Tuesday, March 16, 2010

பாடம் 033: மூவண்ண ஆடு (பிரம்ம சூத்திரம் 1.4.8-10)

சுவேதாச்வதர உபநிஷத் மந்திரம் ஒன்று சிகப்பு, வெள்ளை, கறுப்பு ஆகிய மூன்று வண்ணங்களை கொண்ட ஒரு ஆட்டின் உதாரணம் மூலம் நெருப்பு, நீர், நிலம் போன்ற பஞ்சபூதங்களின் கலவையாக இந்த உலகத்தை காட்டுகிறது. காலத்துக்கு அப்பாற்பட்ட பரமன் மட்டுமே ஆனந்த மயமாகவும் அறிவுருவாகவும் நிரந்தரமாக இருக்கிறான். பரமனின் இருத்தலை ஆதாரமாக கொண்டு படிப்படியாக எப்படி இந்த உலகம் உருவாக்கப்பட்டது என்பதை இந்த பாடம் விளக்குகிறது.

முதல் படி: ஒலியிலிருந்து ஆகாயம்

இந்த உலகத்தை உருவாக்க முதல் படியாக மாயாசக்தி அதிர்வலைகளை (Pressure waves) பரமனின் இருத்தல் என்ற தன்மையின் மேல் ஏற்றிவைக்க ஆகாயம் அல்லது வெளி உருவானது.

பிரபஞ்சத்தின் முதல் படைப்பு வெளி (space) என்பதை அறிவியல் அறிஞர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். பிரபஞ்சத்தில் உள்ள சக்தி-பொருள் (energy-matter) ஒன்றிலிருந்து ஒன்றாக மாறுமே தவிர புதிதாக எந்த ஒரு பொருளையோ சக்தியையோ உருவாக்க முடியாது என்பதும் அறிவியல் கருத்து. பரமனின் மாயா சக்தி என்றுமுள்ளது. அது பொருளாக வெளிப்படும் பொழுது பிரபஞ்சம் தோன்றியுள்ளது என்றும், பிரளயத்தின் பொழுது பிரபஞ்சம் மீண்டும் சக்தியாக மாறுகிறதென்றும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

பரமன் நான் பலவாக ஆகுவேன் என்ற சங்கல்பம் செய்தவுடன் பரமனின் மாயாசக்தி அதிர்வலைகளாக வெளிப்படும். இந்த அதிர்வலைகளே அறிவியலின் அடிப்படையில் ஒலி என்று வழங்கப்படும். இருக்கும் பரமனை அறியாமல் அதன் மேல் ஏற்றிவைக்கப்பட்ட ஒலியை மட்டும் நாம் கவனிப்பதால் அது ஆகாயமாக நமக்கு தெரிகிறது.

பரமனிடமிருந்து கடன்வாங்கிய இருத்தல் + ஒலி (அதிர்வலை) = வெளி(ஆகாயம்)

இரண்டாம் படி: ஆகாயத்திலிருந்து காற்று

ஆகாயம் உருவாக்க பட்டபிறகு மாயாசக்தியின் அதிர்வலைகள் அதிகரித்து அணுதுகள்கள் (Molecules) உண்டாகின்றன. இந்த அணுத்துகள்கள் ஆகாயத்திடம் இல்லாத தொட்டுணரும் தன்மையுடன் கூடிய காற்றாக உருப்பெறுகின்றன.

வெளி(ஆகாயம்) + தொட்டுணரக்கூடிய அணுத்துகள்கள் = காற்று

மூன்றாம் படி: காற்றிலிருந்து நெருப்பு

மாயா சக்தியின் அதிர்வலைகள் முதலில் ஆகாயத்தையும் பின் காற்றையும் ஏற்படுத்தியபின் தொடர்ந்து வேகமாக அதிர்ந்து அளவொணா வெப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் அனைத்து அணுத்துகள்களும் வெடித்து சிதறின. இதை பிக் பேங்க் (Big Bang) என்று அறிவியல் அறிஞர்கள் அறிவார்கள். கண்ணால் பார்க்க கூடிய உருவம் இப்பொழுது பிரபஞ்சத்தில் நெருப்பு வடிவில் ஏற்பட்டது.

காற்று + பார்க்ககூடிய வெப்பத்தாலான ஒளி = நெருப்பு

நான்காம் படி: நெருப்பிலிருந்து நீர்

வெப்பமான அணுத்துகள்கள் வெடித்து சிதறியபின் வெகுதூரம் பயணம் செய்து பின் குளிர்ச்சியடைந்தன. அப்பொழுது அவை ஒன்றுடன் ஒன்று இறுக்கமற்று இணைந்து சுவைக்கும் தன்மையுடன் கூடிய நீர் உருவானது.

நெருப்பு + சுவைக்கும் தன்மை = நீர்

ஐந்தாம் படி: நீரிலிருந்து நிலம்

குளிர்ச்சியடைந்த அணுத்துகள்கள் ஒன்றுடன் ஒன்று சுழற்சியாலும் நெருக்கத்தாலும் சேர்ந்து திரவமான நீரின் இடையே திடமான இடம் ஏற்பட்டது. நீரிடமில்லாத மணம் எனும் குணம் புதிதாக சேர்ந்து நிலம் இவ்வாறு உருவானது.

நீர் + மணக்கும் தன்மை = நிலம்.

ஆறாம் படி : பஞ்சபூதங்களிலிருந்து உலகம்

பிரபஞ்சம் முழுவதும் ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் என்ற இந்த பஞ்சபூதங்களின் வெவ்வேறு வித கலவையால் உருவானது. அனைத்து உயிரினங்களும் மற்றும் உயிரற்ற ஜடப்பொருள்களும் இந்த பஞ்சபூதங்களின் கலவையால் ஆனவையே. இவையல்லாமல் வேறு பொருள்களே இந்த பிரபஞ்சத்தில் கிடையாது.

ஆக இந்த பிரபஞ்சம் முழுவதும் இந்த ஆறு படிகளாக பரமனின் மாயா சக்தியால் உருவாக்கப்பட்டது.

முடிவுரை :

ஒலி, தொட்டுணர்வு, ஒளி, சுவை மற்றும் மணம் எனும் நமது ஐந்து புலன்களுக்கு மட்டுமே புலப்படுவதுதான் இந்த உலகம். கண்ணை மூடிக்கொண்டு ஒரு அமைதியான இடத்தில் ஒரு சில நிமிடங்கள் அமர்ந்து நமக்கு இந்த ஐந்து புலன்களும் இல்லை என்று கற்பனை செய்து பார்த்தால் இந்த உலகம் இல்லாமல் போய்விடும் என்று உணர்வோம். கண்ணுக்கு மட்டும் தெரிந்து, தொட்டு பார்த்தால் இல்லாமலிருக்கும் ஒரு பொருளை நாம் எப்படி மாயா ஜாலம் என்று குறிப்பிடுவோமோ அதேபோல்தான் மாயாவி என்ற கடவுள் நமது ஐந்து புலன்கள் மட்டும் அறியும் வகையில் தோற்றுவித்த மாயமே இந்த உலகம்.

நமக்கு ஐந்து புலன்களும் இல்லாமல் போனாலும் நான் இருக்கிறேன் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இருப்பதில்லை. இது மட்டுமே உண்மை. நான் எவ்வித உருவமோ, பெயரோ, சுவையோ, மணமோ, குணமோ அற்ற பரமன். நான் ஆனந்தமாகவும் அறிவுருவமாகவும் எப்பொழுதும் இருக்கிறேன். என் மீது ஒலியை கற்பித்து ஆகாயமும் அதன் பின் ஒவ்வொன்றாக ஐந்து குணங்களையும் ஏற்றி இந்த பிரபஞ்சம் முழுவதும் கற்பிக்கப்பட்டுள்ளது.

வெளி, காற்று, நெருப்பு, நீர், நிலம் என்ற பஞ்சபூதங்கள்தான் முறையே காது, தோல், கண், சுவைக்கும் நாக்கு, மூக்கு என்ற நம் ஐந்து புலன்களையும் உருவாக்கியுள்ளன. ஒரு முப்பரிமாண திரைபடத்தை (3-D movie) பார்க்க திரையரங்கில் நமக்கு ஒரு மூக்குகண்ணாடி வழங்கப்படும். அந்த கண்ணாடியின் மூலமாக பார்த்தால் மட்டும்தான் இல்லாத பொருள் நமதருகில் இருப்பது போன்ற பிரமை நமக்கு ஏற்படும். அதைபோலவே நமது ஐந்து புலன்களுக்கு மட்டுமே தென்படும் பிரமைதான் இந்த உலகம்.

நிர்குணமான பரமனின் மேல் ஒலி, தொட்டுணர்வு, ஒளி, சுவை, மணம் ஆகிய குணங்களை ஒவ்வொன்றாக ஏற்றிவைத்து முறையே ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் என்ற ஐந்தும் இந்த ஐந்தின் கலவையாக இந்த பிரபஞ்சமும் இருப்பது போல் காட்டப்பட்டுள்ளது. இந்த காட்சியை அறியாமையின் காரணமாக உண்மை என நாம் நம்பிக்கொண்டு இருக்கிறோம். இந்த அறியாமையை வேதம் இந்த பாடத்தின் மூலம் நீக்குகிறது.

பயிற்சிக்காக :

1. பஞ்சபூதங்களை சரியான முறையில் வரிசை படுத்துக.

2. நமது ஐந்து புலன்களையும் பஞ்சபூதங்களையும் முறையாக தொடர்பு செய்து சேர்த்து எழுதுக.

3. பஞ்சபூதங்கள் கலக்காத ஏதேனும் பொருள் இந்த பிரபஞ்சத்தில் உள்ளதா?

4. மாயாவி என்று குறிப்பிடபடுபவன் யார்?

சுயசிந்தனைக்காக :

1. இருக்கும் பரமனை உணராமல் இல்லாத பஞ்சபூதங்களை இருப்பவை என நினைப்பதற்கு காரணம் யாது?

2. பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டுவிடுமா? (ஐந்து புலன்களும் நமக்கு இல்லாவிட்டால் எப்படி உலகம் இல்லை என்று சொல்ல முடியும்?)

3. சகுண பிரமனுக்கும் நிர்குண பிரமனுக்கும் உள்ள வேற்றுமைகள் என்ன?