Monday, March 1, 2010

பாடம் 022: உயர்ந்த குறிக்கோள் பரமன் (பிரம்ம சூத்திரம் 1.3.13)

பரமனை அறிவதும் பரமனை அடைவதும் ஒன்றுதான். இதுதான் அனைத்து உயிரினங்களின் முடிவான உயர்ந்த குறிக்கோள். வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு குறிக்கோள் இருக்கும். ஆனால் உண்மையில் இருக்க வேண்டிய ஒரே குறிக்கோள் பரமனை அடைய வேண்டும் என்பதே என்று வேதம் கூறுகிறது. வேதத்தின் இந்த கருத்தை அறியாதவர்கள் கூட பரமனை அடையத்தான் முயன்று கொண்டிருக்கிறார்கள்!

நம் அனைவரது குறிக்கோள்கள் பொருள் சம்பந்தபட்டதாக இருக்கலாம் அல்லது நம் பல்வேறு ஆசைகளை பூர்த்தி செய்வதற்காக நாம் செயல்பட்டு கொண்டிருக்கலாம். ஆனால் நமக்கு முழுமையான திருப்தி என்பது பரமனை அடையும் வரை ஏற்படாது. எந்த குறிக்கோள் நிறைவேறினாலும் நம் மனதில் தோன்றும் இன்பம் நிலைப்பதில்லை.

நமது அனைவரது உண்மை உருவம் பரமன். எனவேதான் நாம் நமது உண்மை நிலையை அறியும்வரை நமக்கு திருப்தி ஏற்படுவதில்லை. ஏதாவது குறை இருந்து கொண்டே இருக்கும். நாம் அடைய வேண்டியது பரமன்தான் என்று நமக்கு தெரியாததனால் முழுமையை தேடி நாம் தொடர்ந்து ஏதாவது முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.

நமது வெவ்வேறு குறிக்கோள்களை நாம் அடைய முயலும் பொழுது நாம் செய்யும் செயல்கள் நமக்கு பல்வேறு பாவ புண்ணியங்களை சேகரித்து தருகின்றன. இந்த பாவபுண்ணியங்களின் பலனாக நாம் மரணமடைந்தபின் மீண்டும் பிறக்கிறோம்

மனிதப்பிறவியைத்தவிர மிருகங்களாகவோ மற்ற வகை உயிரினங்களாகவோ நாம் பிறந்தால் நம்மால் எந்தவித முயற்சியையும் எடுக்க முடியாது. மீண்டும் மனிதப்பிறவி கிடைத்தால்தான் நம்மால் நம் குறிக்கோளை நோக்கிய பயணத்தை தொடர முடியும்.

எப்பொழுது நமக்கு சரியான ஆசிரியரின் கருணை நமது புண்ணியத்தின் வசத்தால் கிடைக்கிறதோ நாம் அப்பொழுது பரமனை அடையும் உயர்ந்த நோக்கத்தில் செயல் பட ஆரம்பிப்போம். நமது முயற்சி வெற்றியில் முடிந்தால் நாம் பரமனை அறிந்து பரமனாகவே ஆகிவிடுவோம். அதன் பின் நமது செயல்கள் அனைத்தும் பரமனின் செயல்களாக அமையும்.

முழுசுழற்சி

கடல் நீர் மேகமாக மாறி மழையாகப் பொழிந்து மலைகளிலிருந்து அருவியாக சரிந்து ஆறாக சமவெளியில் பாய்ந்து முடிவில் கடலிலேயே மீண்டும் கலக்கிறது. இது போல பரமனே இந்த உலகில் உள்ள எல்லா உயிரினங்களாக தோன்றி ஒவ்வொரு உயிரினமாக வாழ்ந்து மனிதனாக மாறி தக்க ஆசிரியரின் துணையுடன் கடைசியில் பரமனுடனேயே ஐக்கியமாகிறான்.

இந்த முழுசுழற்சி ஒரு தொடக்கம் அல்லது முடிவின்றி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பரமன் ஒருவனே எண்ணிலடங்கா உயிரினங்களாக காட்சியளிக்கிறான். இந்த எண்ணிலடங்கா உயிரினங்களனைத்தும் ஏதாவது ஒரு பிறவியில் மனிதனாக செயல்பட்டதனால் ஏற்பட்ட பாவபுண்ணியங்களின் விளைவாகவே வெவ்வேறு உயிரினங்களாக பிறக்கின்றன. மாடு, மயில் போன்ற மற்ற உயிரினங்கள் தன் இயல்புக்கேற்றவாறு செயல்படுமே தவிர மனிதனைப்போல் தன்னிச்சையுடன் ஒரு குறிப்பிட்ட குறிக்கோளை நோக்கி செயல்படுவதில்லை. ஆகவே குறிக்கோள்கள் இருப்பது மனிதர்களுக்கு மட்டுமே. அவர்கள் உயர்ந்த குறிக்கோளான பரமனாக மாறும் முயற்சிதான் இந்த உலகத்தின் வாழ்க்கை முறையாக காட்சியளிக்கிறது. எந்த மனிதர்கள் பரமனை அறிந்து பரமனாகவே மாறிவிடுகிறார்களோ அவர்கள் மீண்டும் பிறப்பதில்லை. அவர்கள் இந்த பிறப்பு-இறப்பு என்ற சுழற்சியிலிருந்து மீண்டு பரமபதத்தை அடைவார்கள்.


முடிவுரை :

இந்த உலகத்தில் உள்ள உயிரினங்களனைத்தும் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று இறுதியில் மனிதன் உருவாகியுள்ளான் என்ற அறிவியல் கருத்தின் நோக்கில் பார்த்தால் கூட அனைத்து உயிரினங்களின் உயர்ந்த நோக்கம் பரமனை அடைவது என்று கூறலாம்.
ஓரறிவுடன் (தொட்டுணர்வு) நீர்வாழ்வனவாக தோன்றி பின் ஈரறிவுடைய (தொட்டுணர்வு+வாசனையை நுகரும் அறிவு) தாவரங்களாக வளர்ந்து பின் மூன்று அறிவுடன் (தொட்டுணர்வு + நுகரும் அறிவு+ கண்ணால் பார்க்கும் அறிவு) கூடிய ஊர்வனவாக வளர்ச்சி பெற்று பின் நான்கறிவுடன் (தொட்டுணர்வு+ நுகரும் அறிவு+ காணும் அறிவு+ காதால் கேட்கும் அறிவு) கூடிய பறவைகளாக மாறி பின் ஐந்தறிவுடன் (தொட்டுணர்வு+ நுகரும் அறிவு+ காணும் அறிவு+ கேட்கும் அறிவு+ நாவினால் சுவைக்கும் அறிவு) கூடிய விலங்குகளாக பரிணாம வளர்ச்சி பெற்று முடிவில் ஆறறிவு(தொட்டுணர்வு+ நுகரும் அறிவு+ காணும் அறிவு+ கேட்கும் அறிவு+ சுவைக்கும் அறிவு+ மனதினால் அறியும் அறிவு) பெற்று மனிதனாக மாறி வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறோம். இந்த முடிவில்லாத தேடல்களின் பரிணாம வளர்ச்சி இன்னும் முற்றுப்பெறவில்லை. மிருகங்கள் தங்கள் ஐந்து அறிவை உபயோகப்படுத்தி அறிந்தாலும் 'நான் அறிகிறேன்' என்ற ஆறாவது அறிவு அவற்றிற்கு இல்லை. இந்த ஆறாவது அறிவு அனைத்து மனிதர்களுக்கும் இருந்தாலும் பெரும்பான்மையான மக்களுக்கு 'அறியும் நான் யார்' என்பது தெரிவதில்லை. நான் யார் என்ற அறிவை அடைந்ததும் மனிதன் தெய்வமாகிறான்.

எல்லா உயிரினங்களும் படிப்படியாக வளர்ந்து மனிதன் என்ற நிலையிலிருந்து தெய்வம் என்ற நிலையை அடையும்பொழுதுதான் பரிணாம வளர்ச்சி முற்றுப்பெறும்.
மனிதன் தெய்வமாக மாற பரமனை அறிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே நமது முடிவான குறிக்கோள் பரமனை அறிவது.பரமனை அடைந்த பிறகு மட்டுமே நம்முள் இருக்கும் ஓயாத அரிப்பு நீங்கும். நாம் கலையாத நிம்மதி, குறையாத இன்பம் மற்றும் தடையில்லாத பாதுகாப்பு என்ற நிலையை பரமனை அறிந்தால் நாம் அடைவோம்.

அதற்குப்பிறகு இன்பத்திற்காகவன்றி இன்பமாக இருப்பதால் மட்டுமே நாம் செயல் படுவோம். எனவே அனைத்து உயிரினங்களின் முடிவான உயர்வான குறிக்கோள் பரமனே.

பயிற்சிக்காக :

1. மனிதர்களின் வெவ்வேறு முயற்சிகளின் பொதுவான குறிக்கோள்கள் என்னென்ன?

2. தொடர்ந்து மனிதர்களை செயலில் தூண்டும் சக்தி எது?

3. மனிதன் மற்ற உயிரினங்களாக பிறக்க வேண்டிய காரணம் என்ன?

4. மற்ற உயிரினங்கள் மீண்டும் மனிதனாக பிறப்பது எப்படி?

5. பரிணாம வளர்ச்சியின் முடிவு என்ன?

சுயசிந்தனைக்காக :

1. பரமன் வெவ்வேறு உயிரினங்களாக தோன்றி பின் மீண்டும் அவை பரமனை அடையும் முழுசுழற்சி எதற்காக நடக்கிறது?

2. ஏற்கனவே பலர் பரமனை அடைந்த பிறகும் உலகில் மக்கள் தொகை அதிகரித்து கொண்டிருப்பது எப்படி சாத்தியம்?

3. பரமபதத்தை அடைவது என்றால் என்ன?