Thursday, March 18, 2010

பாடம் 035: முரண்பாடற்ற முதல் தத்துவம் (பிரம்ம சூத்திரம் 1.4.14-15)

பல உபநிஷதங்கள் இந்த உலகம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்று விளக்கம் தருகின்றன. அவை ஒன்றுக்கொன்று முரண்படுவதுபோல் தெரிந்தாலும் பரமன்தான் உலகின் ஆதாரம் என்பதில் எவ்வித முரண்பாடும் இல்லையென்பதை நமக்கு தெரிவிக்க வேதம் இந்த பாடத்தில் உலகின் தோற்றம் பற்றிய சில கருத்துக்களை தருகிறது.

விளக்கங்களும் சாராம்சமும்

ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் என்று உலகம் படிப்படியாக தோன்றியது என்று பெரும்பாலான இடங்களில் வேதத்தில் கூறப்பட்டிருந்தாலும் ஒரு சில இடங்களில் உலகம் ஒளி அல்லது நெருப்பிலிருந்து தோன்றியது என்றும் மற்ற இடங்களில் வேறு சில மாற்றங்களுடனும் உலகத்தின் தோற்றம் விவரிக்கப் பட்டிருக்கிறது. இவை முரண்பாடுகள் அல்ல. காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்றவாறு கதைகள் மாறினாலும் கருத்துக்கள் மாறுவதில்லை. மலேஷியா அல்லது தாய்லாந்து போன்ற நாடுகளில் இந்தியாவில் கூறப்படும் விதத்திலிருந்து இராமாயணம் வெகுவாக மாறியிருந்தாலும் அடிப்படை கருத்துக்களில் எவ்வித மாற்றமும் கிடையாது.

வேதம் படைப்பை பற்றி விளக்கி அதன் மூலம் சொல்ல வரும் கருத்து நாம் கண்ணால் பார்க்கும் இவ்வுலகம் மாயை என்பதாகும். நமது நோக்கம் இந்த முடிவை புரிந்து கொள்வதே தவிர விளக்கங்களில் முரண்பாடுகளை கற்பிப்பதாக இருக்க கூடாது. உதாரணமாக எட்டு அடி நீளம் உள்ள ஒரு கயிற்றை மாலையும் இரவும் சந்திக்கும் அந்தி வேளை இருட்டில் ஒருவன் பார்த்து அதை பாம்பு என நினைத்து பயபட்டான். பின் அவனுடைய நண்பன் உண்மையை விளக்கியவுடன் அது பாம்பு இல்லை வெறும் கயிறுதான் எனத்தெரிந்து கொண்டான். அதன் பின் அவன் பார்த்தது எந்த வகை பாம்பு, நல்ல பாம்பா, மலை பாம்பா, எட்டு அடி நீளம் உள்ள பாம்புக்கு விஷம் இருக்குமா என்பது போன்ற கேள்விகளால் எந்த பயனும் இல்லை.

உலகம் படிப்படியாக தோன்றியதா அல்லது ஒரு கணத்தில் முழு பரிணாமம் பெற்ற உலகமாக தோன்றிதா என்பதை ஆராயாமல் அதை மாயை என்று மட்டும் நாம் புரிந்து கொண்டால் போதும். மூன்று நிமிடம் நாம் காணும் கனவில் முப்பது வயதான ஒரு மனிதரை சந்திக்கிறோமெனில் அவர் அந்த கணத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும். அவரால் எப்படி 'ஐந்து வருடத்துக்கு முன் நீ என்னிடம் வாங்கிய பத்து லக்ஷம் ருபாயை திருப்பிக்கொடு' என்று கேட்க முடியும் என்று நாம் கனவிலிருந்து விழித்தவுடன் விவாதிப்பதில்லை. கனவு என்று புரிந்து கொண்டால் கடனை திருப்பிகொடுக்கவேண்டிதில்லை என்ற நிம்மதி ஏற்பட்டு விடும்.

புத்தர் கூறியதைப்போல அம்பினால் அடிபட்டு கீழே விழுந்த புறாவின் துன்பத்தை நாம் எப்படி நிவர்த்திக்க போகிறோம் என்பதில் நம் கவனமும் செயலும் இருக்க வேண்டுமே தவிர அம்பு எந்த திசையிலிருந்து வந்தது, அம்பை எய்தவன் யார், அவன் நோக்கம் என்ன என்ற அவசியமில்லாத விவரங்களில் நேரத்தை வீணடிக்க கூடாது.

நாம் இன்பமாக இருப்பதற்கு பதில் துன்பபட்டுகொண்டிருப்பதற்கு காரணம் இந்த உலகம் உண்மை என்று நினைத்துக் கொண்டிருப்பதால்தான். இதை விளக்க வேதம் ஒரு குணங்களுமில்லாத பரமனின் மாயா சக்தியால் இந்த உலகம் இருப்பது போல் காட்சியளிக்கிறது என்கிறது. இந்த கருத்தை விளக்கவே தோற்றம் பற்றிய பல்வேறு கருத்துக்களை பல்வேறு இடங்களில் வெவ்வேறு முறையில் கூறுகிறது. சாரம்சம் ஒன்றுதான். அதில் எந்த மாறுதலோ கருத்து வேறுபாடோ இல்லை.

உண்மையும் பொய்யும்

சரித்திரம், செய்தி தாள்கள், நமது சொந்த நாட்குறிப்பு ஆகியவை நடைமுறை வாழ்வில் நமக்கு உபயோகமாக இருந்தாலும் இவற்றின் முக்கியமான ஒரு குறைபாட்டை நாம் உணர வேண்டும். இவை இல்லாத உலகத்துக்கு ஒரு இருப்பை கொடுக்கின்றன. நம் கண் காது போன்ற புலன்கள் உலகம் என்று ஒன்று நிச்சயமாக இருக்கிறது என்று கூறுவதில்லை. இந்த கணத்தில் இந்த காட்சி தெரிகிறது என்று மட்டும்தான் கண் கூறுகிறது. காணும் காட்சி உண்மை என்று தவறாக முடிவு செய்வது அறியாமையுடன் கூடிய நமது மனம். சரித்திரம், செய்திதாள்கள் போன்றவை நடப்பவை உண்மை என்று பொய் சாட்சி சொல்கின்றன.

காலம் (தேதி), இடம், பெயர்கள் இவற்றைத்தவிர தினசரி செய்தித்தாள்களில் வேறு ஒன்றும் மாறுவது கிடையாது. காலம், தேசம், பெயர்கள் ஆகியவை நமது கற்பனை என்று ஏற்கனவே வேதம் விளக்கியுள்ளது. தொடர்ந்து மாறும் உலகத்தை மாறுகிறது என்று கூறுவது புதிய செய்தி அல்ல. என்னென்ன மாற்றங்கள், எவ்வித மாற்றங்கள் என்பதை பற்றிய அறிவு நாம் நிலையான மாறாத பரமன் என்று அறிந்தவர்களுக்கு வெறும் பொழுதுபோக்கு செய்தி. ஞானிகள் முன்தினம் நிறைய பங்குகளில் முதலீடு செய்திருந்தாலும் 'இன்று பங்கு சந்தையில் சரிவு' என்ற செய்தியை வாசிப்பது அவர்களுக்கு சோகமான ஒரு திரைப்படத்தின் விமரிசனத்தை படிப்பது போலிருக்கும்.

இருப்பது போல் காட்சியளிக்கும் உலகிற்கு பொய் சாட்சி கூறுபவை சரித்திரம் மற்றும் செய்தித்தாள்கள் என்ற அறிவுடன் அவற்றை படித்தால் இது ஏன் இப்படி நடந்தது, அவர் ஏன் பொய் சொல்லுகிறார், நாளை என்ன நடக்கும் என்பது போன்ற கேள்விகள் நமது மனதில் எழாது. செய்தித்தாள்களுக்கும் சினிமா அல்லது விளையாட்டு பற்றிய பத்திரிக்கைகளுக்கும் எவ்வித வேறுபாடும் தெரியாது. நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் என் பொழுதுபோக்குக் காகவும் கேளிக்கைக்காகவும் மட்டுமே என்று புரிந்தபின் ஏன், எப்படி என்ற கேள்விகள் மறைந்துவிடும். உலகம் பிறந்தது எனக்காக, ஒடும் நதிகளும் எனக்காக, மலர்கள் மலர்வது எனக்காக என்று அறிந்து கொண்டு உலக வாழ்வை ரசிக்க ஆரம்பித்துவிடுவோம்.

முடிவுரை :

உலகம் மாயை. பரமன் உண்மை. ஒரு பொய்யை கூறுவதற்கு ஒரு அடிப்படை வேண்டும். உண்மையில்லாமல் பொய் கூற முடியாது. பொய்யான பாம்பை பார்க்க உண்மையான கயிறோ அல்லது நிலத்தில் ஒரு பிளவோ அல்லது வேறு எதோ ஒரு உண்மையான ஆதாரமோ இருக்க வேண்டும். பயத்தை போக்க உண்மையை ஆய்ந்து அறியவேண்டும். அதை விடுத்து பொய்யான பாம்பின் தோற்றம் பற்றி ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தால் அதற்கு ஒரு முக்கியத்துவம் ஏற்பட்டு நமது பயம் அதிகமாகிவிடும். அதே போல் இந்த பொய்யான உலகம் எப்படி தோன்றியது என்று ஆராய்ச்சியில் ஆழ்ந்தால் உலகம் உண்மை என்ற அறியாமை அதிகமாகி நாம் மீளாதுன்பத்தில் ஆழ்வோம். எனவே பாம்பின் ஆதாரமான கயிற்றை அறிந்தவுடன் பாம்பின் பயம் நம்மை விட்டு அகலுவதைப்போல இந்த உலகின் ஆதாரமான பரமனை அறிந்தவுடன் நமக்கு கோபம், பயம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம் போன்ற அனைத்து துயரங்களும் நம்மை விட்டு நீங்கிவிடும்.

எனவே உலகின் ஆரம்பத்தை ஆய்வதை விட்டு அதன் அடிப்படையான பரமனை அறிவதற்கு மட்டுமே நாம் முயல வேண்டும்.

பயிற்சிக்காக :

1. உலகம் எவ்வாறு தோன்றியது?

2. செய்தித்தாள்களை படிப்பதில் என்ன தவறு?

3. பாம்பு-கயிறு உதாரணத்தின் மூலம் நமக்கு தெரியவரும் படிப்பினை என்ன?

சுயசிந்தனைக்காக :

1. பொய்யை ஆராய்ந்தால் உண்மை புலப்படுமா?

2. உலகம் மாயை என்று தெரிந்து கொள்ளாமல் பரமன் உண்மை என்று மட்டும் தெரிந்து கொண்டால் குறையாத இன்பம் நமக்கு கிடைக்குமா?