Thursday, December 2, 2010

பாடம் 113: இல்லறமே நல்லறம் (பிரம்மசூத்திரம் 3.3.24)

மாணவப்பருவத்தை கடந்ததும் இல்வாழ் பருவத்தில் நுழைய வேண்டிய அவசியத்தையும் அதில் கடைபிடிக்கவேண்டிய தர்மங்களையும் இந்த பாடம் எடுத்துரைக்கிறது.

இல்வாழ் பருவம் என்றால் என்ன?

மனிதன் தனித்து வாழத்தகுதியற்றவன். உடலின் அடிப்படையிலும் மனதின் அடிப்படையிலும் சமூகசூழலில் மற்றவர்களுடன் சேர்ந்து வாழும் வண்ணமே அவன் படைக்கப்பட்டிருக்கிறான். அவனது இன்பங்களுக்கு எப்படி மற்ற மனிதர்கள் காரணமாயிருக்கிறார்களோ அது போல அவன் துன்பத்திற்கும் மற்றவர்களே காரணாமாயிருக்கிறார்கள். கிட்ட உறவு முட்டப்பகை என்றாலும் கூட யாரும் தனித்திருக்க விரும்புவதில்லை. பிறந்தது முதல் இறக்கும் வரை மனிதன் ஏதாவது ஒரு விதத்தில் மற்றவர்களை சார்ந்தே வாழ்கிறான்.

உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் தாய், தந்தை, உடன்பிறப்புகளை உள்ளடக்கிய குடும்பம் என்பதுதான் ஆதாரம். இந்த குடும்ப பொறுப்பை யார் யார் தாங்குகிறார்களோ அவர்கள் இல்வாழ் பருவத்தில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். பணம் சம்பாதிப்பதும் குடும்பத்தை நிர்வகிப்பதும் இல்வாழ் பருவத்தில் இருப்பவர்களின் முக்கிய கடமை. வீட்டில் இருக்கும் வயதானவர்களும் மாணவப்பருவத்தில் இருப்பவர்களும் சமையல் செய்வது, பொருள்களை கடையிலிருந்து வாங்கி வருவது போன்று எவ்வளவு வேலைகள் செய்தாலும் இல்வாழ்வில் இருப்பதாக ஆகாது. மணமான தம்பதிகள் மற்றும் வாழ்க்கைத்துணையை பிரிந்த பின்னும் குடும்ப பொறுப்பை தொடர்ந்து ஏற்று நடத்துபவர்களும் இல்வாழ் பருவத்தில் இருப்பதாக கருதப்படுவார்கள். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது இல்வாழ்வு அல்ல.  

மாணவப்பருவம், ஓய்வு நிலை, துறவு நிலை என்ற வாழ்வு அட்டவணையின் மூன்று கட்டத்தில் இருப்பவர்களுக்கு பணம் சம்பாதிக்கவேண்டிய கட்டாயம் இல்லை. இவர்களின் வாழ்வுக்கு வேண்டிய அனைத்து பொருள்களையும் கொடுத்து இவர்களை காப்பாற்ற வேண்டியது இல்வாழ் பருவத்தில் இருப்பவர்களின் கடமை. இவர்கள் யாரேனும் பணம் சம்பாதித்தாலும் அந்த பணத்தை குடும்பத்தலைவரிடம் கொடுத்துவிட வேண்டும். பிள்ளைகள் பெயரில் பணத்தை வங்கியில் போடுவதோ வயதானவர்கள் தங்களுக்கென தனியாக பணம் சேர்த்து வைத்திருப்பதோ இயன்றவரை தவிர்க்கப்படவேண்டிய செயல்கள்.

குடும்பம் என்பது ஒருவரை ஒருவர் ஏதாவது ஒருவிதத்தில் சார்ந்திருக்கும் விதத்தில்தான் அமைந்திருக்க வேண்டும். கணவன் மனைவி ஆகிய இருவரும் வேலைக்கு போய் பணம் சம்பாதித்தாலும் அவர்கள் இருவரில் ஒருவர்தான் மொத்த வரவு செலவுகளுக்கு பொறுப்பேற்று குடும்பத்தின் நிதிமந்திரியாக செயல்பட வேண்டும். கணவனும் மனைவியும் குடும்பத்தின் அனைத்து பொறுப்பகளையும் தங்களுக்குள் பிரித்து கொண்டு ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்கவேண்டும்.

மனிதன் சமூகத்தில் மற்றவர்களை சார்ந்திருக்கும் அதே நேரத்தில் எப்படி எப்பொழுதும் இன்பமாக இருப்பது என்பதை கற்றுக்கொள்ளும் பயிற்சிபள்ளிதான் இல்லறம். எனவே குடும்பத்தில் உள்ள எந்த ஒரு அங்கத்தினரும் சுதந்திரமாக ஒரு விடுதியில் இருப்பதுபோல் மற்றவர்களுடன் சம்பந்தபடாமல் வாழக்கூடாது.     

இல்வாழ் பருவத்தின் ஆரம்பமும் முடிவும்

திருமணம் இல்வாழ் பருவத்தின் துவக்கம். குடும்பபொறுப்புகளை ஏற்றுக்கொள்ள அடுத்த தலைமுறை தயாரானதும் இல்வாழ் பருவம் முடிவடைந்து வாழ்வு அட்டவணையின் மூன்றாவது கட்டமான ஓய்வு நிலை துவங்க ஆரம்பித்துவிடும். தசரதன் முகக்கண்ணாடியில் நரை முடியை பார்த்ததும் இராமனுக்கு இளவரசனாக பட்டாபிஷேகம் செய்ய முடிவு செய்ததை போல பொறுப்புகளை மெதுவாக அடுத்த தலைமுறைக்கு மாற்றி தங்கள் கடமைகளை முறையாக செய்து முடித்துவிட்டு தாங்களாகவே ஓய்வெடுத்துக்கொள்ள வயதானவர்கள் முடிவு செய்ய வேண்டும்.

இல்வாழ்வின் அவசியம்

இல்வாழ்வை துவங்குவதிலும் பொறுப்புகளிலிருந்து விலகி ஓய்வெடுத்துக்கொள்ள முடிவெடுப்பதிலும் தனிமனிதனுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. வேதம் கூறும் உண்மைகளை மாணவப்பருவத்திலேயே புரிந்துகொண்டு முக்தியடைந்தவர்கள் இல்வாழ்வில் ஈடுபடவேண்டிய கட்டாயமில்லை. ஆனால் மற்றவர்களுக்கு இது மிக அவசியம். உடலுறவில் ஈடுபாடு சிறிதும் இல்லை என்ற ஒரே காரணத்தைத் தவிர வேறு எந்த காரணத்துக்காகவும் திருமணத்தை தவிர்க்க கூடாது.

மாணவப்பருவம் முடிந்ததும் நிறைய பொருள் ஈட்டி சமூக வளர்ச்சியில் பங்கேற்பது மிக அவசியமான பொறுப்பு. வாழ்வின் முக்கால் பாகத்தில் மற்றவர்களை சார்ந்திருப்பதால் இரண்டாவது கால் பாகத்தில் இல்வாழ்வில் ஈடுபட்டு பொறுப்புகளை ஏற்று நடத்துவது அனைவரின் கடமை ஆகும்.

திருமணம் செய்துகொள்ளாமல் தனியாகவே எப்பொழுதும் இன்பமாக இருக்கலாம் என்பது நிச்சயம் நடக்க முடியாத பகல் கனவு. எனவே மாணவப்பருவம் முடிந்ததும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். திருமணம் செய்யும் வரை வேலை செய்பவர்கள் தாங்கள் சம்பாதிக்கும் அனைத்தையும் குடும்பத்தலைவரிடம் கொடுத்துவிட வேண்டும். தனக்கென்று சேர்த்து வைக்க திருமணம் ஆகும்வரை யாருக்கும் அதிகாரமில்லை.

திருமணமே வேண்டாம் என்று முடிவு செய்தாலும் பெற்றோர்களுடனோ அல்லது உடன் பிறந்தவர்களுடனோ சேர்ந்து குடும்ப பொறுப்பை ஏற்றுக்கொண்டுதான் வாழவேண்டும்.

திருமணம் செய்துகொள்வது வசதியாக வாழ்வதற்காகவோ இன்பமாக வாழ்வதற்காகவோ அல்ல. எப்படி எப்பொழுதும் இன்பமாக வாழ்வது என்பதை கற்றுக்கொள்வதற்காகத்தான் வேதம் தனியாக வாழாமல் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று நம்மை நிர்பந்திக்கிறது. இல்வாழ் பருவம் நம்மை நாம் மேலும் சுத்தீகரித்துக்கொள்ள நமக்கு கொடுக்கபட்டிருக்கும் ஒரு சந்தர்ப்பம்.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயக்கபடுகின்றன. எனவே மரணம்வரை மணம் செய்தவருடன் வாழ்வது அவசியம். யாரொருவர் விவாகரத்து கோருகிறாரோ அவர் வாழ்க்கைத்தேர்வில் தோற்றுவிட்டார் என்று அர்த்தம். பரஸ்பர நம்பிக்கை, பொறுமை, சகிப்புத்தன்மை, மன்னித்து ஏற்றுக்கொள்ளும் தன்மை போன்ற குணங்கள் திருமண வாழ்வுக்கு மட்டுமின்றி பொதுவாகவே எல்லோருக்கும் அவசியம். இந்த நல்ல குணங்களை நம்மிடம் வளர்த்துக்கொள்ள  இல்லறம் ஒரு நல்ல பயிற்சி சாலையாகும்.

இல்வாழ் பருவத்தில் இருப்பவர்களின் கூடுதல் கடமைகள்

ஐம்பெரும்வேள்வி, தானம் மற்றும் தவம் ஆகியவை இல்லறத்தில் இருப்பவர்களுக்கு வேதம் விதித்திருக்கும் மேலதிக கடமைகள் ஆகும்.

ஐம்பெரும்வேள்வி 1: தினமும் ஒரு பத்து நிமிடமாவது பிரார்த்தனை செய்ய வேண்டும். எந்த கடவுள், எப்படி பிரார்த்தனை செய்வது போன்றவை அவரவரின் சம்பிரதாயப்படி அமையலாம். காலையில் நம் கடமைகளை துவங்குமுன் பிரார்த்திப்பது நலம். பிரார்த்தனைக்கென்று வீட்டில் குறிப்பிட்ட ஒரு இடத்தை ஒதுக்கி அதில் தனியாக இருந்து கடவுளிடம் பிரார்த்தனை செய்வது அவசியம்.

வாரம் ஒருமுறை குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று கடவுளை பிரார்த்திக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள இளைய தலைமுறையினருக்கு இந்த பழக்கத்தை ஏற்படுத்திகொடுப்பதும் இல்வாழ்வில் உள்ளவர்களின் கடமையாகும்.

ஐம்பெரும்வேள்வி 2: ஆன்மிக புத்தகங்களையும், வாழ்வில் முன்னேறுவது எப்படி என்பது போன்ற சுயவளர்ச்சி புத்தகங்களையும் படிக்க நேரம் ஒதுக்க வேண்டும். நல்லவர்கள், பெரியவர்கள், சான்றோர்கள் ஆகியோருடன் கூடி வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை அவர்களுடன் சேர்ந்து கலந்தாய்வு செய்தல் வேண்டும். குடும்பம் என்னும் போராட்டத்தில் அவ்வப்பொழுது ஓய்வெடுத்து சான்றோர்களின் வார்த்தைகள் மூலம் புத்தியை தீட்டிக்கொள்ளுவது அவசியம்.

ஐம்பெரும்வேள்வி 3: பெரியவர்களுக்கு பணி செய்தல் மூன்றாம் வேள்வியாகும். ஓய்வு நிலையை அடைந்த பெற்றோரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது இல்வாழ்வில் இருப்பவர்களின் தவிர்க்க முடியாத கடமையாகும். பெற்றோர்களை தவிர மற்ற வயதானவர்களுக்கும் மரியாதையுடன் தொண்டு புரிய வேண்டும்.

ஐம்பெரும்வேள்வி 4: உறவினர்கள், நண்பர்கள், நம் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்கள், செருப்பு தைத்தல், முடிவெட்டுதல் போன்ற சேவைகளை செய்பவர்கள் ஆகிய அனைவரிடமும் அன்புடனும் தயையுடனும் நடந்து கொள்ளவேண்டும். வீட்டுக்கு வரும் அனைவருக்கும் உணவளித்து உபசரிக்கவேண்டும். முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவி செய்யவேண்டும்.

ஐம்பெரும்வேள்வி 5:  மரம், செடி, கொடி போன்ற தாவரங்களை வளர்ப்பதும் ஆடு, மாடு, நாய், பூனை போன்ற மிருகங்களை கனிவுடன் பாதுகாப்பதும் பறவைகளுக்கு நீரும் ஆகாரமும் அளிப்பதும் இல்வாழ்வில் இருப்பவர்களின் கடமையாகும். அரிசி மாவினால் வீட்டுக்கு முன் கோலம் இடுவது போன்ற பாரம்பரிய பழக்கவழக்கங்களை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

தானம்: எவ்வித பிரதி உபகாரமும் எதிர்பார்க்காமல் உறவினர்கள், நண்பர்கள், முன்பின் தெரியாத ஏழைகள் ஆகியோர்க்கு பண உதவி செய்வது தானம் ஆகும். பொருள் உதவியை தவிர நேரத்தையும் உழைப்பையும் கூட தானமாக தரலாம்.

இல்வாழ்வில் இருப்பவர்களுக்கு பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு அதை செலவிடுவதும் அவசியமாகும். தானம் என்பது தன்னிடமிருந்து துவங்க வேண்டும். கணவனும் மனைவியும் தங்களது தகுதிக்கு ஏற்ற செலவுகளை செய்ய வேண்டும். இருசக்கர வாகனம் வாங்கும் அளவுக்கு வசதியிருந்தால் கடன் வாங்கி கார் வாங்ககூடாது. அதே சமயத்தில் வாகனம் எதுவும் வாங்காமல் கஞ்சத்தனமாக பேருந்தில் செல்வதும் தவறு.

பிள்ளைகளின் படிப்புக்கும் மற்ற அவசிய  தேவைகளுக்கும் வேண்டிய பணத்தை செலவு செய்யவேண்டும். அதே நேரத்தில் ஆடம்பர செலவுகள் செய்து குழந்தைகள் விரும்பியதை எல்லாம் வாங்கி கொடுக்க கூடாது. மனிதனுக்கு இயல்பாக இருக்கும் லோபம் என்னும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத குணத்தை தவிர்க்க இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் அவசியம். ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்என்றோ நாமே குழந்தை நமக்கேன் குழந்தைஎன்றோ குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்வது தவறு. வாழ்வின் வசதிகளை அதிகமாக அனுபவிக்க வேண்டும் என்ற சுயநலத்திற்காகவோ  குழந்தைகள் பணக்கார சூழ்நிலையில் வாழவேண்டும் என்ற எண்ணத்தாலோ குழந்தைகளின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ள கூடாது. மற்றவர்களுடன் பகிர்ந்து வாழ வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளும் வகையில் கூட்டுக்குடும்பத்தில் குழந்தைகளை வளர்ப்பது நன்று.   

தனக்கு மிஞ்சியதை தானம் செய்ய வேண்டும் என்பதை விட தானம் செய்யத் தேவையான அளவு சம்பாதிக்க வேண்டும் என்பது முக்கியம். குடும்பத்தின் மொத்த வருமானத்தில் ஆறில் ஒரு பகுதியை தானம் செய்ய ஒதுக்க வேண்டும்.

தினமும் வீட்டில் நாம் மட்டும் தனியாக சமைத்து சாப்பிடாமல் வேலைக்காரர்கள் போன்ற மற்றவர்களுக்கும் கொடுக்கவேண்டும் என்பதை நமக்கு நினைவுபடுத்துவதற்காகத்தான் இனிப்புகளை அனைவருடனும் பகிர்ந்து உண்ணும் தீபாவளி போன்ற பண்டிகைகளை கொண்டாடும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இல்லறத்தில் இருப்பவர்கள் பொங்கல், கார்த்திகை, கிருஷ்ண ஜெயந்தி, விநாயக சதுர்த்தி என்று எவ்வளவு பண்டிகைகள் இருக்கிறதோ அனைத்தையும் முறைப்படி கொண்டாட வேண்டும்.

தவம்: தன்னைத்தானே வருத்திக்கொள்வது தவம். வெயில் காலத்தில் சிறிது நேரம் மின்விசிறி இல்லாமல் இருப்பது, ஒரு வேளை உணவு உண்ணாமல் விரதம் இருப்பது, ஒரு நாள் பேசாமல் மௌனவிரதம் இருப்பது போன்றவை தவம் ஆகும்.

இல்வாழ்வை துவங்கும் காலத்தில் தவம் என்பதை ஒரு கடமையாக செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் திருமணம் செய்துகொள்வதே ஒரு வகையில் தவம்தான். திருமணத்திற்கு முன் சுதந்திரப்பறவையாக நினைத்தபடி வாழ்வை அனுபவித்துக்கொண்டிருப்பதை திருமணம் செய்ததற்கு பிறகு தியாகம் செய்து நம் வாழ்வுத்துணையாக வருபவருடன் சேர்ந்து இல்வாழ்க்கையில் ஈடுபடுவதே ஒரு பெரிய தவமாகும். பின் பிள்ளைகளை பெற்றவுடன் அவர்களை பேணி வளர்க்க நம்முடைய தூக்கம், உணவு உட்கொள்ளும் நேரம் ஆகியவற்றை பெருமளவு தியாகம் செய்து நம்மையறியாமல் நாம் தவம் செய்து கொண்டிருப்போம். எனவே வேதம் தவம் என்பதை இல்லற வாழ்வின் கடைசி கட்டத்தில் செய்ய வேண்டும் என்று விதித்துள்ளது. குழந்தைகள் வயதுக்கு வந்த பின் தங்களின் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக்கொள்ளும் நிலையில் பெற்றோர்கள் தவம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

கடமைகளின் நோக்கம்

இல்வாழ்வில் இருப்பவர்கள் சமூகத்திற்கு செய்யவேண்டிய கடமைகள் ஐம்பெரும் வேள்விகள் ஆகும். தானம் மற்றும் தவம் ஆகியவை இல்வாழ்வில் இருப்பவர்கள் வாழ்வின் அடுத்த கட்டமான ஓய்வு நிலைக்கு தங்களை தயார் படுத்திக்கொள்வதற்காக செய்ய வேண்டிய கடமைகள்.

முடிவுரை :

நாம் நம் வாழ்வின் குறிக்கோளை அடைய இல்வாழ்வு மிக அவசியம். தனியாக செய்ய முடியாத காரியத்தை துணையுடன் செய்வது எளிது என்பதால் வேதம் நம்மை இல்வாழ்வில் ஈடுபட்டு வாழ்க்கைத்துணையுடன் சேர்ந்து குடும்பப் பொறுப்புகளை சிறப்பாக செய்து அதன் மூலம் நம் வாழ்க்கையின் குறிக்கோளை அடையலாம் என்ற வழியை காட்டுகிறது.

இன்பமாக இருப்பதற்காக திருமணம் செய்து கொள்ளகூடாது. இன்பம் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்று தெரிந்து கொண்டவரால் மட்டுமே தானும் இன்பமாக இருந்து மற்றவருக்கும் இன்பத்தை கொடுக்க முடியும். திருமணம் என்ற பந்தத்தில் இணையும் இருவரும் மற்றவரிடமிர்ந்து இன்பம் கிடைக்கும் என்ற எதிர்பார்த்தால் ஏமாற்றம் அடைவார்கள். விவாகரத்துக்கள் நடப்பதற்கு இதுதான் முக்கிய காரணம். இன்பம் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்பதை தேடிகண்டுபிடிக்க நமக்கு உதவுபவர்தான் நம் வாழ்க்கைத்துணைவர் என்ற உண்மையை புரிந்து கொண்டால் நாம் நம் இல்வாழ்வின் கடமைகளை சரியாக நிறைவேற்றி வேதம் காட்டும் சரியான பாதையில் பயணித்து வாழ்வின் குறிக்கோளை அடையலாம்.

பயிற்சிக்காக :

1.இல்வாழ் பருவத்தில் இருப்பவர்கள் யார் யார்?

2.இல்வாழ் பருவத்தின் தொடக்கத்தையும் முடிவையும் அறிவது எப்படி?

3.ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் என்ன?

4. இல்வாழ்வில் நுழைய வேண்டிய அவசியம் என்ன?

5. இல்வாழ்வில் இருப்பவர்களின் முக்கிய கடமைகளாக குறிப்பிடப்பட்ட இரண்டு யாவை?

6. வேதம் இல்வாழ்வில் இருப்பவர்களுக்கு விதித்த ஏழு கடமைகள் யாவை?

7.இல்வாழ் பருவத்தில் செய்யவேண்டிய கடமைகளின் அடிப்படை நோக்கம் என்ன?

சுயசிந்தனைக்காக :

1.திருமண சடங்குகளில் கூறப்படும் மந்திரங்களின் பொருள்களை ஆராய்க.

2.மாணவப்பருவம் முடிந்ததும் இல்வாழ்வில் ஈடுபடாமல் துறவு மேற்கொள்ளலாமா?

3.கணவன் மனைவி ஆகிய இருவரும் வேலை செய்து தனித்தனியே பணம் சேர்க்கலாமா?

4.தனக்கு பின்னால் மனைவிக்காக பொருள் சேர்த்து வைப்பது கணவனின் கடமையா?

5. வீட்டு வேலைகள் செய்வதையும் பணம் சம்பாதிப்பதையும் கணவனும் மனைவியும் தங்களிடையே எதன் அடிப்படையில் பிரித்துக்கொள்ள வேண்டும்?