Thursday, November 25, 2010

பாடம் 108:நீயே அது (பிரம்மசூத்திரம்3.3.16-17)


அயித்ரேய உபநிஷதம் உன்னைத்தவிர வேறு ஒன்றுமில்லைஎன்ற மந்திரத்துடன் ஆரம்பிக்கிறது.  அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று கூறிய அதே வேதம் உன் வாழ்வுக்கு நீ மட்டும்தான் பொறுப்பு என்று கூறுவது முன்னுக்கு பின் முரணாக தெரிந்தாலும் இவ்விரு வாக்கியங்களும் எவ்வாறு ஒரே சமயத்தில் உண்மையாக இருக்க முடியும் என்பதை இந்த பாடம் விளக்கி நம்மை செயல் செய்ய தூண்டுகிறது.

விதியை மதியால் வெல்லலாம்

நமக்கு ஏற்படும் நன்மை தீமைகளுக்கு நாம் செய்த பாவ புண்ணியங்கள் மட்டுமே காரணம் என்றும் கடவுளாலோ ஜோதிடர்கள் போன்ற வல்லுனர்களாலோ இதை மாற்றியமைக்க முடியாது என்றும் படித்தோம். இது உண்மையானால் விதியை மதியால் வெல்லலாம் என்ற கூற்று பொய்யாய் இருக்க வேண்டும். ஆனால் அதுவும் உண்மையே.

நமது பாவ புண்ணியங்களுக்கு நாம் எவ்வித மனிதர்களையும் சூழ்நிலைகளையும் சந்திக்கிறோம் என்பதை தீர்மானிக்கும் சக்தி மட்டும்தான் இருக்கிறது. வாழ்வில் நிகழும் நிகழ்வுகளால் நாம் இன்பமடைகிறோமா அல்லது துன்பமடைகிறோமா என்பது நம் அறிவின் முதிர்ச்சியை பொருத்து நிர்ணயம் செய்யப்படும்.

உதாரணமாக நாம் ஒரு பணக்காரவீட்டில் பிறந்ததற்கு காரணம் நாம் செய்த புண்ணியம். ஆனால் பணம் இருப்பதால் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயமில்லாமல் வேண்டாத கெட்ட பழக்கங்களை ஏற்படுத்திக்கொண்டு துன்பபடுவது நமது அறிவின் குறைவால் ஏற்படும் விளைவு. புண்ணியத்திற்கு நம்மை இன்பத்தில் ஆழ்த்தும் சக்தி கிடையாது. அதே போல் நாம் செய்த பாவம் நமது வேலையை பறிக்கலாமே தவிர அதனால் நாம் துன்பபடவேண்டும் என்று நம்மை கட்டாயபடுத்த முடியாது.

ஒரு நிகழ்ச்சியை நாம் எப்படி பார்க்கிறோம் என்பது நமது அறிவின் திறத்தை பொருத்தது. அறிவில் குறைந்தவர்கள் அதிகமாக துன்பபடுவர். அறிவு அதிகமாக அதிகமாக துன்பம் தரும் நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றை வெற்றியின் படிக்கட்டுகளாக ஏற்றுக்கொண்டு வாழ்வில் முன்னேற முடியும். வேதம் கூறும் பரமனை பற்றிய அறிவை பெற்று விட்டால் நமது விதிவசத்தால் வாழ்வில் நேரும் ஏற்ற இறக்கங்களை பொருட்படுத்தாமல் வாழ்நாழ் முழுவதும் இன்பமாக இருக்கலாம். எனவே விதியை மதியால் வெல்லலாம் என்பது முற்றிலும் உண்மை.

பிரம்மன் என் தலையில் இதை அனுபவிக்க வேண்டும் என்று எழுதியதை அழிக்கவே முடியாது என்பது உண்மை. ஆனால் என்ன எழுத வேண்டும் என்று தீர்மானித்தது பிரம்மன் அல்ல, நாம்தான். எனவே நமது எதிர்காலத்தில் நடக்கப்போகிற நிகழ்வுகள் எப்படியிருக்க வேண்டும் என்று தீர்மானித்து அதற்கேற்றவாறு நமது விதியை பொறுப்பாக நாம் எழுதவேண்டும். அதே சமயத்தில் தொடர்ந்து செயல்கள் செய்வதன் மூலம் அறிவை வளர்த்துக்கொண்டு பரமனை அறிந்து கொண்டால் அனைத்து கர்ம வினைகளையும் அழித்துவிட்டு இனி பிறவா வரத்தை பெறலாம்.

எனவே நம் எதிர்காலத்துக்கு நாம் மட்டும்தான் பொறுப்பு.

எல்லாம் அவன் செயல் என்பதன் பொருள் என்ன?

செய்யும் செயல்களுக்கு நான் காரணமா அல்லது கடவுள் காரணமா என்ற கேள்விக்கு பதில் அவரவரின் அறியும் திறனை பொருத்து மாறும். உதாரணமாக பௌர்ணமி இரவில் பூமிக்கு வெளிச்சம் சந்திரனிடமிருந்து வருகிறதா அல்லது சூரியனிடமிருந்து வருகிறதா என்று கேட்டால் அதற்கு பதில் யார் இந்த கேள்வியை கேட்கிறார்கள் என்பதை பொருத்து மாறுபடும். இருப்பது சூரிய வெளிச்சம் ஒன்றுதான். அதுதான் நிலவில் பிரதிபலிக்கப்பட்டு பௌர்ணமி இரவை பிரகாசபடுத்துகிறது. ஆனால் இரவில் இருக்கும் வெளிச்சம் சூரியனின் வெளிச்சம் என்று கூறி சிறுவர்களை குழப்பக்கூடாது.

முதல் நிலைநீ மட்டும்தான் காரணம்

எல்லாம் என்னால்தான் என்ற மனநிலை ஆரம்பத்தில் இல்லாவிட்டால் மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்று உணவுகிடைக்கும்பொழுது உண்டு வேலை செய்ய யாரேனும் கட்டாயபடுத்தினால் வேண்டா வெறுப்பாக வேலை செய்து விட்டு மற்ற நேரங்களில் தூங்கும் சர்க்கஸில் இருக்கும் மிருகங்கள் போல் மனிதர்கள் வாழ்வார்கள்.

தன் கையே தனக்கு உதவி என்று நம்பி இவர்கள் தானாக வேலைகளை எடுத்துக்கொண்டு செய்யாவிட்டால் இவர்களுக்கு விமோசனமே கிடையாது. தொடர்ந்து வேலை செய்வதன் மூலம் தான் இவர்களது அறிவுத்திறன் வளரும். வேலை செய்யாமல் எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான் என்று சோம்பித்திரிந்தால் வாழ்வில் மாறி மாறி ஏற்படும் இன்ப துன்பங்களில் அலைக்கழிக்கப்பட்டு வாழ்வே இவர்களுக்கு ஒரு சுமையாக மாறிவிடும்.

எனவே இவர்களை பொருத்தவரைஉன் வாழ்வுக்கு நீ மட்டும் தான் பொறுப்புஎன்பது மட்டுமே சரியான பதில்.

இரண்டாம் நிலைகடவுள் மட்டும்தான் காரணம்

முதல் நிலையை கடந்து எப்பொழுதும் எறும்பு போல் சுறுசுறுப்பாக உழைத்து நாளில் உள்ள இருபத்திநாலு மணி நேரம் போதவில்லை என்பவர்களுக்கு வேதம் சொல்லும் உண்மை உன்னால் ஒன்றும் செய்துவிடமுடியாது. அனைத்தும் அவன் செயல் என்பது இவர்களுக்கு தரவேண்டிய சரியான பதில்.

ஏதோ ஒரு ஐந்து நிமிடம் தாமதமாகிவிட்டால் உலகம் நின்றுபோய்விடும் என்று கால் தரையில் படாமல் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டு ஓயாமல் காதில் ஒட்டிக்கொண்டிருக்கும் தொலைபேசி கருவியில் பேசிக்கொண்டு இருப்பவர்களுக்கு தாம் எதற்காக இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம் என்று யோசிக்க நேரம் இருக்காது. இவர்கள் தாங்கள் என்றும் இன்பமாக இருக்கவே வேலை செய்ய ஆரம்பித்தோம் என்பதை சுத்தமாக மறந்திருப்பார்கள்.

இவர்களுக்கு அனைத்து செயல்களும் அவன் அருளால் மட்டுமே நிகழ்கிறது என்று கடவுளை வேதம் அறிமுக படுத்துகிறது. எப்பொழுது இயந்திர மயமான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு வேதத்தின் இந்த அறிவுரையை மக்கள் கேட்கிறார்களோ அப்பொழுது பொருள் சம்பாதிக்கும் வேகத்தை சற்று குறைத்துக் கொண்டு வேதம் படிக்க சில நேரத்தை ஒதுக்குவார்கள்.

மூன்றாம் நிலைநீயே அது

வேதத்தை குருவிடம் முறையாக கற்றுத்தேர்ந்தவர்கள் வெளிச்சம் சூரியனிடமிருந்து வருகிறதா சந்திரனிடமிருந்து வருகிறதா என்ற பட்டி மன்றத்தில் என்ன தீர்ப்பு சொல்லப்போகிறார்கள் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். ஏனெனில் கடவுள் யார் மனிதன் யார் என்பதன் அடிப்படைகளை கற்றுத்தேர்ந்ததால் இரண்டும் ஒன்று என்பதை இவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.

நான் வேறு என் உடைமைகள் வேறு என்பது இவர்களுக்கு தெரியும். உடைமைகள் என்றும் மாறிக்கொண்டே இருக்கும். மாறத நான் என்றும் இருக்கும் இன்ப மயமான பரமன் என்பதை இவர்கள் உணர்வார்கள். கடவுள் என்பவன் பிரபஞ்சமுழுவதையும் தன் உடலாக கொண்டிருப்பவன்.கடவுளின் உடைமைகளை களைந்தால் அவனும் பரமனிடமிருந்து வேறுபட்டவனல்ல என்பதால் நீயே அது என்று வேதம் சொல்லும் உண்மையை புரிந்து கொள்ள முடியும்.

முடிவுரை :

செயல் தவிர்க்கப்பட முடியாதது. அறிவின் திறன் எப்படியிருந்தாலும் யார் எந்த நிலையில் இருந்தாலும் அனைவரும் எப்பொழுதும் ஏதாவது வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள். என்ன வேலை செய்கிறார்கள் என்பதும் அதை எப்படி செய்கிறார்கள் என்பதும் அவரவரின் அறிவின் தரத்தை பொருத்து அமையும்.

முதல் நிலையில் இருப்பவர்கள் என்னால் தான் எல்லாம் நடக்கிறது என்று அதிகமாக உழைக்க வேண்டும்.

இரண்டாம் நிலையில் இருப்பவர்கள் தங்களின் நேரத்தில் ஒரு பகுதியை கடவுளை பற்றி வேதம் கூறும் உண்மைகளை அறிந்து கொள்ள செலவிடவேண்டும்.

மூன்றாம் நிலையில் இருப்பவர்கள் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் காற்று நுழைந்து கானமாக வெளிவரும் புல்லாங்குழல் போல இறைவனின் கையில் உள்ள உபகரணங்களாக கடவுளின் செயல்களை செய்து கொண்டிருப்பார்கள்.

பயிற்சிக்காக :

1. விதியை மதியால் வெல்லலாம் என்பதன் பொருள் என்ன?

2. மீண்டும் பிறவா வரத்தை பெறுவது எப்படி?

3. செயல் செய்வது மனிதனா கடவுளா என்பதற்கு மூன்று நிலைகளில் பதில் அளிக்கவும்.

சுயசிந்தனைக்காக :

1.நாம் செய்யும் செயல்களை எவ்வாறு கடவுள் செய்யும் செயலாக சொல்ல முடியும்? நான் கத்தியை எடுத்து பக்கத்துவீட்டுக்காரனை குத்தினால் அதற்கு கடவுள் எப்படி காரணமாவார்?

2. உற்பத்தி திறனை அதிகபடுத்தி செய்யும் அனைத்து செயல்களையும் வேகமாக செய்ய வேண்டும் என்று வாழ்வில் முன்னேற உழைக்கும் அனைவரிடமும் உள்ள துடிப்பு தவறானதா?

3. சூரியன் சந்திரன் என்று இரண்டு பொருள்கள் இருக்கும்பொழுது சூரியனே சந்திரன் என்று எப்படி கூற முடியாதோ அதுபோல கடவுள் மனிதன் என்று இருவர் இருக்கும்பொழுது நீயே அதுஎன்று எப்படி கூற முடியும்?