பரமனை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன், இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலையும் மனிதர்களுக்கு அவர்களின் இதயத்திலிருக்கும் சிறிய ஆகாசம்தான் பரமன் என்று வேதம் காட்டிக்கொடுக்கிறது. வாழ்க்கையின் முற்பகுதியில் இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று பட்டம், பதவி, பணம், புகழ் என வெளி உலகில் தேடும் மனிதர்கள், வாழ்க்கையின் பிற்பகுதியில் உள்நோக்கி திரும்பி தியானம், ஜபம், விரதம், ஆராதனை போன்ற சாதனைகளின் மூலம் நிரந்தர நிம்மதியை நாடுகிறார்கள்.
பிறவிகள் தோறும் தொடரும் இந்த தேடல் பரமனை கண்டுகொண்டபின்தான் முடிவடையும். இந்த பேரண்டத்தின் அனைத்து பாகங்களிலும் நீங்காமல் நிறைந்திருந்தாலும் மனிதனின் இதயத்திலிருக்கும் சிறிய ஆகாசம்தான் பரமன் என்று வேதம் சொல்வதற்கு காரணம் அங்கிருக்கும் பரமனைத்தான் நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
உறக்கத்தில் பரமன்
நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்க நிலையில் அந்த சிறிய ஆகாசத்தில் லயித்து பரமனோடு ஐக்கியமான நிலையை தினம்தோறும் அனுபவிக்கிறோம். ஆனால் உறங்கும் பொழுது மனம் அடங்கிய நிலையில் இருப்பதால் இந்த உண்மையை நாம் அறிவதில்லை. அந்த அனுபவம் சுகமாயிருந்தது என்பதைத் தவிர வேறு எதையும் நம்மால் நினைவு கூற முடிவதில்லை.
உண்மையில் அறிவுருவாக ஆனந்த மயமாக இருக்கும் பரமன் நான்தான் என்ற உண்மை அனுபவத்தை நாம் தினமும் பெறுகிறோம். ஆழ்ந்து உறங்கும் நபர்கள் யாராயிருந்தாலும் எவ்வளவு கொடியவர்களாயிருந்தாலும் உறங்கும் அவர்களின் முகத்தில் ஒரு சாந்தம் தவழுவதை பார்க்கலாம்.
உறங்கும்பொழுது கிடைக்கும் இந்த அனுபவத்தை விழித்தெழுந்த பின்னும் தொடர்ந்து பெறலாம். ஏனெனில் நாம் பரமன் என்பது முக்காலத்திலும் உண்மை. உறங்கும்பொழுது மட்டுமல்ல. நாம் பரமன் என்ற உண்மையை நம்மிடமிருந்து மறைக்கும் அறியாமை உறக்கத்தில் ஒடுங்கிவிடுகிறது. இந்த அறியாமை நம்மைவிட்டு நீங்கினால் நாம் பரமன் என்ற அறிவும் அதனால் இவ்வுலகை சரியான விதத்தில் பார்க்கும் அனுபவமும் எப்பொழுதும் நம்மிடம் நிலைக்கும்.
நான் என்னும் உணர்வே பரமன்.
இதயகுகையில் இருக்கும் வெற்றிடமான சிறிய ஆகாசத்தை பரமன் என்று வேதம் கூறுவதை எந்த அறிவியல் உபகரணத்தின் மூலமாகவும் சோதித்து நிரூபிக்க முடியாது. ஏனெனில் சோதனைக் கருவிகளின் பின்புறம் நின்று அறிய முயலும் மனதின் ஆதாரம்தான் பரமன். புகைப்படம் எப்படி கேமராவை படத்தில் காண்பிக்க முடியாதோ அதே போல் அனைத்தையும் அறியும் பரமனை மனதால் அறியமுடியாது.
ஆனால் புகைபடம் பல்வேறு பொருட்களை காண்பிப்பதிலிருந்து அங்கு ஒரு கேமரா இருந்திருக்க வேண்டும் என்று எப்படி ஊகித்து அறிந்துகொள்ள முடியுமோ அதே போல நாம் நம்மைச்சுற்றியிருக்கும் உலகை உணர்வதால் நம்மிடம் ஜடப்பொருள்களில் இல்லாத 'உணர்வு' என்று ஒன்று இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.
நான் எனும் இந்த உணர்வுதான் பரமன். இது மனதில் தோன்றும் எண்ணமான நான் எனும் அகங்காரமல்ல. ஒரு நிலைக்கண்ணாடியின் முன்னின்று படமெடுத்தால் அந்த புகைபடத்தில் கேமராவின் படம் தெரியும். அது உண்மையான கேமராவின் நிழல் படம். அது போல நான் எனும் உணர்வின் நிழல் படம்தான் நான் எனும் அகம்பாவம்.
நமது ஐந்து புலன்களையும் பயன்படுத்தாமல் மனதில் எவ்வித எண்ணங்களும் இல்லாமல் ஒரு சில நொடிகள் இருந்தாலும் நான் என்ற உணர்வு தொடர்ந்து இருப்பதை நாம் உணரலாம். ஆனால் நான் எனும் எண்ணம் மேலோங்கி நமது கவனத்தை கவர்வதால் இந்த உணர்வை கவனிக்க தவறிவிடுகிறோம். நான் என்ற உணர்வின் நிழலான அகம்பாவம்தான் மனதின் செயல்பாட்டுக்கே காரணம். ஆனால் நாம் இந்த அகம்பாவத்தை நான் என்ற எண்ணமான அகங்காரத்துடன் சேர்த்து குழம்பியுள்ளோம்.
'இந்த சுவற்றில் எதுவும் எழுதாதே' என்று சுவர் முழுவதும் எழுதிவைத்திருப்பது போல நான் என்ற எண்ணம் மனம் முழுதும் வியாபித்து மனதை இயக்கும் நான் என்ற உணர்வை நம் கவனத்திலிருந்து மறைத்துவிடுகிறது. ஒரு திரைப்படத்தை பார்க்கும்பொழுது நாம் நம் முன் உண்மையில் இருக்கும் வெள்ளித்திரையைத்தான் பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால் நம் கவனம் முழுவதும் திரையில் தோன்றும் பொய்யான நிழலுருவங்களால் கவரப்பட்டு வெள்ளித்திரையை கவனிக்காமல் விட்டுவிடுவதைப் போல நான் எனும் உணர்வான பரமனை நாம் பெரும்பாலும் கவனிப்பதில்லை.
பரமனை அறிய உலகத்தை மறைக்கவேண்டியதில்லை.
வெள்ளித்திரை நம் முன் இருக்கும் அறிவை பெற திரைப்படத்தை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. வெள்ளித்திரையில்லாமல் திரைப்படம் இருக்காது என்று தெரிந்து கொண்டால் மட்டும் போதும். மனதில் இருக்கும் எண்ணங்கள் பரமனிடமிருந்து நமது கவனைத்தை கவர்ந்து விடுகிறது என்று உணர்ந்தால், எண்ணங்கள் மனதில் தொடர்ந்து இருந்தாலும் நான் பரமன் என்ற அறிவு நம்மிடமிருந்து நீங்காது. இந்த உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு அளவுக்கதிகமான சத்தியத்துவத்தை கொடுத்துக் கொண்டிருக்க மாட்டோம்.
நான் என்ற எண்ணம், மனதில் தோன்றும் அனைத்து எண்ணங்களையும் 'என்னுடைய எண்ணங்கள்' என்றும் நம் உடல் மற்றும் வாக்கால் செய்யும் அனைத்து செயல்களை தன் செயலாக காட்டியும், நான் என்ற சொல்லுக்கு உண்டான உண்மையான பொருளான உணர்வை நம்மிடமிருந்து மறைக்கிறது. எனவே நான் என்ற எண்ணத்தைத்தான் நான் என்ற சொல்லின் பொருளாக நினைத்துக் கொண்டுள்ளோம்.
எப்பொழுது நாம் இந்த நாடகத்தை நாடகம் என்று புரிந்து கொள்கிறோமோ அப்பொழுது நமது மனதின் மாற்றங்களை நமது நிலையாக கருதி துன்பப்பட மாட்டோம். நாம் நமது மனது அல்ல. மனம் சூழ்நிலை மற்றும் சந்தர்ப்பம் இவற்றிக்கேற்ப மாறிக்கொண்டிருக்கும் நமது ஒரு உபகரணம். நான் மாறாத உணர்வு மயமான பரமன்.
முடிவுரை :
நமக்கு கண் இருக்கிறதா இல்லையா என்பதை அறிய நமக்கு முகம் பார்க்கும் கண்ணாடி தேவையிருக்காது. நம்மால் சுற்றியுள்ள பொருட்களை பார்க்கமுடிவதிலிருந்து நமக்கு கண் உள்ளது என்பதை அறிவோம். அதே போல் நாம் அனைத்தையும் உணர்வதிலிருந்து 'எனக்கு உணர்வு இருக்கிறது' என்ற தவறான முடிவுக்கு நாம் வந்துவிடுகிறோம். நான்தான் உணர்வு என்று அறிவதற்கு பதிலாக நமது மனதில் தோன்றும் அகங்காரம் என்னும் நான் என்ற எண்ணம் இந்த உணர்வுக்கு உரிமை கொண்டாடி 'என்னுடைய உணர்வு' என்ற தவறான அறிவை நமக்கு அளிக்கிறது.
மக்களுக்கு இந்த அறியாமையை தானாக நீக்கிக்கொள்ளும் திறன் பொதுவாக இருப்பதில்லை. ஏனெனில் 'நான் என்னுடைய அறியாமையை நீக்கிக் கொள்ளப்போகிறேன்' என்று முடிவு செய்யும் அகங்காரம் ஒரு முடிவுக்கு வந்தால்தான் நம்மால் நான் இந்த தூய உணர்வு என்ற அறிவை அறிய முடியும். ஊழல் செய்யும் அதிகாரியிடம் ஊழலை ஒழிக்கும் பொறுப்பைக் கொடுத்தால் எப்படி காரியம் நடைபெறாதோ அதே போல் நான் என்ற எண்ணத்தின் ஆதிக்கத்திலிருந்து நமக்கு விடுதலை கிடைக்க நாம் வேதத்தின் பொருளறிந்த ஒரு குருவின் துணையை நாடவேண்டும். அவ்வாறு செய்தால் நம் இதயத்தில் இருக்கும் சிறிய ஆகாசமே பரமன் என்ற உண்மையை நாம் அறிந்து கொள்வோம்.
பயிற்சிக்காக:
1. பரமனை பொதுவாக மனிதர்கள் எந்த இரண்டு இடங்களில் தேடுகிறார்கள்?
2. பிறவிகள் தோறும் இன்பத்தை தேடியலையும் மனிதனின் தேடல் எப்பொழுது முடிவடையும்?
3. இதயத்திலிருக்கும் சிறிய ஆகாசத்தை ஏன் நம்மால் எந்த உபகரணத்தின் உதவியுடனும் அறிய முடியாது?
4. நான் என்ற எண்ணத்திற்கும் நான் என்ற உணர்விற்கும் என்ன உறவு?
5. இதயத்திலிருக்கும் சிறிய ஆகாசத்தை நம்மால் எப்படி அறிய முடியும்?
சுயசிந்தனைக்காக:
1. காணுமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரமனை நம்மால் ஏன் கோவில்களில் தேடி அறிய முடியாது?
2. நாம் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் பொழுது மட்டும் பரமனோடு ஐக்கியமாக இருக்கிறோம் என்பது உண்மையா?
3. தியானத்தின் மூலம் நான் என்ற எண்ணத்தை அகற்றிவிட்டால் நாம் பரமன் என்ற உணர்வு நிலைத்திருக்கும் - இது சரியா?