Thursday, March 18, 2010

பாடம் 036: சூரியனையும் சந்திரனையும் உருவாக்கியது யார்? (பிரம்ம சூத்திரம் 1.4.16-18)

கௌஷீதகி உபநிஷத் மந்திரம் ஒன்று சூரியனையும் சந்திரனையும் படைத்தவர் யார் என்ற கேள்விக்கு விடை கொடுக்கிறது. இவ்வுலகம் உண்மையில் இல்லை, இது வெறும் மாயை போன்ற கூற்றுகளிலிருந்து சூரியன் சந்திரன் போன்றவை நமது கற்பனையால் தோற்றுவிக்கப்பட்டவை என்பது போன்ற தவறான கருத்துக்கள் நிலை பெறக்கூடாதென்பதற்காக வேதம் இந்த பாடத்தில் மாயைக்கும் கற்பனைக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்குகிறது.

பரமனின் மாயையும் மனித மனதின் கற்பனையும்

பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடாது. அது போல நாம் இரண்டு நிலவுகளை கற்பனை செய்துகொண்டால் வானில் இரு நிலவுகள் தோன்றி விடாது. எனவே இருக்கும் ஒரு நிலவை நமது மனதின் கற்பனை என்று கூறுவது தவறு. ஆனால் நமது நாட்குறிப்புகளும் செய்திதாள்களும் இல்லாத உலகம் இருப்பதாக பொய்சாட்சி கூறுகின்றன என்றும் காட்டில் விழும் மரத்திலிருந்து சத்தம் வருவதும் வராததும் மனித மனதின் கற்பனையை பொறுத்துள்ளது என்றும் வேதம் கூறும் கருத்துக்கள் இதற்கு முரணாக இருப்பது போல் தோன்றுகிறது. உண்மையை தெளிவு படுத்த வேதம் பின்வரும் விளக்கங்களை அளிக்கிறது.

பரமனின் சக்தியான மாயை இந்த பிரபஞ்சத்தை ஏற்படுத்த பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள்(Raw material). மனிதனின் மனம் மாயையிலிருந்து உருவாக்கப்பட்ட பொருளின் (Finished product) ஒரு சிறு பகுதி.

மிரண்டு வரும் யானையும் பரமன். நானும் பரமன். எனவே யானை என்னை இடராது என்று யானையின் பாதையிலிருந்து விலகாவிட்டால் அது அறிவீனம். எல்லோரும் எல்லாமும் பரமன் என்பது பாரமார்த்திக சத்தியம் (Absolute reality). நம் உடல், மனது, சுற்றியுள்ள பொருள்கள், மனிதர்கள் போன்றவை வியாபகாரிக சத்தியம் (Relative reality), கற்பனையல்ல.

நம் மனதின் கற்பனை என்பது ப்ராதிபாசிக சத்யம் (Subjective reality).நமது கனவு, கற்பனைகள், கடவுளை நேரில் பார்த்தேன் என்பது போன்ற அனுபவங்கள், இவையெல்லாம் எல்லோருக்கும் பொதுவான உண்மைகளல்ல.

வாழ்வே மாயமா?

நாம் உண்மையில் வாழுகிறோமா இல்லை இது அத்தனையும் ஒரு மாயமான கனவா என்று கேட்டால் அதன் பதில் நாம் எந்த நிலையிலிருந்து இந்த கேள்வியை கேட்கிறோமென்பதை பொறுத்து இருக்கிறது. நான் பரமன் என்ற நிலையில் எல்லாம் மாயை. நான் இந்த உடல் மற்றும் மனம் என்ற நிலையில் எல்லாம் உண்மை.

இந்தியா பாகிஸ்தானை கிரிக்கெட் போட்டியில் வென்று விட்டது என்றால் அதன் அடுத்த பிரதமரை நாம் நியமிக்க முடியாது. வென்றது உண்மையா அல்லது வெறும் விளையாட்டா என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? வெறும் விளையாட்டு என்றால் நாம் ஏன் வெகு ஆவலாக அதை கவனித்துக் கொண்டிருக்கிறோம்?

ஒரு சிலர் விளையாட்டையே வாழ்வாக எண்ணி ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் மனம் உடைந்து போவார்கள். வேதம் வாழ்வே ஒரு விளையாட்டு என்ற உண்மையை கூறுகிறது. நாம் அனைவரும் அனைத்தும் பரமன் என்பதால் வாழ்வே நம் பொழுதுபோக்குக்காக ஏற்பட்ட ஒன்று என்று தெரிந்து கொண்டு துன்பப்படுவதை முற்றிலும் தவிர்க்கலாம்.

வாழ்வே மாயமானால் எனக்கு பிடிக்காதவரை கொலை செய்யலாமா?

கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு என்பதால் பந்தை பிடித்து பையில் போட்டுக்கொண்டு பத்து ரன்கள் எடுக்க கூடாது. ஒவ்வொரு விளையாட்டிலும் அதனதன் தர்மத்தை கடைபிடிப்பது போல வாழ்வு என்ற விளையாட்டையும் கட்டுப்பாட்டுடன் ஆட வேண்டும். சட்ட திட்டங்களை முழுவதும் கடைபிடிக்க வேண்டும். பிறந்த நாள் விழாவில் சிரிக்க வேண்டும். சாவு வீட்டில் அழ வேண்டும். அனால் அனைத்தும் விளையாட்டு என்ற அறிவுடன் செய்தால் வென்றாலும் தோற்றாலும் வாழ்வு சுவையான பொழுது போக்காயிருக்கும்.

முடிவுரை :

உலகம் மாயை என்று பரமனையறியாத பாமரமக்களுக்கு வேதம் சொல்வதில்லை. மேலும் பரமனை அறிந்து கொள்ள உலகம் மிக அவசியம். இந்த உலகில் கடுமையாக உழைத்து, வாழ்வின் உயர்வு தாழ்வுகளால் பாதிக்கப்பட்டு, குறைவில்லாத அமைதியையும் இன்பத்தையும் தர இந்த உலகத்துக்கு சக்தியில்லை என்று தெரிந்தவுடன் வேதம் பயில வரும் மனமுதிர்ச்சியடைந்த சீறிய மாணவர்களுக்குத்தான் வேதம் இந்த உலகே மாயை என்ற உண்மையை சொல்கிறது. இந்த உண்மையை புரிந்து கொள்ள வேதத்தை முறையாக பயின்ற ஆசிரியரின் துணை அவசியம். மனம் பக்குவபடுமுன் வேதத்திலிருந்து அரைகுறை அறிவை பெற்றால் உலகே மாயை என்ற கருத்து குழப்பத்தையே ஏற்படுத்தும்.

சதுரங்க ஆட்டம் உண்மையில் நடக்கும் யுத்தமில்லை என்ற அறிவுடன் எப்படி நாம் வெற்றி தோல்விகளை சந்திக்கிறோமோ அதே போல் வாழ்வின் நிகழ்வுகளையும் அது மாயை என்ற அறிவுடன் சம புத்தியுடன் ஏற்க வேண்டும்.

பயிற்சிக்காக :

1. உலகே மாயை என்ற கருத்து உண்மையா?

2. மனித மனதின் கற்பனைக்கும் பரமனின் மாயைக்கும் உள்ள தொடர்பு என்ன?

3. பொய்யான உலகில் நாம் ஏன் சட்டதிட்டங்களுக்கு பணிந்து நடக்க வேண்டும்?

சுயசிந்தனைக்காக :

1. உலகே மாயம் என்பதன் பொருள் பாமர மக்கள், வேதம் பயிலும் சீறிய மாணவர்கள், முக்தியைடைந்த ஞானிகள் ஆகிய மூன்று வகைபட்ட மனிதர்களிடையே எவ்விதம் மாறுபடும்?

2. எண்ணங்களினால் வாழ்வின் போக்கை மாற்றியமைக்க முடியுமா?