Monday, March 8, 2010

பாடம் 028: அனைவரது நாடி துடிப்பது பரமனாலே (பிரம்ம சூத்திரம் 1.3.39)

இந்த பிரபஞ்சம் இயங்குவது பரமனால் மட்டுமே. நுண்ணுயிர்களில் தொடங்கி உலகிலேயே மிகப்பெரிய உயிரினமான திமிங்கிலம் வரை அனைத்து உயிரினங்களின் செயல்பாட்டுக்கும் பரமன் மட்டுமே காரணம். அதேபோல நட்சத்திரங்கள், கோள்களில் தொடங்கி மிகச்சிறிய அணுவரை உள்ள அனைத்து உயிரற்ற பொருள்களின் இயக்கத்திற்கும் பரமன் மட்டுமே காரணம். வேதம் இந்த மாபெரும் இயக்கத்தில் நம்முடைய பங்கு ஒன்றுமில்லை என்பதை இந்த பாடம் மூலம் விவரிக்கிறது.

மனிதனின் சிறப்பும் மனிதர்களின் அற்பதன்மையும்

தன்னுணர்வு (Self awareness), சுயமுயற்சி (Freewill), பகுத்தறிவு (Discrimination) மற்றும் புத்தி கூர்மையுடன் கூடிய ஆழ்ந்து ஆராயும் திறன் ஆகியவை மனிதனிடம் மட்டுமே இருப்பதால் இந்த பிரபஞ்சத்தின் மிகசிறப்பான படைப்பாக மனிதன் திகழ்கிறான். அதே வேளையில் மனித இனம் மிக அற்பமானது. பிரபஞ்சத்தின் அளவையோ வயதையோ அதிலுள்ள உயிரினங்களின் வகைகளையோ எண்ணிகையையோ மனித இனத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் மனித இனத்தின் முக்கியமற்ற தன்மை விளங்கும்.

மனிதனை பரமன் என்ற நோக்கில் பார்த்தால் சிறியது பெரியது என்ற பாகுபாட்டிற்கே வழியில்லை. இருப்பது பரமன் மட்டுமே. இந்த பிரபஞ்சம் இருப்பது போல தோன்றும் ஒரு மாயத்தோற்றம். ஆனால் இந்த கால தேச கட்டுப்பாட்டிற்குட்பட்ட மனிதன் எனும் நோக்கில் அவன் மிக அற்பமானவன். கடவுளின் படைப்பில் எவ்வித முக்கியத்துவமும் இல்லாதவன் மனிதன் என்பதை கீழ்வரும் இரு ஆய்வுகளின் மூலம் அறியலாம்.

1. மனிதர்களை உள்ளடக்கியது அண்ட சராசரங்களின் இயக்கம்

இந்த பிரபஞ்சம் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை நடந்த நிகழ்வுகளை அறிவியல் கண்ணோட்டத்தின் படி பார்த்தால் மனிதனின் பாதிப்பு என்று எதுவுமில்லை என்பது விளங்கும். தட்ப வெப்ப நிலையில் மாறுதல், புவி சூடாதல் (Global warming) மற்றும் பல்வேறு இயற்கையின் மாறுபாடுகளுக்கு மனிதனே காரணம் என்பதும் இந்த உலகத்தின் எதிர்காலம் கடவுளின் கையிலிருந்து மனிதனின் பொறுப்புக்கு மாற்றப்பட்டுவிட்டது என்பதும் மனிதனுக்கு மட்டுமீறிய மரியாதை கொடுக்கும் கூற்றுகளாகும்.

இயற்கையோடு ஒன்றி வாழ்வது என்பது பரமனை உணர்ந்த ஞானிகளால் மட்டும்தான் முடியும். ஏனெனில் நான் பரமன் என்று உணர்ந்தாலன்றி நாம் வேறு இந்த பிரபஞ்சம் வேறு என்ற எண்ணம் மனதில் இருக்கும். எனவே சுயநலத்திற்காக இயற்கை வளத்தை சூறையாடும் செயல் குறையாது.

அனைவராலும் பரமனை அறிய முடியாது என்ற காரணத்தால் குறையாத இன்பத்தை தேடியலையும் மனிதர்களின் செயல்கள் மரங்களை வெட்டி கழிவரை தாள்களாக (Toilet paper) மாற்றுவது முதல் பொருளாதார வளர்சிக்காக காடுகளை அழித்து இயற்கை சூழலை மாசுபடுத்துவது வரை தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். ஆகவே மனிதனால் சூழலுக்கு நிகழும் பாதிப்பு இயற்கையானதே. மனிதனின் இந்த அறியாமையால் உலகம் அழிந்து விடுமென்ற அச்சம் அவசியமற்றது. மனிதனின் சக்தி இயற்கையின் சக்திக்குமுன் மிக அற்பமானது. அது மட்டுமல்லாமல் மனிதர்கள் எப்பொழுதும் ஒத்த கருத்துடன் செயல் பட மாட்டார்கள். பொருளாதார நிபுணர்கள், விஞ்ஞானிகள், இயற்கை ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் என்ற அனைத்து தரப்பினரும் ஒருவருக்கொருவர் முரண்பட்டு தங்களையறியாமல் தானே சரிசெய்து கொள்ளும் (Self-correcting) மனித சமுதாயமாக செயல் பட்டு கொண்டிருப்பதால் இயற்கையின் மாற்றத்தில் எவ்வித பாதிப்பும் அவர்களால் ஏற்படாது.

2. மனிதனும் மற்ற உயிரினங்களும்

இவ்வுலகில் இதுவரை பல்லாயிரக்கணகான உயிரினங்கள் தோன்றி மறைந்துள்ளன. மனிதன் தன் அறிவுத்திறனால் மற்ற உயிரினங்களின் மேல் ஆதிக்கம் செலுத்துவது போலவும் அவற்றின் வாழ்வுக்கும் சாவுக்கும் அவன்தான் பொறுப்பேற்று கொண்டிருப்பது போலவும் தோன்றுவது ஒரு பிழையான தோற்றம். உண்மையில் ஒரு எறும்பின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தி கூட மனிதனுக்கு கிடையாது. அந்தந்த கால கட்டத்திற்கேற்ப புதிய உயிரினங்கள் தோன்றுவதும் இருப்பவை மறைவதும் இயற்கை நியதி. இந்த நியதியை ஒருசில மிருக காட்சிசாலைகள் அல்லது வனகாப்பகங்கள் அமைப்பது மூலமாக மாற்றிவிடமுடியாது. நடப்பவை அனைத்தும் சரியாகவே நடக்கின்றன.

முடிவுரை :

நாம் இந்த உலகின் பராமரிப்புக்காகவோ மற்ற உயிரினங்களின் நல்வாழ்வுக்காகவோ செய்ய வேண்டியது என்று குறிப்பாக ஏதுமில்லை. சுயநலத்துடன் நான் குறைவில்லாத இன்பத்தை அடைய வேண்டும் என்று வேதம் காட்டும் முயற்சியில் ஈடுபட்டால் மட்டுமே போதும். ஆனால் பெரும்பாலான மனிதர்கள் இன்பம் இருப்பது இந்த உலகத்தில் என்ற தவறான அறிவுடன் இயற்கை வளங்களை தேவைக்கு அதிகமாக உபயோகப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். அத்தகையோரின் செயல்பாட்டால் இயற்கை மாசு அடைவது போல் தோன்றினாலும் பரிணாம வளர்ச்சியில் இதுவும் ஒரு கட்டம். மனிதர்கள் உலகத்தில் இன்பத்தை தேடி அது அங்கு கிடைக்காது என்று உறுதியாக தெரிந்த பின்தான் பரமனைத் தேட ஆரம்பிப்பார்கள்.

பொருளாதார வளர்ச்சி இன்பத்தை கொடுக்கும் என்று மக்கள் உழைக்கும்பொழுது அவர்கள் மனம் பக்குவபடும். எனவே பொருளாதார வளர்ச்சியும் அதன் காரணமாக இயற்கைக்கு நேரும் சேதாரமும் மக்களின் மனம் பக்குவப்பட தேவைப்படும் முயற்சியின் உடன்விளைவுகள் (by-products).

இந்த பிரபஞ்சம் என்பது மக்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்கள் இன்பதுன்பங்களை பெறவும் தொடர்ந்து பயிற்சி செய்து பரமனை அறிந்து கொள்வதற்காகவும் அமைக்கப்பட்ட ஒரு களம். எப்படி கால் பந்தாட்ட வீரர்களால் ஆட்டகளத்தை அழித்து விட முடியாதோ அது போல மக்களின் செயல்பாட்டால் இந்த பிரபஞ்சத்திற்கோ அதில் உள்ள மற்ற உயிரினங்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது.

அனைவரது நாடியும் துடிப்பது பரமனால் மட்டுமே என்பதால் இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தில் மனிதர்களின் பங்கு என்று தனியாக ஒன்றும் கிடையாது. மனிதர்களின் அனைத்து செயல்களும் இயற்கையின் ஒரு பகுதிதான்.


பயிற்சிக்காக :

1. மனிதன் எந்த வகையில் சிறப்பு வாய்ந்தவன்?

2. மனித குலம் எந்த வகையில் அற்பமானது?

3. மனிதன் இயற்கையை அளவுக்கு அதிகமாக சூறையாடுவதன் (Exploitation of the nature) உள்நோக்கம் என்ன?

4. இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டதன் இரு நோக்கங்கள் யாவை?

5. பொருளாதார வளர்ச்சிக்கும் மனித மனம் பக்குவமடைவதற்கும் என்ன சம்பந்தம்?

சுயசிந்தனைக்காக :

1. வல்லரசுகளிடையே போர் ஏற்பட்டு அணுகுண்டுகள் உபயோகிக்கப்பட்டால் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் மறையுமா?

2. மனிதனின் செயலால் ஒரு சில அல்லது மிகப்பல உயிரினங்கள் மறையும் நிலை ஏற்பட்டால் என்ன (தவறு)?

3. பனிப்பாறைகள் உருகுவது என்பதும் கடல் மட்டம் அதிகரிப்பதும் மனிதன் இவ்வுலகில் தோன்றுவதற்கு முன்னால் நடை பெறவில்லையா?


4. மனம் பக்குவமடைவது என்றால் என்ன?