்றி நிலையான பரமனை பற்றிக்கொள்வது துன்பம் கலவா இன்பத்தை தரும்.
ஞானியின் செயல்கள்
ஞானத்தை பெற்றபின் ஒருவருக்கு பெறவேண்டிய பொருள் என்று ஒன்று உலகத்தில் இல்லை. அடையவேண்டிய புகழ் அல்லது பெருமை போன்றவை ஏதுமில்லை. வீடுபேற்றை பெற்ற ஞானிக்கு செல்லவேண்டிய இடம் எதுவும் இல்லை. எனவே ஞானியின் செயல்களுக்கு ஒரு நோக்கம் இருப்பதில்லை. ஆகவே ஞானியின் செயல்களினால் ஏற்படும் பாவபுண்ணியங்கள் அவனை பந்தபடுத்தாது.
ஞானம் பெற்ற மறுகணமே சேர்த்து வைத்துள்ள சஞ்சித கர்மங்கள் முழுவதும் அழிந்துவிடும். பிராரப்தம் மற்றும் ஆகாமி கர்மங்களின் பலனை அனுபவித்தது போக மரணத்தின்போது எஞ்சியுள்ள கர்ம பலன்கள் ஞானியை சேர்ந்தவர்களை சென்றடையும்.
கௌஷிடகி உபநிஷத மந்திரம் ஒன்று ஞானி மறையும்பொழுது அவன் தன் பாவபுண்ணியங்களை உதிர்த்துவிட்டு போகிறான் என்றும் அவனின் பாவங்கள் அவனை தூற்றுவோர்களையும், புண்ணியங்கள் அவனை போற்றுபவர்களையும் சென்றடையும் என்றும் கூறுகிறது.
எனவே முக்தியடைந்த ஞானி இறந்தவுடன் மறுபிறப்பு எடுப்பதில்லை. பிறப்பு-இறப்பு மீண்டும் பிறப்பு என்ற சம்சார சுழலிலிருந்து விடுதலை பெற்று அவன் இறைவனுடன் ஒன்று சேர்கிறான்.
முடிவுரை :
வாழ்வு அட்டவணையின் கடைசி கட்டமான துறவு நிலையில் வாழ்பவர்கள் உலகத்துடன் எவ்வித தொடர்பும் இல்லாமல், யாரையும் சார்ந்து இருக்காமல் பரமனைப்போல் வாழ்ந்து வேதம் படித்து ஞானம் அடைந்தபின் பரமனாகவே மாறிவிடுவார்கள். இந்த முக்தியடைந்த மனிதர்களின் செயல்கள் இவர்களை பந்தபடுத்தாது. மரணத்தின்பொழுது எஞ்சியுள்ள பாவபுண்ணியங்களை உதிர்த்துவிட்டு இவர்கள் கடவுளுடன் ஒன்றிவிடுவார்கள்.
பயிற்சிக்காக :
1. முக்தியடைய வாழ்வில் கடக்கவேண்டிய பாதை யாது?
2.முக்தியடைவது என்றால் என்ன?
3.பரமனுக்கும் ஞானிக்கும் உள்ள ஆறு ஒற்றுமைகள் யாவை?
4.முக்தியடைந்தவுடன் கர்மபலன்கள் என்னவாகும்?
சுயசிந்தனைக்காக :
1. முக்தியடைந்தவர்கள் தவறு செய்யமாட்டார்களா?
2. ஞானிகள் சோம்பலாக இருப்பார்களா அல்லது சுறுசுறுப்பாக செயல் புரிவார்களா?
3. ஒரு துறவி ஞானம் பெற்றவரா அல்லது ஞானம் பெறுவதற்காக துறவு மேற்கொண்டுள்ளவரா என்பது எப்படி தெரியும்?
4. ஞானம் பெறாத துறவி மரணமடைந்தால் அவருக்கு மறுபிறவி உண்டா?