Saturday, March 13, 2010

பாடம் 031: பேரறிவே பரமன் (பிரம்ம சூத்திரம் 1.3.42-43)

எல்லா உயிரினங்களிடமும் இருக்கும் அறியும் தன்மை எப்பொழுதும் மாறுபடுவதில்லை. அறிவை அறியும் இந்த பேரறிவு (Awareness) பரமன் என்று இந்த பாடத்தின் மூலம் வேதம் விளக்குகிறது. நான் பரமன் என்றால் மற்றவர்கள் யார், மற்ற உயிரினங்களுக்கும் எனக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலளிப்பதுடன் பரமனை அறிந்த ஞானிகளுக்கிடையே இருக்கும் வேறுபாட்டின் காரணத்தையும் வேதம் விளக்குகிறது.

அறிவும் பேரறிவும்

அறிவு என்பது உலகத்தில் உள்ள எந்த ஒரு பொருளை பற்றியோ அல்லது கடவுள் போன்ற தத்துவங்களை பற்றியோ அமைவது. பேரறிவு என்பது இப்படிப்பட்ட அறிவை விளக்குவது. உதாரணமாக ஒரு பொருளை மறைத்து வைத்துகொண்டு 'இது என்ன?' என்று கேட்டால், 'எனக்கு தெரியவில்லை' என்று பதில்கிடைக்கும். இந்த பதிலை சொல்வதற்கு அந்த பொருளை பற்றிய அறிவு இல்லை என்ற அறிவு அவசியம். அறிவு உள்ளதா இல்லையா என்று அறிவதுதான் பேரறிவு.

சரித்திரம், புவியியல், அறிவியல் என அறிவு பல துறைகளாக பிரிக்கப்படலாம். ஆனால் பேரறிவு ஒன்றே ஒன்றுதான்.

பொருள்களை பற்றிய அறிவு ஒருவருக்கொருவர் மாறுபடும். ஒருவர் மிகச்சிறந்த அறிவாளியாகவும் மற்றவர் ஒன்றும் அறியா முட்டாளாகவும் இருக்கலாம். ஆனால் அறிவை அறியும் பேரறிவு ஒன்றுதான். அதில் எவ்வித வேற்றுமையும் இல்லை.
அறிவு என்பது தொடர்ந்து மாறுபட்டுகொண்டிருக்கும். ஆனால் பேரறிவு மாறாதது. உதாரணமாக ஜெர்மன் மொழி ஒருவருக்கு தெரியாமலிருந்து பின் அவர் அந்த மொழியை கற்றுக்கொண்டிருக்கலாம். அவரின் அறிவு வளர்ந்து விட்டிருந்தாலும் முதலில் ஜெர்மன் மொழியின் அறிவு இல்லை என்றும் இப்பொழுது இருக்கிறது என்றும் அறியும் பேரறிவில் எந்தவித மாற்றமும் இல்லை.

பேரறிவு அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது.

நம்மால் நேரடியாக பார்க்க கூட முடியாத நுண்ணுயிர்களுக்குள்ளும் இதே பேரறிவு உள்ளது. இந்த பேரறிவு தான் அனைத்து உயிரினங்களின் அறிவுக்கு ஆதாரம். பேரறிவு இல்லாமல் அறிவு வேலை செய்யாது. அறிவின் தரத்தைகொண்டு பேரறிவை தரம் பிரிக்க முடியாது. மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்குள் இருப்பது ஒரே பேரறிவுதான்.

நமது ஐந்து புலன்கள் மூலமாக உலகத்தில் உள்ள பொருள்களை பற்றிய அறிவை அடைகிறோம். ஆனால் ஒரே பொருள் எல்லோருக்கும் ஒரே அறிவை கொடுப்பதில்லை. கைபேசி (cell phone) மூலமாக தொலைவில் உள்ள ஒருவருடன் பேசலாம் என்ற அறிவு மட்டும் ஒரு முதியவருக்கு இருக்கும். ஆனால் அதே பொருள் இணைய தளங்களுடன் (web sites) தொடர்பு கொள்ளவும், வானொலியில் (radio) ஒலிபரப்பும் பாட்டுக்களை கேட்கவும் மற்றும் இது போன்ற பல செயல்களை செய்ய உதவும் கருவி என்ற அறிவு அவரது பேரனுக்கு இருக்கும். பாட்டனாருக்கு தன் பேரன் கைபேசியை உபயோகித்து என்ன செய்கிறான் என்று தெரியாவிட்டாலும் எதோ செய்கிறான் என்று தெரியும்.

இதே போல்தான் மற்ற உயிரினங்கள் தங்களுக்கு இருக்கும் புலன்கள் வழியாக உலகத்தை உணர்ந்து தங்களது திறத்திற்கேற்ப அறிவை அடையும். வீட்டில் இருக்கும் மனிதர்களை பற்றியும் அவர்களது செயல்கள் பற்றியும் அங்கு வளர்க்கப்படும் நாய்க்கு ஏற்படும் அறிவு அங்கு இருக்கும் ஈ, எறும்பு பொன்ற மற்ற உயிரினங்களுக்கு ஏற்படும் அறிவை விட அதிகம். ஆனால் அனைத்திற்கும் இருக்கும் பேரறிவு ஒன்றுதான். அதில் எந்த வேறுபாடும் இல்லை.

நான் வேறு மற்றவர்கள் வேறா?

நான் என்பதற்கு என் உடல் என்றோ என் மனது என்றோ பொருள் கொண்டால் இந்த கேள்விக்கே இடமில்லை. எல்லோரும் வேறு வேறுதான். ஆனால் என்னில் இருக்கும் பேரறிவுதான் நான் என்ற உண்மையை உணர்ந்தால் நமக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் மறைந்து விடும். பேரறிவு ஒரே தன்மையுள்ளது என்பது மட்டுமல்ல. இருப்பது ஒரே பேரறிவுதான். இந்த பேரறிவுதான் அனைத்து உயிரினங்களையும் உயிர்ப்பித்து கொண்டிருக்கும் பரமன்.

பார்வைக்கு அனைத்தும் தனித்தனியாக தெரிவது உண்மையில் இருக்கும் ஒரே பேரறிவான பரமனின் மாயத்தோற்றம்.

நான் யார்?

மாறாத பேரறிவு மற்றும் என்றும் மாறும் பொது அறிவுடன் கூடிய உடல். இதில் நான் யார்? பிறந்து, வளர்ந்து, தேய்ந்து மறையும் உடல் என்ற பொருளை எடுத்துக் கொண்டால் வாழ்வில் இன்ப துன்பங்கள் மாறி மாறி அனுபவிப்பதை தவிர்க்க முடியாது. அதற்கு மாறாக நான் பேரறிவு என்ற பொருளை எடுத்துக்கொண்டால் என்றும் குறையாத இன்பமும் தடையில்லாத அமைதியும் நம்மை விட்டு அகலா.

நாம் பேரறிவா அல்லது பொது அறிவுடன் கூடிய உடலா என்று தேர்ந்தெடுப்பது நமது அறிவின் தரத்தை பொறுத்தது. ஏனெனில் உண்மையில் இருப்பது பேரறிவு ஒன்றுதான். இந்த உண்மையை புரியாதவர்கள்தான் தங்களை உடலென்று கருதி துன்பத்தில் உழல்பவர்கள். புரிந்தவர்கள் ஞானிகள்.

ஞானிகளுக்கிடையே உள்ள வேறுபாடு

நாம் பேரறிவு என்ற உண்மை, நமக்கு இது புரிந்ததா இல்லையா என்பதை பொறுத்து மாறுபடுவதில்லை. எல்லா உயிரினங்களின் மூலமாக நடைபெறும் இயக்கத்துக்கு ஆதாரமாய் என்றும் இருப்பது இன்ப மயமான பேரறிவுதான். இந்த உண்மையை உணர்ந்தவர்கள் பரமனை அறிந்த ஞானிகள். ஞானிகள் அவர்களின் பொது அறிவு மற்றும் உடலின் அடிப்படையில் ஒருவருக்கொருவர் வேறானவர்கள்தான். ஒருவர் பரமனை மட்டும் அறிந்திருக்கலாம். மற்றவர் நான் பரமன் என்பதுடன் பல்வேறு உலக அறிவையும் பெற்றிருக்கலாம். எனவே பொது அறிவின் அடிப்படையில் அவர் முன்னவரை விட உயர்ந்தவராக மற்றவர்களால கருதப்படலாம். ஆனால் அனைத்து ஞானிகளும் எப்பொழுதும் எல்லோரையும் ஒரே பரமனாகத்தான் அறிவார்கள். பொது அறிவு வேறுபட்டாலும் அது மாயை என்பதால் அந்த வேறுபாட்டுக்கு எந்த முக்கியத்துவமும் ஞானிகள் கொடுப்பதில்லை.

முடிவுரை :

அறிவுக்கு அறிவாகவும் அனைத்து உயிர்களின் அறிவுக்கு ஆதாரமாகவும் இருக்கும் பேரறிவே பரமன். நமது மனம், உடல் உள்ளிட்ட பிரபஞ்சம் பரமனின் மாயா சக்தியால் இருப்பது போல் தோற்றமளித்துகொண்டுள்ளது. இருக்கும் மாறாத பரமனை அறிந்தால் இருப்பது போல் தோற்றமளிக்கும் இந்த உலகம் நமக்கு ஒரு விளையாட்டு திடல். பரமனை அறியும் வரை நாம் நம் உடலையும் மனதையும் நம்முடைய உடைமையாக கருதாமல் அவைதான் நாம் என்ற தவறான அஞ்ஞானத்தில் மூழ்கியிருப்போம். இந்த அஞ்ஞானமே நமது எல்லா துன்பங்களுக்கும் ஒரே காரணம்.

உடல் வலிமை, அறிவுத்திறன், பண பலம், சுற்றத்தின் ஆதரவு, புகழ் போன்றவை ஒருவருக்கொருவர் மாறுபடுவதுடன் ஒரே மனிதரின் வாழ்வில் இவை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். இவை இருப்பதனால் மகிழ்ச்சி அடைந்தால் நிச்சயம் ஒரு நாள் நாம் வருத்தப்பட்டே ஆகவேண்டும். ஏனெனில் மாறுவது இவற்றின் இயற்கை.

மேலும் எந்த சிறப்பும் இல்லாத உயிரினமோ அல்லது எல்லா சிறப்புகளும் கூடிய ஒரு உயிரினமோ இந்த உலகில் கிடையாது. மனிதர்களுக்கிடையேயும் இந்த ஏற்ற தாழ்வுகள் இருந்து கொண்டே இருக்கும். பரமனை அறிந்தவர்களைத்தவிர வேறு யாராலும் அடைய வேண்டிய எல்லாவற்றையும் அடைந்து விட்டதாக கூற முடியாது. நம்மைவிட சிறந்தவர்கள் நிச்சயம் எப்பொழுதும் இருப்பார்கள். எனவே வாழ்வில் வெற்றி பெறுவது என்பது யாரலும் எப்பொழுதும் சாதிக்க முடியாத ஒரு செயல்.

நம் வசதிக்கு ஏற்றாற்போல் நம்மிடம் வீடு, வாகனம் போன்றவை இருக்கும். அதே போல் நமது அறிவும் நமது திறத்திற்கும் முயற்சிக்கும் ஏற்றாற்போல் வளர்ந்திருக்கும். நமது பெற்றோர்களின் உருவத்தையும் நிறத்தையும் போல் நம் உடல் வாகு அமைந்திருக்கும். எது எப்படி இருந்தாலும் இவை எல்லாம் எப்பொழுதும் மாறக்கூடியவை. மாறும் இவற்றை நான் என்று தவறாக கருதாமல் எனது விளையாட்டுக்காக இருப்பது போல் காட்சியளிப்பவை என்ற சரியான நோக்கில் பார்த்தால் நம் வாழ்வு எப்பொழுதும் இன்பமயமாக இருக்கும். நம்மால் நம் மனதின் குறைபாடுகளை நாம் வசிக்கும் வாடகை வீட்டுச்சுவற்றில் ஏற்பட்ட விரிசல்களுக்கு சமமாக பாவிக்க முடியும். நாம் ஒரு தவறு செய்தால் கூட அதை ஒரு கோமாளி கீழே விழுவதை பார்த்து சிரிப்பதைப்போல ரசிக்க முடியும்,

இந்த உலகில் தெரியும் பல்வகை காட்சிகளின் புதுமையையும் அழகையும் மாறுதல்களையும் ரசிப்பது மட்டும்தான் நம்முடைய வேலை. அதை விடுத்து நிலையான அமைதியையும் குறையாத இன்பத்தையும் நாம் உலகில் தேடினால் நாம் ஏமாற்றமடைவது உறுதி. நமக்குள் இருக்கும் பேரறிவான பரமன் நான்தான் என்று அறிந்தால் மட்டுமே வாழ்வில் நிகழும் ஏற்ற தாழ்வுகளை சமமாக பாவித்து இன்பம் குலையாமல் வாழ முடியும். இதுதான் பரம ரகசியம்.

பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்கள் கொண்டது. ஓவ்வொரு அத்தியாயமும் நான்கு பகுதிகள் கொண்டது. 'பரமன்தான் இவ்வுலகமாக காட்சியளிக்கிறான்' என்பதன் முழுமையான விளக்கத்துடன் நமது மனமும் உடலும் பரமனின் மாயத்தோற்றத்தில் ஒரு பாகம் என்பதை தெளிவு செய்ததுடன் முதல் அத்தியாயத்தின் மூன்றாம் பகுதி இத்துடன் முற்று பெறுகிறது.

பயிற்சிக்காக :

1. அறிவுக்கும் பேரறிவிற்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன?

2. ஞானிகளுக்கிடையே வேறுபாடுகள் உள்ளதா?

சுயசிந்தனைக்காக :


1. நான் யார் என்ற கேள்விக்கு சரியான பதில் அளிக்க நமக்கு தடையாய் இருப்பது என்ன?