Wednesday, March 3, 2010

பாடம் 024: அனைத்தும் ஒளிருவது பரமனாலே (பிரம்ம சூத்திரம் 1.3.22-23)

சந்திரனின் ஒளிக்கு எப்படி சூரியன் காரணமோ அது போல இந்த பேரண்டத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்கள் மற்றும் நெருப்பு, மின்னல், மின்மினி பூச்சி போன்ற அனைத்தின் ஒளிரும் தன்மைக்கு பரமனே காரணம் என்று வேதம் கூறுகிறது. இதன் மூலம் இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஆதாரமாயிருப்பது பரமன் என்ற கருத்தையும் விளக்குகிறது.

மாறா பரமனும் மாறும் மாயையும்

கடவுள் மாயாசக்தியுடன் கூடிய பரமன். மாய சக்தியின் வெளிப்பாடுதான் இந்த பிரபஞ்சம். கடவுள் இந்த மாயா சக்தியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளான்.

நான் பரமன். என் உடல், மனம் ஆகியவை மாயாசக்தியின் கட்டுபாட்டிற்குட்பட்டு செயல் படுகின்றன.

பரமன் மாறாமல் எந்த செயலும் புரியாமலும் இருப்பவன். செயல்வடிவமாகவும் மாறும் பொருட்களுமாகவும் உள்ள இந்த பிரபஞ்சம் பரமனின் மாயா சக்தி.

என் மனதாலும், வாக்காலும், உடலாலும் செய்யும் அனைத்து செயல்களும் என்னுடைய செயல்கள் என்று நினைப்பது அறியாமை. நான் என்ற சொல்லுக்குள்ள மூன்று விதமான பொருள்களை ஆராய்ந்து இந்த அறியாமையை நாம் நீக்கிக்கொள்ள வேண்டும்.

நான் யார்? / என் செயல்கள் யாவை? - மூன்று பதில்கள்

நான் என்ற சொல்லுக்கு பரமன் என்ற பொருளை எடுத்துக் கொண்டால் நான் எதனுடனும் சம்பந்தப்படாமல், அனைத்துக்கும் சாட்சியாக அறிவுருவாக ஆனந்த மயமாக இருப்பவன். என் செயல்கள் என்று எதுவும் கிடையாது.

நான் என்ற சொல்லுக்கு அகங்காரம் என்று பொருள் கொண்டால், என்னால் எதுவும் செய்யமுடியாது. ஏனெனில் அகங்காரம் என்பது என் மனதில் தோன்றும் எவ்வித சக்தியுமில்லாத ஒரு சாதாரணமான எண்ணம். என் வசமில்லாமல் தோன்றும் மற்ற எண்ணங்களை 'எனது' எண்ணங்களென்றும் என் வாக்காலும் உடலாலும் செய்யப்படும் செயல்களை 'எனது' செயல்கள் என்றும் தவறாக சொந்தம் கொண்டாடுவது மட்டுமே இந்த அகங்காரத்தின் செயல். என்னைச்சுற்றி நடைபெறும் செயல்களினால் தோன்றும் வெற்றி/தோல்வி, லாப/நஷ்டம், மான/அவமானம் போன்ற விளைவுகளுக்கு அனாவசியமாக பொறுப்பேற்றுக்கொண்டு அதனால் மகிழ்ச்சியோ வருத்தமோ அடைவதுதான் இந்த அகங்காரத்தின் நிலை.

நான் என்ற சொல்லுக்கு உடலும் மனமும் சேர்ந்த கலவை என்ற பொருள் கொண்டால் அவை மாயையின் வசத்தில் ஓயாமல் மாற்றமடைந்து கொண்டும் செயல் பட்டுக்கொண்டும் இருப்பவை. இவற்றை செயல்படுத்தாமலிருப்பதோ அல்லது எப்படி செயல்படுத்துவது என்பதிலோ எனக்கு எவ்வித சுதந்திரமும் கிடையாது.

நிகழ்பவை அனைத்தும் மாயையின் செயல் என்பதை அறிந்து கொண்டால் நமக்கு எவ்வித கவலையும் இருக்காது.

உயர்வும் தாழ்வும் அவன் செயல்.

எல்லாம் கடவுளின் செயல் என்பது உண்மையானாலும் கடவுள் செயல்படுவது உயிரினங்களின் வழியாகத்தான். நம்முடைய மனதும் உடலும் அவனது கருவிகள். தனிமனித வாழ்விற்கும் ஒரு சமுதாயத்தின் உயர்வு தாழ்விற்கும் உலகத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் அவன் மட்டுமே பொறுப்பு.

அறவழி போராட்டத்தினால் ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தது, காந்தி என்ற தனி மனிதனின் மூலம் செயல்பட்ட கடவுள். அமெரிக்கர்களை அதிரவைத்த உலக வர்த்தக மையத்தாக்குதலை (Twin Tower attack) நடத்தியதும் பின் லாடன் (Bin Laden) என்ற தனிமனித வடிவில் செயலாற்றும் கடவுளே.

எனவே நாம் நம் காரண காரிய அறிவை சரிசெய்துகொள்ள வேண்டும். காந்தி காட்டிய வழியில் பயணித்து நம்மால் எந்த சாதனையையும் சாதித்துவிட முடியாது. வன்முறையைத் தூண்டிவிட்டு உலகத்தை அழித்துவிடவும் நம்மால் முடியாது. எல்லாம் அவன் செயல்.

காரண காரிய அறிவு

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் பழக்கவழக்கங்களை ஆராய்ந்தால் அவர்களிடம் சுறுசுறுப்பு, விடாமுயற்சி, கடின உழைப்பு, பணிவு என்று பல நல்ல குணங்கள் இருப்பது தெரியவரும். இவற்றைப்பார்த்து இவைதான் அந்த மனிதர்களின் வெற்றிக்கு காரணம் என்று நாம் தவறான முடிவுக்கு வந்து விடுகிறோம். உண்மை என்னவெனில் வெற்றி பெறும் மனிதர்களிடம் இது போன்ற குணங்கள் ஏதாவது இருக்க வாய்ப்பு அதிகம். ஆனால் இவை வெற்றிக்கு காரணமில்லை. வெற்றிக்கு ஒரே காரணம் கடவுள் மட்டுமே.

அதேபோல தோல்விக்கும் கடவுள் மட்டுமே காரணம். எது எப்படி நடக்க வேண்டுமோ அதை அப்படி நடத்தி வைப்பதில் கடவுள் எவ்வித தவறும் செய்வதில்லை. ஆனால் நாம் தனிமனிதர்களின் குணங்கள், செயல்பாடு, சந்தர்ப்ப சூழ்நிலை ஆகியவை வெற்றிக்கும் தோல்விக்கும் காரணம் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

முடிவுரை :

வேகமாக செல்லும் புகைவண்டியில் (train) அமர்ந்திருக்கும் மனிதன் தான் நகர்வதாக நினைத்துக்கொள்கிறான். உண்மையை ஆராய்ந்தால் அந்த மனிதன் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறான் என்பதும் வண்டிதான் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதும் நமக்கு தெரியவரும். ஆனால் அந்த மனிதன் புகைவண்டியின் செயல்பாட்டை தன்மீது ஏற்றிக்கொண்டு தன் தொலைபேசியில் 'நான் இப்பொழுது இந்த நிலையத்தை கடந்துகொண்டிருக்கிறேன். இன்னும் சில நிமிடங்களில் வந்து சேர்ந்து விடுவேன்' என்று கூறுகிறான். அவன் சுகமாக ஓரிடத்தில் அமர்ந்திருப்பதும் அவனை சுமந்து செல்லும் வண்டி எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் இயல்பாக இயங்கிக் கொண்டிருப்பதும்தான் உண்மை என்றாலும் அவன் ஏதோ தான்தான் தன் சொந்த முயற்சியில் ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து நடந்து பயணம் செய்வது போன்ற தோரணையுடன் பேசுகிறான்.

இதுபோல்தான் அறியாமையில் மூழ்கி இருக்கும் அனைவரும் தாங்கள்தான் செயலாற்றுவதாக எண்ணிக்கொள்கிறார்கள். உண்மையை உணர்ந்த பின் நாம் எப்பொழுதும் ஒரே இடத்தில் நிலையாகவும் ஒரே காலத்தில் மாற்றமில்லாமலும் இருப்பது தெரியும். நம் உடல், மனம் ஆகியவை புகைவண்டிபோல் தொடர்ந்து பயணம் செய்து இடமும் காலமும் மாறும் அனுபவத்தை பெற்றாலும் நாம் எவ்வித பாதிப்புமில்லாமல் அமைதியாக வாழ்வை வேடிக்கை பார்த்து மகிழலாம்.

காலமும் இடமும் நம் மனது சம்பந்தப்பட்ட விஷயங்கள். நாம் காலத்துக்கும் இடத்துக்கும் அப்பாற்பட்டவர்கள். வாழ்க்கையை நாம் வாழ்கிறோம் என்று சொல்வது தவறு. வாழ்வு நடக்கிறது. நாம் எவ்வித சம்பந்தமும் இல்லாமல் வாழ்வை உணருகிறோம் என்பதுதான் உண்மை. இந்த உண்மையைத்தான் வேதம் சூரியனின் ஒளியாக ஒளிருவது பரமனே என்ற கருத்தின் மூலம் விளக்குகிறது.

பயிற்சிக்காக :

1. கடவுள் யார்?

2. நான் என்ற சொல்லுக்கு கொடுக்கப்பட்ட மூன்று வித பதில்கள் என்னென்ன?

3. நம் கவலைகளுக்கு காரணமென்ன?

4. மனிதர்களின் வெற்றி/ தோல்விகளுக்கு காரணம் என்ன?

5. அனைத்தும் ஒளிருவது பரமனாலே என்ற கருத்தின் மூலம் வேதம் நமக்கு சொல்வது என்ன?


சுயசிந்தனைக்காக :

1. நான் பரமன் எனில் ஏன் என் உடலும் மனமும் என் கட்டுப்பாட்டில் இல்லை?

2. எல்லாம் அவன் செயலென்றால் தனிமனித முயற்சிக்கு எவ்வித அவசியமும் இல்லையா?