உலகத்தில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் சரியான விளக்கம் வேதத்தில் அடங்கியுள்ளது. அனைத்து மக்களுக்கும் எல்லா காலத்துக்கும் பொருத்தமானது வேதம். எனவே யார் என்ன கருத்துக்களை எப்பொழுது கூறினாலும் அது வேதத்தின் கருத்துக்கு ஒத்து இருந்தால் சரியான கருத்து. இல்லையெனில் தவறான கருத்து. மற்ற மதங்கள், அறிவியல், பொருளியல், சமூகவியல் போன்ற அனைத்து துறைகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
வேதத்தில் மட்டும்தான் உண்மயான கருத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்று இங்கு கூறப்படவில்லை. குரான், பைபிள், ஐன்ஸ்டீனின் சார்பு கோட்பாடு (Theory of relativity by Albert Einstein), கார்ல் மார்க்ஸின் 'மூலதனம்' (Das Kapital by Karl Marx), காந்தியின் சத்திய சோதனை, அடால்ஃப் ஹிட்லரின் எனது போராட்டம் (Mein kampf by Adolf Hitler) போன்ற அனைத்து புத்தகங்களிலும் உண்மையான தத்துவங்கள் பல சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் வேதத்திற்கு மாறாக யார் எப்பொழுது என்ன கூறினாலும் அவை தவறு என்பதில் இம்மியளவும் சந்தேகமில்லை.
உண்மையான கருத்துக்களை கூற வேதத்தை படித்திருக்கவோ வேதம் என்று ஒன்று இருக்கிறது என்ற அறிவோ தேவையில்லை. ஆனால் கருத்துக்கள் உண்மையான தத்துவமா இல்லையா என்பதை நிறுவ வேதத்தின் துணை அவசியம்.
வேதமும் மற்ற மதங்களும்
அனைத்து மதங்களுக்கும் நம்பிக்கை என்பது மிக முக்கியமான அடிப்படை தேவை. ஆனால் மற்ற மதங்களில் இந்த நம்பிக்கை கடைசி வரை தொடர வேண்டும். வேதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை மட்டும்தான் நாம் அறிவியல் பூர்வமாகவும், நமது யுக்தியின் மூலமும், அனுபவங்களாலும் நிரூபிக்க முடியும். அவ்வாறு நிரூபித்து புரிந்து கொண்டபின் வேதத்தில் கூறப்பட்ட எதையும் நம்பிக்கையின் பெயரில் கடைபிடிக்கவேண்டிய அவசியமில்லை. வேதத்தை தவிர மற்ற மதங்களில் ஏன், எப்படி என்ற கேள்விகளை கேட்பதற்கு பொதுவாக கடைசிவரை வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே ஆரம்ப நம்பிக்கை அறிவாக மாறாமல் மூடநம்பிக்கைகளாக தொடருகின்றன.
உண்மையென்னவெனில் மற்ற மதங்களும் வேதம் கூறும் அதே கருத்துக்களைத்தான் கூறுகின்றன. ஆனால் தோற்றத்திலிருந்து இன்றுவரை தொடரும் ஆசிரியர்-சீடன் என்ற பரம்பரை வேதத்தை தவிர மற்ற மதங்களில் இல்லாததனால் அவற்றின் உண்மை காலப்போக்கில் மருவி ஒவ்வொரு மதமும் வெவ்வேறு கருத்துக்களை கூறுவது போன்ற ஒரு நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது.
வேதம் அனைத்து மதங்களையும் முழுதாக ஏற்றுக்கொள்கிறது. யார் எந்த சமயத்தை பின்பற்றி குறையாத இன்பமும், தடையில்லாத நிம்மதியும் உள்ள வாழ்வை வாழ்ந்தாலும் அவர்களை வேதத்தை முழுதாக அறிந்தவர்கள் என்று கொண்டாடுகிறது. அவ்வாறு இந்த குறிக்கோளை அடைய முடியவில்லை என்பவர்களுக்கு அவரவர் சமயங்களை பின்பற்றிக்கொண்டே வேதத்தை முறையாக படித்து பரமனை அறிந்து கொள்ளும் வாய்ப்பினையும் வேதம் வழங்குகிறது.
வேதமும் அறிவியலும்
உலகம் தொடர்ந்து மாறும் ஒரு மாயை என்பது வேதாந்தத்தின் முடிவு. அவ்வாறு மாறும் உலகம் எப்படி மாறுகிறது, மாற்றத்திற்கு காரணம் என்ன, எப்படி மாறக்கூடும் என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுவது அறிவியல். வேதத்தின் துணையில்லாமல் அறிவியலால் என்றும் 'இது தான் உண்மை' என்ற முடிவுக்கு வர முடியாது. அறிவியல் என்பது வேதத்தின் அடிப்படையில் அமையாது என்பதால் அது என்றும் உண்மையை தேடியலையும் ஒரு துறையாகவே இருக்கும்.
நமது உணர்வு, ஆனந்தம், இருத்தல் என்ற பரமனின் மூன்று தன்மைகள் அறிவியலுக்கு அப்பாற்பட்டவை. உதாரணமாக ஜடமான பொருளிலிருந்து உணர்வு (Consciousness) தோன்றியது என்பது போன்ற தவறான கருத்துக்களை அறிவியல் அறிஞர்களால் நிரூபிக்கவே முடியாது. அதே நேரத்தில் வேதத்தின் கருத்தான உலகே மாயை என்பதை அறிவியல் மூலம் நிருபிக்கலாம்.
எனவே வேதம் உண்மையான அறிவியலை முற்றாக ஏற்றுக்கொள்ளுகிறது. அறிவியலால் எப்பொழுதும் எட்ட முடியாத துறைகளில் நிலவும் கருத்துக்களை சரிபார்க்க வேதத்தின் துணை அறிவியலுக்கு தேவை.
வேதமும் பொருளியலும்
பொருளாதார வளர்ச்சிக்கு வேதம் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறது. வெளிவுலகத்தை மாற்றி அமைத்து அதன் மூலம் குறையாத இன்பத்தை அடைந்து விடலாம் என்பது தவறான கருத்து என்று மக்களுக்கு அனுபவப்பட்டால்தான் புரியும். எனவே மக்கள் பணம், பட்டம், பதவி, புகழ் போன்றவற்றை தொடர்ந்து தேடும் செயல்களில் ஈடுபடுவது மிக அவசியம். தொடுவானத்தை தொடும் முயற்சியில் சிறிது காலமாவது அவர்கள் செயல்பட்டால்தான் அவர்களது மனம் பக்குவப்பட்டு வேதத்தில் கூறிய கருத்துக்களை புரிந்துகொள்ளும் அறிவை அடைவார்கள்.
எனவே பொருளியல் வேதத்தை பயில ஒரு படிக்கட்டு.
இந்த உலகம் நமது இன்ப அனுபவத்திற்காக மட்டுமே ஏற்படுத்தபட்டுள்ளது. வேதத்தை சாராமல் பொருளியலில் மட்டுமே உழன்று கொண்டிருப்பவர்கள் இன்பத்தை தேடும் முயற்சியில் தொடர்ந்து தோல்வியடைந்து துக்கப்பட்டுகொண்டிருப்பார்கள். வேதத்தை பயின்று பரமனை அறிந்தவர்களால் மட்டுமே எந்த தேடலும் இல்லாமல் தொடர்ந்து இவ்வுலகின் இன்பங்களை அனுபவிக்க முடியும்.
வேதமும் சமூகவியலும்
அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும் செழிப்பாகவும் ஆரோக்கியத்துடனும் வாழக்கூடிய ஒரு உலகம் என்றும் ஏற்படாது. அரசியல்வாதிகளும் சமூக ஆர்வலர்களும் சீர்திருத்தவாதிகளும் பூலோகத்தை சொர்க்கமாக மாற்ற கூறும் அனைத்து கருத்துக்களும் வேதத்துக்கு உடன்பாடுள்ளதே. ஆனால் அவர்களது இறதியான நோக்கம் என்றும் நிறைவேறாது என்பது வேதத்தில் கூறப்பட்டுள்ள முடிவான உண்மை.
யின்-யாங் (Yin-Yang) என்னும் ஒன்றை ஒன்று எதிர்த்தும் அதேநேரத்தில் ஒன்று மற்றதின் மேல் சார்ந்தும் இருக்கும் இரு சக்திகளின் இயக்கத்தினால் நிலைபெற்றிருப்பது போல் காட்சியளிப்பதே இந்த உலகம். உள்நாட்டு கலவரங்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை கட்டுக்குள் கொண்டுவர முயலும் அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் ஆகிய இரு பிரிவினரும் சரியான பாதையில் பயணிப்பவர்களே என்ற நம்ப முடியாத முடிவை உள்ளடக்கியுள்ளது வேதம்.
முடிவுரை :
கணித பாடத்தில் முழு அறிவு பெற்றவராக தகுதியடைய வகுப்பில் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு சரியான விடை கண்டுபிடிக்கும் திறன் இருந்தால் மட்டும் போதாது. தவறான விடைகளை தவறு என்று உறுதியாக சொல்லவும் மற்றவர்கள் தவறு செய்ய காரணம் என்ன என்று தெரிந்திருக்கவும் வேண்டும். இந்த இடங்களில் இந்த காரணங்களால் தவறு செய்யும் வாய்ப்பு உள்ளது என்று தெரிந்தால் மட்டுமே அந்த துறையில் வல்லுனர் என்ற தகுதியை நாம் பெற முடியும்.
அது போல வேதம் என்ன சொல்கிறது என்று விளக்கிய முதல் அத்தியாயத்தை நாம் முழுவதும் புரிந்து கொண்டால் மட்டும் நாம் பரமனை முழுதும் தெரிந்து கொண்டவர்களாக ஆகிவிடமாட்டோம். வேதத்திற்கு மாறாக வழங்கப்படும் கருத்துக்களை தவறு என்றும் ஏன் அம்மாதிரி தவறான கருத்துக்களை மக்கள் உண்மையென நினைத்துக் கொண்டிருக்கிறார்களென்றும் நமக்கு தெளிவுபடுத்த இந்த இரண்டாம் அத்தியாயம் உலகில் நிலவி வரும் வேதத்துக்கு மாறான கருத்துக்களை தவறு என்று தர்க்கபூர்வமாக நிரூபிக்கிறது.
ஒருகாலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் கூறப்பட்ட கருத்துக்கள் எக்காலத்திற்கும் எல்லா மனிதர்களுக்கும் பொறுத்தமான வேதத்தின் கருத்துக்கு மாறாக இருந்தால் அவற்றை தவறு என்று நாம் புரிந்து கொள்ள இந்த பாடத்திலிருந்து பிரம்ம சூத்திரத்தின் இரண்டாவது அத்தியாயம் விளக்க ஆரம்பிக்கிறது.
பயிற்சிக்காக :
1.உண்மையான தத்துவங்களை வேதங்களின் துணையின்றி தெரிந்து கொள்ள முடியாதா?
2. வேதத்தை பயில ஹிந்துவாக இருக்க வேண்டுமா?
3. மதத்தில் நம்பிக்கை கொள்வது மூட நம்பிக்கையா?
4. அறிவியலுக்கு வேதத்தின் துணை ஏன் அவசியம்?
5. பணம் சம்பாதிப்பது வேதத்தை பயில எவ்வாறு உதவும்?
சுயசிந்தனைக்காக :
1. வேதத்தை முழுமையாக ஏற்றுக்கொள்பவர்களிடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளுக்கு என்ன காரணம்?
2. வேதம் சொல்லுவது இதுதான் என்று உறுதியாக தெரிந்து கொள்வது எப்படி?