Sunday, March 14, 2010

பாடம் 032: தேரின் நாயகன் (பிரம்ம சூத்திரம் 1.4.1-7)

கடோபநிஷத் மந்திரம் ஒன்று நாம் உண்மையில் யார் என்பதை ஒரு தேர் உருவகத்தின் மூலம் விவரிக்கிறது. இந்த விளக்கம் நம் உடல், மனம் மற்றும் ஆத்மா என்கிற பரமன் ஆகியவற்றில் எது மேலானது என்ற வரிசையையும் கொடுக்கிறது. பொதுவாக மக்கள் உடலை விட முக்கியமான மனதைத்தான் நான் என்ற சொல்லுக்கு பொருளாக நினைத்து செயல்படுகிறார்கள். இந்த தவறான கொள்கையை நிராகரித்து பரமனே உண்மையான நாயகன் என்று நிரூபிக்கும் வகையில் இந்த பாடம் அமைந்துள்ளது.

தேரின் உருவகமும் அவற்றின் மூலம் விளக்கபடும் உண்மைகளும்

1. தேர் நம் உடல்: கண்ணுக்கு புலப்படும் தேரின் அனைத்து பாகங்களும் நமது உடலுக்கு உதாரணம். உயிரற்ற உடலை யாரும் அவர் இவர் என்று குறிப்பிடுவதில்லை. அதை வீட்டிலிருந்து கூடிய சீக்கிரம் அப்புற படுத்துவதுதான் எல்லோரின் நோக்கமாக இருக்கும். ஆகவே நாம் நம் உடல் இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் எல்லோருக்கும் விளங்க கூடிய ஒரு உண்மை. நாம் உடல் இல்லை என்பது மட்டும் தான் இங்கு கருத்தே தவிர உடல் முக்கியமானது என்பதில் எந்த கருத்து வேறுபாடும் இருக்க கூடாது. நாம் இந்த உலகில் இயங்க, மற்றவர்களுடன் இணைந்து செயல்பட உடல் மிக அவசியம். தேரை பழுதில்லாமல் தூய்மையுடன் வைத்திருப்பது போல் நம் உடலை இந்த உலகுடன் உறவாட நமக்கு கிடைத்திருக்கும் ஒரே கருவி என்ற கவனத்துடன் போற்றி பாதுகாக்கவேண்டும்.

2. குதிரைகள் நம் புலன்கள்: நமது கண், வாய், செவி போன்ற ஐந்து புலன்களும் கை கால் போன்ற ஐந்து கரணங்களும் குதிரைகளுக்கு ஒப்பாகும். இந்த பத்து கருவிகளும் உடலிலிருந்து வேறுபட்டவை என்பது பலருக்கு தெரியாது. குதிரைக்கு எப்படி தேரின் பாதுகாப்பில் எவ்வித அக்கறையும் கிடையாதோ அது போல நமது புலன்களுக்கு தங்கள் தற்காலிக இருப்பிடமான உடல் மீது எந்த பிடிப்பும் கிடையாது. இறந்த பின் நமது புலன்கள் இந்த உடலை விட்டு ஒரு புதிய உடலுக்கு குடிபெயரப்போவதால் தங்கள் விருப்பத்துக்கு செயல் பட்டு உடலின் ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவிப்பதைபற்றி அவை கவலை படுவதில்லை.

நம்மிடம் பணம் அதிகமிருக்கிறது என்று டீசல் காருக்கு பெட்ரோல் போடுவதில்லை. ஆனால் உடலுக்கு ஒவ்வாத உணவு வகைகளை பணம் இருக்கிறது அல்லது இலவசமாக கிடைக்கிறது என்ற காரணத்தால் உண்பதை நாம் தவிர்ப்பதில்லை. உடல் வேறு புலன்கள் வேறு என்ற அறிவு இல்லாததே இந்த தவறு செய்வதற்கு முக்கிய காரணம்.
குதிரைகளின் கண் போன இடத்துக்கு போனால் தேர் நாம் விரும்பும் இடத்துக்கு போகாது. எனவே குதிரையின் கண்களுக்கு கவசமிடுவது போல நாம் நம் கண், மூக்கு, நாக்கு போன்ற ஐந்து புலன்களையும் அடக்கி நமது கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

3. கடிவாளம் நமது மனது: குதிரையை கட்டுக்குள் வைக்க நமக்கு உதவுவது கடிவாளம். அது போல நம் புலன்களை கட்டுப்படுத்தி கரணங்களை நம் விருப்பபடி செலுத்த உதவுவது நமது மனம். மனம் செம்மையாக இல்லையானால் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என உலகத்தில் உள்ள பொருட்களும், சந்திக்கும் மனிதர்களும் மற்றும் சூழ்நிலைகளும் நமது மனதின் நிலைமையை முடிவு செய்யும் அவல நிலைக்கு நாம் ஆளாவோம்.

நமது செயல்பாடுகள் நமது அறிவை பொருத்தும் நமது புலன்களின் மேல் நமக்குள்ள ஆதிக்கத்தை பொறுத்தும் அமையும். கடிவாளம் சரியாக அமையாத குதிரைகள் தங்கள் விருப்பப்படி செயல் படுவது போல உறுதியில்லாத மனதுடன் இருப்பவர்களால் தங்களுக்கு எது நல்லது என்று தெரிந்திருந்தாலும் அதை செயல்படுத்தும் சக்தி இல்லாதவர்களாயிருப்பார்கள்.

4. தேரோட்டி நம் புத்தி: கடிவாளத்தை கையிலேந்தி குதிரைகளை கட்டுப்படுத்தும் சாரதிதான் நமது புத்தி. மனதின் மூலம் புலன்களை கட்டுப்படுத்தி கரணங்களை சரியான பாதையில் செலுத்துவது புத்தியின் வேலை. அடைய வேண்டிய இலக்கை பற்றிய தெளிவு மற்றும் செல்ல வேண்டிய சரியான பாதையின் அறிவு சாரதிக்கு அவசியம். பெரும்பாலோருக்கு குறையில்லாத இன்பத்தை அடைய வேண்டும் என்ற தெளிவு இருந்தாலும் பொருளீட்டுவதன் மூலம் அந்த குறிக்கோளை அடைந்து விடலாம் என்ற அறியாமை இருந்து வருகிறது. எனவே நமது புத்தி என்னும் சாரதி தனக்கு வழி தெரியும் என்ற தவறான நினைப்பில், இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ நம்மை அழைத்து சென்று கொண்டிருக்கிறான்.

5. தேரின் நாயகன் பரமன்: தேரோட்டியின் பின்புறம் அமர்ந்து வண்டியில் பயணம் செய்பவர் பார்வைக்கு தேரின் நாயகன் போல தெரிந்தாலும் உண்மையில் அவர் நாயகனின் பிரதிநிதி. ஒரு நாட்டின் பிரதிநிதியாக மற்றொரு நாட்டில் செயல் படும் வெளிநாட்டு தூதர் போல பரமனின் பிரதிபிம்பம்தான் நம் உடலையும் மனதையும் செயல் படுத்துவது. அனைத்து உயிரினங்களும் செயல்பட காரணமாயிருப்பது இருக்கும் ஒரே பரமன்தான். ஆனால் எண்ணிலடங்கா உயிரினங்களின் வெவ்வேறு உடல்கள் மட்டும் நம் கண்களுக்கு தென்படுவதால் அவையனைத்தையும் இயக்குவது அவற்றின் மனதில் பிரதிபலிக்கும் பரமனின் பிரதிபிம்பம் என நாம் உணர்வதில்லை.

பரமன் ஆத்மா. பிரதிபிம்பம் அகம்பாவம். பரமனை ஆதாரமாக கொண்டுதான் அனைத்தும் செயல்படுகின்றன என்று உணராமல் அதன் பிரதிபிம்பமான அகம்பாவத்தை உள்ளடக்கிய அகங்காரதை மட்டுமே நான் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். இந்த அறியாமை நம்மிடம் ஆரம்பத்திலிருந்தே இருந்து வருகிறது. ஆகவேதான் நாம் இன்பத்தை அடையவும் துன்பத்தை தவிர்க்கவும் முயன்று கொண்டிருக்கிறோம்.

பரமன் ஆனந்த மயமானவன். இன்பத்தை தேடுவது பரமனுக்கு அனாவசியம். இந்த உலகமும் அதன் மூலம் பெறும் அனுபவங்களும் பரமனின் விளையாட்டு. அனுபவங்களை அப்படியே ஏற்றுக்கொண்டு இன்பமாயிருக்காமல் அவற்றை தரம் பிரித்து சிலவற்றை விரும்பியும் சிலவற்றை வெறுத்தும் நாம் நம் வாழ்க்கையை தேவையில்லாமல் சிக்கலாக்கி கொண்டுள்ளோம்.

தேர் போகும் பாதையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பது இயல்பு. பொழுது போகாமல் தேரில் சிறிது நேரம் உலா சென்று வரலாம் என்று செல்பவருக்கு இந்த ஏற்ற இறக்கங்கள் இன்பத்தை மட்டும் கொடுக்கும். தேர் எந்த திசையில் சென்றாலும் எவ்வளவு வேகமாகவோ அல்லது மெதுவாக சென்றாலும் உலா செல்பவருக்கு எந்த கவலையும் இருப்பதில்லை. அதே போல் நம் உடலை செலுத்துவது பரமனின் பிரதிபிம்பம் என்று அறிந்தவர்களுக்கு வாழ்வே ஒரு சுற்றுலா. தேரின் நாயகனான பரமன் ஆனந்த மயமானவன் என்று தெரிந்துவிட்டால் இன்பத்தை தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. வாழ்வில் சென்றடைய வேண்டிய குறிக்கோள் என்று எதுவும் இருப்பதில்லை. அனைத்து அனுபவங்களையும் இன்பமாக ஏற்றுக்கொண்டு இந்த உடலின் ஆயுள் தீரும்போது உலா முடியப்போகிறது என்ற உணர்வுடன் மரணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கலாம்.

முடிவுரை :

நம் புத்தியில் சரியான அறிவு இருந்தால் நாம் நம் வாழ்வை இன்பமயமாக ஆக்க முடியும். தேரின் நாயகனாக அகங்காரத்தை தவறாக நினைத்துக் கொண்டிருந்தால் நம் புத்தி நம்மை தவறான பாதையில்தான் அழைத்து செல்லும். எனவே அகம்பாவம் பரமனின் பிரதிபிம்பம் என்ற அறிவை பெற பின்வரும் உண்மைகளை நாம் உணர வேண்டும்.

1. நான் என் உடல் அல்ல. உடல் கர்பத்தில் இருத்தல், தோற்றம், வளர்ச்சி,மாற்றம், தேய்ச்சி, மறைவு என்ற ஆறு மாறுதல்களுக்குட்பட்டது. நான் மாறாதவன்.

2. நான் என் ஐந்து புலன்களோ/கரணங்களோ அல்ல. என் உடலில் அமர்ந்து செயல் பட்டாலும் இவை என் உடலிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.

3. நான் என் மனம் அல்ல. என் ஐந்து புலன்களையும் கரணங்களையும் முறையாக பயன்படுத்தி இந்த உலக அனுபவங்களை பெற உதவுவது என் மனம்.

4. நான் என் புத்தி அல்ல. என் மனதை தன் கட்டுக்குள் வைத்து இந்த உடலையும் கருவிகளையும் ஒழுங்காக இயக்குவது புத்தி.

5. நான் என் அகங்காரம் அல்ல. அகங்காரம் வெறும் எண்ண ஓட்டங்கள் மட்டுமே.

6. நான் அகம்பாவம் அல்ல. அகம்பாவம் என்பது உணர்வுமயமான பரமனின் நிழல்.

7. நான் பரமன். என்னுடைய பிரதிபிம்பமான அகம்பாவத்தின் மூலம் என் புத்தி மற்றும் அனைத்து கருவிகளையும் இயக்கும் நாயகன்.

8. என் புத்தியில், நான் பரமன் என்ற அறிவு நிலைபெற்று விட்டால் இந்த உலகத்தில் இன்பத்தை தேடி அலையாமல் பரமனின் மாயா சக்தியாக செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கலாம்.

9. பிரதிபிம்பம் உண்மையல்ல. பிம்பத்தின் சாயல். உண்மையான பிம்பமான பரமன் ஆனந்த வடிவானவன். இருப்பதாக தோற்றமளிக்கும் பிரதிபிம்பத்தின் துயரங்களும் மாயத்தோற்றமே.

10. இந்த உண்மைகளை உணரும் வரை இவ்வுலகுக்கும் வாழ்வுக்கும் இல்லாத உண்மைத்துவத்தை கொடுத்து துன்பத்தில் உழன்று கொண்டிருப்போம்.

11. இந்த உண்மைகளை உணர்ந்த பின் குறையாத இன்பமும் நிலையான அமைதியும் தடையில்லாத பாதுகாப்பும் நம்மைவிட்டகலா.

பயிற்சிக்காக :

1. தேர் உருவகம் மூலமாக கடோபநிஷத் விளக்கும் ஐந்து உண்மைகளை வரிசை படுத்தவும்.

2. உடலை போற்றி பாதுகாக்க வேண்டிய அவசியம் என்ன?

3. உடலுக்கும் புலன்களுக்கும் உள்ள உறவு என்ன?

4. மரணத்தை எப்படி ஆவலுடன் எதிர்பார்க்க முடியும்?

சுயசிந்தனைக்காக :

1. தேர் உவமானம் மூலம் சொல்லப்படாத (நுண்ணிய உடலை சேர்ந்த) ஆறு பாகங்கள் என்னென்ன?