Friday, March 12, 2010

பாடம் 030: வெளி பரமன் (பிரம்ம சூத்திரம் 1.3.41)

காலமும் தேசமும் (Time and space) இருப்பது போல் தோற்றமளிக்கச்செய்வது பரமனின் மாயா சக்தி என்பதை வெளி பரமன் என்ற இந்த பாடத்தின் மூலம் வேதம் தெரிவிக்கிறது. பிரபஞ்சம் முழுவதும் பரமனின் ஒளியால் தோற்றுவிக்கப்பட்டது என்பதால் பொருள்களுக்கிடையே இருப்பதாக தோன்றும் இடைவெளி வெறும் தோற்றம் மட்டுமே. உண்மையில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை. பிளவுபடாத ஒளிதொகுப்பில் உருவங்களையும் பெயர்களையும் கற்பித்து உலகத்தை உருவாக்குவது நம் அறியாமையே.

பார்வைக்கோளாறு

கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரித்து அறிவதே மெய். உள்ளதை உள்ளபடி அறிய நம் ஐந்து புலன்கள் மற்றும் மனது மட்டும் போதாது. நமது அறிவுக்கூர்மையால் நம் புலன்கள் மூலம் பெற்ற அறிவை ஆசிரியரின் துணையுடன் தீர விசாரித்த பின்னரே நம்மால் சரியான பார்வையில் உலகத்தை பார்க்க முடியும்.

வெவ்வேறு வண்ணக்கலவைகளை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு புலியின் சித்திரத்தை பார்த்து நாம் பயந்து ஒடினால் நம் பார்வையில் கோளாறு என்று அர்த்தம். எவ்வளவு தத்ரூபமாக வரையப்பட்டிருந்தாலும் மூன்று பரிமாணங்களும் தெளிவாக காட்டப்பட்டிருந்தாலும் நாம் அதை நிஜ புலி என்று நினைத்து விட மாட்டோம். புலியை அதன் பின்னணியிலிருந்து தெளிவாக பிரித்து காட்டியிருந்தாலும் நாம் அந்த ஒவியம் முழுவதையும் ஒரே ஒரு வண்ணக்கலவையாகத்தான் காண்போம். அதே போல் இந்த உலகம் பல்வேறு உயிரினங்கள் மற்றும் உயிரற்ற பொருள்களின் கலவையாக காட்டப்பட்டிருந்தாலும் சரியான பார்வையில் பார்த்தால் இடைவெளியில்லாமல் எங்கும் நிறைந்திருக்கும் பரமனைத்தவிர வேறு ஒன்றையும் நம்மால் பார்க்க முடியாது. எனவே நான் வேறு நீ வேறு என்று யாரும் யாரையும் பிரித்து பேசமுடியாது. இருவருக்கும் இடையே இருப்பது போல் தெரியும் இடைவெளி ஒரு பிரமையே. பரமனைத் தெரிந்து கொண்டால் இந்த உலகம் ஒரு மாயை என்று புரிந்து விடும்.

நேரம் என்பதும் நமது கற்பனையே

படைப்பின் மற்றுமொரு ரகசியம் காலம். நேற்று என்பது பையில் இல்லை. நாளையென்பது நம் கையில் இல்லை. இன்று மட்டும் தான் உண்மை. இன்று என்று இங்கு குறிப்பிடப்படுவது இந்த கணம் மட்டும் தான். நாம் இப்பொழுது இந்த நிகழ்காலத்தில் இருக்கிறோம் என்பது மட்டும் தான் உண்மை. சென்ற காலமும் வருங்காலமும் நமது மனதின் கற்பனைகள்.

நாம் ஆறு என்று குறிப்பிடும் நீரோட்டம் கல், மலை போன்று மாறாமல் இருப்பதில்லை. ஒரு நொடிப்பொழுதில் இருந்த தண்ணீர் அடுத்த நொடியில் அதே இடத்தில் இருப்பதில்லை. நம் வாழ்வும் ஆறு போல் தொடர்ந்து மாறுபட்டு கொண்டு நிலையாக இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை தருகிறது. நாம் கான்பூரில் இருக்கும் கங்கை ஆற்றை நேற்று இந்த ஆறு ஹரித்வாரில் இருந்தது. இன்று இங்கு இருக்கிறது. நாளை இது கல்கத்தாவில் இருக்கும் என்று பிரித்து பேசுவதில்லை. கங்கோத்ரி முதல் வங்ககடல் வரை இருப்பது ஒரே கங்கை ஆறு என்று நமக்கு தெரியும். ஆனால் வாழ்க்கையின் விஷயத்தில் நாம் இந்த தவறை செய்து விடுகிறோம்.

ஒரு சிறுவனை இரண்டு அல்லது மூன்று வருட இடைவெளிக்குப்பிறகு பார்த்தால் அவன் பெரிதாக வளர்ந்து விட்டிருக்கிறான் என்று உணருகிறோம். உண்மையில் நாம் அனைவரும் ஒவ்வொரு நொடியும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறோம். இதை அறிவு பூர்வமாகவும் அறிவியல் மூலமாகவும் நாம் அறிவோம். ஆனால் நாம் நம் வாழ்வை நேற்று இன்று நாளை என்று பிரித்து மூன்று காலத்துக்கும் சமமான உண்மை தன்மையை கொடுத்து கொண்டிருக்கிறோம். இருப்பது தொடர்ந்து மாறும் இடைவெளியில்லாத ஒரே பிரபஞ்சம்.

இதில் காலத்தையும் தேசத்தையும் கற்பிப்பது நம் அறியாமை.

யாருமில்லாத காட்டில் கீழே விழும் மரத்திலிருந்து சப்தம் வருமா?

நம் கற்பனையில் மட்டுமே உலகம் இருக்கிறது. உண்மையில் உலகம் இல்லவே இல்லை. நெருப்புக்கோழி மணலில் தலையை புதைத்துக் கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று நினைப்பது போன்ற நிலை அல்ல இது. ஒரு மாம்பழத்தை மல்லிகைப்பூ என்று பெயரிட்டு எல்லோரும் அழைத்தாலும் அதன் உண்மைத்தன்மை மாறிவிடாது. உண்மையா பொய்யா என்பதை ஜனநாயகமுறையில் ஓட்டுப்போட்டு முடிவு செய்ய கூடாது.

காட்டில் மனிதர்கள் யாருமில்லாத இடத்தில் ஒரு மரம் கீழே விழுந்தால் அதிலிருந்து சப்தம் வருமா? 'மரம் கீழே விழுந்ததால் ஏற்பட்ட சத்தம்' என்று யாரும் அதற்கு ஒரு தனித்தன்மை கொடுக்காததனால் 'இல்லை' என்றே இந்த கேள்விக்கு பதில் கொடுக்க வேண்டும். நமது ஐந்து புலன்கள் மூலமாக நாம் அறியும் அறிவை காலதேச பாகுபாடு செய்து எல்லாவற்றுக்கும் ஒரு உண்மைத்துவம் கொடுப்பது நாம் தான். எந்த மனிதனுக்கும் தெரியாமல் எவ்வளவோ நிகழ்வுகள் இந்த பிரபஞ்சத்தின் தொடர்ந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன, அவை மனித மனதின் ஆராய்ச்சிக்கு உட்படாதவரை அவற்றை உண்மை என்று யாரும் பதிவு செய்வதில்லை. எனவே காட்டில் விழுந்த மரத்தின் நிலையும் அதுதான்.

காலத்துக்கும் தேசத்திற்கும் அப்பாற்பட்டு (beyond time and space) தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சத்தை நட்சத்திரங்கள், கிரகங்கள், பூமி, உயிரற்றவை, உயிருள்ளவை என கூறு போட்டு கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று பிரித்து, உலகத்துக்கு இல்லாத ஒரு உண்மைத்தன்மையை கொடுத்திருப்பது மனிதனின் மனம். இதே தவறை அறியாமையால் அனைவரும் செய்து கொண்டிருப்பதால் பொய் உண்மையாகி விடாது.

உண்மையில் இருப்பது போல் தோன்றும் இவ்வுலகம் என்றும் இருக்கும் பரமனின் மாயத்தோற்றம்.


முடிவுரை :

கங்கை ஆறு, 'நான் கங்கோத்திரியில் உதயமானேன். இப்பொழுது ஹரித்துவாருக்கு வந்துள்ளேன். எனது வாழ்க்கையின் குறிக்கோள் வங்க கடலுக்கு சென்று சங்கமிப்பது' போன்ற எண்ணங்கள் எதுவுமின்றி தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. அதேபோல்தான் மனிதனும் பிறந்து வளர்ந்து மறைகிறான். ஆனால் மனித மனம் இல்லாத காலதேசங்களை கற்பனை செய்து மாயையான இவ்வுலகத்திற்கு ஒரு உண்மைத்துவத்தை கொடுக்கிறது. தினசரி செய்திகளில் காலம், தேசம், உருவங்கள் மற்றும் பெயர்கள் மட்டுமே மாறுபடுகின்றன. இந்த நான்கு மனித மனதின் கற்பனைகளை நீக்கிவிட்டால் செய்திதாள்களை படிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

இந்த கற்பனை உலகை மனித மனம் உருவாக்குவதன் விளைவுதான் நாம் வாழ்வில் அனுபவிக்கும் அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என்று வேதம் கூறுகிறது. நேற்று என்பதே கற்பனையென்றால் நாம் செய்த / செய்யாத செயல்களுக்காக நாம் வருத்தபட வேண்டிய அவசியமில்லை. நாளை என்று ஒன்று இல்லை என்பதால் கவலைகளும் எதிர்பார்ப்புகளும் இல்லாமல் போய்விடும். இந்த அறிவு நம்மில் உறுதியாகும் வரை நாம் நேற்றய நினைவிலும் நாளைய கனவிலும் இன்றய வாழ்வை தொலைத்து கொண்டு இருப்போம்.

நம் வாழ்வின் ஒரே குறிக்கோள் இந்த கணத்தை இன்பமாக கழிப்பது மட்டும்தான். அதை விடுத்து நாளை நான் இதை செய்வேன் அதை சாதிப்பேன் என்ற மடமையில் மூழ்கி கண்களை விற்று சித்திரம் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

இந்த அறியாமை நம்மை விட்டு விலகினால் நாம் எந்த செயல்களும் செய்ய மாட்டோம் என்று அர்த்தமில்லை. தொடர்ந்து மாறும் உலகின் ஒரு பகுதியாக எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இன்பமாக நமது செயல்பாடுகள் அமையும்.பயிற்சிக்காக :

1. இந்த உலகை சரியான பார்வையில் பார்க்க நாம் என்ன செய்ய வேண்டும்?

2. காலத்தை கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் என மூன்றாக பிரிப்பதில் என்ன தவறு?

3. யாருமில்லாத காட்டில் கீழேவிழும் மரத்திலிருந்து சப்தம் வருமா?

4. மனித மனதின் கற்பனையாக கூறப்பட்ட நான்கு யாவை?

5. நமது துன்பங்களுக்கு மூல காரணமாக வேதத்தில் குறிப்பிடப்படுவது எது?

சுயசிந்தனைக்காக :

1. செய்திதாள்களை படிக்க வேண்டிய அவசியம் என்ன?

2. நேற்றும் நாளையும் கற்பனையென்றால் இன்றய உலகம் மட்டும் உண்மை. பரமனும் உண்மை. இந்த இரு உண்மைகளிடையே உள்ள வேற்றுமைகள் என்னென்ன?