மனிதன் மட்டுமே பரமனை அறியத்தகுதியுடையவன் என்று கூறியபின் வேதம் பரமன் அனைவராலும் அறியத்தக்கவன் என்கிறது. நாம் அறிந்தாலும் அறியாவிட்டாலும் அனைவரது இதயக்குகைக்குள் உணர்வு மயமாக இருப்பது பரமன். மனிதர்கள் அனைவருக்கும் தன்னுணர்வு இருப்பதால் அந்த உணர்வுதான் பரமன் என்பதை தகுந்த ஆசிரியரின் துணையுடன் அறிந்து கொள்வது அனைவருக்கும் சாத்தியமே.எல்லோரும் பரமனை அறியவே முயற்சி செய்து கொண்டிருப்பதால் அனைவரும் பரமனை அடைவது நிச்சயம்.
உலகப்பள்ளிக்கூடம்
முதல் வகுப்பில் தொடங்கி பத்தாம் வகுப்பு வரை உள்ள ஒரு பள்ளியில் இருக்கும் அனைத்து மாணவர்களும் பள்ளியின் இறுதித்தேர்வில் வெற்றி பெற்று பள்ளிப்படிப்பை முடித்துக் கொள்வார்கள். பத்தாம் வகுப்பு மாணவனுக்கு ஒரு வருடத்தில் சாத்தியமாகும் இந்த காரியத்தை முடிக்க முதல் வகுப்பு மாணவனுக்கு பத்து வருடங்கள் ஆகலாம். ஆனால் நிச்சயம் ஒருநாள் எல்லோரும் பள்ளி படிப்பை படித்து முடித்துவிடுவார்கள். அதே போல இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் தங்களது தொடர்ந்த முயற்சியால் பரமனை அடைந்து விடுவார்கள். ஒரு சிலருக்கு இந்தப்பிறவியிலேயே சாத்தியமாகும் இக்காரியம் வேறு சிலருக்கு இன்னும் பல பிறவிகளுக்கு பிறகு சித்திக்கலாம்.ஆனால் எல்லா உயிரினங்களும் என்றாவது ஒரு நாள் பரமனை அடைவது நிச்சயம்.
இப்பொழுது பள்ளியில் படிக்கும் அனைவரும் என்றாவது ஒரு நாள் பள்ளியை விட்டு சென்றுவிடுவார்கள் என்றாலும் பள்ளிக்கூடம் எப்பொழுதும் காலியாக ஆகப்போவதில்லை. புதிய மாணவர்கள் தொடர்ந்து பள்ளியில் சேர்ந்துகொண்டுதான் இருப்பார்கள். எனவே அனைத்து மாணவர்களும் பள்ளிப்படிப்பை முடித்து சென்றபின்னும் பள்ளியில் தொடர்ந்து மாணவர்கள் இருப்பார்கள். இதேபோல் இவ்வுலகில் உள்ள அனைத்து மானிடர்களும் பரமனை ஒரு நாள் அடைந்து விட்டாலும் இந்த உலகின் ஜனத்தொகை குறைய வேண்டிய அவசியம் இல்லை.
எண்ணிலடங்கா (Infinite) உயிரினங்கள்
மொத்த உயிரினங்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காது. எனவே தொடர்ந்து மனிதர்கள் பிறந்து பரமனை அடையும் முயற்சி நடந்து கொண்டே இருக்கும்.
"அதுவும் பூர்ணம். இதுவும் பூர்ணம். அந்த பூர்ணத்திலிருந்து இந்த பூர்ணம் வந்தது. இந்த பூர்ணம் வெளிவந்த பிறகும் அந்த பூர்ணம் பூர்ணமாகவே தொடர்கிறது," என்று வேதம் கூறுகிறது.
ஆகவே இப்பொழுது உலகில் உள்ள அனைத்து மக்களும் பரமனை அறிந்த பின்னும் பரமனை அறியாத உயிரினங்களின் எண்ணிக்கை அளவிற்குட்படாமலேயே இருக்கும்.
தொடரும் பயிற்சி
ஆண்டுகள் தோறும் படிப்படியாக ஒரு மாணவன் பள்ளியின் இறுதி வருடத்தை நோக்கி முன்னேறுவது போல, மனிதனும் ஒவ்வொரு பிறப்பிலும் செயல் முறை கல்வி பயில்வதன் மூலம் பெற்ற அறிவுடன் மறுபடி பிறந்து பரமனை அறியும் முயற்சியில் தொடர்ந்து முன்னேறுகிறான். ஒரு மனிதன் உறங்க செல்லும்பொழுது அவனிடம் உள்ள அறிவு அவன் ஆழ்ந்த உறக்க நிலையை அடையும் பொழுது ஒடுங்கிய நிலையை அடைந்தாலும் மறுநாள் காலையில் அவன் விழித்தெழும்பொழுது மறுபடியும் அதேவீரியத்துடன் செயல்பட தொடங்குவது போல நாம் இதுவரை வாழ்ந்த அத்தனை பிறவிகளின் அனுபவத்தினால் நமக்கு கிடைத்த அறிவு நம்முடன் தொடர்கிறது. ஆகவே நம் முயற்சியை ஆரம்பத்திலிருந்து தொடங்காமல் சென்ற பிறவியில் நாம் விட்ட இடத்திலிருந்து தொடங்கலாம்.
எனவே அனைவராலும் படிப்படியாக பரமனை அடைவது சாத்தியமே.
நமது தற்போதைய நிலை என்ன?
பள்ளி மாணவன் தற்போது படிக்கும் வகுப்பின் விவரம் நமக்கு தெரிவதால் அவன் படித்து முடிக்க ஆகும் காலத்தை நம்மால் கணக்கிட முடியும். அதே போல நாம் பரமனை அறியும் கடைசி படியில் இருக்கிறோமா அல்லது இப்பொழுதுதான் முதல் படியில் நம் பயணத்தை தொடங்கியுள்ளோமா என்று நமக்கு எப்படி தெரியும்?
நாரதர் ஒருமுறை கைலாயம் செல்லும் வழியில் இரு முனிவர்கள் அவரிடம் தாங்கள் முக்தி பெற இன்னும் எத்தனை பிறவிகள் எடுக்க வேண்டும் என்று அறிந்து சொல்லுமாறு வேண்டிக்கொண்டனர். தன் பணியை முடித்துவிட்டு திரும்பும் வழியில் நாரதர் ஒரு முனிவரிடம் இதுதான் உங்களுக்கு கடைசி பிறவி, நீங்கள் நிச்சயம் முக்தி அடைந்துவிடுவீர்கள் என்று கூறினார். அதை கேட்டு மகிழ்ந்த அந்த முனிவர் எப்படியும் முக்தி கிடைத்துவிடும் என்ற நினைப்பில் இமய மலையை விட்டு நகரத்திற்கு வந்து மாடு, மனை, மனைவியென்று உலக வாழ்வில் உழல ஆரம்பித்தார். நாரதர் அடுத்த முனிவரிடம் ஒரு மரத்தை காண்பித்து அந்த மரத்தின் உள்ள இலைகளின் எண்ணிக்கைக்கு சமமான பிறப்புக்களுக்கு பிறகுதான் உங்களுக்கு முக்தி என்றார். அதை கேட்ட அந்த முனிவர் எண்ணிலடங்கா பிறவிகள் என்பதற்கு பதில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் அது கைகூடும் என்ற நல்ல செய்தியை கூறிய நாரதருக்கு நன்றி சொல்லிவிட்டு தான் முக்தி பெறும் முயற்சியை தொடர்ந்தார். நாரதர் இருவருக்கும் உண்மையை மாற்றி கூறியிருந்தார்!
நாம் பரமனை அடைய எந்த படியில் இருக்கிறோமென்பது முக்கியமில்லை. நாம் எவ்வளவு தீவிரமாக முயற்சிக்கிறோம் என்பதை பொறுத்தே எவ்வளவு காலம் என்பது நிர்ணயக்கப்படும். ஒரு ஊருக்கு சரியான திசையில் பயணம் செய்யும்பொழுது எவ்வளவு வேகமாக பயணிக்கிறோம் என்பதை பொறுத்தே எப்பொழுது ஊர் சென்று சேருவோம் என்பது நிர்ணயக்க படுகிறது. எனவே நாம் பரமனை அடைய முழுமுயற்சியுடன் ஈடுபடுவது மட்டுமே முக்கியம்.
முடிவுரை :
ஒரு பானை உடைந்து போனால் குயவன் 'பானை' என்ற சொல்லின் பொருளுக்கேற்றவாரு இன்னொரு பானையை செய்து விடுவது போல இந்த உலகம் அழிந்த பின் வேதத்தில் விளக்கப்பட்டபடி மறுபடியும் இவ்வுலகத்தை இப்பொழுதிருப்பது போலவே உருவாக்கும் வல்லமை படைத்தவன் இறைவன். ஆகவே நாம் நாமாகவே தொடர்ந்து பிறந்து பரமனை அடையும் முயற்சி தொடரும். உலகம் அழிந்தாலும் இந்த பயணம் முடிந்து விடாது. எனவே நாம் பரமனை அடையும் நம் முயற்சியை தொடர்ந்து தீவிரமாக செய்து கொண்டிருக்க வேண்டும்.
முயற்சி திருவினையாக்கும். நம் முயற்சியால் நாம் அனைவரும் நிச்சயம் பரமனை ஒரு நாள் அடைந்து விடுவோம்.
பயிற்சிக்காக :
1. அனைவரும் பரமனை அடைந்த பின் இவ்வுலகில் உயிரினங்கள் இருக்குமா?
2. பரமனை அடைய எவ்வளவு காலம் இருக்கிறது என்பது எதை பொறுத்து முடிவு செய்யப்படுவது?
3. பரமனை அறிய நாம் எடுக்கும் முயற்சி மரணம் ஏற்பட்டால் தடை பட்டு போய்விடுமா?
4. உலகமே அழிந்து விட்டால் நாம் இது வரை எடுத்த முயற்சிகள் வீணாகிவிடும் என்பது உண்மையா?
சுயசிந்தனைக்காக :
1. முக்தி பெறுவது என்றால் என்ன?
2. முக்தி பெற உலக வாழ்க்கையை விட்டு துறவு மேற்கொள்வது அவசியமா?
3. இரண்டு பூரணங்கள் இருப்பது சாத்தியமா?