Monday, November 22, 2010

பாடம் 106: செய்யும் தொழிலே தெய்வம் (பிரம்மசூத்திரம் 3.3.11-13)

மனிதர்கள் பலவிதம். அவர்களின் அறியும் திறன் வேறுபட்டது. அனைவரும் புரிந்து கொண்டு நடைமுறையில் பின்பற்றும் விதத்தில்செய்யும் தொழிலே தெய்வம்என்ற கருத்தை ஐந்து நிலைகளில் இந்த பாடம் விளக்குகிறது.

நிலை 1 : உண்டு உறங்கி இனப்பெருக்கம் செய்து உயிர்வாழ்வது

உயிர் வாழ்வதற்கு அவசியமான உணவு எப்படியாவது கிடைத்துவிடும். அதற்காக அதிகம் உழைக்க வேண்டிய அவசியமில்லை. தாங்க முடியாத குளிர் மற்றும் பனி பொழியும் இடங்களில் வாழும் மக்கள் கூட விலங்குகளின் தோலை ஆடையாகவும் இக்ளு பனிவீடுகளை கட்டிக்கொண்டும் மிகக்குறைந்த வேலைகள் செய்து வாழ்நாளை கழித்து விடலாம். ஆனால் இம்மாதிரி விலங்குகளை போல வாழ்வது மனிதனுக்கு தகாது. எனவே செய்யும் தொழிலே தெய்வம்என்று வேதம் உபதேசித்து மக்களை அதிக வேலையில் ஈடு பட தூண்டுகிறது.

இந்த நிலையில் இருக்கும் மக்கள் முதலில் கல்வி பெற வேண்டும். பொதுஜனம் என்ற போர்வையில் எவ்வித தனித்தன்மையும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு ஒரு தனிப்பட்ட அடையாளத்தை ஏற்படுத்தி கொடுப்பது கல்வி. கல்வி பெற்ற பின் எதாவது ஒரு தொழிலில் ஈடுபட்டு தனக்கென்று வாழ்வில் ஒரு குறிக்கோளை வகுத்துக்கொண்டு அதற்காக உழைக்க வேண்டும். பெரும்பான்மையான மக்கள் குழந்தைகள் நன்றாக படித்து நிறைய பொருள் சம்பாதிக்க கூடிய நிலைக்கு வரவேண்டும் என்பதை தங்கள் குறிக்கோளாக கொண்டிருக்கின்றனர். இதை தவிர தங்கள் வாழ்வில் தனக்காகவென்று ஒரு குறிக்கோளை முன்வைத்து அதற்காக உழைப்பது அவசியம்.

கல்வி மற்றும் வாழ்வில் ஒரு குறிக்கோளுடன் உழைப்பது ஆகிய இரண்டு அம்சங்கள் ஒரு மனிதனை இந்த நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு உயர்த்திவிடும்.

நிலை 2 : இன்பத்திற்கு உலகத்தை சார்ந்து இருத்தல்

அடிப்படைத்தேவைகளை தாண்டி ஒரு குறிக்கோளை அடைய உழைக்கும் பொழுது பணவரவு அதிகமாகும். சில மனிதர்கள் பணம் வர ஆரம்பித்தவுடன் குறிக்கோளை மறந்து விட்டு மனம் போன போக்கில் பணத்தை செலவு செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இந்த போக்கை தடுக்க கூட்டுக்குடும்பம், பெரியவர்களின் கண்காணிப்பு அல்லது சான்றோர்களின் அறிவுரை அவசியம். பணத்தை சம்பாதிப்பது எப்படி என்பதை விட எப்படி செலவு செய்யகூடாது என்பதை முக்கியமாக கற்றுக்கொள்ள வேண்டும்.

வேண்டிய அளவு பணம் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் வசதிகளை அதிகபடுத்திக்கொண்டு  இன்னும் பணம் வேண்டும் என்ற ஏக்கம் பொதுவாக தொடரும். கார் ஆடம்பரம் என்ற காலம் போய் இரண்டு கார்கள் அத்தியாவசியம் என்று எல்லா ஆடம்பரங்களையும் அத்தியாவசிய பொருள்களாக தொடர்ந்து மாற்றி காசேதான் கடவுளடா என்ற மனநிலை அனைவருக்கும் வந்துவிடும்.

போதிய அளவு பணம் சம்பாதிக்க முடியவில்லை என்பது இந்த நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு உயர ஒரு தடையாய் இருக்காது. தொடர்ந்து உழைத்து அறிவு மற்றும் எதையும் தாங்கும் இதயம் ஆகியவற்றை பெறுவது மட்டுமே இந்த நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு உயர தேவையான அம்சங்கள்.

நிலை 3 : நிம்மதிக்கும் இன்பத்திற்கும் கடவுளை சார்ந்து இருத்தல்

எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் போதும்என்ற நிலையை அடையவே முடியாது என்பது புரிந்தவுடன் முந்தைய நிலையிலிருந்து மக்கள் இந்த நிலைக்கு உயர்வார்கள். இதுவரை கடவுளிடம் எனக்கு இந்த பிரச்சனை தீரவேண்டும் என்று மட்டுமே பிரார்த்தித்துக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுது கடவுளிடம் எந்த பிரச்சனை வந்தாலும் அதை எதிர்கொண்டு ஏற்றுக்கொள்ளும் உறுதியான மனம் வேண்டும் என கேட்பார்கள். இன்னும் பணம் வேண்டும் என்று கேட்பதற்கு பதில் நல்ல புத்தியை கொடுக்கும் ஆசிரியரை தர வேண்டும் என பிரார்த்திப்பார்கள்.

செய்யும் தொழிலே தெய்வம் என்பதன் பொருள் இந்த நிலையில் உள்ளவர்களுக்கு பின்வருமாறு புரிய ஆரம்பிக்கும். செய்யும் அனைத்து செயல்களையும் ஆண்டவனுக்கு அர்ப்பணமாக செய்யவேண்டும் என்றும் செய்த வேலைக்கு வரும் பலன் எப்படியிருந்தாலும் அதை இறைவனின் பிரசாதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இவர்கள் புரிந்து கொண்டு அதன்படி தொடர்ந்து உழைப்பார்கள்.

வெற்றி தோல்வி ஆகிய இரண்டையும் கடவுளின் கிருபையாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்ததும் இவர்கள் அடுத்த நிலைக்கு தயாராவார்கள்.

நிலை 4 : இன்பமாக இருப்பதற்கு தன்னை மட்டும் சார்ந்து இருத்தல்

என்றும் குறையாத இன்பத்துடனும் தடையில்லாத நிம்மதியுடனும் என் வாழ்வை வாழ்வது என் கையில்தான் இருக்கிறது என்ற உறுதி ஏற்பட்டவுடன் மக்கள் இந்த நிலைக்கு முன்னேறுவார்கள். செய்த புண்ணியத்தாலும் கடவுளின் அருளாலும் தகுந்த ஆசிரியரை பெற்று இவர்கள் வேதத்தை முறையாக பயின்று கடவுளை அறிந்து கொள்ள முயல்வார்கள்.

செய்யும் தொழிலே தெய்வம் என்பது இவர்களுக்கு ஒரு புதிய பொருளைத்தரும். அதுவரை இன்னும் பணம் சம்பாதித்து வீடு வாகனம் என்று வாங்கி சமூகத்தில் ஒரு மதிப்பை பெறவேண்டும் என்பதற்காக உழைத்தவர்கள் இந்த நிலைக்கு வந்த பின் செய்யும் தொழிலை கடவுளின் செயலாக கருதி சுயநலம் ஏதுமின்றி சேவை மனப்பான்மையுடன் உழைப்பார்கள்.

தொடர்ந்து கர்மயோகம் செய்து மனதை செம்மை படுத்திக்கொள்ளும் அதே வேளையில் முறையாக வேதத்தை தகுந்த ஆசிரியரிடம் பயிலுவது இந்த நிலையில் இருப்பவர்களை அடுத்த நிலைக்கு உயர்த்தும். உலகம் நிலையான இன்பத்தை தர சக்தியற்றது என்பதை இவர்கள் புரிந்து கொண்டதால் செய்யும் தொழிலை தெய்வத்தின் செயலாக செய்வதுடன் தங்களின் முக்கிய குறிக்கோளான வேதம் பயிலுவதற்கு இவர்கள் வேண்டிய நேரத்தை செலவிடுவார்கள்.

நிலை 5 : யாரையும் சார்ந்திராமல் எப்பொழுதும் இன்பமாக இருப்பவர்கள்

வேதத்தை முறையாக கற்றுத்தேர்ந்தவுடன் ஆனந்தத்தை எங்கும் தேடவேண்டிய அவசியமில்லை என்று இவர்கள் உணர்ந்து கொண்டு என்றும் நிம்மதியாக இருப்பார்கள். மற்றவர்கள் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக உழைப்பார்கள். ஆனால் இவர்களோ ஆனந்தமாக இருப்பதால் உழைப்பார்கள்.

செய்யும் தொழிலே தெய்வம் என்ற தொடரின் இறுதியான பொருள் இவர்களுக்கு மட்டும்தான் புரியும். இருப்பது பரமன் மட்டும்தான். பரமனின் மாயா சக்தி என்றும் மாற்றமடையும் இவ்வுலகமாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து நிகழும் மாற்றத்தின் ஒரு சில பகுதிகளை தொழில் என்ற பெயரில் மக்கள் வழங்கி வருகிறார்கள். உண்மையில் தொழில்தான் தெய்வம். பரமன் மற்றும் பரமனின் சக்தியான மாயை இவ்விரண்டின் சேர்க்கைதான் கடவுள். எனவே நாம் அனைவர் செய்யும் தொழிலும் அதன் ஆதாரமான பரமனையும் சேர்த்து செய்யும் தொழிலே தெய்வம் என்று கடவுளின் உண்மை சொரூபத்தை வேதம் நமக்கு காட்டி கொடுக்கிறது.

முடிவுரை :

செய்யும் தொழிலே தெய்வம். எனவே நான் வேலை செய்தால் மட்டும் போதும், கடவுளை தொழ வேண்டிய அவசியமில்லை என்று ஒரு தவறான எண்ணம் பரவலாக இருந்து வருகிறது. கடவுள் யார் என்பதை அறிந்து கொள்ளாமல் யாராலும் தங்கள் இறுதிக்குறிக்கோளான நிலையான இன்பத்தை அடையவே முடியாது. எனவே கடவுளை அறிந்து கொள்ள தொழில் செய்வது ஒரு ஏணிப்படி என்ற உண்மையை உணர்வது அவசியம்.

செய்யும் தொழிலை தெய்வமாக கருதி வேலை செய்ய ஆரம்பித்து, பின் செய்யும் தொழிலை தெய்வத்துக்காக செய்து அதற்கு பின் செய்யும் தொழிலை தெய்வத்தின் தொழிலாக செய்து கடைசியாக செய்யும் தொழிலே தெய்வம் என்பதை புரிந்து கொண்டு அனைவரும் என்றும் இன்பமாக இருக்க வேண்டும் என்பதுதான் வேதத்தின் குறிக்கோள்.

பரமனை ஆதாரமாக கொண்டு இவ்வுலகம் இயங்கி வருவதால் இதில் நடக்கும் அனைத்து தொழில்களிலும்  இருத்தல், அறிதல் மற்றும் ஆனந்தம் ஆகிய பரமனின் மூன்று தன்மைகளும் பிரதிபலிக்கும். தொழில் செய்பவரை செய்விப்பவர் நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமேஎன்று பாடும் கடவுள். ஒவ்வொரு தொழிலும் தொழில் செய்பவரின் அறிவை தொடர்ந்து அதிகபடுத்திநான்தான் அறிவுருவான பரமன்என்ற அறிவு ஏற்படும்வரை அவருக்கு உதவுகிறது. இந்த அறிவை அடைந்தவர்கள் செய்யும் தொழிலை ஆனந்தமாக செய்வர்.

மற்றவர்கள் இந்த அறிவை அடையும் வரை செய்யும் தொழில் தெய்வம் என்பதால் அதை ஆனந்தமாக செய்யவேண்டும்.

பயிற்சிக்காக :

1.மக்களை ஐந்து நிலைகளில் இருப்பவர்களாக பிரிப்பதன் அடிப்படை என்ன?

2. இந்த ஐந்து நிலைகள் என்னென்ன? ஒவ்வொரு நிலையிலிருந்தும் அடுத்த நிலைக்கு செல்ல செய்ய வேண்டியவை என்ன என்பதை பட்டியலிடவும்.

3. செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கு எவ்வாறு பொருள் கொள்ள கூடாது?

4. செய்யும் தொழிலே தெய்வம் என்பதன் பொருளை ஐந்து நிலைகளில் உள்ள மனிதர்களின் நோக்கில் விளக்குக.

5. பரமனின் மூன்று தன்மைகள் எவ்வாறு தொழிலில் பிரதிபலிக்கின்றன.

சுயசிந்தனைக்காக :

1. ‘நான் என்ன நிலையில் இருக்கிறேன்?’ என்பதை சுய ஆய்வு செய்க.

2. முதல் நிலையிலிருந்து தொடங்கி இடைப்பட்ட அனைத்து நிலைகளையும் கடந்து கடைசி நிலைக்கு செல்ல எவ்வளவு காலம் பிடிக்கும்?