Tuesday, November 16, 2010

பாடம் 102: அனைத்து வேலைகளும் அடிப்படையில் ஒன்றே (பிரம்மசூத்திரம் 3.3.5)

மனிதர்கள் பற்பல வேலைகளில் ஈடுபட்டிருப்பதைபோல் வெளிப்பார்வைக்கு தெரிந்தாலும் அடிப்படையில் அனைத்து வேலைகளும் ஒன்றே என்ற உண்மையை நிரூபித்து அவரவர்கள் செய்யும் வேலையை சிறப்பாக செய்யவேண்டும் என்று இந்த பாடம் வலியுறுத்துகிறது.

அனைத்து மக்களும் ஏதாவது ஒரு வேலையை தொடர்ந்து செய்துவருகிறார்கள். தொழிலாளி, முதலாளி, கடைநிலை ஊழியன், உயர்மட்ட அதிகாரி, அரசாங்க அலுவலர், தெருவோர பூக்காரி, நாட்டின் ஜனாதிபதி, முடிதிருத்துபவர், மக்களவையில் மந்திரி, அறுவை சிகிச்சை நிபுணர், கசாப்புக்கடையில் வேலை செய்பவர் என பார்வைக்கு வெவ்வேறு வேலைகளை மக்கள் செய்வதுபோல தோன்றினாலும் ஒரு வேலைக்கும் மற்றொரு வேலைக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்பதை பின்வரும் காரணங்களால் அறிந்து கொள்ளலாம்.

வேலையின் நோக்கம்

அனைத்து வேலைகளை செய்பவர்களும் தங்களது தற்போதைய பொருளாதார நிலை மேலும் உயரவேண்டும் என்ற ஒரே நோக்கிலேயே செயல்படுகிறார்கள். இருப்பது போதவில்லை இன்னும் வேண்டும் என்ற மனப்பாங்கு எல்லோருக்கும் இருப்பதால்தான் அவரவர்கள் தங்கள் வேலைகளை தொடர்ந்து செய்கிறார்கள்.

போதும் என்ற நிலை வந்ததும் வேலையிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு கவலையில்லாமல் நிம்மதியாக வாழவேண்டும் என்ற ஆசை ஏறக்குறைய எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் போதும் என்ற நிலை யாருக்கும் வருவதேயில்லை. வயதானபின் வேறு வழியில்லாமல் பெரும்பாலோர் கட்டாய ஓய்வு பெறுகிறார்கள். இருந்த இடத்திலேயே இருப்பதற்கு கூட தொடர்ந்து ஓட வேண்டிய கட்டாயம் இருப்பதால் வேலை செய்ததன் நோக்கம் நிறைவேறாமலேயே பலர் வேலை செய்வதை நிறுத்திக்கொள்கிறார்கள்.

வேலையில் நிறைவின்மை

இரண்டுவித நிறைவின்மை வேலை செய்யும் அனைத்து மக்களிடமும் எப்பொழுதும் இருக்கும். ஒன்று: செய்து முடித்த வேலையில் முழுதிருப்தியின்மை. இதைவிட இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம் என்ற எண்ணம் எந்த ஒரு வேலையை செய்து முடித்தபின்னும் ஏற்படும். இரண்டு: செய்த வேலையின் பலன் இன்னும் கொஞ்சம் அதிகமாக இருந்திருக்கலாம் என்ற ஏக்கம். தான் செலவிட்ட நேரம் உழைப்பு ஆகியவற்றை ஒப்பிட்டால் கிடைத்த பலன் குறைவாகவே இருப்பதாக அனைவரும் நினைப்பர்.

இந்த நிறைவின்மை அனைத்து வேலைகளுக்கும் பொதுவானது.

வேலையில் முக்கியத்துவம்

ஒரு சங்கீத கச்சேரி நன்றாக நடக்க வேண்டுமென்றால் பாடகர் மட்டுமில்லாமல் அனைத்து பக்கவாத்தியக்காரர்களும் ஒலி அமைப்பாளர்கள் அரங்க நிர்வாகிகள் போன்று மேடைக்கு பின்னிருந்து செயலாற்றுபவர்கள் அனைவரும் தங்கள் வேலையை சரியாக செய்யவேண்டும். எனவே அனைத்து வேலைகளும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை.

விமானத்தை பராமரிக்கும் கடைநிலை பொறியாளன் தன் வேலையை சரியாக செய்யவில்லையென்றால் விமானம் பாதிவழியில் வெடித்து சிதறிவிடும். எனவே விமானத்தை ஓட்டும் பைலட்தான் அனைவரைவிட முக்கியமானவர் என்ற கருத்து தவறு.
இது உயர்ந்தது அது தாழ்ந்தது என்று எவ்வித பேதமும் இல்லாமல் அனைத்து வேலைகளும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை. கென்னடி நாஸா (NASA)வில் வேலை பார்க்கும் ஒருவரிடம் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டதற்குபத்து வருடங்களில் மனிதனை நிலவுக்கு அனுப்புவேன் என்று நீங்கள் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்ற இந்த இடத்தை துப்புரவாக வைத்து கொள்ளும் பணியை செய்து வருகிறன்என்றார் அந்த பெருக்கி துடைக்கும் ஊழியர்.

வேலையில் சமத்துவம்

எந்த ஒரு வேலையையும் செய்யாமல் நிறுத்திவிட்டால் குடிமுழுகிவிடாது. எல்லா வேலைகளும் அத்தியாவசிய வேலைகள் அல்லது எதுவுமே அவசியமில்லை. தாமஸ் ஆல்வா எடிசன் மின்சாரத்தை கண்டுபிடிக்காமல் விட்டிருந்தால் பொது மக்கள் இன்னும் பல வருடங்களுக்கு எண்ணை விளக்கு வெளிச்சத்தில் இரவை கழித்திருப்பார்கள். கற்காலத்திலிருந்து தற்காலத்துக்கு வர நாம் எடுத்துக்கொண்ட காலம் இன்னும் சில நூறு வருடங்கள் தாமதம் ஆவதால் யாருக்கும் ஒரு நஷ்டமும் இல்லை.

ஒரு நாள் வேலை நிறுத்தத்தால் இத்தனை கோடி ரூபாய் நஷ்டம் என்பது போன்ற செய்திகள் வெறும் புள்ளிவிவரங்களே தவிர உண்மையில் யாரும் எந்த பாதிப்புக்கும் ஆளாவதில்லை.

மருத்துவ துறையின் முன்னேற்றத்தாலேயே இன்று பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கபட்டு சராசரி ஆயுள் அதிகமாகியிருக்கிறது என்பதும் ஒரு புள்ளி விவரமே. உண்மையில் நாம் ஒவ்வொருவரும் எவ்வளவு நாட்கள் உயிர் வாழ்வோம் என்பதும் ஆரோக்கியமாய் இருப்போமா இல்லையா என்பதும் நமது செயல்களின் விளைவான பாவபுண்ணியங்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது.

வேலைகளின் உள்நோக்கம்

எதற்காக வேலை செய்கிறீர்கள் என்ற கேள்வியை கேட்டால் பணம் சம்பாதிப்பதற்காக, குடும்பத்தை காப்பதற்காக, மனநிம்மதிக்காக, புகழுக்காக என பலரும் பல்வேறு பதில்களை கூறலாம். ஆனால் இவையனைத்தும் தவறான பதில்கள். உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் வேலை செய்வதன் ஒரே நோக்கம் குறைவில்லாத இன்பத்துடனும் நிரந்தரமான பாதுகாப்புடனும் எவ்வித தடையும் இல்லாத நிம்மதியுடனும் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்பதே. இந்த உள்நோக்கம் நிறைவேற நான்கு படிகள் உள்ள ஓர் ஏணியாக அனைத்து வேலைகளும் பயன்படுகின்றன.

முதலாம் படி: வேலையில் ஆர்வம்

முதலில் எல்லோரும் வேலைக்கு சென்று பணம் சம்பாதிப்பதுபோல் நாமும் சம்பாதிக்கலாமே என்று வேலை செய்ய ஆரம்பித்தாலும் நாளடைவில் வேலையில் ஒரு பிடிப்பு ஏற்பட்டுவிடும். ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தமான துறையில் மென்மேலும் முன்னேறவேண்டும் என்று நினைக்க ஆரம்பிப்பார்கள். தெருவோரம் தள்ளுவண்டியில் இட்லி,வடை செய்து விற்பவர் ஒரு சிறிய உணவு விடுதி ஆரம்பிக்கவேண்டும் என்று கனவு காணுவார்.

இரண்டாம் படி: சுயமுன்னேற்றம் (Self development)   

காணும் கனவை நனவாக்க கடின உழைப்பு, தொழில் நுணுக்கங்களை கற்று தேர்தல், அனைவருடனும் நல்ல முறையில் பழகி நற்பெயரெடுத்தல் போன்ற முயற்சிகளில் வாழ்க்கையில் வெற்றி பெற நினைக்கும் அனைவரும் ஈடுபடுவர்.

இந்த முயற்சிகள் ஒருவரின் ஆளுமையை (Personality) வெகுவாக உயர்த்திவிடும். மேலும் ஒருவரது அறிவுத்திறன் அதிகரித்து அனைத்தையும் தீர்க்கமாக ஆராய்ந்து உண்மையை உணரும் திறமையும் அதிகரிக்கும்.

மூன்றாம் படி: சுய ஆய்வு (Self-reflection)

பகுத்தறிவு கூர்மையானவுடன்தான் நாம் என்ன செய்கிறோம், வாழ்வில் நம் உண்மையான குறிக்கோள் என்ன, தற்போழுது பயணித்துக்கொண்டிருக்கும் திசை சரிதானா என்ற கேள்விகள் மனதில் தோன்றும். இதுவரை மந்தையில் ஆடுகள் போல எல்லோரும் வேகமாக ஓடுகிறார்களே என்று தானும் பைத்தியகாரத்தனமாக ஓடாமல் ஏன் ஓடுகிறோம் என்று நிதானமாக யோசிக்க நேரம் கிடைக்கும். இந்த படிக்கட்டிலிருந்து அடுத்த படிக்கு செல்ல ஒரு குருவின் துணை தேவை. அவரவர்கள் தங்கள் தகுதிக்கு ஏற்ற குருவை பெற்று அவர் காட்டிய வழியில் வாழ்வெனும் பயணத்தை தொடருவார்கள்.

நான்காம் படி: மனப்பக்குவம்

நாம் செய்யும் வேலையில் எவ்வளவு தூரம் முன்னேறினாலும் நமது குறிக்கோளான குறையாத இன்பத்தை அடையவே முடியாது என்ற தெளிவு கர்மயோகம் செய்வதனால் ஏற்படும். பொருளாதார அடிப்படையில் கிடைக்கும் முன்னேற்றத்திற்கு ஒரு முடிவேயில்லை என்றும் அது எப்பொழுதும் ஒரு நிறைவை தராது என்றும் தெரிய வரும்.

இந்த மனபக்குவத்தை பெறுவதற்கு இந்த ஒரு குறிப்பிட்ட வேலையைத்தான் செய்யவேண்டும் என்ற கட்டாயமில்லை. உலகில் உள்ள எந்த வேலையானாலும் அதன் இறுதிப்பயன் இந்த மனப்பக்குவத்தை தருவதுதான்.

ஆன்மீக பயணம்

ஆன்மீக பாதை மட்டுமே நமக்கு நமது வாழ்வின் குறிக்கோளை அடைய உதவும் என்ற மனப்பக்குவம் வேலை செய்வதன் மூலம் மட்டுமே ஏற்படும். மேலும் இரண்டாம் படிக்கட்டில் நமக்கு கிடைக்கும் கூரிய பகுத்தறிவும் வேலை செய்வதன் மூலம்தான் கிடைக்கும். இந்த மனபக்குவமும் கூரிய பகுத்தறிவும் உள்ளவர்களால் மட்டுமே வேதத்தை பயின்று பரமனை அறிந்து கொள்ள முடியும்.

பரமனை அறிந்துகொள்வதுதான் குறைவில்லாத இன்பத்தை அடைவது.

முடிவுரை :

உலகில் மனிதர்கள் வேலை செய்வதால் ஏற்படும் பயன்கள் அவரவர் பார்வையை பொறுத்தது. ஆயிரம் ரூபாய் என்பது அதிகமா குறைவா என்று பொதுவாக கேள்வி கேட்கமுடியாது. அவரவர்கள் தங்களது தற்போதைய நிலையில் திருப்தி கொள்ளாமல் இன்னும் வேண்டும் என்று முயன்று கொண்டிருப்பது மனித இனத்தின் இயல்பு. எல்லோரும் வாழ்வின் குறிக்கோளை அடைய முயன்று கொண்டிருப்பதால் அனைவர் செய்யும் வேலைகளும் அடிப்படையில் ஒன்றே.

ஒரு பத்து ரூபாய் கிடைக்குமா என்று எதிர்பார்க்கும் கூலி வேலை செய்பவனின் ஏக்கம் பத்து கோடி ரூபாய் கிடைக்குமா என்று எதிர்பார்க்கும் தொழிலதிபரின் ஏக்கத்திலிருந்து எவ்விதத்திலும் உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல. இரண்டும் ஒன்றுதான்.

அனைத்து வேலைகளும் ஆன்மீக பயணத்தை தொடங்க உதவும் ஆரம்ப படிக்கட்டுகள். இதில் பணக்காரர்கள், ஏழைகள், மந்திரிவேலை, மயானத்தில் வேலை என்ற பாகுபாடு இல்லை. எந்த வேலை செய்தாலும் எவ்வளவு சீக்கிரம் நாம் மனபக்குவம் பெறுகிறோம் என்பது அவரவருடைய சுயமுயற்சியில் இருக்கிறதே தவிர வேலையை பொறுத்து அது மாறுவதில்லை.

எந்த வேலை செய்தாலும்  வேலையில் ஆர்வத்துடன் வேலை செய்து நமது ஆளுமையை உயர்த்திக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.

பயிற்சிக்காக :

1.வேலை செய்வதன் நோக்கம் என்ன?

2.வேலை செய்பவர்களின் நிறைவின்மைக்கு காரணம் என்ன?

3.வேலையில் முக்கியத்துவம் மற்றும் சமத்துவம் ஆகிய இரண்டு கருத்துகளிடையே உள்ள வேறுபாடு என்ன?

4.வேலை செய்வதன் உள்நோக்கம் என்ன?

5.வேலை என்ற ஏணியில் உள்ள நான்கு படிக்கட்டுகள் யாவை?

6.ஆன்மீக பயணத்தின் அவசியமென்ன?.


சுயசிந்தனைக்காக :

1.ஆன்மீக பயணத்தை ஆரம்பித்ததும் வேலை செய்வதை நிறுத்திவிட வேண்டுமா?

2.வாழ்வின் குறிக்கோளை அடைந்தவர்கள் வேலை செய்வதில்லையா?

3.மனபக்குவத்தையும் புத்திகூர்மையும் தவிர வேலை செய்வதால் ஏற்படும் பயன் ஒன்றுமேயில்லையா?

4. எல்லா வேலைகளும் அடிப்படையில் ஒன்று என்பதால் எந்த வேலையில் அதிக சம்பளம் கிடைக்கிறதோ அந்த வேலையை செய்வது புத்திசாலித்தனம் அல்லவா?

5. பரமனை அறிந்து கொள்ள தேவையான கூரிய அறிவை அடைய எல்லா வேலைகளும் சமமாக உதவுவது இல்லை. அப்படியிருக்க எல்லா வேலைகளும் அடிப்படையில் ஒன்றுதான் என்று எப்படி கூற முடியும்?