Wednesday, March 3, 2010

பாடம் 025: கட்டைவிரல் அளவினன் பரமன் (பிரம்ம சூத்திரம் 1.3.24-25)

நம் ஒவ்வொருவரது இதயத்தின் அளவு நம் கைப்பிடியளவு. அதனுள் இருக்கும் சிறிய ஆகாசம் நம் கட்டைவிரல் அளவு. பரமனை கட்டைவிரல் அளவினன் என்று வேதம் கூறுவதற்கு காரணம் மனிதனால் மட்டுமே அவன் இதயத்துள் கட்டைவிரல் அளவினதான சிறிய ஆகாசத்திலிருக்கும் பரமனை அறிய முடியுமென்பதால். அனைத்து உயிரினங்களுக்குள்ளும் இருப்பது பரமனே. ஆனால் அவற்றால் பரமனை அறிந்து கொள்ள முடியாது.

உணர்வும் தன்னுணர்வும்

உணர்வு என்பது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. ஒரு சிறு பூச்சியின் உணர்வுக்கும் பெரிய திமிங்கிலத்தின் உணர்வுக்கும் எந்த வேறுபாடுமில்லை. உண்மையில் இருப்பது ஒரே ஒரு உணர்வுதான். இந்த பேருணர்வுதான் பரமன். அனைத்து உயிரினங்களுக்குள் இருந்து அவற்றை செயலாற்றச்செய்வது இந்த ஒரே உணர்வுதான்.ஆனால் இந்த உணர்வை அறிய முதல் படியாக தன்னுணர்வு (Self-consciousness) வேண்டும். மனிதனைத்தவிர மற்ற எந்த உயிரினத்துக்கும் தான் என்ற தன்னுணர்வு கிடையாது. எனவே மனிதன் மட்டுமே பரமனை அறிந்து கொள்ளும் தகுதி படைத்தவன்.

மனிதப்பிறவியின் முக்கியத்துவம்

மற்ற உயிரினங்களோடு ஒப்பிடும் பொழுது மனிதனுக்கு இரு சிறப்புகள் உள்ளன.

முதல் சிறப்பு: செயல்படும் திறன்.

எல்லா உயிரினங்களுக்கும் பாவ புண்ணியங்களின் அடிப்படையில்தான் பிறவி ஏற்படுகிறது. ஆனால் பாவ புண்ணியங்களை சேர்த்துக்கொள்ளும் திறன் மனிதனுக்கு மட்டுமே உள்ளது. இந்த உலகத்தில் மனிதனாக பிறக்கும் பொழுது மட்டும்தான் நம்மால் செயல்கள் செய்து அதன் மூலம் பாவபுண்ணியங்களை சம்பாதிக்க முடியும். இந்த உலகில் உள்ள மற்ற எவ்வித உயிரினங்களாலும் தன்னுணர்வுடன் செயல் செய்ய முடியாது. அவற்றால் சென்ற மனிதப்பிறவிகளில் செய்த பாவபுண்ணியத்தின் பலனை அனுபவிக்க மட்டுமே முடியும். புதிதாக கர்மம் செய்ய அவை அடுத்த மனிதப்பிறவி கிடைக்கும் வரை காத்திருக்கவேண்டும்.

இரண்டாவது சிறப்பு: பரமனை அறியும் திறன்

மற்ற உயிரினங்களைப்போலன்றி மனிதனுக்கு தன்னுணர்வும் அறிவுத்திறனும் இருப்பதால் வேதத்தின் பொருளை தகுந்த ஆசிரியரின் துணையுடன் பயின்று பரமனை அறியும் வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து பிறப்பு-இறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுபட நமக்கிருக்கும் ஒரே வழி பரமனைத்தெரிந்து கொள்வதுதான். நாம் உண்மையில் மரணத்திற்கு அப்பாற்பட்டவர்களென்பதை நம் உடல் மரணமடையுமுன் தெரிந்து கொள்ளாவிட்டால் கிடைப்பதற்கு அரிதான மானிட பிறவி நமக்கு கிடைத்தற்கு பயன் இல்லாமல் போய்விடும்.

வாழ்வின் நோக்கம்

மனிதனாக பிறந்தவர்களனைவருக்கும் உள்ள ஒரே நோக்கம் பரமனை அறிந்து கொள்வதே. இதை அனைத்து மக்களும் நன்றாக அறிவார்கள், எல்லோரும் எப்பொழுதும் பரமனை அறிய வேண்டும் என்ற குறிக்கோளை நோக்கியே செயல் பட்டு வருகிறார்கள். மனிதன் இந்த பூவுலகில் தோன்றியதிலிருந்து இன்றுவரை தடைபடாமல் எந்தவித விதிவிலக்குமில்லாமல் எல்லா மனிதர்களும் பரமனை அறியும் முயற்சியில் மட்டுமே ஈடுபட்டிருந்த போதிலும் இரண்டுவித அறியாமை அவர்களிடம் இருந்து வருகிறது.

முதல் அறியாமை: தான் பரமனைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று யாருக்கும் தெரிவதில்லை.

இரண்டாம் அறியாமை: பரமன் இருக்குமிடமும் யாருக்கும் தெரிவதில்லை.

இந்த அறியாமைகள் காரணமாக தங்கள் செயல்களுக்கு அவர்கள் வெவ்வேறு நோக்கங்களை கற்பித்துக்கொண்டுள்ளார்கள். ஒரு சிலர் பட்டம், பணம், பதவி என்று வெளியுலகிலும் மற்றும் சிலர் கடவுளை வழிபட்டும் தியானத்தின் மூலமும் குறைவில்லாத மகிழ்ச்சியையும் நிறைவான பாதுகாப்பையும் தடையில்லாத அமைதியையும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

இவர்கள் தான்தான் தங்களின் தேடலின் முடிவு என்று உணர்ந்தவுடன் தேடல் நின்றுவிடும். வாழ்வின் நோக்கத்தை அவர்கள் அடைந்தவர்களாகிறார்கள்.

முடிவுரை :

செயல் செய்வதும் அதன் பலனை அனுபவிப்பதும் தனித்தனி காரியங்கள். மனிதர்களுக்கு மட்டுமே இந்த இரண்டும் சாத்தியம். மற்ற உயிரினங்கள் வெறும் பலனை அனுபவிக்க மட்டுமே பிறக்கின்றன. தன் இயல்பு படி 'நான் செய்கிறேன்' என்ற தன்னுணர்வு இல்லாமல் செய்யப்படும் காரியங்கள் செயல்கள் ஆகாது. புலி மானைக்கொல்வது பாவமாகாது. ஏனெனில் பசிக்காமல் புலி கொல்லாது. மேலும் பசித்தால் கொல்லாமல் இருக்க முடிவு செய்யும் திறனும் புலிக்கு கிடையாது. மனிதனைத்தவிர வேறு எந்த உயிரினத்துக்கும் ஒரு காரியத்தை செய்யலாமா கூடாதா என்பதை முடிவு செய்யும் சக்தி கிடையாது. எனவே மனிதனுக்கு மட்டும் தான் செயல் செய்ய முடியும்.

செய்யும் செயல்களின் பலன்களை எப்படி அனுபவிப்பது என்பதிலும் மனிதனுக்கு சுதந்திரம் உள்ளது. உழைத்து பணம் சம்பாதித்தபின் அந்த பணத்தை எப்படி செலவழிப்பது என்பது மனிதனின் புத்தியின் கூர்மையை பொறுத்துள்ளது. அறியாமையால் மனிதன் தான் சம்பாதித்த புண்ணியங்களை சரியாகப்பயன் படுத்துவதில்லை. புண்ணியங்கள் மனிதப்பிறவியை கொடுத்து பின் வேதங்களை பயிலும் வாய்ப்பைக் கொடுத்து குறையாத மகிழ்ச்சியை பெற்றுத்தர வல்லவை. ஆனால் மனிதன் இதை அறியாமல் இன்பத்தை புறவுலகிலும் அக உலகிலும் தேடி மனிதனாக பிறந்தும் புண்ணியத்தின் பலனை பெறாமல் சம்சாரத்தில் உழன்று கொண்டிருக்கிறான்.

மனிதனுக்கு கிடைத்த அரிய வாய்ப்பை அவன் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு வேதம் கட்டை விரல் அளவினன் பரமன் என்று அறிவிக்கிறது.

பயிற்சிக்காக :

1. பரமன் கட்டைவிரல் அளவினன் என்று வேதம் சொல்வதற்கு காரணம் என்ன?

2. மனிதர்களிடம் மட்டுமே இருக்கும் பரமனை அறிய தேவையான அடிப்படை தகுதி என்ன?

3. மற்ற உயிரினங்களோடு ஒப்பிடும் பொழுது மனிதர்களிடம் இருக்கும் இரண்டு சிறப்புகள் யாவை?

4. அனைத்து மனிதர்களது ஒரே நோக்கம் என்ன?

5. மனிதர்களிடம் இருக்கும் இரு அறியாமைகள் என்னென்ன?

சுயசிந்தனைக்காக :

1. அனைத்து மக்களும் பேருணர்வே பரமன் என்று உணர்ந்து கொள்வது சாத்தியமா?

2. வாழ்வின் நோக்கத்தை அடைந்தபின் வாழும் மக்களின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்?