வேதத்தை கர்மகாண்டம் என்றும் ஞானகாண்டம் என்றும் இரு பகுதிகளாக பிரிப்பதன் அடிப்படையை விளக்கி இவ்விரண்டில் எந்த ஒன்றை பின்பற்றுவது என்பது அவரவரின் தகுதியையும் விருப்பத்தையும் பொறுத்தது என்று இந்த பாடம் எடுத்துரைக்கிறது.
இருபிரிவுகள்
என்ன செயல்களை செய்யவேண்டும், எப்படி வாழவேண்டும் என்று செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேதத்தின் முதல்பகுதி கர்மகாண்டம் என்றும் எதை அறிந்து கொள்ளவேண்டும் என்று கற்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பின் பகுதி வேதாந்தம் என்னும் ஞானகாண்டம் என்றும் வழக்கில் இருந்து வருகிறது. இவ்வாறு வேதத்தை இரண்டாக பிரிப்பதற்கு நான்கு அடிப்படை காரணங்கள் உள்ளன.
முதல் அடிப்படை: என்ன உள்ளது?
பழங்கால மன்னர்களின் ஆட்சியை விவரிக்கும் புத்தகத்தை சரித்திரம் என்றும் பொருள்களின் தன்மையை விளக்கும் புத்தகத்தை பௌதீகம் என்றும் பிரிப்பதுபோல இதைச்செய், அதைச்செய்யாதே என்று அறிவுறுத்தும் வேதத்தின் முதல் பகுதியை கர்மகாண்டம் என்றும் உலகம், கடவுள், வாழ்க்கை ஆகியவற்றை ஆராயும் இரண்டாம் பகுதியை ஞானகாண்டம் என்றும் பொருளடக்கத்தின் அடிப்படையில் வேதத்தை இரண்டாக பிரிக்கலாம்.
இரண்டாம் அடிப்படை: யாருக்காக?
மாணவர்கள் படிக்கவேண்டியதை பாடபுத்தகங்கள் என்றும் பாமரமக்கள் தினமும் படிப்பதை செய்திதாள்கள் என்றும் பிரிப்பதுபோல யார் படிக்கவேண்டும் என்ற அடிப்படையில் வேதம் இரண்டாக பிரிக்கபடுகிறது. ஏன், எதற்காக என்று கேள்விகள் கேட்டு கிடைக்கும் பதில் சரிதானா என்று ஆய்ந்தறியும் திறன் இல்லாதவர்களுக்கு முதல் பகுதியும் தர்க்கம், அறிவியல் மற்றும் பகுத்தறிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேதத்தின் இரண்டாம் பகுதியும் ஏற்புடையதாகும்.
மூன்றாம் அடிப்படை: எதற்காக தெரிந்து கொள்ள வேண்டும்?
சமைத்துப்பார் என்ற புத்தகத்தை படிப்பவரின் நோக்கம் அகராதியை படிப்பவரின் நோக்கத்திலிருந்து வேறுபட்டது. அதுபோல் வாழ்வின் அடுத்த குறிக்கோளை அடைய ஆசைப்படுபவர்கள் படிக்கவேண்டியது கர்மகாண்டம். வாழ்வின் இறுதியான குறிக்கோள் என்னவென்றும் அதை அடைவது எப்படி என்றும் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் கற்கவேண்டியது வேதாந்தம்.
நான்காம் அடிப்படை: எப்படி பலன் கிடைக்கும்?
கர்மகாண்டத்தில் கூறப்பட்டுள்ள அறிவுரைகளை அறிந்து கொள்வதால் மட்டும் எவ்விதபயனும் கிடைக்காது. அவற்றை வாழ்வில் கடைபிடித்தால் மட்டுமே வேண்டிய பலன்கள் கிடைக்கும். ஆனால் ஞானகாண்டத்தை படித்து அதில் உள்ள அறிவை அடைந்தால் மட்டும் போதும். எவ்வித செயல்களையும் அதற்குபின் செய்யவேண்டிய அவசியம் இல்லை. எனவே வேதாந்தம் நேரடியாக பலனை கொடுக்ககூடியது.
கர்மகாண்டம் சொல்லும் செயல்களை யாரையேனும் செய்விப்பதன் மூலம் நாம் பலனை அடையலாம். சமைத்துப்பார் என்கிற புத்தகத்தை படித்து வேறு ஒருவரை அதன்படி செயல் செய்யவைத்தால்கூட நமக்கு சாப்பாடு கிடைக்கும். ஆனால் ஞானகாண்டத்தில் உள்ள பாடங்களை நாம்தான் கற்கவேண்டும். ஆள்மாறாட்டம் செய்து கல்லூரித்தேர்வுகளில் வெற்றிபெறுவது போல் ஆசிரியருக்கு பணம் கொடுத்து அறிவை வாங்கிவிடமுடியாது.
நான்கு குறிக்கோள்கள்
உலக வாழ்வில் மனிதர்கள் அடைய ஆசைப்படும் அனைத்து தேவைகளையும் நான்கு வகைகளாக பிரித்து அவற்றை நிறைவேற்ற உதவுவது வேதம்.
முதல் குறிக்கோள்: பொருள்
உயிர்வாழ்வதற்கு அவசியமான உணவு, உடை, உறையுள் ஆகியவற்றை அடைய தேவையான பொருளை ஈட்டுவது எப்படி என்று வேதம் சொல்லித்தருகிறது. மனிதர்களை அவர்களின் குணங்களின் அடிப்படையில் பிராமணன், சத்திரியன், வைசியன் மற்றும் சூத்திரன் என்று பிரித்து ஒவ்வொருவர் செய்யவேண்டிய தொழில்களை வேதம் பரிந்துரை செய்கிறது.
இரண்டாம் குறிக்கோள்: இன்பம்
அடிப்படைத்தேவைகள் நிறைவேறியபின் ஐம்புலன்களின் ஆசைகளை அனுபவித்து உலகவாழ்வில் வசதியுடன் வாழ வேதம் மனித வாழ்வை பால்யம், குமாரம், வாலிபம், வயோதிகம் என்று நான்காக பிரித்து ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்ற வாழ்க்கை முறைகளை போதித்துள்ளது.
மூன்றாம் குறிக்கோள்: தர்மம்
இவ்வுலக இன்பம் மட்டுமின்றி இறந்ததற்குபின் சொர்க்க சுகத்தை அனுபவிப்பதற்கும் பூமியில் மறுபடி மனிதனாக பிறந்து முக்தியடைவதற்கும் புண்ணியம் அவசியம். மேலும் வாழ்வின் முதல் இரண்டு குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்ள அதர்மத்தை தவிர்ப்பது மிகவும் முக்கியம். புண்ணியத்தை பெற செய்யவேண்டிய செயல்களையும் பாவத்தை தவிர்க்க செய்யக்கூடாத செயல்களையும் வேதம் பட்டியலிட்டு தந்துள்ளது.
நான்காம் குறிக்கோள்: முக்தி (வீடுபேறு)
மீண்டும் மீண்டும் பிறந்து இன்பமும் துன்பமும் கலந்த இவ்வாழ்வில் இருந்து விடுபட்டு இறைவனடி சேரவேண்டும் என்பது மரணகாலத்தில் மக்களுக்கு ஏற்படும் ஆசை. எவ்வளவுதான் முயன்று பாடுபட்டாலும் துன்பத்தை முற்றாக தவிர்க்கமுடியாது என்பதை உணர்ந்தபின் என்றும் குறையாத இன்பமும், தடையில்லாத அமைதியும், நிரந்தரமான பாதுகாப்பும் உள்ள வாழ்வு வேண்டும் என்ற ஆசை மனிதனுக்கு ஏற்படும். இந்த இறுதி ஆசையையும் நிறைவேற்ற வேதம் மனிதனுக்கு உறுதுணையாய் இருக்கிறது.
அறம், பொருள், இன்பம் என்ற முதல் மூன்று குறிக்கோள்களை அடைய கர்மகாண்டமும் முக்தி என்ற வீடுபேற்றை அடைய ஞானகாண்டமும் மக்களுக்கு வழிகாட்டுகின்றன.
யாருக்கு எது?
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே. அவரவரின் தகுதிக்கு ஏற்பதான் ஆசைகள் உருவாகும். உருவான ஆசைகளை பூர்த்தி செய்து கொள்ள வேதம் துணைசெய்யும்.
முடிவுரை :
வாழ்வை செம்மையாக வாழ மனிதனுக்கு முழுமையாக வழிகாட்டுவது வேதம் மட்டுமே. முதலில் புலன்களின் ஆசைகளை நிறைவேற்றுவதன் மூலம் இன்பத்தை உலகத்திலிருந்து பெறலாம் என்று நினைக்கும் மனிதனுக்கு கர்மகாண்டம் வழிகாட்டுகிறது. உலகத்தை மாற்றியமைக்க முடியாது, அப்படியே மாற்றினாலும் அது நிலையான இன்பத்தை தர சக்தியற்றது என்று உணர்ந்து மாறாத பரமனை நாடி முக்தியடைய ஆசைப்படும் மனிதனுக்கு வேதாந்தம் உதவி செய்கிறது.
கர்மகாண்டத்தில் சொல்லும் செயல்களை பின்பற்றாமல் ஞானகாண்டத்திற்கு தேவையான அறிவாற்றலையும் மனப்பக்குவத்தையும் பெறமுடியாது. வேதாந்தத்தில் சொல்லும் கருத்துக்களை புரிந்து கொள்ளாமல் முக்தியடைய முடியாது. எனவே ஞானகாண்டத்திற்கு கர்மகாண்டம் அவசியம். ஞானகாண்டத்திற்கு தொடராவிட்டால் வெறும் கர்மகாண்டம் அனாவசியம்.
கர்மகாண்டத்தை முடித்துவிட்டுத்தான் ஞானகாண்டத்திற்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் தவறு. ஏனெனில் கர்மகாண்டத்தில் சொல்லப்பட்ட செயல்களுக்கு ஒரு முடிவேயில்லை. யாராலும் முழுமையாக இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம் என்ற குறையில்லாமல் எதையும் செய்து முடிக்கமுடியாது. மேலும் விமானநிலைத்தை அடையும் வரைதான் நிலத்தில் ஊறும் வாகனங்கள் தேவை. அதன் பின் அவற்றை விட்டுவிட்டு வானத்தில் பறப்பதுதான் புத்திசாலித்தனம்.
எனவே ஞானகாண்டத்தின் துணையுடன் குறைவில்லா இன்பவாழ்க்கையை விரைவில் அடைய வேண்டும். அதன்பின் தொடர்ந்து கர்மகாண்டத்தை பின்பற்றுவது அவசியமா இல்லையா என்ற கேள்விக்கு பொருள் இல்லையென்பது நான் பரமன் என்ற வேதத்தின் முடிவை அடைந்தபின் புரியும்.
பயிற்சிக்காக :
1. வேதத்தின் இரு பிரிவுகளின் பெயர்கள் என்னென்ன?
2.வேதம் எந்த நான்கு அடிப்படையில் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது?
3. மனிதர்களுக்கு வாழ்வில் இருக்கும் நான்கு குறிக்கோள்கள் யாவை?
4. வேதத்தின் எந்த பிரிவு யாருக்கு பயன்படும்?
சுயசிந்தனைக்காக :
1.வாழ்வின் இரண்டாம் குறிக்கோளான இன்பத்திற்கும் நான்காவது குறிக்கோளான முக்தியில் பெறும் இன்பத்திற்கும் என்ன வித்தியாசம்?
2. கர்மகாண்டத்தை பின்பற்றாமலேயே முக்தியடைய முடியாதா?
3. சமவெளியில் காற்று வீசும் எனத்தெரிந்துகொண்டவன் பிள்ளைகளை குறித்து வருந்துவதில்லை என்ற சாந்தோக்கிய வாக்கியத்தின் (III.15.2) பொருள் என்ன?