Wednesday, January 5, 2011

பாடம் 128: மந்திர ஜபம் (பிரம்மசூத்திரம் 3.3.43)

நம் மனதில் தோன்றும் எண்ணங்களை உபாசனயோகத்தின் மூலம் எப்படி ஒரு கட்டுக்குள் கொண்டுவருவது என்பதை இந்த பாடம் விவரிக்கிறது.

எண்ணங்களின் பொறுப்பற்ற செயல்

ஐந்து புலன்கள் மூலம் நமக்கு கிடைக்கும் தகவல்கள்தான்  எண்ணங்களாகும். பணம் கொடுக்காமல் ஒருவன் நம்மை புகழ்ந்தால் நாம் இன்பமடைகிறோம். அடிக்காமல் வெறுமே வாய்வார்த்தையாக முட்டாள் என்று திட்டினால் நாம் வருத்தமடைகிறோம். உண்மையிலேயே நாம் முட்டாளாக இருந்தால் வருத்தபட்டு பயனில்லை. அறிவாளியாக இருந்தால் வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. ஆயினும் நம் எண்ணங்கள் முறைப்படி  கட்டுப்படுத்தபடாமல் பக்குவமற்று இருப்பதால் இதுபோன்ற வசவு வார்த்தைகள் நமக்கு துன்பத்தை தருகின்றன.

நம் துன்பத்திற்கு யார் காரணம்?

உடலை அடித்து நம்மை துன்புறுத்தும் சக்தி அனைவருக்கும் உள்ளது. ஆனால் மனதளவில் நாம் துன்பமடைந்தால் அதற்கு காரணமான ஒரே ஆள் நாம் மட்டும்தான். நம்மைத்தவிர வேறு யாராலும் அல்லது எந்த பொருளாலும் நமக்கு துன்பத்தை தரவே முடியாது. கத்தியால் குத்தப்பட்டால் ரத்தம் வரும். வார்த்தைகளுக்கு அதுபோல நம் மனதை துளைக்கும் சக்தி கிடையாது. மற்றவர்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து நம்மை நாமே துன்புறுத்திக்கொண்டு பழியை அவர்கள் மீது போடுகிறோம். நம் மன வருத்தத்திற்கு நாம் மட்டும்தான் காரணம் என்பதை உணர்ந்தால்தான் மற்றவர்களை மாற்ற முயலுவதற்கு பதில் நம் மனதை மாற்ற முற்படுவோம்.

மற்றவர் நம்மை முட்டாள் என்றால் அதை கேட்டு வருத்தபடுகிறோமா இல்லையா என்பது நாம் நம் எண்ணங்களை எந்த அளவு கட்டுக்குள் வைத்திருக்கிறோம் என்பதை பொறுத்துள்ளது.
 
சலனமான மனதுள்ளவர்கள் தாங்கள் அணிந்திருக்கும் புதிய ஆடையை பார்த்து தெரிவில் போகும் யாரோ ஒருவர் முகம் சுளித்துவிட்டால் பத்து நாட்கள் தொடர்ந்து அழுவார்கள். திடமான நெஞ்சுடைய பகத்சிங் போன்றவர்கள் சிறையில் பல மாதங்கள் தொடர்ந்து பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டாலும் கலக்கமடையாமல் தெளிவான உறுதியுடன் ‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என்று முழக்கமிட்டுகொண்டிருப்பார்கள்.

எனவே துன்பங்களிலிருந்து முற்றிலுமாக மீளுவதற்கு உபாசனயோகம் மூலம் எண்ணங்களை ஒரு கட்டுக்குள் கொண்டுவருவது அவசியம்.

எண்ணங்களை கட்டுக்குள் கொண்டு வருவது எப்படி?

இந்த கேள்விக்கு பதில் தெரிந்துகொள்வதற்கு முன் எண்ணங்களை பற்றிய ஒரு உண்மையை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

எண்ணங்கள் தாமாக நம் மனதில் தோன்றுகின்றன. இது தெரியாமல் நாம்தான் எண்ணங்களை உருவாக்குகிறோம் என்று நினைத்துகொண்டு இருக்கிறோம். ‘நான் இப்பொழுது என் அலுவலக பிரச்சனையை பற்றி ஆலோசனை செய்யப் போகிறேன்’ என்று நாம் தீர்மானித்தாலும் பக்கத்து வீட்டுக்காரன் பற்றிய எண்ணங்கள் நம் மனதை ஆக்ரமிப்பதை நம்மால் தடை செய்ய முடிவதில்லை.

சுற்றுப்புற சூழ்நிலைகளும் நாம் தொடர்ந்து செய்யும் செயல்களும்தான் நம் மனதில் என்ன எண்ணங்கள் தோன்றுகின்றன என்பதை தீர்மானிக்கின்றன. எனவே நம் மனம் பெரும்பாலும் இவ்விரண்டின் கைதியாகவே இருக்கிறது.

நாம் என்ன எண்ணங்களை எண்ண வேண்டும் என்று நம்மால் நேரடையாக கட்டுப்படுத்த முடியாதென்பதால்தான் பலர் ‘இரண்டு மனம் வேண்டும், நினைத்து வாட ஒன்று, மறந்து வாழ ஒன்று’ என்று இறைவனிடம் பிரார்த்தித்து கொண்டிருக்கிறார்கள்.

உபாசனயோகத்தை முறையாக பயின்று எண்ணங்களை கட்டுக்குள் கொண்டு வந்தால் இருக்கும் ஒரு மனதை செம்மையாக்கி என்றும் இன்பமுடன் வாழலாம்.

உபாசனயோகத்தின் மூலம் எண்ணங்களை கட்டுப்படுத்துதல்

கன்றுக்குட்டி இங்குமங்கும் கட்டுப்பாடில்லாமல் ஓடுவதை ஒரேயடியாக தடுத்து அதை ஓரிடத்தில் நிறுத்திவைக்க முடியாது. அதுபோல உலகெங்கும் சுற்றித்திரியும் மனதை ஒருமுறை தியானம் செய்வதால் கட்டிப்போட்டுவிட முடியாது.

ஒரு நீளமான கயிறினால் கட்டி மனம்போனபடி எல்லா இடங்களையும் சுற்றிவந்த கன்றுகுட்டியை முதலில் ஒரு பெரிய வட்டத்துக்குள் அடைக்கலாம். பின் தொடர்ந்து கயிற்றின் நீளத்தை சுருக்கி கடைசியில் அதை ஓரிடத்தில் நிற்கவைத்து பழக்கிவிடலாம். அதுபோல மனதை படிப்படியாகத்தான் கட்டுப்படுத்த முடியும்.

இஷ்டதெய்வம், எல்லாம் வல்ல இறைவன் அல்லது எங்கும் நிறை பரப்பிரம்மன் போன்றவற்றை பொருளாக கொண்டு செய்யப்படும் தியானம் உபாசனயோகம் ஆகும். பொதுவாக கடவுள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நாட்டமில்லாதவர்களால் எடுத்தவுடன் உபாசன யோகம் செய்ய முடியாது. எனவே பழக்கப்பட்ட துறைகளில் சிறிதுகாலம் தியானம் செய்து பயின்றபின் மனதை கடவுள்மேல் திருப்புவது எளிதாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட இடத்தையும் நேரத்தையும் ஒதுக்கி தினமும் தியானம் செய்து பயிலவேண்டும். குறைந்தபட்சம் ஐந்து நிமிடத்தில் தொடங்கி படிப்படியாக தியானம் செய்யும் நேரத்தை இருபது நிமிடம் வரை  அதிகரிக்க வேண்டும். பின்வரும் நான்கு படிகள் தியானபயிற்சியை எளிதாக்கும்.

முதல் படி: விரும்பிய பொருளின் மேல் தியானம்

உலகில் நமக்கு பிடித்த நபர் அல்லது பொருளை பற்றி நினைப்பது கடினமான செயல் அல்ல. ஆனால் அதைத்தவிர வேறு எதன்மீதும் எண்ணம் செல்லாமல் பார்த்துக்கொள்வது அவ்வளவு எளிது அல்ல. அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு சமீபத்தில் பார்த்த திரைப்படத்தை பற்றி மட்டும் நினைத்துக்கொண்டிருப்பேன் என்று தீர்மானம் செய்துவிட்டு தியானத்தில் அமரவேண்டும். மனதில் ஏற்படும் எண்ணங்களின் ஓட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஓரிரு நிமிடங்களில் நம் எண்ணங்கள் திரைப்படத்தை விட்டு வெளியே வந்து நடிகையின் நிஜவாழ்வில் சஞ்சரிக்க ஆரம்பித்துவிடலாம். எப்பொழுது இது நமக்கு தெரிகிறதோ அந்தக்கணமே மனதை திரைப்படத்துக்குள் திரும்ப அழைத்துக்கொண்டு செல்ல வேண்டும்.

மனதை தேர்ந்தெடுத்த பொருளைபற்றி மட்டும் சிந்திக்க பயிற்றுவிக்க வேண்டும் என்பது இந்த படியின் நோக்கம் என்றாலும் உண்மையில் நம் எண்ணங்களின் போக்கை கண்காணிக்க நம்மை பயிற்றுவிப்பதே இந்த பயிற்சியின் உள்நோக்கம். நம் மனதில் எண்ண ஓட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை ஆரம்பத்தில் நாம் உணர்ந்தாலும் சிறிது நேரத்தில் அதை மறந்துவிட்டு எண்ண ஓட்டத்தில் ஐக்கியமாகி அதன்போக்கில் நாம் போக ஆரம்பித்துவிடுவோம்.

சுழலும் இராட்டினத்தில் எத்தனை இருக்கைகள் இருக்கின்றன என்பதை எண்ண ஆரம்பித்தவன் மூன்றாவது இருக்கையில் அமர்ந்திருக்கும் அழகியைபார்த்ததும் எண்ணிக்கையை மறந்து அவளுடன் மனதார பயணிக்க ஆரம்பித்துவிடுவதை போல நம் வீட்டு தோட்டத்தை பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை சிறிது நேரத்தில் மறந்துவிட்டு பக்கத்துவீட்டுக்காரனுடன் நேற்று நடந்த சண்டையை மனதினுள் தொடர ஆரம்பித்து விடுவோம்.   

இரண்டாம்படி: குறிப்பிட்ட வேலை மேல் தியானம்

எப்பொழுது ஒரு ஐந்து நிமிடமாவது தொடர்ந்து முதல்படியில் விளக்கப்பட்ட தியானத்தை நம்மால் செய்யமுடிகிறதோ அப்பொழுது நாம் செய்யவேண்டிய ஏதேனும் ஒரு வேலையை எப்படி செய்வது என்பதில் கவனத்தை செலுத்த ஆரம்பிக்கலாம். உதாரணமாக மனதிற்குள் கோவில்கட்டுவது அல்லது ஒரு திருமணத்தை நடத்த திட்டமிடுவது போன்ற ஒரு குறிப்பிட்ட செயலை மட்டும் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு செய்து பழகவேண்டும். இதைத்தவிர வேறு எண்ணங்கள் ஏற்படுவது குறைந்தபின் அடுத்த படிக்கு செல்லலாம்.

மூன்றாம்படி: உபாசனயோகம் (இஷ்டதெய்வம்)

கந்த புராணம், சிவபுராணம், விஷ்ணுபுராணம் போன்ற நூல்களை படிப்பதன் மூலமோ உபன்யாசங்களை கேட்பதன் மூலமோ தொடர்ந்து கடவுளை பற்றிய சிந்தனைகளை மனதில் நிலைத்துவைக்க பயிலவேண்டும். நடப்பதெல்லாம் அவன் செயல் என்ற எண்ணம் மனதில் ஊறும்வரை இந்த படியில் தொடர்ந்து தியானம் செய்ய வேண்டும்.

நான்காம்படி: உபாசனயோகம் (மந்திரம்)

அனேக எண்ணங்கள் நம் மனதில் அலைமோதுவது போல் தோன்றினாலும் உண்மையில் ஒரு கணத்தில் ஒரு எண்ணம் மட்டும்தான் நம் மனதில் இருக்கும். அந்த எண்ணம் சென்றபின்தான் அடுத்த எண்ணம் தோன்றும். முதல் எண்ணத்திற்கும் அடுத்த எண்ணத்திற்கும் எதோ ஒரு தொடர்பு இருக்கும். அல்லது வெளியுலகத்திலிருந்து நாம் பெறும் செய்திகள் அடுத்த எண்ணம் உதிப்பதற்கு காரணமாய் அமையும். எப்படியிருந்தாலும் நம் மனதில் தோன்றும் அடுத்த எண்ணம் என்ன என்பதையோ அல்லது பத்து நிமிடங்களுக்கு பிறகு நம் மனதில் என்ன எண்ணம் இருக்கும் என்பதையோ நம்மால் பொதுவாக தீர்மானிக்கமுடியாது. இந்த நிலையை மாற்றி எனது அடுத்த எண்ணம் மட்டுமில்லாமல் பத்தாவது இருபதாவது அல்லது நூறாவது எண்ணம் என்னவென்று என்னால் தீர்மானிக்க முடியும் என்ற கட்டுப்பாட்டை ஏற்படுத்துவது மந்திர ஜபம். ஓம் நமோ நாராயணா அல்லது ஓம் நமசிவாய என்ற ஒரு மந்திரத்தை திரும்பதிரும்ப ஜபிப்பதன் மூலம் கட்டுபாடற்ற மனதை ஒரு கட்டுக்குள் கொண்டுவரலாம். பத்து நிமிடங்களுக்கு பிறகும் இந்த மந்திரத்தை பற்றித்தான் நான் நினைத்துக்கொண்டிருப்பேன் என்ற தீர்மானம் செய்து பின் அதன் போல் செய்வதால் மனம் நம் விருப்பபடி நடக்கத்துவங்கும்.

மந்திரம் ஜெபித்து பழக பழக மனம் நம் கட்டுக்குள் வரும். நாளடைவில் நம்மை துன்புறுத்தும் சக்தியை நம் மனம் இழந்து விடும்.  

மன அமைதி

இரண்டு மந்திரங்களுக்கு நடுவே எவ்வித எண்ணங்களும் இல்லாமல் மனம் அமைதியாக இருப்பதை இவ்வித தியானம் செய்யஆரம்பித்த சில நாட்களில் உணரத்துவங்குவோம். மன அமைதி என்பது நமது இயற்கை சுபாவம். இடைவிடாமல் காலை முதல் இரவு வரை வெவ்வேறு செயல்கள் செய்வதன்மூலம் மனதில் நிறைய எண்ணங்களை சுமந்து தொல்லைபட்டுவிட்டு அமைதியை தேடி மேலும் செயல்களில் ஈடுபடுகிறோம். ஓசையை எழுப்ப நாம் ஏதாவது செய்யவேண்டும். அமைதியை ஏற்படுத்த நாம் எதுவும் செய்யவேண்டியதில்லை. அதுபோல அமைதியான மனதைப்பெற நாம் சும்மா இருந்தால் போதும் என்ற உண்மை தியானம் செய்து பழகியபின் நமக்கு தெரியவரும்.

தியானம் செய்யாத காலங்களிலும் மனதினுள் தொடர்ந்து இருக்கும் அமைதியை அனுபவிக்கத்தொடங்கிவிட்டோமானால் வாழ்வே ஒரு தொடர் தியானமாகிவிடும். அதன்பின் தனியாக தியானம் செய்ய நேரம் ஒதுக்க அவசியமில்லை.

முடிவுரை :

உலகம் என் துன்பத்திற்கு காரணம் என்ற எண்ணம் இருக்கும்வரை உபாசனயோகம் மூலம் மனதை செம்மையாக்க முடியாது. உலகின் நிகழ்வுகள் நம் எண்ணங்களாக மாறியபின்தான் அவற்றால் நாம் பாதிக்கப்படுகிறோம் என்ற உண்மையை அறிந்து கொண்டால் மந்திரம் ஜெபித்து மனதை செம்மைபடுத்தும் உபாசனயோகத்தை படிப்படியாக பயின்று நிரந்தர அமைதியை பெறலாம். அவ்வாறில்லாமல் கடவுள் நம் துன்பங்களை அகற்றுவார் என்ற நம்பிக்கையில் கடவுள் பெயரை ஜெபித்தால் தியானம் செய்யும்பொழுது மட்டும் மனதில் அமைதியிருப்பதுபோல் தோன்றும். தியானம் செய்து முடித்தபின் பழையபடி நம் மனது சோகத்தில் மூழ்கும்.

கடவுளை பற்றிய தியானம், வலியிலிருந்து தற்காலிக நிவாரணம் தரும் அனஸ்தீஷியா அல்ல. ஆயினும் பெரும்பாலான மக்கள் தங்கள் துன்பத்தை தற்காலிகமாக மறக்க கடவுள் பெயரை ஜெபித்துவிட்டு கண் திறந்தவுடன் துன்பம் மறைந்துவிடவேண்டும் என்ற நியாயமற்ற கோரிக்கையை இறைவன் முன் வைக்கிறார்கள். இது நிறைவேறாதபோது அந்த கடவுளை கைவிட்டுவிட்டு வேறு கடவுளை உபாசிக்க தொடங்குவார்கள். இது போன்ற மனிதர்களின் தேடல் என்றும் தொடரும்.

உபாசனயோகம் உலகத்தை மாற்ற பயன்படும் ஒரு கருவியல்ல என்பதை புரிந்து கொள்வதுதான் சரியான பாதையில் எடுத்துவைக்கும் முதல் அடி. அது மனதை செம்மை செய்து உலகில் ஏற்படும் நிகழ்வுகளை சரியான மனப்பக்குவத்துடன் அணுகி வாழ்வில் துன்பத்தை முற்றிலும் தவிர்த்து இன்பமாக வாழ வழிவகுக்கும் சாதனம் என்பதை அறிந்து மேற்குறிப்பிட்ட படிகளில் பயணித்து பயிற்சி செய்தால் முக்தியடைவது நிச்சயம்.

பயிற்சிக்காக :

1. உபாசன யோகத்தின் நோக்கம் என்ன?.

2. நம் துன்பங்களுக்கு யார் காரணம்?

3. நம் மனதில் தோன்றும் எண்ணங்களை எந்த இரண்டு தீர்மானிக்கின்றன ?

4. உபாசனயோகத்தில் தேர்ச்சி பெற கொடுக்கப்பட்ட நான்கு படிகள் யாவை?

5. மன அமைதியை பெற நாம் என்ன செய்யவேண்டும்?

சுயசிந்தனைக்காக :

1. நம் எண்ணங்களுக்கு உலகை மாற்றும் சக்தியிருக்கிறதா? (Power of positive thinking, Alpha Mind Power போன்றவை உண்மையா?)

2. கடவுளை பிரார்த்திப்பதன் மூலம் நமது துன்பங்களை போக்க முடியாதா?