Monday, March 8, 2010

பாடம் 027: அனைவராலும் அறியமுடியாதவன் பரமன் (பிரம்ம சூத்திரம் 1.3.34-38)

பரமன் அனைவராலும் அறியத்தக்கவன் என்றாலும், எல்லோராலும் இந்த பிறவியிலேயே பரமனை அறிந்து கொள்வது என்பது முடியாது. ஒரு சிலருக்கு முயன்றால் எளிமையாக அடையகூடிய பரமன் மிகப்பலருக்கு எட்டா கனியாக இருப்பதன் காரணத்தை இந்த பாடம் விளக்குகிறது.

செயல் செய்வதும் அறிவை பெறுவதும்

நாட்டில் உள்ள அனைத்து ஏழை மக்களையும் வறுமை கொடுமையிலிருந்து மீட்டு அனைவருக்கும் உண்ண உணவும் உடுக்க உடையும் தங்க இடமும் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்பது நடக்க முடியாத கனவல்ல. ஒருவரால் உழைக்க முடியவில்லையென்றால் மற்றொருவரின் உழைப்பின் பலனை அவருக்கு கொடுக்க முடியும். வறுமையை ஒழிப்பது என்பது செயல் செய்வதன் மூலம் நிறைவேறக்கூடிய ஒரு நோக்கம். எனவே திறமை வாய்ந்தவர்களின் உழைப்பின் பலனை எல்லோரும் பகிர்ந்து கொள்வதன் மூலம் உழைக்காதவர்கள் கூட வறுமையில் வாட வேண்டிய அவசியமில்லாத நிலையை ஏற்படுத்துவது சாத்தியம்.

ஆனால் அறிவை பெறுவது என்பது ஒரு செயலை செய்வதால் நடந்து விடாது. நாட்டில் உள்ள அனைவருக்கும் எழுத்தறிவு கொடுக்க வேண்டும் என்பது நடக்க முடியாத காரியம். எவ்வளவுதான் முயன்றாலும் ஒரு சிலரால் சொல்லிக்கொடுப்பதை புரிந்து கொள்ள முடியாது. எவ்வளவு எளிமையாக பாடத்தை நடத்தினாலும் எவ்வளவு கடுமையாக அவர்களை பயிற்சியில் ஈடுபடுத்தினாலும் சிலருக்கு தங்களது பெயரை கூட சரியாக எழுதும் திறன் வராது. இப்படிப்பட்ட அறியும் திறனற்ற மக்களுக்கு பதிலாக மற்ற எவரும் முயன்று இவர்களுக்கு அறிவை ஊட்டிவிடமுடியாது.

பணம் இல்லாதவர்களுக்கு பணத்தை கொடுத்துவிடலாம். அறிவில்லாதவர்களுக்கு அறிவை கொடுக்க முடியாது. ஒவ்வொருவருடைய தனிப்பட்ட அறியும் திறனுக்கேற்றவாறு அவரவர்களின் சொந்த முயற்சியின் மூலமாக மட்டுமே அறிவு ஏற்படும். எனவே குறைந்தபட்ச வாழ்க்கைத்தரத்தை அனைத்து மக்களும் அடைய வேண்டும் என்று நினைப்பது போல எல்லா மக்களும் அறிவாளிகளாவார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு.

அறிவை பெற தகுதி வேண்டும்

ஒரு முதுநிலை கல்லூரி வகுப்பில் பத்தாம் வகுப்பு மாணவனை அமர்த்தினால் அவனுக்கு திறமையான ஆசிரியரால் எளிமையாக நடத்தப்படும் பாடம் கூட புரியாது. ஏனெனில் அவனுக்கு அந்த அறிவை அடையும் தகுதியில்லை. அதே போல பரமனை அறிந்து கொள்ள வேண்டிய திறன் பலருக்கு இருப்பதில்லை. பார்ப்பதற்கு எல்லோரும் முழு வளர்ச்சியடைந்த மனிதர்களாக தெரிந்தாலும் அறிவின் அடிப்படையில் பெரும்பாலோர் பரமனை அறிந்து கொள்ளும் முதுநிலை கல்விக்கு தகுதியற்றவர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்து பல பிறவிகளில் செயல் புரிந்து அறிவு முதிர்ச்சியடைந்த பின்தான் பரமனை பற்றிய அறிவை அடையும் தகுதியை பெறுவார்கள்.
பின்வரும் வகையான மனிதர்களுக்கு பரமனை அறிந்து கொள்ளும் தகுதி பொதுவாக இருப்பதில்லை.

1. கல்லூரி படிப்பை முடிக்கும் தகுதி இல்லாதவர்கள்: பட்டப்படிப்பு படித்து முடிக்குமளவு அறிவுள்ளவர்களால் மட்டுமே பரமனை அறிந்து கொள்ள முடியும். உலகம், இறைவன், பரமன், நாம் பந்தப்பட்டிருப்பதன் காரணம், பந்தத்திலிருந்து விடுதலை அடைய நாம் செய்யவேண்டிய பயிற்சி, முக்தி ஆகியவை பற்றி வேதம் மிகத்தெளிவாகவும் விரிவாகவும் விளக்கியிருப்பதை புரிந்து கொள்வது சாதாரண கல்வியறிவை பெறத்தகுதியில்லாதவர்களால் முடியாத காரியம்.

2. அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமில்லாதவர்கள்: உருவ வழிபாட்டிலும் வேதத்தின் கர்ம காண்டத்தில் கூறப்பட்ட சடங்குகளை கடைபிடிப்பதில் மட்டுமே தங்கள் வாழ்நாள் முழுவதும் செலவிடுவர்கள் பரமனை அறிய முற்படமாட்டார்கள். மனதை பண்படுத்த மட்டும் தான் கர்ம யோகம் பயன்படுமென்பது தெரியாமல் மனதாலும் வாக்காலும் செயலாலும் கடவுளுக்கு சேவை செய்வதால் மட்டுமே முக்தி கிடைத்துவிடும் என்ற உறுதியான நம்பிக்கையுடனிருப்பவர்கள் பரமனை பற்றிய அறிவை பெறும் ஆர்வம் சிறிதும் இல்லாமலிருப்பார்கள். பரமனும் நானும் ஒன்று என்ற முக்தி நிலை மரணத்திற்கு பிறகுதான் ஏற்படும் என்று நினைத்து கொண்டிருப்பதால் தானும் பரமனும் எப்பொழுதும் இரண்டற ஒன்றாக இருக்கும் உண்மையை ஆராய்ந்து அறிய இவர்கள் தகுதியில்லாதவர்கள்.

கல்வி அறிவை பெற்றபின்னும் பரமனை அறிய முடியாமலிருப்பதன் காரணங்கள்

வகுப்பில் நடத்தும் பாடங்களை கவனிக்காமலும் ஆசிரியர் தரும் வீட்டுவேலைகளை செய்யாமலும் சுயமாக முயற்சியெடுத்து பயிலாமலும் இருப்பவர்கள் எவ்வளவுதான் புத்திசாலிகளாக இருந்தாலும் தேர்வில் வெற்றி பெற முடியாது. அதே போல பரமனை அடைய தேவையான அறிவு கூர்மை உள்ள அனைவரும் பின்வரும் காரணங்களால் பரமனை அறிந்து கொள்வதில்லை.

1. அதர்மத்தில் ஈடுபட்டிருப்பவர்கள்: மண், பெண் மற்றும் பொன் மீதுள்ள பேராசையால் கொலை, கொள்ளை, களவு போன்ற அதர்மமான வாழ்க்கை வழிமுறைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் எவ்வளவு கூரிய அறிவு படைத்தவர்களாக இருந்தாலும் பரமனை அறிந்து கொள்ள மாட்டார்கள். தர்மத்தை கடைப்பிடிப்பது பரமனை அடைய மிக முக்கியமான தகுதி. பொருள் ஈட்டும் பொழுதும் பொருளை செலவழித்து ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் பொழுதும் தர்மத்தை கடைபிடிப்பது மிக அவசியம். தர்மத்தை புறக்கணித்தால் மனது நிம்மதியாக இருக்காது. எப்பொழுதும் அலை பாய்ந்து கொண்டிருக்கும் மனதால் பரமனை அறிந்துகொள்வது முடியாது.

2. பயில்வதற்கு நேரம் ஒதுக்காதவர்கள்: இளம் வயதில் கல்வி கற்று முடித்த பின் வாழ்வு முழுவதும் வெறும் செயல் செய்வதிலும் செயலின் பயனை அனுபவிப்பதில் மட்டுமே நேரத்தை செலவிடுபவர்கள் பரமனை அறிந்து கொள்வதில்லை. குறைந்தது ஒரு வாரத்தில் ஒரு மணிநேரமாவது நாம் எதற்காக செயல்களை செய்து கொண்டிருக்கிறோம், நாம் தேடிக்கொண்டிருப்பது என்ன, அது நாம் செய்யும் செயல்களால் நமக்கு கிடைக்குமா என்ற சுய ஆராய்சியில் செலவிடுவது அவசியம். இயந்திர மயமான இவ்வுலகில் யாருக்கும் ஒரு இடத்தில் அமர்ந்து நான் யார் என்ற கேள்விக்கு விடை தேட ஒரு ஐந்து நிமிடம் செலவிட மனமிருப்பதில்லை. எனவே இப்படி எப்பொழுதும் ஓயாது ஏதாவது செயலில் ஈடுபட்டு வாழ்க்கையின் நோக்கத்தை பற்றியோ செல்லும் பாதையை பற்றியோ பயில நேரம் ஒதுக்காதவர்களால் பரமனை அறிய முடியாது.

3. வேதம் பற்றிய அறியாமை: வேதங்கள் நாம் வாழ்வில் தேடிக்கொண்டிருக்கும் நிலையான அமைதியையும் குறையாத மகிழ்ச்சியையும் தர வல்லவை என்று இவர்களுக்கு தெரிவதில்லை. எனவே பல்வேறு விதமான சுயமுன்னேற்ற (Self-Development) நூல்களையும் வாழ்வில் வெற்றி பெறுவது எப்படி என்பது போன்ற நூல்களையும் பயில நேரத்தை செலவிட்டு பரமனை அறியும் முயற்சியில் இவர்கள் ஈடுபடுவதில்லை. ஆகவே அறிவு கூர்மையிருந்தும் வாழ்க்கையை பற்றி பயில நேரத்தை செலவிட்டபோதும் இவர்களால் பரமனை அறிந்து கொள்ள முடிவதில்லை.

4. குருவின் அவசியம் புரியாமை: தங்களின் சுயமுயற்சியாலும் அறிவுத்திறனாலும் வாழ்க்கையின் பல படிகளை கடந்தவர்களுக்கு பரமனை அடைய நிச்சயம் ஒரு ஆசிரியரின் துணை அவசியம் என்பது புரிவதில்லை. மேலும் இவ்வுலகில் பல்வேறு மதங்கள் மற்றும் தத்துவங்களின் அடிப்படையில் பல நூறு ஆசிரியர்கள் போதனை செய்து வருவதால் எது சரியான பாதை யார் சரியான குரு என்ற குழப்பத்தினால் பலர் பரமனை அறிந்து கொள்ள முடிவதில்லை.


முடிவுரை :

பரமனை அறிந்து கொள்வது உலகத்தில் உள்ள பொருள்களை பற்றி அறிந்து கொள்வதை விட கடினம். எனவே எந்த ஒரு துறையிலாவது பட்டப்படிப்பு வரை தேறும் அறிவுக்கூர்மை இல்லாதவர்களால் பரமனை பற்றி வேதம் கூறும் விளக்கங்களை புரிந்து கொள்ள முடியாது. போதிய அறிவு கூர்மை இருந்தாலும் தர்மமாக வாழ்க்கை நடத்தி முறையாக வேதம் பயின்றவர்களிடம் நேரத்தை செலவிட்டு தொடர்ந்து பரமனை அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் மட்டுமே பரமனை அடைய முடியும். எல்லா தகுதிகளும் சரியான முயற்சியும் எல்லோரிடமும் காணப்படுவது அரிது என்பதால் அனைவரும் பரமனை அறிந்து கொள்ள முடியாது என்று வேதம் விளக்குகிறது.

பயிற்சிக்காக :

1. செயல் செய்வதற்கும் அறிவை பெறுவதற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

2. அறிவை அடைய தேவையான இரு தகுதிகள் யாவை?

3. அறிவு கூர்மை உள்ளவர்கள் பரமனை அறிந்து கொள்ள தடையாக இருக்கும் நான்கு காரணங்கள் யாவை?

சுயசிந்தனைக்காக :

1. ஏன் ஒரு சில மக்களுக்கு அறியும் திறன் மிக குறைவாக உள்ளது?

2. யார் நமக்கு சரியான குரு என்பதை எப்படி அறிந்து கொள்வது?

3. புத்தி கூர்மையாக இருப்பதற்கும் மனம் பக்குவப்பட்டு இருப்பதற்கும் என்ன வித்தியாசம்