Wednesday, March 17, 2010

பாடம் 034: இருபத்தியைந்து தத்துவங்கள் (பிரம்ம சூத்திரம் 1.4.11-13)

பிருஹதாரண்யக உபநிஷத் மந்திரம் ஒன்று ஐந்தைந்தான ஐந்து குழுமங்களின் மூலமாக படைப்பை விளக்குகிறது, இந்த இருபத்தி ஐந்து தத்துவங்களை சரியாக தெரிந்து கொண்டால் 'நான் பரமன்' என்ற அறிவில் நிலைக்க உதவியாயிருக்கும். தத்துவம் என்ற சொல்லுக்கு உண்மை என்று பொருள். வேதத்தை முறையாக பயின்று அதன் கருத்துக்களை தீர விசாரித்த பின்னரே நமக்கு சரியான தத்துவம் என்ன என்று தெரிய வரும். உபநிஷத்தில் கூறப்பட்ட இந்த இருபத்தைந்தையும் தத்துவங்கள் என்று பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள். இந்த தவறான கருத்தை நீக்கி இருப்பது பரமன் என்ற ஒரே தத்துவம்தான் என்று விளக்குவதுதான் இந்த பாடத்தின் நோக்கம்.

முதல் ஐந்து குழுமம்: பஞ்சபூதங்கள்

வெளி, காற்று, நெருப்பு, நீர், நிலம் என்ற பஞ்சபூதங்களை ஆதாரமாக கொண்டுதான் மீதி இருபது தத்துவங்களும் இருக்கின்றன. ஆனால் நாம் சென்ற பாடத்தில் பயின்ற படி இந்த பஞ்ச பூதங்கள் பரமனின் மாயா சக்தியின் அதிரலைகள் மூலமாக இருப்பது போன்ற தோற்றமளிப்பவை. எனவே இந்த பிரபஞ்சம் ஒரு மாயா தோற்றம்உண்மையில் இருப்பது பரமன் மட்டும்தான்

இரண்டாம் ஐந்து குழுமம்: ஐந்து பிராணன்கள்

பஞ்சபூதங்களின் கூட்டமைப்பில் தோன்றியவை பிராண வாயு, அபாண வாயு, சமான வாயு, உதான வாயு மற்றும் வயான வாயு என்ற ஐந்தும். அனைத்து உயிரினங்களின் இயக்கத்திற்கு உறுதுணையாய் இருப்பவை இந்த ஐந்து வாயுக்கள். பிராண வாயு சுவாசிப்பதற்கும், அபாண வாயு இனபெருக்கத்திற்கும், சமான வாயு பசி மற்றும் ஜீரணத்திற்கும், வயான வாயு உடலின் பலத்திற்கும் காரணமாயிருப்பவை. உதான வாயு என்பது மரண தருவாயில் நமது நுண்ணிய உடலை பருவுடலிலிருந்து பிரிப்பதற்கு உதவியாயிருப்பது. ஆக உடல் உயிரோடிருப்பதற்கும் இறப்பதற்கும் அவசியமானவை இந்த ஐந்து வாயுக்களும். இத்துணை முக்கியத்துவம் வாய்ந்தவையாயிருப்பினும் இவை மாயமான பஞ்சபூதங்களிலிருந்து தோன்றியதால் இவற்றை தத்துவங்கள் என்று கூறமுடியாது.

மூன்றாம் ஐந்து குழுமம்: ஐந்து புலன்கள்

ஆகாயத்திலிருந்து செவியும், காற்றிலிருந்து மெய்யும், நெருப்பிலிருந்து கண்ணும், நீரிலிருந்து சுவைக்கும் நாக்கும் நிலத்திலிருந்து மூக்கும் உருவாக்கப்பட்டன.

ஐந்து புலன்களும் பஞ்சபூதங்களிலிருந்து தோன்றியவை என்பதால் இவற்றையும் தத்துவங்கள் என்று கூற முடியாது.

நான்காம் ஐந்து குழுமம்: ஐந்து கரணங்கள்

கை, கால், பேசும் நாக்கு, எருவாய், கருவாய் என்ற ஐந்தும் நமது ஐந்து கரணங்கள். கை, கால், பேசும் நாக்கு இவை மூன்றும் மனதின் நேரடி மேற்பார்வையில் செயல் படுவன. எருவாய் என்பது சமானன் வாயுவினால் இயக்கப்பட்டு உண்ட உணவிலிருந்து உடலுக்கு வேண்டிய சக்தியை எடுத்துகொண்டு எஞ்சியதை வெளியேற்றும் குடல், சிறுநீரகம் போன்ற அனைத்து உறுப்புகளை குறிக்கும். கருவாய் என்பது அபானன் வாயுவினால் இயக்கப்பட்டு இனபெருக்கத்துக்கு உதவியாயிருக்கும் உறுப்புகளை குறிக்கும்.

ஆகாயத்திலிருந்து பேசும் நாக்கும், காற்றிலிருந்து கைகளும், நெருப்பிலிருந்து கால்களும், நீரிலிருந்து கருவாயும், நிலத்திலிருந்து எருவாயும் உருவாக்கப்பட்டன.

நமது இந்த ஐந்து கரணங்களும் இவ்வளவு முக்கியமான செயல்களை செய்தாலும் இவை பஞ்ச பூதங்களிலிருந்து தோன்றியதால் இவற்றை தத்துவங்களாக கருத முடியாது.

ஐந்தாம் ஐந்து குழுமம்: உடலும் மனமும்

நமது மனம் என்பது மனம், புத்தி, சித்தம் மற்றும் அகங்காரம் என்ற நான்கு தத்துவங்களை உள்ளடக்கியது. இவற்றோடு நமது பருவுடலை சேர்த்து இந்த ஐந்தாம் குழுமத்தில் உள்ள ஐந்து உறுப்பினர்களை நாம் கணக்கிடலாம்.

மேலே குறிப்பிடபட்ட ஐந்து பிராணவாயுக்களும், ஐந்து புலன்களும், ஐந்து கரணங்களும், மனதின் நான்கு பகுதிகளும் சேர்த்த 19ம் நமது நுண்ணிய உடலை சேர்ந்த உறுப்புக்கள். நமது நுண்ணிய உடல் செயல்பட இயங்கு தளமாயிருப்பது நமது பருவுடலாகும்.

பருவுடலும் பஞ்சபூதங்களின் சேர்க்கையே.

பரமனும் இருபத்தி ஐந்து 'தத்துவங்களும்'.

மேலே விளக்கப்பட்டது போல இந்த இருபத்தைந்தையும் தத்துவங்கள் என்று பொதுவாக நினைக்கும் அறியாமை விலகி வேதத்தில் கூறியுள்ள பரமனை மட்டுமே உண்மை என்பதை உணரவேண்டும்.

முடிவுரை :

பரமன் மட்டுமே உண்மை. பரமனின் மாயா சக்தியின் வெளிப்பாடு பஞ்சபூதங்கள். பஞ்சபூதங்களின் சேர்க்கையால் நமது பருவுடல் உட்பட்ட அனைத்தும் தோன்றுகின்றன. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கும் நுண்ணிய உடலை சேர்ந்தவையாயிருந்தாலும் அவையும் பஞ்சபூதங்களின் கலவையினாலேயே ஏற்பட்டவை. இதே போல் நம் நுண்ணிய உடலை சேர்ந்த ஐந்து பிராண வாயுக்களும், ஐந்து புலன்களும் மற்றும் ஐந்து கரணங்களும் பஞ்சபூதங்களின் நுண்ணிய நிலையிலிருந்து உருவாக்கப்பட்டவை.

நான் இருக்கிறேன் என்பது நமக்கு திட்டவட்டமாக எவ்வித சந்தேகமும் இன்றி எந்த புலன்களின் உதவியுமில்லாமல் நமக்கு தெளிவாக தெரிகிறது. நான் சில நேரம் இருக்கிறேன். சில நேரங்களில் இருப்பதில்லை என்ற நிலை ஏற்படுவதில்லை. எனவே நான் ஒரு உண்மையான தத்துவமாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் நான் என்ற சொல்லில் பொதுவாக நாம் சேர்த்துக்கொள்ளும் இந்த இருபத்தி ஐந்து தத்துவங்களும் இருப்பது போல தோற்றமளிக்கும் மாயை. எனவே நான் என்பதற்கு அவை பொருளாக இருக்க முடியாது. எனவே எஞ்சி இருக்கும் பரமன்தான் நானாக இருக்க வேண்டும்.

பயிற்சிக்காக :

1. இருபத்தி ஐந்து தத்துவங்கள் யாவை?

2. இவற்றை தத்துவங்கள் என்று குறிப்பிடுவது ஏன் தவறாகும்?

3. எந்த பூதங்களிலிருந்து கை, கால் மற்றும் பேசும் நாக்கு ஆகிய நுண்ணிய கரணங்கள் ஏற்படுத்தப்பட்டன?

4. நான் பரமன் என்ற முடிவுக்கு நம்மால் எவ்விதம் வரமுடியும்?


சுயசிந்தனைக்காக :

1. பஞ்சீகரணம் என்றால் என்ன?


2. பிரளயத்தின் போது எந்த விதத்தில் இந்த இருபத்தைந்து தத்துவங்களும் அழிக்கப்படும்?