Sunday, March 28, 2010

பாடம் 041: யோகம் முக்தியை கொடுக்குமா? (பிரம்ம சூத்திரம் 2.1.3)


பதஞ்சலி தனது யோகசூத்திரத்தில் முக்தியை கொடுக்கும் எட்டு படிக்கட்டுகளை விவரித்துள்ளார். தற்காலத்தில் நிலவிவரும் அனைத்து தியான முறைகளும் யோகசூத்திரத்தை அடிப்படையாக கொண்டவைதான். தியானம் செய்வதன் மூலம் முக்தியை அடையலாம் என்பது பரவலாக நிலவிவரும் ஒரு கருத்து. இது தவறான கருத்து என்று வேதம் இந்த பாடம் மூலம் விளக்குகிறது.

முக்தி என்பது நமது குறிக்கோள். யோகம் என்பது நமது குறிக்கோளை அடைய உதவும் வழி. இதில் யாருக்கும் எந்த குழப்பமும் கிடையாது. ஆனால் முக்தியென்றால் என்ன என்பதிலும் யோகமென்றால் என்ன என்பதிலும் பல தெளிவற்ற தவறான கருத்துக்கள் உள்ளன.

யோகம் என்றால் என்ன?

யோகம் என்றால் ஒன்று சேர்வது என்று பொருள். பரமனும் நானும் எப்பொழுதும் ஒன்றுதான் என்று புரிந்து கொள்வதுதான் யோகத்தின் குறிக்கோள். ஆனால் நானும் பரமனும் வேறு. நான் பரமபதத்தை யோகம் செய்வதன் மூலம் அடையலாம் என்பது போன்ற பல தவறான கருத்துக்கள் நிலவி வருகின்றன. மேலும் யோகம் என்பதற்கு தியானம் செய்வது மற்றும் யோகாசனம் என்ற உடற்பயிற்சி போன்ற தவறான பொருள்களும் பாமர மக்களிடையே வழக்கத்தில் உள்ளது.

முக்தி என்றால் என்ன?

பிறப்பு-இறப்பு மறுபடியும் பிறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுபடுவது முக்தி. நாம் செய்த பாவபுண்ணியங்களின் பலனை அனுபவிக்க நாம் திரும்ப திரும்ப பிறவிகள் எடுத்துகொண்டு வருகிறோம். வெற்றி-தோல்வி, வளமை-வறுமை போன்ற இருமைகள் நிறைந்த உலகில் உழன்றுகொண்டிருக்கிறோம். இந்த சுழற்சியிலிருந்து விடுபட்டு குறையாத இன்பத்துடன் வாழ்வதுதான் முக்தி. முக்தியடைந்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்று வேதம் கூறுகிறது.

நாம் முக்தியடைந்து விட்டோமா இல்லையா என்று நமக்கு தெரிய வேண்டும். நாம் எங்கே போகவேண்டும் என்று தெரியாமல் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தால் அவன் இறக்கிவிடும் இடத்தில் இறங்கிவிட்டு அவன் கேட்கும் பணத்தை கொடுப்பதை தவிர நமக்கு வேறு வழியில்லை. போகும் வழி தெரியவேண்டுமென்ற அவசியமில்லை. போகவேண்டிய இடம் தெளிவாக தெரிந்தால் மட்டும் போதும். அது தெரியாவிட்டால் பயணம் செய்ய வேண்டிய அவசியமேயில்லை. முக்தி என்பது என்ன என்று தெரியாவிட்டால் யோகம் நமக்கு அவசியமில்லாத ஒன்று.

முக்தி என்றால் என்ன என்பதை நாம் வேதத்தை படிக்காமலேயே, யாருடைய உதவியுமில்லாமலேயே அறிந்து கொள்ளலாம். நாம் செய்யும் அனைத்து செயல்களின் முடிவான நோக்கம் ஆனந்தம். எப்பொழுதும் இன்பமாயிருப்பதே முக்தி. முக்தியென்பதற்கு இதைத்தவிர வேறு எந்த பொருளென்றாலும் அது நமக்கு தேவையில்லை.

இன்றிலிருந்து என்றும் இன்பமாயிருப்பதுதான் நமது குறிக்கோள். அதுதான் முக்தி.

யோகம் முக்தியை கொடுக்குமா?

ஆம். கொடுக்கும். பதஞ்சலியால் விவரிக்கப்பட்ட அஷ்டாங்க யோகத்தை முறையாக செய்தால் நிச்சயமாக முக்தியை அடையலாம்.

இல்லை. கொடுக்காது. யோகம் என்ற பெயரில் கண்ணை மூடி அமர்ந்து கொண்டோ அல்லது உடலை வில்லாக வளைத்து கொண்டோ அல்லது மூச்சை அடக்கியோ நாம் எத்துணை பயிற்சி செய்தாலும் நாம் நம் நேரத்தை வீணடத்துகொண்டிருக்கிறோம் என்ற அறிவு வந்தால் வருமே தவிர முக்தி வராது.

அஷ்டாங்க யோகம் என்றால் என்ன?

யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணம், தியானம், சமாதி ஆகிய எட்டு அங்கங்கள் சேர்ந்தது அஷ்டாங்க யோகம். இந்த எட்டு படிகளில் சுலபமாக செய்யகூடிய ஆசனம், பிராணாயாமம், தியானம் என்ற மூன்று படிகள் மட்டும் மக்களிடையே பிரபலப்படுத்தப்பட்டுள்ளது. அறியாமையின் காரணமாக மக்கள் இதைத்தான் முழுமையான யோகம் என்று நம்பிக்கொண்டு பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

வேதத்தில் இந்த அனைத்து படிக்கட்டுக்களும் விளக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை முறையாக ஓரிடத்தில் கொடுக்கப்படவில்லை. பதஞ்சலியின் ஒப்பற்ற யோகசூத்திரம் வேதத்தின் கருத்துக்களை முறைபடுத்தி பாமரமக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் கொடுக்கிறது. முதல் இரண்டு படிக்கட்டுக்களான யமம், நியமம் ஆகியவை என்ன என்று தெரியாமலேயே ஆசனம், பிராணாயாமம் போன்ற பயிற்சியில் ஈடுபட்டால் பலன் கிடைக்காது என்பதில் எந்த சந்தேகமும் இருக்க வேண்டாம். தியானம் என்பது முதல் ஆறு படிகளையும் முறையாக கடந்த பின்னர் ஆரம்பிக்க வேண்டிய ஏழாவது படி.

சமாதி என்றால் என்ன?

அஷ்டாங்க யோகத்தின் முதல் ஏழு படிகளை முறையாக கடந்த பின் அடையும் முடிவான பலன் சமாதி. சமாதி என்பது எவ்வித எண்ணங்களும் இல்லாமல் எண்ணங்கள் வராமலிருக்க எவ்வித பிரயத்தனமும் செய்யாமல் கண்ணை மூடி அமர்ந்திருக்கும் நிலை என்பது மட்டுமல்ல. கண்ணை திறந்து கொண்டு எல்லாவித நிகழ்வுகளிலும் பங்கேற்று கொண்டு, மனதில் ஏற்படும் எண்ணங்களும், செய்யும் செயல்களும் 'என்னுடையது' என்ற அகங்காரம் இல்லாமல் இருப்பதும் சமாதியாகும். சமாதி என்பதற்கும் முக்தியென்பதற்கும் எந்த வேறுபாடும் இல்லை.

வாழ்வில் ஏற்படும் இருமைகளை சமமாக பார்க்கும் சக்தி சமாதியடைந்தவர்களுக்கே சாத்தியம். ஆக முறையாக அஷ்டாங்க யோகத்தின் எட்டு படிகட்டுகளையும் ஒன்றன்பின் ஒன்றாக செய்தால் நாம் முக்தியடையலாம்.

தியானம் ஏன் முக்தியை கொடுக்காது?

வேதத்தில் ஞானம் மட்டும்தான் நமது பழைய கர்மபலன்களை அழிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.கர்மபலன்களை அழிக்காவிட்டால் மறுபடியும் பிறக்கவேண்டியது அவசியம். எனவே ஞானம்தான் முக்தியை கொடுக்கும். நம்மிடம் ஞானத்தை கொடுக்கும் கருவிகள் ஐம்புலன்கள் மற்றும் வேதம் என்ற ஆறு உள்ளன. தியானம் என்பது இந்த ஆறு அறிவை கொடுக்கும் கருவிகளில் ஒன்று அல்ல. எனவே தியானம் நிச்சயமாக முக்தியை கொடுக்காது.

ஆனால் புத்தருக்கு போதிமரத்தினடியில் ஞானம் கிடைத்ததே, அது போல நாமும் தியானம் செய்தால் ஏன் நமக்கும் ஞானம் கிடைக்காது? புத்தருக்கு போதிமரத்தடியில் ஞானம் கிடைத்தது உண்மை. ஆனால் அவருக்கு பிறகு வேறு யாருக்கும் எந்த மரத்தடியிலும் இன்றுவரை ஞானம் கிடைத்ததாக தெரியவில்லை. எனவே நமக்கு கிடைக்காது என்பது உறுதி. புத்தர் வேதங்களை முறையாக பயின்றபின்பு அதில் கூறப்பட்ட கருத்துக்களை தியானம் என்ற பெயரில் சிந்தித்து கொண்டிருந்தார். ஆப்பிள் ஏன் கீழே விழுந்தது என்று சிந்தித்த நியூட்டனுக்கு 'புவியீர்ப்பு விசை' என்ற பதில் மனதில் தோன்றியது போல அவருக்கும் மக்களது துன்பத்திற்கு காரணம் ஆசை என்ற உண்மை தோன்றியது. அது போல நாமும் வேதத்தை முறையாக படித்துவிட்டு ஆசிரியர் கூறிய கருத்துக்களை சிந்தனை செய்து கொண்டிருந்தால் எந்த நேரத்திலும் நமக்கு ஞானம் கிடைக்கலாம்.

நமது அனைத்து துன்பங்களுக்கும் 'நாம் யார்?' என்ற உண்மை அறிவு இல்லாமல் நாம் நம் உடல்/மனம் என்று நினைத்து கொண்டிருக்கும் அறியாமைதான் காரணம். அறியாமை என்பது ஞானத்தால் மட்டுமே அகலும். தியானம் அறியாமையை போக்காது. எனவே தியானம் முக்தியை தராது.

யோகம் என்ற பெயரில் சொல்லித்தரப்படும் யோகாசனம், பிராணாயாமம், தியானம் போன்றவை உடல் ஆரோக்கியம், மன அமைதி போன்ற பலன்களை தரலாம். ஆனால் இவை மட்டும் நிச்சயம் முக்தியைதாரா. இதை நிருபிப்பது மிகவும் எளிது. நாம் செல்ல வேண்டிய இடம் நமக்கு தெளிவாக தெரிந்தால் ஆட்டோ ஒட்டுனருக்கு அது தெரியுமா என்று சோதித்து பார்த்துவிடலாம். அது போல நமக்கு யோகம் செய்ய சொல்லித்தரும் ஆசிரியரிடம் முக்தி என்றால் என்ன என்ற கேள்வியை கேட்டால் அவர் சொல்லும் பதிலிலிருந்து நாம் அவர் சொல்லும் பாதையில் செல்வதா வேண்டாமா என்று முடிவு செய்துவிடலாம்.

முடிவுரை :

வேதத்தின் கருத்துக்களை முறைபடுத்தி யோகசூத்திரமென்ற பெயரில் பதஞ்சலி வழங்கியுள்ளார். அவர் கூறிய எட்டு படிகளையும் முறையாக பயின்றால் நாம் முக்தியை அடையலாம். ஆனால் தகுந்த ஆசிரியர் கிடைப்பது கடினமென்பதால் யோகசூத்திரத்தின் மூலம் முக்தியடைவது துர்லபம். வேதத்தை முறையாக கற்று தரும் அனைத்து ஆசிரியர்களும் தங்கள் பாடதிட்டத்தில் ஒரு பகுதியாக நிச்சயம் யோகசூத்திரத்தை மாணவர்களுக்கு கற்றுத்தருவார்கள். எனவே நாம் தியானம் முக்தியை தரும் என்ற நினைவை கைவிட்டு முறைப்படி வேதத்தை பயில ஆரம்பிக்கவேண்டும். யோகசூத்திரத்தை உள்ளடக்கிய நமது பயிற்சி நம்மை முக்தியடையச்செய்யும்.

பயிற்சிக்காக :

1. முக்தி என்றால் என்ன?

2. யோகம் என்றால் என்ன?

3. யோகம் முக்தியை கொடுக்குமா?

4. அஷ்டாங்க யோகத்தின் எட்டு படிக்கட்டுக்கள் யாவை?

5. சமாதிக்கும் முக்திக்கும் என்ன வேறுபாடு?

சுயசிந்தனைக்காக: :

1.சமாதி என்றால் மனதில் எவ்வித எண்ணங்களும் இல்லாமல் இருப்பது மட்டுமென்றால் அதனால் என்ன பயன்?

2. யோகம் செய்பவர்கள் சமுதாயத்திலிருந்து விலகி காட்டில் வசிக்க வேண்டுமா?