Tuesday, March 30, 2010

பாடம் 042: ஜடமான உலகம் காரியமா காரணமா? (பிரம்ம சூத்திரம் 2.1.4-11)


நாம் இந்த உலகத்தில் ஜடப்பொருளும் உணர்வும் கலந்து இருப்பதை பார்க்கிறோம். ஜடப்பொருளாலான உலகத்தின் படிபடியான பரிணாம வளர்ச்சியின் ஒருகட்டத்தில் உணர்வுடன் கூடிய உயிரினங்கள் தோன்றின என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். உணர்வு மயமான பரமனிடமிருந்து உலகம் பிறந்தது என்று வேதம் கூறுகிறது. இந்த இரு ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களிடையே எது உண்மை என்பதை இந்த பாடம் விளக்குகிறது.

காரண காரியம்

ஜடமான பொருள் தன்னிடம் இல்லாத உணர்வை உண்டாக்குவதோ உணர்வுமயமான பரமன் தன்னிடமில்லாத ஜடப்பொருளை உற்பத்தி செய்வதோ காரண காரிய அறிவுக்கு பொருத்தமில்லாமல் இருக்கிறது. கோழியிலிருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா? முட்டை என்பது வெறும் ஜடப்பொருளாக இருக்குமேயானால் அதிலிருந்து உணர்வுடன் கூடிய கோழி வெளிவர வாய்ப்பில்லை. உயிருடன் கூடிய நம் உடலிலிருந்து நகம் மற்றும் முடி போன்ற ஜடமான பொருள்கள் உற்பத்தி செய்யபடுவதால் உணர்விலிருந்து உணர்வற்ற பொருள் வரலாம் என்பதும் தவறான விளக்கம். உடல் என்பது உயிருடன் கூடிய ஜடப்பொருள். ஆகவே ஒரு ஜடப்பொருளிலிருந்து மற்றொரு ஜடப்பொருள் உண்டாவதை உணர்விலிருந்து ஜடப்பொருள் உண்டாவதாக கூற முடியாது.ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் அணுக்களை ஒன்று சேர்த்தால் இரண்டிலுமில்லாத திரவத்தன்மையுடன் கூடிய தண்ணீர் உருவாவது போல ஜடமான உணவுப்பொருள்களிலிருந்து வீரியமுள்ள விந்து உருவாகிறது என்றும் சொல்ல முடியாது.

இதேபோல் சிலந்தியிலிருந்து வலை வெளிப்படுவது சாணத்திலிருந்து தேள் வெளிப்படுவது போன்ற எந்த உதாரணங்களும் பரிணாம வளர்ச்சியிலிருந்து உணர்வு தோன்றியதா அல்லது உணர்வுதான் ஜடப்பொருள்களை உண்டாக்கியதா என்ற நமது கேள்விக்கு சரியான பதில் தருவதில்லை.

ஒரு கருத்தை விளக்குவதற்காகவேயன்றி அதை உண்மையென நிரூபிக்க உதாரணங்கள் உதவ மாட்டா. உணர்விலிருந்து ஜடம் உருவானதா ஜடத்திலிருந்து உணர்வு உண்டானதா என்பதன் பதிலை உறுதியாக தெரிந்த பின் அதை விளக்க மட்டுமே உதாரணங்களை உபயோகிக்கவேண்டும்.

காரண காரிய அறிவின் மூலம் இந்த கேள்விக்கு விடை கண்டுபிடிக்க முடியாததனால் இப்பொழுது நாம் தர்க்கத்தின் துணையுடன் உண்மையை அறிய முயற்சிக்கலாம்.

உயிரும் உணர்வும்

இவ்வுலகில் நாம் ஜடமான பொருள்களை பார்க்கிறோம். ஜடமும் உணர்வும் கலந்து இருக்கும் உயிரினங்களை பார்க்கிறோம். உணர்வு மட்டும் தனித்து இருப்பதை பார்ப்பதில்லை. ஒருவர் இறந்து விட்டால் உடலிலிருந்து உயிர் பிரிந்து விட்டது என்கிறோம். உயிர் பிரிந்தபின் உடல் உணர்வற்ற ஜடமாகிவிடுகிறது. பிரியும் உயிரை நாம் பார்க்க முடிவதில்லை. மருத்துவ உபகரணங்கள் உடலில் உயிர் இருக்கிறதா இல்லையா என்பதை மட்டுமே ஆய்ந்தறியும் சக்தி கொண்டவையாயிருக்கின்றனவேயன்றி, தனியாக இதுதான் உயிர் என்று காட்ட அருகதையற்றவையாக இருக்கின்றன.

பொருள்கள் எவ்வளவு சிறிதாக இருந்தாலும் அவற்றின் இருப்பை காட்டிக்கொடுக்ககூடிய சக்திகொண்ட உபகரணங்கள் நம்மிடம் இப்பொழுது அறிவியலின் துணையால் உள்ளன. அணுவின் ஒரு சிறு பாகமான எலக்ட்ரான் அல்லது அதிலிருந்து வெளிப்படக்கூடிய சக்தி போன்றவற்றை துல்லியமாக அறியவும் அளக்கவும் நம்மிடம் கருவிகள் உள்ளன. ஆனால் இக்கருவிகளால் உயிரின் இருப்பை காட்ட முடிவதில்லை. இதிலிருந்து உயிர் என்பது பருவடிவமில்லாத (not a gross body) நுண்ணியது (subtle) என்று தர்க்கத்தின் மூலம் அறியலாம்.


உயிர் என்றால் என்ன?

பரமனின் பிரதிபிம்பத்தை உள்ளடக்கிய நுண்ணிய உடலைத்தான் நாம் உயிர் என்று குறிப்பிடுகிறோம். 19 பாகங்களை கொண்ட நுண்ணிய உடல் நமது பருவுடலிலிருந்து பிரிவதைத்தான் நாம் உயிர் பிரிகிறது என்கிறோம்.

உயிரற்ற பொருள்களிடம் உணர்வு இருப்பதில்லை. உயிரற்ற ஜடப்பொருள்களுக்குள் நுண்ணிய உடல் உட்புகுந்தபின்தான் பரிணாம வளர்ச்சி தொடங்குகிறது.(Involution precedes evolution).

எனவே ஜடமான உலகம் தோன்றுவதற்கு முன் உணர்வுடன் கூடிய நுண்ணிய உடல்கள் இருந்திருக்க வேண்டும்.

வேதத்திலிருந்து நமக்கு கிடைக்கும் இந்த விளக்கங்கள் நம் தர்க்க அறிவுடன் ஒத்து போகின்றன.

உலகம் தோன்றியது எப்படி?

ஆனால் உணர்வுடன் கூடிய நுண்ணிய உடல்களால் ஜடமான உலகை உருவாக்கியிருக்க முடியாது. ஏனெனில் நுண்ணிய பொருள்கள் கூட ஜடமானவையே என்று வேதம் கூறுகிறது. அவை உணர்வுடன் கூடியவையாக தோற்றமளிப்பதற்கு காரணம் அவற்றிற்கு பரமனின் உணர்வை பிரதிபலிக்கும் தன்மை இருப்பதால் மட்டுமே. எப்படி ஒரு கண்ணாடியும் கல்லும் ஜடமாயிருந்தாலும் கண்ணாடிக்கு மட்டும் ஒளியை பிரதிபலிக்கும் சக்தியிருப்பதால் சூரியனின் ஒளியை பிரதிபலிக்கிறதே தவிர அதற்கு சுயமாக ஒளிரும் தன்மையில்லையோ அது போல நுண்ணிய உடல்களுக்கு உணர்வு சொந்தமில்லை. பரமன் மட்டுமே உணர்வுமயமானவன். உணர்விலிருந்து ஜடப்பொருள் உருவாகியிருக்க முடியாது.

ஆக உணர்வு ஜடப்பொருள்களை உருவாக்கவில்லை. அவை ஜடப்பொருள்களென்பதால் தானாகவும் உருவாகியிருக்க முடியாது. எனவே ஜடமான உலகம் தர்க்கத்தின் படி இருக்க முடியாது. ஆனால் இருக்கிறதென்று நம் அனுபவம் கூறுகிறது.

நம் கண்ணால் பார்த்து கொண்டிருக்கும் ஒரு யானையின் மீது ஒரு பெரிய துணியை போட்டு மூடிய அடுத்த நொடியில் அந்த துணி கீழே விழ அங்கு அதுவரை நின்று கொண்டிருந்த யானையை காணவில்லை. தர்க்கத்தின் படி யானை மாயமாக மறைந்திருக்க முடியாது. ஆனால் நம் அனுபவத்தில் யானையை காண முடிவதில்லை. இம்மாதிரி இந்திர ஜால காட்சிகளில் நாம் நம் அனுபவத்தை நம்புவதில்லை. என்ன நடந்தது என்று தெரியாவிட்டாலும் எதோ நடந்திருக்கிறது என்று நமக்கு தெரிகிறது. இருக்கும் யானையை இல்லையென்றோ இல்லாத யானையை இருக்கிறதென்றோ நாம் நம்பும்படி மந்திரவாதி ஏதோ செய்திருக்கிறான் என்று நாம் உணர்வதால் நம் அனுபவத்தை உண்மையென நம்பாமல் நடப்பதையெல்லாம் ஆச்சரியத்துடன் பார்த்து ரசிக்கிறோம்.

அதே போல உணர்வு மற்றும் ஜடம் ஆகிய இரு ஒன்றுக்கொன்று முரணான பொருள்கள் ஒன்றையொன்று உருவாக்கியிருக்க முடியாது. ஆனால் உணர்வுடன் கூடிய நாம் ஜடப்பொருள்களை அனுபவிக்கிறோம். ஏதோ நடந்திருக்கிறது. எப்படி இது நடந்தது என்று தெரியாவிட்டாலும் இல்லாத உலகத்தை இருப்பதாக காட்டும் கடவுள் என்னும் மாயாவியின் சக்தியை நாம் ஆச்சரியத்துடன் அனுபவிக்க வேண்டும்.

இந்திர ஜாலக்காட்சியை, "ஆமாம், முதலில் யானை இருந்தது. பின் நம் கண்முன்னாலேயே மறைந்து விட்டது. அதனால் என்ன?” என்று சுவாரசியமில்லாமல் பார்த்துகொண்டிருந்தால் நமது நேரமும் பணமும் வீண். அதே சமயத்தில் மாஜிக் நிபுணனின் கால்களில் விழுந்து நீங்கள்தான் கடவுள் என்று கொண்டாடுவதும் முட்டாள்த்தனம். அதுபோல ஜடமான உலகம் இருக்க முடியாது. ஆனால் இருப்பதை அனுபவிக்கிறோம். கடவுளின் திறனை பாராட்டிவிட்டு வாழ்வை இன்பமாக அனுபவிப்பதை விடுத்து இவ்வுலகம் உண்மை என நம்புவது அறியாமை.

எது உண்மையில் இல்லையோ ஆனால் இருப்பது போல தோற்றமளிக்கிறதோ அது மாயை. அது மாயை என்பது புரியாமல் உண்மை என்று நினைத்துகொண்டிருந்தால் எப்பொழுதும் இன்பமாக இருப்பதற்கு பதிலாக பயம், துக்கம், குற்றவுணர்வு போன்ற உணர்வுகளால் வாட்டப்பட்டு கொண்டிருப்போம்.

ஆக உலகம் தோன்றியது எப்படி என்ற கேள்விக்கு, "உலகம் தோன்றவில்லை. அது இருப்பது போல் தெரியும் ஒரு மாயத்தோற்றம்.” என்பதுதான் சரியான விடை. இதை புரிந்து கொள்ள கோமாளி தொப்பி உதாரணத்தை உபயோகிக்கலாம். ஒரு முழுநீள காகிதத்தாளை (FoolsCap paper) கோமாளி தொப்பி வடிவில் உருட்டினால் வெறும் காகிதத்திலிருந்து நமக்கு ஒரு தொப்பி கிடைக்கிறது. தொப்பி என்பது காகிதத்திலிருந்து வேறுபட்ட ஒரு பொருளல்ல. காகிதம்தான் தொப்பி. இருப்பது காகிதம் மட்டும்தான். தொப்பி என்பது வெறும் வடிவமும் பெயரும் மட்டுமே. அதுபோல இருப்பது பரமன் மட்டும்தான். உலகம் என்பது வெறும் வடிவமும் பெயரும் மட்டுமே. பிரபஞ்சத்தில் உள்ள பொருள்களுக்கு வடிவங்களை கொடுத்தது இறைவனின் திறமை. அவற்றிற்கு பெயர்களை சூட்டியது மனிதனின் கற்பனை.

முடிவுரை :

நாம் இருக்கிறோம் என்பது உண்மை. நாம் உணர்வும் உடலும் கலந்து இருக்கிறோம். காரண காரிய அறிவின் படி ஒன்றுக்கொன்று முரணான உணர்வோ அல்லது ஜடமான உடலோ ஒன்றை ஒன்று உருவாக்கியிருக்க முடியாது. வேதத்தில் கூறப்பட்ட கருத்துக்களை தர்க்கத்தின் துணை கொண்டு ஆராய்ந்தால் இருப்பது உணர்வு மட்டும்தான் என்றும் உடல் இருப்பதுபோல் தோற்றமளிக்கும் ஒரு மாயை என்றும் தெரிகிறது. நம் உடலும் இந்த உலகமும் ஒரு மாயை என்று புரிந்தால் நாம் எப்பொழுதும் இன்பமாக இருக்கலாம்.

இருப்பது இரண்டு கட்சிகள். ஏதோ ஒன்றை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒன்றை தேர்ந்தெடுத்தால் நாம் துன்பபடுவது நிச்சயம். மற்றதை தேர்ந்தெடுத்தால் நாம் எப்பொழுதும் இன்பமாயிருக்கலாம். உடலும் உணர்வும் கலந்து இருக்கும் நான் உடலா? உணர்வா? உடல் என்றால் துன்பபடுவதும் மரணமடைவதும் நிச்சயம். உணர்வு என்றால் மரணமில்லாமல் எப்பொழுதும் அமைதியாகவும் இன்பமாகவும் இருப்பது நிச்சயம்.

நம் உடல் மற்றும் மனம் உள்ளிட்ட இந்த உலகம் நிலையானதன்று. தொடர்ந்து மாறிக்கொண்டிருப்பது. உணர்வு என்பது என்றும் மாறாதது. இன்பவடிவாக என்றும் இருப்பது.

நாம் உடலா உணர்வா என்று நாம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்தல் களத்தில் மக்களின் அறியாமையால் சுயநலவாதிகள் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் உடலா உணர்வா என்பதில் போட்டியே இல்லை. இருப்பது உணர்வு ஒன்றுதான். இல்லாத உடலை இருப்பதாக கருதி அதற்கு ஓட்டுப்போட்டு 'நான் உடல்தான்' என்று முடிவுசெய்யுமளவுக்கு நாம் அறியாமையில் மூழ்கியிருப்போமேயானால், முட்டாள்கள் இருக்கும் ஜனநாயக அமைப்பில் குண்டர்களே ஆட்சிக்கு வருவார்கள் என்ற கூற்றுக்கு ஒப்ப நாம் தொடர்ந்து வாழ்க்கையின் வளமை-வறுமை, வெற்றி-தோல்வி போன்ற இருமைகளிடையே அலைக்களிக்க படுவதை தவிர்க்கமுடியாது.

எனவே முக்தியடைய பரிணாம வளர்ச்சி தத்துவம் உதவாது. மாறும் உலகம் என்றாவது ஒருநாள் நாம் இன்பமாக இருக்க வழிவகுக்கும் என்பது பகல் கனவு. உணர்வுமயமான ஆனந்த மயாமான பரமனே நான் என்ற அறிவு மட்டுமே நமக்கு முக்தியை கொடுக்கும்.

பயிற்சிக்காக :

1. உதாரணங்கள் எதற்கு உபயோகப்படும்?

2. உதாரணங்களை எதற்கு உபயோகப்படுத்த முடியாது?

3. காரண காரிய அறிவின் மூலம் ஏன் உலகம் காரணமா அல்லது காரியமா என்று நிரூபிக்க முடியாது?

4. உயிர் என்றால் என்ன?

5. உயிரை ஏன் அறிவியல் உபகரணங்களால் கண்டுபிடிக்க முடியாது?

6. உணர்வு-ஜடம் இவற்றுக்கிடையே நாம் யாருக்கு ஓட்டுப்போட்டால் நமக்கு என்ன பலன்?

சுயசிந்தனைக்காக :

1. தர்க்கத்தினால் உண்மையை அறிந்து கொள்ள முடியுமா?


2. உலகம் காரணமா காரியமா என்பது போன்ற புரியாத கருத்தையெல்லாம் அனாவசியமாக ஆராய்ந்து காலத்தை விரயம் செய்யாமல் நாம் ஏன் இன்பமாக பொழுதை கழிக்க கூடாது?